மகாசக்தி மனிதர்கள் - 36
ஒரு மேன்மையான குருவுக்கு ஒரு உண்மையான சீடன் கிடைத்தால்
இருவருமே பெரும் பாக்கியசாலிகளாகிறார்கள். அது அடிக்கடி நடக்கும் சம்பவம் அல்ல.
லட்சங்களில் ஒரு ஜோடி அப்படி அமைந்தால் அதுவே பெரிய விஷயம். ஸ்ரீயுக்தேஷ்வர்
கிரிக்கு பரமஹம்ச யோகானந்தர் சீடராக வாய்த்தது அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு
மிக்க சம்பவமே.
ஆன்மிக உணர்வின் சிகரமாக மெய்ஞான நிலையை அடைய எத்தனையோ
ஜென்மங்கள் ஒருவர் எடுத்து அதற்கான வழிகளில் பயணித்து அதன் பலனாகப் பெறும்
பேரானந்த அனுபவம் அது. வார்த்தைகளுக்கு எட்டாத அந்த பேரானந்த அனுபவத்தை ஒரு
மேன்மையான குரு தகுதியுள்ள உண்மையான சீடனுக்கு ஒரு கணமாவது உணர்த்தி விட்டுப்
போவதுண்டு. அப்படி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் தன் பிரிய சீடரான யோகானந்தருக்கு அந்த
அனுபவத்தை ஒரு முறை ஏற்படுத்தினார்.
யோகானந்தருக்கு தியானம் சரிவர சித்திக்காத ஒரு நாளில் அவரைத்
தன்னருகே அழைத்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அவரது இதயப்பகுதிக்கு மேலே நெஞ்சில்
லேசாக தட்ட யோகானந்தர் தன் உடலிலிருந்து
திடீரென வெளிப்பட்டதாக உணர்ந்தார். பிரபஞ்சம் பிரகாசமயமாகி எல்லாரும் எல்லாமும்
ஒளிமயமாக இருந்ததை அவர் கண்டார். சாதாரண புறக்கண்ணின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட
காட்சிகளையும் அகக்கண்ணால் மிகத் துல்லியமாகக் கண்டார். உடலோடு இருந்த போது
முக்கியமாகவும், இன்றியமையாதவையாகவும் தோன்றிய எத்தனையோ விஷயங்கள் உடலில் இருந்து
விடுபட்டிருந்த அந்த உணர்வு நிலையில் அர்த்தமில்லாதவையாகவும்,
முக்கியமில்லாதவையாகவும் தோன்றின. ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்க வைத்த அந்த நிலை
சிறிது நேரம் நீடித்து மறைந்தது.
இந்த மேல் நிலை அனுபவத்தைத் தன் குருநாதரிடம் இருந்து பெற்ற
யோகானந்தர் தன் குருவின் நிழலாக இருந்து மேலும் பலவற்றைக் கற்றுக் கொண்டார்.
குறிப்பாக தன்னடக்கமும், பணிவும் உயர்ந்தோருக்கல்லாமல் மற்றவர்களுக்கு வராது
என்பதைக் குருவிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டார். அதற்கு ஒரு சிறிய நிகழ்வை
உதாரணமாகச் சொல்லலாம்.
ஒருமுறை ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் தாயார் மகனைப் பார்த்து
விட்டுச் செல்ல ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் ஏதோ சொல்ல அதற்கு
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஏதோ விளக்கம் சொல்ல அந்தத் தாய் “இந்த பிரசங்கத்தை எல்லாம்
உன் சீடர்களிடம் வைத்துக் கொள். என்னிடம் வேண்டாம்” என்று ஆரம்பித்து நன்றாகப் பொரிந்து
தள்ள சின்னப் பையன் போல தாய் திட்டுவதைச் சிறிதும் எதிர்த்துப் பேசாமல் கேட்டுக்
கொண்டு நின்றதை யோகானந்தர் கண்ணாரக் கண்டார். எத்தனை பெரிய யோகியாக இருந்தாலும்
தாயிற்குப் பிள்ளையாக அவர் அமைதியாக இருந்த காட்சியை யோகானந்தர் மிகவும்
பெருமையுடன் எழுதியிருக்கிறார்.
