Monday, October 5, 2015

வணங்கும் வடிவில் தெரியும் பாபா!


மகாசக்தி மனிதர்கள் 38


 ண்ணெயை வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லிய வணிகர்கள் பாபா வெறும் நீரால் மண்விளக்குகளை எரிய வைத்த அதிசயத்தைப் பார்த்து விட்டுத் தங்களைப் பொறுத்தருளும்படி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டவுடன் ஷிரடி சாய்பாபா அவர்களைக் கோபித்துக் கொள்ளவோ, கடுமையாகக் கண்டிக்கவோ இல்லை.

அவர்களுக்கு அன்பாகவே அறிவுரை வழங்கினார். எண்ணெய் வைத்துக் கொண்டே பொய் சொன்னதும் அல்லாமல் அவரும், அவரிடம் வருபவர்களும் இருட்டில் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று கண்டு களிக்க வந்தது தவறு என்பதைப் புரிய வைத்த அவர் ஒரு அழகான உதாரணத்தையும் சொன்னார். “அனைவருக்கும் அன்னை இறைவன் தான். இறைவனின் குழந்தைகள் கஷ்டப்படும் சந்தர்ப்பத்தை உருவாக்கி விட்டு அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு ரசிப்பது மிகப்பெரிய குற்றம். ஒரு தாயின் குழந்தைக்கு தீங்கிழைத்து விட்டு அந்தத் தாயின் கருணைக்கு யாராவது பாத்திரமாக முடியுமா? இனி எப்போதும் இந்தத் தவறைச் செய்யாதீர்கள்

பாபாவின் இந்த உதாரணம் எக்காலத்திலும் எவரும் நினைவில் வைத்திருக்க வேண்டிய பேருண்மை. இதனை மனதில் நிறுத்தியவர்களால் அடுத்தவர்க்குத் தீங்கிழைக்க எண்ணவும் மனம் உடன்படாதல்லவா?

பாபாவின் அறிவுரையால் அந்த வணிகர்களும் மனம் திருந்தி திரும்பினார்கள்.  அந்த நிகழ்ச்சி ஷிரடியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பைத்தியக்காரர் என்று பரிகசிக்கப்பட்ட பாபாவுக்கு வைத்தியம் தெரிந்திருப்பது மட்டுமல்ல நீரில் விளக்கை எரிய வைக்கிற அளவு அவர் பெரிய மகான் என்கிற செய்தி காட்டுத்தீயாக அங்கும் சுற்றுப்பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.


அவரை நாடிப் பலரும் அதிகமாக வர ஆரம்பித்தார்கள். அவர் தன்னை நாடி வந்த அனைவரையும் சமமாகவே நடத்தினார். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என்ற பாகுபாடோ ஏழை, பணக்காரர், பணம் தருபவர், தராதவர் என்ற பாகுபாடோ அவரிடம் இருக்கவில்லை.


அன்பு, ஒழுக்கம், மன அமைதி, இரக்கம், உதவும் குணம், பக்தி, திருப்தி ஆகியவற்றிற்கு அதிக முக்கியம் தந்தவராக இருந்த ஷிரடி சாய்பாபா எந்த மதத்தின் கோட்பாட்டுக்கும் முழுமையாக அடங்காதவராக இருந்தார்.


“எல்லோருக்கும் இறைவன் ஒருவனே” “அல்லாவே இறைவன்என்ற வாசகங்களை அடிக்கடி சொல்கிற வழக்கம் சாய்பாபாவிற்கு இருந்தது.  அவர் அப்படி சொல்வதும், அவர் பாழடைந்த மசூதியில் வசிப்பதும் அவரை ஒரு முஸ்லீம் என்று சிலரை நினைக்க வைத்தது. ஆனால் அவர் தான் வசிக்கும் மசூதிக்கு துவாரகமயி என்று பெயர் வைத்ததும், அங்கு வருபவர்கள் இந்து முறைப்படி பூஜைகள் நடத்த அவர் அனுமதித்ததும் அவரை இந்து மதத்திற்கு சாதகமானவராக சிலரை நினைக்க வைத்தது.  இதனால் இரு மதங்களையும் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் அவரிடம் அதிருப்தி கொண்டவராகவே இருந்தார்கள்.

