ரோந்து
வாகனத்தைத் தவிர்க்க வழி இல்லை என்பது புரிந்தவுடன் அக்ஷயின் மூளை முழு வீச்சில் வேலை செய்தது. மைத்ரேயனுடன் சேர்ந்து
அந்த வாகனத்தில் இருப்பவர்கள் கண்களில் படுவது ஆபத்து என்பதில் சந்தேகம் இல்லை. என்ன
உடைகளில் இருந்தாலும் மைத்ரேயனின் வயதும், அவனுடன் இருக்கின்ற ஆளின் வயதும் ரோந்து
போலீஸை சந்தேகத்திற்குட்படுத்தாமல் இருக்காது....
அக்ஷய்
அவசரமாக மைத்ரேயனைக் கேட்டான். “அவர்கள் நம் இருவரையும் சேர்ந்து பார்ப்பது
ஆபத்து. சிறிது நேரம் உன்னால் தனியாகச் சமாளிக்க முடியுமா?” கேட்கும் போதே
மனம் சங்கடப்பட்டது. ஆசானோ, தலைமை பிக்குவோ இங்கிருந்தால் கண்டிப்பாக இதை ஒத்துக்
கொள்ள மாட்டார்கள். உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்று சொன்னவன் சில
நிமிடங்கள் அவனை எதிரிகள் மத்தியில் தனியாக அனுப்புவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் வேறு வழியில்லை....
மைத்ரேயன் அமைதியாகக் கேட்டான். “நான் என்ன செய்ய வேண்டும்?”
“இந்த இரண்டு
ஆடுகளை ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டே இரு......” என்று சொன்ன அக்ஷய்
“பயப்படாதே. அவர்களைப் பயத்துடன் பார்க்காதே” என்றெல்லாம் சொல்ல
நினைத்து சொல்லாமல் விட்டான். காரணம் இந்தச் சிறுவன் இப்போது கூட பயந்ததாகத்
தெரியவில்லை. அவனுடைய அசராத அமைதி அக்ஷயையே அசர வைத்தது. ஆனாலும் அக்ஷய்
சொன்னான். “ஆபத்து என்றால் மட்டும் எனக்கு குரல் கொடு.....”
சொல்லி விட்டு
தாமதிக்கிற நேரம் இல்லாததால் இரண்டு ஆடுகளை மைத்ரேயனிடம் ஒப்படைத்து விட்டு அக்ஷய்
மின்னல் வேகத்தில் எதிர் திசையில் ஓட்டம் எடுத்தான்.
மைத்ரேயனுக்கு அடங்காமல் தாய் ஆடு ஓட ஆரம்பித்தது. தாய் பின்னாலேயே
குட்டியும் ஓட மைத்ரேயன் “நில் நில்” என்று சொல்லிக் கொண்டே மெல்ல பின்னால் ஓடினான்.
ரோந்து போலீஸ் முதலில் பார்த்தது தங்கள் வாகனத்தை நோக்கி ஓடி வரும் தாய்
ஆட்டைத் தான். பின்னால் குட்டி ஆடும்
அதற்கும் பின்னால் ஆடு மேய்க்கும் சிறுவனும் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். சிறுவன்
சிரித்துக் கொண்டே “நில் நில்” என்று சொல்லிக் கொண்டே வர குட்டி ஆடாவது திரும்பிப்
பார்த்தது. தாய் ஆடு ரோந்து வாகனத்தைப் பக்கவாட்டில் தாண்டிக் கொண்டு போனது. அதே
போல் குட்டியும் போனது. ஆடுகள் அந்த வாகனத்தைப் பொருட்டாக நினைக்காதது போலவே
சிரித்துக் கொண்டே தாண்டிய ஆடு மேய்க்கும் சிறுவனை தாங்கள் தேடும் சிறுவனாக
நினைக்க அவர்களுக்குத் தோன்றவேயில்லை.
ரோந்து போலீஸ்காரர்களில் ஒருவன் அருகில் இருந்த சகாவிடம் கேட்டான். “நாம் இந்தப்
பையனிடம் கேட்டால் என்ன? பல சமயங்களில் பெரியவர்கள் பார்க்காத பலதும் இது போன்ற
சிறுவர்கள் கண்ணுக்குத் தப்பாது. நாம் தேடுபவர்கள் இந்தப்பகுதியில் இருந்தால் இவன்
கண்ணில் பட்டிருக்கலாம்...”
