Thursday, October 29, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 69


 ரோந்து வாகனத்தைத் தவிர்க்க வழி இல்லை என்பது புரிந்தவுடன் அக்‌ஷயின் மூளை முழு  வீச்சில் வேலை செய்தது. மைத்ரேயனுடன் சேர்ந்து அந்த வாகனத்தில் இருப்பவர்கள் கண்களில் படுவது ஆபத்து என்பதில் சந்தேகம் இல்லை. என்ன உடைகளில் இருந்தாலும் மைத்ரேயனின் வயதும், அவனுடன் இருக்கின்ற ஆளின் வயதும் ரோந்து போலீஸை சந்தேகத்திற்குட்படுத்தாமல் இருக்காது....

அக்‌ஷய் அவசரமாக மைத்ரேயனைக் கேட்டான். “அவர்கள் நம் இருவரையும் சேர்ந்து பார்ப்பது ஆபத்து. சிறிது நேரம் உன்னால் தனியாகச் சமாளிக்க முடியுமா?கேட்கும் போதே மனம் சங்கடப்பட்டது. ஆசானோ, தலைமை பிக்குவோ இங்கிருந்தால் கண்டிப்பாக இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்று சொன்னவன் சில நிமிடங்கள் அவனை எதிரிகள் மத்தியில் தனியாக அனுப்புவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் வேறு வழியில்லை....

மைத்ரேயன் அமைதியாகக் கேட்டான். “நான் என்ன செய்ய வேண்டும்?

“இந்த இரண்டு ஆடுகளை ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டே இரு......என்று சொன்ன அக்‌ஷய் “பயப்படாதே. அவர்களைப் பயத்துடன் பார்க்காதேஎன்றெல்லாம் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டான். காரணம் இந்தச் சிறுவன் இப்போது கூட பயந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய அசராத அமைதி அக்‌ஷயையே அசர வைத்தது. ஆனாலும் அக்‌ஷய் சொன்னான். “ஆபத்து என்றால் மட்டும் எனக்கு குரல் கொடு.....

சொல்லி விட்டு தாமதிக்கிற நேரம் இல்லாததால் இரண்டு ஆடுகளை மைத்ரேயனிடம் ஒப்படைத்து விட்டு அக்‌ஷய் மின்னல் வேகத்தில் எதிர் திசையில் ஓட்டம் எடுத்தான்.   

மைத்ரேயனுக்கு அடங்காமல் தாய் ஆடு ஓட ஆரம்பித்தது. தாய் பின்னாலேயே குட்டியும் ஓட மைத்ரேயன் “நில் நில்என்று சொல்லிக் கொண்டே மெல்ல பின்னால் ஓடினான்.

ரோந்து போலீஸ் முதலில் பார்த்தது தங்கள் வாகனத்தை நோக்கி ஓடி வரும் தாய் ஆட்டைத் தான்.  பின்னால் குட்டி ஆடும் அதற்கும் பின்னால் ஆடு மேய்க்கும் சிறுவனும் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். சிறுவன் சிரித்துக் கொண்டே “நில் நில்என்று சொல்லிக் கொண்டே வர குட்டி ஆடாவது திரும்பிப் பார்த்தது. தாய் ஆடு ரோந்து வாகனத்தைப் பக்கவாட்டில் தாண்டிக் கொண்டு போனது. அதே போல் குட்டியும் போனது. ஆடுகள் அந்த வாகனத்தைப் பொருட்டாக நினைக்காதது போலவே சிரித்துக் கொண்டே தாண்டிய ஆடு மேய்க்கும் சிறுவனை தாங்கள் தேடும் சிறுவனாக நினைக்க அவர்களுக்குத் தோன்றவேயில்லை.

ரோந்து போலீஸ்காரர்களில் ஒருவன் அருகில் இருந்த சகாவிடம் கேட்டான். “நாம் இந்தப் பையனிடம் கேட்டால் என்ன? பல சமயங்களில் பெரியவர்கள் பார்க்காத பலதும் இது போன்ற சிறுவர்கள் கண்ணுக்குத் தப்பாது. நாம் தேடுபவர்கள் இந்தப்பகுதியில் இருந்தால் இவன் கண்ணில் பட்டிருக்கலாம்...

அந்த சகா சிரித்தான். “அவன் அந்த ஆட்டைப் பிடிக்காமல் நிற்க மாட்டான். ஆட்டைப் பிடித்த பிறகு வேண்டுமானால் அவன் எதாவது சொல்லலாம்.

வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரன் அவர்கள் இருவரையும் பார்த்துச் சொன்னான். நாம் பைத்தியக்காரத்தனமாக இங்கே தேடிக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேரும் ஏதாவது காட்டிலோ, குகையிலோ ஒளிந்து கொண்டிருப்பார்கள்..... வாங் சாவொ பேசாமல் அது போன்ற இடங்களில் தேட தீவிரம் காட்டி இருக்க வேண்டும்.....

முதல் போலீஸ்காரன் திரும்பிப் பார்த்தான். ஆடு மேய்க்கும் சிறுவன் குட்டி ஆட்டைப் பிடித்திருந்தான். ஆனால் தாய் ஆடு வெகுதூரம் போயிருந்தது... ரோந்து வாகனம் மெல்ல முன்னேறியது.

முதல் போலீஸ்காரன் சொன்னான். “வாங் சாவொ முக்கியமாய் நெடுஞ்சாலை வழியாக நேபாளத்தில் அவர்கள் நுழைவார்கள் என்று நினைக்கிற மாதிரித் தோன்றுகிறது. அதனால் முக்கியமாக அங்கு தான் ஆட்களைக் குவித்திருக்கிறார்கள். எல்லையில் இருக்கும் இந்தக் கிராமங்கள் பக்கமும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது என்று தான் ரோந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.....

அவன் சகா சொன்னான். “எல்லையைக் கடப்பது இப்போது யாருக்குமே சுலபமாய் இல்லை. எனக்குத் தெரிந்த போலீஸ்காரன் ஒருவனே தன் பதினோரு வயது மகனுடன் நேபாளம் போக இரண்டு நாள் காத்திருந்து வாழ்க்கையே வெறுத்து விட்டான். கடைசியில் அவனையும் அவன் மகனையும் மூன்று அதிகாரிகள் அரை மணி நேரம் சோதனை செய்து  பிறகு தான் அனுப்பியிருக்கிறார்கள்....

ரோந்து வாகனம் பக்கத்து புல்வெளியில் தூரத்தில் ஒரு கிழவரைப் பார்த்து விட்டு நின்றது. கிழவரின் பின் புறம் தான் அவர்களுக்குத் தெரிந்தது.  வளைந்த முதுகுடன்  கிழவர் மிக நிதானமாக புல்களைப் பிடுங்கிப் போட்டுக் கட்டுகளாகக் கட்டிக் கொண்டு இருந்தார். வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரன் ஹாரன் ஒலியை எழுப்பினான். கிழவர் திரும்பிப் பார்க்கவில்லை.

மூத்த போலீஸ்காரன் டமாரச் செவிடு போல இருக்கிறதுஎன்று சொன்னான்.

அவன் சகா சிரித்துக் கொண்டே சொன்னான். “அந்த ஆளிடம் ஒரு பையனையும் அவன் கூட ஒரு இளைஞனையும் சமீபத்தில் பார்த்திருக்கிறீர்களா, பார்த்தால் எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் நாம் ஒரு வழி ஆகி விடுவோம். அப்படி அவர்களை நேரில் பார்த்தால் கூட கிழவனுக்குப் பார்வை தெளிவாகத் தெரியுமா என்று தெரியவில்லை....

மற்ற இருவரும் கூட சிரித்தார்கள். ரோந்து வாகனம் மறுபடி கிளம்பி சற்று முன்னேறி கிராமத்திற்குள் நுழைந்தது.

காதுகளைக் கூர்மையாக்கி வைத்திருந்த அக்‌ஷய் கூன் முதுகுடனேயே நிதானமாகத் திரும்பினான்.  ரோந்து வாகனம் போயாகி விட்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆட்கள் இல்லை. நிமிர்ந்தான். பின் மின்னல் வேகத்தில் மைத்ரேயன் போன பக்கம் ஓட ஆரம்பித்தான்.


ஜானகிக்கு இருப்பு கொள்ளவில்லை. மாடி வீட்டு ஆசாமி சொன்ன விஷயம் அவள் மனநிலையைக் கடுமையாகப் பாதித்திருந்தது.  அன்று என்று பார்த்து மகள் வந்தனாவும், கணவர் மாதவனும் தாமதமாக வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் அந்த விஷயத்தைச் சொல்ல அவளால் முடியவில்லை. சற்று நிதானமாக ஆலோசித்து செய்ய வேண்டிய விஷயம் என்பதால் இரவு எல்லோரும் சாப்பிட்டு முடியும் வரைக் காத்திருந்து விட்டுப் பின் மெள்ள மாடி வீட்டு ஆசாமி  தந்த புகைப்படத்தை மகளிடம் நீட்டினாள்.

“யாருடையது...?என்று கேட்டபடியே புகைப்படத்தை வாங்கிய வந்தனா “அட நம் வருணுடையது..... அவன், அவன் அம்மா, இன்னொருத்தர் யார் அவன் மாமாவா?....என்று கேட்டதுடன் நிறுத்தாமல் தொடர்ந்து கேட்டாள். “யார் இதைக் கொடுத்தது அவன் அம்மாவா?...

இரண்டு கேள்விகளுக்கும் சேர்ந்த பதிலாக “அவன் அப்பாஎன்றாள் ஜானகி.

அதை இரண்டாம் கேள்விக்கு மட்டுமான பதிலாக எடுத்துக் கொண்ட வந்தனா அவன் அப்பா வந்து விட்டாரா. எப்போது வந்தார்? அவரிடம் பேசினீர்களா?ஆவலுடன் கேட்டாள். எப்போதுமே வருண் மிகப் பெருமையாகப் பேசும் அந்த மனிதரைப் பார்த்துப் பேச அவளுக்கு ஆர்வம் வந்திருந்தது.

“இது அந்த அப்பா அல்ல, வேறு அப்பா...என்றாள் ஜானகி.

வந்தனா எரிச்சலடைந்தாள். “என்னம்மா உளறுகிறாய்...