பிற்காலத்தில் துறவியாகி கிரியா யோகாவையும்,
இந்திய ஆன்மிகத்தையும் அமெரிக்காவில் பரப்ப பயணமான யோகானந்தர் தன்னுடைய குருவுடன்
என்றும் தொடர்பிலேயே இருந்தார். 1936 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் அலகாபாதில் கும்பமேளா நடக்க இருந்த சமயத்தில் யோகானந்தர் இந்தியா
வந்து தன் குருவை செராம்பூர் ஆசிரமத்தில் கண்டார். அப்போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
எண்பது வயதைக் கடந்திருந்தார். மிகவும் மெலிந்து பலவீனமாய் இருந்த போதும்
ஞானத்திற்கே உரிய அமைதியோடு இருந்த குருவைக் காணும் போது யோகானந்தருக்கு மிகவும்
பெருமையாக இருந்தது.
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் பிரிய சீடரிடம் தன்
அந்திமக் காலம் வந்து விட்டதென்றும், தான் விட்டுச் சென்றிருந்த பணியை யோகானந்தர்
சிரத்தையுடன் தொடர வேண்டும் என்பதைத் தெரிவித்தார். இனி செய்ய வேண்டிய காரியங்கள்
என்னென்ன என்பதை மிகவும் விளக்கமாகவே யோகானந்தரிடம் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
சொன்னார். அதைச் செவிமடுத்த யோகானந்தர் அப்படியே செய்வதாக உறுதியளித்தார்.
யோகானந்தர் கும்பமேளாவிற்குக் கிளம்பினார். அப்போது அவர் தன் குருவை உயிரோடு
பார்ப்பது அதுவே கடைசி முறை என்பதை அறிந்திருக்கவில்லை.
யோகானந்தர் கும்ப மேளாவிற்குப் போய் விட்டு
செராம்பூர் ஆசிரமத்திற்குத் திரும்பிய போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பூரி
ஆசிரமத்திற்குப் போய்விட்டிருந்தார். அவர் உடல்நிலை பூரி ஆசிரமத்தில் கவலைக்கிடமாக
இருப்பதாகத் தந்தி வந்தது. உடனே பூரிக்கு யோகானந்தர் கிளம்பினார். ரயிலில் அவர்
சென்று கொண்டிருக்கையில் திடீரென்று ஸ்ரீயுக்தேஷ்வர்
கிரியின் உருவம் யோகானந்தரின் கண்ணெதிரே தோன்றியது. அவரது இருபக்கங்களிலும்
ஒளிவெள்ளம் பாய்ந்திருந்தது.
யோகானந்தர் அந்தக் காட்சி தெரிவித்த செய்தியை உணர்ந்து
மிகுந்த துக்கத்தோடு கேட்டார். “எல்லாம் முடிந்து விட்டதா?”
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் உருவம் தலையசைத்தது.
பின் மறைந்தது. உலகத்தில் எல்லோரையும் விட அதிகமாய், உயர்வாய் நினைத்த, நேசித்த
குருவை இழந்த துக்கம் யோகானந்தரை ஆட்கொண்டது. ஆன்மிகத் தேடலில் சிறுவனாக சுற்றிக்
கொண்டிருந்த போது அவரைக் காந்தமாக இழுத்த குரு பிறகு அவருக்குக் கற்றுக் கொடுத்தது
தான் எத்தனை, காட்டிய அன்பு தான் எவ்வளவு? அதை எல்லாம் எண்ணிப் பார்த்த போது துறவியானாலும் அவருக்கு அந்த இழப்பினைத்
தாங்குவது சுலபமாக இருக்கவில்லை. பெருந்துக்கத்துடன் பூரி ஆசிரமத்திற்கு வந்து
சேர்ந்த யோகானந்தர் தன் குருவுக்குச் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளைச் செய்தார்.
