Thursday, October 1, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 65


த்திரம் தன் சகாவின் கண்களை மறைத்து அவன் எடுத்த முடிவு அவன் உயிருக்கே உலை வைத்தது ஒடிசல் இளைஞனுக்கு நினைவுக்கு வந்தது. அதே முடிவைத் தானும் தேடிக் கொள்ள விரும்பாமல் மாராவிற்குப் போன் செய்து அவன் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள விரும்பினான். துப்பாக்கியை லாரி டிரைவரைக் குறி பார்த்து வைத்துக் கொண்டு சொன்னான். “என் மேலதிகாரியிடம் கேட்டு விட்டுத் தான் நான் எதையும் முடிவு செய்ய முடியும்

லாரி டிரைவர் முகத்தில் படர்ந்த அச்சத்தை ரசித்தபடியே சற்றுப் பின் நகர்ந்த ஒடிசல் இளைஞன் மாராவுக்குப் போன் செய்து கொண்டே துப்பாக்கியை ஜீப் டிரைவரிடம் தந்தான். “அவர்கள் கொஞ்சம் அசைந்தால் கூட சுட்டு விடு

ஜீப் டிரைவர் துப்பாக்கியை வாங்கிக் கொள்ள, ஒடிசல் இளைஞன் சற்றுத் தள்ளிப் போய் அவர்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு மாராவுக்குப் போன் செய்து தாழ்ந்த குரலில் நடந்ததைத் தெரிவித்தான்.   

பின் ஆதங்கத்துடன் சொன்னான். “... அவன் மின்னல் வேகத்தில் லாரிக்குள் போனதை நானே பார்த்தேன். உளவுத்துறை ஆட்கள் எங்களை விசாரிக்கும் போது லாரி என் பார்வையில் சுமார் ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருக்காது. அந்த சமயத்தில் மைத்ரேயனோடு அந்தப் பாதுகாவலன் இறங்கி இருக்கிறானா இல்லை, அந்த உணவகம் இருக்கும் இடத்தில் நாங்கள் கிளம்புகையில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் என் பார்வை அந்த லாரியிலிருந்து விலகி இருந்திருக்கும் சமயத்தில் இறங்கி இருக்கிறானா என்று தெரியவில்லை...

மாரா அமைதியாகச் சொன்னான். “அந்த உணவகத்தில் நீங்கள் கிளம்புகையில் தான் அவன் லாரியிலிருந்து இறங்கி இருக்க வேண்டும்

ஒடிசல் இளைஞன் திகைத்தான். மாரா சொன்னான். “நீங்கள் வந்த பாதையில் போக ஒரு லாரி கிளம்பி இருந்ததே அதில் தான் அவர்கள் தப்பித்துப் போயிருக்க வேண்டும். பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தானே அவன் தான் நேராகப் போய் லாரியின் பின் கதவைத் திறந்து விட்டிருப்பான். அந்த நேரத்தில் மைத்ரேயன் இருந்த லாரியைக் கிளப்பி நீ அதைப் பார்க்காதபடி லாரிக்காரன் மறைத்திருக்கிறான். இந்த லாரியின் பின்னால் இருந்து இறங்கி இருவரும் அந்த லாரியின் பின்புறம் ஏறிய பிறகு இரண்டு லாரிகளின் பின் கதவுகளையும் தாள் போட்டு விட்டு பாட்டிலோடு போய் தன் லாரியில் அந்த ஆள் ஏறி இருக்கிறான். இதெல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்திருக்கும். அப்போது அவசரத்தில் அந்தக் கதவை அந்த ஆள் முழுவதுமாய் தாளிட்டிருக்க மாட்டான்... அது சிறிது தூரம் போன பின் தானாய் கழன்று போயிருக்கிறது...

ஒடிசல் இளைஞனுக்கு ஆத்திரமாய் வந்தது. அப்படியானால் அந்தப் பக்கம் போன லாரிக்காரனும் இவன் ஆள் தானா? இப்படி ஏமாற்றி முட்டாளாக்கியவன், சாமான்களை இறக்கி வைத்து விட்டு “திருப்தி தானேஎன்கிற மாதிரி என்னைப் பார்த்தானே பாவி!

“அவனைப் பிடித்து வைத்து மிரட்டினால் எல்லா உண்மையையும் கக்கி விடுவான். அப்படிக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்லட்டுமா

மாரா அமைதியாகவே சொன்னான். “இது வரை நாம் லீ க்யாங்கின் கவனத்தைக் கவர்ந்தது போதும். இனி எதுவும் செய்ய வேண்டாம். நீ அவனை மிரட்டிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்து உளவுத்துறைக்குத் தகவல் சொன்னால் கூட நமக்குப் பிரச்னை தான். அதனால் சத்தமில்லாமல் அங்கிருந்து வந்து விடு.....