“உளறவில்லை....என்ற ஜானகி மாடி வீட்டு ஆசாமி சொன்ன உருக்கமான கதையை அப்படியே மகளிடமும் கணவரிடமும் ஒப்பித்தாள். இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவர்களுக்கு அவள் சொன்னதை ஜீரணம் செய்யக் கஷ்டமாக இருந்தது. வருணின் குடும்பம் ஒரு எடுத்துக்காட்டான குடும்பம் என்று நினைத்திருந்த அவர்கள் ஜானகியைத் திகைப்புடன் பார்த்தார்கள்.

மாடி வீட்டிலிருந்து சேகர் காதுகளைக் கூர்மையாக்கி தந்தை மகள் இருவரின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ளக் காத்திருந்தான்.

மாதவன் சொன்னார். “மாடி வீட்டு ஆள் சொன்னதை அப்படியே நம்ப வேண்டாம். அந்த ஆள் மீது எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகமாய் இருக்கிறது. யார் கண்ணிலும் படாமலும், யாரிடமும் பேசாமலும் அந்த ஆள் மர்மமாகவே நடந்து கொள்வதை எல்லாம் பார்க்கையில் நேர்மையான ஆள் மாதிரித் தெரியவில்லை.... இந்த ஆள் வருணின் உண்மையான அப்பாவாக இருந்தால் நேரடியாகப் போய் பேச வேண்டியது தானே. நாம் எதற்கு இடையில்...

சேகருக்கு அவர் வார்த்தைகள் காதில் நாராசமாய் விழுந்தன.

நல்ல வேளையாக ஜானகி அவனுக்கு ஆதரவாகப் பேசினாள். “அந்த ஆள் நிலைமையில் இருந்து யோசித்துப் பாருங்கள். அவர் மகனிடம் சஹானா என்ன சொல்லி இருக்கிறாள், அவன் அதை எந்த அளவு நம்பி இருக்கிறான் என்று தெரியாமல் அவர் வருணிடம் பேசப் போனால் அவன் எப்படி எடுத்துக் கொள்வான், எப்படி நடந்து கொள்வான் என்று அவர் பயப்படுகிறார். நியாயம் தானே?

தவறு செய்தவள் சஹானாவாக இருந்தால் சஹானா தானே பயப்பட வேண்டும். ஓடி ஒளிய வேண்டும். இந்த ஆள் ஏன் அந்த இரண்டையும் செய்கின்றான்

“தவறு செய்தவர்கள் பயப்படுவதும் ஒளிவதும் அந்தக் காலம். இந்தக் காலத்தில் அவர்கள் தான் தைரியமாக தவறாக எதுவும் நடக்காத மாதிரி இருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறவர்கள் தான் பயப்பட வேண்டி இருக்கிறது, கூச்சப்பட வேண்டி இருக்கிறது இந்தக் கலிகாலத்தில்

வந்தனா மௌனமாகவே இருந்தாள். அவளுக்கு யாரை நம்புவது என்று புரியவில்லை.  அடுத்தவர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது அநாகரிகம் என்று உறுதியாக நம்புபவள் அவள். வருண் சம்பந்தப்பட்டதாக அல்லாமல் இருந்திருந்தால் இதன் உள்ளே புகவே அவள் மறுத்திருப்பாள். அவள் அம்மாவோ அப்பாவோ தலையிட்டால் கூடத் தடுத்திருப்பாள். ஆனால் வருணை அவள் மிக நேசிக்க ஆரம்பித்திருந்தாள். உண்மையில் அவன் அப்பா மாடி வீட்டு ஆசாமியாக இருந்து, அந்த ஆள் சொன்னதெல்லாமும் கூட உண்மையாக இருந்து, அது வருணுக்குத் தெரியாமல் இருந்திருந்தால் அது தந்தை மகன் இருவருக்கும் இழைக்கப்படும் அநியாயம் என்று அவள் நினைத்தாள்.

வருணின் தாய் அப்படிப்பட்டவளாகத் தெரியவில்லை. ஆனால் காரணம் இல்லாமல் யாரோ ஒருவன் அப்படி ஒரு புகைப்படத்தைக் கொண்டு வந்து அவன் தான் அவளுடைய கணவன் என்று சொல்ல முடியுமா? அது பொய்யாக இருக்குமானால் அந்த ஆளை யாராவது சும்மா விடுவார்களா? அடி உதையுடன் சிறைவாசமும் அல்லவா பரிசாகக் கிடைக்கும். அப்படி இருக்கையில் ஏன் மாடி வீட்டு ஆசாமி அப்படிச் சொல்கிறான்.

மகள் யோசிப்பதைப் பார்த்த ஜானகி சொன்னாள். “எதற்கும் சும்மா இந்தப் புகைப்படத்தை வருணிடம் காட்டி அந்த ஆள் யார் என்று கேட்டு தான் பாரேன். உண்மை என்ன என்று தெரிந்து விடப்போகிறது

வந்தனாவுக்கும் அது சரி என்றே தோன்றியது. அவள் சரியென்று தலையசைத்தாள். நாளை விடுமுறை நாள். காலை அவன் வருண் வரும் போது கேட்டு விடுவதென்று வந்தனா முடிவெடுத்தாள்.
அன்றிரவு சேகருக்குச் சரியாக உறக்கம் வரவில்லை. அவன் உயிரோடு இருப்பது தெரிந்தால் அவன் மகன் எப்படி அதை எடுத்துக் கொள்வான், என்ன செய்வான் என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. மகனிடம் பேசும் போது அவனைத் தன் பக்கம் இழுக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்க்க ஆரம்பித்தான். இத்தனை நாட்களில் ஒட்டுக் கேட்டும் வேவு பார்த்தும் மகனை ஓரளவு நன்றாகவே எடை போட்டிருந்தான். எந்த மாதிரியான பொய்யை எப்படிச் சொன்னால் வருண் அதிர்வான், தன் பக்கம் சாய்வான் என்றெல்லாம் ஓரளவு திருப்தியுடன் அவன் யோசித்து முடிக்கையில் அதிகாலை ஆகி இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்


Monday, October 26, 2015

பக்தர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் பாபா!

மகாசக்தி மனிதர்கள்-40

1886க்குப் பின் ஷிரடி சாய்பாபாவின் புகழ் நாடெங்கும் பரவ ஆரம்பித்தது. தொலை தூர மக்களும் ஆயிரக்கணக்கில் அவர் பக்தர்கள் ஆயினர். எண்ணற்ற மக்களுக்கு அருள் புரியவும், சேவை செய்யவும் இறைவனிடம் கூடுதல் ஆயுள் காலம் அவர் பெற்று வந்தது போல் இருந்தது அவர் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி.

அவரைப் பலர் கடவுளாகவே கண்டார்கள் என்ற போதும் அவர் தன்னைக் கடவுளாக அறிவித்துக் கொண்டதில்லை. எத்தனையோ அற்புதங்களை அவர் செய்து காட்டினார் என்ற போதும் அது குறித்த அகந்தையும் அவரிடம் இருந்ததில்லை. அவர் செய்து காட்டிய அற்புதச் செயல்கள் பற்றி வெளிப்படையாக எவராவது பாராட்டினாலோ, குறிப்பிட்டாலோ கூட அவர் அடக்கத்துடன் “இறைவன் ஆணை இட்டதை மட்டும் நான் அவன் அருளால் செய்கிறேன்என்று சொன்னார். 

ஷிரடி பாபாவிடம் இருந்த விசேஷ குணாதிசயம் என்னவென்றால் அவரை நெருங்கும் மனிதர்களின் அறிவுக்கும், தன்மைக்கும் தகுந்தபடி அவர்களுக்கு வழி காண்பிப்பதில் அவர் வல்லவராய் இருந்தார். எந்த சமயத்திலும் எந்த விதத்திலும் தன்னை மேம்படுத்திக் காட்டாமல் தேடுபவர்களுக்குத் தேவையானது என்னவோ அதைச் சொல்லி வழி நடத்தினார். ஒரு முறை அவருடைய பக்தர்களில் ஒரு இளைஞரை அவர் வேதாந்த வகுப்புகளுக்குச் சென்று ஆன்மிக ஞானத்தை மேம்படுத்திக் கொள்ளச் சொன்னார்.
அந்த வகுப்புகளுக்குச் சென்று வந்த அந்த இளைஞனுக்கு அவர்கள் ஒரு வேதாந்த உண்மையை வலியுறுத்தினார்கள். சில மனிதர்கள் விசேஷ சக்திகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கென்று அவர்களை கடவுள் என்று கூறிவிட முடியாது. இறைவன் ஒருவனேஎன்று திட்டவட்டமாக அவர்கள் சொன்னார்கள். ஷிரடி பாபாவைக் கடவுளாகவே நம்ப ஆரம்பித்திருந்த அந்த இளைஞனுக்கு அவர்கள் சொன்னது பிடிக்கவில்லை.

அந்த வகுப்புகளுக்குத் தன்னை அனுப்பிய ஷிரடி பாபாவிடம் அவன் வந்து அவர்கள் சொன்ன தனக்கு உடன்பாடில்லாத அந்த உபதேசம் பற்றி சொன்னான். உடனே ஷிரடி பாபா “அவர்கள் சொன்னதில் தவறு என்ன இருக்கிறது. நான் வெறும் ஒரு பக்கிரி மட்டுமே. இறைவனோடு யாரைத் தான் ஒப்பிட முடியும்என்று சொன்னார். நான் என்ற அகந்தையை வேரோடு பிடுங்கி எறிந்திருந்த ஒருவரால் மட்டுமே அல்லவா அதைச் சொல்ல முடியும்.

வேறொரு சமயத்தில் பாபாவின் தெய்வீகச் செயலைச் சுட்டிக்காட்டி அந்த இளைஞன் “அன்று நான் வெறும் பக்கிரி மட்டுமே என்றீர்களே. இப்போது என்ன சொல்கிறீர்கள்?என்று அவன் கேட்ட போது அவர் வெறுமனே புன்னகைத்தார்.

பல நேரங்களில் பிரச்னைகளோடு தீர்வு தேடி தன்னிடம் வந்தவர்களிடம் அவர்களுக்குத் தகுந்த வழிபாட்டு முறையை ஷிரடி பாபா காட்டிக் கொடுத்தார். ஒருவரைக் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று சிவனை வணங்கச் சொல்வார். இன்னொருவரை இன்னொரு புனிதத் தலத்தில் இருக்கும் விஷ்ணுவை வணங்கச் சொல்வார். வேறொருவரை சரஸ்வதியைத் துதிக்கச் சொல்வார். அவர்களும் அவர் சொன்னபடி சென்று வழிபட்டு தங்கள் பிரச்னைகள் தீர்வதைக் கண்டார்கள்.

