Thursday, January 29, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 31


த்மசாம்பவாவின் ஓலைச்சுவடியில் ஒரு பக்கத்தை லாமாக்கள் ஒளித்து வைத்து விட்டார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?”  கவுரவ் சந்திரகாந்த முகர்ஜியைக் கேட்டான்.

சந்திரகாந்த் முகர்ஜி உடனடியாகப் பதில் சொல்லி விடாமல் கவுரவை மறுபடியும் பெருமையுடன் பார்த்தார். இது வரை பெரிய ஆர்வம் காட்டாமல் மேலோட்டமாய் அவர் பேச்சை அவன் கேட்டுக் கொண்டிருந்தது போலத் தான் அவருக்குத் தோன்றியிருந்தது. முதல் முறையாக அவன் ஆர்வத்தைக் கிளப்பி விட முடிந்தது அவருக்குப் பெருமையாக இருந்தது. வெளியுலகம் இது வரை அறியாத ஒரு ரகசியத்தைத் தன்னால் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது என்பதை அவர் அவனுக்கு விளக்க ஆரம்பித்தார்.  

பத்மசாம்பவா எதையும் அரைகுறையாய் செய்கிற ஆள் இல்லை. மற்றவர்கள் அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொண்டு விட முடியாதபடி முடிச்சுப் போட்டு எழுதுவாரே ஒழிய எழுத வேண்டியதை எழுதாமல் விட்டு விடும் ரகம் அல்ல. அதனால் மைத்ரேயர் தோற்றம், அவர் பிறக்கப் போகும் இடம் உட்பட எல்லாவற்றையும் பொதுவாக இல்லாமல் தெளிவாகவே சங்கேத மொழியிலாவது விரிவாக எழுதி வைத்திருக்க வேண்டும் என்று தேடினேன். வேறுபல விவரங்கள் இருந்தனவே தவிர மைத்ரேயரை அடையாளம் காட்டும் விவரங்கள் கிடைக்கவில்லை....

கவுரவ் தனக்கு முழு சுதந்திரம் இருக்குமானால் அந்த ஆளை ஓங்கி ஒரு அறை அறைந்து ஒரு பக்கத்தை ஒளித்து வைத்தார்கள் என்பதை எப்படிக் கண்டுபிடித்தாய் என்பதை மட்டும் சொல்லேனய்யா... எனக்கு நேரமாகிறது.... எவனாவது இங்கே வந்து தொலையப் போகிறான்என்று கேட்டிருப்பான். அவனுக்கு லீ க்யாங் அந்த சுதந்திரம் தந்திராததால் சந்திரகாந்த் முகர்ஜி அறையிலிருந்து தப்பித்தார்.

“பத்மசாம்பவாவிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஓலைச்சுவடியில் விரிவாக எழுதி இருந்ததன் முழு சாராம்சத்தையும் சுருக்கமாக கடைசியில் சில வரிகளில் மர்ம முடிச்சுகளுடன் சொல்லி முடிப்பார். அவற்றைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. அதனால் மொழிபெயர்ப்பாளர்கள் கூட அந்தக் கடைசி வரிகளை மட்டும் தங்களுக்குப் புரிந்த வரை மொழிபெயர்த்து விட்டு விடுவார்கள். எனக்கு அந்தக் கடைசி வரிகளை மொழிபெயர்த்து மர்ம முடிச்சுகளை அவிழ்த்துப் புரிந்து கொள்ள எவ்வளவு காலம் தேவைப்பட்டது தெரியுமா?

கவுரவ் தன் பொறுமை எவ்வளவு நேரம் தாங்கும் என்று தான் கவலைப்பட்டான். பத்து நாட்கள் ஆகியிருக்குமா?என்று வாயிற்கு வந்த காலத்தைச் சொன்னான்.

சந்திரகாந்த் முகர்ஜியின் முகத்தில் திகைப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. இவன் மந்தபுத்திக்காரனாக இருப்பான் போல் இருக்கிறதே என்று நினைத்தார். மைத்ரேயர் விவகாரத்தில் இரண்டு வருடங்கள் வேறெந்த நினைவும் இல்லாமல் உழைத்திருக்கிறார். அந்தக் கடைசி வரிகளைப் புரிந்து கொள்ள மட்டும் அவருக்கு பதினோரு மாதங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதைப் பத்து நாட்கள் ஆகியிருக்குமா என்று இந்த முட்டாள் கேட்கிறான்....

“பதினோரு மாதங்கள் உழைத்துக் கண்டுபிடித்திருக்கிறேன்....

கவுரவ் அவர் எதிர்பார்த்த பிரமிப்பைத் தன் முகத்தில் காட்டினான்.

இப்போதாவது இந்த மரமண்டைக்குப் புரிந்ததே என்று திருப்தி அடைந்த சந்திரகாந்த் முகர்ஜி தொடர்ந்தார். “அந்தக் கடைசி வரிகளில் சுருக்கமாக பத்மசாம்பவா சொல்லி இருக்கிறார் என்றால் அந்த ஓலைச்சுவடியில் முன்பே விரிவாக அவர் சொல்லி இருக்கிறார் என்று தான் அர்த்தம். அது புரிந்த பிறகு மறுபடி அந்த ஓலைச்சுவடிப் பக்கங்களை ஆராய்ந்தேன். அப்போது தான் ஒரு பக்கத்தில் மைத்ரேயர் தோற்றம், தோன்றும் இடம் பற்றி விளக்க ஆரம்பித்திருந்த பத்மசாம்பவா அடுத்த பக்கத்தில் அதைத் தொடராமல் மைத்ரேயர் தர்மத்தை எப்படி நிலை நாட்டுவார் என்று சொல்ல ஆரம்பித்ததைக் கவனித்தேன். உண்மையான அடுத்த பக்கம் லாமாக்களால் அகற்றப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் அப்போது உறுதிப்பட்டது

கவுரவ் தன் நியாயமான சந்தேகத்தை எழுப்பினான். “அந்த ஒரு பக்கம் அகற்றப்பட்டிருக்கிறது என்கிற சந்தேகம் ஏன் மற்றவர்களுக்கு வரவில்லை. இது வரை எத்தனையோ மொழிபெயர்ப்பாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் அந்த ஓலைச்சுவடியைப் பார்த்திருப்பார்களே?

“பத்மசாம்பவா சொன்னதே அவ்வளவு தான் என்று நினைத்திருப்பார்கள். அவருடைய முடிவுப்பகுதியை என்னால் முழுமையாக விளக்கிக் கொள்ள முடிந்ததால் தான் நான் முன்பே சொன்னது போல் எனக்கு சந்தேகம் வந்தது. மைத்ரேயர் எங்கிருக்கலாம், அவர் தனி அடையாளங்கள் என்ன என்பதை அந்த கடைசி வரிகளில் இருந்து என்னால் ஓரளவாவது கண்டுபிடிக்க முடித்தது

என்ன கண்டுபிடித்தீர்கள்?

அவன் குரலில் இது வரை இல்லாத ஒரு கூர்மை இருந்ததை சந்திரகாந்த் முகர்ஜி உணர்ந்தார். ஆனால் அதை அவர் சட்டை செய்யவில்லை. ஒரு பெரிய மனித தோரணையுடன் சொன்னார். “அது பரமரகசியம். சீக்கிரமே நான் வெளியிடப் போகும் என்னுடைய புத்தகத்தில் தான் முதல் முதலில் அந்த ரகசியத்தை வெளியிடப் போகிறேன்.... உலகம் என்னிடம் இருந்து அப்போது தான் அறியப் போகிறது

கவுரவ் தன் இடுப்பில் மறைவாகச் சொருகி இருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தான்.....



லீ க்யாங் என்னேரமும் கவுரவ் என்றழைக்கப்பட்டவனிடம் இருந்து தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால் கவுரவ் தொடர்பு கொள்ளத் தாமதமாகிக் கொண்டே இருந்தது. ஏதோ பிரச்னை இருக்கிறது என்பது புரிந்தது. அவனுடைய எண்ணங்கள் தலாய் லாமா உதவி கேட்ட அந்த மர்ம ஆசாமி நோக்கியே மறுபடியும் சென்றன.  அவன் கண்டிப்பாக திபெத் வரப் போகிறான் என்பதில் லீ க்யாங்குக்கு சந்தேகமே இல்லை. திபெத்துக்குள் தனியாக நுழையும் ஒவ்வொரு மனிதனின் புகைப்படத்தையும் மற்ற விவரங்களையும் அவனுடைய ஆட்கள் அவனுக்கு அனுப்பி வைத்துக் கொண்டே தான் இருந்தார்கள். யாரும் அவன் அல்ல.

தலாய் லாமாவும் ஆசானும் பட்ட அவசரத்தை எண்ணிப் பார்க்கையில் அந்த மர்ம ஆசாமி இன்னேரம் திபெத்துக்கு வந்திருக்க வேண்டும். அவன் சாமர்த்தியசாலியும் கூட.... ஆனால் அவன் வந்திருந்தால் கண்டிப்பாகக் கண்டுபிடிக்கப் பட்டிருப்பான். அதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது.....  இது வரை பிடிபடவில்லை என்றால் அவன் வந்திருக்கவில்லை என்று அர்த்தமா இல்லை அவன் வந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று அர்த்தமா? இரண்டாவது நிகழ்ந்திருந்தால்.....?

