Tuesday, April 15, 2014

சோர்வை விரட்டுவது எப்படி?


பெண்மை.காமில் என் பேட்டியின் பகுதி 6

கார்த்திகா: Well Said Sir... மிகவும் தெளிவாகவும் விரிவாகவும், ரொம்ப Practical - ஆகவும் சொல்லி இருக்கீங்க... வேற எந்த புத்தகத்திலும் படித்து தெரிந்து கொள்ளமுடியாத நடைமுறைப்படுத்தக் கூடிய எளிமையான ஆலோசனையை எங்களுக்கு கொடுத்து இருக்கீங்க. மிக்க நன்றி சார்.

எங்களோட அடுத்த கேள்வி சார்.

தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? அவற்றை எப்படி நம் வளர்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?


நான்: தோல்வி என்பது இடைவேளை என்ற தலைப்பில் புத்தகம் எழுதியது மட்டுமல்லாமல் அது உண்மை என்றே ஆழமாக நம்புபவன் நான். தோல்வி நிறைய கற்றுத் தரும். நம்மை சரிப்படுத்தும். மெருகுபடுத்தும். அடக்கத்தைக் கற்றுத் தரும். எனவே தோல்வி வரும் போது அது சொல்லித் தரும் பாடங்களை அலட்சியப்படுத்தி விடாமல் கற்று நம் அடுத்த முயற்சிகளில் சரி செய்து கொள்ள வேண்டும். எல்லா மகத்தான வெற்றியாளர்களும் ஆரம்ப காலங்களில் நிறைய தோல்விகள் கண்டவர்களே. அதனால் தோல்வியில் துவள வேண்டாம்.

எல்லோரிடமும் சர்டிபிகேட் வாங்க நாம் பிறக்கவில்லை. அப்படி எல்லோரையும் திருப்திப்படுத்த யாராலும் முடியவும் முடியாது. அதனால் புறக்கணிப்பவர்களைப் புறக்கணியுங்கள். நிம்மதியாக இருப்பீர்கள்.

சரவணகுமார்: வணக்கம் கணேசன் ஜி,
சமீபகாலமாக உங்களுடைய வெளியுலக முன்னேற்றத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்த்தியாகவும் உள்ளது. தங்களின் ஒவ்வொரு பதிலும் உங்கள் படைப்புக்களை போன்றே தெளிவாக உள்ளது.

எனக்கு உங்களிடம் ஒரு வேண்டுகோள் உள்ளது. அது என்னவென்றால் " குழந்தைகளை நற்குணங்களுடன் வளர்ப்பது எப்படி ? குழந்தைகளின் வயது, அப்பொழுது அவர்கள் உள்ள மனநிலை, அவர்களை வளர்க்கும் விதம், எதுபோன்ற குணங்களை அவர்களிடம் ஆழபடுத்த வேண்டும், எந்த செயல்களை அவர்கள் முன் தவிர்க்க வேண்டும்" போன்றவற்றை உங்கள் எழுத்துக்களில் ஒரு தொடரை எதிர்பார்க்கிறேன். 

அமானுஷ்யன் தொடரில் அக்ஷயும் வருணும் வரும் பதிவுகளை படித்து வியந்துள்ளேன். ஆகவே இதுபோன்ற தொடரை எழுதினால் நல்ல குணமுள்ள வருங்கால இளைஞர்களை உருவாக்குவதில் உங்களின் பங்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எனது கேள்வி. 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய லட்சியம் அல்லது இறுதிநிலை என்ன ? என்பதை பற்றி உங்களுடைய கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.



நான்: குழந்தை வளர்ப்பும், அதில் கவனிக்க வேண்டிய விஷயங்களும் மிக முக்கிய சப்ஜெக்ட் தான். உங்கள் ஆலோசனையை கவனத்தில் வைத்துக் கொள்கிறேன். பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் அறிவுரைகளை விட்டு விட்டு நாம் நல்ல ரோல் மாடல்களாக இருந்தாலே போதும். இளைய தலைமுறை எங்கேயோ போய் விடும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய இலட்சியம் அவரவர் மனதின் ஆழத்தில் பதிந்தே இருக்கிறது. அதை அவன் அடையும் முயற்சிகளில் ஈடுபடும் வரை அவன் உண்மையான சந்தோஷத்தை உணர முடியாது. அந்த உண்மை இலட்சியத்திற்குப் பதிலாக பதிலாக அவன் வேறு என்ன பெரிய சாதனைகள் செய்தாலும் உள்ளே ஒரு வெறுமை மிஞ்சவே செய்யும். அதனால் அவன் தன் இதயத்தின் ஆழத்தில் உள்ள தனக்கே உரித்தான தனிக்கடமையை உணர்வதும் அதை நிறைவேற்றுவதுமே அவன் செய்ய வேண்டியது. (தியானம், ஆத்மசிந்தனை, சுயபரிசீலனை ஆகியவை அவன் இதயத்தின் ஆழத்தில் உள்ள இலட்சியத்தை அவனுக்கு அடையாளம் காட்டும்.)

கார்த்திகா: நம்மை நாம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்க என்ன செய்ய வேண்டும்..??


நான்: எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க நான்கு விஷயங்கள் மிக அவசியம் என நினைக்கிறேன். அவை நல்ல உறக்கம், அளவான உணவு, பாசிடிவ் எண்ணங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கு உள்ள வாழ்க்கை.

உஷாந்தி: ஆரம்ப காலங்களில் உங்களின் எழுத்துக்கு தகுந்த அடையாளம், வரவேற்பு & Demand (Both Printing Media & வாசகர்களிடம் இருந்து) கிடைக்கறதுக்கு முன்னாடி தொடர்ந்து உறுதியாக நீங்கள் முயற்சி பண்ணினது எப்படி?? 

ஒரு சரியான தூண்டுகோல், ஊக்குவிப்பு இப்படி எதுவும் இல்லாமல், நம்மளே நம்ம மேலும் நம் எழுத்து மேலும் உறுதியாக எதுவும் சொல்ல முடியாத சமயங்களில் உங்களை தொடர்ந்து எழுத வைத்ததது எது. எழுதணும் அப்படிங்கற Passion மற்றும் எழுத்து மேல இருக்கற காதல் இதையும் தாண்டி வேற எந்த விஷயம் உங்களை தொடர்ந்து எழுத வைக்கக் காரணமாக அமைந்தது. 

எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு தகுந்த தங்களுக்கான அடையாளம் தேடற அந்த டைம். அப்பொழுது தினம் தினம் பல சவால்களையும், நிறைய ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கலாம். இதை எல்லாத்தையும் தாண்டி எப்படி அந்த சமயங்களை வெற்றிகரமாக உங்களால் கடந்து வர முடிந்தது?

எல்லா எழுத்தாளர்களும் கண்டிப்பாக அந்த Tough Time- ஐ Cross பண்ணி தான் வந்தாகணும் இல்லையா…. நீங்க எப்படி அந்த Period-ஐ சமாளிச்சு அதை கடந்து வந்தீங்கன்னு சொன்னீங்க ன்னா இப்ப வளர்ந்து வர இளம் எழுத்தாளர்களும் மிகவும் Helpful -ஆ இருக்கும். 


நான்: அந்த ஆரம்ப கட்டங்கள் ஒரு எழுத்தாளனுக்கு மிக கடினமானவை தான். என் முதல் கதை ஆனந்த விகடனில் பிரசுரமாய் படித்தவர்கள் எல்லாரும் பாராட்டினாலும் அடுத்த கதை அவ்வளவு சீக்கிரமாக விகடனில் பிரசுரமாகவில்லை. அடுத்த சிறுகதை குமுதத்தில் பிரசுரமாகி அதற்குப் பணமும் கொடுத்தார்கள். ஆனால் பாதி கதையை எடிட் செய்து அதன் தரத்தையே மோசமாக்கி விட்டார்கள். பின் குமுதத்திற்கு அனுப்புவதை நிறுத்தி விட்டேன். பிறகு நீண்ட இடைவெளி எழுத்தில் இருந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் தான் இந்துவில் எழுதினேன். பின் தொடர்ந்து இந்துவில் யங் வர்ல்ட் பகுதியில் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வந்தன. பிறகு யங் வர்ல்ட் பகுதியில் மாற்றம் செய்தார்கள். அந்த மாற்றம் என் எழுத்துக்கு அனுகூலமாய் இருக்கவில்லை. மறுபடி இடைவெளி.

இந்தக் காலக்கட்டத்தில் பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருந்த சிறுகதைகளை எல்லாம் வாசிக்கும் போது பல சிறுகதைகள் சராசரிக்கும் குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றும். நம் கதைகளை நிராகரித்து இந்த குப்பைகளை எல்லாம் பிரசுரிக்கிறார்களே என்று திகைப்பாக இருக்கும். எந்த அடிப்படையில் இவர்கள் கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கேள்வி சீரியஸாக மனதில் எழும். (ஒருசில கதைகள் மிகப்பிரமாதமாகவும், நான் எழுதியதை விட நன்றாகவும் இருப்பதையும் கண்டு ரசித்தும் இருக்கிறேன். ஆனால் அவை அபூர்வமே).   

அந்த மாதிரி சமயங்களில் கூட என்னால் தொடர்ந்து எழுதாமல் இருக்க முடிந்ததில்லை. உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று வலுக்கட்டாயமாக என்னை எழுத வைத்தது. பலர் எழுதுவதை விட நான் நன்றாக எழுதுகிறேன் என்ற நம்பிக்கை இருந்தது. நான் இயல்பிலேயே விடாமுயற்சியும் பொறுமையும் உள்ளவன். என்னை அவ்வளவு சீக்கிரம் தன்னம்பிக்கை இழக்க வைக்க நான் வெளி உலகை விட்டதில்லை. ஆனாலும் சில சமயங்களில் மிகவும் சோர்வாக இருக்கும். அப்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை ஊட்ட நிறைய மேதைகள் இருந்தார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பேன். மிகவும் பிடித்த பகுதிகளை நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருப்பேன். அதை எல்லாம் படித்து சோர்வை விரட்டுவேன். மறுபடி எழுவேன். ஏதாவது எழுத ஆரம்பிப்பேன்.
                

இணையம் வந்தபின் நிறைய எழுத ஆரம்பித்த பின் நான் திரும்பிப் பார்க்க வேண்டி இருக்கவில்லை. இன்றைய இளம் எழுத்தாளர்கள் ஒருவிதத்தில் அதிர்ஷ்டசாலிகள். பத்திரிக்கைகளையே நம்பி இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. உண்மையில் திறமை இருக்குமானால் மின்னிதழ்களிலும், தங்கள் ப்ளாகுகளிலும் எழுதி திறமையை வெளிப்படுத்த முடியும். 

(தொடரும்)

Monday, April 14, 2014

நெகடிவ் எண்ணங்களை எப்படி நீக்குவது?


தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!

பெண்மை.காமில் என் பேட்டி பகுதி 5


ருத்ரா: என்னுடைய சிறு கேள்வி,
உங்களின் பார்வையில் கர்மா என்றால் என்ன?
பிரபஞ்சத்தின் அடிப்படை விதி என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்?


