Monday, October 6, 2014

பகவத் கீதையின் பரிபூரண மனிதன்!



அறிவார்ந்த ஆன்மிகம் - 49

லகிலேயே யுத்தபூமியில் சொல்லப்பட்ட ஒரே ஞானோபதேசம் ஸ்ரீமத் பகவத்கீதை ஒன்று தான். செயல்பட வேண்டிய சூழ்நிலையில், வாழ்வா சாவா என்ற நெருக்கடியான கட்டத்தில், சந்தேகமும், குழப்பமும் ஏற்பட்டு செயலிழந்து நின்ற மனிதனுக்கு வழி காண்பித்து செயல்படத் தூண்டிய  புனித நூல் ஸ்ரீமத் பகவத்கீதை. நான் சொல்கிறேன். பேசாமல் கேட்டுக் கொண்டே வா. நான் சொல்கிறபடி நடஎன்கிற வகையில் தான் பெரும்பாலும் உபதேசம் நடப்பது வழக்கம். மாறாக இறைவனையே எதிர்க்கேள்விகள் நிறைய கேட்டு மனிதன் ஞானத்தெளிவு பெற்ற ஒரே புனித நூல் ஸ்ரீமத் பகவத் கீதை தான்.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தை இந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்த முடிந்த அளவு ஆத்மபலம் பெற்றிருந்த மகாத்மா காந்தி கூறுகிறார். “கீதையின் உண்மையான பக்தனுடைய உடலையோ, மனத்தையோ எந்தப் பிரச்னையும் பாதிக்காது. அதை எழுத்துக்கு எழுத்து பின்பற்றும் ஒருவரது மனம் என்றும் தளர்ச்சி அடையாது அத்தகைய ஒருவரது உடல் பச்சை மரத்திலுள்ள இலைகளைப் போல நாளடைவில் உலர்ந்து உதிர்ந்த போதிலும் மனம் என்றென்றும் பசுமையாக இருக்கும்.... என்னைப் பொறுத்த வரையில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்.

மகாத்மா காந்தி கூறிய இந்த அகராதியில் மனிதனின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கின்றது. அவனது எல்லா சந்தேகங்களுக்கும் பதில் இருக்கிறது. உபநிடதங்களின் சாராம்சம் என்று புகழப்படும் ஸ்ரீமத் பகவத்கீதையில் எல்லா தத்துவ சிந்தனைகளுக்கும் மேலாக வாழ்வியல் நெறிமுறைகள் மனிதனுக்குத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. பரிபூரணமான மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பகவத்கீதை முழுவதும் அங்கங்கே வழிகாட்டப் பட்டிருக்கின்றது.

இந்த பரிபூரண மனிதனின் குணாதிசயங்களைச் சொல்வதில் பகவான் கிருஷ்ணருக்கு ஸ்ரீமத் பகவத்கீதையில் சலிப்பே இல்லை என்றே சொல்ல வேண்டும். இரண்டாவது அத்தியாயமான சாங்கிய யோகத்தில் ஸ்திதப்ரக்ஞன் (திடசித்தமுள்ளவன்) எப்படி இருப்பான் என்று வர்ணிக்க ஆரம்பித்த கிருஷ்ணர், ஐந்தாம் அத்தியாயத்தில் ஜீவன் முக்தன், பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தலைசிறந்த பக்தன், பதினான்காம் அத்தியாயத்தில் குணாதீதன், பதினெட்டாம் அத்தியாயத்தில் ஞான நிஷ்டன் என்று ஒரு பரிபூரண மனிதனின் சித்திரத்தைப் பல இடங்களில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். ஸ்ரீமத் பகவத் கீதையின் பார்வையில் பரிபூரண மனிதனின் குணாதிசயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

1)      இன்ப துன்பங்களில் சமநிலை:
இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு, வெற்றி-தோல்வி போன்ற இரட்டை நிலைகள் மனித வாழ்க்கையில் இயல்பு. ஒன்றை அனுபவித்தால் இன்னொறையும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டி இருக்கும். ஒரு நாணயத்தின் இரு பகுதிகளைப் போன்றவை இவை. ஒரு பகுதி மட்டும் போதும் என்று யாரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது. உலகில் அவன் வாழ்கிற வரை இந்த இரட்டை நிலைகள் மாறி மாறி வந்தே தீரும். எனவே திடசித்தமுள்ள பரிபூரண மனிதன் இந்த இரட்டை நிலைகளில் தன் மன அமைதியை இழந்து விட மாட்டான். இன்பம் மட்டுமே வேண்டும், வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டான். இரண்டிலும் சமநிலையில் இருக்கிற மனப்பக்குவம் அவனிடம் இருக்கும்.

