Thursday, October 2, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 14


மிகவும் கஷ்டப்பட்டு தன்னை நெருங்கி வந்த அந்த முதியவரை குரு பிக்கு கவலையுடன் பார்த்தார். இந்த முதியவர் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விடுவார் போல இருக்கிறதே!அந்தக் கவலை அந்த தியான மண்டபத்தில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் இருந்தது. அங்கிருந்த உளவாளிகள் இருவரும் முதியவர் மேல் வைத்திருந்த கண்களை எடுக்கவில்லை.

சற்று தள்ளாட்டத்துடன் அந்த முதியவர் குரு பிக்கு முன் போய் நின்று குனிந்து வணங்க முற்பட்டார். அப்படி குனிய முற்பட்ட போது விழவே ஆயத்தமான முதியவரை குரு பிக்கு தாங்கிப் பிடித்தார்.   

முதியவர் மிகத் தாழ்ந்த குரலில் குரு பிக்குவிடம் ஹிந்தியில் சொன்னார். நான் ஆசானைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் நிலைமை சரியில்லை. அவரிடம் இந்த எண்ணில் பேசச் சொல்லுங்கள்”.  ஒரு சின்ன சீட்டை முதியவர் குரு பிக்கு கையில் ரகசியமாய் திணித்தார். குரு பிக்குவின் முகத்தில் கவலை போய் பிரமிப்பு தெரிந்தது.

பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு முதியவர் வணக்கத்துடன் ஏதோ சொன்னது போலத் தான் தெரிந்தது. உடனடியாகத் தன்னை சுதாரித்துக் கொண்ட குரு பிக்கு ஆசி வழங்குவது போல் பாவனை செய்தபடி தலையசைத்தார். அந்த சீட்டை ரகசியமாய் தன்னிடம் குரு பிக்கு பத்திரப்படுத்திக் கொள்ளும் வரை எதிரில் இருந்தவர்களின் பார்வையை மறைத்து நின்ற முதியவர் பின் கஷ்டப்பட்டு நிதானித்து நேராக நிற்க முயன்று வெற்றி கண்டார். பின் மெல்ல சுவர் பக்கம் நகர்ந்து சுவரைத் தொட்டபடி கஷ்டப்பட்டு நடந்து வெளியேறினார். வெளியேயும் வாசலைத் தாண்ட அருகிலிருந்தவர்கள் உதவி அவருக்குத் தேவைப்பட்டது.

வெளியே இருந்த உளவாளிகளில் ஒருவன் உள்ளே இருந்த தன் சகாவிற்குப் போன் செய்து கேட்டான். “இப்போது வெளியே வந்த கிழவர் உள்ளே என்ன செய்தார்.

“புத்தரை வணங்கி விட்டு குரு பிக்குவை வணங்கி விட்டுப் போனார்.... அதற்கே இவ்வளவு நேரம்....  விழுந்து கையைக் காலை முறித்துக் கொள்ளும் இந்தக் கிழம் என்று நினைத்தேன்.... நல்ல வேளையாக கிழம் சுவரைப் பிடித்தே நடந்ததால் தப்பித்தார்...

“ஆசான் போலத் தெரிந்த அந்த கூன் பிக்கு எங்கேயாவது தெரிகிறாரா?

“இல்லை

வெளியே முதியவரை ஒரு பாதசாரி ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற்றி உட்கார வைத்தார். ஆட்டோ  புழுதியை வாரி இறைத்தபடி ஹோட்டல் புத்தா இண்டர்நேஷனல்நோக்கிச் சென்றது.

சானுக்கு அமானுஷ்யன் வந்து போன விதம் ஆச்சரியப்படுத்தியதோடு திருப்தியும் தந்தது. மின்னல் வேகத்தில் நகர முடிந்தவன் என்று பெயரெடுத்திருந்த அவன் அதற்கு நேர்மாறாக ஆமை வேகத்திலும் செல்ல முடிந்தவன் என்று நிரூபித்து விட்டுப் போயிருக்கிறான்.... இத்தனை உளவாளிகள் முன் இத்தனை நிதானமாக வந்து போன அவனது துணிச்சல் அவரை அசர வைத்தது.

