Thursday, January 22, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 30


ரகதம் தன்னை ஒருவன் பின் தொடர்கிறான் என்பதைச் சிறிதும் உணரவில்லை. மனமெல்லாம் அக்‌ஷய் மீதே இருந்ததாலும், இப்போதும் அவள் மனதில் அவனுக்காக கந்தர் சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு இருந்ததாலும் அவளுக்கு மிக அருகில் நடந்தவர்கள் குறித்த பிரக்ஞை கூட அவளுக்கு இருக்கவில்லை. அதனால் பத்தடி தூர இடைவெளியில் வந்தவனை அறிந்து கொள்ளாமலேயே அவள் தன் வீட்டை அடைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்து கதவு சாத்தப்பட்ட பின்னரும், அவளைப் பின் தொடர்ந்தவன் அந்தப் பகுதியிலேயே இருந்தான். அந்த வீட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்தான். பக்கத்தில் இருந்த வீடுகளையும் எதிரில் இருந்த வீடுகளையும் ஆராய்ந்தான். இரண்டு மணி நேர காலம் அந்தப் பகுதியில் இருந்து பல தகவல்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு விட்டு அங்கிருந்து போனான்....


க்‌ஷய் அந்த அனாதைச் சிறுவனை அழைத்துக் கொண்டு லாஸாவில் இருந்த ஒரு பழைய புத்த மடாலயத்திற்குச் சென்றான். உள்ளே அவனை அழைத்துச் செல்லும் முன் வாசலிலேயே அவனிடம் சிலவற்றைப் பேச வேண்டி இருந்தது. பேசினான்.

“இனி இந்த மடாலயம் தான் உனக்குப் புகலிடம். அவர்களாக வேறு இடம் ஏற்பாடு செய்யும் வரை நீ இங்கு தான் இருக்க வேண்டி வரும்

அவனுக்கு புத்த மடாலயத்தில் வசிக்கப் போவது பிடிக்கவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. சாப்பிடவும், தூங்கவும் குறைவில்லாத எந்த இடமும் அவனுக்கு சம்மதம் தான் என்றாலும் விழித்திருக்கும் நேரங்களில் வயிறும் நிறைந்திருந்தால் இந்த மடாலயத்தில் இருந்து கொண்டு என்ன தான் செய்வது என்று அவன் யோசித்தான். முன்பு அவன் தங்கி இருந்த அனாதை விடுதியில் நிறைய வேலைகள் தந்து அவனைக் கொடுமைப்படுத்தினார்கள். வேலை செய்வதே கொடுமை தானே? இந்த மடாலயத்திலும் வேலை தருவார்களோ? தேவை இல்லாமல் படிக்கச் சொல்வார்களோ? படிப்பதும் கூட கொடுமை தான். படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நினைவு வைத்துக் கொள்ளச் சொல்லி வேறு கொடுமைப்படுத்துவார்கள். அந்தச் சிறுவனின் எண்ண ஓட்டங்கள் அவன் முகத்தில் அதிருப்தியாய் வெளிப்பட்டன.

அக்‌ஷய் அமைதியாகச் சொன்னான். “உறவென்று யாருமே இல்லாதது கொடுமை அல்ல. யார் உதவியும் இல்லாமல் பிழைக்கும் வழியைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது தான் கொடுமை. இங்கேயே இரு. நிறைய கற்றுக் கொள். இங்கே உன்னைப் போன்ற சிறுவர்கள் பலர் இருக்கிறார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் இங்கிருந்து தப்பித்து ஓட நினைக்காதே. அப்படிச் செய்வது உனக்கு ஆபத்து. புரிகிறதா?