நான்: செயலைச் செய்பவன் அந்த விளைவில் இருந்து என்றுமே தப்ப முடியாது என்பதே கர்மா சித்தாந்தம். அந்த விளைவு உடனடியாகக் கிடைக்கலாம். சில காலம் கழித்தும் கிடைக்கலாம். அடுத்த ஜென்மத்திலும் கூடக் கிடைக்கலாம். ஆனால் விளைவு என்பது செயலுடனேயே பிறந்து விடுகிறது என்கிறது கர்மா.


பிரபஞ்சத்தின் அடிப்படை விதி இன்னதென்று தெளிவாக சில வரிகளில் சொல்லி விடும் அளவுக்கு எளிமையாக இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்து விடவில்லை என்பதே என் கருத்து.


பிரத்யுக்‌ஷா: ஆன்மீகத்தில் ஈடுபட ஆத்திகவாதியாகவோ நாத்திகவாதியாகவோ இருக்க தேவை இல்லை.. இதை பற்றிய உங்கள் கருத்து என்ன??


நான்:
ஆன்மிகத்தில் ஈடுபட ஆத்திகவாதியாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. எனக்குத் தெரிந்து கடவுளை வணங்காமலேயே மிக நல்ல காரியங்களைச் செய்து கொண்டு கடவுள் மெச்சுகிற மாதிரி வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அதே போல் கடவுளை வணங்கிக் கொண்டே கடவுளே சகிக்க முடியாத ஈனத்தனமான செயல்களைப் புரிபவர்களும் இருக்கிறார்கள். கடவுள் யாரை அங்கீகரிப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை.


கார்த்திகா: உங்களோட பல கட்டுரைகள், கதைகளில் ஆன்மீகத்தைப் பற்றியும் அதையொட்டிய தகவல்களையும் ரொம்ப விரிவாகவும் ஆழமாகவும் எழுதறீங்க… உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு எப்போது வந்தது. சின்ன வயதிலிருந்தே ஆன்மீகத்தில் உங்களுக்கு நாட்டம் அதிகமா?? ஆன்மிகம் சம்மந்தமா Articles எழுதணும் ன்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு??


நான்: எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம். புத்தர் மேலும் ஆதிசங்கரர் மேலும் ஒரு தனி ஈடுபாடு சிறு வயதில் இருந்தே இருந்தது. ஆன்மிகத்திலும் மதங்களைக் கடந்த ஈடுபாடு எனக்கு இருந்தது. அதனால் தானோ என்னவோ என் முதல் கதையான “ஊருக்கு மகான் ஆனாலும்” கதாநாயகன் ஒரு துறவி. என் முதல் புத்தகமும் ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பு. தினத்தந்தி போன்ற பிரபல பத்திரிக்கையில் ஒரு நீண்ட தொடர் எழுத வாய்ப்பு கிடைத்ததும் ஆன்மீகத்தில் தான்.


கார்த்திகா: இதுவரைக்கும் நீங்க எழுதினதுல ரொம்ப அமோக வரவேற்பு கிடைச்ச Book/Article எது??


நான்: இதுவரை நான் எழுதினதில் மிக அதிக அமோக வரவேற்பு பெற்ற ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் “ஆழ்மனதின் அற்புத சக்திகளை”ச் சொல்ல வேண்டும். ஒரு வருட காலத்தில் மூன்று பதிப்பு கண்டிருக்கும் நூல் அது. பல தரப்பு மக்களை வசீகரித்திருக்கும் அந்த புத்தகத்தைப் படித்து விட்டு தினமணி ஆசிரியரே ’ஒரு முறை படித்து விட்டேன். மறுபடி படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்’ என்று தினமணியில் எழுதியது பெரியதொரு விருதுக்கு சமமான மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.


கார்த்திகா: நீங்கள் எழுதியதில் அமோக வரவேற்ப்பைப் பெற்ற ஒன்றை மட்டும் சொல்வது கஷ்டம் தான்.. ஆனாலும் நீங்கள் பதில் சொன்னது சந்தோசம் Sir.. ஆழ்மனதின் அற்புத சக்திகள் - ஒரு வருட காலத்தில் மூன்று பதிப்பு கண்டிருக்கும் நூல்.. இது சாதாரண விடயம் இல்லை Sir.. Congrats!! கண்டிப்பா அந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்தவர்கள் மறுமுறை வாசிக்காமல் இருக்க மாட்டார்கள்..

அடுத்த கேள்வி இதோ..

உங்களின் Writing Career -ல் Highlight ஆன விஷயங்கள்ன்னு எதைச் சொல்லுவீங்க..??


நான்:
எனது எழுத்துலகப் பயணத்தில் Highlight ஆன விஷயங்கள் இவை என்று சொல்லலாம்.

90 களில் ஹிந்துவில் Young World பகுதியில் வெளிவந்த எனது ஆங்கிலக் கட்டுரைகள்

2002ல் விகடனில் வெளியான புன்னகைத்தார் பிள்ளையார் என்ற என் சிறுகதை இலக்கிய சிந்தனை அமைப்பால் சிறந்த கதையாகத் தேர்வு செய்தது.

2005ல் நீ நான் தாமிரபரணி என்ற என் முதல் நாவலை நிலாச்சாரலில் எழுத ஆரம்பித்தது. அப்போது கிடைத்த வரவேற்பு என் அடுத்த நாவல்களில் அதிகரிக்க ஆரம்பித்தது என் நாவல்களுக்கு வேர் அந்த ஆரம்பம் தான்.

தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் இரு முறை பரிசுகள் வாங்கியது. (அதிலும் ”சுடும் உண்மை சுடாத அன்பு” என்ற சிறுகதைக்கு வந்து குவிந்த ஏராளமான பாராட்டுக் கடிதங்களை ஜெராக்ஸ் எடுத்து தினமலர் எனக்கு அனுப்பித்து வைத்ததை இப்போதும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன்).

பரம(ன்) இரகசியம் புத்தகமாக வெளி வந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.


கார்த்திகா: Highlights பற்றி பேசிட்டோம்.. உங்களின் Writing Career ல அடுத்த Step என்ன?? இது வரை நீங்க பண்ணாததுல இருந்து, எதாவது வித்தியாசமான முயற்சி எடுக்கணும்ன்னு இருக்கீங்களா..??


நான்: எழுத்தில் இது வரை செய்யாத, ஆனால் இனி செய்ய ஆசைப்படுகிற இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று வரலாற்றுத் தொடர் ஒன்று எழுதுவது. இன்னொன்று ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இருக்கும் சூட்சும அழகான அம்சங்களை தமிழில் விளக்குவது. காலம் ஒத்துழைத்தால் ஒரு நாள் முயற்சி செய்யக்கூடும்.


கார்த்திகா:
உங்களோட கண்ணோட்டத்தில் 'கனவு' எப்படி வரையறை செய்வீங்க. கனவுகளுக்கு காரணமாக அமைவது எது?? நாம் காணும் கனவுகளில் உண்மைத்தன்மை எவ்வளவு சதவிகிதம் இருக்கும்?? கனவுகள் நமக்குத் தேவையான தகவல் எதாவதை உணர்த்துமா??


நான்: பொதுவாக கனவுகள் ஆழ்மனதில் குவிந்து இருக்கும் ’data’க்களின் ‘random mixture’ நிகழ்வுகளாக அரங்கேறுவது. தலை கால் இல்லாத சம்பவங்கள் தான் அதிகம். அதில் உண்மைத் தன்மை சில நேரங்களில் இருக்கும் என்றாலும் அது அபூர்வமே. சில நேரங்களில் நாம் ஆழமாக உணர்ந்த, யோசித்த விஷயங்கள் கனவுகளாக வெளிப்படுவதுண்டு. மிக அபூர்வமான நேரங்களில் ஆழ்மனம் நம் தேடல்களுக்குப் பதில் சொல்ல கனவுகளை ஏற்படுத்துவதுண்டு. எத்தனையோ விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சிகளுக்கான பதில்கள் கனவுகளில் கிடைத்திருக்கின்றது.


மனதில் நாம் முன்பே விதைத்திருக்கும் விதைகள் தளிராக, செடியாக, மரமாக எந்தெந்த நிலைகளில் உருவாகி இருக்கின்றன என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதில் நல்லதும், கெட்டதும், முட்டாள்தனமானதும், அறிவுபூர்வமானதும் கண்டிப்பாக இருக்கும். அதன் சக்திகளை மட்டும் அவ்வப்போது உணர்கிறோம். சில சமயம் நேர்மறை எண்ணங்களாய், தாக்கங்களாய். சில சமயம் எதிர்மறை எண்ணங்களாய், தாக்கங்களாய்.


நாராயணி: நான் சில motivational புத்தகங்கள் படித்துள்ளேன். அதனை செயல்படுத்த நினைக்கும் போது பாசிட்டிவ் எண்ணங்களை விட நெகடிவ் எண்ணங்களே அதிகமாக வருகிறது. அதனை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

நாம் நேர்மறையாக சிந்திப்பதற்கும் எதிர்மறையாக சிந்திப்பதற்கும் அடிப்படைகாரணமாக அமைவது எது?


நான்:
இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. எல்லோரும் சந்திக்கும் பிரச்னை தான்.

சில தன்னம்பிக்கை நூல்கள், சில பாசிடிவ் நூல்கள், ஆன்மிகப் பொக்கிஷங்கள் எல்லாம் பல நேரங்களில் எல்லாவற்றையும் உணர்த்தி விட்டது போல ஒரு எண்ணத்தை, நம்பிக்கையை நம்மிடம் உருவாக்கி விடுகிறது. இனி மேல் நான் இப்படித் தான் இருப்பேன் என்று சூளுரை செய்யும் அளவுக்கு உறுதியைக் கூட ஏற்படுத்தலாம். ஆனால் காலப் போக்கில் சூழ்நிலைகள் வேறு விதமாக மாறும் போது அந்த பாசிடிவ் எண்ணங்களின் வலிமை குறைந்து நெகடிவ் எண்ணங்களின் தாக்கம் அதிகரிக்கலாம். எல்லாம் இழந்தது போலவும் சறுக்கி தரைமட்டத்திற்கு வந்தது போலவும் கூட தோன்றலாம். இது எல்லோருக்கும் ஏற்படுவதே. விதைத்த நெகடிவ் மற்றும் முட்டாள்தன விருட்சங்களை வேரோடு பிடுங்கும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும்.


இதில் சலிப்படைவதோ, சுய பச்சாதாபப்படுவதோ கூடாது. ஆழம் வரை எந்த நெகடிவ் எண்ணத்தையும் போய் ஆராய்ந்தால் அந்த எண்ண விதை கருகி விடும். அதற்கு அர்த்தம் இல்லை என்று புரிந்து விடும். அதன் கவர்ச்சி போய் விடும். ஆனால் நாம் ஆழமாகப் போவதில்லை. அரைகுறை வரை போனால் நெகடிவ் சில சமயம் வலிமை கூட அடையலாம். இப்படி ஆழம் வரை போய் ஒன்றுமில்லை என்று கண்டுபிடிக்க எல்லோராலும் முடிவதில்லை.