சில நேரங்களில் அவருடைய பக்தர்களுக்கு அவர்கள் கேட்காமலே அருளும் அபூர்வ அன்பு அவரிடம் இருந்தது. அப்படி ஒரு நிகழ்வை இங்கு பார்ப்போம்.

தாத்யா பட்டீல் என்பவர் ஷிரடி சாய்பாபாவின் தீவிர பக்தர். அவருடைய தாய், பாபா ஷிரடிக்கு வந்த புதிதில் அவருக்கு உணவளித்த புண்ணியவதிகளுள் ஒருவர். பாபா தெய்வீகத் தன்மை வாய்ந்தவர் என்று அறியும் முன்னரே, பைத்தியக்கார பக்கிரியாக சுற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, உணவு வேண்டும் என்று கேட்காமல் இருந்தாலும் அவரைத் தேடி உணவளித்த அந்த தாயின் மகனான தாத்யா பட்டீல் பிற்காலத்தில் அவரைக் கடவுளாகவே பார்த்தவர். ஒரு முறை தாத்யா பட்டீலின் ஆட்கள் அறுவர் அவருக்கு எதிரான கோஷ்டியால் பொய் வழக்கு போடப்பட்டு கைதானார்கள். வலுவான பொய் சாட்சிகளும் இருந்ததால் கோபர்காவுன் நீதிமன்ற நீதிபதி அவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

தாத்யா பட்டீலின் ஆறு ஆட்களில் ஒருவனான ரகு என்பவன் ஷிரடி பாபாவிடம் பக்தி கொண்டவன். அவன் அந்தத் தீர்ப்பால் மனமுடைந்து போனான். அகமதுநகர் சிறையில் அடைக்கப்பட்ட அவன் துக்கம் தாளாமல் அழுது கொண்டே அவன் உறங்கிப் போன போது சிறையில் பாபாவின் திருவுருவம் அவன் கனவில் தோன்றியது. கவலைப்படாதே. நீ சிக்கிரம் விடுதலையாகி விடுவாய்என்று பாபா அவனுடைய கனவில் உறுதி அளித்தார்.

அக்காலத்திலேயே ஷிரடி பாபாவின் திருவுருவம் தீவிர பக்தர்கள் கனவில் தோன்றுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாக இருந்தது.  தாத்யா பட்டீல் அந்த வழக்கின் அப்பீல் மனுவை எடுத்துக் கொண்டு போய் பிரபல வக்கீல்களின் உதவியை நாடினார். வழக்கைப் படித்துப் பார்த்த அவர்கள் வழக்கு அப்பீலுக்குப் போனாலும் ஜெயிக்காது எனவும், அந்த அளவு வழக்கு எதிர் கோஷ்டி பக்கம் வலுவாக இருக்கிறது எனவும் சொல்லி விட்டார்கள்.

தாத்யா பட்டீல் வேறு வழி தெரியாமல் ஷிரடி பாபாவிடமே அந்த அப்பீல் மனுவை எடுத்துக் கொண்டு வந்தார். பாபா நாசிக்கில் உள்ள பாவ் எஸ்.பி. தூமல் (Bhav, S.B. Dhumal) என்ற ப்ளீடரிடம் அந்த வழக்கு சம்பந்தமான காகிதங்களை எடுத்துச் செல்லுமாறு தாத்யா பட்டீலைப் பணித்தார். அந்த ப்ளீடரிடம் அப்பீல் மெம்மோவுடன் அந்த வழக்கை அகமதுநகர் மாவட்ட நீதிபதி முன்னிலையில் வைக்கும்படி சொன்னார். வழக்கு பற்றியோ, வழக்கு நடைமுறை வழிகள் பற்றியோ, அந்த ப்ளீடர் மற்றும் நீதிபதி பற்றியோ அறிந்திராத பாபா இப்படிச் சொன்னது தாத்யா பட்டீலுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர் பாபா சொன்னது போலவே செய்தார். அப்படியே அந்த ப்ளீடர் அகமதுநகர் மாவட்ட நீதிபதியிடம் அப்பீல் மெம்மோவுடன் வழக்கை முன் வைக்க அவர் அதிக விசாரணை இல்லாமல் ரகுவையும் மற்ற ஐவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். நீதி வென்றது. வெல்லவே முடியாத வலுவான வழக்கு என்று சட்ட நிபுணர்கள் சொன்ன ஒரு வழக்கை பாபாவின் சக்தி வெல்ல வைத்ததாகவே அந்த வழக்கைக் கவனித்துக் கொண்டிருந்த அவருடைய பக்தர்கள் கருதினார்கள்.

ஷிரடி சாய்பாபாவை நாடி வரும் பக்தர்கள் தங்கள் சின்னச் சின்னப் பிரச்னைகளை அவர் முன் வைத்து அதற்கு தீர்வு வேண்டுவது அதிகரித்துக் கொண்டே போனது. இது அவருடைய சில சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. பாபாவைப் போன்ற பெரிய மகானிடம் சின்னச் சின்னப் பிரச்னைகளைச் சொல்வதே தவறு என்று கருதினார்கள். ஞானப் பொக்கிஷமான அவரிடம் ஞான மார்க்க வழி கேட்கலாமே ஒழிய லௌகீக வேண்டுதல்களை அவர் முன் வைப்பது அவமரியாதை என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் அவற்றைத் தடுக்கவும் முற்பட்டார்கள்.

ஆனால் அவர்களை ஷிரடி பாபா கண்டித்தார். “அவர்களைத் தடுக்காதீர்கள். சின்னச் சின்ன வேண்டுகோள்களுடன் ஆரம்பத்தில் என்னை நெருங்கும் அவர்கள் அந்தப் பிரச்னைகள் தீர்ந்தவுடன் அதற்கும் மேலான உண்மையான ஆன்மிக மார்க்கத்திற்காகவும் என்னைப் பின்பற்றுவார்கள். என்னை நாடி வருபவர்கள் அவர்களாக வருவதில்லை. நானே அவர்களை என்னிடத்தில் வரவழைக்கிறேன். அவர்களது பிரச்னைகள் உங்களுக்கு சிறியதாகவும் அர்த்தம் இல்லாததாகவும் கூடத் தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு அந்தப் பிரச்னைகள் பிரம்மாண்டமாகத் தெரிகின்றன. அப்படியே அவர்களை அழுத்துகின்றன. அந்தப் பிரச்னைகள் தீரும் வரை அவர்கள் அதைத் தாண்டிய ஆன்மிகத்திற்கு நுழைவதில்லை. அதனாலேயே அவர்கள் பிரச்னைகளை நான் தீர்த்து வைக்கிறேன். உண்மையான ஆன்மிகத்துக்குள் நுழைய நான் வழி வகுக்கிறேன்.

எத்தனை தீர்க்கமான சிந்தனை பாருங்கள். ஷிரடி பாபாவின் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இருந்து அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னால் லட்சக்கணக்காக மாறியதற்குக் காரணம் புரிகிறதல்லவா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 22.05.2015

                                                                                                                                                                          

Thursday, October 22, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 68



லாரி நின்றவுடன் அக்‌ஷயும் மைத்ரேயனும் இறங்கினார்கள். லாரியின் பின் கதவை அக்‌ஷய் சாத்தி தாளிட்டு விட்டு லாரி டிரைவரைப் பார்த்துக் கையசைத்தான். லாரி டிரைவரும் கையசைத்தான். பாட்டில் ஒன்றும் டிரைவர்  கையுடன் சேர்ந்து அசைந்தது. அவர்களுக்காக உணவகத்தின் முன்பு கதவைத் திறந்து விட்டவன் தான் பாட்டிலை ஆட்டுகிறான். அக்‌ஷய் புன்னகைத்தான். லாரி கிளம்பிப் போனது.

அவர்கள் இறங்கிய இடம் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்த சாலை. சூரியன் வானில் தெரிந்த போதும் அதன் கிரணங்கள் வெளியே நிலவிய குளிரைப் பெரிதாகக் குறைத்து விடவில்லை. இருவரும் அந்த சாலையில் நடக்க ஆரம்பித்தார்கள். தூரத்து மலை முகடுகளில் பனி உறைய ஆரம்பித்து இருந்தது.

“இனி நாம் வாகனங்களில் பயணம் செய்வதும், எங்காவது விடுதிகளில் தங்குவதும் அபாயம் என்று நினைக்கிறேன். அதனால் நாம் நிறையவே நடக்க வேண்டி இருக்கும். வெளி இடங்களிலேயே தங்க வேண்டி இருக்கும்....என்று அக்‌ஷய் மைத்ரேயனிடம் தெரிவித்தான்.

மைத்ரேயன் தலையசைத்தான். மலைப்பாதைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதும், இமயமலைக் கடுங்குளிரில் வெளியே தங்குவதும் அவனைப் போன்ற சிறுவனுக்கு மிகவும் கஷ்டமான அனுபவம் தான் என்றாலும் அதை அவன் உணர்ந்ததாகவோ அதற்கு வருத்தப்பட்டதாகவோ தெரியவில்லை.    

அவர்கள் இருவரும் சிறிது தூரம் சாலையில் நடந்தார்கள். சாலையில் எந்த வாகனமும், ஆட்களும் அவர்கள் நடந்த வரை அவர்களுக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.  அங்கிருந்து ஒரு ஒற்றையடிப் பாதையில் அக்‌ஷய் திரும்பிய போது மைத்ரேயன் கேட்டான். “நீங்கள் இந்த இடங்களுக்கெல்லாம் முன்பே வந்திருக்கிறீர்களா?”

“ம்... ஒரு முறை வந்திருக்கிறேன்.....”  என்றான் அக்‌ஷய்.

“ஒரு முறை வந்ததிலேயே இந்த இடங்களை நீங்கள் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.

அக்‌ஷய்க்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறுவனாக இது வரை தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டதோ, தன்னுடைய கருத்தைத் தெரிவித்ததோ இல்லை. முதல் முறையாக அந்த அதிசயம் நடந்திருக்கிறது....