லீ க்யாங்குக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. யோசித்து விட்டு லாஸா விமான நிலையத்தின் கடந்த இரண்டு நாட்களின்  வீடியோ பதிவுகளை வரவழைத்துப் பார்க்க ஆரம்பித்தான். திபெத்தில் நுழையும் பெரும்பாலான மனிதர்கள் யாத்திரிகர்கள்.... பல வகை யாத்திரிகர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே வந்தான். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வெள்ளையர்களை அவன் அதிகம் கண்டு கொள்ளவில்லை. அவன் கவனம் எல்லாம் ஆசியப் பயணிகள் மீதாக இருந்தது. குறிப்பாக இந்தியராக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பக்கூடியவர்களை அதிகம் கூர்ந்து கவனித்தான்.

லாஸா விமான நிலையத்தில் வந்து நிற்கும் விமானங்கள் பீஜிங் போன்ற விமான நிலையங்களில் வரும் விமானங்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு தான். எனவே ஒவ்வொரு விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளைக் கவனிப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை. எனவே லீ க்யாங்க் அவர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தான். நான்கைந்து விமானங்களில் இருந்து இறங்கியவர்களைக் கவனித்து முடித்து விட்டான்....  யார் மீதும் அவனுக்கு சந்தேகம் வரவில்லை....  சலிக்காமல் அடுத்த விமானத்தில் இருந்து இறங்கி வருபவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

அது காத்மண்டுவில் இருந்து வந்த விமானம். பல ரக பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.  அவன் கவனத்தை முதலில் ஈர்த்தது ஒரு புத்த பிக்குவின் பாதங்கள். ஒவ்வொரு அடியிலும் ஒரு அமைதி இருந்தது. சாந்தம் இருந்தது. லீ க்யாங்குக்கு அந்த அமைதியான நடை பிடித்திருந்தது. அவருடன் ஒரு புத்தபிக்கு சிறுவனும் வந்து கொண்டிருந்தான். அவருடைய சீடன் போலிருக்கிறது. அவர் கையைப் பிடித்திருந்தாலும் கூட அவர் நடைக்கு எதிர்மாறாக இருந்தது அவன் நடை. குருவின் சாந்தத்தை சீடன் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறது என்று நினைத்து லீ க்யாங் புன்னகைத்தான்.

புத்த பிக்குவின் முகம் தெரியவில்லை. அவர் தலை குனிந்தே இருந்தார். அவர் நடப்பதை நிறுத்தி சுற்றிலும் பார்த்தார். ஆனாலும் காமிராவில் அவர் முகம் தெளிவாகப் பதியவில்லை.... தங்களை அழைத்துப் போக வருபவர்களைத் தேடுவது போல் இருந்தது அவர் தோரணை. அப்படித் தேடுவதிலும் ஒரு அழகான நிதானம் இருந்தது. அவர் நின்றாலும் அவர் சீடனான சிறுவன் நிற்பதாய் இல்லை... அவன் அவர் கையை விடுவித்துக் கொண்டு முன்னே செல்லப் பார்த்தான். ஆனாலும் அவன் அவர் கையிலிருந்து விடுபடவில்லை. அவன் பின்னால் திரும்பி குருவைப் பார்த்தான். அவன் முகத்தில் ஏதோ எதிர்பார்த்திராத பீதி தெரிந்தது. அப்படியே சிலை போல நின்றான்....

பார்த்துக் கொண்டிருந்த லீ க்யாங்குக்கு இரத்தம் தலைக்கு ஜிவ்வென்று ஏறியது. அந்த புத்த பிக்கு தான் அந்த மர்ம ஆசாமி என்பது மின்னல் வேகத்தில் அவனுக்குப் புரிந்தது. அது ஏன் எப்படி என்பதை எல்லாம் பின்னர் அறிவு ஆராய்ச்சி செய்து சரிபார்த்துக் கொள்ளும். ஆனால் உள்ளுணர்வு முதலிலேயே அவனுக்கு அறிவித்து விட்டது....

விரிந்த கண்களுடன் லீ க்யாங் அந்தக் காட்சியைத் தொடர்ந்து கவனித்தான். அந்த பிக்குவும் சிறுவனும் பழையபடி நிதானமாக நடந்து சென்றார்கள். அந்த பிக்கு சிறுவனிடம் எதோ கேட்டதும் சிறுவன் திகைப்புடன் தலையசைத்ததும் தெரிந்தது.... அவர்களுடைய ஆவணங்களைச் சரிபார்த்த அதிகாரி, கொண்டு வந்திருந்த உடைமைகளைச் சோதித்த  அதிகாரி ஆகியோரிடம் சென்று வேலை முடிந்து அவர்களைக் கடந்து விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வரை அந்த புத்த பிக்கு நடையிலும், வேகத்திலும் எந்த மாற்றமுமில்லை.

அவசர அவசரமாக அந்த பிக்குவையும், அந்தச் சிறுவனையும் படம் பிடித்திருந்த எல்லாக் காமிராப்பதிவுகளையும் லீ க்யாங் பார்த்தான். எந்த ஒரு காமிராவும் அந்த புத்த பிக்குவின் முகத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை. எந்தக் காமிராவிலும் அந்த மர்ம மனிதன் தன் முகத்தைக் காட்டாமல் தவிர்த்திருந்தான். ஒரு சில இடங்களில் அவன் முகத்தின் பக்கவாட்டுப்பகுதி  மட்டும் தெரிந்தது. அதுவும் கூட மிகவும் குறுகிய வினாடிகள் தான். மற்றபடி மொட்டைத் தலையின் மேற்பகுதி மட்டுமே தெளிவாகத் தெரிந்தது. அது சாதாரண காரியம் இல்லை என்பதை லீ க்யாங் அறிவான். ஒவ்வொரு கணமும் சுற்றிலும் நடக்கும் அனைத்தையும் அறிந்த ஒருவனால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய காரியம் அது. இப்போதும் கூட அந்தச் சிறுவன் முகத்தில் பீதி தெரிந்திருக்கா விட்டால் லீ க்யாங் அவனைக் கண்டுபிடித்திருக்க மாட்டான். அந்த புத்த பிக்குவிடம் தெரிந்த சாந்தமும், பாதங்கள் அமைதியாய் தரையைத் தொட்ட விதமும் தான் ஆரம்பத்தில் மனதைக் கவர்ந்ததே ஒழிய முதல் பார்வையில் அவனுக்கே சந்தேகம் வந்திருக்கவில்லையே!

லீ க்யாங்குக்கு தலாய் லாமா ஏன் அந்த மர்ம மனிதனின் உதவியை நாடினார் என்பது புரிந்தது.  தனக்கு ஒரு சவால் திபெத்தின் மண்ணிலேயே நுழைந்து விட்டது என்று நினைத்தவன் லேசாகப் புன்னகைத்தான். இனி அந்த மர்ம ஆசாமி எங்கிருக்கிறான் என்று வேறு இடங்களில் தேட வேண்டியதில்லை!

(தொடரும்)
என்.கணேசன்


Monday, January 26, 2015

எக்ஸ்ரே பார்வையின் கூடுதல் சாகசங்கள்!


9. மகாசக்தி மனிதர்கள்

ண்கள் பல அடுக்குகளாக மூடியிருந்த போதிலும் சபையினர் ஒரு புத்தகத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளைக் காட்டிய போது அந்தப் பகுதிகளைப் படித்துக் காட்டிய குடா பக்ஸ் அடுத்ததாக யாராவது மேடைக்கு வந்து மேடையில் இருக்கும் கரும்பலகையில் ஏதாவது வாக்கியம் ஒன்றை எழுதச் சொன்னார்.

ஒருவர் எழுந்து சென்று கரும்பலகையில் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் எழுதினார். எழுதி விட்டு “இதைப் படித்துக் காட்ட முடியுமா?என்று அந்த நபர் கேட்க குடா பக்ஸ் சிரித்துக் கொண்டே அதைப் படித்துக் காட்டியது மட்டுமல்லாமல் அவர் எழுதியதன் மீதே அப்படியே எழுதியும் காட்டினார். எழுதிய எழுத்துகளின் மீது அப்படியே எழுதிக் காட்டுவது என்பது கண்கள் உதவியில்லாமல் எப்படி சாத்தியமாகும் என்று எல்லோரும் வியந்து போனார்கள்.

அடுத்ததாக வேறு ஒருவர் வந்து வேறொரு வாக்கியத்தை அந்தக் கரும்பலகையில் எழுதினார். அதையும் அப்படியே ஒவ்வொரு எழுத்தின் மீதும் எழுதிய குடா பக்ஸ் இரண்டாமவர் எழுதிய ஆங்கில வார்த்தையில் ஓரிடத்தில் ஐ எழுத்தின் மீது புள்ளி விடுபட்டிருந்ததை சுட்டிக் காட்டி அதைச் சரி செய்து எழுதினார்.

