Monday, April 7, 2014

எழுத்தால் நான் இழந்ததும், பெற்றதும்..!


Penmai.com உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கடந்த மூன்று வாரங்களாக நான் அளித்த பேட்டியின் முதல் பகுதி -

கார்த்திகா - Hi sir, First of all, Hearty Welcome to Our Show.. உங்களை இங்க வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.. நீங்க எங்களுக்காக நேரம் ஒதுக்கி வந்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்.. மிக்க நன்றிகள் Sir!! 
Show - க்குள்ள போறதுக்கு முன்ன, உங்களைப் பத்தி நீங்க எங்களுக்காக கொஞ்சம் சொல்ல முடியுமா..?? நாங்க எங்களுக்குத் தெரிஞ்ச வரை உங்களைப் பத்தி சொல்லிருக்கோம்.. இருந்தாலும் உங்களை பத்தி உங்க வாய் மொழியாக கேட்க ஆசைப்படுறோம்.. எங்களுக்காக சொல்றீங்களா?? - 

நான்: வணக்கம் மேடம். பெண்மை உறுப்பினர்களுக்கும் என் வணக்கங்கள்.
பூர்விகம் கர்நாடகத்தில் மங்களூர் அருகில் இருக்கும் குக்கிராமம். தாய்மொழி துளு. ஆனால் பிறந்தது வளர்ந்தது படித்தது வேலை பார்ப்பது எல்லாம் தமிழகத்தில் கோயமுத்தூரில். விஜயா வங்கியில் வேலை பார்க்கிறேன். திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மனைவி இல்லத்தரசியாக (housewife) ஆக இருக்கிறார்.

கார்த்திகா - ரொம்ப சந்தோஷம் Sir.. ரொம்ப short & Sweet ah சொல்லிடீங்க.
வங்கி பணியிலிருந்து எப்படி நீங்க Writing Field-குள்ள வந்தீங்க?? உங்களுக்கு எழுதணும்ன்னு ஆசை எப்ப வந்தது?? எழுத்துல ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?? சின்ன வயசுல இருந்தே நிறைய எழுதுவீங்களா?? உங்களோட எழுத்துப் பயணத்துக்கு தூண்டுகோலாக அமைந்த விஷயம் எது??

நான் - சிறு வயதில் இருந்தே கதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் எனக்கு இருந்தது. புரிகிறதோ இல்லையோ, நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நான் கிடைக்கிற புத்தகங்களை எல்லாம் வாசிப்பேன். இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், இப்படி மாற்றி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும் என்றெல்லாம் படிக்க படிக்கத் தோன்றும்.
பள்ளி நாட்களிலேயே (பத்தாம் வகுப்பு படிக்கையில்) கதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்திருந்தேன். அதை வாங்கிப் படிக்கவென்றே சில நண்பர்களும் இருந்தார்கள். கல்லூரி நாட்களில் கவிதைகள், கதைகள் எழுதி அதையும் விரும்பி படிக்க ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தது.
விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவன் பத்திரிக்கைக்கு சீரியஸாக எழுதி அனுப்ப நினைத்தது வங்கியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு தான். முதல் கதை ஆனந்த விகடனில் 1987ல் வெளியாகியது. தலைப்பு-”ஊருக்கு மகான் ஆனாலும்...”

கார்த்திகா - Interesting Sir.. முதல் கதையே விகடன்- ல வந்துருக்கு அதும் 1987 ல.. Whoa.. Great Sir!! பத்தாம் வகுப்பு படிக்கும் போதே உங்களுக்கு Fan Club Start ஆகிருக்கு.. அது Day by Day increase ஆகிட்டே வருது.. இப்போ வரைக்கும்…
எப்பொழுதுமே நமக்கு நம்மளோட’முதல்’ என்றுமே ஸ்பெஷல் தான் இல்லையா... அது எப்படிப்பட்ட கிறுக்கலா இருந்தா கூட… அப்படி நீங்க 10th ல எழுதுன்ன அந்த முதல் கதை பத்தி சொல்ல முடியுமா? அப்போ உங்களோட பிரண்ட்ஸ் உங்களோட கதைய படிச்சிட்டு முதல்ல உங்ககிட்ட சொன்ன விஷயம் என்ன?? உங்களோட Parents நீங்க எழுதின முதல் கதையை படிச்சாங்களா?? உங்க Friends & Parents எந்த மாதிரியான Feedback கொடுத்தாங்க?? அப்போ அதை நீங்க எப்படி எடுத்துகிட்டீங்க...

