ஒடிசல் இளைஞன் சொன்னான். “சாதாரண மனிதர்களைச் சமாளிக்க நீ சொல்லும் வழி
சரியானது தான். அந்த லாரிக்குள் பதுங்கி இருப்பவர்களில் ஒருவன் அசாதாரணவன். வாயு
வேகம் மின்னல் வேகம் என்றெல்லாம் சொல்வார்களே அது போல இயங்குகிறவன். அவன் ஓடும் லாரியிலிருந்தே
நம் ஜீப்பில் குதித்து ஏதாவது செய்து விடுவானோ என்று நானே பயந்து
கொண்டிருக்கிறேன். நீ சொல்கிறபடி லாரியை நிறுத்தி விட்டால் அவனுக்கும் வேறு வழி
இல்லை. கண்டிப்பாய் நம் மீது பாய்வான்.... வேறு வினையே வேண்டாம்....”
ஜீப் டிரைவர் கேட்டான். “பாய்ந்து என்ன
செய்வான்?”
”அவன் வர்மக்கலை நிபுணன். வர்மத்திலும் உடலின்
நரம்புகளைத் தாக்குவதில் வல்லவன். ஏதாவது நரம்பைச் சுண்டி விட்டான் என்றால் அதோடு நம்
கதை முடிந்தது. பிறகு ஆஸ்பத்திரிக்குப் போனாலும் அதைச் சரி செய்ய முடியாது. அந்த
நரம்பு சம்பந்தமான வேலைகள் அதற்குப் பின் நம் உடலில் நடக்காது”
ஜீப் டிரைவர் பயந்து போனான். அவனை அறியாமல்
ஜீப்பின் வேகம் குறைந்தது. அதைக் கவனித்த ஒடிசல் இளைஞன் எரிச்சலுடன் சொன்னான். “பயப்படாமல் ஒழுங்காக ஓட்டு. அவன் அப்படி ஏதாவது
செய்து விடக்கூடாது என்று தான் இந்த அளவு இடைவெளி விட்டே ஒட்ட உன்னைச் சொன்னேன்.
அவன் இருக்கும் இடம் நம் கண்பார்வையிலேயே இருக்க வேண்டும். அது தான் இப்போது நாம்
செய்ய வேண்டியது”
ஜீப் டிரைவருக்கு சிறிது நிம்மதி வந்தது.
பழைய வேகத்துக்கு உடனடியாக வந்தான். அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டுக் கேட்டான்.
“இன்னொருவன் எப்படி?”
“எந்த இன்னொருவன்?”
“லாரிக்குள் இன்னொரு சிறுவன் இருக்கிறதாய்
சொன்னாயே. அவனைக் கேட்கிறேன்”
”அவன்
எப்படி என்று இனி மேல் தான் தெரிய வேண்டும்.....”
அதற்கு மேல் ஜீப் டிரைவர் எதுவும்
கேட்கவில்லை. மௌனமாக அந்த லாரியை அவர்கள் பின் தொடர்ந்தார்கள். ஒடிசல் இளைஞனுக்குப்
புதியதொரு பயம் வந்தது. இந்த ஜீப் டிரைவர் சொன்ன திட்டத்தை அந்த லாரியில்
போகிறவர்கள் பின்பற்றினால் என்ன செய்வது? திடீரென்று மைத்ரேயனின் பாதுகாவலன்
லாரியின் பின் கதவைத் திறந்து துப்பாக்கியால் பின்னால் வரும் ஜீப் டயரைச்
சுட்டால்....? ஜீப் நின்று போகும். அவர்கள் நிம்மதியாக எங்கு வேண்டுமானாலும்
போய்க் கொள்ளலாம்.... அந்த எண்ணமே அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த யோசனை
லாரியில் இருப்பவர்களுக்கு வந்து விடக்கூடாது என்று அவன் மாராவை வேண்டிக்
கொண்டான்.