பின்பும் குருவின் நினைவாகவே இருந்தார்.
இப்படி மீளாத் துக்கத்தில் ஆழ்ந்திருந்த
யோகானந்தர் அமெரிக்கா திரும்பும் முன் மும்பை ஓட்டலில் ஆழ்தியான நிலையில்
அமர்ந்திருந்த போது அவருக்கு மீண்டும் காட்சி அளித்தார் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி. இதை
குரு மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியாகவே கருதி அதைப் பற்றி மிக விரிவாக
யோகானந்தர் யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். இது நடந்தது ஸ்ரீயுக்தேஷ்வர்
கிரி இறந்த நாளிலிருந்து சரியாகப் பத்தாவது நாளில்.
அந்த அறையே ஒளிமயமாகி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் பழைய
உருவத்திலேயே அங்கு பிரத்தியட்சமாக வந்தது யோகானந்தருக்கு மறக்க முடியாத அனுபவமாக
மாறி விட்டது. இது வெறும் காட்சியாக மட்டுமல்லாமல் உண்மையாக தொட முடிந்த உருவமாகவே
குருநாதர் இருந்தது தான் யோகானந்தருக்குப் பேராச்சரியமாக இருந்தது. எல்லா
சந்தேகங்களையும் குருவிடமே கேட்டு தெளிவு பெற்று வந்த யோகானந்தர், பூரி
ஆசிரமத்தில் புதைத்த குருநாதர் மறுபடி அதே உருவம் பெற்று வந்ததெப்படி என்ற
சந்தேகத்தை குருவிடமே கேட்டார்.
பிரபஞ்ச அணுக்களில் இருந்து எதையும் பழைய
வடிவிலேயே புதிதாக உருவாக்கலாம் என்று தெளிவுபடுத்திய ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பின்
நீண்ட நேரம் தன் ஆத்மார்த்த சீடரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இறந்த பின் மனிதன் அடையும் நிலை, அவன் செல்லும்
உலகங்கள் பற்றி எல்லாம் யோகானந்தர் ஆர்வமாகக் கேட்க, வாழ்ந்த போது
விளக்கம் அளித்த விதமாகவே மாண்ட பிறகும் தன் சீடருக்கு
விளக்கம் ஸ்ரீயுதேஷ்வர் கிரி அளித்தார்.
கடைசியில் யோகானந்தர் “உங்கள் மரணத்தை என்னால்
தாங்க முடியவில்லை” என்று
துக்கத்துடன் சொன்ன போது “நான் எப்போது இறந்தேன்?” என்று சீடரிடம் விளையாட்டாகக் கேட்ட
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உண்மையில் வாழ்க்கையில் காண்பதெல்லாம் நீர்க்குமிழி கனவு
நிலைகளே என்றும் அதனால் அவை கலைவது சகஜமே என்றும் ஆத்மாவுக்கு உண்மையில் மரணமில்லை
என்றும் சீடருக்கு தெளிவித்து விட்டு மறைந்தார். குரு மரணம் குறித்த யோகானந்தரின்
துக்கமும் அந்தக் கணத்திலேயே மறைந்தது.
ஞானாவதாரம் என்று எப்போதுமே தன் குருநாதரை
யோகானந்தர் குறிப்பிடுவார். அது போன்ற யோகிகள் குருநாதராகக் கிடைப்பது என்பது மிக
அரிது. வாழும் போதும், மாண்ட பின்னும் யோகசக்தியின் பல அமானுஷ்ய நிலைகளை
வாய்மொழியால் மட்டுமில்லாமல் சீடருக்கு நிதர்சனமாகவே ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
காட்டிச் சென்றிருப்பது விந்தையிலும் விந்தை!.
இனி அடுத்த யோகியைப் பார்ப்போமா?
(தொடரும்)
நன்றி – தினத்தந்தி
– 24.4.2015
அருமை
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteThanks. ..long time back I read the book. ...but it reminded me the divine experience of Guruji who is with us always while reading his book
ReplyDelete