அக்‌ஷய் புன்னகைத்தபடி சொன்னான். “அதற்கு என் குருவைத் தான் பாராட்ட வேண்டும். பயிற்சிகள் செய்ய சில சமயங்களில் வெளியிடங்களுக்கு அனுப்புவார். எங்கு போய் வந்தாலும் பத்து கேள்விகள் கேட்பார். நீ வருகிற வழியில் எத்தனை ஆடுகள் பார்த்தாய்,  நீ தியானம் செய்த இடத்தில் உன் எதிரில் எத்தனை பைன் மரங்கள் இருந்தன, நீ நடந்து வந்த போது உன்னைக் கடந்து போன மனிதர்கள் எத்தனை என்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்பார். ஆரம்பத்தில் பத்தில் இரண்டு கேள்விகளுக்குக் கூடப் பதில் தெரியாது. சின்னச் சின்ன விஷயங்களையும் கவனிப்பது முக்கியம் என்று அடிக்கடி சொல்வார். பெரும்பாலானவர்கள் அரைத்தூக்கத்தில் தான் வாழ்கிறார்கள் என்றும் அந்த வரிசையில் சேர்ந்து விடாதே என்றும் சொல்வார்......

அவன் தன் திபெத்திய குருவை நினைவு கூர்ந்த போது தானாக அவன் முகம் மென்மையானது.

மைத்ரேயன் கேட்டான். “ஆரம்பத்தில் பத்தில் இரண்டு கேள்விகளுக்குக்கூட பதில் தெரியாத நீங்கள் கடைசியில் எத்தனை கேள்விகளுக்குப் பதில் சொல்கிற அளவு முன்னேறினீர்கள்?

அடுத்த கேள்வியும் கேட்கும் அளவு அவன் ஆர்வம் காட்டியது அக்‌ஷயை மறுபடியும் ஆச்சரியப்படுத்தியது.

“ஐந்து அல்லது ஆறு வரைக்கும் தான் போக முடிந்ததுஎன்று அக்‌ஷய் உண்மையைச் சொன்னான். ஆனால் அவனோடு அந்தக் குருவிடம் அந்தக் காலக்கட்டத்தில் படித்தவர்கள் யாரும் அதிகபட்சம் மூன்றைத் தாண்டியதில்லை. அவர்களில் பலரும் அவனை விட அதிக காலம் அங்கு படித்தவர்கள்.  இதைக் கேட்பார் என்று எண்ணி கவனித்து மனதில் குறித்துக் கொண்டதை என்றுமே அவனது குரு கேட்டதில்லை. அதை எல்லாம் அவன் மைத்ரேயனிடம் சொல்ல முற்படவில்லை...


இருவரும் சிறிது நேரம் பேசாமல் நடந்தார்கள். ஒற்றையடிப் பாதை நடக்க சுலபமாக இல்லை. சில இடங்களில் பாதை கரடு முரடாக இருந்தது. மைத்ரேயன் களைத்துப் போனாலும் சின்னதாய் ஒரு முகச்சுளிப்பு கூட இல்லாமல் நடப்பதைப் பார்க்கையில் அக்‌ஷய்க்குக் கஷ்டமாக இருந்தது. அவன் மகன் கௌதம் இதில் கால் வாசி தூரம் கூட நடந்திருக்க மாட்டான்.

“உன்னைத் தூக்கிக் கொண்டு நடக்கவா?என்று அக்‌ஷய் கேட்டான்.

“பரவாயில்லை. வேண்டாம்....என்றான் மைத்ரேயன். அக்‌ஷயை அவன் சிரமப்படுத்த விரும்பவில்லை.  அக்‌ஷய் அவன் மறுத்ததைப் பொருட்படுத்தாமல் அவனைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். மைத்ரேயன் சின்னதாய் ஒரு புன்னகையுடன் அவனையே பார்த்தான். அக்‌ஷயும் புன்னகைத்து விட்டு பாதையில் கவனமாக நடக்க ஆரம்பித்தான். அரை மணி நேரம் நடந்த பிறகு ஒரு சிறிய கிராமத்தை அடைந்தார்கள். அதன் பிறகே மைத்ரேயனை அக்‌ஷய் இறக்கி விட்டான்.

கிராமத்திற்குள் செல்லும் போது இருவரும் சேர்ந்து தெரிய வேண்டாம் என்று நினைத்த அக்‌ஷய் “நீ சற்று மறைவாகவே இரு. நான் சென்று வருகிறேன் என்று அக்‌ஷய் ஒரு புதரைக் காட்டிச் சொல்லவே தலையசைத்த மைத்ரேயன் அந்தப் புதரின் பின்பறம் சென்று மறைவாக அமர்ந்து கொண்டான்.

அக்‌ஷய் தனியாக கிராமத்திற்குள் பிரவேசித்தான். அந்தக் கிராமத்தில் சிறிது தூரம் சென்ற பின் ஒரு கிழவர் தான் முதலில் அவனுக்குப் பார்க்கக் கிடைத்தார். சில ஆடுகள் சுற்று வட்டாரத்தில் மேய்ந்து கொண்டிருக்க அவர் ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டிருந்தார். முகமெல்லாம் சுருக்கமாக, நாலைந்து பற்களே மிஞ்சியவராக, பல கிழிசல்களை ஒட்டுப் போட்டிருந்த ஒரு சால்வையைப் போர்த்தியிருந்த அவர் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார். அன்னியர்கள் அங்கு வருவது மிக அபூர்வம்....

அவரை நோக்கி நடந்த போது அக்‌ஷய் ஆடு மேய்க்கும் ஆளாகவே மாறி இருந்தான். நடையில் நளினமோ, அமைதியோ இல்லை. வணக்கம் தெரிவிக்க முனையவில்லை. புன்னகைக்கவோ, சினேகமாய் சிரிக்கவோ அவன் முனையவில்லை. அவரை நெருங்கிய பிறகு நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “நான் ஆடுகள் வாங்க வந்திருக்கிறேன்.... இந்த ஆடுகள் எல்லாம் உங்களுடையது தானா?அவன் குரலும் தடித்திருந்தது.

கிழவர் சுறுசுறுப்பானார். இப்போதெல்லாம் அந்தப் பகுதியில் நேரடியாக ஆடுகள் வாங்க அதிக ஆட்கள் வருவதில்லை. ஓரிரண்டு இடைத்தரகர்களே அதிகம் வருகிறார்கள்.  அந்தக் கிராமத்தில் இருந்து தரைமட்ட விலையில் சுமார் 30 சதவீதம் மட்டுமே முன்பணம் கொடுத்து விட்டு ஆடுகள் வாங்கிக் கொண்டு போய், நேபாளத்தில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக விலையில் விற்று பிறகு தான் திரும்ப வந்து ஆடுகளுக்கான மீதமுள்ள 70 சதவீதத் தொகையைத் தருவார்கள்.  அப்படித் தந்து பழைய கணக்கை முடித்த கையோடு மறுபடியும் 30 சதவீத பணம் தந்து விட்டு மேலும் ஆடுகள் வாங்கிக் கொண்டு போவார்கள். அதனால் எப்போதுமே 70 சதவீதத் தொகை அந்த இடைத்தரகர்களிடமே இருக்கும். இடைத்தரகர்கள் இந்த ஏற்பாட்டினால் நல்ல லாபத்தில் கொழுத்தார்கள். அதனால் அக்கிராமத்து ஜனங்கள் வயிற்றுப் பிழைப்பை மட்டுமே கவனிக்க முடிந்த ஏழைகளாகவே தங்கிப் போனார்கள். அதனால் தரகர் அல்லாத ஒருவன் ஆடுகளை நேரடியாக விலைக்கு வாங்க வந்ததில் மகிழ்ச்சி அடைந்த கிழவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். “ஆமாம்.... நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

அக்‌ஷய் அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து தான் வருவதாகச் சொன்னான். பக்கத்து கிராம எல்லையில் உள்ள ஒரு மடாலயத்திற்கு வழிபாட்டுக்காக வந்ததாகவும், போகும் போது இங்கிருந்து ஆடுகள் வாங்கிக் கொண்டு போகலாம் என்று எண்ணியதாகவும் சொன்னான்.

“நல்ல யோசனை..... திபெத்தில் இப்பகுதி ஆடுகளே உயர்ந்தவை. எத்தனை ஆடுகள் வேண்டும்?

“இப்போதைக்கு இரண்டு ஆடுகள் வாங்கிக் கொண்டு போகிறேன். விலை நியாயமாக இருந்து, ஆடுகள் என் தந்தைக்குத் திருப்தி அளித்தால் மேலும் அதிக ஆடுகள் வாங்க வருவேன்...


கிழவர் தலையசைத்தார். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற வகையில் பேசும் இந்த இளைஞனை அவருக்குப் பிடித்திருந்தது. ஆடுகளைப் பொருத்து விலை அமையும்.  இங்கு மேயும் ஆடுகளில் இரண்டை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.... பிறகு விலை சொல்கிறேன்.....

அக்‌ஷய் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை ஆராய்ந்தான். கடைசியில் தனியாக ஓரிடத்தில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகளைத் தேர்ந்தெடுத்தான். ஒரு ஆடும், அதன் குட்டியும்...

அந்த ஆடுகளுக்கு நியாயமான விலையைச் சொன்ன கிழவர் பொக்கை வாயால் புன்முறுவல் செய்தபடி தொடர்ந்து சொன்னார். குட்டி சாதுவானது. ஆனால் அந்த தாய் ஆடு சாமர்த்தியமானது. சுறுசுறுப்பானது. மற்ற ஆடுகள் போகாத இடத்திற்கெல்லாம் அது போய் விடும்...

அக்‌ஷய் யோசித்தபடி சொன்னான். “அதை என் ஊர் வரை நான் கொண்டு போக வேண்டுமே... போக எனக்கு ஒரே வாகனம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டு மூன்று வாகனங்கள் மாறி மாறிப் போக வேண்டி இருக்கும். சில தூரம் நடந்தும் போக வேண்டி இருக்கலாம். அப்படியானால் அதைச் சமாளிப்பது கஷ்டமாக இருக்குமே!

“இல்லை சுலபம் தான். அது இந்த வகைப் புல்லை விரும்பி சாப்பிடும்என்றவர் ஒரு சாக்கில் கட்டி வைத்திருந்த ஒரு புல்கட்டை வெளியே எடுத்தார். “இதை எடுத்துக் காட்டி சத்தம் செய்தால் போதும். பார்த்து விட்டால் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து விடும்

சொன்னதோடு நிற்காமல் ஒரு பிரத்தியேக ஒலி எழுப்ப அந்த ஆடு திரும்பிப் பார்த்தது. உடனே அங்கிருந்து அது பெரிய தாவலில் ஓடி வர அதன் குட்டியும் பின் தொடர்ந்தது. மேலும் மூன்று ஆடுகள் மெல்ல வர ஆரம்பித்தன. அந்தக் கட்டில் இருந்து சிறிது புல்லை மட்டும் அழைத்த ஆட்டுக்குச் சாப்பிடப் போட்டு விட்டு மீதியை சாக்கில் மறுபடி போட்டு பத்திரப்படுத்திக் கொண்ட அவர் “வேண்டுமானால் இந்தப் புல்கட்டு ஒன்றையும் உங்களுக்குத் தருகிறேன்என்றார்.