அக்‌ஷய் ஆபத்து என்பதை அழுத்திச் சொன்ன விதம் அவனுக்கு ஆபத்தின் தன்மையைப் புரிய வைத்தது. பயத்துடன் சிறுவன் தலை அசைத்தான். புத்த மடாலயத்திற்குள்ளே இருவரும் நுழைந்தார்கள். அந்தச் சிறுவனைத் தனியாக ஓரிடத்தில் அமர வைத்து விட்டு உள்ளே நுழைந்து மடாலயத் தலைவரிடம் அக்‌ஷய் பேசினான். அக்‌ஷய் பேசுவதையே அந்தச் சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். அக்‌ஷய் சாந்த முகத்துடனேயே பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் லாஸா விமான நிலையத்தில் நொடிப் பொழுதில் இறுகிய அந்தப் பயங்கர முகம் அந்த சிறுவனின் நினைவுக்கு வந்தது. அந்த முகத்தை பின் எப்போதும் அவனிடம் அக்‌ஷய் காட்டவில்லை என்றாலும் தன் வாழ்நாள் உள்ள வரை அவனால் அந்த ஆபத்தான முகத்தை மறக்க முடியாது என்று தோன்றியது. இப்போதும் அதை நினைக்கையில் அந்தச் சிறுவனுக்கு பயத்தில் உடல் வியர்த்தது. இந்த ஆபத்தான பிக்குவுடன் இருப்பதை விட மடாலயத்தில் இருப்பது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றவே அவன் அமைதியடைந்தான்.    

அக்‌ஷய் அந்த சிறுவனிடம் விடை பெற்றுக் கொண்டு சேடாங் நகருக்கு விரைந்தான். ஆசான் சொன்னது போல் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து என்று அவனுக்கும் உள்ளுணர்வு சொல்ல ஆரம்பித்திருந்தது....


ந்திரகாந்த் முகர்ஜி தன்னைப் பேட்டி எடுக்க வரும் டிஸ்கவரி சேனல் நிருபருக்காக பரபரப்புடன் காத்திருந்தார். வரும் நிருபர் என்னவெல்லாம் கேட்பார், என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று யோசனையுடன் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். கடிகாரம் அவருடைய அவசரத்தைப் புரிந்து கொள்ளாமல் மந்தகதியில் நகர்ந்தது. ஒன்பது மணியில் இருந்து பத்து மணியாவதுக்குள் பதினெட்டு முறை வாசல் வந்து எட்டிப் பார்த்தார். வரப் போகிறவன் அவர் கண்ணில் படாவிட்டாலும் உண்மையில் அவர் கல்கத்தா விமான நிலையத்தில் இறங்கிய கணத்திலிருந்து அவரைப் பின் தொடர்ந்திருந்தான். தனியாக வசிக்கும் அவர் வீட்டுக்கு யாராவது வருகிறார்களா,  அவர் அக்கம் பக்கத்தில் யாருடனாவது பேசுகிறாரா என்று ரகசியமாக இப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

டிஸ்கவரி சேனலில் இருந்து பேட்டி எடுக்க வருவது பற்றி சந்திரகாந்த் முகர்ஜி தன் குடும்பத்தினர் உட்பட யாரிடமும் மூச்சு விடவில்லை. பேட்டி முடிந்த பிறகு ஒளிபரப்பு எப்போது ஆகும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டபின் தான் எல்லோரிடமும் சொல்ல வேண்டும். சொன்னால் பலர் ஆச்சரியப்படுவார்கள். சிலர் வயிறெரிவார்கள். நினைக்க நினைக்க அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

மணி 10.03 க்கு அழைப்பு மணி அடித்தது. தன் பரபரப்பைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று எண்ணியவராக சந்திரகாந்த் முகர்ஜி கம்பீரமாக தன்னைப் பாவித்துக் கொண்டு கதவைத் திறந்தார்.

வாசலில் நின்றிருந்தவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கும். ஒல்லியாக இருந்தான். ஆனால் உடல் வாகு உறுதியானதாக இருந்தது. கண்ணாடி அணிந்திருந்தான். மிகுந்த மரியாதையுடன் தன்னை கவுரவ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் கையில் இரண்டு விலையுயர்ந்த வீடியோ காமிராக்கள் இருந்தன. தன்னைப் படமெடுக்கப் போகிற அந்த வீடியோ காமிராக்களை சந்திரகாந்த் முகர்ஜி பெருமையாகப் பார்த்தார். பின் அவனை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தார்.

