Thursday, January 15, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 29


மைத்ரேயனின் தாய் தன் மகனின் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டாள். அவன் துணிமணிகளை அவள் எடுத்து வைக்கும் போது அவள் கண்களில் நீர் மல்க ஆரம்பித்தது. மொத்தத்தில் அவனுக்கு மூன்றே ஜதை ஆடைகள் தான் இருந்தன. அவற்றிலும் ஒன்று நைந்து போக ஆரம்பித்திருந்தது. அவன் ஒரு முறை கூட தனக்கு புதிய ஆடைகள் வேண்டும் என்று கேட்டதில்லை. கேட்டிருந்தால் அண்ணன்மார்கள் ஒன்றிரண்டாவது கூடுதலாக வாங்கிக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றியது.  யோசித்துப் பார்த்தால் எதையுமே வேண்டும் என்று அவனாகக் கேட்டதில்லை. அவர்களாகக் கொடுத்ததை மட்டுமே அவன் உபயோகித்திருக்கிறான்.....

தம்பியின் துணிமணிகளை எடுத்து வைக்கையில் தன் தாயின் கண்களில்  இருந்து வழிந்த நீரைக் கவனித்த இரண்டாவது மகன் சொன்னான். “நீ அந்த பிக்கு சொன்னதை அப்படியே நம்பி தம்பியை அனுப்புவது சரி என்று தோன்றவில்லை அம்மா. அவன் மைத்ரேயனாக இருந்தால் அவன் உயிருக்கு ஆபத்து ஏன் வர வேண்டும்? அதுவும் இத்தனை நாளாக இல்லாத ஆபத்து இப்போது ஏன் வர வேண்டும்?

அது தானே?மூத்த மகனும் சொன்னான்.

ஆனால் அவள் அவர்கள் கருத்துக்கு செவி சாய்க்கவில்லை. மௌன லாமா சொன்னது பொய்க்காது. அதை அலட்சியம் செய்வது நல்லதல்ல

மூத்த மகன் ஏதோ கிண்டலாக மறுத்துச் சொல்ல முற்பட்டான். ஆனால் அவள் அவனை மேலும் பேச அனுமதிக்காமல் சைகையாலேயே நிறுத்தினாள். “என் குழந்தை உயிரோடு நான் விளையாட விரும்பவில்லை. அவன் எங்கேயாவது நன்றாக இருந்தால் அது போதும் எனக்கு

அவள் கண்ணீரும், வார்த்தைகளும் மூத்த மகனின் வாயை அடைத்தன. ஏதோ சொல்ல நினைத்த இரண்டாவது மகனும் மௌனமானான். அங்கு கனத்த மௌனம் நிலவ ஆரம்பித்தது. 

சிறிது நேரத்தில் மைத்ரேயன் வந்தான். பள்ளிக்கூடப் பையை சுவரோரமாக வைத்து விட்டுத் திரும்பிய அந்தப் பத்து வயதுச் சிறுவனை மூன்று பேரும் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார்கள். மைத்ரேயனாக இவன் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று மனதில் மதிப்பீடு செய்தார்கள். சாதாரண உயரம், மாநிறம், ஒல்லியான தேகம், சிந்தனை தேக்கிய பார்வை... தோற்றத்தைப் பொருத்த வரை அந்தப் பார்வை ஒன்று தான் அவனிடம் வித்தியாசமாக இருந்தது. அவன் வயதுச் சிறுவர்களின் பார்வை ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் அலை பாயும். ஆனால் அவன் பார்வை அதிகமாக அலைபாய்ந்ததில்லை. சில நேரங்களில் வெறித்த பார்வை போலவே தோன்றினாலும் அது கவனமில்லா வெற்றுப் பார்வை அல்ல.....

அவனிடம் மூத்த அண்ணன் கேட்டான். “நீ என்ன மைத்ரேயனா?    

“மைத்ரேயனா? யாரது?

அவனது மூத்த அண்ணனுக்கு சிரிப்பு வெடித்தது. அவன் வயிறு குலுங்க சிரித்தான். மைத்ரேயன் என்ற பெயர் யாரைக் குறிக்கிறது என்று கூட அறியாதவனைப் போய் மைத்ரேயன் என்று சொல்கிறார்களே என்று எண்ணி மனதாரச் சிரித்தான். இரண்டாம் அண்ணன் புன்னகைத்தான். தாயோ தன் கடைசி மகனையே கூர்ந்து பார்த்தாள். மைத்ரேயன் மூத்த அண்ணன் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டான். “நீ ஏன் சிரிக்கிறாய்?