தன் தனி அலைபேசியில் அவனை அழைத்தார். அவன் “ஹலோஎன்றதும் ஆசான் ஹிந்தியில் பேசினார். நீங்கள் என்னைப் பேசச் சொல்லி இருந்தீர்கள்

அவருடைய ஹிந்தி, வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் ஹிந்தி போல இருந்த்தை அக்‌ஷய் கவனித்தான். திபெத்தில் ஹிந்தி பேசத்தெரிந்த பெரும்பாலானோரின் ஹிந்தி அப்படித்தான் இருந்தது என்பது அவனது அனுபவம்.

அக்‌ஷய் சொன்னான். “உங்களிடம் பேச வந்தேன். ஆனால் அங்கே பேச சூழ்நிலை சரியில்லை....

ஆசான் சொன்னார். “ஆமாம்....

“நீங்கள் அங்கே தான் இருக்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா, இல்லை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கண்காணிக்கிறார்களா?

“தெரியவில்லை. நேற்றில் இருந்து அவர்கள் அப்படி கண்காணிக்கிறார்கள்

நாம் சந்திப்பதற்கு முன் அவர்கள் எந்த அளவுக்குத் தெரிந்து அங்கே வந்திருக்கிறார்கள் என்பதை சரியாகத் தெரிந்து கொள்வது முக்கியம் என்று நினைக்கிறேன்....

ஆசான் மெல்லக் கேட்டார். “அதை எப்படித் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள்

அக்‌ஷய் சொன்னான். தெரிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவன் சொன்ன போது அவனை நினைத்து ஆசானால் வியக்காமல் இருக்க முடியவில்லை....

அவனிடம் பேசி முடித்த பின் ஆசான் புத்தகயாவில் உள்ள மற்ற இரண்டு திபெத்திய மடாலயங்களுக்குப் போன் செய்து அங்கும் உளவாளிகளின் கண்காணிப்பு இருக்கிறதா என்று விசாரித்தார். அந்த சந்தேகக் கண்ணோட்டத்தோடு கூர்ந்து பார்த்தால் ஒழிய அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்பதால், பார்த்து விட்டுத் தனக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அங்கும் இருப்பதாகத் தகவல் வந்தது. ஆனால் டெர்கார் மடாலயம் அளவு அந்த இரண்டு மடாலயங்கள் அதிக ஆட்களால் கண்காணிக்கப்படவில்லை என்பது மேலும் சில கேள்விகள் கேட்டதன் மூலம் தெளிவாகியது.

நேற்றைய தினம் அவரைப் பார்த்த உளவாளிகள் அவருடைய கூன் நடிப்பை முற்றிலும் நம்பிவிடவில்லை. அதனால் தான் இங்கு கூடுதல் கண்காணிப்பு என்பது அவருக்குப் புரிந்தது. அவர் இங்கே இருக்கிறார் என்பதை அவர்கள் கண்டுபிடித்ததை விட அவரைச் சந்திக்க ஒரு ஆள் வரப்போவது அவர்களுக்குத் தெரிந்திருப்பது அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் இதை அமானுஷ்யன் முன்கூட்டியே ஊகித்திருப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது....

அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் தங்கி விடும் சமயம் அல்ல இது என்று நினைத்தவராக அவர் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாரானார். முன்பு நடித்தது போலவே கூன் விழுந்தவர் போல வளைந்தபடியே தியான மண்டபத்தில் பிரவேசித்த போது தியான மண்டபத்தில் இருந்த இரு உளவாளிகள் சுறுசுறுப்பானார்கள். ஒருவன் அலைபேசி மூலம் வெளியே இருந்த சகாவிற்கு உடனே தகவல் கொடுத்தான்.

“ஆசான் தியான மண்டபத்துக்கு வந்து விட்டார்.... கூன் போல நடித்தாலும் அது ஆசான் தான் சந்தேகமே இல்லை...

“அப்படியானால் இப்போது தான் அந்த சந்திப்பு நடக்கப் போகிறது. உஷாராய் இருங்கள். இன்னொரு ஆளையும் அனுப்பி வைக்கிறேன். அவர் யாரிடம் பேசுகிறார் என்பது தான் நமக்கு முக்கியம்.....

அடுத்த நிமிடம் இன்னொரு உளவாளியும் உள்ளே நுழைந்தான். வெளியே இருந்த ஆள்கள் உஷாரானார்கள்.

ஆசான் மெல்ல குருபிக்கு அருகில் உட்கார்ந்தார். குருபிக்கு ஆசான் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் காரணம் இல்லாமல் ஆசான் வெளியே வர மாட்டார் என்று புரிந்திருந்ததால் அவர் படபடப்புடன் ஆசானைப் பார்த்து சிரம் தாழ்த்தி வணங்கினார். கையால் ஆசிர்வதித்த ஆசான் எதிரே அமர்ந்திருந்த பக்தர்களைப் பார்த்தார்.