நான் - பத்தாம் வகுப்புக் கிறுக்கல்களின் ஆரம்பம் சரியாக நினைவில்லை. ஆனால் நினைவில் நிற்பது “அட்வகேட் அமர்நாத்” என்ற துப்பறியும் கதையின் பெயர். நோட்டுப் புத்தகத்தில் எழுதிய அந்தக் கதையை கதிரேசன் என்ற மாணவ நண்பன் பள்ளியின் கடைசி நாளில் எடுத்துக் கொண்டு போனான். ஒரு கொலைக் குற்றவாளியை அட்வகேட் அமர்நாத் தன் புத்திசாலித்தனத்தால் எப்படி கண்டுபிடித்தார், கோர்ட்டில் வாதாடி ஜெயித்தார் என்பது போல வரும். அதை வீட்டில் தந்து படிக்கச் சொல்லவில்லை. மகன் கதை எழுதுவான் என்று பெற்றோருக்குத் தெரியும் என்றாலும் பெரிய ஊக்குவித்தல் இருந்ததில்லை. அதே நேரத்தில் எழுதாதே என்று கண்டித்ததும் இல்லை. அந்தக் கதை சில மாணவர்களிடையே சர்க்குலேசஷன் போனது அவ்வளவு தான்.
கல்லூரி நாட்களில் குறுநாவல் என்று முதல் முதலில் நான் எழுதியது “இவர்கள் தனி நட்சத்திரங்கள்” என்ற காதல்+சஸ்பென்ஸ் கதை. முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் அஸ்வினி, பரணி, கார்த்திக், ரேவதி என நட்சத்திரங்களின் பெயர்களில் வருவார்கள். என் நெருங்கிய நண்பர்களிடத்தில் மிகவும் பிரபலமான கதை இது. ஓரளவு எனக்கு திருப்தியளித்ததும், சிலரிடம் சீரியஸாக அங்கீகாரம் பெற்றுத் தந்ததும் ஆன முதல் கதை இது தான். சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் எழுதி இருப்பேன் இக்கதையை. போகப் போக நோட்டில் நான் ஒரு பக்கம் எழுதினாலும் உடனே வாங்கிப் படிப்பார்கள். இந்த நாவலை வீட்டிலும் படித்தார்கள். நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அந்த குறுநாவல் கதை என் கையெழுத்தில் இன்றும் இருக்கிறது...

கார்த்திகா - உங்க பதில் பார்த்துட்டு பேச்சு வராம உட்காந்துருக்கோம்… உங்கட்ட Natural ah அந்த Flair இருந்துருக்கு Sir.. ஆரம்பத்திலே துப்பறியும் / Suspense கதை.. Ah ha ஒரு துப்பறியும் சாம்புவா வர வேண்டியவர், Banker ah வந்துட்டார்.. Just Miss!!
//அந்தக் கதை சில மாணவர்களிடையே சர்க்குலேசஷன் போனது அவ்வளவு தான்.//
என்ன Sir Casual ah Circulation போனது அவ்வளவு தான் ன்னு சொல்லிடீங்க.. நான் லாம் கூப்பிட்டு கொடுத்தாலும் யாரும் படிச்சுருக்க மாட்டாங்க.. Higher Secondaries அப்போவே Circulate ஆகி விடாம படிச்சது பெரிய விஷயம் தான்..
உங்க Parents அப்போ இருந்து Silent ah பார்த்து Encourage பண்ணிருக்காங்க.. Superb Sir!! Next “இவர்கள் தனி நட்சத்திரங்கள்” - நட்சத்திரங்களைப் பாத்திர பெயர்களா வச்சுருந்துருக்கீங்க.. வித்யாசமா யோசிக்கறீங்க Sir.. அதான் உங்க Specialty யும் கூட..
//அந்த குறுநாவல் கதை என் கையெழுத்தில் இன்றும் இருக்கிறது...//
இதை பார்த்துட்டு உங்க ரசிகர்கள், அந்த கதையை Post செய்ய சொல்லி கேட்க போறாங்க பாருங்க
நாங்களே முதல் கதை எதுன்னு கேட்கணும்ன்னு இருந்தோம்.. நீங்களே சொல்லிடீங்க.. உங்க முதல் கதை “ஊருக்கு மகான் ஆனாலும்...” விகடன் ல வந்ததை சொன்னீங்க.. விகடனின் அறிமுகம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?? அந்த கதைக்கு உங்களுக்குக் கிடைச்ச First Compliment என்ன??