கவுரவ் அந்த பேட்டி அளிக்க சம்மதித்ததற்கு முதலில் நன்றி தெரிவித்தான். அவருக்கு அது போலியாகத் தெரியவில்லை. டிஸ்கவரி சேனல்காரர்களுக்கு அவருடைய மதிப்பு தெரிந்திருக்கிறதாக எண்ணிக் கொண்டார்.

என்ன சாப்பிடுகிறீர்கள் என்று அவர் கேட்ட போது அவன் எதுவும் வேண்டாம் என்று மறுத்தான். அவரை ஒரு சோபாவில் அமர வைத்து விட்டு வீடியோ காமிராக்கள் இரண்டையும் அவர்கள் பேச்சைப் பதிவு செய்யும் இரண்டு கோணங்களில் செட் செய்து வைத்து விட்டு அவரிடம் கேட்டான். “ஆரம்பிக்கலாமா?

அவர் பரபரப்புடன் தலையசைத்தார்.  அவன் எதிரில் வந்தமர்ந்தான்.

பின் காமிராவைப் பார்த்தபடி அவன் சொன்னான். “வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், அது குறித்து ஆழமாக எழுதுபவர்களும் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறார்கள். மற்ற துறைகளில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை இந்தியா இத்துறையில் அடையவில்லையோ என்று சந்தேகம் கூட உலக அளவில் உண்டு. அப்படி இந்தியாவில் அரிதாக காணப்படும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களில் மிக முக்கியமானவர் சந்திரகாந்த் முகர்ஜி அவர்கள். அவரை நம் நிகழ்ச்சியில் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பிறகு அவரைப் பார்த்து சொன்னான். “வணக்கம் சார்இனி நம் பார்வையாளர்களுக்காக உங்களைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்களேன்...

சந்திரகாந்த் முகர்ஜி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் அவை வெறும் சில வார்த்தைகளாக இருக்கவில்லை. எந்த மனிதனும் சலிக்காமல் பேச முடிவது தன்னைப் பற்றியே அல்லவா? அவரும் சலிக்காமல் நிறைய சொன்னார். தனக்கு வரலாற்றில் இருக்கும் ஆர்வத்தைப் பற்றியும் அது குறித்து ஆராயவும் எழுதவும் தனக்கிருக்கும் தணியாத தாகம் பற்றியும் சொன்னார். இது வரை எழுதிய விஷயங்களையும், அதற்கு இது வரை பலரிடம் கிடைத்த அங்கீகாரத்தையும் சொன்னார். சொல்லிக் கொண்டே போனார்.

கவுரவ் சிறிய இடைவெளி கிடைப்பதற்காக காத்திருந்து அந்த அபூர்வ இடைவெளி கிடைத்த போது இடைமறித்து தங்களுக்குத் தற்போது முக்கியமாக அறிய வேண்டியிருந்ததைக் கேட்டான். “தங்களது சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. தற்போது என்ன ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா?

சந்திரகாந்த் முகர்ஜி கூடுதல் பெருமிதத்துடன் சொல்ல ஆரம்பித்தார். “கௌதம புத்தரின் மறு அவதாரமான மைத்ரேயர் பற்றி ஆராய்ச்சி செய்து முடித்திருக்கிறேன். உலகில் தர்மம் அழிந்து, ஞானம் மங்கி மனிதகுலம் கஷ்டப்படும் காலத்தில் மைத்ரேயர் என்ற அவதாரம் நிகழும் என்று புத்தர் சொல்லி இருக்கிறார். மைத்ரேயர் பற்றி புத்தர் சொல்லி இருப்பது ஒரே ஒரு முறை தான். மகதநாட்டில் பாசா என்ற மலையருகில் ஒரு தியான முகாமில் தங்கி இருந்த போது தன் சீடன் சாரி புத்ரனிடம் அவர் சொல்லி இருப்பது சகாவட்டி சூத்ரத்தில் (Cakavatti Sutta) பதிவாகி இருக்கிறது. அந்த அவதாரம் நம்முடைய காலத்தில் திபெத்தில் நிகழும் என்று பத்மசாம்பவா என்கிற இந்திய யோகி சொல்லி இருப்பதும் என் ஆர்வத்தைத் தூண்டியது... இந்த இடத்தில் நான் பத்மசாம்பவா பற்றி கூடுதல் தகவல்களைச் சொல்வது பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்...