தியானம் என்பதைக் காட்டிலும் பிரார்த்தனை என்கிற அலைவரிசையிலேயே அனைவரும் இருந்தார்கள். இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பலருக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு ஆளாகப் பார்த்துக் கொண்டே வந்த ஆசான் கடைசியில் ஒருவனிடம் வந்த பின் பார்வையை நிறுத்தினார்.

அந்த ஆளுக்கு வயது சுமார் 30 இருக்கும். கட்டுமஸ்தான உடல். நடுத்தர வர்க்கத்து தோற்றம். முகமெல்லாம் கவலை. கண்களை மூடி மனமுருகி புத்தரிடம் அவன் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.  இவன் தான் பொருத்தமானவன்

சற்று தள்ளி இருந்த ஒரு இளம் பிக்குவைப் பார்வையால் வரவழைத்த ஆசான் அந்த ஆளைத் தன்னிடம் அழைத்து வரச் சொன்னார்.

அந்த ஆளை அந்த பிக்குத் தட்டி தான் கண்களைத் திறக்க வைக்க வேண்டியதாக இருந்தது. கண்விழித்த அந்த நபர் என்ன?என்று சிறிய திகைப்புடன் கேட்க பிக்கு ஆசானைக் காட்டி ‘அவர் கூப்பிடுகிறார்என்று சொன்னார்.

அந்த ஆள் திகைப்புடனேயே எழுந்து ஆசானிடம் சென்றான். உளவாளிகள் அவனைப் பல கோணங்களில் படம் பிடித்தார்கள். ஒருவன் வெளியே உள்ள சகாவுக்குப் போன் செய்து ரகசியமாய் தெரிவித்தான். “ஒரு ஆளை ஆசான் கூப்பிட்டுப் பேசுகிறார்....

ஆசான் தன்னை நெருங்கிய அந்த ஆளிடம் கனிவாகக் கேட்டார். “உன் பெயர் என்னப்பா?

“சித்தார்த்

“உன் பிரார்த்தனை போதிசத்துவர் காதில் விழுந்திருக்கிறது சித்தார்த்

சித்தார்த் ஒரு கணம் புத்தர் சிலையையும், மறு கணம் ஆசானையும் மிகுந்த திகைப்புடனே பார்த்தான். லக்னோவில் பேல்பூரி விற்கும் சித்தார்த்துக்கு இப்போது தினசரி வருமானம் பாதியாகக் குறைந்து விட்டது. ஆனால் வீட்டு செலவோ இரட்டிப்பாகி விட்டது. அதனால் கடனும் அதிகமாகிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். இதை இப்போது தான் புத்தபிரானிடம் சொல்லி வழிகாட்டும்படி வேண்டிக் கொண்டிருந்தான்.....

ஆசான் அவனைத் தனக்கு மிக அருகில் வர சைகை காண்பித்து விட்டு அவன் அப்படி வந்தவுடன் காதில் சொன்னார். உன் பிரச்னை தீர இந்த புனிதத் தாளை உனக்குத் தரும்படி எனக்கு உத்தரவாகி இருக்கிறது...

சொல்லி விட்டு ஒரு தாளை அவனிடம் ஆசான் நீட்டினார். வியப்புடன் வாங்கி அதை அங்கேயே திறந்து பார்க்கப் போன சித்தார்த்தை தடுத்து நிறுத்திய ஆசான் சொன்னா. “இதை நீ பிரித்துப் பார்க்கக் கூடாது. இதனுள் மந்திர வாசகங்கள் இருக்கின்றன. இதை உன் வீட்டில் பூஜிக்கும் இடத்தில் வைத்து தினமும் வணங்கு.... எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும்....

அவன் அவரை பிரமிப்புடன் பார்த்தான்.   