நான் - எனது முதல் கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பி மூன்று மாதங்கள் ஆகியும் திரும்பியும் வரவில்லை. பிரசுரமும் ஆகவில்லை. அதற்குப் பின் ஒரு கடிதம் விகடனில் இருந்து வந்தது. அந்த சிறுகதையை பிரசுரத்திற்கு ஏற்பதாகவும், அதை இடையில் வேறெதற்கும் அனுப்பவில்லை என்ற உறுதிமொழிக்கடிதமும் கேட்டார்கள். அனுப்பினேன். பிரசுரம் ஆகியது. அன்றைய சந்தோஷம் இன்றும் நினைவில் நிற்கிறது. கதையைப் படித்து விட்டு எல்லோருமே ஒரே போல் சொன்ன கமெண்ட். “மிக நன்றாக இருக்கிறது. கண் கலங்கி விட்டேன்”.

கார்த்திகா  - உங்களோட ஊருக்கு மகான் ஆனாலும் கதையை விகடனுக்கு அனுப்புவதற்கு காரணமாக அமைந்த விடயம் எது? நீங்கள் கதை அனுப்பி பதில் வராமல் இருந்த அந்த மூன்று மாதங்களில் உங்களது மனநிலை என்னவாக இருந்தது?? நிச்சயமாக உங்களோட கதை பிரசுரம் ஆகும்னு எதிர்பார்த்தீர்களா?? அவங்ககிட்ட இருந்து உங்களுக்கு பதில் வரும் வரை உங்களுக்கு எந்த மாதிரியான எதிர்பார்ப்பு இருந்தது??

நான்  - என் முதல் கதைக்கு கரு ஆதிசங்கரர் தான். சிறுவனாக இருந்த போது அவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தன் தாய் ஆர்யாம்பாளிடம் “முதலை என் காலைப் பிடித்திழுக்கிறது. சன்னியாசம் வாங்கிக் கொண்டால் என்னை விட்டு விடுவதாகச் சொல்கிறது. என்ன செய்யட்டும்” என்று கேட்க மகன் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் மகன் சன்னியாசி ஆக அவர் தாய் ஒத்துக் கொள்கிறார். அதன் பின் கரையேறிய அவர் வீட்டுக்குள் நுழையவில்லை. பிக்*ஷாந்தேஹி என்று வெளியே நின்ற போது தான் அந்த தாயிற்கு உண்மை உறைத்தது. மிகவும் துக்கத்துடன் மகனுக்கு அந்தத் தாய் பிரியாவிடை தருவதும், மரண காலத்தில் வருவதாக மகன் வாக்களித்துச் செல்வதும் என உணர்ச்சிகரமான நிகழ்வு அது. அந்தக் கதை என்னை மிகவும் பாதித்திருந்தது.
ஒரு உறவு இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு நபர் அதை முறித்துக் கொண்டு விட்டாலும் அதை இன்னொரு நபர் முறித்துக் கொள்ள விரும்பா விட்டால் என்ன ஆகும்? குறிப்பாக ஒரு துறவியும் அவர் தாயும். மகன் சன்னியாசியாகி விட்டாலும், எல்லா உறவுகளையும் துண்டித்து விட்டாலும் அவன் என் மகனே என்று திடமாக நிற்கும் ஒரு தாயிற்கும், அந்த துறவிக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் பிரவாகம் தான் “ஊருக்கு மகான் ஆனாலும்..” கதை.

கதை அனுப்பி ஒரு மாதம் போன பிறகு பெரிதாய் நம்பிக்கை இருக்கவில்லை. சிறிது ஏமாற்றமாய் தான் இருந்தது. ஆனால் நான் எப்போதுமே ப்ராக்டிகல் நபர். அதனால் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

சத்யப்ரியா - super sir. unga talks are very impressive like your writtings. i read stories and articles in your blog. too impressive.
here is my question sir,
நீங்கள் முதலில் ஒரு வெற்றிகரமான எழுத்தாளரா எப்போ உணர்ந்தீங்க??