பிறகு “இங்கிருப்பவர்களில் யாருக்காவது ஆங்கிலம் அல்லாமல் வேறு ஒரு அன்னிய மொழி தெரிந்திருந்தால் அதையும் இந்தக் கரும்பலகையில் எழுதலாம்என்று அழைப்பு விடுத்தார்.    
ஒருவர் மேடைக்கு வந்து கரும்பலகையில் அரபு மொழியில் எழுதி விட்டுப் போனார். அரபு மொழியில் இடமிருந்து வலமாக எழுதுவதில்லை. வலமிருந்து இடமாகத் தான் எழுதுவார்கள். அரபு மொழியில் எழுதிய நபரும் அப்படித்தான் எழுதினார். அதே போல குடா பக்ஸும் வலமிருந்து இடமாக அரபு எழுத்துகளின் மீது அப்படியே மேல் எழுதிக் காட்டி சபையினரை திகைப்பின் உச்சத்திற்கே போக வைத்தார்.

தெரியாத மொழி எழுத்துகளின் மேல் அப்படியே எழுத முடிவது கண்களின் உதவியில்லாமல் எப்படி சாத்தியம்? என்று சபையினரைப் போலவே வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீயும் திகைத்தார்.  

பின் தன் கண்ணைச் சுற்றிக் கட்டி இருந்த கட்டுக்களைப் பிரிக்க வேறு இரு ஆட்களை வரச் சொன்னார். ஒவ்வொரு கட்டவிழ்ப்பின் போதும் அவர்கள் இருவரும் கண்களைச் சுற்றி கட்டி இருந்த கட்டுக்கள் ஏதாவது விதத்தில் விலகி இருக்கின்றனவா என்று உறுதிபடுத்திக் கொண்டே தான் பிரித்தார்கள். அவர்களாலும் கட்டுகள் முழுமையாகவே இருந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

கடைசியில் கண்களை மறைந்திருந்த மாவுக்கட்டில் கூட அவருடைய மூடிய கண்களின் அச்சுகளை சரிபார்க்க குடா பக்ஸ் கூறினார். ஆர்வத்துடன் சபையினர் அதையும் பார்த்தார்கள். மூடிய விழிகளின் அச்சுக்கள் கூட ஏமாற்று வித்தையின் அறிகுறிகளைக் காட்டாமல் சரியாக இருந்தன. சபையினர் அனைவரும் முழு திருப்தி அடைந்தனர்.

ஒருவர் குடா பக்ஸைக் கேட்டார். “கண்களால் அல்லாமல் உங்களால் எப்படிப் பார்க்க முடிகிறது?


உள்மனதைக் குவிப்பதன் மூலம் பார்வையின் சூட்சும சக்தியை எளிதாகப் பெற்று விட முடிகிறது. எனவே என்னால் பார்க்க முடிவதன் ரகசியம் உள் மனதை ஒன்றுபடுத்திக் குவிப்பதில் தான் இருக்கிறதுஎன்று குடா பக்ஸ் கூறினார்.

சாதாரணமாய் படிக்கையில் கண்ணாடியின் உதவியில்லாமல் படிக்க முடியாத குடா பக்ஸ் கண்களை பல அடுக்குகளால் கட்டிய பிறகும் பார்க்க முடிவது அகசக்தியின் உதவியால் தான் என்கிற போது புற உறுப்புகளின் பலவீனங்கள் அகசக்தியால் பெறப்படும் சக்திகளில் இருப்பதில்லை என்பது உறுதியாகிறது அல்லவா?

குடா பக்ஸ் மேலும் சொன்னார். “என் முதுகுத் தண்டு மூன்று இடங்களில் துண்டாகி இருக்கிறது. மருத்துவர்கள் நான் இனி எப்போதும் நடக்க முடியாது என்று கூறினார்கள். ஆனால் நான் என் உள்மனத்தை குவிப்பின் மூலம் அதைக் குணப்படுத்திக் கொண்டேன். எனக்கு இப்போது நடப்பதில் எந்த பிரச்னையும் இல்லை

அவருக்கு இப்போது நடப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது பார்வையாளர்கள் அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தது. முதுகுத் தண்டு உடைந்தது பற்றி யாரும் எழுதவோ, ஆராயவோ இல்லை என்பதால் அந்தத் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள நம்மால் முடியவில்லை.

இந்த வித்தையைப் பயன்படுத்தி குருடர்களால் பார்க்க முடியுமா?என்று ஒருவர் கேட்டார்.

“ஒரு முறை அது சாத்தியம் என்று நானே சொல்லி இருந்தேன். ஆனால் அது தவறு என்பது இப்போது புரிகிறது. அது குருடர்களுக்கு சாத்தியம் இல்லைஎன்றார் குடா பக்ஸ்.

தவறாகச் சொன்னதை ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டு அவர் சொன்னதும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியின் செய்கையாக வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீக்குத் தெரியவில்லை.  

“இதை ஒருவரால் கற்றுக் கொள்ள முடியுமா?என்று ஒருவர் கேட்டார்.

“முடியும்என்று குடா பக்ஸ் அழுத்தமாகச் சொன்னார். “கவனக் குவிப்பை நம்மிடம் அதிகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் ஒரு எரியும் மெழுகுவர்த்தியில் தீயிற்கும் மெழுகுவர்த்திக்கும் இடையே உள்ள தூரத்தை உற்றுப் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் சில வினாடிகள் அப்படிச் செய்யுங்கள். போகப் போக அந்த நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதன் அற்புத விளைவுகளைக் காண சுமார் இருபது வருடங்கள் தேவைப்படும்.

யாராவது விரும்பினால் அவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தர தான் தயாராய் இருப்பதாக குடா பக்ஸ் சொன்னார். ஆனால் யாரும் கற்றுக் கொள்ள முன் வரவில்லை. எத்தனை பெரிய சக்தியாக இருந்தாலும் அதைப் பெற இருபது வருடங்கள் எரியும் மெழுகுவர்த்தியை உற்றுப் பார்க்க யாரும் தயாராய் இருக்கவில்லை.

வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ கூட அந்த சக்தியைப் பெற பெரிதும் விரும்பினாலும் குறைவான காலத்தில் அதைப் பெற விரும்பினார். அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்த பிறகு கூட குடா பக்ஸின் அபூர்வ சக்திகள் பற்றியே அதிகம் சிந்தித்தார். இரண்டு வாரங்கள் கழிந்து குடா பக்ஸ் நடத்திய வேறொரு நிகழ்ச்சிக்குச் சென்று பார்த்தார்.

வந்திருந்த நபர்கள் பழைய ஆட்கள் தானா, காட்டப்பட்ட புத்தகம் அதே புத்தகம் தானா என்றெல்லாம் வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ கவனத்துடன் பார்த்தார். இந்த முறை பார்வையாளர்கள் பழையவர்கள் அல்ல, புத்தகமும் அதே புத்தகம் அல்ல, எல்லாமே புதியதாகத் தான் இருந்தது. இந்த முறையும் சந்தேகப்பட எந்தக் காரணமும் இருக்கவில்லை.  வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ இப்போது  குடா பக்ஸின் அபூர்வ சக்தியை முழுமையாக நம்பினார்.

வில்லியம் ராஷ்ஷர் (William Rauscher) என்ற பிரபல எழுத்தாளர் ‘மனதைப் படிப்பவர்கள்’ (The Mind Readers) என்ற புத்தகத்தில் குடா பக்ஸ் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில் ஜுலை 1952 ல் அர்கோசி (Argosy Magazine) என்ற பத்திரிக்கையில் குடா பக்ஸிடம் இரும்புத் திரை ஒன்றின் பின்னால் இருப்பதையும் உங்களால் படிக்க முடியுமா என்று ரொவால்டு டால் (Roald Dahlஎன்ற பத்திரிக்கையாளர் கேட்டு ஆரம்பித்த ஒரு புதிய நிகழ்ச்சி பற்றி எழுதி இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த சுவாரசிய நிகழ்ச்சியையும், குடா பக்ஸ் செய்து காட்டிய வேறு விதமான அபூர்வ நிகழ்ச்சிகளையும் பார்ப்போமா?

(தொடரும்)
-       என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 7.11.2014


Thursday, January 22, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 30


ரகதம் தன்னை ஒருவன் பின் தொடர்கிறான் என்பதைச் சிறிதும் உணரவில்லை. மனமெல்லாம் அக்‌ஷய் மீதே இருந்ததாலும், இப்போதும் அவள் மனதில் அவனுக்காக கந்தர் சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு இருந்ததாலும் அவளுக்கு மிக அருகில் நடந்தவர்கள் குறித்த பிரக்ஞை கூட அவளுக்கு இருக்கவில்லை. அதனால் பத்தடி தூர இடைவெளியில் வந்தவனை அறிந்து கொள்ளாமலேயே அவள் தன் வீட்டை அடைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்து கதவு சாத்தப்பட்ட பின்னரும், அவளைப் பின் தொடர்ந்தவன் அந்தப் பகுதியிலேயே இருந்தான். அந்த வீட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்தான். பக்கத்தில் இருந்த வீடுகளையும் எதிரில் இருந்த வீடுகளையும் ஆராய்ந்தான். இரண்டு மணி நேர காலம் அந்தப் பகுதியில் இருந்து பல தகவல்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு விட்டு அங்கிருந்து போனான்....