ஆசான் அவனிடம் ரகசிய தொனியில் சொன்னார். “இந்தப் புனிதத் தாளை எடுத்துக் கொண்டு போகிற நீ இதோடு புத்தரின் ஆசிர்வாதத்தையும் எடுத்துக் கொண்டு போகிறாய் என்பதை உணர்ந்து கொள். இனி ஒரு நிமிடம் கூட இங்கே நீ நிற்க வேண்டாம். உடனடியாகப் போய் விடு. உன் நல்ல காலம் இந்த நேரத்தில் இருந்து ஆரம்பித்து விட்டது

தலையசைத்து விட்டு அவரை நன்றியுடன் வணங்கிய சித்தார்த் புத்தரையும் வணங்கி விட்டு அந்தப் புனிதத் தாளைத்  தன் சட்டைப் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டு  நம்பிக்கை கலந்த மிடுக்கோடு அங்கிருந்து வேகமாக வெளியேறினான். தன் வேலை முடிந்தது என்பது போல் ஆசான் எழுந்து கூன் நடையிலேயே உள்பக்கம் போய் விட்டார்.


உள்ளிருந்த உளவாளிகளில் இருவர் அவன் பின்னாலேயே வெளியேற மூன்றாமவன் போன் செய்து வெளியே இருந்த சகாவிடம் சொன்னான்.

ஆசான் ஒரு காகிதத்தை அவனிடம் கொடுத்து எதோ சொன்னார்.  அவன் வாங்கிக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கிறான்.... ஆசான் உள்ளே போய் விட்டார்.

வெளியே வந்த சித்தார்த்தை பல ஜோடி கண்கள் ஊடுருவிப் பார்த்தன. உளவாளிகளில் ஒருவன் பைக்கிலும் இன்னொருவன் காரிலும் தயாராகக் காத்திருந்தான்.  சட்டைப்பையில் இருந்த அந்த புனிதத் தாளை சொல்ல முடியாத உணர்வுடன் தொட்டபடியே அங்கே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை நோக்கி சித்தார்த் நடந்தான்.

அந்த ஆட்டோ ரிக்‌ஷா கிளம்பிய போது பைக்கில் ஒருவனும், காரில் இருவருமாக உளவாளிகள் பின் தொடர்ந்தார்கள். மீதமிருந்தவர்களில் ஒருவன் வாங் சாவொவிற்குப் போன் செய்தான்....

ஆசான் ரகசியமாக ஜன்னல் வழியாகப் பார்த்த போது இரண்டு உளவாளிகள் மட்டும் டெர்கார் மடாலயத்தின் முன்புறத்தில் இருந்தார்கள். ஆசான் போன் செய்து மற்ற மடாலயங்களில் உள்ள நிலவரத்தைக் கேட்டார். அங்கிருந்த உளவாளிகள் போய் விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது. இங்கு மட்டும் கூடுதல் முன்னெச்சரிக்கை காரணமாக இன்னமும் இரண்டு உளவாளிகள் நிற்கிறார்கள்...

அடுத்த ஐந்தாவது நிமிடம் டெர்கார் மடாலயம் முன்னால் ஒரு கார் வந்து நின்றது. மடாலயத்தில் இருந்து முக்காடு போட்டுக் கொண்டு கூன் விழுந்த ஒரு பிக்கு அவசரமாய் வெளியே வந்து அந்தக் காரில் ஏற கார் மிக வேகமாய் அங்கிருந்து பறந்தது. ஒரு கணம் நிலைகுலைந்த அந்த இரண்டு உளவாளிகளும் உடனடியாக உஷாராகி வேகமாக அந்தக் காரைத் தொடர்ந்து பைக்கில் செல்ல, இரண்டு நிமிடம் கழிந்து அக்‌ஷய் டெர்கார் மடாலயம் வந்து சேர்ந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்

 (அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

8 comments:

  1. அமானுஷ்யனின் ப்ளான் சூப்பர். லீ க்யாங்கும் அமானுஷ்யனும் நல்ல மேட்ச்.

    ReplyDelete
  2. ammanushyan sinthanai seiyal ellam super enna thaan lee kyong plan pannalum amanushyan athiriyai edai podum thiran viyakka vaikkuthu sir
    waiting for next week

    ReplyDelete
  3. தியானம்,பிரார்த்தனை இவற்றிற்கு இடையே உள்ள அலைவரிசை வித்யாசங்கள் என்ன?
    விளக்கமுடியுமா? விபுலானந்தன்

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனையில் ஒரு கோரிக்கை பிரதானமாக இருக்கும். தியானம் என்பது மேல் மனநிலைகளில் சஞ்சரிப்பது.

      Delete
  4. I feel like seeing this in front of me like a movie. Fantastic sir.

    ReplyDelete
  5. Yukikka mutiyatha thiruppangaludan super.. Adutha varathirkku kathu kondirukkiren...

    ReplyDelete
  6. சிறப்பாக போகிறது...
    தொடருங்கள்..

    ReplyDelete