நான் - நான் என்னை இப்பொதும் முழு வெற்றியாளனாக உணரவில்லை. இனியும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. என்றாலும் ஒரு நல்ல எழுத்தாளனாக என்னை நான் உணர ஆரம்பித்தது நிலாச்சாரலிலும், என் ப்ளாகிலும் தொடர்ந்து எழுத ஆரம்பித்த பிறகு தான். பின் அந்த உணர்வு கூடிக் கொண்டே வந்திருக்கிறது. அமானுஷ்யனை நிலாச்சாரலிலும், ஆழ்மனதின் அற்புத சக்திகளை யூத்ஃபுல் விகடனிலும் எழுதிக் கொண்டிருந்த போது கிடைத்த வரவேற்பு சாதாரணமானதல்ல. எண்ணற்ற வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைக்க ஆரம்பித்த காலம் என்றால் நான் அதையே சொல்ல வேண்டும்.

கார்த்திகா - Perfect Sir.. அந்த படைப்புகளின் மூலம் ஒட்டு மொத்தமா எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைச்சுடீங்க...!
OK! இதை சொல்லுங்க Sir.. ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு எப்படி போகும்?? Tell us about your normal working day..

நான் - காலை 5.00 முதல் 5.15க்குள் விழிப்பு. காலைக்கடன்கள் கழிந்து மெயில் செக் செய்து விட்டு 6.00, 6.15 வரை படிப்பேன். பின் அரை மணி நேரம் வாக்கிங். பிறகு நியூஸ்பேப்பர் ரீடிங். அன்று என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்து விட்டு பிறகு அதற்கான மெட்டீரியல் ஏதாவது இருந்தால் அதை சேகரித்து வைத்து விட்டு குளியல், டிபன், ஆபிஸ் புறப்பாடு 9.00 மணிக்கு.

மாலை 6.00 மணிக்கு வீடு வந்து சேரும் வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்று எழுதும் விஷயங்களில் மனம் இருக்கும். மாலை காபி டீ குடித்து விட்டு எழுத ஆரம்பிப்பேன். இடை இடையே போன்கால்கள் வரும்.. அதை அட்டெண்ட் செய்து விட்டு எழுதுவது தொடரும். 8.00 8.15ல் சாப்பாடு.. சாப்பிட்டு முடித்த பிறகும் எழுதுவது தொடரும். 9.30க்கு மேல் வீட்டு வராந்தாவிலேயே சிறு நடை. 9.45 முதல் 10.00க்குள் உறக்கம்.
பொதுவான வேலை நாள் இப்படி தான் இருக்கும்...

ப்ரத்யுக்‌ஷா - Family - bank work - stories --> இதை எப்படி சமாளிக்கறீங்க?? Ladies கதை எழுதுன்னா வீட்டு வேலை, Family பார்த்துக்கணும்ன்னு Commitments இருக்கு.. அதே மாதிரி நீங்க எழுதறப்போ என்ன மாதிரியான challenges - time விஷயத்துல - face பண்றீங்க??

நான்  - எல்லாவற்றையும் சமாளிப்பதில் நிறையவே சிரமங்கள் இருக்கின்றன. வீடு-பேங்க்-எழுத்து மட்டுமல்லாமல் நேரிலும், போனிலும் தொடர்பு கொள்ளும் உறவுகள், நட்புகள், வாசக நண்பர்கள், ஜோதிடம் பற்றிய சந்தேகங்கள் கேட்பவர்கள் என பலரும் இருக்கிறார்கள். முடிந்த வரை சமாளிக்கிறேன். 

எங்களுக்கு மிகுந்த நேரம் ஒதுக்குவதில்லை என்று வீட்டு நபர்களின் புகார், நீங்கள் எங்கள் வீட்டுக்கே வருவதில்லை, எங்களுக்கு போன் செய்து (நிறைய நேரம்) பேசுவதில்லை என்று நட்புகளின் புகார் இதெல்லாம் இருக்கவே இருக்கிறது.