புல்லைச் சாப்பிட்டு விட்டு அவனையே அந்த துடிப்பான ஆடு பார்த்தது. அவன் போகிற இடத்துக்கும், போட்டிருக்கும்  திட்டத்திற்கும் இந்த ஆடு பொருத்தமாக இருக்கும் என்று அக்‌ஷய்க்குத் தோன்றியது. பணத்தை எண்ணிப் பெரியவரிடம் அக்‌ஷய் நீட்டினான். அவன் பேரம் பேசாமல் பணத்தைத் தந்தது அவருக்கு நிறைவாக இருந்தது. வாங்கிக் கொண்டார்.

அக்‌ஷய் அவரிடம் கேட்டான். “உங்கள் வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கிறது

“சொல்கிற அளவுக்கு இல்லை. எங்களிடம் வியாபாரம் செய்வது அதிகம் தரகர்கள் தான். அவர்களும் சில நாட்களாக நேபாள எல்லையில் இருக்கும் கெடுபிடியால் தற்காலிகமாக எங்களிடம் ஆடுகள் வாங்குவதை நிறுத்தி இருக்கிறார்கள்....

“என்ன கெடுபிடி?

“சீன நேபாள நெடுஞ்சாலை வழியாகச் செல்கிற ஒவ்வொரு வாகனமும், மனிதனும், கடுமையான சோதனைக்குப் பின்னே தான் திபெத்திய எல்லையைக் கடக்க முடிகிறது. ஏதோ தீவிரவாதியைத் தேடுகிறார்களாம். அதனால் எல்லையில் மைல்கணக்கில் வாகனங்களும் மனிதர்களும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்... லஞ்சம் கொடுத்தால் கூட சோதனையில் இருந்து தப்ப முடிவதில்லையாம்....

அக்‌ஷய் அப்படியா என்பது போல் ஆச்சரியத்தை முகத்தில் காட்டினான். 

கிழவர் சொன்னார். “இந்தப் பகுதிகளில் கூட ரோந்து வாகனம் ஒன்று அந்த தீவிரவாதிகளைத் தேடி அவ்வப்போது வருகிறது....

அதற்கு மேல் காலம் தாழ்த்த விரும்பாத அக்‌ஷய் இரண்டு ஆடுகளோடு அங்கிருந்து கிளம்பினான். இத்தனை நேரம் ரோந்து வாகனத்தைக் காணாமல் தப்பித்தது பெரும் புண்ணியம் என்று தோன்றியது. வேகமாகச் சென்று மைத்ரேயனை அவன் அடைந்த போது தூரத்தில் வாகனம் வரும் சத்தம் கேட்டது. கண்டிப்பாக அது ரோந்து வாகனமாகத் தான் இருக்க வேண்டும். புண்ணியம் போதவில்லையோ?  

ரோந்து வாகனத்தைத் தவிர்க்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட அக்‌ஷய் என்ன செய்வது என்று அவசரமாக யோசித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Tuesday, October 20, 2015

உலகப் பழமொழிகள் – 9


81. கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்காதே. உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது.

82. கவனமில்லாத காவல் கவனமுள்ள பகைவனை அழைக்கும்.

83. போக்கிரி முத்தமிட்டால் உன் பற்கள் சரியாக உள்ளனவா என்று எண்ணிப்பார்.

84. தன் குறைகளைக் கவனிப்பவனுக்குப் பிறர் குறைகளைக் கவனிக்க நேரம் இருக்காது.

85. மரியாதை காட்டினால் பூனைக்கும் மகிழ்ச்சி தான்.

86. வெளியே வர வழி தெரிந்து கொண்டு உள்ளே நுழை.

87. அரசன் பிரபுவை உண்டாக்கலாம். ஆனால் கனவானைக் கடவுளே உண்டாக்க வேண்டும்.

88. நூல்கள் மனதோடும், நண்பர்கள் இதயத்தோடும், இறைவன் ஆன்மாவோடும், மற்றவர்கள் செவியுடனும் பேசுகிறார்கள்.

89. குதிரையைக் கண்டதும் பிரயாணி நொண்டியாகி விடுகிறான்.

90. மற்றெல்லாப் பொருள்களும் அதிக மென்மை அடைந்தால் ஒடிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் அதிக வலிமை அடைந்தால் ஒடிந்து விடுகிறான்.

தொகுப்பு: என். கணேசன்

Monday, October 19, 2015

தினமணியில் “நீ நான் தாமிரபரணி” விமர்சனம்!










25 ஆண்டுகள் கழித்து, அவர் ஒரு துணிச்சல் மிகுந்த பெரிய பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்கிறார். மாயமான நாவலாசிரியரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை தனது பத்திரிகையில் பணிபுரியும் துடிப்பான நிருபரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் எங்கு சென்றாலும் அந்த நிருபருக்குத் தோல்வியே மிஞ்சுகிறது. அவருக்கு முன்னதாகவே அவரது எதிரிகள் முந்திக் கொள்கின்றனர். இறுதியாக அந்தப் பிரபலமான நாவலிலேயே அதற்கான ரகசியமும் மறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார் அந்த நிருபர்.



Thursday, October 15, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 67



வன் அழுகையினூடே உதவி கேட்டதும் ஜானகிக்கு மறுக்க முடியவில்லை. ஆனால் அவனுக்குத் தன்னால் எப்படி உதவி செய்ய முடியும் என்பது அவளுக்கு விளங்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?என்று கேட்டாள்.

அவன் சொன்னான். “வருண் உங்கள் குடும்பத்தோடு நெருக்கமாய் இருக்கிறான். உங்கள் மகளிடம் நல்ல நண்பனாகவே பழகுகிறான் என்பதையும் கவனித்திருக்கிறேன். அதனால் அவனுடைய அப்பா உயிரோடு இருப்பது அவனுக்குத் தெரியுமா, உண்மையான தந்தையைப் பற்றி அவன் மனதில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன என்பதை உங்கள் மகள் நாசுக்காகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்.......

ஜானகி உடனடியாக எதுவும் சொல்லாமல் யோசித்தாள். அடுத்தவர் வீட்டு விவகாரங்களில் அதிகமாய் மூக்கை நுழைக்கக் கூடாது என்று உறுதியாக இருப்பவள் வந்தனா. அவளிடம் இதைச் சொன்னால் என்ன சொல்வாளோ? மேலும் இது போன்ற விஷயங்களை ஒருவர் நேரடியாகவே கையாள்வது தானே முறை!

அவன் சொன்னான். “அவர்கள் என்னை விட்டுப் போன போது என் மகனுக்கு ஐந்து வயது தான் இருக்கும்.  அவனிடம் சஹானா என்ன சொல்லி வைத்திருக்கிறாள் என்பது தெரியவில்லை. நான் தான் அவர்களைக் கைவிட்டு விட்டேன் என்று சொல்லி இருக்கிறாளா, இல்லை நான் செத்தே விட்டேன் என்று கூடச் சொல்லி இருக்கிறாளா என்பது தெரியவில்லை. இன்னும் எத்தனையோ சொல்லி இருக்கலாம். நான் மகா மோசமானவன் என்றெல்லாம் கூடச் சொல்லி இருக்கலாம். அவனுக்கு என்னைப் பற்றிய நினைவுகள் அந்த வயதில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் தெளிவாக ஒரு அபிப்பிராயத்தை அவன் எட்டி இருக்கவும் வாய்ப்பில்லை. அந்த வயதில் அம்மா சொல்வது அத்தனையும் நிஜம் என்று அவன் நம்பி இருந்தால் அதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன்...

இதை அவன் இரண்டாம் முறையாகச் சொல்கிறான் என்பதை ஜானகி கவனித்தாள். அவனைப் பார்க்கவே அவளுக்குப் பாவமாக இருந்தது. தன்னைப் பற்றித் தவறாக மகன் நினைக்க வாய்ப்பிருக்கிறது, அவன் அப்படி நினைத்தால் அது தவறல்ல என்று நினைப்பது ஒரு பாசம் நிறைந்த, புரிதல் உள்ள தந்தையின் உயர்ந்த மனமாக அவளுக்குத் தோன்றியது. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று எண்ணினாள். சொந்த மகனிடம் பேசக்கூட இந்த ஆள் தயங்க வேண்டி இருக்கிறதே... பாவம்!

அவன் தொடர்ந்தான். “திடீரென்று நான் நேரடியாக அவனைச் சந்தித்துப் பேசினால் அந்த அதிர்ச்சியை அவன் எப்படித் தாங்குவான் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் அப்பா இருக்கிறேன், இத்தனை காலமாய் அவனைத் தேடிக் கொண்டே இருந்திருக்கிறேன், உயிருக்கு உயிராக நேசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எல்லாம் அவன் தெரிந்து கொண்டபின், இந்த உண்மையை அவன் ஓரளவு ஜீரணித்த பிறகு நான் அவனிடம் பேசினால் பிறகு எந்த முடிவையும் எடுப்பது அவனுக்குச் சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்....

அவள் யோசித்தாள். ஏதோ சொல்ல முற்பட்டவள் அதற்கும் முன் அவன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது முக்கியம் என்று நினைத்தவளாய் “உங்கள் பெயரை நீங்கள் சொல்லவில்லையேஎன்றாள்.

“சேகர்என்று அவன் தன் சொந்தப் பெயரையே சொன்னான்.

சேகர் நீங்களே சொல்லுங்கள், வந்தனா எப்படி வருணிடம் இந்தப் பேச்சை ஆரம்பிக்க முடியும்? எத்தனை நெருங்கிய நட்பாக இருந்தாலும் இது திடீரென்று எடுத்துப் பேச முடிகிற விஷயம் இல்லையே....?ஜானகி இழுத்தாள்.

அவன் அவள் பார்த்து விட்டுக் கீழே வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டிச் சொன்னான். “இந்தப் புகைப்படம் கிடைத்தது. உங்களுடன் இருக்கிற ஆள் யார் என்று உங்கள் மகள் வருணிடம் கேட்கலாம் அல்லவா...?.  

யோசித்து விட்டு அவள் சம்மதித்தாள். இது யதார்த்தமாக யாரும் கேட்க முடிந்த கேள்வி தானே!