பத்மசாம்பவா பற்றி கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வதில் கவுரவுக்கு சிறிதும் விருப்பம் இருக்கவில்லை. என்னேரமும் எதிர்பாராத யாராவது வந்து விடும் அபாயம் இருக்கிறது. லீ க்யாங் அவனுக்குச் சொல்லி இருந்த இரண்டாம் கட்டளையை அவன் நிறைவேற்ற வேண்டி வந்தால் அவன் உடனடியாக அங்கிருந்து கிளம்ப முடியாது. அதனால் அவனுக்குத் தேவை இல்லாத பேச்சைக் கேட்டு காலத்தை வீணாக்க அவன் விரும்பவில்லை. ஆனால் சந்திரகாந்த் முகர்ஜியைத் தடுக்க அவனுக்கு வெளிப்படையாகச் சொல்லும்படியான தகுந்த காரணம் கிடைக்கவில்லை. அதனால் சந்திரகாந்த் முகர்ஜி தொடர்ந்தார்.

பத்மசாம்பவா வட மேற்கு இந்தியாவில், அதாவது தற்போதைய பாகிஸ்தானில், பிறந்த சிறந்த யோகி. அவரையே இரண்டாம் புத்தராகவும் பலர் சொல்கிறார்கள்.  திபெத்திய மன்னர் ஒருவர் திபெத்தில் சம்யே என்ற இடத்தில் முதல் புத்தமடாலயம் கட்ட ஆரம்பித்த போது பல தீய சக்திகளின் ஆதிக்கத்தால் அது முடியாமல் பாதியிலேயே நின்று போனது. அத்தோடு திபெத்தில் சின்ன அம்மை பரவ ஆரம்பித்தது. நாட்டை பீடித்திருக்கும் தீய சக்திகளை விரட்டவும், ஆட்கொல்லியான சின்ன அம்மையைப் போக்கவும் வழியறியாமல் தவித்த மன்னரிடம் சிலர் பத்மசாம்பவா பற்றி சொன்னார்கள். அந்த யோகியால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்றும், அவர் உதவியை நாடும் படியும் அறிவுரை கூறினார்கள். அப்படியே அவர் செய்தார். பத்மசாம்பவாவும் திபெத் சென்றார். தன் யோக சக்தியால் தீய சக்திகளை விரட்டி சின்ன அம்மையையும் தடுத்து நிறுத்தினார். சம்யேயில் திபெத்தின் முதல் புத்த மடாலயம் உருவாகியது. மன்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பத்மசாம்பவாவை குருவாக ஏற்றுக் கொண்டார். அப்படி பத்மசாம்பவா திபெத்தியர்களின் முதல் குருவானார். குரு ரின்போச்சே என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இப்போதும் பத்மசாம்பவாவை திபெத்தியர்கள் முதல் குருவாக அந்தப் பெயரிலேயே அழைக்கிறார்கள்....

கவுரவ் கொட்டாவியைக் கஷ்டப்பட்டு அடக்கினான். பத்மசாம்பவா எப்படி வஜ்ராயனா வகை புத்தமதத்தை திபெத்திலும் பூடானிலும் பரப்பினார், எப்படி பல புத்தமத புனிதச்சுவடிகளை மொழிபெயர்த்தார் என்றெல்லாம் விளக்கிய முகர்ஜியை ஒரு கட்டத்தில் கவுரவ் தாங்க முடியாமல் இடைமறித்தான். 