அதிர்ஷ்டவசமாக அவன் பயந்தது போல நடந்து
விடவில்லை. ஆனால் லாரிக்காரன் அடிக்கடி லாரியை எசகு பிசகாக
ஓட்டினான். முன்பு ஓட்டியது போலவே படுவேகமாகவும், நிதானமாகவும் ஓட்டி அவர்களை அடிக்கடி
சோதித்தான். ஜீப் டிரைவர் அதற்கெல்லாம் அசரவில்லை. அதற்கேற்றபடியே தானும் ஜீப்பை
ஓட்டினான். இடையே சில வாகனங்கள் வந்த போதும் லாரியை ஓட்டினாற் போலவே இருந்து
ஜீப்பும் முந்தியது.
ஆனால் ஒரு இடத்தில்
மட்டும் லாரிக்காரன் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வேனை முந்தினாலும் வேன்காரன்
ஜீப்பை முந்த விடவில்லை. இப்போது அந்த வேன் லாரிக்கும் ஜீப்பிற்கும் நடுவில்
இருந்தது. முந்தைய லாரி காற்றாய் பறக்க வேன் தன் பழைய வேகத்திலேயே போனது. ஜீப்
முந்தவும் இடம் தராமல் வேன் போய் கொண்டிருக்கவே ஒடிசல் இளைஞன் ஜீப் டிரைவரிடம்
பரபரப்புடன் சொன்னான். ”ஏதாவது செய்து வேனை முந்து..... லாரியை நம் கண்
பார்வையில் இருந்து தவற விட்டு விடக்கூடாது.”
ஜீப் டிரைவர் ஒலி
எழுப்பியும் வேன்காரன் வழி விடவில்லை. சாலையின் நடுவிலேயே வேனை ஓட்டினான். இடது
புறம் பள்ளத்தாக்கு, வலது புறம் மலை. ஒடிசல் இளைஞன் ஜீப் டிரைவரிடம் பதற்றத்துடன் சொன்னான்.
“இவனை மட்டும் இப்போது நீ கடந்து லாரிக்குப் பின்னால் தொடர்ந்தால் சொன்ன பணத்தில்
ஒன்றரை மடங்கு தருகிறேன்....”
கூடுதல் பணம்
என்றதும் ஜீப் டிரைவருக்கு அசாதாரண உற்சாகம் வந்து விட்டது. ”கவலையை விடுங்கள்” என்றவன் வலது புறம் இருந்த குறுகிய இடைவெளியிலும் வேனை முந்த முற்பட்டான்.
“நீங்கள் மட்டும் கெட்டியாக கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டால்
சரி” என்றவன் ஜீப்பை ஓட்டிய விதத்தில் இடது புற சக்கரங்கள்
மட்டும் சாலையில் செல்ல வலதுபுற சக்கரங்கள் மலை அடித்தள மேட்டில் செல்ல
ஆரம்பித்தன.
வேன்காரன் வாயைப்
பிளந்தான். எந்த வேளையிலும் ஜீப் கவிழ்ந்து தங்கள் வேனின் மேல் விழலாம் என்கிற
பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. உடனே அவன் தானாக ஒதுங்க ஆரம்பித்தான். ஜீப் சில
வினாடிகளில் வேனைக் கடந்து லாரியின் பின்னால் இருந்தது. ஒடிசல் இளைஞன் நிம்மதிப்
பெருமூச்சு இட ஜீப் டிரைவர் சந்தோஷமாய் சிரித்தான்.
கண்ணாடியில் ஜீப்
ஓட்டியின் சாகசத்தைப் பார்த்துக் கொண்டே வந்த லாரி டிரைவர் அங்கலாய்த்தான். “சைத்தானுக்கு வாய்க்கிற
ஆள்களும் சைத்தானாகவே இருக்கிறார்கள்.”