தாய் மூத்த மகன் மீது கோபத்தோடு சொன்னாள். “அவன் இன்று நன்றாகச் சிரிப்பது என்று முடிவெடுத்திருக்கிறான். அதனால் தான் சிரிக்கிறான்.

மைத்ரேயன் மூத்த அண்ணனைப் பார்த்து அமைதியாகச் சொன்னான். “கோபப்படுவதையும், வருத்தப்படுவதையும் விட சிரிப்பது நல்லது தான். அதனால் நீ இப்படியே இரு அண்ணா

மூத்த அண்ணனின் சிரிப்பு நின்று போனது. அதற்குக் காரணம் இரண்டு. முதலாவது- கோபமும், வருத்தமும் தான் அவனிடம் எப்போதுமே ஊற்றெடுக்கும் உணர்ச்சிகள். யார் மீதாவது கோபப்படுவான். அல்லது தங்கள் நிலைமையை எண்ணி வருத்தப்படுவான். இன்று சிரித்தது போல் அவன் சிரித்து அவர்கள் யாரும் பார்த்தது கிடையாது. தம்பி சொன்னது அதை நினைவுறுத்தியது போல் இருந்தது  இரண்டாவது- அவன் தம்பி தொடர்ந்தாற்போல் அவனிடம் நான்கு வார்த்தைகளுக்கு மேலாகப் பேசியதும் இன்று தான். ஒரு அபிப்பிராயத்தை அவன் தானாகத் தெரிவித்ததும் இன்று தான்....

மைத்ரேயனின் தாய்க்கு தன் கடைசி மகனிடம் என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்று மலைப்பாக இருந்தது. அவளுக்கே இப்போதும் திகைப்பாக இருக்கும் விஷயங்களை எப்படி பத்து வயது பாலகனிடம் சொல்லிப் புரிய வைப்பாள். அவர்களைப் பிரிந்து போக அவன் சம்மதிப்பானா? சம்மதிக்கா விட்டால் என்ன செய்வது? என்னேரமும் அவனை அழைத்துப் போக அந்த இந்தியன் வரலாம் என்பதால் அவளால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. யோசித்து விட்டு, அவன் திபெத்திலேயே இருந்தால் அவன்  உயிருக்கு ஆபத்து என்று ஒரு பெரியவர் சொல்லி இருப்பதால் அவன் நாட்டை விட்டுப் போவது நல்லது என்றும், அவனை அழைத்துப் போக ஒரு இந்தியன் என்னேரமும் வரலாம் என்றும் சொல்லி வைத்தாள். அவன் எந்தக் கேள்வியும் கேட்காமல் தலையசைத்தான். வெகுளித்தனமாகத் தலையசைக்கும் தன் குழந்தையைப் பார்க்க அவளுக்குத் துக்கம் பீறிட்டது. என்ன புரிந்ததோ? இங்கிருந்து போய் எப்படி இருக்குமோ?   

அவள் மகனைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள். மைத்ரேயன் அவளிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்கவில்லை. அவன் மிக அமைதியாக இருந்ததை அவன் இரண்டு அண்ணன்களும் கவனித்தார்கள். ஒரு சாதாரண பத்து வயதுப் பையன் நிலைமையை எதிர்கொள்ளும் விதமாக அது இருக்கவில்லை. தனியாக எவனோ ஒருவனுடன் போக நேரும் எந்தச் சிறுவனும் துக்கமும் இல்லாமல், பயமும் இல்லாமல் இவ்வளவு அமைதியாக இருக்க முடியாது....

அவள் அழுது சிறிது ஓய்ந்த போது மைத்ரேயன் மென்மையாகச் சொன்னான். “கவலைப்படாதே அம்மா...

அந்தக் கணம் அவள் குழந்தையாகவும், அவன் பெரியவனாகவும் அவர்களுக்குத் தோன்றியது. அவளுக்கு அவனுடைய அன்பான இரண்டு வார்த்தைகள் ஆறுதல் அளித்த அதே சமயத்தில் கூடுதலாக அழுகை வரவும் வைத்தது. அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போக ஆரம்பித்தான்.... முகத்தில் சாந்தம் நிலவ ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவளும் அந்த சாந்தத்தை உணர ஆரம்பித்தாள்....

