Thursday, June 30, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 105


ருட்டிய பிறகு ஒரு மாலுமியும், மைத்ரேயனும் செஸ் விளையாடிக் கொண்டிருக்க கௌதமும், மற்ற மாலுமிகளும் சூழ்ந்து அமர்ந்து சுவாரசியத்துடன் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திபெத் பையன் மாயக்காரன் என்று நம்பிய கேப்டன் மைத்ரேயனை நெருங்குவது கூட ஆபத்து என்று தூரத்திலேயே இருந்தான். தேவ் அவ்வப்போது கூட இருந்து ஆட்டத்தை சிறிது நேரம் பார்த்தான். அந்த மாலுமி மிகச்சிறந்த ஆட்டக்காரன் என்பது தெரிந்தது. மைத்ரேயன் அவனுக்கு ஈடு கொடுத்து ஆடியதுடன் சமயங்களில் மாலுமியை ஆழ்ந்து யோசிக்கவும் வைத்தான்....

தேவ் மற்ற நேரங்களில் கேப்டனுடன் இருந்து கொண்டிருந்தான். நடுக்கடலில் கப்பல் எவ்வளவு வேகமாகச் சென்றாலும் வேகமே வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை. தேவுக்கு இந்த மூன்று நாட்களை சகிப்பது எளிதாகத் தோன்றவில்லை. மயக்க மருந்திலும் மயங்காத, எண்ணிய எண்ணங்களைப் படிக்க முடிந்த அந்தச் சிறுவன் ஆட்களைத் தன் வசப்படுத்துவதிலும் கெட்டிக்காரனாக இருப்பது அவனுக்கு நெருடலாக இருந்தது. அவனுக்கே கூட அந்தச் சிறுவர்களைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது....

அவன் மீண்டும் போய் அவர்கள் ஆடுவதைப் பார்த்தான். இப்போது மைத்ரேயன் வெற்றி பெறும் சூழலில் இருந்தான். ஆனால் சிறிது நேரம் மாலுமி தாக்குப்பிடிப்பான் போல் இருந்தது. மைத்ரேயன் கண்கள் கடிகாரத்தைப் பார்த்தன. அடுத்தபடியாக வேண்டுமென்றே காயைத் தவறாக நகர்த்தி அந்த மாலுமியை வெற்றிபெற வைத்து ஆட்டத்தை அவன் முடித்துக் கொண்டான். மாலுமிகள் ஆரவாரம் செய்து தங்கள் சகாவின் வெற்றியைக் கொண்டாடினார்கள். கௌதமுக்கு தான் தன் நண்பனின் தோல்வி ஏமாற்றமாக இருந்தது.

அந்த மாலுமி அன்புடன் மைத்ரேயனிடம் சொன்னான். “நீ குதிரையை அப்படி நகர்த்தியிருக்காமல் இருந்தால் நான் ஜெயித்திருக்க முடியாது....”

மைத்ரேயன் பின் தான் உணர்ந்தது போலக் காட்டிக் கொண்டான். அறைக்கு வந்தவுடன் கௌதம் களைப்புடன் உறங்க, மைத்ரேயன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். அப்போது தான் தேவுக்கு விளங்கியது. அவனுடைய தியான நேரம் நெருங்கியவுடன் தான் அந்த விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறான். வயதானவர்களுக்கே கூட அந்த உச்சக்கட்டத்தில் ஆட்டத்தில் இருந்து விலகுவது முடிகிற காரியம் அல்ல. இந்தச் சிறுவனுக்கு விளையாட்டு விளையாட்டு மாத்திரமே.... தேவுக்கு அவனைப் பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.


க்‌ஷய் வீட்டில் வந்தனாவின் குடும்பம் இருந்தது. அக்‌ஷய் வெளியே போயிருந்தான். ஆசான் மைத்ரேயன் படுத்த கட்டிலில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

ஜானகி சஹானாவிடம் மனமார மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள். “அந்த நாசமாய் போன நாய் அப்படி பொய் சொல்லி, வந்தனா கேட்டதற்கு வருணும் சரியாகப் பதில் சொல்லாததால் நான் தப்பாக நினைத்துக் கொண்டு விட்டேன். அப்போதே இவர் சொன்னார். ஓடி ஒளியற ஆளை நம்பாதேன்னு. என் மூளைக்கு எட்டவில்லை..... அவன் எப்படி அழுதான் தெரியுமா? இப்போது தான் எனக்கு விளங்குகிறது. அந்த நாய் ஜண்டு பாமையோ, அமிர்தாஞ்சனையோ கண்ணில் தடவி அழுதிருக்கிறது என்று. அந்த மணமும் வந்தது. அது கூட அப்போது விளங்கவில்லை.....”

சஹானா சொன்னாள். “உங்கள் நிலைமையில் யார் இருந்தாலும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.... உங்கள் மேல் தப்பில்லை....”