அந்த சகா
சிரித்தான். “அவன் அந்த ஆட்டைப் பிடிக்காமல் நிற்க மாட்டான். ஆட்டைப் பிடித்த
பிறகு வேண்டுமானால் அவன் எதாவது சொல்லலாம்.”
வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரன் அவர்கள் இருவரையும் பார்த்துச்
சொன்னான். ”நாம் பைத்தியக்காரத்தனமாக இங்கே தேடிக்
கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேரும் ஏதாவது காட்டிலோ,
குகையிலோ ஒளிந்து கொண்டிருப்பார்கள்..... வாங் சாவொ பேசாமல் அது போன்ற இடங்களில்
தேட தீவிரம் காட்டி இருக்க வேண்டும்.....”
முதல் போலீஸ்காரன் திரும்பிப் பார்த்தான். ஆடு மேய்க்கும் சிறுவன் குட்டி
ஆட்டைப் பிடித்திருந்தான். ஆனால் தாய் ஆடு வெகுதூரம் போயிருந்தது... ரோந்து வாகனம்
மெல்ல முன்னேறியது.
முதல் போலீஸ்காரன் சொன்னான். “வாங் சாவொ முக்கியமாய் நெடுஞ்சாலை வழியாக
நேபாளத்தில் அவர்கள் நுழைவார்கள் என்று நினைக்கிற மாதிரித் தோன்றுகிறது. அதனால்
முக்கியமாக அங்கு தான் ஆட்களைக் குவித்திருக்கிறார்கள். எல்லையில் இருக்கும் இந்தக்
கிராமங்கள் பக்கமும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது என்று தான் ரோந்துக்கு ஏற்பாடு
செய்திருக்கிறார்கள்.....”
அவன் சகா
சொன்னான். “எல்லையைக் கடப்பது இப்போது யாருக்குமே சுலபமாய் இல்லை. எனக்குத்
தெரிந்த போலீஸ்காரன் ஒருவனே தன் பதினோரு வயது மகனுடன் நேபாளம் போக இரண்டு நாள்
காத்திருந்து வாழ்க்கையே வெறுத்து விட்டான். கடைசியில் அவனையும் அவன் மகனையும்
மூன்று அதிகாரிகள் அரை மணி நேரம் சோதனை செய்து
பிறகு தான் அனுப்பியிருக்கிறார்கள்....”
ரோந்து வாகனம்
பக்கத்து புல்வெளியில் தூரத்தில் ஒரு கிழவரைப் பார்த்து விட்டு நின்றது. கிழவரின்
பின் புறம் தான் அவர்களுக்குத் தெரிந்தது. வளைந்த முதுகுடன் கிழவர் மிக நிதானமாக புல்களைப் பிடுங்கிப்
போட்டுக் கட்டுகளாகக் கட்டிக் கொண்டு இருந்தார். வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரன்
ஹாரன் ஒலியை எழுப்பினான். கிழவர் திரும்பிப் பார்க்கவில்லை.
மூத்த போலீஸ்காரன் ”டமாரச் செவிடு போல இருக்கிறது” என்று சொன்னான்.
அவன் சகா சிரித்துக் கொண்டே சொன்னான். “அந்த ஆளிடம் ஒரு பையனையும் அவன் கூட
ஒரு இளைஞனையும் சமீபத்தில் பார்த்திருக்கிறீர்களா, பார்த்தால் எங்களுக்குத்
தெரிவியுங்கள் என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் நாம் ஒரு வழி ஆகி விடுவோம்.
அப்படி அவர்களை நேரில் பார்த்தால் கூட கிழவனுக்குப் பார்வை தெளிவாகத் தெரியுமா
என்று தெரியவில்லை....”
மற்ற இருவரும்
கூட சிரித்தார்கள். ரோந்து வாகனம் மறுபடி கிளம்பி சற்று முன்னேறி கிராமத்திற்குள்
நுழைந்தது.
காதுகளைக்
கூர்மையாக்கி வைத்திருந்த அக்ஷய் கூன் முதுகுடனேயே நிதானமாகத் திரும்பினான். ரோந்து வாகனம் போயாகி விட்டிருந்தது. கண்ணுக்கு
எட்டிய தூரம் வரை ஆட்கள் இல்லை. நிமிர்ந்தான். பின் மின்னல் வேகத்தில் மைத்ரேயன்
போன பக்கம் ஓட ஆரம்பித்தான்.