மற்றவர்களுக்கு ஒரே வழி திரும்பத் திரும்ப பாசிடிவ் மனிதர்கள், புத்தகங்கள் உதவியை நாடுவது தான். பாசிடிவ் அலைகளை நம்முள்ளே செலுத்திக் கொண்டே இருப்பது தான். காலப்போக்கில் நெகடிவ் குறைந்து கொண்டே வரும். நெகடிவ் எண்ணம் தாக்கும் போதெல்லாம் அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் உடனே அதற்கு எதிர்மறையான செயல்களில் ஈடுபட ஆரம்பியுங்கள். அப்போதும் நெகடிவ் எண்ணங்கள் ஆரம்பத்தில் வளைந்து கொடுக்காதது போல் தோன்றும். அதைக் கண்டு கொள்ளாதீர்கள். சிறிது நேரத்தில் பாசிடிவ் சைடிற்கு வந்திருப்பீர்கள். இது அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும். அது இயல்பே. காலப்போக்கில் தான் நீங்கள் நிறைய தூரம் முன்னேறி இருப்பது தெரியும். பொறுமையும், தொடர் முயற்சியும் முக்கியம்.


(தொடரும்)

Saturday, April 12, 2014

இளைய தலைமுறைக்கு சொல்ல விரும்புவது...

பெண்மை.காமில் கேள்வி பதில் பகுதி-4

கார்த்திகா: Sir, Seriously உங்க பதிலுக்கு என்ன Reply செய்யுறது ன்னு தெரியாமால் இருக்கேன்.. Admire your Skills Sir.. Bhaa ன்னு பார்த்துட்டுருக்கோம்..

அதும் //அமானுஷ்ய சக்தி, அல்லது ஆழ்மன சக்தி // எப்படி Sir இப்படிலாம் யோசிக்கறீங்க..?? சுவாரஸ்யமான சம்பவங்கள்… நீங்களே அதை தற்செயல் என்று சொல்ல முடியாத சம்பவங்கள் ன்னு சொல்லிட்டீங்க..

//யாரோ எனக்கு எடுத்துத் தருவது போல. // //ஒரு நாள் இரவில் ஒரு காட்சி என் மனத்திரையில் வந்து போனது. அதுவே பரம(ன்) இரகசியம் நாவலின் க்ளைமேக்ஸ் காட்சியாக அமைந்தது.// Got Goosebumps Sir.. Just Something is there.. Many thanks for Sharing with us..

அடுத்த கேள்வி Sir,

நீங்க எப்படி Blogging - குள்ள வந்தீங்க..?? Blog Start பண்ற Idea எப்படி வந்தது??


நான்: நான் நிலாச்சாரலில் எழுதிய “மௌனம் ஒரு மகாசக்தி” என்ற கட்டுரையை ஒரு ப்ளாக்கர் தன் ப்ளாகில் போட்டிருந்ததை நான் தற்செயலாகப் பார்த்தேன். அது வரை ப்ளாக் என்றால் என்ன என்று கூடத் தெரியாது. யாரோ ஒருவர் என் கட்டுரையைப் பதிவு செய்திருக்கிறார், நாமே ஏன் நம் படைப்புகளை எல்லாம் ஒரு ப்ளாகை ஏற்படுத்தி பதித்துக் கொள்ளக் கூடாது என்று தோன்ற ப்ளாக் ஆரம்பித்தேன். அப்போது எனக்கு கம்ப்யூட்டரும் புதிது, இண்டர்நெட்டும் புதியது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட தெரியாது. எப்படியோ தட்டுத் தடுமாறி கற்றுக் கொண்டேன். அப்படி 2007 அக்டோபரில் ஆரம்பித்த என் ப்ளாக் இன்று வரை வாசகர்களின் பேராதரவுடன் நல்லவிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.


கார்த்திகா: 2007 ல Blog ஆரம்பிச்சு இப்போ 2014 ல Best Blogger ன்னு பேர் வாங்கிருக்கீங்க.... இப்படி Best Blogger ah வருவோமென்று எதிர்பார்த்தீங்களா..?? Best Blogger என்று உங்களைச் சொன்ன போது எப்படி feel பண்ணீங்க??


நான்: திருப்தியாக இருக்கிறது. வெற்றி மட்டுமே முக்கியம் அல்ல, வெற்றியை எந்த வகையில் பெறுகிறோம் என்பதும் முக்கியம் என்று நினைப்பவன் நான். என் ப்ளாகில் பரபரப்பான சூடான செய்திகள் போட்டதில்லை. சினிமா நடிகர் நடிகைகள், அரசியல் என்று பலரையும் இழுக்கக் கூடிய பதிவுகள் போட்டதில்லை. அப்படி இருந்தும், நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதியும், வெற்றி கிடைத்திருக்கிறது என்பதே ஒரு நல்ல செய்தி அல்லவா?


உங்களில் நிறைய ப்ளாகர்களும் இருக்கிறீர்கள். உங்களுக்கு நான் இதையே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனக்கு நல்ல பதிப்பாளர் கிடைத்ததும் ப்ளாக் மூலம் தான். என் ப்ளாகைப் படித்துத் தான் தினத்தந்தியிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள். தொடர்ந்து தினத்தந்தியில் ஒரு வருடம் ”அறிவார்ந்த ஆன்மிகம்” பகுதியில் எழுதி இப்போது தான் முடித்தேன். மேலும் வேறு ஏதாவது பகுதியில் தொடர்ந்து எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் வலையுலகம் இப்போது எல்லோர் பார்வையையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. திறமை எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு பலன் அளிக்கும். அதனால் வெறும் விளையாட்டாக இல்லாமல் சீரியஸாகவே உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக எழுதுங்கள். மேலும் பிரகாசிக்க நல்ல வாய்ப்புகள் தானாக உங்களைத் தேடி வரும்.


கார்த்திகா: நிறைய Motivational Articles எழுதறீங்க.. இப்போ இருக்கற இளைய தலைமுறையினருக்கு நீங்க சொல்ல நினைக்கற முக்கிய விஷயம் என்ன??


நான்: இன்றைய இளைய தலைமுறைக்கு நான் சொல்லும் அறிவுரை இது தான்.


உலகம் உங்கள் வெற்றியை நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தையும், சேர்க்கும் பொருளையும், அடையும் புகழையும் வைத்து தான் தீர்மானிக்கும். ஆனால் அதுவே எல்லாம் என்று எப்போதுமே முடிவுக்கு வந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம். அது உங்களுக்கு மட்டுமே தெரிந்த முக்கிய விஷயம். உலகத்திற்கு அது பற்றிய கவலை இல்லை. அதை உலகம் கணக்கில் எடுப்பதும் இல்லை. உலகத்தின் பார்வையில் ஜெயித்து விட்டு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்றுப் போய் விடாதீர்கள். வெளிப்புற வெற்றி, தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கை இரண்டும் முக்கியம். இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்து இரண்டையும் சரியான கலவையில் வைத்துக் கொள்ளுங்கள்.


சந்திராவிமல்: Thanks for your answers sir, show is very very interesting.

I have interest in Astrology. Since you are also an astrologer i am asking this to you. How to trust a Astrologer and how to know whether he is good or not.

Can i learn astrology by myself by reading books alone if so please suggest me some good books. I know you tooo wrote a book named, "ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?" any other books pls suggest me sir.

நான்: ஜோதிடத்தின் அடிப்படைகளை வேண்டுமானால் புத்தகங்கள் மூலம் கற்கலாம். ஆனால் பலன் சொல்வது என்பது ஜோதிடத்தில் ஆழமாகப் போனால் மட்டுமே முடியும். அதற்கு புத்தக ஞானத்தோடு அனுபவ ஞானமும், எல்லா கோணங்களில் இருந்து அலசும் திறனும் அவசியம். அதற்கு பல வருடப் பயிற்சி தேவைப்படும். 


ஆங்கிலத்தில் B.V. Raman எழுதிய How to Judge a horoscope 2 volumes மற்றும் 300 important combinations போன்ற புத்தகங்களைப் படிக்கலாம். அதே போல தமிழிலும் ஜோதிடத்தின் அடிப்படைகளைச் சொல்லும் புத்தகங்கள் நிறைய உள்ளன. ஆரம்பத்திற்கு அது உதவும்.


கார்த்திகா: ‘பொன்னியின் செல்வன்’ கதைல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது?? பிடிச்ச கேரக்டர் எது?? பொன்னியின் செல்வன் கதைக்காக எழுத்தாளரின் திறமையைப் பாராட்டும்ன்னா கதையின் எந்த இடத்தில், எதற்காக நீங்க பாரட்டுவீங்க??

பொன்னியின் செல்வன் கதை முடிவுல பல விடை தெரியா கேள்விகளுக்கு கல்கி அவர்கள் பதில் கொடுக்கல… நீங்க எப்பவாவது அந்த கதைல அலசாம விட்ட பகுதிகளை பத்தி எழுதணும்ன்னு நினைச்சு இருக்கீங்களா…

சரித்திர நாவல் எழுதணும்னு உங்களுக்கு தோணினது உண்டா?? உங்களை மிகவும் கவர்ந்த சரித்திர நாவல் எழுத்தாளர் யார்??


நான்: பொன்னியின் செல்வன் நாவலில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், அத்தனை கேரக்டர்களைப் படைத்து அந்தக் கதைக்களத்தில் கடைசி வரை சுவாரசியம் குறையாமல் நாவலைக் கொண்டு சென்ற விதமும் கதாபாத்திரங்கள் மிக யதார்த்தமாக நம் மனதில் பதிகிற மாதிரி எழுதிய விதமும்.

கல்கி அதில் நந்தினி கதாபாத்திரத்தைப் படைத்த விதம் மிக அருமை. பல நேரங்களில் குழப்புவது போல் இருந்தாலும் ஒரு intelligent cynic கேரக்டர் போல் புதிராகவே காட்டியிருப்பார். எதிர்க்க நினைப்பவர்கள் எல்லாம் அவளிடம் சென்றவுடன் மாறும் விதத்தை அவர் காட்டி இருக்கும் விதம் அருமை.


பல கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற போதும் அது அந்த நாவலின் தரத்தைச் சிறிதும் குறைத்து விடவில்லை என்பது என் கருத்து. அவர் அலசாமல் விட்டதை எடுத்து எழுதும் எண்ணம் எனக்கு இல்லை.


எனக்கும் சரித்திர நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. இறைவன் அருள் இருந்தால் சிவாஜியைப் பற்றி எழுத வேண்டும். எனக்கு இந்திய சரித்திரத்தில் மிகவும் பிடித்த மன்னர் அவர்.


கல்கியின் பொன்னியின் செல்வன் அளவுக்கு மற்ற சரித்திர நாவல்கள் என்னைக் கவரவில்லை. சாண்டில்யன் மிகவும் பிடித்த சரித்திர நாவல் எழுத்தாளர்.