மாரா திபெத்தின் இந்திய மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளின் வரைபடங்களில் ஆழ்ந்து போயிருந்தான். அமானுஷ்யன் தன்னைப் பின் தொடர்ந்து வரும் ஆட்களின் கண்களில் எப்படி மண்ணைத் தூவி இருப்பான் என்பதைக் கணிக்க முடிந்த அவனுக்கு அவன் இப்போது எங்கிருப்பான்? என்ன செய்து கொண்டிருப்பான், அவன் திட்டம் என்ன என்பதை எல்லாம் சிறிதும் யூகிக்க முடியவில்லை.

லாஸாவிலிருந்து விமானம் வழியாக அமானுஷ்யன் தப்பிச் செல்ல வழியே இல்லை. லீ க்யாங் எடுத்துக் கொண்டு இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த அளவில் இருந்தன.  அமானுஷ்யன் தனியாகவாவது ஏதேனும் சாகசம் புரியலாம். ஆனால் மைத்ரேயன் என்ற சிறுவனையும் கூட அழைத்துப் போவது நடக்காத காரியமே.

இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையே சாலைகளே கிடையாது என்பதால் சாலைப் போக்குவரத்தும் இல்லை. மற்றபடி மூன்று முக்கிய கணவாய்கள் இந்தியாவையும் திபெத்தையும் இணைக்கின்றன. இந்த மூன்று கணவாய்களும் 1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போருக்குப்பின் பல ஆண்டுகள் மூடப்பட்டே இருந்தன.

ஷிப்கி கணவாய் இந்தியாவின் ஹிமாசலப்பிரதேச மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக் கணவாய் 1994 ஆம் ஆண்டு தான் திறந்து விடப்பட்டது. இருபக்க சிறு வணிகர்களும் பிரத்தியேக அனுமதி பெற்று தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொள்ளலாம். அதுவும் ஒவ்வொரு வருடமும் அனுமதிக்கப்பட்ட காலங்களில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். அதனால் அந்த எல்லையில் வாழும் மனிதர்களைத் தவிர வேறு யாரும் அந்தக் கணவாய் அருகில் கூட வர முடியாது.

லிபுலேக் கணவாய் இந்தியாவின் உத்தரகண்ட் மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக் கணவாய் 1992 ஆம் ஆண்டு தான் திறந்து விடப்பட்டது.  இந்த வழியாகப் பயணிக்க சீனாவின் சிறப்பு அனுமதி வேண்டும். கைலாச மலைக்கு யாத்திரை போகும் யாத்திரீகர்கள் சில சமயங்களில் அனுமதிக்கப்படுவதுண்டு.

நாதுலா கணவாய் இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக் கணவாய் 2006ல் தான் திறந்து விடப்பட்டது. இங்கும் இரு தரப்பு சிறு வர்த்தகர்களும் கோடை காலத்தில் மட்டும் தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொள்ளலாம். அதுவும் சில குறிப்பிட்ட நாள்களில் தான் வர்த்தகம் செய்து கொள்ள அனுமதி உண்டு.

இந்த மூன்று கணவாய்களிலும் பொதுவாகவே சீனாவின் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும். லிபுலேக் கணவாய் வழியாக பிரத்தியேக அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. மற்ற இரண்டு கணவாய்களில் அனுமதிச்சீட்டு வாங்கி வைத்திருக்கும் எல்லை வாழ் வர்த்தகர்களே எல்லா சமயங்களிலும் போய் வர முடியாது. குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட நாட்கள் என்று அங்கும் கடுமையான கட்டுப்பாடு இருக்கிறது.

இந்தக் காரணங்களினால் பொதுவாகவே இந்தியா திபெத் இடையே தரைவழிப் போக்குவரத்து நேபாளம் வழியாகவே நடக்கிறது. லாஸாவில் இருந்து நேபாளம் வரை செல்லும் 830 கிலோமீட்டர் நெடுஞ்சாலை சீன-நேபாள நட்பு நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகிறது. சீன தேசிய நெடுஞ்சாலை எண் 318 குறிக்கப்பட்ட அந்த நெடுஞ்சாலை மூலமாகவே தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்கள் வாகனங்களுடன் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நெடுஞ்சாலை நேபாள எல்லையைக் கடந்து நேபாளத் தலைநகர் காத்மண்டு வரை நீள்கிறது. அந்த எல்லையில் பொதுவாகவே சோதனைகள் தீவிரமாக இருக்கும். ஆட்களையும் பொருட்களையும் தீவிர சோதனைகள் செய்யாமல் நகர அனுமதிப்பதில்லை. சோதனைகள் போடும் போது வரைபடங்களோ, தலாய் லாமா புகைப்படமோ கிடைத்தால் அவற்றைக்கூட எடுத்து வைத்துக் கொண்டே திபெத்தைக் கடக்க அனுமதிப்பார்கள். சாதாரண காலங்களிலேயே அப்படி என்றால் மைத்ரேயனைத் தேடும் இந்த சமயங்களில் சோதனையின் தீவிரம் எந்த அளவில் இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

இருக்கும் இந்த வழிகளில் அந்தக் கணவாய்கள் வழியாகவோ, நட்பு நெடுஞ்சாலை வழியாகவோ திபெத்திய எல்லையைக் கடப்பது கிட்டத்தட்ட முடியாத காரியமே. அப்படி இருக்கையில் அமானுஷ்யனால் மட்டும் இது முடியுமா என்று மாரா யோசித்தான். முடியாது என்றே தோன்றியது.

மற்ற வழிகளில் தப்பிக்க இயற்கை வழிவகுத்திருக்கவில்லை. பனிக்காலம் வேறு நெருங்குகிறது. இமயமலையின் பனி மிகவும் அபாயகரமானது. பார்க்க மிக அழகாக ரம்யமாகக் காட்சி அளித்தாலும் பனிப்புயல், பனிப்பாறைச் சரிவுகள், நிலச்சரிவுகள் என்று திடீர் அபாயங்களை இமயமலை தனக்குள் ஒளித்தே வைத்திருக்கிறது.

இப்படி இருக்கையில் அமானுஷ்யனும், மைத்ரேயனும் எப்படித் தப்பிக்கப் போகிறார்கள் என்று மாரா யோசித்தான். அமானுஷ்யன் திட்டம் அவனுக்குப் பிடிபடவில்லை.


தே சிந்தனையில் தான் லீ க்யாங்கும் இருந்தான். திபெத்தின் எல்லா எல்லைகளிலும் பாதுகாவலைப் பலப்படுத்தி இருந்தான். கூடுதலான திறமையான ஆள்களை இந்திய எல்லைக் கணவாய்களிலும், சீன-நேபாள நட்பு நெடுஞ்சாலையின் நேபாள எல்லையிலும் நிறுத்தி இருந்தான். சம்யே மடாலயப் பகுதியில் இருந்து தலைமறைவான மைத்ரேயனும் பாதுகாவலனும் திபெத்தில் மற்ற இடங்களில் இது வரை சிக்கவில்லை. அவன் உள்ளுணர்வு அவர்கள் கண்டிப்பாக விரைவிலேயே திபெத்திய எல்லையைக் கடக்க முயல்வார்கள் என்று தெரிவித்தது. அவர்கள் இருவரையும் எல்லையில் கையும் களவுமாய் பிடிக்க  லீ க்யாங் ஆவலோடு காத்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Monday, October 12, 2015

இறந்த மூன்று நாளில் உயிர்த்தெழுந்த பாபா!

மகாசக்தி மனிதர்கள் - 39 


பொதுவாக மக்கள் விரும்பும் இந்த உலக சவுகரியங்களையும், செல்வத்தையும், படாடோபத்தையும் ஷிரடி சாய்பாபா கடைசி வரை விரும்பவில்லை. துறவிகளும் சாதுக்களும் தங்கள் வாழ்க்கையில் பகட்டும், படாடோபமும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அவர் கூறுவார். துவாரகமயி என்று இந்துப் பெயரால் அழைக்கப்பட்டு அவர் கடைசி வரை வாழ்ந்த மசூதியில் ஆரம்ப நாட்களில் ஒரு நாற்காலியில் கூட அவர் அமர்ந்ததில்லை, கட்டிலில் கூட அவர் படுத்ததில்லை. சாக்குத்துணியில் மட்டுமே அமர்ந்தும் படுத்தும் வசித்த அந்த மகானை அப்படியே தொடர அவரது பக்தர்கள் அனுமதிக்கவில்லை.


கடவுளாகவே அவரை நினைக்க ஆரம்பித்து விட்ட அவரது பக்தர்கள் அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தார்கள், தலையில் கிரீடம் வைத்தார்கள். தங்களுக்குப் பிடித்தபடியெல்லாம் தங்கள் பாபாவைப் பார்க்க ஆசைப்பட்ட பக்தர்களின் செய்கைகள் அவரைப் போன்ற ஒரு சன்னியாசிக்குப் பெரும் தொந்தரவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் தன் மீது திணிக்கப்பட்ட படாடோபத்தை எல்லாம் அவர் தன் பக்தர்களுக்காக சகித்துக் கொண்டார்.


இந்த நேரத்தில் இதற்குச் சில வருடங்கள் முந்தைய அவர் அனுபவங்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது பாபாவின் உயர்விற்கு நல்ல எடுத்துக்காட்டை அளிக்கும். ஷிரடியில் ஒரு பைத்தியக்கார பக்கிரி என்று அவர் நம்பப்பட்ட காலத்தில் சில சிறுவர்கள் அவர் மீது கற்கள் வீசி அலைக்கழித்தது உண்டு.  அந்தச் சிறுவர்களிடம் கூட அவர் கடுமையாக நடந்து கொண்டது இல்லை. பெரியவர்கள் பலர் அவரை எள்ளி நகையாடியதுண்டு. அவர்கள் மீதும் அவர் சினம் கொண்டதில்லை. அனைவர் மீதும் அன்பு செலுத்தி நல்லதே செய்து வந்தார்.


இப்படி பைத்தியக்காரராக இழிவுபடுத்தப்பட்ட போதும் சரி, பிற்காலத்தில் கடவுளாகக் கொண்டாடப்பட்ட போதும் சரி அன்பையும் அருளையும் மட்டுமே காட்ட முடிந்த ஷிரடி பாபாவின் குணாதிசயம் கம்பன் இராமனை வர்ணிப்பதைத் தான் நமக்கு நினைவுபடுத்துகிறது.


அசோக வனத்தில் சீதை இராமனைப் பற்றி எண்ணி உருகுவதாகப் பாடப்படும் பாடல்களில் மிக அழகான பாடல் ஒன்று உண்டு.