க்‌ஷய் அந்த அனாதைச் சிறுவனை அழைத்துக் கொண்டு லாஸாவில் இருந்த ஒரு பழைய புத்த மடாலயத்திற்குச் சென்றான். உள்ளே அவனை அழைத்துச் செல்லும் முன் வாசலிலேயே அவனிடம் சிலவற்றைப் பேச வேண்டி இருந்தது. பேசினான்.

“இனி இந்த மடாலயம் தான் உனக்குப் புகலிடம். அவர்களாக வேறு இடம் ஏற்பாடு செய்யும் வரை நீ இங்கு தான் இருக்க வேண்டி வரும்

அவனுக்கு புத்த மடாலயத்தில் வசிக்கப் போவது பிடிக்கவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. சாப்பிடவும், தூங்கவும் குறைவில்லாத எந்த இடமும் அவனுக்கு சம்மதம் தான் என்றாலும் விழித்திருக்கும் நேரங்களில் வயிறும் நிறைந்திருந்தால் இந்த மடாலயத்தில் இருந்து கொண்டு என்ன தான் செய்வது என்று அவன் யோசித்தான். முன்பு அவன் தங்கி இருந்த அனாதை விடுதியில் நிறைய வேலைகள் தந்து அவனைக் கொடுமைப்படுத்தினார்கள். வேலை செய்வதே கொடுமை தானே? இந்த மடாலயத்திலும் வேலை தருவார்களோ? தேவை இல்லாமல் படிக்கச் சொல்வார்களோ? படிப்பதும் கூட கொடுமை தான். படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நினைவு வைத்துக் கொள்ளச் சொல்லி வேறு கொடுமைப்படுத்துவார்கள். அந்தச் சிறுவனின் எண்ண ஓட்டங்கள் அவன் முகத்தில் அதிருப்தியாய் வெளிப்பட்டன.

அக்‌ஷய் அமைதியாகச் சொன்னான். “உறவென்று யாருமே இல்லாதது கொடுமை அல்ல. யார் உதவியும் இல்லாமல் பிழைக்கும் வழியைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது தான் கொடுமை. இங்கேயே இரு. நிறைய கற்றுக் கொள். இங்கே உன்னைப் போன்ற சிறுவர்கள் பலர் இருக்கிறார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் இங்கிருந்து தப்பித்து ஓட நினைக்காதே. அப்படிச் செய்வது உனக்கு ஆபத்து. புரிகிறதா?

அக்‌ஷய் ஆபத்து என்பதை அழுத்திச் சொன்ன விதம் அவனுக்கு ஆபத்தின் தன்மையைப் புரிய வைத்தது. பயத்துடன் சிறுவன் தலை அசைத்தான். புத்த மடாலயத்திற்குள்ளே இருவரும் நுழைந்தார்கள். அந்தச் சிறுவனைத் தனியாக ஓரிடத்தில் அமர வைத்து விட்டு உள்ளே நுழைந்து மடாலயத் தலைவரிடம் அக்‌ஷய் பேசினான். அக்‌ஷய் பேசுவதையே அந்தச் சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். அக்‌ஷய் சாந்த முகத்துடனேயே பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் லாஸா விமான நிலையத்தில் நொடிப் பொழுதில் இறுகிய அந்தப் பயங்கர முகம் அந்த சிறுவனின் நினைவுக்கு வந்தது. அந்த முகத்தை பின் எப்போதும் அவனிடம் அக்‌ஷய் காட்டவில்லை என்றாலும் தன் வாழ்நாள் உள்ள வரை அவனால் அந்த ஆபத்தான முகத்தை மறக்க முடியாது என்று தோன்றியது. இப்போதும் அதை நினைக்கையில் அந்தச் சிறுவனுக்கு பயத்தில் உடல் வியர்த்தது. இந்த ஆபத்தான பிக்குவுடன் இருப்பதை விட மடாலயத்தில் இருப்பது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றவே அவன் அமைதியடைந்தான்.    

அக்‌ஷய் அந்த சிறுவனிடம் விடை பெற்றுக் கொண்டு சேடாங் நகருக்கு விரைந்தான். ஆசான் சொன்னது போல் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து என்று அவனுக்கும் உள்ளுணர்வு சொல்ல ஆரம்பித்திருந்தது....


ந்திரகாந்த் முகர்ஜி தன்னைப் பேட்டி எடுக்க வரும் டிஸ்கவரி சேனல் நிருபருக்காக பரபரப்புடன் காத்திருந்தார். வரும் நிருபர் என்னவெல்லாம் கேட்பார், என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று யோசனையுடன் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். கடிகாரம் அவருடைய அவசரத்தைப் புரிந்து கொள்ளாமல் மந்தகதியில் நகர்ந்தது. ஒன்பது மணியில் இருந்து பத்து மணியாவதுக்குள் பதினெட்டு முறை வாசல் வந்து எட்டிப் பார்த்தார். வரப் போகிறவன் அவர் கண்ணில் படாவிட்டாலும் உண்மையில் அவர் கல்கத்தா விமான நிலையத்தில் இறங்கிய கணத்திலிருந்து அவரைப் பின் தொடர்ந்திருந்தான். தனியாக வசிக்கும் அவர் வீட்டுக்கு யாராவது வருகிறார்களா,  அவர் அக்கம் பக்கத்தில் யாருடனாவது பேசுகிறாரா என்று ரகசியமாக இப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

டிஸ்கவரி சேனலில் இருந்து பேட்டி எடுக்க வருவது பற்றி சந்திரகாந்த் முகர்ஜி தன் குடும்பத்தினர் உட்பட யாரிடமும் மூச்சு விடவில்லை. பேட்டி முடிந்த பிறகு ஒளிபரப்பு எப்போது ஆகும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டபின் தான் எல்லோரிடமும் சொல்ல வேண்டும். சொன்னால் பலர் ஆச்சரியப்படுவார்கள். சிலர் வயிறெரிவார்கள். நினைக்க நினைக்க அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

மணி 10.03 க்கு அழைப்பு மணி அடித்தது. தன் பரபரப்பைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று எண்ணியவராக சந்திரகாந்த் முகர்ஜி கம்பீரமாக தன்னைப் பாவித்துக் கொண்டு கதவைத் திறந்தார்.

வாசலில் நின்றிருந்தவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கும். ஒல்லியாக இருந்தான். ஆனால் உடல் வாகு உறுதியானதாக இருந்தது. கண்ணாடி அணிந்திருந்தான். மிகுந்த மரியாதையுடன் தன்னை கவுரவ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் கையில் இரண்டு விலையுயர்ந்த வீடியோ காமிராக்கள் இருந்தன. தன்னைப் படமெடுக்கப் போகிற அந்த வீடியோ காமிராக்களை சந்திரகாந்த் முகர்ஜி பெருமையாகப் பார்த்தார். பின் அவனை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தார்.

கவுரவ் அந்த பேட்டி அளிக்க சம்மதித்ததற்கு முதலில் நன்றி தெரிவித்தான். அவருக்கு அது போலியாகத் தெரியவில்லை. டிஸ்கவரி சேனல்காரர்களுக்கு அவருடைய மதிப்பு தெரிந்திருக்கிறதாக எண்ணிக் கொண்டார்.

என்ன சாப்பிடுகிறீர்கள் என்று அவர் கேட்ட போது அவன் எதுவும் வேண்டாம் என்று மறுத்தான். அவரை ஒரு சோபாவில் அமர வைத்து விட்டு வீடியோ காமிராக்கள் இரண்டையும் அவர்கள் பேச்சைப் பதிவு செய்யும் இரண்டு கோணங்களில் செட் செய்து வைத்து விட்டு அவரிடம் கேட்டான். “ஆரம்பிக்கலாமா?

அவர் பரபரப்புடன் தலையசைத்தார்.  அவன் எதிரில் வந்தமர்ந்தான்.

பின் காமிராவைப் பார்த்தபடி அவன் சொன்னான். “வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், அது குறித்து ஆழமாக எழுதுபவர்களும் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறார்கள். மற்ற துறைகளில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை இந்தியா இத்துறையில் அடையவில்லையோ என்று சந்தேகம் கூட உலக அளவில் உண்டு. அப்படி இந்தியாவில் அரிதாக காணப்படும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களில் மிக முக்கியமானவர் சந்திரகாந்த் முகர்ஜி அவர்கள். அவரை நம் நிகழ்ச்சியில் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பிறகு அவரைப் பார்த்து சொன்னான். “வணக்கம் சார்இனி நம் பார்வையாளர்களுக்காக உங்களைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்களேன்...