கார்த்திகா: உங்களின் சரித்திர நாவலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் Sir.. சீக்கரம் எழுத வாழ்த்துக்கள் - அதும் மன்னர் சிவாஜி யைப் பற்றி,Hmm Cant Wait for that!!

சாண்டில்யன் மிகவும் பிடித்த சரித்திர நாவல் எழுத்தாளரென்று சொல்லிட்டீங்க.. அவரின் எந்த படைப்பு உங்களை மிகவும் கவர்ந்தது?? இது அவரின் சிறப்பு என்று நீங்கள் நினைப்பது எது?? 


நான்: சாண்டில்யனின் நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது கடல்புறா. சாண்டில்யனின் பெண்களைப் பற்றிய வர்ணனைகள் பேசப்பட்ட அளவு அவரது மற்ற வர்ணனைகள் பேசப்படுவதில்லை. கடலில் போர் நடக்கும் போது கப்பல்கள், கடலலைகள் பற்றிய வர்ணனைகள் அவர் செய்யும் விதம் நம்மை அந்த இடத்தில் நேரில் கொண்டு போய் நிறுத்துவது போல் இருக்கும். அதே போல் அவருடைய தத்துவ சிந்தனைகளும் நன்றாக இருக்கும். அத்தியாயங்களை அவர் முடிக்கும் போது பெரும்பாலும் ஒரு சஸ்பென்ஸ் வைப்பார். அதுவும் சிறப்பாக இருக்கும். 

(தொடரும்)  

Friday, April 11, 2014

தற்செயல் என்று சொல்ல முடியாத சம்பவங்கள்!


பெண்மை.காம் உறுப்பினர்களின் பேட்டியின் மூன்றாம் பகுதி 

கார்த்திகா : எழுத்தாளர்க்கு வாசகர்களிடம் இருந்து கிடைக்கும் விமர்சனங்கள் தான் Big Boost ye… அப்படிப்பட்ட விமர்சனம் எப்படி இருக்கணும்?? ஒரு நல்ல விமர்சனம் ன்னு நீங்க எதை சொல்வீங்க??
ஒரு எழுத்தாளர் அவருடைய எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங்களை எப்படி எதிர் கொள்ளணும்.. (Both Positive & Negative)

நான் : விமர்சனம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. ஆனால் ஒரு நல்ல விமர்சனம் என்பது ஆழமாய் படித்து புரிந்து கொண்ட பின் வருவதாகத் தான் இருக்க முடியும். அப்படி விமர்சிக்கக் கூடிய வாசகர்கள் கிடைப்பது ஒரு எழுத்தாளனுக்கு முக்கியம். அது அவனை கண்டிப்பாக மெருகுபடுத்தும்.
ஒரு எழுத்தாளன் தனக்குக் கிடைக்கும் விமர்சனங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் அலசுவது நல்லது. நல்ல பாசிடிவ் விமர்சனங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு நெகடிவ் விமர்சனங்களைக் கண்டு கோபப்படுவது ஆரோக்கியமானதல்ல. ’உனக்குத் தெரிந்தது அவ்வளவு தான், உனக்கு அறிவு போதாது’ என்றெல்லாம் பதில் அளிக்கிற எழுத்தாளர்கள் வளர்வதில்லை. பாசிடிவ்வோ, நெகடிவ்வோ அதன் உண்மைத்தன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை ஒதுக்கி விடுவது தான் உத்தமம்.

கார்த்திகா : இந்த கேள்வி நான் கண்டிப்பா உங்ககிட்ட கேட்டே ஆகணும்... பரபரப்பா எல்லார்கிட்டயும் பரவலாக பேசப்பட்ட ரொம்ப Popular ஆன, நிறைய மக்களை உங்களோட பரம விசிறியாக்கிய பரமன் ரகசியம் கதை பத்தி தான் சார் இப்ப கேட்கப் போறோம்... இப்படி ஒரு கதை எழுதணும்ன்னு உங்களுக்கு எப்படி அந்த ஸ்பார்க் வந்தது... கதைக்கரு ரொம்பவே பிரமிக்க வைத்த ஒன்று எல்லோரையும்... ஆன்மீகம், ஆழ்மனது, அறிவியல், குடும்பம், பாசம், சஸ்பென்ஸ் இப்படி எல்லாமே கலந்த கலவையாக அதை எல்லாரையும் ரொம்பவும் ரசிக்கும் படியாகவும் விறுவிறுப்பு குறையாமலும் அவ்வளவு அழகா படைத்து இருக்கீங்க... 

எப்படி சார் உங்களுக்கு இந்த மாதிரியான சப்ஜெக்ட் எழுதணும்ன்னு எண்ணம் வந்தது?? பரமன் ரகசியம் கதைக்கு அடிகோலாக இருந்த விஷயம் என்ன சார்??

நான்: அமானுஷ்யன் எழுதி முடித்த பிறகு இன்னொரு நாவலை எழுதச் சொல்லி நிறைய வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதை என் ப்ளாகிலேயே எழுத தீர்மானித்தேன். என்ன எழுதுவது என்று யோசித்த போது தோன்றிய கரு தான் சகதி வாய்ந்த சிவலிங்கமும், பசுபதியும், கடத்தலும் சேர்ந்த கரு. ஆழ்மனதின் அற்புத சக்திகளும் மிக பிரபலமாக இருந்த காலம் அது. அப்போது ஆழ்மனசக்தியும், ஆன்மிகமும் கலந்து ஒரு த்ரில்லர் ஏன் படைக்கக் கூடாது என்று தோன்றவே ஆரம்பிக்க முடிவு செய்தேன். மீதி எல்லாம் தானாக சேர்ந்து கொண்டது. பரமேஸ்வரன், ஈஸ்வர், ஆனந்தவல்லி, குருஜி, கணபதி உட்பட மற்ற கேரக்டர்கள் தானாகப் பின் சேர்ந்து கொண்டன.

அமானுஷ்யன் போல் இன்னொரு நாவல் நீங்களே எழுத முடியாது என்று சொன்ன வாசகர்களும் அதைப் படித்தார்கள். அவர்களுக்கு அமானுஷ்யன் மீது ஒரு காதலே உருவாகி இருந்தது என்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்டவர்களும் மிகவும் சிலாகிக்கும்படி பரம(ன்) இரகசியம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். அந்தக் கதையின் ஆரம்பக் கரு தான் என்னுடையது. மீதி எல்லாம் இயல்பாக வந்து சேர்ந்து கொண்டது. இந்த அளவு அது வரவேற்பைப் பெறும் என்று நானே ஆரம்பத்தில் நினைத்ததில்லை.

கார்த்திகாபரம(ன்) இரகசியம் - தொடர் கதையா வாசித்துக் கொண்டிருந்தவர்கள், உங்களின் Suspense - thriller தாங்க முடியாம Book ah வே வாங்கி படிச்சுட்டோம் ன்னு சொன்னாங்க Sir.. அதற்காக தான் அந்த கேள்வியே.. இன்னும் பலர் அதன் தாக்கத்தில் இருந்து வெளி வரவில்லை ன்னு சொன்னாங்க 


அடுத்த கேள்வி.. இன்று உலக கவிதைகள் தினம்.. So ஒரு கவிதை சொல்றீங்க Sir…??

நான்:  திடீர் என்று கவிதை கேட்டிருக்கிறீர்கள். புதிதாக எதுவும் வரவில்லை. என் எழுத்துகளில் முதலில் (கல்லூரி நாட்களில், கல்லூரி மலரில்) அச்சான கவிதையை இங்கு தருகிறேன்.

என்னழகுப் பெண்ணரசி!
வானத்துக் கருமுகிலும்
உன் கூந்தல் நிறம் கண்டு
அவமானம் தாளாமல்
அழுதது தான் மழைநீரோ?
வெண்ணிலவுப் பெண்ணரசி
உன்னழகு முகம் கண்டு
பின் காண நாணித் தான்
கண் மறைந்து சென்றாலோ?
பளிச்சிடும் முத்துக்களும்
உன் பற்கள் தான் கண்டு
களிப்படையத் தோன்றாமல்
கடலுக்குள் மறைந்தனவோ?
மணம் வீசும் ரோஜாக்கள்
உன் இதழின் நிறம் கண்டு
மனம் வாடி நிறம் மங்கி
சருகாகச் சாய்ந்தனவோ?

கார்த்திகா: //புதிதாக எதுவும் வரவில்லை// பரவாயில்லை Sir! எங்களுக்காக உங்களின் முதல் அச்சான கவிதையைச் சொல்லிருக்கீங்களே.. Thank you So Much!!என்னழகு பெண்ணரசி - அழகு Sir..  பள்ளி நாட்களிலே கலக்கிருக்கீங்க.. கல்லூரி காலத்தில் கேட்கவா வேணும்…   
லதா : பரம(ன்) இரகசியம் படிச்சதும் அப்படி ஒரு பிரம்மிப்பு மனசுல… எல்லார் மனசிலும் இடம்பிடிச்ச கதையும் கூட. பரம(ன்) இரகசியம் க்கு மக்களிடம் இருந்து கிடைத்த Response a நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்க??

நான்: நான் முன்பே சொன்னது போல இந்த அளவு வரவேற்பு நானே ஆரம்பத்தில் எதிர்பார்க்காதது. 78 வயது பாட்டி முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் வரை, மிக உயர்ந்த பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரி முதல் இல்லத்தரசியாக இருக்கும் இளம் பெண் வரை எல்லா தரப்பு மக்களும் பரம(ன்) இரகசியத்தை ஒரு அற்புத நாவலாக என்னை போனில் அழைத்தும், மெயில் அனுப்பியும் சொன்னார்கள். பலர் பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக அவர்கள் தொடர்ந்து ரசித்துப் படித்த நாவல் என்று சொன்னது-இந்த அளவு ரெஸ்பான்ஸ் கிடைத்தது-எனக்கு ஒரு பெரிய விருது கிடைத்த திருப்தியை ஏற்படுத்தியது.

கார்த்திகா: பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக அவர்கள் தொடர்ந்து ரசித்துப் படித்த நாவல் என்று சொன்னது - முற்றிலும் உண்மை Sir.. இப்படியொரு Comment எங்க உறுப்பினர் ஒருவரும் சொன்னார்.. மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.. முதலில் படிக்கும் போது ஏற்பட்ட அதே பிரம்மிப்பு மறுபடியும் வந்துட்டே இருக்கு ன்னு சொன்னாங்க.. 

இப்படி பலர் உங்க புத்தகங்களைப் படித்து பிரம்மித்து, அவ்ளோ ஏன் அழவும் செஞ்சுருக்காங்க.. உங்களோட முதல் கதைக்கே வந்த பல கமெண்ட்ஸ் “படிச்சதும் கண்கலங்கிட்டோம்”ன்னு சொன்னாங்க… இப்படி பல பேரோடமனசுல ஆழமா பதியற போலவும், கண்கலங்க வைக்கற போலவும் எழுதுற நீங்க, எதாவது புத்தகமோ கதையோ கட்டுரையோ படிச்சு கண்கலங்கி இருக்கீங்களா..??