  
அவருடைய ஆன்மிக சக்தியால் பெருமளவு ஈர்க்கப்பட்ட சிலர் அங்கே அவரையே தெய்வமாக நினைத்து வணங்கவும் ஆரம்பித்தார்கள். அவர் நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்தும், அவர் கால்களில் மலர்களை வைத்தும் சிலர் வழிபட்ட போது ஆரம்பத்தில் ஷிரடி சாய்பாபா அவர்களைத் தடுத்துப் பார்த்தார். உங்கள் வீடுகளுக்கும், கோயில்களுக்கும் சென்று உங்கள் இறைவனை இப்படி பூஜியுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதாய் இல்லை. நீங்களே எங்கள் நடமாடும் இறைவன்என்று சொல்லி அவரையே பூஜித்தனர்.

அப்படி அவரை ஆரம்பத்தில் பூஜிக்க ஆரம்பித்தவர்களில் ராமகிருஷ்ண ஆயி என்ற இளம் விதவைப் பெண்மணி முக்கியமானவர். அவர் அங்கு வருபவர்களை பாபாவை தெய்வமாக வணங்க ஊக்கப்படுத்தினார். பாபாவிடம் வந்தவர்கள் வாழ்வில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் ஏற்பட ஆரம்பிக்கவே அவருடைய பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக ஆரம்பித்தது.
                                                 

பக்தர்களிடம் பணம் வசூலிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே பாபாவிற்கு விருப்பம் இருக்கவில்லை. எத்தனையோ பேரின் நோய் தீர்த்த போதும் கூட அவர் அவர்களிடமிருந்து எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இருந்தார் என்பதை முன்பே குறிப்பிட்டும் இருந்தோம். ஆனால் தன்னுடைய பக்தர்கள் தனக்கு எதையும் செய்யத் தயாராக இருந்தார்களே ஒழிய ஏழை எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயாராக இல்லாத மனநிலையில் இருப்பதை பாபா உணர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எத்தனை போதித்தும் அது பணக்கார பக்தர்களின் மனதில் ஆழமாகப் பதியவில்லை என்று அவர் கண்டு கொண்டதால் அது போன்ற பக்தர்களிடம் அவர் அவர்களுடைய நிதிநிலைமைக்கு ஏற்ப பணம் வசூல் செய்து ஏழை எளிய மக்களின் தேவைக்கு ஏற்ப தானே நேரடியாக உதவிகள் செய்ய ஆரம்பித்தார். ஏழை எளியவர்களின் உணவு உடைக்கும், மருத்துவத்திற்கும், அவர்களது தீர்த்த யாத்திரைக்கும் கூட பாபா வாங்கிய பணம் உதவியாக இருந்தது. பெரும்பாலும் அன்றன்று வசூலான பணம் அன்றன்றே பட்டுவாடாவும் ஆகியது.

அக்காலத்திலேயே தினசரி பெரும் தொகை வசூல் ஆன போதும் பாபா தனக்கென்றும், தன் சவுகரியங்களுக்கென்றும் எந்தப் பணத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. அவர் 1918ல் தன் பூதவுடலை நீத்த போது அவர் கையிருப்பில் பதினாறு ரூபாய் மட்டுமே இருந்தது. அவர் பெயரில் எந்த சொத்தும் இருக்கவில்லை.