ஸ்ரீமத் பகவத்கீதை கூறுகிறது. “துக்கங்களைக் கண்டு யாருடைய மனம் கலங்கவில்லையோ, யார் இன்பங்களுக்காக ஏங்கவில்லையோ, இச்சை, பயம், கோபம் இவற்றிலிருந்து யார் விடுபட்டிருக்கிறானோ அவனே உறுதியான அறிவுடையவன்

2)      ஆசைகளைத் துறத்தல்:
ஆசைகளே மனதில் எழக்கூடாது என்று நினைத்தால் அது உண்மையிலேயே பேராசையாகத் தான் இருக்கும். கடலில் அலையே இருக்கக் கூடாது என்று நினைப்பதற்கு அது சமானம். மனிதன் ஞானம் முழுமையாக அடைந்த பிறகு அது சாத்தியமாகலாமே ஒழிய அது வரை அது சாத்தியப்படாது. அதனால் ஸ்ரீமத் பகவத்கீதை ஆசைகளை அலட்சியப்படுத்தச் சொல்கிறது. அதை ஒரு பொருட்டாக நினைத்து அதை நிறைவேற்ற மெனக்கெடாதே என்கிறது.

ஒரு அழகான உவமை சொல்லி கிருஷ்ணர் புரிய வைக்கிறார். “நதிகளில் இருந்து எப்போதும் தண்ணீர் வந்து கடலில் விழுந்த வண்ணம் இருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை. அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தி அடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை.
  
3)      புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்:
புலன்களின் வழி சென்று திருப்தியடைந்தவன் என்று உலகில் யாரும் இல்லை. அப்போதைக்குத் திருப்தி கிடைப்பது போல் இருந்தாலும் மீண்டும் மீண்டும் ‘இன்னும் வேண்டும்’, இன்னும் அதிகம் வேண்டும்என்று புலனின்பங்கள் மனிதனை உசுப்பிக் கொண்டே இருக்கும். அதனால் பரிபூரண மனிதன் அவைகளுக்கு அடிமையாகி அவை சொல்லும்படியெல்லாம் கேட்டு அவற்றின் பின் ஓட மாட்டான். அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்.

“புலன்கள் அலைந்து திரிகையில் மனமும் பின் தொடர்ந்து சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல அவன் அறிவை மனம் அடித்துச் சென்று விடுகிறதுஎன்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். புயல்காற்றில் சிக்கினால் பின் அமைதியேது?

தாமஸ் ஏ.கெம்பிஸ் என்ற கிறித்துவ அறிஞர் இதையே இப்படிக் கூறுவார். “சுக்கான் இல்லாத கப்பலை அலைகள் அங்குமிங்கும் இழுத்துச் செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக் கைவிட்ட மனிதனை ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன”.  அதனால் பரிபூரண மனிதன் தன் வைராக்கியத்தால் புலன்களைத் தன் கட்டுப்பாட்டில் என்றும் வைத்திருப்பான்.

இதற்கும் ஸ்ரீமத் பகவத்கீதை மிக அழகான உவமை கூறுகிறது. “ஆமை எல்லா பக்கங்களில் இருந்தும் தன் உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போல ஒருவன் தனது புலன்களை வெளிப் பொருள்களில் இருந்து உள்ளடக்கிக் கொள்ளும் போது அவன் புத்தி உறுதியான நிலையை அடைகிறது


4)      ஆன்ம ஞானம்:
ஆசைகளின் பின் ஓடாதே, புலனின்பங்களின் பின் செல்லாதே என்றெல்லாம் சொல்வது சுலபம். அதை சாதிக்க அவற்றை எல்லாம் விட அதிகமான ஆனந்தமும், அமைதியையும் தர எதோ ஒன்று மனிதனிடத்தில் இருந்தால் அல்லவா ஒருவனால் நீண்ட காலம் கட்டுப்பாட்டோடு இருக்க முடியும்? இல்லா விட்டால் ஒருசில நாட்கள் இருக்கும் வைராக்கியம் இன்னொரு நாள் கரைந்து விடுமே அல்லவா? அதற்குத் தான் ஸ்ரீமத் பகவத் கீதை ஆன்ம ஞானம் என்ற வழி சொல்கிறது. என்றும் குறையாத நிலையான ஆனந்தமே தன்னுடைய ஆன்மாவின் உண்மைத் தன்மை என்று தெளிவாக உணர்ந்த பின்பு புற இன்பங்களை நோக்கி ஒருவன் ஏன் ஓடப் போகிறான்.