உங்களை ரொம்ப பாதிச்ச புத்தகம் அல்லது கதை பத்தி சொல்ல முடியமா.. ??


நான்: 
கல்கியின் பொன்னியின் செல்வன் . தமிழில் அத்தனை பெரிய எண்ணிக்கையில் கதாபாத்திரங்கள் இருந்த படைப்பு வேறு இல்லை. அதில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் மனதில் நின்று போனவை. நந்தினி, பெரிய பழுவேட்டரையர், வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்கள் கல்லில் எழுதிய சித்திரங்கள் தான். எத்தனை தடவை அந்த நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.

படித்துக் கண்கலங்கியதோடு மனதில் வலிமையாக இடம் பிடித்து நின்ற நாவல் என்றால் விக்டர் ஹ்யூகோவின் Les Misérables நாவலைச் சொல்லலாம். தமிழில் ஏழைபடும் பாடு என்று ஒரு திரைப்படம் இந்த நாவலை வைத்து எடுத்துள்ளார்கள். 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிய நாவல் அது. படித்து 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. அந்த கதாபாத்திரங்கள் இன்று வரை மனதில் நிற்கிறார்கள். 

அதே போல மனதில் நின்ற வேறு சில நாவல்கள் சொல்ல வேண்டும் என்றால் Ayn Rand எழுதிய “The Fountainhead” மற்றும் “Atlas Shrugged”, Maxim Gorky எழுதிய “Mother”, ஜெயகாந்தன் எழுதிய “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” தேவன் எழுதிய “மிஸ்டர் வேதாந்தம்” ஆகியவற்றை சொல்லலாம்.

கார்த்திகா: உங்களோட எல்லா கதாபாத்திரங்களும் மனசுல நிக்குறாங்க.. தினப்படி வாழ்க்கைல நீங்க சந்திக்கிற மனிதர்களோட தாக்கம் அதுல இருக்கா??

நான்: நிச்சயமாக இருக்கிறது. பலர் என்னிடம் மனம் விட்டுப் பேசுவதால் எனக்கு மனிதர்களின் விதவிதமான எண்ண ஓட்டங்களை நேரடியாக அறிய முடிகிறது. அப்படியே ஒரு கதாபாத்திரத்தை வார்க்கா விட்டாலும் சிறிது கற்பனையையும் இயல்பை ஒட்டிக் கலந்து விடும் போது உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்கள் உருவாகி விடுகின்றன.

ஸ்ரீஜா : உங்க Story ல real life incidents இருக்கா.. i mean அமானுஷ்ய சக்திகள் அந்த மாதிரி.. நீங்களே experience பண்ணிருக்கீங்களா.. ??

நான் : என் கதையில் நிஜ வாழ்க்கை சம்பவங்களின் தாக்கம் இருந்தாலும் அந்த சம்பவங்களையே நான் கதையாக எழுதுவதில்லை. 

அமானுஷ்ய சக்தி, அல்லது ஆழ்மன சக்தி எப்படி பெயர் வைத்துக் கொண்டாலும் அதை நான் எதிர்பாராத சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். தற்செயல் என்று சொல்ல முடியாத சம்பவங்கள் அவை. இரண்டைச் சொல்ல விரும்புகிறேன்.

பாசாங்குகள், போலித்தனம் இல்லாத குருமார்கள் இன்று மிக அபூர்வம் என்பதால் நான் அதிகமாக குருமார்களைச் சந்திக்கச் செல்வதில்லை. ஏமாற விருப்பமில்லை. ஒருசிலர் உண்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்கும் முன் பல போலிகளிடம் ஏமாற வேண்டி இருக்கிறது. அதனால் எனக்கு புத்தகங்களே குருமார்கள். ஒரு பக்குவ நிலையை எட்டிய பிறகு அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் புத்தகங்கள் தானாக எனக்கு கிடைக்கும். யாரோ எனக்கு எடுத்துத் தருவது போல. 

எனக்கு பால் ப்ரண்டன் அறிமுகமானது அப்படித்தான். கோவை செண்ட்ரல் லைப்ரரியில் பல நூறு புத்தகங்களைப் படித்திருக்கிறேன். வழக்கமாக தத்துவம், சைக்காலஜி, வரலாறு, இலக்கியம் தான் அதிகமாகப் படிப்பேன். ஒரு முறை ஏனோ பூகோளம் பகுதிக்குப் போகத் தோன்றியது. போய் புத்தகங்களைப் பார்த்தேன். அப்போது தான் பால் ப்ரண்டனின் A search in secret India என்ற புத்தகம் அந்த பூகோள அலமாரியில் கிடைத்தது. அந்தப் பெயரை வைத்து இந்தியாவின் இடங்கள் என்பது போன்ற புத்தகம் என்று தீர்மானித்து அதை பூகோள புத்தகப் பகுதியில் வைத்திருந்திருக்கிறார்கள். அந்தப் புத்தகம் எனக்கு அமானுஷ்ய சக்திகளின் புதிய பரிமாணத்தைக் காட்டியது. அது என் கைக்கு கிடைத்த விதமே விசித்திரம் அல்லவா?
(அதைத் தொடர்ந்து பால் ப்ரண்டனின் மற்ற புத்தகங்களைத் தேடி வாங்கிப் படித்தேன். அதில் ஒன்று தான் A search in secret Egypt. அதை நான் ப்ளாகில் எழுத விரிவாக எழுத ஆரம்பித்தேன். அதைப் படித்து விட்டு தான் ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிஷர் அவராக என்னைத் தொடர்பு கொண்டு அதை ஒரு புத்தகமாக எழுதித்தர முடியுமா என்று கேட்டார். ஒத்துக் கொண்டேன். அது நல்ல வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து ஒரு வருடகாலத்தில் ஐந்து புத்தகங்கள் அந்த பதிப்பகம் மூலம் வெளியாகியது. எல்லாமே பெரிய வெற்றி கண்டன. இத்தனைக்கும் மூல காரணம் ஒரு காலத்தில் என்னையும் அறியாமல் வழக்கத்திற்கு மாறாக லைப்ரரியில் பூகோளப் பகுதிக்குப் போனது தான் என்று சொல்லலாம் அல்லவா?)

அதே போல பரம(ன்) இரகசியம் நாவலின் கடைசி முடிவுக் காட்சி. வேறொரு முடிவை முதலில் எழுதத் தீர்மானித்து கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் எழுத முடியாமல் திண்டாடினேன். எப்படி எழுதினாலும் மனதில் ஏதோ அதிருப்தி. எழுதுவது, அதை அழிப்பது, எழுதுவது அழிப்பது என்றே இருந்தேன். இது வரை எனக்கு எந்த நாவலுக்கும் அப்படி ஆனதில்லை. ஒரு நாள் இரவில் ஒரு காட்சி என் மனத்திரையில் வந்து போனது. அதுவே பரம(ன்) இரகசியம் நாவலின் க்ளைமேக்ஸ் காட்சியாக அமைந்தது.

(தொடரும்)


Thursday, April 10, 2014

ஒரு நல்ல தீப்பொறி போதும்!


Penmai.com உறுப்பினர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள் - பகுதி 2

கார்த்திகா : கதைகள் எழுதிட்டே எப்படி Motivational & Self Improvement Articles எழுத Start பண்ணீங்க?? இப்படி எழுதணுமென்ற விதை உங்களுக்கு எப்போ விழுந்தது?? நிறைய Youngstersக்கு Direct reach ஆகுற போல இருக்கு அந்த articles-லாம்.. இப்போ இருக்கற Students/ Youngsters க்கு ஒரு Positive Vibe தரணும்ன்னு நினைச்சு இப்படி articles எழுதுறீங்களா??
இல்லை வேறு ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா??

நான்:  சிறு வயதில் இருந்தே கதைகளைப் போலவே தன்னம்பிக்கைக் கட்டுரைகள், புத்தகங்கள் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. பெரிய சாதனையாளர்கள், தலைவர்கள் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பேன். எல்லோரையும் விட அதிகமாய் சிறப்பாய் சாதிக்கும் மனிதர்கள் எப்படி அதை சாதித்தார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருந்தது. படிக்கையில் தனிப்பட்ட சில சிறப்புத் தன்மைகள் அவர்களிடம் இருந்ததையும் அதுவே அவர்களை சாதிக்க வைத்த ரகசியம் என்பதையும் உணர முடிந்தது. அதை நான் படித்து ஊக்கம் அடைந்தது போலவே மற்றவர்களும் அடைய வேண்டும், நான் பெற்ற நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கும் தர வேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடு தான் என் தன்னம்பிக்கை கட்டுரைகள்.

நிறைய பேர் ஒரு நல்ல வழி கிடைத்தால் கண்டிப்பாக மாறுவார்கள். ஒரு நல்ல தீப்பொறி இருந்தால் போதும், பற்றிக் கொண்டு ஜூவாலையாக மாற அவர்களால் முடியும். அப்படிப்பட்ட தகுந்த நபர்களில் ஒரு சிலருக்காவது என் எழுத்துக்கள் ‘பற்ற’ வைக்க முடிந்தால் அதுவே பெரிய பாக்கியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நானே அப்படிப்பட்ட எழுத்துக்களைப் படித்து உருவானவன். நான் பெற்றதை திருப்பித் தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். அதனாலேயே நல்ல விஷயங்களை நிறைய எழுதுகிறேன்.

கார்த்திகா : உங்களோட எழுத்துக்கள் ஆன்மிகம், ஆழ்மனது, தத்துவம், சுய முன்னேற்றம் இப்படின்னு பல வகைகளில் இருக்கு.. இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச Field எது..?? எந்த வகை எழுதும் போது ரொம்பவே பிடிச்சு, ரசிச்சு, அனுபவிச்சு எழுதுவீங்க..??

நான்: அவை எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்கள் தான். ஒவ்வொன்றிலும் நான் ஆழமாக ஈடுபட்டிருக்கிறேன். அதனால் எல்லாவற்றையும் ரசித்து அனுபவித்து எழுதுவேன். எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்களில் நான் அதிகம் எழுதாமல் விட்டது இலக்கியம். தமிழ் இலக்கியமும், ஆங்கில இலக்கியமும் கூட எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் கம்பனும், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும் என் மனதைக் கவர்ந்தவர்கள். கம்பன் பற்றியாவது சில கட்டுரைகள் எழுதி உள்ளேன். ஷேக்ஸ்பியர் நான் இன்னமும் எழுத ஆரம்பிக்காதது. அதே போல நான் எழுதும் சப்ஜெக்ட்களிலும் கூட நிறைய சுவாரசியமான, பயனுள்ள விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காலம் மட்டுமே பற்றாக்குறை!

காத்யாயினி : ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இது பெரும்பாலும் பொதுவாக எல்லா வெற்றியாளர்களும் ஒத்துக் கொள்ளகூடியது தான்.
உங்களின் எழுத்துலகப் பணிக்கு உங்கள் துணைவியின் பங்கு ஏதேனும் உண்டா?
உங்கள் படைப்புகளை அவர்கள் படிப்பதுண்டா? அப்படி படித்து அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களின் தாக்கம் உங்களுடன் என்ன மாதிரியான உணர்வை உண்டு பண்ணும்?

