Monday, March 17, 2014

தர்மம் எப்படிச் செய்ய வேண்டும்?



அறிவார்ந்த ஆன்மிகம் 35

ல்லா மதங்களும் ஒற்றுமையுடன் ஒரே குரலில் அழுத்திச் சொல்லும் சில விஷயங்களில் முன்னணி வகிப்பது தர்மம் செய்யுங்கள்என்கிற அறிவுரையாக இருக்கிறது. அறம் செய்ய விரும்புஎன்று ஔவையாரே ஆத்திச்சூடியை தர்மத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறார். இப்படி நம் ஆரம்பப் பாடமாகவே இருக்கும் தர்மம் இருக்கிறது.

தர்மம் குறித்து மகாபாரதத்தில் மிக அருமையான கதை ஒன்று இருக்கிறது.

கௌரவர்களை குருக்‌ஷேத்திரப் போரில் வென்ற பின் தர்மபுத்திரர் அஸ்வமேத யாகம் செய்து முடிவில் எட்டுத் திக்கிலிருந்தும் வந்திருந்த ஏழை எளியவர்களுக்கு தானங்கள் செய்தார். அந்த நேரத்தில் பாதி உடல் தங்கம் போல் மின்னிய கீரி ஒன்று யாகசாலைக்குள் வந்து தானம் நடைபெற்ற இடத்தில் தரையில் புரண்டு புரண்டு எழுந்தது.

எதற்காகப் புரள்கிறாய்?’’ என்று கீரியைக் கேட்டார்கள். ‘‘மிகப் பெரும் தானம் நடக்கும் இடத்தில் புரண்டால், மீதி உடலும் தங்கமாகும் என்று நம்பி வந்தேன். இந்த இடத்தில் பெரும் தானம் நடக்கவில்லை போலும். அதனால்தான் என் மீதி உடல் தங்கமாகவில்லை’’ என்றது கீரி. 


எல்லோரும் திருப்தி அடையும் அளவு தானம் செய்திருந்த தர்மபுத்திரர் அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் ‘‘இது என்ன விந்தை? இதை விடப் பெரிய அளவில் யாராவது தானம் செய்யமுடியுமா என்ன? அப்படி எந்த இடத்தில் உன் பாதி உடல் தங்கமானது?’’ என்று கீரியை விசாரித்தார்கள்.

கீரி பதில் சொன்னது. ‘‘ஒரு உஞ்சவிருத்தி பிராமணரின் குடும்பத்தில் அவர், அவர் மனைவி, மகன், மருமகள் என நான்கு பேர் இருந்தார்கள். ஒரு சமயத்தில் கடும் பஞ்சம் வந்து அவர்கள் பல நாள் பட்டினி கிடைக்க நேரிட்டது.  பிறகு ஒரு நாள் ஒரு படி சோளம் கிடைக்க அந்த சோளத்தை மாவாக அரைத்து அதை நான்காகப் பிரித்து இறைவனை வணங்கி சாப்பிட அமர்ந்தார்கள். அந்த நேரத்தில் கடும் பசியோடு ஒருவர் அந்த வீட்டுக்கு வர அவரை வரவேற்று உபசரித்த குடும்பத் தலைவர்  தன் பங்கு மாவை அவருக்குச் சாப்பிடத் தந்தார். அது வந்தவருக்குப் போதாமல் போகவே அடுத்ததாக மனைவி,  பின் மகன்,  அதன் பின் மருமகள் என மற்றவர்களும் தங்கள் பங்கு மாவை  பசியோடு வந்தவருக்கு முழுமையாக தந்து விட்டனர். அப்படி தர்மம் நடந்த அந்த வீட்டில் பரிமாறும் போது சிதறிய சிறு மாவின் மீது நான் நகர்ந்தபோது என் பாதி உடல் தங்கமாகியது. மீதி உடலையும் தங்கமாக்கிக் கொள்ளும் ஆசையில் இங்கு வந்தேன். ஆனால் உங்கள் தர்மம் அந்த ஒரு படி மாவுக்குச் சமமில்லை’’

மிக உயர்ந்த வகையான ஈடில்லா தர்மம் அது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அந்த வகையான தர்மத்தை எல்லோராலும் செய்வது முடியாத காரியம் என்பதால் தங்களால் முடிந்த அளவு, முடிந்த விதங்களில் அடுத்தவர்க்கு தர்மம் செய்யுமாறு எல்லா மதங்களும் ஆன்மிகப் பெருமக்களை வலியுறுத்துகின்றன.

தனக்கு மிஞ்சித் தானே தர்மம்என்று பலரும் நினைக்கலாம். அதுவும் சரி தான் என்றாலும் எது கிடைத்தாலும் தனக்கே போதவில்லை என்று நினைப்பவன் அதை வைத்துக் கொண்டே தர்மசிந்தனை இல்லாமல் வாழ்ந்து முடிக்கிறான். இதற்கு என்ன செய்வது? இந்த மனநிலைக்கு தெய்வத்தின் குரலில் காஞ்சி மகா பெரியவர் அழகாக வியாக்கியானம் செய்திருக்கிறார். 