ஒடிசல் இளைஞனுக்கு லாரிக்காரனின் அதிர்ஷ்டம் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அதை அடக்கிக் கொண்டு அவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். “ஏன் வந்த வழியே அந்தப் பாதுகாவலன் திரும்பப் போகிறான்...

“அந்த சாலையிலிருந்து எத்தனையோ சாலைகள் பிரிந்து செல்கின்றன. அப்படி ஒரு சாலையில் அவன் எத்தனையோ தூரம் போயிருப்பான்.... அதை விடு..... நீ அவனும் மைத்ரேயனும் எந்த உடைகளில் இருந்தார்கள் என்பதைப் பார்த்தாயா? கண்டிப்பாக அவர்கள் புத்தமத உடையில் இருந்திருக்க வாய்ப்பில்லை

“மைத்ரேயனை அவன் பிடித்துக் கொண்டு தான் தாவி இருக்க வேண்டும்..... மின்னல் வேகத்தில் சம்யே மடாலய வாசலில் இருந்து லாரிக்குள் அவன் பாய்ந்தான். ஒரு அசைவு மட்டும் தான் எனக்குத் தெரிந்தது. ஆளையோ அவன் உடையையோ பார்க்க முடியவில்லை.....

மாராவுக்கு அந்த அமானுஷ்யன் மேல் ஒரு தனி மரியாதை தோன்றியது. “யாரும் பார்த்து சந்தேகப்படுவதற்கு முன் நீ அங்கிருந்து கிளம்பி விடு.... என்று சொல்லி விட்டு மாரா பேச்சை முடித்துக் கொண்டான்.

ஒடிசல் இளைஞன் வேகமாகச் சென்று ஜீப் டிரைவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கி மறைத்துக் கொண்டான். லாரி டிரைவரிடம் சொன்னான். “இப்போதைக்கு நீ போகலாம். எப்போது வேண்டுமானாலும் வந்து மறுபடி விசாரணை செய்வோம்.... அப்போது பார்க்கலாம்.....

ஜீப் டிரைவர் அப்போதே தனக்கு எழுந்த சந்தேகத்தைக் கேட்க வாயைத் திறந்தான். ஒடிசல் இளைஞனின் முகத்தில் தெரிந்த கடுமை அப்படியே அவன் வாயை மூடியது.

லாரிக்குள் காலிப் பெட்டிகளை லாரி டிரைவரும் அவன் உதவியாளனும் திரும்ப வைக்க ஆரம்பிக்கையிலேயே ஜீப்பில் இவர்கள் இருவரும் வேகமாகக் கிளம்பி விட்டார்கள்.


க்‌ஷயின் எதிர்வீட்டு மாடியில் குடிவந்திருக்கும் ஆசாமி தன் திட்டத்தைச் செயல்படுத்த தகுந்த நேரம் நிகழ்காலம் தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான். அவன் இது வரை நேரில் பார்க்காத எதிர் வீட்டுக் குடும்பத் தலைவன் மீது அந்தக் குடும்பமே பெருமதிப்பும், பேரன்பும் வைத்திருந்ததை அந்த வீட்டில் இருந்து கீழ் வீட்டுக்கு வந்து போனவர்கள் பேசிய பேச்சில் இருந்து அவனால் யூகிக்க முடிந்தது. இந்த சில நாட்களில் சஹானா ஒரு முறை கீழ் வீட்டுக்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் இருந்து போனாள். அவள் தன் கணவனைப் பற்றிப் பேசிய போதெல்லாம் பேச்சில் ஒரு பெருமிதம் கொப்பளித்தது. ஒவ்வொரு நாளும் காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும் வந்து தன் காதலியிடம் அதிக நேரமும், அவள் பெற்றோரிடம் சிறிது நேரமும் அளவளாவி விட்டுப் போகும் வருண் எல்லோரையும் விட அதிகமாய் அவன் அப்பாவைப் பற்றி சலிப்பில்லாமல் பேசினான். அந்தப் பேச்சுகளில் இருந்து பார்த்தால் பழகுகிற மனிதர்கள் அனைவரிடமும் சீக்கிரமாக நல்ல பெயரையும் அன்பையும் சம்பாதிக்க முடிந்தவன் என்றே தோன்றியது. அப்படி இருக்கையில் வெளியூர் சென்றிருந்த அந்த மனிதன் வந்தால் திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் அதிகமாகும் என்பது புரிந்தது. அந்த ஆள் பயணத்தில் மர்மம் இருந்தது. அவன் திரும்பி வரும் நாள் பற்றியும் நிச்சயமாக வீட்டாரால் சொல்ல முடியவில்லை. பரவாயில்லை, அவன் எக்கேடோ கெட்டுப் போகட்டும். அவன் வருவதற்குள் எதிர் வீட்டுக்குள் பிரளயத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.