நான்:  நிச்சயமாக என் வெற்றிக்குப் பின்னும் என் மனைவி இருக்கிறாள். கணவன் எப்போது பார்த்தாலும் எழுதுவது, படிப்பது என்றிருக்கும் போது மனைவி என்பவளின் மானசீக இழப்புகள் இருந்தே தீரும். என்றாலும் ஏற்றுக் கொண்டு என் எழுத்துக்கு தொந்தரவாக இல்லாமல் இருப்பதே பெரிய விஷயம். 
என் மனைவி கர்நாடகத்தில் கன்னடத்தில் படித்தவள். திருமணத்திற்குப் பின் இங்கு வந்த பின் தான் தமிழ் தெரியும். பேச, எழுதக் கற்றுக் கொண்டாலும் நல்ல பாண்டித்தியம் தமிழில் உண்டு என்று சொல்ல முடியாது. அதனால் என் எழுத்துக்களை அவர் அதிகம் படிக்கவோ கருத்துகள் சொல்லவோ முடிவதில்லை.

கார்த்திகா : அதே போல உங்க Friends, Colleagues இப்படி நிறைய பேர் உங்களுக்கு Supportive ah இருப்பாங்க ல.. அப்படி உங்களோட முன்னேற்றத்துக்கு ரொம்பவே உறுதுணையா இருந்தவர்கள் யார்??

நான் : நண்பர்கள் என் வெற்றியில் மிகுந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தார்கள். ஆனால் பள்ளி, கல்லூரி நாட்களில் கிடைத்தது போல நான் எழுதியவுடன் முதலில் படிக்கிறவர்களாக நண்பர்கள் இருக்கிற சூழல் பிற்காலத்தில் இருக்கவில்லை. அதனால் நண்பர்களை விட அதிகமாக என்னை பாராட்டி மேலும் சிறப்பாக எழுத ஊக்குவித்து என் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் என் வாசகர்கள் தான். என் ஆரம்ப கால சிறுகதைகள், கட்டுரைகளில் இருந்து இன்றைய ‘பரம(ன்) இரகசியம்’ நாவல் வரை பின்னூட்டங்களிலும், மின்னஞ்சல்களிலும் பாராட்டிய இதயங்களுக்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. 
இத்தனைக்கும் நான் ஒவ்வொரு பாராட்டுக்கும் பதில் பின்னூட்டம் போடுபவன் அல்ல. அப்படி நன்றி சொல்வது பல நேரங்களில் செயற்கைத் தனமாக எனக்குத் தோன்றும். அப்படி இருந்தும் சலிக்காமல் பாராட்டிய பாராட்டுகள் ஆத்மார்த்தமானவை. அன்றும் இன்றும் என் வாசகர்களே என் முன்னேற்றத்துக்கு உறுதுணை.

கார்த்திகா:  முதல் கதையை பற்றி பேசிட்டோம்… உங்களோட முதல் புத்தகம் எது?? எப்போ வெளி வந்தது??

நான்: என் முதல் புத்தகம் வெளியானது சிறிதும் திட்டமிடாததும் எதிர்பாராததுமான ஒரு நிகழ்வு.

நான் திண்ணையில் எழுதிய “கண்கள்” சிறுகதையைப் படித்து விட்டு எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார். பின் நல்ல நண்பருமானார். அந்தச் சிறுகதை “உலகத் தமிழர் சிறுகதைகள்” என்ற தலைப்பில் அவர் தொகுத்த சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் வெளியானது. அந்த சிறுகதை நல்ல வரவேற்பையும் பெற்றது. பின் ஒரு நாள் போன் செய்து “என்ன கணேசன் ஆன்மிகக் கட்டுரைகள் தொகுப்பு புத்தகம் ஒன்று போடலாமா?” என்று கேட்டார். சம்மதித்தேன். அவர் மேற்பார்வையில் இருக்கும் ‘இருவாச்சி இலக்கியத் துறைமுகம்’ என்ற பதிப்பகத்தில் 2010ல் ’பிரசாதம்’ என்ற ஆன்மிகக் கட்டுரைகள் தொகுப்பு வெளியானது. 2011ல் “தோல்வி என்பது இடைவேளை” என்ற தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தொகுப்பு அதே பதிப்பகத்தில் வெளியானது.

கார்த்திகா:  ரொம்ப நேரமா இதை கேட்கணும்ன்னு இருந்தோம்.. உங்களோட Articles/Books க்கு எப்படி Captions/Titles Select பண்றீங்க?? கண்கள் - ஊருக்கு மகான் ஆனாலும் - பிரசாதம் - தோல்வி என்பது இடைவேளை இதெல்லாம் ரொம்ப Interesting /அருமையா இருக்கு..
உங்களோட Captions லாம் உள்ள படிக்காமயே விஷயம் என்னன்னு சொல்லிடும்.. அதே சமயம் இதை பார்க்கணும் படிக்கணும் ன்னு ஆர்வத்தையும் உண்டு பண்ணிடும்... எப்படி இந்த மாதிரியான Titles லாம் பிடிக்கறீங்க ன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம் Sir

நான்: பிரசாதம், தோல்வி என்பது இடைவேளை என்ற இரு தலைப்புகளும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன் வைத்தது. மற்றவை எல்லாம் நான் வைத்த பெயர்களே.
எப்படி இந்த மாதிரி டைட்டில்கள் கிடைக்கின்றன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. புத்தகத்தை அல்லது கதைக்குப் பொருத்தமாகத் தோன்றுவதை வைக்கிறேன் அவ்வளவு தான். ஊருக்கு மகான் ஆனாலும் தலைப்பு “ஊருக்கு ராஜாவானாலும்” என்ற பழமொழியின் பாதிப்பு. கண்கள் அந்தக் கதையின் முக்கிய அம்சம். இப்படித் தான் சொல்ல வேண்டும்.

கார்த்திகா : பொதுவா ஒரு கட்டுரை எழுதறதுக்கு எவ்வளவு நேரம் எடுத்துப்பீங்க??

நான்: கட்டுரை அல்லது கதை நமக்குத் தெளிவாக மனதில் இருந்தால் தலைப்பு தானாக வந்து விழும். அதற்கு நான் எப்போதுமே அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. கரு மற்றும் உருவத்திற்கு தான் நேரம் அதிகம் தேவைப்படும். 
கட்டுரையின் அளவுக்கும், ஆழத்திற்கும் ஏற்ப நேரம் தேவைப்படும் என்றாலும் பொதுவாக கரு கிடைத்த பிறகு சுமார் மூன்றிலிருந்து நான்கு மணி நேரங்கள் தேவைப்படும்.

கார்த்திகா: எங்கள் எல்லாரோட Inspiration Star - ஆன உங்களுக்கு Inspiration யாரு??

நான் : தமிழில் inspiration எழுத்துக்கள் என்றால் திருக்குறள் தான். ஈடிணையில்லாத அறிவுப் பொக்கிஷம் அது. சில பிரபலமாகாத குறள்கள் கூட தரும் அறிவுரை எளிமையும் வலிமையும் கலந்த டானிக். தன்னம்பிக்கை எழுத்தாளர்களில் எம்.எஸ்.உதயமூர்த்தியும், அப்துற் றஹீமும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். ஆங்கிலத்தில் Dr.Wayne W.Dyer, Deepak Chopra, Eckhart Tolle ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்த தன்னம்பிக்கை எழுத்தாளர்கள். இவர்கள் புத்தகங்களை இப்போதும் பல முறை படிக்கிறேன்.

குணா : "மனம்" என்பதை எப்படி உருவக படுத்துவீர்கள்?

நான் : மனம் சம்பந்தமாக ஒரு அறிவியல் துறையே இருந்தாலும் கூட மனம் உடலில் எங்கே உள்ளது என்பது பற்றி தெளிவான பதிலை யாராலும் கூற முடிந்ததில்லை. அதனால் அதை உருவகப்படுத்துவதும் கஷ்டம்.

கார்த்திகா : உங்ககிட்ட பேசுவதற்கு யாராச்சும் பயந்துருக்கங்களா?? Haiyo இவர் நம்ம நினைக்கறதை - மனசுல உள்ளதெல்லாம் கண்டு பிடிச்சிடுவாரோ அப்படின்னு… இந்த மாதிரி அனுபவம் எதாவது நடந்து இருக்கா…??

நான்: என்னிடம் பேச யாரும் பயந்தது இல்லை. தங்கள் மனதில் இருக்கும் எத்தனையோ ரகசியங்களை மிகுந்த நம்பிக்கையுடன் என்னிடம் சொல்பவர்கள் தான் அதிகம். அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று நான் எக்காரணத்தைக் கொண்டும் அந்த ரகசியங்களை வீட்டார் உட்பட யாரிடமும் கூறுவது இல்லை. அதே போல உண்மையைச் சொல்கிறவர்களை நான் judge செய்வதும் இல்லை.

ப்ரத்யுக்‌ஷா:  உங்களோட Writing Career ல எதற்காது ரொம்ப போராடிருக்கீங்களா..??
அதே போல இத்தனை வருட எழுத்து பணி ல நீங்க கத்துகிட்ட விஷயம் எது?? இனி செய்யவே கூடாதுன்னு முடிவெடுத்த விஷயம் எதாவது இருக்கா??

நான்: எழுத்துலகத்தில் என்று இல்லை நான் எதற்காகவும் பெரிதாய் போராடியதில்லை. எழுதத் தொடங்கி பல வருடங்கள் ஆகியும் நான் பிரபலமாக இத்தனை காலங்கள் தேவைப்பட்டதற்கு காரணம் எனது அந்தத் தன்மையாகவும் இருக்கக்கூடும். அதில் எனக்கு வருத்தமும் இல்லை. எனது கடைசி ஆறு புத்தகங்களின் பதிப்பாளரான ப்ளாக்ஹோல் மீடியா யாணன் கூட எனது ப்ளாகை படித்து விட்டு அவராக என்னைத் தொடர்பு கொண்டவர் தான். ’பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்’ புத்தகம் எழுதித் தரும்படி அவர் கேட்டுக் கொண்டார். 2012 இறுதியில் அதன் வெற்றியைத் தொடர்ந்து மற்ற ஐந்து புத்தகங்களும் சுமார் ஒன்றேகால் வருடத்தில் பிரசுரமாகின. அதில் ஆழ்மனதின் அற்புதசக்திகள் மூன்று பதிப்புகளும், பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் மற்றும் வாழ்ந்து படிக்கும் பாடங்கள் இரண்டு பதிப்புகளும் இந்தக் குறுகிய காலத்தில் வந்து விட்டன. இதை ஏன் சொல்கிறேன் என்றால் எதற்கும் போராடித் தான் வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. விடாமுயற்சியும், தரத்தை அதிகப்படுத்தலும் தொடர்ந்து இருந்தால் வெற்றி கண்டிப்பாக கிடைத்தே தீர வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்பதற்காகத் தான். 