”உங்கள் மாமியார் வந்து அவனிடம் பேசின பிறகு தான் எல்லாம் புரிந்தது. உங்களுக்கு அவனைப் பார்த்து நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்குவது போல கேட்கணும்னு தோன்றவில்லையா....”

“எனக்கு அவனைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.....” என்று சஹானா அருவருப்புடன் சொன்னாள்.

திடீரென்று ஜானகிக்கு மரகதம் முன்பு அவள் மகனை நாய் என்பது சரியில்லை என்று தோன்றியது. என்ன இருந்தாலும் தாய் தாய் தானே!”

அவள் மெல்ல மரகதத்தைக் கேட்டாள். “உங்களுக்கு அவனை நாய் என்றதில் வருத்தமா?”

மரகதம் சொன்னாள். “எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் நாய் கேட்டால் கண்டிப்பாய் வருத்தப்படும்....”


ந்த நாயின் இருப்பிடத்தில் தான் அந்த சமயத்தில் அக்‌ஷய் இருந்தான். உளவுத்துறை கண்டுபிடித்து நெருக்கியதில் சேகரின் நண்பனே அவனைக் காட்டிக் கொடுத்து விட்டான். உளவுத்துறையைப் பகைத்துக் கொண்டு அவன் அந்தத் தொழிலில் நிறைய காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் திருப்பூரில் சேகர்  தங்கி இருந்த லாட்ஜின் விலாசத்தை அந்த சகா சொல்லி விட்டான்.

அழைப்பு மணி அடித்த போது வந்திருப்பது அக்‌ஷய் என்று சேகர் எதிர்பார்த்திருக்கவில்லை. கதவைத் திறந்தவுடன் திகைத்து பின் மெல்ல சுதாரித்துக் கொண்டு வெறுப்போடும் திமிரோடும் என்ன என்பது போலப் பார்த்தான். இப்போது அவன் தலையாய எதிரி இவன் தான் என்று அவனுக்குத் தோன்றியது. இவன் அவனது மனைவியை மனைவியாக்கிக் கொண்டு, அவனது மகனை மகனாக்கிக் கொண்டதும் அல்லாமல், அவனுடைய தாயையும் தாயாக்கிக் கொண்டவன்...

அக்‌ஷய் அமைதியாக உள்ளே நுழைந்து தாளிட்டது மட்டுமே சேகர் பார்த்தான். கண் இமைக்கும் நேரத்தில் கழுத்து திருகி வலி தாங்காமல் துடித்தபடி தரையில் விழுந்த போது அவனுக்கு எதுவுமே விளங்கவில்லை. என்ன நடந்தது? இவன் எப்படி என் அருகே வந்தான்?

“எனக்கு உன்னைப் போல் ஒரு ஈனப்பிறவியிடம் கதை பேச நேரமில்லை. இந்தக் கடத்தல் நாடகத்தில் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் சொல் பார்க்கலாம்....”

கழுத்து வலி உயிர் போக அவனை சேகர் அதிர்ச்சியுடன் பார்த்தான். அந்த நேரத்தில் அவன் எமன் போலவே தெரிந்தான். முகத்தில் கோபமோ, வெறுப்போ இல்லை என்றாலும் அந்த அமைதியில் பேராபத்தை சேகர் உணர்ந்தான்... இந்த வலியில் எப்படிச் சொல்வது என்று அவன் சைகை காட்டினான். அக்‌ஷய் கை அவன் கழுத்தின் அருகே சென்றது. கழுத்து சரியாகி வலி போய் விட்டது. உடல் எல்லாம் வியர்த்தொழுக தட்டுத் தடுமாறி எழுந்து படுக்கையில் உட்கார்ந்த சேகருக்கு இவனிடம் நேரடியாக மோத முடியாது என்பது தெரிந்து விட்டது. இவனைப் பின்னால் பழிவாங்கிக் கொள்ளலாம். இப்போது நடந்தது எல்லாவற்றையும் சொல்லி விடுவதே நல்லது என்று தோன்றியது. சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு அக்‌ஷய் கையைத் தூக்கியதை மட்டும் தான் சேகர் பார்த்தான். அடுத்த கணம் அப்படியே சேகர் கீழே சரிந்தான். இப்போது கழுத்து திருகவில்லை. ஆனால் கை கால்களை அசைக்க முடியவில்லை. “உன்னை நல்லபடியாக விட்டுப் போனாலும் நீ ஒழுங்காய் போய் விட மாட்டாய். திரும்பித் தேடி வருவாய். ஏதாவது செய்வாய். உன்னுடன் எதிர்காலத்தில் சம்பந்தப்பட எங்கள் யாருக்கும் விருப்பமில்லை. இனி உன்னால் நகர முடியாது. ஆனால் யோசிக்க முடியும். எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம் என்று யோசி. சாகும் வரை யோசிக்கலாம்....”

பீதியடைந்த சேகர் கண்களினால் கெஞ்ச ஆரம்பித்தான். அகஷய் அதைப் பார்க்கக்கூட இல்லை. வெளியே போய் விட்டிருந்தான்.