அதே நேரத்தில் லீ க்யாங் உறங்காமல் சைத்தானை ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்தான். இணையத்தில் ஆராய்ச்சி செய்ததில் ஏராளமான
தகவல்கள் கிடைத்தன. அவற்றில் எத்தனை நிஜம், எத்தனை கற்பனை என்பதை அவனால் கணிக்க
முடியவில்லை. ஒரு பாதி தகவல்களுக்கு எதிர்மாறாய் மறு பாதி தகவல்கள் இருந்தால்
எத்தனை தகவல்கள் கிடைத்தாலும் அவை வீணாகவே அல்லவா இருக்கும்.
அந்த வீண் தகவல்களில் கூட மாராவின் அவதாரம்
பற்றிய தகவல் ஒன்று கூட இருக்கவில்லை. புத்தரின் அவதாரம் மைத்ரேயன் பற்றி நிறைய
இருந்தன. சில பேரை மைத்ரேயன் என்று சில காலக்கட்டங்களில் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஆட்கள் யாரும் புத்தர் இடத்தை வரலாற்றில் பிடிக்கவில்லை. அதனாலேயே
அவர்கள் மைத்ரேயனாக இருந்திருக்க முடியாது என்று பிற்காலம் முடிவு
செய்திருக்கிறது. இன்றைய மைத்ரேயன் உண்மையா என்று எதிர்காலம் முடிவு செய்யும்...
இல்லை... இல்லை.... லீ க்யாங் முடிவு செய்வான். அவன் அறிமுகப்படுத்துபவனே
எதிர்காலத்திற்கு மைத்ரேயனாக அறிமுகமாவான். அதில் லீ க்யாங்குக்கு கடுகளவும்
சந்தேகம் இல்லை.... இப்போதைக்கு அவன் யோசனை எல்லாம் மாராவின் அவதாரம் பற்றியதாக
இருந்தது. அவன் பின்னால் இருக்கும் ரகசியக்குழு பற்றியதாக இருந்தது.
மைத்ரேயனையாவது புகைப்படத்தில் பார்த்திருக்கிறான். முழுமையாக இல்லா விட்டாலும்
ஓரளவாவது அவனைப் பற்றிய தகவல்கள் தெரியும். ஆனால் மாராவின் அவதாரம் மறைவிலேயே
இருக்கிறான். மறைவாகவே இயங்கியும் வருகிறான். அதனால் அவனைப் பற்றி எதுவுமே
தெரியவில்லை.
சீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் சொன்னதை
எல்லாம் யோசித்துப் பார்க்கையில் அவை ஈசாப் கதைகள் போல அவனுக்குப் பட்டது.
கண்கட்டு வித்தை, காணாமல் போகும் குகை, அங்கு மாராவின் கோயில், அங்கு இரவில்
கூடும் ரகசியக்கூட்டம் இதெல்லாம் அறிவுக்கு எட்டும் விஷயமாக இல்லை. ஆனால் ஒருவன் அந்தக்
குகையைப் பார்த்திருக்கிறான். அதைக் காணாமல் இரவிலும் பகலிலும் தேடி இருக்கிறான். மறுபடி
காண முடியாமல் அதிசயித்திருக்கிறான். இதெல்லாம் கூட போதையில் இருந்த போது அந்த
இளைஞன் ஏற்படுத்திக் கொண்டிருந்த கற்பனையாக இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் அவன் சில வருடங்கள் கழித்து முன்பு பார்த்தவனை மறுபடி பார்த்ததும், பார்த்ததின்
விளைவாக மர்மமான முறையில் இறந்து போனதும் கற்பனை அல்ல. நிஜம். இது நிஜமாக
இருந்தால் முன்பு அவன் சொன்ன அனுபவம் பொய்யாய் இருக்க முடியாது.....