சந்திரகாந்த் முகர்ஜி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் அவை வெறும் சில வார்த்தைகளாக இருக்கவில்லை. எந்த மனிதனும் சலிக்காமல் பேச முடிவது தன்னைப் பற்றியே அல்லவா? அவரும் சலிக்காமல் நிறைய சொன்னார். தனக்கு வரலாற்றில் இருக்கும் ஆர்வத்தைப் பற்றியும் அது குறித்து ஆராயவும் எழுதவும் தனக்கிருக்கும் தணியாத தாகம் பற்றியும் சொன்னார். இது வரை எழுதிய விஷயங்களையும், அதற்கு இது வரை பலரிடம் கிடைத்த அங்கீகாரத்தையும் சொன்னார். சொல்லிக் கொண்டே போனார்.

கவுரவ் சிறிய இடைவெளி கிடைப்பதற்காக காத்திருந்து அந்த அபூர்வ இடைவெளி கிடைத்த போது இடைமறித்து தங்களுக்குத் தற்போது முக்கியமாக அறிய வேண்டியிருந்ததைக் கேட்டான். “தங்களது சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. தற்போது என்ன ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா?

சந்திரகாந்த் முகர்ஜி கூடுதல் பெருமிதத்துடன் சொல்ல ஆரம்பித்தார். “கௌதம புத்தரின் மறு அவதாரமான மைத்ரேயர் பற்றி ஆராய்ச்சி செய்து முடித்திருக்கிறேன். உலகில் தர்மம் அழிந்து, ஞானம் மங்கி மனிதகுலம் கஷ்டப்படும் காலத்தில் மைத்ரேயர் என்ற அவதாரம் நிகழும் என்று புத்தர் சொல்லி இருக்கிறார். மைத்ரேயர் பற்றி புத்தர் சொல்லி இருப்பது ஒரே ஒரு முறை தான். மகதநாட்டில் பாசா என்ற மலையருகில் ஒரு தியான முகாமில் தங்கி இருந்த போது தன் சீடன் சாரி புத்ரனிடம் அவர் சொல்லி இருப்பது சகாவட்டி சூத்ரத்தில் (Cakavatti Sutta) பதிவாகி இருக்கிறது. அந்த அவதாரம் நம்முடைய காலத்தில் திபெத்தில் நிகழும் என்று பத்மசாம்பவா என்கிற இந்திய யோகி சொல்லி இருப்பதும் என் ஆர்வத்தைத் தூண்டியது... இந்த இடத்தில் நான் பத்மசாம்பவா பற்றி கூடுதல் தகவல்களைச் சொல்வது பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்...

பத்மசாம்பவா பற்றி கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வதில் கவுரவுக்கு சிறிதும் விருப்பம் இருக்கவில்லை. என்னேரமும் எதிர்பாராத யாராவது வந்து விடும் அபாயம் இருக்கிறது. லீ க்யாங் அவனுக்குச் சொல்லி இருந்த இரண்டாம் கட்டளையை அவன் நிறைவேற்ற வேண்டி வந்தால் அவன் உடனடியாக அங்கிருந்து கிளம்ப முடியாது. அதனால் அவனுக்குத் தேவை இல்லாத பேச்சைக் கேட்டு காலத்தை வீணாக்க அவன் விரும்பவில்லை. ஆனால் சந்திரகாந்த் முகர்ஜியைத் தடுக்க அவனுக்கு வெளிப்படையாகச் சொல்லும்படியான தகுந்த காரணம் கிடைக்கவில்லை. அதனால் சந்திரகாந்த் முகர்ஜி தொடர்ந்தார்.

பத்மசாம்பவா வட மேற்கு இந்தியாவில், அதாவது தற்போதைய பாகிஸ்தானில், பிறந்த சிறந்த யோகி. அவரையே இரண்டாம் புத்தராகவும் பலர் சொல்கிறார்கள்.  திபெத்திய மன்னர் ஒருவர் திபெத்தில் சம்யே என்ற இடத்தில் முதல் புத்தமடாலயம் கட்ட ஆரம்பித்த போது பல தீய சக்திகளின் ஆதிக்கத்தால் அது முடியாமல் பாதியிலேயே நின்று போனது. அத்தோடு திபெத்தில் சின்ன அம்மை பரவ ஆரம்பித்தது. நாட்டை பீடித்திருக்கும் தீய சக்திகளை விரட்டவும், ஆட்கொல்லியான சின்ன அம்மையைப் போக்கவும் வழியறியாமல் தவித்த மன்னரிடம் சிலர் பத்மசாம்பவா பற்றி சொன்னார்கள். அந்த யோகியால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்றும், அவர் உதவியை நாடும் படியும் அறிவுரை கூறினார்கள். அப்படியே அவர் செய்தார். பத்மசாம்பவாவும் திபெத் சென்றார். தன் யோக சக்தியால் தீய சக்திகளை விரட்டி சின்ன அம்மையையும் தடுத்து நிறுத்தினார். சம்யேயில் திபெத்தின் முதல் புத்த மடாலயம் உருவாகியது. மன்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பத்மசாம்பவாவை குருவாக ஏற்றுக் கொண்டார். அப்படி பத்மசாம்பவா திபெத்தியர்களின் முதல் குருவானார். குரு ரின்போச்சே என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இப்போதும் பத்மசாம்பவாவை திபெத்தியர்கள் முதல் குருவாக அந்தப் பெயரிலேயே அழைக்கிறார்கள்....

கவுரவ் கொட்டாவியைக் கஷ்டப்பட்டு அடக்கினான். பத்மசாம்பவா எப்படி வஜ்ராயனா வகை புத்தமதத்தை திபெத்திலும் பூடானிலும் பரப்பினார், எப்படி பல புத்தமத புனிதச்சுவடிகளை மொழிபெயர்த்தார் என்றெல்லாம் விளக்கிய முகர்ஜியை ஒரு கட்டத்தில் கவுரவ் தாங்க முடியாமல் இடைமறித்தான். 

“இந்த மைத்ரேயர் பற்றி பத்மசாம்பவா சொல்லி இருந்தது எப்போது? அவர் என்ன சொன்னார்?

சந்திரகாந்த் முகர்ஜி சொன்னார். “திபெத்தில் அவர் இருந்த காலத்தில் தான் அதை ஒரு ஓலைச்சுவடியில் எழுதி இருக்கிறார். ஆனால் பத்மசாம்பவாவிடம் ஒரு விசேஷ குணம் இருந்தது. எதை எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள முடியாதோ அதற்குத் தக்க காலம் வரும் வரை அதை மறைத்து வைப்பது தான் நல்லது என்று அவர் நினைத்தார். அது போன்ற ஓலைச்சுவடிகளை திபெத்தில் இருந்த ரகசியக் குகைகளில் ரகசியமாய் ஒளித்து வைத்தார். மந்திர தந்திரங்களில் தேர்ந்த அவர் அந்தச் சுவடிகள் தகுந்த காலம் வரும் வரை யார் கண்ணுக்கும் படாதபடி மந்திரங்கள் ஜபித்து மறைத்து விட்டிருந்தார். மைத்ரேயர் பற்றிய ஓலைச்சுவடியும் அப்படியே மறைந்து இருந்தது...  

மைத்ரேயர் பற்றி ஓலைச்சுவடிகள் இரு பாகங்களாக எப்படிக் கிடைத்தன, அவற்றில் சொல்லி இருந்ததென்ன என்ற அவர்கள் முன்பே அறிந்திருந்த விவரங்களை சந்திரகாந்த் முகர்ஜி சொன்னதை முதல் தடவையாகக் கேட்டுத் தெரிந்து கொள்வது போல் கவுரவ் கஷ்டபட்டு பாவனை காட்டினான்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் சொல்லி முடித்த முகர்ஜி அவர்கள் இது வரை அறிந்திராத ஒரு தகவலைச் சொன்னார்.

மைத்ரேயர் சம்பந்தமாக இரண்டாவது முறை ஓலைச்சுவடிகள் கிடைத்தது லாமாக்கள் கையில். அந்த ஓலைச்சுவடிகளில் மைத்ரேயர் எங்கு பிறப்பார், எப்படி இருப்பார், அவருடைய தனி லட்சணங்கள் என்ன என்கிற விவரங்கள் எல்லாம் இருந்தன. மைத்ரேயர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருடைய தனிப்பட்ட விவரங்கள் இருக்கும் ஓலைச்சுவடிப் பக்கம் ஒன்றை லாமாக்கள் பிரித்து எடுத்து ஒளித்து விட்டார்கள். பிறகு ஆவணக்காப்பகத்திற்குப் போய்ச் சேர்ந்த அந்த ஓலைச்சுவடியில் ஒரு பக்கம் இல்லாமல் இருப்பது இது வரை ஆவணக்காப்பகத்திற்குத் தெரியாது...

திகைத்துப் போன கவுரவ் முழுக்கவனத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். லீ க்யாங் சொன்ன இரண்டாம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டி வருமோ?

வரப்போகிற ஆபத்தை உணராமல் சந்திரகாந்த் முகர்ஜி அவன் திகைப்பை தற்பெருமையுடன் ரசித்தார்.  

(தொடரும்)


என்.கணேசன்         

Monday, January 19, 2015

கண்களில்லாமல் எக்ஸ்ரே பார்வை!