இத்தனை வருட எழுத்துப்பணியில் நான் கற்றுக் கொண்ட பெரிய விஷயம் இது தான். நம் திறமையைக் கூர்மைப்படுத்திக் கொண்டே போக வேண்டும். தொடர்ச்சியாக நாம் களத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கிடைத்ததை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இனி செய்யவே கூடாது என்று முடிவெடுக்கிற அளவுக்கு எதையும் அதிகப்படியாக செய்யவில்லை.

(தொடரும்)

Wednesday, April 9, 2014

தினத்தந்தியில் ‘பரம(ன்) இரகசியம்’ புத்தக மதிப்புரை



இன்று (09-04-2014) தினத்தந்தியில் பரம(ன்) இரகசியம் நாவலின் விமர்சனம் வந்துள்ளது.

பரம(ன்) இரகசியம் நாவல் படித்து முடித்த வாசகர்களின் பாராட்டுகள் தொடர்ந்து எனக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பலர் இந்த நாவலை ஒரு கதையாக நினைக்க முடியவில்லை என்றும், படித்து முடித்த பின் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒருசில நாட்கள் தொடர்ந்து இருக்கின்றன என்றும் பலப்பல வார்த்தைகளில் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்து வருகிறார்கள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

என்று வள்ளுவர் கூறிய நிலையிலேயே நான் இருக்கிறேன். இந்த நாவலை எழுதி முடித்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடப் பலமடங்கு அதிக மகிழ்ச்சியையும், நிறைவையும் நான் உணர்கிறேன்.

இந்த நாவல் மேலும் பல வாசகர்களை தன்னிடம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. வாசகர்களின் வாய்வழி விமர்சனங்களும், கண்டிப்பாகப் படிக்கச் சொல்லும் மனம் உவந்த பரிந்துரையும் இந்த நாவலின் மிகப்பெரிய விளம்பரமாகிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது.

படித்துப் பாராட்டிய, மற்றவர்களுக்கு பரிந்துரை செய்து கொண்டிருக்கிற, நான் முகமறியா அந்த வாசக அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

- என்.கணேசன்


Monday, April 7, 2014

எழுத்தால் நான் இழந்ததும், பெற்றதும்..!


Penmai.com உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கடந்த மூன்று வாரங்களாக நான் அளித்த பேட்டியின் முதல் பகுதி -

கார்த்திகா - Hi sir, First of all, Hearty Welcome to Our Show.. உங்களை இங்க வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.. நீங்க எங்களுக்காக நேரம் ஒதுக்கி வந்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்.. மிக்க நன்றிகள் Sir!! 
Show - க்குள்ள போறதுக்கு முன்ன, உங்களைப் பத்தி நீங்க எங்களுக்காக கொஞ்சம் சொல்ல முடியுமா..?? நாங்க எங்களுக்குத் தெரிஞ்ச வரை உங்களைப் பத்தி சொல்லிருக்கோம்.. இருந்தாலும் உங்களை பத்தி உங்க வாய் மொழியாக கேட்க ஆசைப்படுறோம்.. எங்களுக்காக சொல்றீங்களா?? - 

நான்: வணக்கம் மேடம். பெண்மை உறுப்பினர்களுக்கும் என் வணக்கங்கள்.
பூர்விகம் கர்நாடகத்தில் மங்களூர் அருகில் இருக்கும் குக்கிராமம். தாய்மொழி துளு. ஆனால் பிறந்தது வளர்ந்தது படித்தது வேலை பார்ப்பது எல்லாம் தமிழகத்தில் கோயமுத்தூரில். விஜயா வங்கியில் வேலை பார்க்கிறேன். திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மனைவி இல்லத்தரசியாக (housewife) ஆக இருக்கிறார்.

கார்த்திகா - ரொம்ப சந்தோஷம் Sir.. ரொம்ப short & Sweet ah சொல்லிடீங்க.
வங்கி பணியிலிருந்து எப்படி நீங்க Writing Field-குள்ள வந்தீங்க?? உங்களுக்கு எழுதணும்ன்னு ஆசை எப்ப வந்தது?? எழுத்துல ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?? சின்ன வயசுல இருந்தே நிறைய எழுதுவீங்களா?? உங்களோட எழுத்துப் பயணத்துக்கு தூண்டுகோலாக அமைந்த விஷயம் எது??

நான் - சிறு வயதில் இருந்தே கதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் எனக்கு இருந்தது. புரிகிறதோ இல்லையோ, நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நான் கிடைக்கிற புத்தகங்களை எல்லாம் வாசிப்பேன். இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், இப்படி மாற்றி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும் என்றெல்லாம் படிக்க படிக்கத் தோன்றும்.
பள்ளி நாட்களிலேயே (பத்தாம் வகுப்பு படிக்கையில்) கதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்திருந்தேன். அதை வாங்கிப் படிக்கவென்றே சில நண்பர்களும் இருந்தார்கள். கல்லூரி நாட்களில் கவிதைகள், கதைகள் எழுதி அதையும் விரும்பி படிக்க ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தது.
விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவன் பத்திரிக்கைக்கு சீரியஸாக எழுதி அனுப்ப நினைத்தது வங்கியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு தான். முதல் கதை ஆனந்த விகடனில் 1987ல் வெளியாகியது. தலைப்பு-”ஊருக்கு மகான் ஆனாலும்...”

கார்த்திகா - Interesting Sir.. முதல் கதையே விகடன்- ல வந்துருக்கு அதும் 1987 ல.. Whoa.. Great Sir!! பத்தாம் வகுப்பு படிக்கும் போதே உங்களுக்கு Fan Club Start ஆகிருக்கு.. அது Day by Day increase ஆகிட்டே வருது.. இப்போ வரைக்கும்…
எப்பொழுதுமே நமக்கு நம்மளோட’முதல்’ என்றுமே ஸ்பெஷல் தான் இல்லையா... அது எப்படிப்பட்ட கிறுக்கலா இருந்தா கூட… அப்படி நீங்க 10th ல எழுதுன்ன அந்த முதல் கதை பத்தி சொல்ல முடியுமா? அப்போ உங்களோட பிரண்ட்ஸ் உங்களோட கதைய படிச்சிட்டு முதல்ல உங்ககிட்ட சொன்ன விஷயம் என்ன?? உங்களோட Parents நீங்க எழுதின முதல் கதையை படிச்சாங்களா?? உங்க Friends & Parents எந்த மாதிரியான Feedback கொடுத்தாங்க?? அப்போ அதை நீங்க எப்படி எடுத்துகிட்டீங்க...

நான் - பத்தாம் வகுப்புக் கிறுக்கல்களின் ஆரம்பம் சரியாக நினைவில்லை. ஆனால் நினைவில் நிற்பது “அட்வகேட் அமர்நாத்” என்ற துப்பறியும் கதையின் பெயர். நோட்டுப் புத்தகத்தில் எழுதிய அந்தக் கதையை கதிரேசன் என்ற மாணவ நண்பன் பள்ளியின் கடைசி நாளில் எடுத்துக் கொண்டு போனான். ஒரு கொலைக் குற்றவாளியை அட்வகேட் அமர்நாத் தன் புத்திசாலித்தனத்தால் எப்படி கண்டுபிடித்தார், கோர்ட்டில் வாதாடி ஜெயித்தார் என்பது போல வரும். அதை வீட்டில் தந்து படிக்கச் சொல்லவில்லை. மகன் கதை எழுதுவான் என்று பெற்றோருக்குத் தெரியும் என்றாலும் பெரிய ஊக்குவித்தல் இருந்ததில்லை. அதே நேரத்தில் எழுதாதே என்று கண்டித்ததும் இல்லை. அந்தக் கதை சில மாணவர்களிடையே சர்க்குலேசஷன் போனது அவ்வளவு தான்.
கல்லூரி நாட்களில் குறுநாவல் என்று முதல் முதலில் நான் எழுதியது “இவர்கள் தனி நட்சத்திரங்கள்” என்ற காதல்+சஸ்பென்ஸ் கதை. முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் அஸ்வினி, பரணி, கார்த்திக், ரேவதி என நட்சத்திரங்களின் பெயர்களில் வருவார்கள். என் நெருங்கிய நண்பர்களிடத்தில் மிகவும் பிரபலமான கதை இது. ஓரளவு எனக்கு திருப்தியளித்ததும், சிலரிடம் சீரியஸாக அங்கீகாரம் பெற்றுத் தந்ததும் ஆன முதல் கதை இது தான். சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் எழுதி இருப்பேன் இக்கதையை. போகப் போக நோட்டில் நான் ஒரு பக்கம் எழுதினாலும் உடனே வாங்கிப் படிப்பார்கள். இந்த நாவலை வீட்டிலும் படித்தார்கள். நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அந்த குறுநாவல் கதை என் கையெழுத்தில் இன்றும் இருக்கிறது...

கார்த்திகா - உங்க பதில் பார்த்துட்டு பேச்சு வராம உட்காந்துருக்கோம்… உங்கட்ட Natural ah அந்த Flair இருந்துருக்கு Sir.. ஆரம்பத்திலே துப்பறியும் / Suspense கதை.. Ah ha ஒரு துப்பறியும் சாம்புவா வர வேண்டியவர், Banker ah வந்துட்டார்.. Just Miss!!
//அந்தக் கதை சில மாணவர்களிடையே சர்க்குலேசஷன் போனது அவ்வளவு தான்.//
என்ன Sir Casual ah Circulation போனது அவ்வளவு தான் ன்னு சொல்லிடீங்க.. நான் லாம் கூப்பிட்டு கொடுத்தாலும் யாரும் படிச்சுருக்க மாட்டாங்க.. Higher Secondaries அப்போவே Circulate ஆகி விடாம படிச்சது பெரிய விஷயம் தான்..
உங்க Parents அப்போ இருந்து Silent ah பார்த்து Encourage பண்ணிருக்காங்க.. Superb Sir!! Next “இவர்கள் தனி நட்சத்திரங்கள்” - நட்சத்திரங்களைப் பாத்திர பெயர்களா வச்சுருந்துருக்கீங்க.. வித்யாசமா யோசிக்கறீங்க Sir.. அதான் உங்க Specialty யும் கூட..
//அந்த குறுநாவல் கதை என் கையெழுத்தில் இன்றும் இருக்கிறது...//
இதை பார்த்துட்டு உங்க ரசிகர்கள், அந்த கதையை Post செய்ய சொல்லி கேட்க போறாங்க பாருங்க
நாங்களே முதல் கதை எதுன்னு கேட்கணும்ன்னு இருந்தோம்.. நீங்களே சொல்லிடீங்க.. உங்க முதல் கதை “ஊருக்கு மகான் ஆனாலும்...” விகடன் ல வந்ததை சொன்னீங்க.. விகடனின் அறிமுகம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?? அந்த கதைக்கு உங்களுக்குக் கிடைச்ச First Compliment என்ன??