இப்போதும் கழுத்து திருகிய அந்தக்
கண்சிமிட்டி மனிதன் என்ன ஆனான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் விழும்
போது இருந்த சாட்சியாக இருந்த மனிதன் பாம்பு கடித்து இறந்து போனதும் இயல்பாக
இல்லை.... முந்தைய சம்பவமும், இன்றைய சம்பவமும் கச்சிதமாகவே கையாளப்பட்டிருக்கின்றன.
முன்பு நடந்தது பீஜிங்கில், இப்போது நடந்தது திபெத்தில். இரண்டுமே அவன் தேச
எல்லைக்குள் தான்.... இதை எண்ணும் போது அவனுக்கு ஆத்திரமாக வந்தது. உளவுத்
துறையின் கவனத்திற்கு வராமலே அவன் தேசத்திலேயே என்னென்னவோ நடக்கிறது....
சம்யே மடாலயத்தில் அந்தக் கண்சிமிட்டி
மனிதன் கோங்காங் மண்டப வாயிலில் பல இரவுகளில் இருந்தது காவல் காக்கத் தான் என்பதை
அவனால் அனுமானிக்க முடிந்தது. அந்த இரவுகளில் மண்டபத்திற்குள்ளே போனதையும் யாரும்
பார்க்கவில்லை, வெளியே வருவதையும் யாரும் பார்க்கவில்லை என்பதை வைத்து அதை
அனுமானித்தவன், அப்படியானால் உள்ளே யாரோ அந்த வேளைகளில் இருந்திருக்கிறார்கள்
என்பதையும் அனுமானித்தான். வெறும் சிலைகளைக் காவல் காக்க என்ன இருக்கிறது. அந்த
வேளைகளில் உள்ளே இருப்பவர்கள் ஏதாவது வழிபாட்டில் இருந்திருக்கலாம். தீயசக்திகளின்
பூஜைகள் நள்ளிரவிலேயே அதிகம் நடக்கின்றன.... அந்தப் பூஜை செய்யும் ஆட்கள் மடாலயத்திலேயே
இருப்பவர்கள் ஒரு முறை கூட யார் கண்ணிலும் படவில்லை.... அந்த அளவு மிக கவனமாக
இருந்திருக்கிறார்கள்.
சம்யே மடாலயத்தில் இரவு நேரங்களில்
கோங்காங் மண்டபத்தை வேவு பார்க்க ஏற்பாடு செய்ய அவன் வாங் சாவொவிடம் சொல்லி
இருக்கிறான். ஆனால் இது வரை அந்தக்குழு காட்டிய சாமர்த்தியத்தைப் பார்க்கும் போது
சில காலமாவது அந்த ஆட்கள் கோங்காங் மண்டபத்திற்கு வந்து செய்யும் நள்ளிரவுச்
சடங்குகளை நிறுத்தி வைப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றுகிறது....
லீ க்யாங் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தி
கடிகாரத்தைப் பார்த்தான். காலை மணி ஐந்தரை. வாங் சாவொவுக்குப் போன் செய்தான்.
திபெத்தில் அடிக்கடி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுபவர்களை எல்லாம் தேடிப்
பிடித்து உள்ளே ஏதாவது சிலையும், விஸ்தாரமான இடமும் உள்ள (ரகசியக்) குகையை யாராவது
எப்போதாவது பார்த்திருக்கிறார்களா, அங்கு ஆட்களைப் பார்த்திருக்கிறார்களா, அங்கேயே
வாழும் மக்களுக்கு அது போன்ற ஒரு குகையைத் தெரியுமா, அவர்கள் அங்கு வந்து போகும்
ஆட்களைப் பார்த்திருக்கிறார்களா என்றெல்லாம் விசாரிக்கச் சொன்னான். அமானுஷ்யமான
அனுபவங்கள் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் உடனடியாகத் தெரிவிக்கச் சொன்னான்.
இருக்கின்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு முதல் வேலையாக இதைக் கவனிக்கச் சொல்லி
விட்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.
வெளியே விடிய ஆரம்பித்திருந்தது.