ஜானகிக்கு
இருப்பு கொள்ளவில்லை. மாடி வீட்டு ஆசாமி சொன்ன விஷயம் அவள் மனநிலையைக் கடுமையாகப்
பாதித்திருந்தது. அன்று என்று பார்த்து மகள்
வந்தனாவும், கணவர் மாதவனும் தாமதமாக வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் அந்த
விஷயத்தைச் சொல்ல அவளால் முடியவில்லை. சற்று நிதானமாக ஆலோசித்து செய்ய வேண்டிய
விஷயம் என்பதால் இரவு எல்லோரும் சாப்பிட்டு முடியும் வரைக் காத்திருந்து விட்டுப்
பின் மெள்ள மாடி வீட்டு ஆசாமி தந்த
புகைப்படத்தை மகளிடம் நீட்டினாள்.
“யாருடையது...?” என்று கேட்டபடியே புகைப்படத்தை வாங்கிய வந்தனா “அட நம் வருணுடையது.....
அவன், அவன் அம்மா, இன்னொருத்தர் யார் அவன் மாமாவா?....” என்று கேட்டதுடன்
நிறுத்தாமல் தொடர்ந்து கேட்டாள். “யார் இதைக் கொடுத்தது அவன் அம்மாவா?...”
இரண்டு
கேள்விகளுக்கும் சேர்ந்த பதிலாக “அவன் அப்பா” என்றாள் ஜானகி.
அதை இரண்டாம்
கேள்விக்கு மட்டுமான பதிலாக எடுத்துக் கொண்ட வந்தனா ”அவன் அப்பா வந்து
விட்டாரா. எப்போது வந்தார்? அவரிடம் பேசினீர்களா?” ஆவலுடன் கேட்டாள்.
எப்போதுமே வருண் மிகப் பெருமையாகப் பேசும் அந்த மனிதரைப் பார்த்துப் பேச அவளுக்கு
ஆர்வம் வந்திருந்தது.
“இது அந்த அப்பா அல்ல, வேறு அப்பா...” என்றாள் ஜானகி.
வந்தனா எரிச்சலடைந்தாள். “என்னம்மா உளறுகிறாய்...”
“உளறவில்லை....” என்ற ஜானகி மாடி வீட்டு ஆசாமி சொன்ன உருக்கமான கதையை அப்படியே மகளிடமும்
கணவரிடமும் ஒப்பித்தாள். இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவர்களுக்கு அவள் சொன்னதை
ஜீரணம் செய்யக் கஷ்டமாக இருந்தது. வருணின் குடும்பம் ஒரு எடுத்துக்காட்டான
குடும்பம் என்று நினைத்திருந்த அவர்கள் ஜானகியைத் திகைப்புடன் பார்த்தார்கள்.
மாடி வீட்டிலிருந்து சேகர் காதுகளைக் கூர்மையாக்கி தந்தை மகள் இருவரின்
எதிர்வினை எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ளக் காத்திருந்தான்.
மாதவன் சொன்னார். “மாடி வீட்டு ஆள் சொன்னதை அப்படியே நம்ப வேண்டாம். அந்த
ஆள் மீது எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகமாய் இருக்கிறது. யார் கண்ணிலும்
படாமலும், யாரிடமும் பேசாமலும் அந்த ஆள் மர்மமாகவே நடந்து கொள்வதை எல்லாம்
பார்க்கையில் நேர்மையான ஆள் மாதிரித் தெரியவில்லை.... இந்த ஆள் வருணின் உண்மையான
அப்பாவாக இருந்தால் நேரடியாகப் போய் பேச வேண்டியது தானே. நாம் எதற்கு இடையில்...”
சேகருக்கு அவர்
வார்த்தைகள் காதில் நாராசமாய் விழுந்தன.
நல்ல வேளையாக
ஜானகி அவனுக்கு ஆதரவாகப் பேசினாள். “அந்த ஆள் நிலைமையில் இருந்து யோசித்துப்
பாருங்கள். அவர் மகனிடம் சஹானா என்ன சொல்லி இருக்கிறாள், அவன் அதை எந்த அளவு நம்பி
இருக்கிறான் என்று தெரியாமல் அவர் வருணிடம் பேசப் போனால் அவன் எப்படி எடுத்துக்
கொள்வான், எப்படி நடந்து கொள்வான் என்று அவர் பயப்படுகிறார். நியாயம் தானே?”