அவன் மைத்ரேயனோ இல்லையோ அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் சாதாரணமானவன் அல்ல என்பது மட்டும் அவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

அன்றிரவு மைத்ரேயனைத் தவிர மற்ற மூவருக்கும் உறக்கம் வரவில்லை....


லாஸா விமானநிலையத்தை அவர்கள் விமானம் இன்னும் சில நிமிடங்களில் அடைந்து விடும் என்று விமானப் பணிப்பெண் சொன்னாள். அக்‌ஷய் தன் அருகில் இருந்த அந்த அனாதைச் சிறுவனைப் பார்த்தான். அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். இந்திய உளவுத்துறை ஆள் சொன்னது நூறு சதவீதம் சரி என்று தோன்றியது. சாப்பிடும் நேரம் தவிர உறங்குவதிலேயே அந்தச் சிறுவனின் முனைப்பு இருந்தது. அக்‌ஷய் அவனை மெள்ள எழுப்பினான்.

அந்தச் சிறுவன் என்ன என்பது போல சற்று எரிச்சலுடன் பார்த்தான். கூட இருந்த புத்தபிக்கு மீது அந்த சிறுவனுக்கு மரியாதை குறைய ஆரம்பித்திருந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்து கண்டிப்பையே பார்த்து வளர்ந்த அவனுக்கு அந்தக் கண்டிப்பு தான் புரிந்த பாஷையாக இருந்தது. கண்டிப்பான மனிதர்களிடம் அடங்கிப் போக வேண்டும் என்பதும், மற்ற மனிதர்களை அதிகம் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பதும் அவன் படித்துக் கொண்ட பாடமாக இருந்தது. தன்னருகே கருணையே உருவாக அமர்ந்திருந்த புத்தபிக்குவிற்கு அதிக மரியாதை தர வேண்டியதில்லை என்று நினைக்க ஆரம்பித்திருந்தான்.

அக்‌ஷய் சொன்னான். “லாஸா வரப்போகிறது. தயாராக இரு மகனே!

அவன் வேண்டா வெறுப்பாகத் தலையசைத்தான். அடுத்த பத்தாவது நிமிடம் லாஸாவில் இறங்கும் வரை அவன் கண்களைத் திறந்து வைத்திருக்க படாதபாடு பட்டான்.

லாஸா விமானநிலையத்தில் கெடுபிடி அதிகமாக இருந்தது. தன்னை விட்டு முன்னால் போக யத்தனித்த சிறுவன் கையைப் பிடித்து நிறுத்திய அக்‌ஷய் விமான நிலைய நிலவரத்தை நிதானமாக ஆராய்ந்தான். பொதுவான சோதனைகள் எல்லாருக்கும் இருந்தாலும் தனியாக வந்தவர்களுக்கு கூடுதலாக சோதனைகளும், கேள்விகளும் இருந்ததை அவன் கவனித்தான். அவன் முன்பே யூகித்தது போல ஒரு தனிமனிதன் திபெத்தில் நுழைவதையே அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என்பது தெளிவாகவே தெரிந்தது. கண்காணிப்பு காமிராக்கள் அதிகமாக இருந்தன. போலீஸாரும், ஒற்றர்களும் கூட அதிகமிருந்தார்கள்.

அந்தச் சிறுவனுக்கு புத்தபிக்கு நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது சிறிதும் பிடிக்கவில்லை. வேகமாக நடக்கக் கூடத் தெரியாத அந்த பிக்குவுடன் தானும் நிற்கப் பிடிக்காமல் அவர் கையை விடுவித்துக் கொண்டு முன்னே செல்லப் பார்த்தான். மென்மையாகப் பிடித்துக் கொண்டிருந்த அக்‌ஷயின் பிடி இரும்புப்பிடியாக மாறியது. திகைப்புடன் திரும்பி அந்தச் சிறுவன் புத்தபிக்குவைப் பார்த்தான். அக்‌ஷயின் பார்வையில் இப்போது கனிவோ அன்போ தெரியாமல் அவனுக்கு அபாயம் தெரிந்தது. உணர்ச்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய பனிப்பார்வை.... இது அவன் இது வரை அறிந்த புத்தபிக்கு இல்லை. வேறு ஆள். ஆபத்தானவன்.....  சிறுவன் முகத்தில் பீதி தெரிந்தது. அப்படியே நின்றான்.