நான் - எனது முதல் கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பி மூன்று மாதங்கள் ஆகியும் திரும்பியும் வரவில்லை. பிரசுரமும் ஆகவில்லை. அதற்குப் பின் ஒரு கடிதம் விகடனில் இருந்து வந்தது. அந்த சிறுகதையை பிரசுரத்திற்கு ஏற்பதாகவும், அதை இடையில் வேறெதற்கும் அனுப்பவில்லை என்ற உறுதிமொழிக்கடிதமும் கேட்டார்கள். அனுப்பினேன். பிரசுரம் ஆகியது. அன்றைய சந்தோஷம் இன்றும் நினைவில் நிற்கிறது. கதையைப் படித்து விட்டு எல்லோருமே ஒரே போல் சொன்ன கமெண்ட். “மிக நன்றாக இருக்கிறது. கண் கலங்கி விட்டேன்”.

கார்த்திகா  - உங்களோட ஊருக்கு மகான் ஆனாலும் கதையை விகடனுக்கு அனுப்புவதற்கு காரணமாக அமைந்த விடயம் எது? நீங்கள் கதை அனுப்பி பதில் வராமல் இருந்த அந்த மூன்று மாதங்களில் உங்களது மனநிலை என்னவாக இருந்தது?? நிச்சயமாக உங்களோட கதை பிரசுரம் ஆகும்னு எதிர்பார்த்தீர்களா?? அவங்ககிட்ட இருந்து உங்களுக்கு பதில் வரும் வரை உங்களுக்கு எந்த மாதிரியான எதிர்பார்ப்பு இருந்தது??

நான்  - என் முதல் கதைக்கு கரு ஆதிசங்கரர் தான். சிறுவனாக இருந்த போது அவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தன் தாய் ஆர்யாம்பாளிடம் “முதலை என் காலைப் பிடித்திழுக்கிறது. சன்னியாசம் வாங்கிக் கொண்டால் என்னை விட்டு விடுவதாகச் சொல்கிறது. என்ன செய்யட்டும்” என்று கேட்க மகன் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் மகன் சன்னியாசி ஆக அவர் தாய் ஒத்துக் கொள்கிறார். அதன் பின் கரையேறிய அவர் வீட்டுக்குள் நுழையவில்லை. பிக்*ஷாந்தேஹி என்று வெளியே நின்ற போது தான் அந்த தாயிற்கு உண்மை உறைத்தது. மிகவும் துக்கத்துடன் மகனுக்கு அந்தத் தாய் பிரியாவிடை தருவதும், மரண காலத்தில் வருவதாக மகன் வாக்களித்துச் செல்வதும் என உணர்ச்சிகரமான நிகழ்வு அது. அந்தக் கதை என்னை மிகவும் பாதித்திருந்தது.
ஒரு உறவு இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு நபர் அதை முறித்துக் கொண்டு விட்டாலும் அதை இன்னொரு நபர் முறித்துக் கொள்ள விரும்பா விட்டால் என்ன ஆகும்? குறிப்பாக ஒரு துறவியும் அவர் தாயும். மகன் சன்னியாசியாகி விட்டாலும், எல்லா உறவுகளையும் துண்டித்து விட்டாலும் அவன் என் மகனே என்று திடமாக நிற்கும் ஒரு தாயிற்கும், அந்த துறவிக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் பிரவாகம் தான் “ஊருக்கு மகான் ஆனாலும்..” கதை.

கதை அனுப்பி ஒரு மாதம் போன பிறகு பெரிதாய் நம்பிக்கை இருக்கவில்லை. சிறிது ஏமாற்றமாய் தான் இருந்தது. ஆனால் நான் எப்போதுமே ப்ராக்டிகல் நபர். அதனால் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

சத்யப்ரியா - super sir. unga talks are very impressive like your writtings. i read stories and articles in your blog. too impressive.
here is my question sir,
நீங்கள் முதலில் ஒரு வெற்றிகரமான எழுத்தாளரா எப்போ உணர்ந்தீங்க??

நான் - நான் என்னை இப்பொதும் முழு வெற்றியாளனாக உணரவில்லை. இனியும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. என்றாலும் ஒரு நல்ல எழுத்தாளனாக என்னை நான் உணர ஆரம்பித்தது நிலாச்சாரலிலும், என் ப்ளாகிலும் தொடர்ந்து எழுத ஆரம்பித்த பிறகு தான். பின் அந்த உணர்வு கூடிக் கொண்டே வந்திருக்கிறது. அமானுஷ்யனை நிலாச்சாரலிலும், ஆழ்மனதின் அற்புத சக்திகளை யூத்ஃபுல் விகடனிலும் எழுதிக் கொண்டிருந்த போது கிடைத்த வரவேற்பு சாதாரணமானதல்ல. எண்ணற்ற வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைக்க ஆரம்பித்த காலம் என்றால் நான் அதையே சொல்ல வேண்டும்.

கார்த்திகா - Perfect Sir.. அந்த படைப்புகளின் மூலம் ஒட்டு மொத்தமா எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைச்சுடீங்க...!
OK! இதை சொல்லுங்க Sir.. ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு எப்படி போகும்?? Tell us about your normal working day..

நான் - காலை 5.00 முதல் 5.15க்குள் விழிப்பு. காலைக்கடன்கள் கழிந்து மெயில் செக் செய்து விட்டு 6.00, 6.15 வரை படிப்பேன். பின் அரை மணி நேரம் வாக்கிங். பிறகு நியூஸ்பேப்பர் ரீடிங். அன்று என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்து விட்டு பிறகு அதற்கான மெட்டீரியல் ஏதாவது இருந்தால் அதை சேகரித்து வைத்து விட்டு குளியல், டிபன், ஆபிஸ் புறப்பாடு 9.00 மணிக்கு.

மாலை 6.00 மணிக்கு வீடு வந்து சேரும் வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்று எழுதும் விஷயங்களில் மனம் இருக்கும். மாலை காபி டீ குடித்து விட்டு எழுத ஆரம்பிப்பேன். இடை இடையே போன்கால்கள் வரும்.. அதை அட்டெண்ட் செய்து விட்டு எழுதுவது தொடரும். 8.00 8.15ல் சாப்பாடு.. சாப்பிட்டு முடித்த பிறகும் எழுதுவது தொடரும். 9.30க்கு மேல் வீட்டு வராந்தாவிலேயே சிறு நடை. 9.45 முதல் 10.00க்குள் உறக்கம்.
பொதுவான வேலை நாள் இப்படி தான் இருக்கும்...

ப்ரத்யுக்‌ஷா - Family - bank work - stories --> இதை எப்படி சமாளிக்கறீங்க?? Ladies கதை எழுதுன்னா வீட்டு வேலை, Family பார்த்துக்கணும்ன்னு Commitments இருக்கு.. அதே மாதிரி நீங்க எழுதறப்போ என்ன மாதிரியான challenges - time விஷயத்துல - face பண்றீங்க??

நான்  - எல்லாவற்றையும் சமாளிப்பதில் நிறையவே சிரமங்கள் இருக்கின்றன. வீடு-பேங்க்-எழுத்து மட்டுமல்லாமல் நேரிலும், போனிலும் தொடர்பு கொள்ளும் உறவுகள், நட்புகள், வாசக நண்பர்கள், ஜோதிடம் பற்றிய சந்தேகங்கள் கேட்பவர்கள் என பலரும் இருக்கிறார்கள். முடிந்த வரை சமாளிக்கிறேன். 

எங்களுக்கு மிகுந்த நேரம் ஒதுக்குவதில்லை என்று வீட்டு நபர்களின் புகார், நீங்கள் எங்கள் வீட்டுக்கே வருவதில்லை, எங்களுக்கு போன் செய்து (நிறைய நேரம்) பேசுவதில்லை என்று நட்புகளின் புகார் இதெல்லாம் இருக்கவே இருக்கிறது.

நான் மிக அவசியமானது என்று நினைப்பதற்கு அவசியமான, நியாயமான நேரம் கண்டிப்பாக ஒதுக்குகிறேன். மற்ற புகார்களை லட்சியம் செய்வதில்லை.

கார்த்திகா - பல சிரமங்களுக்கிடையில நீங்க எழுதுறீங்க.. அப்படி எழுதும் போது நீங்க இழந்ததும் பெற்றதும் (Lost and Earned) என்ன Sir?? Just like Time pass, Entertainment, Relatives, Good Name, Knowledge etc., இப்படி ஏதாவது இருக்கும் ல.. அப்படி ஏதும் இருந்தால் சொல்லுங்க…

நான்  - நிறைய எழுதுவதால் நான் இழந்த பெரிய விஷயம் முன்பைப் போல் படிக்க நேரம் அதிகம் கிடைப்பதில்லை என்பதே. எழுதுவது சம்பந்தமாக தேவையானதை மட்டும் தான் இப்போது படிக்க நேரம் கிடைக்கிறதே ஒழிய மற்றபடி விரும்பியதை எல்லாம் படிக்க முடிவதில்லை. ஒரு காலத்தில் நூல்களே கதி என்று இருந்த எனக்கு இது இழப்பே. மற்றபடி நான் இழந்தவை சில்லரை விஷயங்களே.
எழுதுவதால் நான் பெற்ற பெரிய விஷயம் மன நிறைவு. “மன வருத்தம் ஏற்படும் போதெல்லாம், தன்னம்பிக்கை இழக்கும் போதெல்லாம் உங்கள் ப்ளாகைப் படிக்கிறேன்.” “உங்கள் எழுத்துக்கள் எனக்கு டானிக் போல்.” என்பது போல அடிக்கடி எனக்கு நிறைய மெயில்கள் வருகின்றன. 

சென்ற வருடம் திருப்பூரில் இருந்து ஒருவர் “தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த நேரத்தில் தற்செயலாக உங்கள் ப்ளாகிற்கு வந்தேன். உங்கள் எழுத்துக்களால் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டேன். என் பிரச்சினைகள் தீரவில்லை. ஆனால் பிரச்சினைகளை சந்திக்கக் கூடிய மன உறுதி இப்போது எனக்கு உள்ளது” என்று ஒரு எழுதினார்.

மலேஷியாவில் இருந்து ஒரு இளைஞர் “உங்கள் எழுத்துக்களை படிக்க ஆரம்பிக்கும் முன் என்னிடம் நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்தன. ஆனால் இப்போது உங்கள் எழுத்துக்களின் தாக்கத்தால் அவற்றை எல்லாம் விட்டு விட்டேன். என்னைப் போல் நிறைய பேரை உங்கள் எழுத்துக்கள் காப்பாற்றும் அண்ணே” என்று சொன்னார். இப்போதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்னுடன் பேசுகிறார். இப்படி எத்தனையோ பேர்...

இதை எல்லாம் படிக்கும் போது நான் பெறும் நிறைவு சாதாரணமானதல்ல. எத்தனையோ முறை சலிப்பும் சோம்பலும் தலை தூக்கும். ஆனால் இது போன்ற feedbacks அடிக்கடி வரும் போது ஒரு அசாதாரண உறுதி என்னுள் எழும்.... மறுபடி எழுத ஆரம்பிப்பேன்.

(தொடரும்)