8.மகாசக்தி மனிதர்கள்

பூர்வ மகாசக்தி வேறொன்றைப் பெற்றிருந்த இன்னொருவர் குடா பக்ஸ் (Kuda Bux). 1905 ஆம் ஆண்டு காஷ்மீரத்தில் பிறந்த இவர் 1935ல் இங்கிலாந்தில் குடியேறி, பிற்காலத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்.  இவர் கண்களை மூடித் துணியால் எத்தனை இறுக்கமாகக் கட்டி விட்டாலும் கண்களின் துணையில்லாமலேயே பொருள்களைக் காணும் திறத்தையும், எழுதப்படிக்கும் திறத்தையும் பெற்று உலக நாடுகளில் மிகப் பிரபலமானார். அமெரிக்காவும் இவர் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியது. இவருடைய அபூர்வ சக்தியால் கவரப்பட்டு இவரை மையமாக வைத்து ‘குடா பக்ஸ்-இந்திய யோகி” (Kuda Bux, Hindu Mystic) என்ற திரைப்படத்தையும் ஹாலிவுட்டில் எடுத்தார்கள் என்றால் இவர் அடைந்த புகழைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


இவரைப் பற்றி புத்தகங்களும் வெளியாகி உள்ளன, உலக அளவில் பத்திரிக்கைகளிலும் எழுதி இருக்கிறார்கள். அபூர்வ சக்திகளில் ஆர்வம் அதிகம் கொண்ட வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ (Vincent J. Daczynski) என்ற எழுத்தாளர் இவர் சக்திகள் கண்ட தன் நேரடி அனுபவத்தைக் கூறி இருப்பதை முதலில் பார்ப்போம்.

வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ இவரைச் சந்தித்தது 1958 ஆம் ஆண்டு அமெரிக்காவில், மன்ஹட்டன் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே மேஜிக் தந்திரங்களுக்கும் உண்மையான அபூர்வ சக்திக்கும் இடையே பெரிய வித்தியாசம் உண்டு என்பதை குடா பக்ஸ் விளக்கினார். மேஜிக் தந்திரங்கள் பார்வையாளர்களுக்குத் தெரியாத ரகசிய முன்னேற்பாடுகளாலும், மேஜிக் நடத்திக் காட்டுபவரின் அதிவேகமான சாமர்த்தியச் செயல்களாலும் தான் திறமையாக நடத்திக் காட்டப்படுகின்றன என்றும் அபூர்வ சக்திகள் அப்படியல்ல என்றும் குடா பக்ஸ் விவரித்தார். உதாரணத்திற்கு சீட்டுக்கட்டு வித்தைகள் சில செய்து காட்டினார்.

ஒரு சீட்டுக்கட்டை பார்வையாளர்களிடம் தந்து அவர்களிடம் சில சீட்டுகளை எடுத்துப் பார்க்கச் சொன்னார். பின் அந்த சீட்டுகளை அதிலேயே வைத்து விடச் சொன்னார். அந்தச் சீட்டுக் கட்டை அவர்களிடம் இருந்து வாங்கி அதை நன்றாகக் குலுக்கி கடைசியில் பார்வையாளர்கள் எடுத்த சீட்டுகளைப் பிரித்தெடுத்துக் காட்டினார். பார்வையாளர்கள் வியந்த போது இது அபூர்வ சக்தி அல்ல, கைஜாலமே என்றும் விளக்கி விட்டு உண்மையான அபூர்வ சக்தியை அவர்களுக்குக் காட்டப் போவதாகச் சொல்லி விட்டு நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியை ஆரம்பித்தார்.

பேஸ் பால் அளவு இரண்டு மாவு உருண்டைகளைப் பிசைந்து தயாரித்த அவர் பார்வையாளர்களில் இருவரை தன்னருகே வரச் சொன்னார். இரு இளைஞர்கள் எழுந்து சென்றார்கள். அந்த இரு மாவு உருண்டைகளையும் ஒவ்வொரு அங்குல பருமனில், ஆறங்குல நீளத்தில் தட்டையாகத் தட்டி அவருடைய கண்கள் மேல் வைத்து சிறிய இடைவெளி கூட இல்லாதபடி ஓரங்களை ஒட்டி விடச் சொன்னார். சற்று தயங்கி விட்டு அவர்களும் அவர்  சொன்னபடியே படியே செய்தார்கள். 

வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ மிக அருகில் அமர்ந்து கொண்டு கூர்மையாக இந்த நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். குடா பக்ஸின் கண்களைச் சுற்றி போடப்பட்டிருந்த மாவுக்கட்டு அவர் கண்களைத் திறக்க வழியில்லாமல் செய்து விட்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது.

குடா பக்ஸ் அந்த இரு இளைஞர்களிடம் அங்கிருந்த இரண்டு பருத்தித் துணி மடிப்புகளை எடுத்து அந்த மாவுக்கட்டின் மீது வைக்கச் சொன்னார். அந்த பருத்தித் துணி மடிப்புகள் ஆறு அங்குல நீளம், நான்கு அங்குல அகலம்,  ஒரு அங்குல பருமனில் இருந்தன. அவர் சொன்னபடியே அந்த இளைஞர்கள் அவர்கள் அந்தத் துணிமடிப்புகளையும் மாவுக்கட்டின் மீது வைத்தார்கள்.

பின் அவர் கட்டளைப்படி பெரிய டேப் எடுத்து அந்த துணிமடிப்புகளையும் சேர்த்துக் கட்டினார்கள். மறுபடி டேப்பால் குறுக்காகவும் கட்டி எந்த விதத்திலும் அந்தக்கட்டு விலகி விடாதபடியும், சிறிய இடைவெளி கூட இருந்து விடாதபடியும் பார்த்துக் கொண்டார்கள். ஒருவேளை அந்த மாவுக்கட்டில் இடைவெளி இருந்திருந்தால் கூட அதற்கு மேல் இருந்த துணிமடிப்புகள், அதற்கு மேல் இருந்த டேப் எல்லாம் தாண்டி பார்க்க வழியே இல்லை. ஆனாலும் அதுவும் போதாதென்று மூன்று அங்குலம் பத்து அடி நீளம் உள்ள கருந்துணிகளைக் கொண்டு கண்களைச் சுற்றித் தலையின் பின் பக்கம் கட்டிவிடவும் குடா பக்ஸ் சொன்னார். அந்த இளைஞர்கள் அந்த கருப்பு துணிகளை இறுக்கமாக அவர் சொன்னபடியே கட்டி முடிச்சு போட்டார்கள்.

இப்போது அவர் முகத்தில் மூக்கின் துவாரங்கள் தவிர மேற்பகுதி முழுவதும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது. இப்போதும் யாருக்காவது சந்தேகம் வந்துவிடக் கூடும் என்றவர் ஒரு கருப்புப் பையையும் தலைகீழாக அவர் தலை வழியே போட்டு முகவாய்க்கட்டையில் முடிச்சு போடச் சொன்னார்.   மூச்சு விடுவதே அவருக்கு கஷ்டமாகத் தானிருந்திருக்கும். இந்த நிலையில் எந்த விதத்திலும் அவர் கண்களால் பார்க்க வழியே இல்லை. 

அங்குள்ள மரப்பெட்டியில் பல நிறங்களில் நிறைய பலூன்கள் இருந்தன. கூட்டத்தில் இருப்பவர்களில் யாராவது வந்து பலூன்களை எடுத்தால் எடுக்கும் பலூன்களின் நிறத்தை சரியாகச் சொல்வேன்என்று குடா பக்ஸ் சொன்னார்.

மஞ்சள் நிற உடைகள் அணிந்திருந்த ஒரு இளம் பெண் தன் கைகளை உயர்த்தினாள். குடா பக்ஸ் மிகச்சரியாக அவளிருக்கும் பக்கம் கையை நீட்டி மேடைக்கு வரச் சொன்னார்.  அந்தப் பெண் திகைப்புடன் முன்வர “உனக்கு  மஞ்சள் நிற ஆடை நன்றாகப் பொருந்துகிறதுஎன்று பாராட்டினார். அந்தப் பெண்ணின் வியப்பு அதிகமாகியது. பின் அவள் சில பலூன்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டினாள். அந்தப் பலூன்களின் நிறங்களை குடா பக்ஸ் பிழையில்லாமல் சொன்னார்.

அடுத்ததாக ஒரு ஊசியையும் நூலையும் எடுத்து சபைக்குக் காட்டி விட்டு அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் அந்த ஊசியில் நூலைக் கோர்த்துக் காட்டினார்.

அடுத்ததாக அவர் சபையில் இருப்பவர்களில் யாரிடமாவது புத்தகம் இருக்கிறதா என்று கேட்டார். ஒரு பெண் தன்னிடம் இருப்பதாகச் சொன்னாள்.