எது உயிர் வாழ்வதற்கு அத்யாவசியமோ,  எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ, அந்த bare necessities -க்குத் தேவயானதைத் தான் 'தனக்கு' என்று இங்கே சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 'தனக்கு' என்று சொல்லிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகள் பண்ணிக் கொண்டே போய் எத்தனை வருமானம் வந்தாலும் தானம் பண்ண ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதாகத்தான் முடியும். சொந்தச் செலவுகளை அவசியத்திற்கு அதிகமாக எவரும் வைத்துக் கொள்ளா விட்டால் தான் தனக்கு மிஞ்சிக் கையில் தர்மத்துக்குப் பணமே இருக்கும். முடிவில்லாமல் தனக்கென்று ஆடம்பர போக்யங்களைப் பெருக்கிக் கொண்டே போய்விட்டு, ''தனக்கு மிஞ்சித் தர்மம் பண்ண எதுவுமே இல்லை'' என்று கைவிரித்தால் அது நியாயமில்லை. அதனால், தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படிச் செலவழித்து எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பது தான் ''தனக்கு மிஞ்சித் தர்மம்''.

தைத்திரீயோபநிடதத்தில்  தானத்தைப்  பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறது.  “சிரத்தையோடு தானம் தர வேண்டும். அசிரத்தையோடு தரக்கூடாது.”. தர்மத்தை அகமும், முகமும் மலரத் தர வேண்டும் என்கிற அந்த உபநிடதம் இரண்டு விதமான வெட்கங்களுடன் தர்மம் செய்ய வேண்டும் என்கிறது. இதை விட அதிகமாகத் தர முடியவில்லையே என்ற வெட்கமும், தருவது நான்கு பேருக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற வெட்கமும் இருக்க வேண்டுமாம். நான்கு பேருக்குத் தெரிந்தால் அவர்களும் கேட்டு விடுவார்களோ என்கிற பயம் அல்ல இங்கு சொல்லப்படுவது. நான்கு பேருக்குத் தெரிய செய்வது புனிதமான தர்மம் ஆகாது என்பதும், தெரிந்து அவர்கள் பாராட்டினால் அது கர்வம் ஏற்படக் காரணமாக இருக்கும் அது தர்மத்தின் பலனை அழித்து விடும் என்கிற பொருளில் தான் இங்கு சொல்லப்படுகிறது.
பைபிளும் இதே கருத்தையே இப்படிச் சொல்கிறது. மனுஷர்  காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால்பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

மேலும் பைபிள் சொல்கிறது. நீயோ தர்மம் செய்யும் போது , உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக் கடவது.”

வலது கை தருவது இடது கைக்குத் தெரியாமல் இருக்கும்படி தருவது தான் உண்மையான தர்மம்.

முகமது நபியும் உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்வது அவசியம் என்று முகமது நபி  அவர்கள் குறிப்பிட, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்ன செய்வது என்று கேட்க ''அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று முகமது நபி கூறினார்.
நபித்தோழாகள் 'அவர் அதற்கும் இயலாவிடின் என்ன செய்வது?என்று வினவ அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று முகமது நபி  கூறினார்.

நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்ன செய்வது? என்று வினவ ''அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று முகமது நபி விளக்கமளித்தார்.

தர்மம் என்பது பொருளாதார ரீதியாக செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும் செய்யும் காரியமல்ல. தன் தேவைகளை முடித்துக் கொண்ட பின் எஞ்சியதைத் தருவதும் அல்ல. எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்க்கு தர்மம் செய்ய முடியும். அதற்கு முக்கியத் தேவை மனம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அப்படி தர்மம் செய்பவனை இறைவன் காப்பான் என்று சர்வ மதங்களும் சொல்கின்றன.

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி –ஆன்மிகம்- 5-11-2013

3 comments:

  1. தர்மம் எப்படி செய்யவேண்டும் என்பதற்கு அழகான விளக்கம், கதை மிக அருமை.
    நன்றி.

    ReplyDelete
  2. தர்மத்தை பற்றிய சிறந்த கட்டுரை. தர்மம் செய்யும் பொருள்களின் அளவையும், மதிப்பையும் விட தர்மம் செய்யும் சூழ்நிலையும் மனமுமே முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம்.

    பொருளாதார ரீதியாக செல்வந்தர்களாக இருந்தும் பிறருக்கு தரும் மனமில்லாதவர்கள் பிறருக்கு தர முன்வருவதும்
    அதீத செல்வத்தை தர்மம் செய்பவர்கள் தேவைகளை முடித்துக் கொண்ட பின் எஞ்சியதைத் தர முன்வருவதும்
    தன் தேவைகளை முடித்துக் கொண்ட பின் எஞ்சியதைத் தருபவர்கள் காஞ்சி மகா பெரியவர் கூறியது போல் ''தனக்கு மிஞ்சித் தர்மம்'' செய்ய முன்வருதும் தர்மத்தின் படிநிலைகளாகவே கருதுகிறேன்.
    நான் எந்த நிலையில் உள்ளேன் என்பதை உணர்த்து அடுத்த நிலைக்கு செல்ல முயற்சி செய்தால் ஒருநாளில் தர்மம் என்று உயர்தோர் கூரியதை உணர்வேன் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

    ReplyDelete