ஸ்ரீகிருஷ்ணர் அந்த ஆன்ம ஞான நிலையை அடைந்தவன் யோகி என்றும் அவன் பிரம்மத்துடன் ஐக்கியமாவான் என்றும் கூறுகிறார். “தன்னுள்ளே இன்பத்தையும், தன்னுள்ளே சாந்தியையும், தன்னுள்ளே ஞான ஒளியையும் காணும் யோகி இயற்கையுடன் லயித்து பிரம்மத்துடன் ஐக்கியமாகிறான்

5)      இறைவனிடம் சரணாகதி:
இத்தனையும் சாதிக்க இறைவனின் அருள் வேண்டும். அவனருள் இல்லாமல் எந்த உயர்நிலையும் சாத்தியமல்ல. தன்னம்பிக்கை ஒரு மனிதனிடம் இருக்கலாம். ஆனால் அவன் சக்திக்கும் மீறி எல்லாம் நடக்கையில் அவனுக்கு இறையருள், இறைவன் மீது நம்பிக்கை தேவைப்படுகிறது. இறைவனிடம் சரணாகதி அடைந்த பின் ‘இனி எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று மனம் அமைதியடைகிறது. அவனால் எதையும் சந்திக்கவும், சாதிக்கவும் முடிகிறது.

கிருஷ்ணர் கூறுகிறார். “வேறு எதையும் சிந்திக்காமல், என்னைப் பற்றியே சிந்தித்த வண்ணம் என்னை வணங்குவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பளுவை நான் ஏற்றுக் கொள்கிறேன்”. இதை விடப் பெரிய ஆசுவாசம் என்ன இருக்க முடியும்? ஜலாலுதீன் ரூமி என்ற இஸ்லாமிய ஞானியும் கூறுகிறார். “இறைவனிடம் லயித்தவன் என்றென்றும் தக்க பாதுகாப்புடன் வாழ்கிறான்

ஸ்ரீமத் பகவத்கீதை கூறும் பரிபூரண மனிதனின் சித்திரம் மனதில் பதிகிறதல்லவா? அந்த இலட்சிய மனிதனாக நாமும் முயற்சிப்போமா?

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 18.02.2014


5 comments:

  1. Superb.At right time I read this.Thank you

    ReplyDelete
  2. மகாபாரதத்தில் கிருஷ்ணர் மற்றவர்களுக்கு கூறும் அறிவுறை கூட பயனுள்ளதாக உள்ளது......
    இங்கு பரிபூரண மனிதன் எப்படி இருக்க வேண்டுமென்பதை...., கணித சூத்திரம் போல விளக்கியிருப்பது, புரியும் படி எளிமையாக உள்ளது...
    இறுதியில் ''இறைவனிடம் சரணாகதி அடைந்த பின் ‘இனி எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்’என்று மனம் அமைதியடைகிறது'' என்ற வரி 'பரம(ன்) ரகசியத்தில்' உள்ள கணபதிக்கு இறுதியில், குருஜி தன் சொத்துகளை எழுதி வைத்ததை நினைவூட்டுகிறது.....

    ReplyDelete
  3. The question I had in my mind this morning - கீதோபதேசம் செய்தானே கிருஷ்ணன், இங்கேயும் அர்ஜுனன் வருவானா கண்ணன்? ஸ்ரீமன் நாராயணா... and your post answered that. Thank you

    ReplyDelete
  4. பரிபூரண மனிதன்... விளக்கம் அருமை... அதற்கு ஆத்மஞானம் ஏன் அவசியம்? என்பதற்கான விளக்கமும் அருமை..

    ReplyDelete
  5. இப்படி ஒரு நல்ல விளக்கத்தைதான் தேடினேன் மிக்க நன்றி 🥀🙏🥀 ஜெய் ஸ்ரீ ராம்

    ReplyDelete