கீழ் வீட்டு ஜானகி மூலம் அவன் நடத்த தீர்மானித்திருந்தத் திட்டத்தில் வருணின் காதலி  வந்தனாவின் பங்கு தான் மிக முக்கியமானது. ஆனால் அந்தப் பெண்ணை நேரில் சந்தித்துப் பேச அவன் விரும்பவில்லை. அந்தப் பெண் புத்திசாலியாகத் தெரிந்தாள். அதே போல் அவள் தந்தையையும் அவன் சந்தித்துப் பேச அவன் விரும்பவில்லை. காரணம் அவனிடம் பேசி விட்டுப் போன ஜானகி அன்று தன் கணவரிடம் அவனைப் பற்றிப் பேசியதை அவன் கேட்டிருந்தான்.

“நம்ம மேல் வீட்டு சினிமா கதாசிரியரிடம் நான் இன்று போய் பேசி விட்டு வந்தேன். ஆள் நல்லவராய் தான் தெரிகிறார். கூச்ச சுபாவக்காரர். அவ்வளவு தான். பேச ஆரம்பித்தால் நன்றாகத் தான் பேசுகிறார்

கேட்டு விட்டு ‘எங்கே நீ என்னைப் பேச விட்டாய். இடைவெளியே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தது நீ தானே?என்று மனதில் அவன் அங்கலாய்த்தான்.   

மனைவி சொன்னதைக் கேட்டு விட்டு மாதவன் “ம்... என்ன கதை எழுதுகிறாராம்? என்று கேட்டார்.

“எல்லாம் கலந்த கலவையாம்.... இது வரை நாடகங்களுக்குத் தான் கதை வசனம் எழுதி இருக்கிறாராம்?

“எந்தெந்த நாடகங்களுக்குக் கதை வசனம் எழுதி இருக்கிறாராம்?

அதை ஜானகி கேட்டிருக்கவில்லை. “அதைக் கேட்கவில்லை.....என்றாள்.

ஒருவேளை அவரைச் சந்தித்து பேச நேர்ந்தால் அது போன்ற கேள்விகளை அவர் கண்டிப்பாகக் கேட்பார். சந்தேகப்படாதது போல் பொய் சொல்ல வேண்டும். அது கஷ்டம் தான். அதுவுமல்லாமல் அந்த அம்மாளைப் போல் தானே பேசிக் கொண்டிருக்க மாட்டார். கேள்வி-பதில் ரீதியாகத் தான் சம்பாஷணை இருக்கும். அதுவும் கஷ்டம். அதனால் அந்த ஆளிடம் பேச அவன் பிரியப்படவில்லை.  அதனால் திட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போட அந்த அம்மாள் தனியாகக் கிடைக்க வேண்டும் என்று காத்திருந்தான்.

அப்படிக் காத்திருக்கும் சமயங்களில் கையில் பைனாகுலர் பெரும்பாலும் இருந்தது. எதிர் வீட்டைக் கண்காணித்துக் கொண்டே இருந்த அவனுக்கு எதிர் வீட்டு பழக்க வழக்கங்களும், தினசரி வாழ்க்கை போகும் விதமும் அத்துபடியாகி இருந்தது.  மாமியாரும் மருமகளும் அன்பாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கையிலும், வருணும், கௌதமும் பாசத்தோடு பேசி சண்டையிட்டு மறுபடி அதிக நெருக்கத்துடன் பழகுவதைப் பார்க்கையிலும் வயிற்றெரிச்சலாக இருந்தது.

ஜானகி தனியாக இருக்கையில் போய்ப் பேசலாமா என்று சில சமயங்களில் தோன்றிய போதும் பேசிக் கொண்டிருக்கையில் யாராவது இடையில் வருவதை அவன் விரும்பவில்லை. அவளாக மறுபடியும் மாடிக்கு வரவில்லை. ஒரு நாள் மதியம் அவள் அப்படித் தனியாக அமர்ந்திருக்கையில் அவளை வரவழைக்க அவன் நாற்காலியை எடுத்துக் கீழே தடாலெனப் போட்டான். துணிமணிகள் நிறைந்த ஒரு சூட்கேஸைத் திறந்து துணிமணிகளைச் சிதற விட்டான். அவனிடம் இருந்த ஒரு பழைய புகைப்படத்தையும் வாசலருகே போட்டான். அவசரமாக ஜண்டு பாமைத் தன் இரு கைவிரல்களிலும் தடவி எடுத்துக் கொண்டான்.

ஜானகி அவன் எதிர்பார்த்தது போல் பதறிப் போய் மேலே வந்தாள். அவள் வரும் போது கீழே விழுந்தவன் கஷ்டப்பட்டு எழுவது போல அவன் எழுந்து கொண்டிருந்தான். “என்ன சத்தம்.... விழுந்து விட்டீர்களா?என்று ஜானகி கவலையுடன் கேட்டாள்.