அந்த விடியல் நேரத்தில் லாரி டிரைவரும், ஜீப் டிரைவரும் களைப்பை உணர
ஆரம்பித்தார்கள். ஒடிசல் இளைஞன் மூன்று முறை முகத்தில் தண்ணீரை இறைத்து உறக்கத்தை
விரட்டி இருந்தான். லாரிக்காரன் சாகசம் செய்வதை நிறுத்தி ஒரே வேகத்தில் போய்க்
கொண்டிருந்தான். அந்த ஜீப் டிரைவர் சில வினாடிகளானாலும் இரண்டு சக்கரங்களில் பயணம்
செய்து லாரியைத் தொடர்ந்தது இவனிடம் எந்த வித்தையும் பலிக்காது என்பதை அவனுக்கு உணர்த்தி
இருந்தது.
அவர்களது நீண்ட நேரப் பயணத்தில் ஒரு போலீஸ்
வாகனம் அவர்களைக் கடந்தது. லாரிக்காரன் முதலிலேயே அவர்கள் கண்ணில் பட்டு சோதனைக்கு
உட்பட்டிருக்க வேண்டும். அதனால் போலீஸ் அந்த லாரியைச் சோதனை இடவில்லை. ஜீப்பை
நிறுத்தி ஒரு நிமிடத்தில் சோதித்து விட்டு விட்டார்கள். மறுபடியும் முன்பு போலவே
அவர்கள் பயணம் தொடர்ந்தது.
சில நிமிடங்களில் தூரத்தில் ஒரு உணவகம்
தெரிந்தது. அங்கே சில வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. லாரிக்காரன் வேகத்தைக்
குறைக்க ஆரம்பித்து அங்கே நிறுத்தத் தீர்மானித்தது போல் இருந்தது.
“என்ன செய்வது?” என்று ஜீப் ஓட்டி
கேட்டான்.
“அவன் நிறுத்தினால்
நீயும் நிறுத்து. ஆனால் லாரி நம் பார்வையில் இருந்து விலகி விடக்கூடாது” என்று ஒடிசல் இளைஞன் சொன்னான். அங்கு ஏதாவது நடக்கலாம் என்று உள்ளுணர்வு
அவனை எச்சரித்தது. கவனத்தைச் சிறிதும் சிதற விடக்கூடாது என்று ஜாக்கிரதையானான்.
(தொடரும்)
என்.கணேசன்
Thanks for the early upload. Story going fantastic. I feel as if I am in the chase.
ReplyDeleteMe too
Deleteலீ கியாங் பொருத்தமான ஆள் 7 ஆம் அறிவு டாங்லீ
ReplyDeletesuper sir . ore viruviruppu
ReplyDeleteவிறுவிறுப்பின் ஊடே சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மனதில் நிற்கிறார்கள். அக்ஷய்-லீ க்யாங்-மாரா நல்ல முக்கோண காம்பினேஷன். ஒருவருக்கு மற்ற இருவர் எதிரிகள் என்பது சுவாரசியம். இதில் மைத்ரேயன் மையமாய் இருக்கிறான். எப்படி கொண்டு போகிறீர்கள் என்பதை ஊகிக்க முடியவில்லை. கதையோடு ஒன்றி விட்டோம்.
ReplyDeleteநன்றி நண்பரே!
ReplyDeleteஅருமையாக சென்றுகொண்டு இருக்கிறது... சாகசப் பயணத்தில் நாமே பயணிப்போது போன்று உள்ளது.....
ReplyDeleteஅண்ணா சூப்பர்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
Sakaasa payanam arumai.....
ReplyDeleteஅருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சாகசப் பயணம்.
ReplyDeleteEpadi sir ivvalavu thiruppangal, vaithu ipadipatta swarasyamana visayamgalai ondrukondru thodarbu vituvidamal ezhudhuhireerhal!? Aacharyamay iruku sir! U r great sir!
ReplyDelete