“பொதுவாக எனக்கு கண்களை உபயோகித்துப் படிக்க கண்ணாடி தேவை.என்று தன் சட்டைப் பையில் வைத்திருந்த கண்ணாடியைக் காண்பித்த குடா பக்ஸ் அந்தப் பெண் அருகே வந்து சொன்னார். “ஆனால் நீ இந்தப் புத்தகத்தைப் பிரித்து ஏதாவது பக்கத்தைக் காட்டு. நான் கண்ணாடி இல்லாமலேயே அதைப் படித்துக் காட்டுகிறேன்

அந்தப் பெண் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்து ஒரு பக்கத்தைக் காட்ட குடா பக்ஸ் அந்தப் பெண் காட்டிய பகுதியை சிறிதும் சிரமம் இல்லாமல் படித்துக் காட்டினார். எல்லோரும் சூழ்ந்து நின்று கொண்டு அவர் படித்ததை சரி பார்த்தார்கள். சபையில் இருந்த அனைவருக்கும் அப்படி புத்தகத்தைப் பிரித்துக் காட்டும் வாய்ப்பு தரப்பட்டது. அவர் அவர்கள் ஒவ்வொருவர் தேர்ந்தெடுத்துக் காட்டிய பகுதிகளையும் அனாயாசமாகப் படித்துக் காட்டினார்.

அனைவரும் அவர் படித்ததை பெரு வியப்புடன் பார்த்தார்கள். இது எப்படி சாத்தியம். அந்தப் புத்தகம் தந்த பெண் அவர் முன்பே ஏற்பாடு செய்த பெண்ணாய் இருந்திருந்தால் கூட அந்தப் புத்தகத்தை அவர் முழுவதும் மனப்பாடம் செய்து வைத்திருக்க முடியுமா என்ன? என்ற எண்ணம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ மனதில் ஓடியது.

இதற்கெல்லாம் உச்சாணிக் கொம்பாய் இன்னொரு சாகசத்தை அந்த சபையில் குடா பக்ஸ் செய்து காட்டினார். அது என்ன என்று பார்ப்போமா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 31-10-2014


Thursday, January 15, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 29


மைத்ரேயனின் தாய் தன் மகனின் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டாள். அவன் துணிமணிகளை அவள் எடுத்து வைக்கும் போது அவள் கண்களில் நீர் மல்க ஆரம்பித்தது. மொத்தத்தில் அவனுக்கு மூன்றே ஜதை ஆடைகள் தான் இருந்தன. அவற்றிலும் ஒன்று நைந்து போக ஆரம்பித்திருந்தது. அவன் ஒரு முறை கூட தனக்கு புதிய ஆடைகள் வேண்டும் என்று கேட்டதில்லை. கேட்டிருந்தால் அண்ணன்மார்கள் ஒன்றிரண்டாவது கூடுதலாக வாங்கிக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றியது.  யோசித்துப் பார்த்தால் எதையுமே வேண்டும் என்று அவனாகக் கேட்டதில்லை. அவர்களாகக் கொடுத்ததை மட்டுமே அவன் உபயோகித்திருக்கிறான்.....

தம்பியின் துணிமணிகளை எடுத்து வைக்கையில் தன் தாயின் கண்களில்  இருந்து வழிந்த நீரைக் கவனித்த இரண்டாவது மகன் சொன்னான். “நீ அந்த பிக்கு சொன்னதை அப்படியே நம்பி தம்பியை அனுப்புவது சரி என்று தோன்றவில்லை அம்மா. அவன் மைத்ரேயனாக இருந்தால் அவன் உயிருக்கு ஆபத்து ஏன் வர வேண்டும்? அதுவும் இத்தனை நாளாக இல்லாத ஆபத்து இப்போது ஏன் வர வேண்டும்?

அது தானே?மூத்த மகனும் சொன்னான்.

ஆனால் அவள் அவர்கள் கருத்துக்கு செவி சாய்க்கவில்லை. மௌன லாமா சொன்னது பொய்க்காது. அதை அலட்சியம் செய்வது நல்லதல்ல

மூத்த மகன் ஏதோ கிண்டலாக மறுத்துச் சொல்ல முற்பட்டான். ஆனால் அவள் அவனை மேலும் பேச அனுமதிக்காமல் சைகையாலேயே நிறுத்தினாள். “என் குழந்தை உயிரோடு நான் விளையாட விரும்பவில்லை. அவன் எங்கேயாவது நன்றாக இருந்தால் அது போதும் எனக்கு

அவள் கண்ணீரும், வார்த்தைகளும் மூத்த மகனின் வாயை அடைத்தன. ஏதோ சொல்ல நினைத்த இரண்டாவது மகனும் மௌனமானான். அங்கு கனத்த மௌனம் நிலவ ஆரம்பித்தது. 

சிறிது நேரத்தில் மைத்ரேயன் வந்தான். பள்ளிக்கூடப் பையை சுவரோரமாக வைத்து விட்டுத் திரும்பிய அந்தப் பத்து வயதுச் சிறுவனை மூன்று பேரும் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார்கள். மைத்ரேயனாக இவன் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று மனதில் மதிப்பீடு செய்தார்கள். சாதாரண உயரம், மாநிறம், ஒல்லியான தேகம், சிந்தனை தேக்கிய பார்வை... தோற்றத்தைப் பொருத்த வரை அந்தப் பார்வை ஒன்று தான் அவனிடம் வித்தியாசமாக இருந்தது. அவன் வயதுச் சிறுவர்களின் பார்வை ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் அலை பாயும். ஆனால் அவன் பார்வை அதிகமாக அலைபாய்ந்ததில்லை. சில நேரங்களில் வெறித்த பார்வை போலவே தோன்றினாலும் அது கவனமில்லா வெற்றுப் பார்வை அல்ல.....

அவனிடம் மூத்த அண்ணன் கேட்டான். “நீ என்ன மைத்ரேயனா?    

“மைத்ரேயனா? யாரது?

அவனது மூத்த அண்ணனுக்கு சிரிப்பு வெடித்தது. அவன் வயிறு குலுங்க சிரித்தான். மைத்ரேயன் என்ற பெயர் யாரைக் குறிக்கிறது என்று கூட அறியாதவனைப் போய் மைத்ரேயன் என்று சொல்கிறார்களே என்று எண்ணி மனதாரச் சிரித்தான். இரண்டாம் அண்ணன் புன்னகைத்தான். தாயோ தன் கடைசி மகனையே கூர்ந்து பார்த்தாள். மைத்ரேயன் மூத்த அண்ணன் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டான். “நீ ஏன் சிரிக்கிறாய்?

தாய் மூத்த மகன் மீது கோபத்தோடு சொன்னாள். “அவன் இன்று நன்றாகச் சிரிப்பது என்று முடிவெடுத்திருக்கிறான். அதனால் தான் சிரிக்கிறான்.

மைத்ரேயன் மூத்த அண்ணனைப் பார்த்து அமைதியாகச் சொன்னான். “கோபப்படுவதையும், வருத்தப்படுவதையும் விட சிரிப்பது நல்லது தான். அதனால் நீ இப்படியே இரு அண்ணா

மூத்த அண்ணனின் சிரிப்பு நின்று போனது. அதற்குக் காரணம் இரண்டு. முதலாவது- கோபமும், வருத்தமும் தான் அவனிடம் எப்போதுமே ஊற்றெடுக்கும் உணர்ச்சிகள். யார் மீதாவது கோபப்படுவான். அல்லது தங்கள் நிலைமையை எண்ணி வருத்தப்படுவான். இன்று சிரித்தது போல் அவன் சிரித்து அவர்கள் யாரும் பார்த்தது கிடையாது. தம்பி சொன்னது அதை நினைவுறுத்தியது போல் இருந்தது  இரண்டாவது- அவன் தம்பி தொடர்ந்தாற்போல் அவனிடம் நான்கு வார்த்தைகளுக்கு மேலாகப் பேசியதும் இன்று தான். ஒரு அபிப்பிராயத்தை அவன் தானாகத் தெரிவித்ததும் இன்று தான்....

மைத்ரேயனின் தாய்க்கு தன் கடைசி மகனிடம் என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்று மலைப்பாக இருந்தது. அவளுக்கே இப்போதும் திகைப்பாக இருக்கும் விஷயங்களை எப்படி பத்து வயது பாலகனிடம் சொல்லிப் புரிய வைப்பாள். அவர்களைப் பிரிந்து போக அவன் சம்மதிப்பானா? சம்மதிக்கா விட்டால் என்ன செய்வது? என்னேரமும் அவனை அழைத்துப் போக அந்த இந்தியன் வரலாம் என்பதால் அவளால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. யோசித்து விட்டு, அவன் திபெத்திலேயே இருந்தால் அவன்  உயிருக்கு ஆபத்து என்று ஒரு பெரியவர் சொல்லி இருப்பதால் அவன் நாட்டை விட்டுப் போவது நல்லது என்றும், அவனை அழைத்துப் போக ஒரு இந்தியன் என்னேரமும் வரலாம் என்றும் சொல்லி வைத்தாள். அவன் எந்தக் கேள்வியும் கேட்காமல் தலையசைத்தான். வெகுளித்தனமாகத் தலையசைக்கும் தன் குழந்தையைப் பார்க்க அவளுக்குத் துக்கம் பீறிட்டது. என்ன புரிந்ததோ? இங்கிருந்து போய் எப்படி இருக்குமோ?   