மேலே வைத்திருந்த சூட்கேஸை எடுக்கப் போனேன். நாற்காலி வழுக்கி விழுந்து விட்டேன்.....என்று சொன்னவன் துணிமணிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தான். அவள் அக்கறையுடன் கேட்டாள். “அடி பலமாய் படவில்லையே?”

“இல்லை....

அவள பார்வையில் அவன் வாசலருகே போட்டிருந்த புகைப்படம் பட்டது. குனிந்து அவள் அதை எடுத்தவள் திகைத்துப் போனாள். அதில் வருணும், சஹானாவும், அந்த சினிமா கதாசிரியனும் இருந்தார்கள். அவள் வருணின் சின்ன வயதுப் புகைப்படத்தை எதிர் வீட்டு ஆல்பத்தில் பார்த்திருந்தாள்....

“இது.... இது.... வருண், சஹானா தானே

அவன் பதறிப்போவது போல நடித்து அவளைப் பார்த்தான். 

அவள் திகைப்புடன் கேட்டாள். “நீங்கள் அவர்களுக்கு உறவா?

அவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு சொன்னான். “வருண்... வருண்.... என் மகன்....

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.... “அப்படியானால் அவன் அப்பா என்று சொல்வது யாரை?

அவன் பதில் சொல்லாமல் தலையைக் கவிழ்த்தான். இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டபடி விரல்களில் தடவி எடுத்திருந்த ஜண்டு பாமை கண்ணிமைகளில் பூசிக்கொண்டான். அடுத்த கணம் அவன் கண்களிலிருந்து நீர் வெள்ளமாகப் பொங்கி வழிய ஆரம்பித்தது.

ஜானகி ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள். அவன் அழுகையினூடே சொன்னான். “சஹானாவின் முதல் கணவன் நான் தான்..... வருண் என் மகன்..... சந்தோஷமாகத் தான் வாழ்ந்தோம்.... இல்லை, அப்படித் தான் நான் நம்பி ஏமாந்தேன்..... ஒரு நாள்... ஒரு நாள்..... என் குழந்தையோடு அவள் தலைமறைவாகி விட்டாள்..... உங்களோடு வாழப்பிடிக்கவில்லை. தேட வேண்டாம் என்று வெறும் ஒரு வரிக்கடிதம் மட்டும் நான் வீட்டுக்கு வரும் போது இருந்தது. பிறகு அக்கம் பக்கம் விசாரிக்கையில் தான் நான் இல்லாத நேரங்களில் வேறொருவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்த விஷயம் எனக்குத் தெரிந்தது......

பெருமதிப்பில் ஜானகி மனதில் இருந்த சஹானா அந்தக் கணத்தில் அதள பாதாளத்திற்குச் சரிய ஆரம்பித்தாள்.

(தொடரும்)

என். கணேசன்


7 comments:

  1. Plot thickens interestingly. Nice.

    ReplyDelete
  2. As usual good going. Now only I noticed the picture which is drawn with the word "Liar". Fitting to the chapter

    ReplyDelete
  3. Kathaiyin mudivai therinthu kola arvamai irukirathu...

    ReplyDelete
  4. பல முகம் கொண்ட ஒரு கருவை மையமாக வைத்து நாவலை உருவாக்குவது சுலபமானதல்ல. அப்படி உருவாக்கி அமைத்து கொண்டு போகும் கதையில் குடும்பம், தத்துவம், ஏக்‌ஷன், மர்மம் முதலான அனைத்தையும் கச்சிதமாக கையாள்வது தற்போதைய எழுத்தாளர்களில் காண முடிந்ததே அதிசயம் தான். பொதுவாக கமெண்ட் போடும் பழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் இந்த நாவலைப் போன்ற பிரம்மாண்ட முயற்சிக்கு படித்து விட்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க கணேசன். இது போல் பல படைப்புகள் தருக். - வி.கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  5. Amanushyan kathaiyil sahana vin kanavan iranthu vitar endru thanae kuripitu irunthirkal...ipothu aval kanavan endru oruvan vanthurukiran...avan unmayana kanavana ila yaematra vanthavana....

    ReplyDelete
    Replies
    1. இதில் என்ன சந்தேகம் வந்தது உங்களுக்கு சகோதரி? அவன் நிச்சயமாக குழப்பவும், ஏமாற்றவும் வந்தவனே.....

      Delete
  6. Sahana virku ethirikal yarum ilai...irunthal athu akshaiyin ethirikal than irukamudiyum...avarkaluku sahanavin muthal kanavan patri theriya vaipilai alava....athanal vantha santhegam

    ReplyDelete