"மெய்த்திருப்பதம் மேவென்ற போதிலும்
இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்
சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்"

அரச பதவியை ஏற்றுக் கொள் என்று முந்தைய தினம் சொன்ன போதும் சரி, இந்த நாட்டையே துறந்து நீ காட்டுக்குப் போ என்ற போதும் சரி சித்திரத்தில் வரைந்த செந்தாமரையின் மலர்ச்சி இராமனின் முகத்தில் இருந்த்தை சீதை நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடல் அது. அதாவது சாதாரண செந்தாமரையில் மலர்ச்சி இருக்கும், வாட்டமும் இருக்கும். ஆனால் சித்திரத்தில் வரைந்த செந்தாமரையில் மட்டுமே மாறாத மலர்ச்சி இருக்கும் என்பதை அழகான உவமையுடன் கம்பர் கூறுவார்.


பக்தர்கள் அவருக்காக ஒரு வெள்ளிப் பல்லக்கும், வெள்ளிக் குதிரைகளும் கூட செய்து அதை துவாரகமயிக்குள் கொண்டு வர முற்பட்ட போது மட்டும் ஷிரடி சாய்பாபா அதை அனுமதிக்கவில்லை. அதனால் அந்த வெள்ளிப் பல்லக்கும், குதிரைகளும் துவாரகமயியின் வெளிப்புறத்திலேயே வைக்கப்பட்டன. சில நாட்கள் கழித்து யாரோ அந்த வெள்ளிக் குதிரைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

அதை மிகுந்த வருத்தத்துடன் பக்தர்கள் அவரிடம் தெரிவித்த போது சிறிதும் வருத்தமோ, அதிர்ச்சியோ காட்டாமல் “திருடர்கள் ஏன் அந்தப் பல்லக்கைத் திருடிக் கொண்டு போகவில்லை” என்று விளையாட்டாக பாபா கேட்டார். இது போன்ற விலை உயர்ந்த படாடோபப் பொருள்களுக்கு பாபாவின் மனதில் எந்த அளவு முக்கியத்துவம் இருந்தது என்பதைக் காட்டுகிறது அல்லவா?


அதே போல உணவின் சுவையிலும் ஷிரடி பாபா பெரிய அக்கறை காட்டவில்லை. ஆரம்ப காலங்களில் வீடுகளில் மிஞ்சியதைத் தான் ஷிரடி மக்கள் அவருக்கு உண்ணக் கொடுத்தார்கள். அவரை மகானாகவும், கடவுளாகவும் எண்ண ஆரம்பித்த பிறகு அப்படிப் பழைய உணவை அவருக்கு அளிக்கவில்லை என்றாலும் எல்லா நேரங்களிலும் அந்த உணவு சுவையாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா? சிலர் தங்களுக்குச் சமைத்து சாப்பிடும் உணவே ருசியில்லாமல் இருப்பதுண்டு. அதையே பாபாவுக்கும் கொண்டு வந்து தருவதில் அவர்கள் மீது குற்றம் காண முடியாது. எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் எந்த முக சுளிப்பும் இல்லாமல் உண்பது பாபாவின் வழக்கமாக இருந்தது.


கர்மவினைகளின் பலனை அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது என்று சான்றோர் சொல்வதுண்டு. தன் பக்தர்களின் கர்மவினைகளின் பலன்களைத் தான் ஏற்றுக் கொண்டு பக்தர்களை ஷிரடி பாபா காத்த நிகழ்ச்சிகள் அவர் காலத்து ஆட்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஒரு முறை துவாரகமயியில் எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் ஷிரடி பாபா திடீரென்று கையை விட்டு சுட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் பதறிப் போய் காரணம் கேட்ட போது தன் பக்தனான கொல்லன் ஒருவனுடைய குழந்தை அவன் வீட்டில் நெருப்பில் விழுந்து விட்டதாகவும் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற அந்த நெருப்பின் சூட்டைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும் பாபா சொன்னார். பாபாவின் காயத்தைப் பார்த்து வருந்திய பக்தர்களிடம்  “என்னுடைய காயத்தை இறைவன் குணப்படுத்தி விடுவார்” என்று சொல்லி விட்டார். பின்பு விசாரித்த போது வேறொரு ஊரில் அவரது பக்தன் கொல்லன் ஒருவனது பட்டறையில் அவன் குழந்தை தீயில் விழுந்து  விட்டதாகவும், அது பெரிய காயமின்றி தப்பித்து விட்டதாகவும் தெரிய வந்தது. இப்படி தன் பக்தர்களின் நலனையே பெரிதாக நினைத்து தன் நலனை அதிகம் பொருட்படுத்தாமல் பாபா வாழ்ந்தார்.

1886 ஆம் ஆண்டு ஒரு நாள் தன் சீடனான மல்சபதி (Mahlsapathy) என்பவரை அழைத்து “நான் அல்லாவிடம் போகிறேன். மூன்று நாட்கள் இந்த உடம்பைப் பத்திரமாகக் காத்து வா. நான் திரும்ப வந்தால் இந்த உடலைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன். ஒருவேளை அப்படி வராவிட்டால் மூன்று நாள் கழித்து இந்தப் பிணத்தை அந்த வேப்ப மரத்தின் அருகே புதைத்து விடு” என்று சொல்லி வேப்ப மரத்தைக் காண்பித்த ஷிரடி பாபா மறு கணம் அப்படியே மல்சபதியின் மீது சாய்ந்தார். பாபாவின் மூச்சு நின்று போனது. உடல் சில்லிட்டுப் போனது. உடலின் நிறமும் மாறிப் போனது. ஷிரடி பாபா இறந்து விட்டார் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது.

ஷிரடி பாபாவின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த மல்சபதி அவரைப் புதைக்கச் சம்மதிக்கவில்லை. அரசு அதிகாரிகளும், போலீஸாரும் வந்தும் கூட அவர் மூன்று நாட்கள் கழித்தும் பாபா இந்த உடலுக்குத் திரும்பா விட்டால் தான் புதைக்க சம்மதிப்பேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அவர்களுக்கோ இறந்தவர் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பெறுவார் என்று நம்பக் கஷ்டமாக இருந்தது. ஷிரடி பாபாவின் சக்திகளைப் பற்றி அவர்கள் முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் எந்த சக்தியும் மரணத்திற்குப் பின் மீண்டும் ஒருவரை உயிர்பெற விடாது என்று பகுத்தறிவு அவர்களுக்குச் சொன்னது. ஆனால் மல்சபதியும் மற்ற பக்தர்களும் பாபா கூறியபடி மூன்று நாட்கள் காத்திருப்பதில் உறுதியாய் இருந்தார்கள்.

ஷிரடி பாபாவின் உடல் துவாரக மயியில் மல்சபதி மேற்பார்வையில் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாளின் இறுதியில் பாபாவின் உயிரற்ற உடலில் திடீரென்று கை விரல் ஒன்று அசைந்தது. அருகே இருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் விழித்தன. ஷிரடி பாபா எழுந்து உட்கார்ந்தார்.

பரமஹம்ச யோகானந்தரின் குருவான ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் அப்படி இறந்த சில நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்து யோகானந்தரிடம் சில மணி நேரங்கள் உரையாடிக் கொண்டிருந்தார் என்பதை முன்பு பார்த்திருக்கிறோம். ஆனால் உயிர்த்தெழுந்த ஷிரடி பாபா அதன் பிறகு 32 ஆண்டுகள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார் என்பது தான் பேராச்சரியம்!

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 15-05-2015

Thursday, October 8, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 66


க்‌ஷய் எப்படித் தப்பித்திருக்க வேண்டும் என்று மாரா அனுமானித்தது கிட்டத்தட்ட சரியாகவே இருந்தது.

சம்யே மடாலயத்தில் இருந்து கிளம்பிய போது அக்‌ஷய் மடாலயத்தின் உள்ளே இருந்த எதிரிகள் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்று எண்ணினானே ஒழிய வெளியே ஜீப்பில் எதிரிகள் காத்துக் கொண்டு இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த எதிரிகள் லீ க்யாங்கின் ஆட்களா அல்லது இன்னொரு கோஷ்டி ஆட்களா என்று ஆரம்பத்தில் புரியா விட்டாலும் பின் யோசித்த போது லீ க்யாங்கின் ஆட்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது புரிந்தது. லீ க்யாங்கின் ஆட்களாக இருந்தால் போன் செய்து லாரியைச் சுற்றி வளைக்க அதிக நேரம் ஆகியிருக்காது. அப்படி நடக்காததால் பின் தொடர்வது இன்னொரு கோஷ்டி ஆட்கள் என்பது தெரிந்தது.

பின்னால் ஜீப்பை ஓட்டியவன் ஓட்டும் திறமையில் அசகாய சூரனாக இருந்ததால் ஜீப்பை விட்டு அவர்களால் அதிக தூரம் போய் விட முடியவில்லை.  அதனால் அக்‌ஷயின் திட்டப்படி அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியவில்லை. அவர்கள் திட்டப்படி பிரதான சாலையிலிருந்து ஒரு இடத்தில் குறுக்கே செல்லும் ஒரு சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் போய் இறங்க வேண்டி இருந்தது. அந்தத் திருப்பம் வருவதற்கு சிறிது நேரம் முன்பே லாரி டிரைவர் பின்னால் இருந்த சின்னத் துளை வழியாகக் கேட்டான். “என்ன செய்வது?

அக்‌ஷய் சொன்னான். “இப்போதைக்கு  நேராகப் போய்க் கொண்டே இருங்கள்

லாரி டிரைவர் அவன் சொன்னபடி அந்தத் திருப்பத்தில் திரும்பாமல் நேராகவே போக ஆரம்பித்தான். இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு திரும்பி வர ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியுமா என்று அக்‌ஷய் கேட்ட போது லாரி டிரைவர் சொன்னான். “அது ஒன்றும் பிரச்னை இல்லைஆனால் பின்னால் ஒரு சைத்தான் வருகிறானே அவன் பார்வையில் படாமல் எப்படித் திரும்பி வருவீர்கள்?

பலர் வண்டியை நிறுத்தக்கூடிய ஒரு பொது இடத்தில் நாம் அந்த சைத்தான் கண்ணில் ஓரிரு நிமிடங்கள் படாமல் இருப்பது பெரிய விஷயமல்ல.....என்ற  அக்‌ஷய் தன் திட்டத்தைச் சொன்னான்.  லாரி டிரைவர் உடனடியாகப் போன் செய்து தன் நண்பன் ஒருவனிடம் பேசினான். அதன்பின் அக்‌ஷயின் ஆலோசனைப்படியே அந்தத் திட்டம் மிகவும் கச்சிதமாக நடந்தேறியது.