”தவறு செய்தவள் சஹானாவாக இருந்தால் சஹானா தானே
பயப்பட வேண்டும். ஓடி ஒளிய வேண்டும். இந்த ஆள் ஏன் அந்த இரண்டையும் செய்கின்றான்”
“தவறு
செய்தவர்கள் பயப்படுவதும் ஒளிவதும் அந்தக் காலம். இந்தக் காலத்தில் அவர்கள் தான்
தைரியமாக தவறாக எதுவும் நடக்காத மாதிரி இருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறவர்கள்
தான் பயப்பட வேண்டி இருக்கிறது, கூச்சப்பட வேண்டி இருக்கிறது இந்தக் கலிகாலத்தில்”
வந்தனா
மௌனமாகவே இருந்தாள். அவளுக்கு யாரை நம்புவது என்று புரியவில்லை. அடுத்தவர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது
அநாகரிகம் என்று உறுதியாக நம்புபவள் அவள். வருண் சம்பந்தப்பட்டதாக அல்லாமல் இருந்திருந்தால்
இதன் உள்ளே புகவே அவள் மறுத்திருப்பாள். அவள் அம்மாவோ அப்பாவோ தலையிட்டால் கூடத் தடுத்திருப்பாள்.
ஆனால் வருணை அவள் மிக நேசிக்க ஆரம்பித்திருந்தாள். உண்மையில் அவன் அப்பா மாடி வீட்டு
ஆசாமியாக இருந்து, அந்த ஆள் சொன்னதெல்லாமும் கூட உண்மையாக இருந்து, அது
வருணுக்குத் தெரியாமல் இருந்திருந்தால் அது தந்தை மகன் இருவருக்கும் இழைக்கப்படும்
அநியாயம் என்று அவள் நினைத்தாள்.
வருணின் தாய்
அப்படிப்பட்டவளாகத் தெரியவில்லை. ஆனால் காரணம் இல்லாமல் யாரோ ஒருவன் அப்படி ஒரு
புகைப்படத்தைக் கொண்டு வந்து அவன் தான் அவளுடைய கணவன் என்று சொல்ல முடியுமா? அது பொய்யாக
இருக்குமானால் அந்த ஆளை யாராவது சும்மா விடுவார்களா? அடி உதையுடன் சிறைவாசமும்
அல்லவா பரிசாகக் கிடைக்கும். அப்படி இருக்கையில் ஏன் மாடி வீட்டு ஆசாமி அப்படிச்
சொல்கிறான்.
மகள்
யோசிப்பதைப் பார்த்த ஜானகி சொன்னாள். “எதற்கும் சும்மா இந்தப் புகைப்படத்தை
வருணிடம் காட்டி அந்த ஆள் யார் என்று கேட்டு தான் பாரேன். உண்மை என்ன என்று
தெரிந்து விடப்போகிறது”
வந்தனாவுக்கும்
அது சரி என்றே தோன்றியது. அவள் சரியென்று தலையசைத்தாள். நாளை விடுமுறை நாள். காலை
அவன் வருண் வரும் போது கேட்டு விடுவதென்று வந்தனா முடிவெடுத்தாள்.
அன்றிரவு
சேகருக்குச் சரியாக உறக்கம் வரவில்லை. அவன் உயிரோடு இருப்பது தெரிந்தால் அவன் மகன்
எப்படி அதை எடுத்துக் கொள்வான், என்ன செய்வான் என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை.
மகனிடம் பேசும் போது அவனைத் தன் பக்கம் இழுக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று
ஒத்திகை பார்க்க ஆரம்பித்தான். இத்தனை நாட்களில் ஒட்டுக் கேட்டும் வேவு பார்த்தும்
மகனை ஓரளவு நன்றாகவே எடை போட்டிருந்தான். எந்த மாதிரியான பொய்யை எப்படிச் சொன்னால்
வருண் அதிர்வான், தன் பக்கம் சாய்வான் என்றெல்லாம் ஓரளவு திருப்தியுடன் அவன்
யோசித்து முடிக்கையில் அதிகாலை ஆகி இருந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
Akshay is fantastic. Great going.
ReplyDeleteஅக்ஷய் அசத்தல் ஆரம்பம். . .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணா. . .
2 pakamum viruvirupu vaalthukal.
ReplyDeleteரசித்தேன்.ய
ReplyDeleteSuper sir.
ReplyDeleteதொடர்கிறோம்
ReplyDelete