அக்‌ஷயின் முகம் கண நேரத்தில் பழையபடி கருணைக்கு மாறியது. அந்தச் சிறுவனின் கைகளைப் பிடித்தபடி மிக நிதானமாக பரிசோதித்துக் கொண்டிருந்த அதிகாரிகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கூடவே நடந்து வந்த அந்தச் சிறுவன் அந்த கணநேர மாற்றத்தைத் திகைப்புடன் கவனித்தான்.

அக்‌ஷய் மிகுந்த அன்புடன் அந்தச் சிறுவனிடம் கேட்டான். “என்னப்பா?
ஒன்றுமில்லை என்று தலையசைத்த அந்தச் சிறுவனுக்குப் பயத்தில் வியர்த்தது. இந்தப்பிக்குவைப் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது. அடக்கமாக கூட வந்தான்.

அவர்கள் இருவருடைய பாஸ்போர்ட்கள் மற்றும் விஸாக்களைப் பரிசோதித்த அதிகாரி சிறுவனைக் கண்டுகொள்ளவில்லை. அக்‌ஷயைக் கூர்மையாகப் பார்த்தார். அக்‌ஷய் அமைதியாக அவரைப் பார்த்தான். ஒருசில பயணிகள் காட்டிய அவசரத்தையோ, பொறுமையின்மையையோ அவன் காட்டவில்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிற பாவனையை முகத்தில் காட்டினான். அதனால் அவர் விரைவாகவே அவர்களை அனுப்பி விட்டார். அவர்கள் உடைமைகள் அதிகம் இல்லாததால் அந்த பரிசோதனைகளும் சீக்கிரமே முடிந்து விரைவாகவே விமான நிலையத்தில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். திபெத்தின் தலைநகரில் அமானுஷ்யன் பிரவேசமாகி விட்டான்.

ரகதம் மருதமலை முருகன் சன்னிதியில் மனமுருக அக்‌ஷய்க்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கூட்டம் அதிகம் இல்லாததால் அவளால் நிறைய நேரம் நின்று பிரார்த்திக்க முடிந்தது. சொந்த மகன் கூட உதாசீனப்படுத்தின அவளை ஒரு மனித ஜென்மமாக மதித்து நேசித்த முதல் மனிதன் அவன். அவளுடைய மருமகளுக்கும் பேரனுக்கும் அன்பையும் வாழ்வையும் தந்து தனதாக்கிக் கொண்ட மிக நல்ல மனிதன் அவன். அவன் எந்த ஆபத்துமில்லாமல் நல்லபடியாகத் திரும்பி வர வேண்டும் என வேண்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

மலையடிவாரத்தில் பேருந்தில் ஏறியவள் பின் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். சில நிறுத்தங்கள் கழிந்து ஒரு நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய ஒருவன் அவளைப் பார்த்து திகைத்தான். அவள் பழைய நினைவுகளில் மூழ்காமல் இருந்திருந்தால் அவன் பார்த்ததையும் திகைத்ததையும் கவனித்திருக்க முடியும்.   

பேருந்தில் அவள் பார்க்காத இடத்தில் நின்று கொண்ட அவன் அதற்குப் பின்  அவள் மேல் வைத்த கண்களை எடுக்கவில்லை.

அவள் பேருந்தில் இருந்து இறங்கிய போது அவனும் இறங்கிக் கொண்டான். அவள் வீடு நோக்கி நடந்த போது அவனும் ரகசியமாகப் பின் தொடர ஆரம்பித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்  

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

என்.கணேசன்   

5 comments:

  1. Novel is going great....
    Felling like travelling along with Akshay...
    Hats off to you!!!

    ReplyDelete
  2. செம ட்விஸ்ட். திக் திக் என்று இருக்கிறது

    ReplyDelete
  3. Akshay atdam arambam ...Good luck akshay...

    ReplyDelete
  4. வரதராஜன்January 17, 2015 at 7:49 PM

    அக்‌ஷய் திபெத்தில் நுழைந்து விட்ட பிறகு என்ன நடக்கும் என்று பரபரப்பாக யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் இல்லாத வேளையில் மரகதத்தை யாரோ பின் தொடர்வது திகலாக இருக்கிறது. நல்ல விருவிருப்பு உள்ள தொடர்.

    ReplyDelete
  5. I think Maragatham's son is coming back....

    ReplyDelete