மிக யதார்த்தமாக வெந்நீர் கொண்டு வரப்போவது போல் போன ஆள் திரும்பி வந்த நேரத்தில் அவர்கள் லாரி டிரைவர் வண்டியைக் கிளப்பி சற்று குறுக்காக நிறுத்த அந்த மறைவில் அந்த ஆள் இரு லாரிகளின் பின் கதவுகளின் தாழ்ப்பாள்களையும் திறந்து விட்டான். அதனால் அந்த லாரியில் இருந்து இந்த லாரிக்கு மைத்ரேயனுடன் வருவது அக்‌ஷய்க்குச் சுலபமாக இருந்தது. இரு லாரிகளின் பின் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் போட்டு விட்டு அந்த ஆள் வேகமாக டிரைவர் அருகில் வந்து அமர்ந்து கொள்ள இரண்டு லாரிகளும் கிளம்பின.....

அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். இப்போது நன்றாக விடிந்து விட்டிருந்ததால் கதவிடுக்கில் புகுந்த வெளிச்சத்தில் அவனைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவன் அக்‌ஷயையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான். நேற்று இரவு அந்த லாரியில் மைத்ரேயன் நன்றாக உறங்கி விட்டிருந்தான். உணவகத்தின் முன்னால் லாரியை நிறுத்திய போது அக்‌ஷய் அவனை எழுப்பிய பிறகு தான் அவன் கண் விழித்தான். அவன் இந்த லாரிக்குள் வந்த கணம் முதல் அசையாமல் அமைதியாகவே அமர்ந்திருக்கிறான். அவன் காலில் தர்மசக்கரத்தைப் பார்த்த கணத்தில் இருந்து இந்தக் கணம் வரை அக்‌ஷயின் பிரமிப்பு அகலவில்லை. அவனுடைய மகன் கௌதம் ஐந்து நிமிடம் கூட ஒரே இடத்தில் சேர்ந்தாற்போல் உட்கார்ந்திருக்க மாட்டான்....

“உங்கள் மகன் பெயர் என்ன?மைத்ரேயன் திடீரென்று கேட்டான்.

அக்‌ஷய்க்குத் தூக்கிவாரிப்போட்டது. தன் மகனை அவன் நினைக்க நினைக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயன் இந்தக் கேள்வியைக் கேட்டது அவன் எண்ணங்களைப் படித்து விட்டுத் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. உங்களுக்கு எப்படி என் மகன் பற்றித் தெரியும்?என்று கேட்டான்.

“என்ன திடீர் மரியாதை?மைத்ரேயன் கேட்டவுடன் அக்‌ஷய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மைத்ரேயன் காலில் தர்மச்சக்கரம் இருந்ததும், அது பொன்னிறத்தில் சுழல்வது போல் தெரிந்ததும், அவனை இனியும் மரியாதைக் குறைவாய் ஒருமையில் அழைக்க விடாமல் அக்‌ஷயைத் தடுத்தன.

“எனக்கு நீங்கள் என்னை முன்பு போலவே ஒருமையில் அழைப்பது தான் பிடித்திருக்கிறதுசொல்லியபடி அக்‌ஷய் மீது மைத்ரேயன் உரிமையுடன் சாய்ந்து கொண்டான். சில நேரங்களில் புத்தரின் அவதாரம் போல் தெரிந்தாலும், சில நேரங்களில் அவன் மகன் கௌதம் போல சுவாதீனத்துடன் நடந்து கொள்கிற மைத்ரேயனின் முகத்தை அக்‌ஷய் கூர்ந்து பார்த்தான். இப்போது அந்த முகத்தில் மந்த பாவனை இல்லை, மந்தகாசம் தெரிந்தது. சின்னதாய் ஒரு கெஞ்சலும் தெரியவே அவனை ஒருமையிலேயே அழைப்பது என்று அக்‌ஷய் முடிவு செய்தான். இறைவனையே ஒருமையில் அல்லவா நாம் உரிமையுடன் அழைக்கிறோம்!என்று அவன் நினைத்துக் கொண்டான்.

“சரி.... உனக்கு எப்படி என் மகனைப் பற்றித் தெரியும்?என்று அக்‌ஷய் கேட்டான். கண்டிப்பாக உங்கள் மனதில் அவனைப் பற்றி நினைத்தீர்கள், அதைத் தெரிந்து தான் கேட்டேன் என்று இவன் சொல்ல மாட்டான் என்பது தெரியும். என்றாலும் என்ன தான் சொல்கிறான் பார்ப்போமே என்று தான் அவன் கேட்டான்.

“நீங்கள் தானே என் அம்மாவிடம் என் வயதில் உங்களுக்கு ஒரு மகன் இருப்பதாய் அன்றைக்குச் சொன்னீர்கள்என்று மைத்ரேயன் சொல்ல அக்‌ஷயால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் லாரி நின்றது.


ஜானகி வாயடைத்துப் போகும் சந்தர்ப்பம் அவள் வாழ்வில் இது வரை வந்ததே இல்லை. முதல் தடவையாக வாயடைத்துப் போன அவள் அவன் கண்களில் பெருகிய கண்ணீர் விடாமல் வழிந்து கொண்டிருந்ததை மிகுந்த பச்சாதாபத்துடன் பார்த்தாள். லேசாய் ஜண்டு பாம் வாசனை வந்தது. பாவம் ஜலதோஷமோ, தலைவலியோ கூட அவனைப் படுத்துகிறது போல் இருக்கிறது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

“இது... இது.... எப்போது நடந்தது?என்று அவள் மெல்லக் கேட்டாள்.

பன்னிரண்டு பதிமூன்று வருஷங்களுக்கு முன்....என்று சொன்னவன் அந்தப் பழைய நாட்களின் நினைவே தன்னைக் கொல்வது போலக் காட்டிக் கொண்டான். பொய் பித்தலாட்டம் அனாயாசமாக வந்த அளவுக்கு அவனுக்கு நடிப்பு வரவில்லை. அதனால் தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான். பின் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுவது போல அவள் முகத்தை நேரடியாகப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்துப் பேசினான்.

அப்போதே செத்து விடலாம் என்று நினைத்தேன்..... சில முறை முயற்சியும் செய்தேன்.... எமனுக்கு என் மேல் கருணை இருக்கவில்லை..... அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிழைக்க வைத்து விட்டார்கள். என் அப்பா போல் நான் மதித்த என் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். “நீ உனக்காக இல்லா விட்டாலும் உன் மகனுக்காகவாவது வாழ வேண்டும்.... உன் மனைவிக்கு இன்னொரு கணவன் கிடைப்பான். ஆனால் உன் மகனுக்கு இன்னொரு தகப்பன் கிடைக்க மாட்டான்... அதை மறக்காதே.... அவர்களைத் தேடிக் கண்டுபிடி.  உன் மகனையாவது மீட்டுக்கொள்”.  அவர் சொன்னதும் எனக்கு உண்மையாகப்பட்டது. அந்த நாளில் இருந்து என் குடும்பத்தை, இல்லை என் மகனை நான் தேடி அலைந்து கொண்டே இருக்கிறேன். சில நாட்கள் முன் கோயமுத்தூர் வந்த போது தான் ஒரு தெருவில் தற்செயலாக என் மனைவியைப் பார்த்தேன்.... அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்து வந்து அவர்கள் வீட்டைக் கண்டுபிடித்தேன்....

ஜானகிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ‘பாவம் இந்த ஆளுக்கு என் முகத்தைப் பார்த்துப் பேசக்கூட முடியவில்லை. கூனிக்குறுகிப் போய் எங்கேயோ பார்த்துப் பேசுகிறார்’.  அந்த எண்ணத்துடனேயே சேர்ந்து இன்னொரு சந்தேகம் எழ, அவள் கேட்டாள். “அப்படியானால் நீங்கள் சினிமா கதாசிரியர் இல்லையா?

அவன் ஜாக்கிரதையாகச் சொன்னான். “நான் சினிமா கதாசிரியன் தான். நான் பல நாடகங்களுக்குக் கதை வசனம் எழுதியதாகச் சொன்னதும் உண்மை தான். எனக்குப் பொய் பேச வராது.... ஆனால் இந்த வீட்டில் குடி வந்தது மட்டும் சினிமா கதை வசனம் எழுத அல்ல. அது நான் ஊட்டிக்குப் போய் எழுதத் தான் தீர்மானித்திருந்தேன். போகும் வழியில் கோயமுத்தூரில் சஹானாவைப் பார்த்து விட்டுத் தான் இங்கேயே தங்கி விட்டேன்.......

“இனி என்ன செய்வதாக உத்தேசம்... ஜானகி கேட்டாள்.

“எனக்கு என் மகனைப் பார்த்துப் பேசி அவனை அழைத்துக் கொண்டு போக வேண்டும்..... அவள் எக்கேடோ கெட்டுப் போகட்டும்..... அவளுக்கு வருண் இல்லா விட்டாலும் இன்னொரு மகன் இருக்கிறான்.... எனக்கு.... எனக்கு...அவன் வாயடைத்தது போல், அதற்கு மேல் பேச வராதது போல் நிறுத்திக் கொண்டான்.

“வருண் வேறொரு ஆளைத் தான் அப்பா என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான். அவன் அந்த ஆளைப் பற்றிப் பெருமையாகப் பேசாத நாளே இல்லை. அந்த அளவு பாசம் வைத்திருக்கிறான்.....”  ஜானகிக்கு அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அவள் என்னைப் பற்றி என்னவெல்லாம் மோசமாகச் சொல்லி அவனை மூளைச்சலவை செய்திருக்கிறாளோ எனக்குத் தெரியவில்லை..... அவளைப் பற்றி அவன் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக என்னைப் பற்றி கண்டபடியெல்லாம் சொல்லி இருக்கலாம்.... அதனால் அவனைத் தவறு சொல்ல முடியாது.....

பின் எப்படி அவனை உங்களோடு அழைத்துப் போவீர்கள்?

அவன் கண்களுக்கு மறுபடியும் ஜண்டு பாம் தடவிக் கொண்டு கண்ணீர் விட்டான். எனக்கு அது தான் புரியவில்லை. எதற்கும் முதலில் அவனைச் சந்தித்து மனம் விட்டுப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.... அதற்கு நீங்கள்... நீங்கள் உதவி செய்வீர்களா?

(தொடரும்)
என்.கணேசன்