நான் மிக அவசியமானது என்று நினைப்பதற்கு அவசியமான, நியாயமான நேரம் கண்டிப்பாக ஒதுக்குகிறேன். மற்ற புகார்களை லட்சியம் செய்வதில்லை.

கார்த்திகா - பல சிரமங்களுக்கிடையில நீங்க எழுதுறீங்க.. அப்படி எழுதும் போது நீங்க இழந்ததும் பெற்றதும் (Lost and Earned) என்ன Sir?? Just like Time pass, Entertainment, Relatives, Good Name, Knowledge etc., இப்படி ஏதாவது இருக்கும் ல.. அப்படி ஏதும் இருந்தால் சொல்லுங்க…

நான்  - நிறைய எழுதுவதால் நான் இழந்த பெரிய விஷயம் முன்பைப் போல் படிக்க நேரம் அதிகம் கிடைப்பதில்லை என்பதே. எழுதுவது சம்பந்தமாக தேவையானதை மட்டும் தான் இப்போது படிக்க நேரம் கிடைக்கிறதே ஒழிய மற்றபடி விரும்பியதை எல்லாம் படிக்க முடிவதில்லை. ஒரு காலத்தில் நூல்களே கதி என்று இருந்த எனக்கு இது இழப்பே. மற்றபடி நான் இழந்தவை சில்லரை விஷயங்களே.
எழுதுவதால் நான் பெற்ற பெரிய விஷயம் மன நிறைவு. “மன வருத்தம் ஏற்படும் போதெல்லாம், தன்னம்பிக்கை இழக்கும் போதெல்லாம் உங்கள் ப்ளாகைப் படிக்கிறேன்.” “உங்கள் எழுத்துக்கள் எனக்கு டானிக் போல்.” என்பது போல அடிக்கடி எனக்கு நிறைய மெயில்கள் வருகின்றன. 

சென்ற வருடம் திருப்பூரில் இருந்து ஒருவர் “தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த நேரத்தில் தற்செயலாக உங்கள் ப்ளாகிற்கு வந்தேன். உங்கள் எழுத்துக்களால் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டேன். என் பிரச்சினைகள் தீரவில்லை. ஆனால் பிரச்சினைகளை சந்திக்கக் கூடிய மன உறுதி இப்போது எனக்கு உள்ளது” என்று ஒரு எழுதினார்.

மலேஷியாவில் இருந்து ஒரு இளைஞர் “உங்கள் எழுத்துக்களை படிக்க ஆரம்பிக்கும் முன் என்னிடம் நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்தன. ஆனால் இப்போது உங்கள் எழுத்துக்களின் தாக்கத்தால் அவற்றை எல்லாம் விட்டு விட்டேன். என்னைப் போல் நிறைய பேரை உங்கள் எழுத்துக்கள் காப்பாற்றும் அண்ணே” என்று சொன்னார். இப்போதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்னுடன் பேசுகிறார். இப்படி எத்தனையோ பேர்...

இதை எல்லாம் படிக்கும் போது நான் பெறும் நிறைவு சாதாரணமானதல்ல. எத்தனையோ முறை சலிப்பும் சோம்பலும் தலை தூக்கும். ஆனால் இது போன்ற feedbacks அடிக்கடி வரும் போது ஒரு அசாதாரண உறுதி என்னுள் எழும்.... மறுபடி எழுத ஆரம்பிப்பேன்.

(தொடரும்)

6 comments:

  1. Wow…….!!! Fanstastic…!!! Sir… அற்புதம்

    We neeed …!! “இவர்கள் தனி நட்சத்திரங்கள் “..... asap… sir..

    Title itself is blasting “இவர்கள் தனி நட்சத்திரங்கள் “

    ReplyDelete
  2. /// நான் என்னை இப்பொதும் முழு வெற்றியாளனாக உணரவில்லை... ///

    இந்தப் பணிவு ஒன்றே போதும்... நீங்கள் நினைத்துப் பார்க்காத உச்சத்திற்கு கொண்டு சென்று விடும்...

    வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  3. மிகவும் அழகான பதில்கள் அண்ணா...
    உங்களைப் பற்றி நாங்களும் அறிந்து கொள்ளத் தந்தீர்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் byசங்கர்லால்

    ReplyDelete