இந்து இஸ்லாம் மதங்களைத் தீவிரமாக எழுத்து பிசகாது பின்பற்றுபவர்கள் பாபாவிடம் கொண்டிருந்த அதிருப்தி மட்டும் அவ்வளவு சீக்கிரம் மாறவில்லை. ஆனால் அவர்களும் கூட அவரை காலப்போக்கில் போற்ற ஆரம்பித்தார்கள். சில விசேஷ நாட்களில் பகல் நேரங்களில் பஜனைகளும், பூஜைகளும், வேத பாராயணங்களும் நடக்க இரவு நேரங்களில் குரான் ஓதுவதும், இஸ்லாம் வழி வழிபாடுகளும் நடந்தன. இரு மதத்தினரும் ஒருங்கிணைந்து போகும் ஒரு புனித இடமாக துவாரகமயி மாற ஆரம்பித்தது.

எல்லாக் கடவுளும் ஒருவரே என்ற சித்தாந்தம் போதனையில் மட்டுமல்லாமல் தன் உருவத்திலேயே பாபா பக்தர்களுக்குப் புரிய வைத்த விசேஷ நிகழ்ச்சிகளும் ஷிரடியில் சகஜமாயின.  

தென்னமெரிக்காவில் டாக்டராக இருக்கும் ஒரு உயர்வகுப்பு இந்தியர் இராமரைத் தவிர வேறு யாரையும் வணங்காதவர். ஒரு முறை அவருடைய நண்பரின் வற்புறுத்தலால் ஷிரடி வந்த போதும் அவர் பாபாவை வணங்க முன் வரவில்லை. அவர் நண்பர் மட்டும் துவாரகமயிக்குள் நுழைந்து வணங்க, அவர் வெளியேவே நின்று கொண்டார். ஒரு மசூதிக்குள் செல்லவோ, அங்கிருப்பவரை வணங்கவோ அவருக்கு சம்மதம் இருக்கவில்லை. அப்படிப்பட்டவர் திடீரென்று உள்ளே நுழைந்து பக்திப் பரவசத்துடன் பாபாவின் கால்களில் விழுந்தார். “நீல மேக சியாமனான ராமனின் வடிவாகவே இவர் என் கண்களுக்குத் தெரிந்தார்என்று பரவசத்துடனேயே மற்றவர்களிடம் அவர் தெரிவிக்கவும் செய்தார்.

அதே போல போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த எம். எஸ். நிமோன்கர் (M.S. Nimonkar) தன் இஷ்ட தெய்வமான அனுமார் வடிவையும், இன்னொருவர் தன் இஷ்ட தெய்வமான தத்தாத்ரேயரையும், இன்னொரு இளம் பெண்மணி தன் இஷ்ட தெய்வமான கணபதியையும் பாபாவின் உருவில் பார்த்து பிரமித்தனர்.

ஒரு டெபுடி கலெக்டர் மும்பை கோயிலில் லக்‌ஷ்மி நாராயணரை வழிபட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று அந்த விக்கிரக உருவம் மறைந்து பாபாவின் உருவம் தெரிந்திருக்கிறது. அவர் அதற்கு முன் பாபாவைப் பார்த்ததில்லை என்பதால் வேறெதோ உருவம் தெரிகிறதே இது வழிபாட்டில் மனம் ஒருமைப்பட்டு நிற்காததன் காரணமே என்று தன்னையே கடிந்து கொண்டார். சில நாட்கள் கழித்து அவர் ஷிரடி வந்து பாபாவைக் கண்ட போது தான் அன்று பார்த்த உருவம் கற்பனை உருவம் அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார்.

இப்படி பாபாவின் உருவத்தில் பல தெய்வங்களும், அந்த  தெய்வங்களின் உருவத்தில் பாபாவும் பக்தர்களுக்குப் பல முறை காட்சி அளித்திருப்பதால் தான் பாபாவின் உருவப்படங்களிலேயே இந்து தெய்வங்களைச் சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்திருக்கும் என்று தோன்றுகிறது.

(தொடரும்) 

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – 8.5.2015




No comments:

Post a Comment