அவள் மகனைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள். மைத்ரேயன் அவளிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்கவில்லை. அவன் மிக அமைதியாக இருந்ததை அவன் இரண்டு அண்ணன்களும் கவனித்தார்கள். ஒரு சாதாரண பத்து வயதுப் பையன் நிலைமையை எதிர்கொள்ளும் விதமாக அது இருக்கவில்லை. தனியாக எவனோ ஒருவனுடன் போக நேரும் எந்தச் சிறுவனும் துக்கமும் இல்லாமல், பயமும் இல்லாமல் இவ்வளவு அமைதியாக இருக்க முடியாது....

அவள் அழுது சிறிது ஓய்ந்த போது மைத்ரேயன் மென்மையாகச் சொன்னான். “கவலைப்படாதே அம்மா...

அந்தக் கணம் அவள் குழந்தையாகவும், அவன் பெரியவனாகவும் அவர்களுக்குத் தோன்றியது. அவளுக்கு அவனுடைய அன்பான இரண்டு வார்த்தைகள் ஆறுதல் அளித்த அதே சமயத்தில் கூடுதலாக அழுகை வரவும் வைத்தது. அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போக ஆரம்பித்தான்.... முகத்தில் சாந்தம் நிலவ ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவளும் அந்த சாந்தத்தை உணர ஆரம்பித்தாள்....

அவன் மைத்ரேயனோ இல்லையோ அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் சாதாரணமானவன் அல்ல என்பது மட்டும் அவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

அன்றிரவு மைத்ரேயனைத் தவிர மற்ற மூவருக்கும் உறக்கம் வரவில்லை....


லாஸா விமானநிலையத்தை அவர்கள் விமானம் இன்னும் சில நிமிடங்களில் அடைந்து விடும் என்று விமானப் பணிப்பெண் சொன்னாள். அக்‌ஷய் தன் அருகில் இருந்த அந்த அனாதைச் சிறுவனைப் பார்த்தான். அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். இந்திய உளவுத்துறை ஆள் சொன்னது நூறு சதவீதம் சரி என்று தோன்றியது. சாப்பிடும் நேரம் தவிர உறங்குவதிலேயே அந்தச் சிறுவனின் முனைப்பு இருந்தது. அக்‌ஷய் அவனை மெள்ள எழுப்பினான்.

அந்தச் சிறுவன் என்ன என்பது போல சற்று எரிச்சலுடன் பார்த்தான். கூட இருந்த புத்தபிக்கு மீது அந்த சிறுவனுக்கு மரியாதை குறைய ஆரம்பித்திருந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்து கண்டிப்பையே பார்த்து வளர்ந்த அவனுக்கு அந்தக் கண்டிப்பு தான் புரிந்த பாஷையாக இருந்தது. கண்டிப்பான மனிதர்களிடம் அடங்கிப் போக வேண்டும் என்பதும், மற்ற மனிதர்களை அதிகம் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பதும் அவன் படித்துக் கொண்ட பாடமாக இருந்தது. தன்னருகே கருணையே உருவாக அமர்ந்திருந்த புத்தபிக்குவிற்கு அதிக மரியாதை தர வேண்டியதில்லை என்று நினைக்க ஆரம்பித்திருந்தான்.

அக்‌ஷய் சொன்னான். “லாஸா வரப்போகிறது. தயாராக இரு மகனே!

அவன் வேண்டா வெறுப்பாகத் தலையசைத்தான். அடுத்த பத்தாவது நிமிடம் லாஸாவில் இறங்கும் வரை அவன் கண்களைத் திறந்து வைத்திருக்க படாதபாடு பட்டான்.

லாஸா விமானநிலையத்தில் கெடுபிடி அதிகமாக இருந்தது. தன்னை விட்டு முன்னால் போக யத்தனித்த சிறுவன் கையைப் பிடித்து நிறுத்திய அக்‌ஷய் விமான நிலைய நிலவரத்தை நிதானமாக ஆராய்ந்தான். பொதுவான சோதனைகள் எல்லாருக்கும் இருந்தாலும் தனியாக வந்தவர்களுக்கு கூடுதலாக சோதனைகளும், கேள்விகளும் இருந்ததை அவன் கவனித்தான். அவன் முன்பே யூகித்தது போல ஒரு தனிமனிதன் திபெத்தில் நுழைவதையே அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என்பது தெளிவாகவே தெரிந்தது. கண்காணிப்பு காமிராக்கள் அதிகமாக இருந்தன. போலீஸாரும், ஒற்றர்களும் கூட அதிகமிருந்தார்கள்.

அந்தச் சிறுவனுக்கு புத்தபிக்கு நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது சிறிதும் பிடிக்கவில்லை. வேகமாக நடக்கக் கூடத் தெரியாத அந்த பிக்குவுடன் தானும் நிற்கப் பிடிக்காமல் அவர் கையை விடுவித்துக் கொண்டு முன்னே செல்லப் பார்த்தான். மென்மையாகப் பிடித்துக் கொண்டிருந்த அக்‌ஷயின் பிடி இரும்புப்பிடியாக மாறியது. திகைப்புடன் திரும்பி அந்தச் சிறுவன் புத்தபிக்குவைப் பார்த்தான். அக்‌ஷயின் பார்வையில் இப்போது கனிவோ அன்போ தெரியாமல் அவனுக்கு அபாயம் தெரிந்தது. உணர்ச்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய பனிப்பார்வை.... இது அவன் இது வரை அறிந்த புத்தபிக்கு இல்லை. வேறு ஆள். ஆபத்தானவன்.....  சிறுவன் முகத்தில் பீதி தெரிந்தது. அப்படியே நின்றான்.

அக்‌ஷயின் முகம் கண நேரத்தில் பழையபடி கருணைக்கு மாறியது. அந்தச் சிறுவனின் கைகளைப் பிடித்தபடி மிக நிதானமாக பரிசோதித்துக் கொண்டிருந்த அதிகாரிகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கூடவே நடந்து வந்த அந்தச் சிறுவன் அந்த கணநேர மாற்றத்தைத் திகைப்புடன் கவனித்தான்.

அக்‌ஷய் மிகுந்த அன்புடன் அந்தச் சிறுவனிடம் கேட்டான். “என்னப்பா?
ஒன்றுமில்லை என்று தலையசைத்த அந்தச் சிறுவனுக்குப் பயத்தில் வியர்த்தது. இந்தப்பிக்குவைப் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது. அடக்கமாக கூட வந்தான்.

அவர்கள் இருவருடைய பாஸ்போர்ட்கள் மற்றும் விஸாக்களைப் பரிசோதித்த அதிகாரி சிறுவனைக் கண்டுகொள்ளவில்லை. அக்‌ஷயைக் கூர்மையாகப் பார்த்தார். அக்‌ஷய் அமைதியாக அவரைப் பார்த்தான். ஒருசில பயணிகள் காட்டிய அவசரத்தையோ, பொறுமையின்மையையோ அவன் காட்டவில்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிற பாவனையை முகத்தில் காட்டினான். அதனால் அவர் விரைவாகவே அவர்களை அனுப்பி விட்டார். அவர்கள் உடைமைகள் அதிகம் இல்லாததால் அந்த பரிசோதனைகளும் சீக்கிரமே முடிந்து விரைவாகவே விமான நிலையத்தில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். திபெத்தின் தலைநகரில் அமானுஷ்யன் பிரவேசமாகி விட்டான்.

ரகதம் மருதமலை முருகன் சன்னிதியில் மனமுருக அக்‌ஷய்க்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கூட்டம் அதிகம் இல்லாததால் அவளால் நிறைய நேரம் நின்று பிரார்த்திக்க முடிந்தது. சொந்த மகன் கூட உதாசீனப்படுத்தின அவளை ஒரு மனித ஜென்மமாக மதித்து நேசித்த முதல் மனிதன் அவன். அவளுடைய மருமகளுக்கும் பேரனுக்கும் அன்பையும் வாழ்வையும் தந்து தனதாக்கிக் கொண்ட மிக நல்ல மனிதன் அவன். அவன் எந்த ஆபத்துமில்லாமல் நல்லபடியாகத் திரும்பி வர வேண்டும் என வேண்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

மலையடிவாரத்தில் பேருந்தில் ஏறியவள் பின் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். சில நிறுத்தங்கள் கழிந்து ஒரு நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய ஒருவன் அவளைப் பார்த்து திகைத்தான். அவள் பழைய நினைவுகளில் மூழ்காமல் இருந்திருந்தால் அவன் பார்த்ததையும் திகைத்ததையும் கவனித்திருக்க முடியும்.   

பேருந்தில் அவள் பார்க்காத இடத்தில் நின்று கொண்ட அவன் அதற்குப் பின்  அவள் மேல் வைத்த கண்களை எடுக்கவில்லை.

அவள் பேருந்தில் இருந்து இறங்கிய போது அவனும் இறங்கிக் கொண்டான். அவள் வீடு நோக்கி நடந்த போது அவனும் ரகசியமாகப் பின் தொடர ஆரம்பித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்  

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

என்.கணேசன்