“இந்த மைத்ரேயர் பற்றி பத்மசாம்பவா சொல்லி இருந்தது எப்போது? அவர் என்ன சொன்னார்?

சந்திரகாந்த் முகர்ஜி சொன்னார். “திபெத்தில் அவர் இருந்த காலத்தில் தான் அதை ஒரு ஓலைச்சுவடியில் எழுதி இருக்கிறார். ஆனால் பத்மசாம்பவாவிடம் ஒரு விசேஷ குணம் இருந்தது. எதை எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள முடியாதோ அதற்குத் தக்க காலம் வரும் வரை அதை மறைத்து வைப்பது தான் நல்லது என்று அவர் நினைத்தார். அது போன்ற ஓலைச்சுவடிகளை திபெத்தில் இருந்த ரகசியக் குகைகளில் ரகசியமாய் ஒளித்து வைத்தார். மந்திர தந்திரங்களில் தேர்ந்த அவர் அந்தச் சுவடிகள் தகுந்த காலம் வரும் வரை யார் கண்ணுக்கும் படாதபடி மந்திரங்கள் ஜபித்து மறைத்து விட்டிருந்தார். மைத்ரேயர் பற்றிய ஓலைச்சுவடியும் அப்படியே மறைந்து இருந்தது...  

மைத்ரேயர் பற்றி ஓலைச்சுவடிகள் இரு பாகங்களாக எப்படிக் கிடைத்தன, அவற்றில் சொல்லி இருந்ததென்ன என்ற அவர்கள் முன்பே அறிந்திருந்த விவரங்களை சந்திரகாந்த் முகர்ஜி சொன்னதை முதல் தடவையாகக் கேட்டுத் தெரிந்து கொள்வது போல் கவுரவ் கஷ்டபட்டு பாவனை காட்டினான்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் சொல்லி முடித்த முகர்ஜி அவர்கள் இது வரை அறிந்திராத ஒரு தகவலைச் சொன்னார்.

மைத்ரேயர் சம்பந்தமாக இரண்டாவது முறை ஓலைச்சுவடிகள் கிடைத்தது லாமாக்கள் கையில். அந்த ஓலைச்சுவடிகளில் மைத்ரேயர் எங்கு பிறப்பார், எப்படி இருப்பார், அவருடைய தனி லட்சணங்கள் என்ன என்கிற விவரங்கள் எல்லாம் இருந்தன. மைத்ரேயர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருடைய தனிப்பட்ட விவரங்கள் இருக்கும் ஓலைச்சுவடிப் பக்கம் ஒன்றை லாமாக்கள் பிரித்து எடுத்து ஒளித்து விட்டார்கள். பிறகு ஆவணக்காப்பகத்திற்குப் போய்ச் சேர்ந்த அந்த ஓலைச்சுவடியில் ஒரு பக்கம் இல்லாமல் இருப்பது இது வரை ஆவணக்காப்பகத்திற்குத் தெரியாது...

திகைத்துப் போன கவுரவ் முழுக்கவனத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். லீ க்யாங் சொன்ன இரண்டாம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டி வருமோ?

வரப்போகிற ஆபத்தை உணராமல் சந்திரகாந்த் முகர்ஜி அவன் திகைப்பை தற்பெருமையுடன் ரசித்தார்.  

(தொடரும்)


என்.கணேசன்         

5 comments:

  1. Melliya nakaicuvai + thiller kalanta interview..arumai ..

    ReplyDelete
  2. வித்தியாசமான விறுவிறுப்பான தொடர்கதை. வியாழன் மாலை ஆறு மணி வரை காத்திருந்து படிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்


    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
  4. நன்றாக நகர்கிறது....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சுந்தர்January 24, 2015 at 4:36 PM

    பிரமாதம். காட்சிகள் கண் முன் விரிகின்றன. கேரக்டர்களை நேரில் பார்க்கிறோம். தொடருங்கள் சார்.

    ReplyDelete