ந்த மூன்று நட்சத்திர ஓட்டலின் கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை வரவழைத்து அவர்கள் பார்த்தார்கள். தேவும், சேகர் உட்பட அவனைப் பார்க்க வந்தவர்களும் பதிவாகி இருந்தார்கள். அந்தப் பதிவுகள் அவர்கள் பற்றிக் கூடுதல் விவரங்கள் அறிய புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டன.

மைத்ரேயனையும் கௌதமையும் இன்னமும் அவர்களால் கண்டுபிடிக்கவில்லை. அக்‌ஷய் தன் உள்ளுணர்வைச் சொன்னான். “எனக்கென்னவோ அவர்கள் நம் எல்லையைத் தாண்டி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது”

ஒரு உளவுத்துறை அதிகாரி சொன்னார். “எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் நம் சோதனை தீவிரமாகவே இருக்கிறது....”

அக்‌ஷய் இந்திய வரைபடத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென்று கேட்டான். ”கடத்தப்பட்ட நாள் அல்லது மறு நாளில் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஏதாவது வெளிநாட்டுக் கப்பல் கிளம்பி இருக்கிறதா? ஏனென்றால் கோயமுத்தூரிலிருந்து கொச்சி துறைமுகம் அதிக தூரமில்லை”

உடனே அந்த அதிகாரி ஒரு எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அந்தக் கேள்வியைக் கேட்டார்.

”இல்லை சார்.... ஆனால் நம் எல்லையைத் தொடாமல் சீனக்கப்பல் அன்று இரவு இப்பகுதியை  கடந்தது. அது ஷாங்காயிலிருந்து கராச்சி செல்லும் சரக்குக் கப்பல். தரைவழி, ஆகாய வழியாக, சீனாவும், பாகிஸ்தானும் பக்கமாக இருந்தாலும் கடல் வழியாகப் போவதானால் நம் நாட்டைச் சுற்றித் தான் போக வேண்டும்....அது மாதம் ஒரு முறை வழக்கமாய் செல்லும் கப்பல் தான்.” என்ற பதில் வந்தது.

அக்‌ஷய் உறுதியாகச் சொன்னான். “அந்தக் கப்பலில் தான் நம் பையன்கள் இருக்கிறார்கள்.”

எல்லோரும் அவனையே யோசனையுடன் பார்த்தார்கள். அவன் சொன்னான். “அது நம் கரைக்கு வராமல் இருக்கலாம். ஆனால் நம் கரையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் அந்தக் கப்பலுக்குப் போகலாம் அல்லவா?”

உளவுத்துறையின் மூத்த அதிகாரி சொன்னார். “இருக்கலாம். ஆனால் நம் எல்லைக்கே வராத ஒரு வெளிநாட்டுக் கப்பலை நாம் எதுவுமே செய்ய முடியாது. நடுக்கடலில் நமக்கு சோதனையிடும் அதிகாரம்  இல்லை. அவர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.... அது போய்ச் சேரும் நாட்டுக்கு நம் சந்தேகத்தை வேண்டுமானால் தெரியப்படுத்தி உதவி கேட்கலாம்.... அவர்கள் சோதித்துப் பார்த்து விட்டோம், இல்லை என்று சொன்னால் கேட்டுக் கொண்டு சும்மா தான் இருக்க வேண்டும்....”

அக்‌ஷய் ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டான்.

அந்த மூத்த அதிகாரி மெல்ல சொன்னார். “ஒன்று வேண்டுமானால் செய்யலாம். நம் நாட்டு உளவாளிகள் பாகிஸ்தானிலும் உண்டு. அந்தக் கப்பலில் கராச்சி துறைமுகத்தில் நம் பையன்கள் போய் சேர்கிறார்களா, சேர்ந்தால் அங்கிருந்து எங்கே அழைத்துப் போகப்படுகிறார்கள் என்பதை வேண்டுமானால் அவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.”

அக்‌ஷயும், ஆசானும் அந்தத் தகவலில் ஒரு நம்பிக்கைக்கீற்றைப் பார்த்தார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

4 comments:

  1. Great going sir. Feeling like seeing a english thriller movie.

    ReplyDelete
  2. சுஜாதாJune 30, 2016 at 6:14 PM

    நாவலை வாங்கி படித்து முடித்து விட்டேன் கணேசன் சார். பாராட்ட வார்த்தை இல்லை. க்ளைமேக்ஸ் சூப்பரோ சூப்பர். மைத்ரேயன் ஒவ்வொருவரையும் ஹேண்டில் செய்யும் விதம் அருமை. இது போன்ற இன்னொரு நாவலை உங்களிடமிருந்து எதிர்பார்ர்கிறோம்.
    இப்படிக்கு,
    வியாழக்கிழமைகளில் உங்கள் நாவலுக்கு அடிக்ட் ஆகி விட்ட ரசிகை

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete