Thursday, January 23, 2014

பரம(ன்) ரகசியம் – 81



ஜான்சனுக்கு ஈஸ்வர் இந்த அளவு முன்னேறி இருப்பதை நம்பக் கஷ்டமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு பதிலை வைத்திருந்த குருஜியின் அறிவுக்கு இது எட்டிய விஷயமாக இருந்தாலும் ஓரிரு நாட்களில் ஈஸ்வர் அவர்களை வேவு பார்க்கும் அளவுக்கு அசுர வேகத்தில் நெருங்கியிருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  இதில் அக்னி நேத்ர சித்தர் வேறு அவனை சந்தித்திருக்கக் கூடும் என்று குருஜி நினைக்கிறார்....!

ஜான்சன் மனத்தாங்கலுடன் சொன்னார். “உங்க நண்பர் உதயன் சுவாமி அக்னிநேத்ர சித்தர் இந்த இடத்தில் நடக்கும் ஆராய்ச்சிகளைக் கெடுக்க முடியாதபடி மந்திரக்காப்பு செய்தது மாதிரி ஈஸ்வரும் எதுவும் செய்ய முடியாதபடி செய்திருக்க நீங்கள் சொல்லி இருக்கலாம்....

குருஜி சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். ஈஸ்வரை அவர் குறைத்து எடை போட்டு விட்டாரோ?

ஜான்சன் பயத்தோடு கேட்டார். “அவன் இன்னேரம் இந்த இடம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருப்பானா குருஜி

“அதை அவன் கண்டு பிடிப்பது கஷ்டம் தான்... அந்த சித்தர் அவனுக்கும் கணபதிக்கும் சரியான ஒரு முகூர்த்த நேரத்தில், எனர்ஜி லெவல்னு நீங்கள் சொல்வீங்களே அதில், ஒரு நுட்பமான இணைப்பை ஏற்படுத்திட்டார். அதனால சரியா முயற்சி செய்தால் கணபதியும்,  விசேஷ மானஸ லிங்கமும் இருக்கிற இடத்தை அவனால் பார்க்க முடியுமே ஒழிய அந்த இடம் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கற அளவுக்கு உதயனோட மந்திரக் காப்பு அனுமதிச்சுடாதுன்னு நினைக்கிறேன்

அவன் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளும் நபர் அல்லவே என்று நினைத்த ஜான்சன் கணபதி குருஜியை நோக்கி வருவதைப் பார்த்து அங்கிருந்து நகர்ந்தார்.

கணபதியைப் பார்த்து குருஜி புன்னகையுடன் கேட்டார், “என்ன கணபதி, சிவலிங்கத்துகிட்ட அடுத்தது உனக்காக ஏதாவது கேட்கலாமா?

உலகில் தன்னைக் காட்டிலும் எத்தனையோ பேர் பெரும் கஷ்டத்தில் இருக்கும் போது தனக்காக மட்டும் வேண்டிக் கொள்வது நியாயமல்ல என்று கணபதி நினைத்தான். கேட்காமலேயே இறைவன் இப்போது அவனுக்கு நன்றாகவே படியளந்து வருகிறார்.... “வேண்டாம் குருஜி…”

அப்படின்னா அடுத்தது என்ன கேட்கலாம் சொல்லுகுருஜி விளையாட்டாய் கேட்டார்.

“எல்லாரும் நல்லா சந்தோஷமாயிருக்கணும்னு கேட்டா என்ன குருஜி?கேட்டு விட்டு கணபதி குருஜியை குழந்தைத்தனமாய் பார்த்தான். தனித்தனியாய் ஒவ்வொருவரும் கேட்பதை விட இப்படி எல்லாரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று கேட்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

குருஜி மெல்லச் சொன்னார். “அந்த அளவு சக்தி இந்த சிவலிங்கத்துக்கே இருக்கிறது சந்தேகம் தான் கணபதி

கணபதி போன பிறகும் அவன் வார்த்தைகளும், மனதார அவன் சொன்ன விதமும் அவர் மனதில் நிறைய நேரம் நின்றது. பின் ஒரு பெருமூச்சு விட்டவராக பாபுஜியை அழைத்து குருஜி சொன்னார். “பாபுஜி. இந்த விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி பத்தி இனி ஆராய்ச்சி செய்ய எதுவுமில்லை. ஈஸ்வர் குறுக்கில் வராமல் இருந்தால் நம்ம கற்பனையோட எல்லை தான் நம்ம சாதனையோட எல்லையாய் இருக்கும்...

“ஈஸ்வர் குறுக்கே வராமல் இருக்க என்ன செய்யறது குருஜி?

“எல்லாத்துக்குமே ஒரு வழி இருக்கு. நான் யோசிச்சு சொல்றேன்... நீ அதைப்பத்தி கவலைப்படாதே..  நம்ம லட்சியத்தை அடைய நாம் முதல்ல என்ன செய்யலாம்னு நீங்க எல்லாரும் சேர்ந்து யோசிக்க ஆரம்பியுங்க. நானும் சிலதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன். பிறகு சேர்ந்து பேசி முடிவு செய்யலாம். இதை முதல்லயே செய்திருக்கலாம். ஆனால் அப்ப விசேஷ மானஸ லிங்கத்தை நான் நம்பின அளவு நீங்க யாரும் நம்பினதா தெரியலை. அதனால் தான் உங்களுக்கெல்லாம் அந்த நம்பிக்கை வந்த பிறகு பேசலாம்னு விட்டுட்டேன்.....”.

பாபுஜி போன பிறகு குருஜி ஈஸ்வரை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

ஸ்வர் இனி என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய பார்த்தசாரதி ஆவலாய் இருந்தார். சீக்கிரமாக அவன் எதாவது செய்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் ஈஸ்வரோ அவசரப்பட்டு எதையும் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

விசேஷ மானஸ லிங்கத்தின் அருளாளோ, அக்னிநேத்ர சித்தர் மற்றும் பசுபதி ஆகியோரின் ஆசியாலோ இன்றைய தினத்தில் அவன் சாதித்தது அவன் எதிர்பார்த்திராத அளவு பெரிய வெற்றி தான். ஒரு இடத்தில் நடப்பதை ஓரளவாவது நேரில் பார்ப்பது போல் பார்க்க முடிந்தது சாதாரண விஷயம் அல்ல.  ஆழ்மனசக்திகளில் ஒன்றான Remote Viewing என்ற தொலைதூரத்தில் நடப்பதைக் காண முடிந்த சக்தி அவனுக்கு இன்று அருளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வெற்றியில் பெருமிதம் அடையும் நிலையில் அவன் இல்லை. காரணம் அவன் ஒருவனிடம் அந்த சக்தி உள்ளது என்றால் எதிரணியில் உள்ளவர்களில் எத்தனை பேரிடம் அந்த சக்தி உள்ளது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்குக் குருஜியைப் பார்க்க முடிந்தது போல குருஜிக்கும் அவனைப் பார்க்க முடிந்திருக்கிறது. அவருக்கு சற்று தொலைவில் வேறு மூன்று பேர் தியான நிலையில் அமர்ந்து கொண்டு இருந்தார்களே அவர்களுக்கும் அந்த சக்தி இருக்கலாம் என்று அவன் உள்மனம் சொன்னது. அது உண்மையானால் இங்கு இவன் ஒருவன் என்றால் அங்கு அவர்கள் நான்கு பேர் இருக்கிறார்கள். அது போதாதென்று அங்கு விசேஷ மானஸ லிங்கம் இருக்கிறது, ஜான்சன் இருக்கிறார், இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ? இப்படி எண்ண ஓட்டம் போன போது அவன் சொல்லிக் கொண்டான். ‘ஆனால் அவர்களிடம் சத்தியம் இல்லை.... நியாயம் இல்லை. அதுவே ஒரு பெரிய பலவீனம் அல்லவா? என் பக்கம் அது இருப்பது மிகப்பெரிய பலம் அல்லவா?

மேலும் யோசித்த போது அவனை அந்த சித்தரின் வார்த்தைகளும் ஆசுவாசப்படுத்தின. “எனக்குத் தெரிஞ்சு சுமக்க முடியாத பாரத்தை இறைவன் தர்றதில்லை”.

சித்தர் சொன்னது போல் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாத நல்லவனாக இருக்க அவன் விரும்பவில்லை. முயலாமலேயே தோல்வியை ஒப்புக் கொள்ளும் முட்டாளாக இருக்கவும் அவன் விரும்பவில்லை. ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதியாக நினைத்தான். மனதில் உறுதி வந்தவுடனேயே கூடவே யானை பலம் அவனுக்கு வந்து சேர்ந்தது போல இருந்தது.

எதைச் செய்வதாக இருந்தாலும் கணபதியைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வது தான் அதற்கான முதல் படி என்று ஈஸ்வர் கணக்கிட்டான். முன்பு போலவே மறுபடி முயற்சிக்கலாம் என்றால் அது கண்டிப்பாக குருஜிக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. மனிதர் கண்கொத்திப் பாம்பாக அங்கே காவல் காத்துக் கொண்டு இருக்கலாம்.

“துஞ்சாமல்என்ற வார்த்தைக்கு தூங்காமல் என்று பார்த்தசாரதி அர்த்தம் எழுதினாலும் அதற்கு சோர்வில்லாமல், கால தாமதம் செய்யாமல் என்று அர்த்தம் என பார்த்தசாரதி சொன்னது சரியாக இருக்க வேண்டும் என்றே பட்டாலும் இன்றைய சூழ்நிலைக்கு ‘தூங்காமல்என்ற அர்த்தமே பொருந்தும் என்பது போலத் தோன்றியது. இரவு நேரத்தில் குருஜி தூங்கிய பிறகு ஏதாவது முயற்சி செய்யலாம். அப்படிச் செய்தால் அவர் அவன் செய்கைகளை அறிய வாய்ப்பில்லை....  முடிவெடுத்து விட்டு அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவன் நிமிர்ந்து உட்கார்ந்த விதத்தையும், அவன் முகத்தில் தெரிந்த உறுதியையும் பார்த்த பார்த்தசாரதிக்கு அவன் ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கை பிறந்தது.

அவன் தன் எண்ண ஓட்டத்தை அவரிடம் வெளிப்படையாகச் சொன்னான். அதிகாலை இங்கு வந்த அவரை இரவாவது வீட்டுக்கு அனுப்புவது தான் முறை என்று தோன்றியதால் ஈஸ்வர் அவரை வீட்டுக்குப் போய் மறு நாள் காலை வரச்சொன்னான். முனுசாமியும் மதியமே போய் விட்டிருந்ததால் அவனைத் தனியாக விட்டுப் போக அவருக்குத் தயக்கமாய் இருந்தது. அவன் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இருக்கையில் அவருக்கு வேலை எதுவும் இல்லை என்பதால் அவர் இரவில் தங்கியும் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லி ஈஸ்வர் வற்புறுத்தி அனுப்பி வைத்தான். ஆனாலும் இரவு ஒன்பது மணி வரை இருந்து அவனிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தான் பார்த்தசாரதி போனார்.

மிழகத்தில் உட்கார்ந்து கொண்டு செங்கடலில் சோமாலியக் கடற்கொள்ளையர்களை அழிக்க முடிந்த சக்தி தங்கள் வசம் இருக்கிறது என்ற எண்ணமே தென்னரசுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. அந்த சந்தோஷமான நேரத்தில் மகளிடம் பேச வேண்டும் போல இருந்தது.  மகளுக்குப் போன் செய்து பேசினார்.

விஷாலியின் குரலில் எல்லை இல்லாத சந்தோஷம் தெரிந்தது. மெல்ல ஈஸ்வரும், தானும் காதலிப்பதாக அவரிடம் சொன்னாள். ஈஸ்வர் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போவதற்கு முன்பே கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று பரமேஸ்வரன் முடிவு செய்திருப்பதாயும், அவர் தென்னரசுவிடம் போனில் பேச இரண்டு நாளாக முறை முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள். கனகதுர்கா வந்திருப்பதாகவும் சொன்னாள்.

விஷாலி தடை இல்லாமல் பேசும் பெண் அல்ல. மிகுந்த சந்தோஷம் மட்டுமே அவளை அப்படிப் பேச வைப்பதுண்டு. இன்று அவள் குரலில் கொப்பளித்த சந்தோஷமும், எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லி விடத் துடித்த துடிப்பும் தென்னரசுவை நிலை குலைய வைத்தது. கொந்தளித்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கேட்டார். “ஈஸ்வர் எங்கேம்மா

“அவர் அந்த தோட்ட வீட்டுக்குப் போயிருக்கார்ப்பா. ஏதோ ஆராய்ச்சி செய்யணுமாம். முடிச்சுட்டு தான் வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கார்.

தென்னரசு பேச்சிழந்து போனார். தந்தையின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் விஷாலி இருக்கவில்லை. ஆனந்தவல்லி தன் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ‘உனக்கு எதெல்லாம் பிடிச்சுதோ அதெல்லாம் எடுத்துக்கோம்மாஎன்று சொன்னதையும், கனகதுர்கா மிக நல்ல மாதிரி என்பதையும் சொன்னாள். “எனக்கு அவங்க கிட்ட பேசறப்ப அம்மா கிட்ட பேசற மாதிரி இருக்குப்பா....

விஷாலி பேசிக் கொண்டே போனாள். மகள் இது நாள் வரை அவ்வளவு சந்தோஷமாக எப்போதுமே இருந்ததில்லை என்று தென்னரசுக்குத் தோன்றியது. கடைசியில் விஷாலி கேட்டாள். “ஈஸ்வரோட தாத்தா கிட்ட பேசறீங்களாப்பா?

“சிக்னல் அபப்ப்ப கிடைக்கறதில்லைம்மா. நான் அப்பறமா பேசறேன்ம்மா

மகளிடம் பேசி முடித்த பிறகு தென்னரசு நிறைய நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். விதி அவர் வாழ்க்கையில் ஒரு குரூர விளையாட்டு விளையாடி இருப்பதாக அவருக்குத் தோன்றியது. இப்படி ஒரு வாழ்க்கை மகளுக்கு அமையும் என்பது முதலிலேயே தெரிந்திருந்தால் தடம் மாறி வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

மகேஷ் வந்தான். “என்ன யோசிச்சுகிட்டிருக்கீங்க அங்கிள்

“இனி அடுத்ததா என்ன செய்யப் போறோம்னு யோசிக்கிறேன் மகேஷ்

“அதைப்பத்தி தான் ஜான்சனும், பாபுஜியும் அந்த வெளிநாட்டுக்காரங்க கிட்ட வீடியோ கான்ஃப்ரன்ஸிங்ல பேசிகிட்டிருக்காங்க. எகிப்து அரசியலைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. போரடிச்சுது. வந்துட்டேன்.

தென்னரசுக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த விசேஷ மானஸ லிங்கம் விவகாரத்தில் அவனுக்கு இயல்பாய் பெரிய ஆர்வம் எப்போதுமே இருந்ததில்லை. அவருக்காகத் தான் அவன் எல்லாமே செய்திருக்கிறான். தனிப்பட்ட  அவருக்காகக் கூட இல்லை. அவர் விஷாலியின் அப்பா என்பதற்காக. அவனிடம் உலகப் பணக்காரர்களில் ஒருவனாகக் கூட நீ ஆகலாம், உன் தாத்தாவைப் போல இருக்கும் சக்தி வாய்ந்த பல பேரை உன் அப்பாயின்மெண்டிற்காக நீ காக்க வைக்கலாம், நீ ஆசைப்படுவதை எல்லாம் நடத்திக் காட்டலாம்...’  என்றெல்லாம் அவர் எத்தனையோ ஆசை காட்டி அவனைத் தன்னுடன் வைத்திருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவனை அவர் சொன்னபடி எல்லாம் ஆடவைத்தது அவனுக்கு விஷாலியின் மீதிருந்த காதல் தான். அவர் அவளை அவனுக்கே திருமணம் செய்து தருவார் என்ற எதிர்பார்ப்பில் தான்....

இப்போது வீட்டில் நடந்திருக்கும் நிகழ்வுகள் அவனுக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தால் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்வான்? தென்னரசுக்கு யோசிக்கவே கஷ்டமாக இருந்தது. அவர் ஏதோ யோசனையில் இருக்கிறார், பேசும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மகேஷ் உறங்கப் போனான். தென்னரசு அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள பாபுஜியின் அறைக்குப் போனார்.

அவர் நுழைந்த போது மகேஷ் சொன்னது போல வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் எகிப்து அரசியல் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். சோமாலியக் கொள்ளைக்காரர்கள் விஷயத்தில் நினைத்ததை சாதிக்க முடிந்த சிவலிங்கத்தின் சக்தி இயற்கை சக்திகளோடு நின்று விடுமா இல்லை அரசியல் வரைக்கும் வருமா என்ற கேள்வி அவர்களிடம் எழுந்திருந்தது. அந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ள தற்போது நடக்க இருக்கும் எகிப்திய தேர்தலை உபயோகப்படுத்திக் கொள்ள அவர்கள் நினைத்தார்கள்.

பிப்ரவரி 2011ல் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கிய பிறகு அந்த நாட்டில் அரசியல் நிலவரம் ஸ்திரமாக இருக்கவில்லை. பின் நடந்த தேர்தலில் முகமது மோர்சி என்பவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அவருக்கும் ராணுவத்தின் எதிர்ப்பு இருந்து வந்தது. 2013 ஜூனில் அவருக்கு எதிராக பெரிதாக கலவரம் ஒன்று வெடிக்க ராணுவம் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பதவியில் இருந்து இறக்கியது. விரைவிலேயே தேர்தல் ஒன்றை நடத்துவோம் என்று உறுதிமொழி அளித்திருந்த ராணுவம் தங்களுக்குச் சாதகமான ஒரு நபரை தேர்தல் களத்தில் நிற்க வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. அந்த நபர் இந்த அறுவரில் ஒருவரான எகிப்தியரின் நெருங்கிய நண்பர். மக்களிடம் அந்த நபருக்கு செல்வாக்கை அதிகப்படுத்த விசேஷ மானஸ லிங்கத்தால் முடியுமா என்பது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாபுஜி ஜான்சனிடம் கேட்டார். “நீங்க என்னை நினைக்கிறீங்க. அரசியல் மாற்றத்தையும் அந்த சிவலிங்கத்தால் ஏற்படுத்த முடியுமா?”.  இந்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்த்தில் இருந்து இருவரும் நெருக்கமாகி விட்டிருந்தார்கள். ஜான்சனிடம் முகம் காண்பிக்கவே தயங்கிய அறுவரும் கூட இந்த ஆராய்ச்சிகளின் ஆரம்பத்தில் இருந்தே அந்தத் தயக்கத்தை விட்டொழித்திருந்தார்கள். அந்த அளவு ஜான்சன் மீது அவர்களுக்கும் நம்பிக்கை உருவாகி இருந்தது.

ஜான்சன் சொன்னார். “கண்டிப்பாய் முடியும்னு தான் நினைக்கிறேன்

“அப்படின்னா முயற்சி செய்து பார்க்கலாம் பாபுஜி சொன்னார்.

ஜான்சன் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கி விட்டுச் சொன்னார். “ஆனால் முதல்ல ஈஸ்வரைக் கட்டுப்படுத்தி வைக்கணும். என்ன தான் குருஜி சொன்னாலும் அவர் அவனை கட்டுப்படுத்த முடியும்னு தோணலை

உடனடியாக இஸ்ரேல்காரர் சொன்னார். “பிரச்சினைக்குரிய ஆள்களைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறதை விட ஒரேயடியாய் அப்புறப்படுத்தறதே நல்லது.

பாபுஜிக்கும் அது சரியென்று பட்டது. எவனால் ஆபத்து என்று புரிந்து விட்டதோ அவனை உயிரோடு விட்டு வைப்பதே ஆபத்தை தக்க வைத்துக் கொள்வது போலத் தான். உடனே பாபுஜி ஈஸ்வரை உடனடியாகக் கொன்று விடும்படி செல்போனில் ஒருவரிடம் கட்டளை பிறப்பித்தார்.

தென்னரசு இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சில மணி நேரங்கள் முன்பு வரை அவன் விதி அவ்வளவு தான் என்று நினைத்து இரக்கப்பட்டு விட்டிருப்பார். இப்போதோ அவர் இதயத்தை இமயம் அழுத்தியது. அவன் விதியோடு அவர் மகள் விதியும் அல்லவா இணைந்திருக்கிறது. சற்று முன் மகளின் பேச்சில் இருந்த அளவுகடந்த ஆனந்தம் நினைவுக்கு வர அவருக்குத் தன் உயிரே போவது போல இருந்தது.  நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

ஜான்சன் தென்னரசைக் கேட்டார். “என்ன ஆச்சு தென்னரசு

“வாயுத் தொந்தரவு தான். வேறொன்னுமில்லை”.  தென்னரசு சமாளித்தார். “ஒரு மாத்திரை சாப்பிட்டால் சரியாயிடும்என்றவர் கஷ்டப்பட்டு முறுவலித்து விட்டுத் தன் அறைக்குப் போனார்.

போனவர் அதிகம் யோசிக்கவில்லை. உடனடியாக அவர் பார்த்தசாரதிக்குப் போன் செய்தார். பார்த்தசாரதியின் ‘ஹலோகேட்டவுடன் அவசரமாக சொன்னார். “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்

அதற்கு மேல் பேசாமல் இணைப்பைத் துண்டித்து விட்டு அவர் திரும்பிய போது பாபுஜி வாசலில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்                      




16 comments:

  1. கடைசியில் செம் டுவிஸ்ட்டு...... சூப்பர்ரா போயிட்டு இருக்கு......
    இனி அடுத்த வாரம் வரை........பெருமூச்சு விட்டுக்க வெண்டிதான்.....

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நல்ல விறுவிறுப்பு....!

    ReplyDelete
  3. Edge of the Seat Thrilling episode...

    ReplyDelete
  4. சார் ,அருமையான பதிவு ,நான் இன்று வரை silent reader .superb

    ReplyDelete
  5. நான் இந்த நாவலை முழுமையாக படித்தேன். ... .
    மிக மிக அருமை சார். ... .
    குருஜியின் மனதில் எழுந்த அந்த வாக்குவாதம் மிகமிக அதியற்புதம். ... .

    அடுத்த நாவலுக்காக காத்திருகிறேன். ... .

    ReplyDelete
    Replies
    1. U made me to think that Guruji will become the 3rd member of the group to save the linga!!!!!!!!!

      Delete
  6. தனித்தனியாய் ஒவ்வொருவரும் கேட்பதை விட இப்படி எல்லாரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று கேட்பது நல்லது என்று கணபதிக்கு மனதார தோன்றியது வியக்கவைத்தது..!

    குருஜி வாசலில் நின்றிருந்தது ரஜினி பாபா படத்தின் இறுதிக்காட்சி போல் பரபரப்பாக இருக்கிறது..

    ReplyDelete
  7. லக்‌ஷ்மிJanuary 23, 2014 at 7:03 PM

    கணேசன் சார் எங்கள் கணபதிக்கு திருஷ்டி கழித்துப் போடுங்கள். அத்தனை நல்ல மனம் யாருக்கு வரும்.

    இத்தனை சுவாரசியமான நீண்ட நாவலை நான் சமீப காலத்தில் படித்ததில்லை. மிக நீண்ட இலக்கிய நெடுங்கதைகளைப் படிக்கும் அளவு பொறுமை. அந்த நெடுங்கதைகளில் கூட பல எழுத்தாளர்கள் தங்கள் சொல் திறமைகளில் விளையாடுகிறார்களே இது போல் மிக வலிமையாகவும் சுவாரசியமாகவும் சம்பவங்களைக் கொண்டு செல்வதில்லை. கேட்டால் வணிக எழுத்து அது இதென்று பேசுகின்றார்கள். வாசகனின் மனதை தரமான எழுத்தால் கட்டிப்போடுவது தான் முக்கியமே ஒழிய புரியாதபடி எழுதினால் தான் அறிவுஜீவித்தனம் என்பதில் எனக்கு சம்மதம் இல்லை. தேவன், லக்‌ஷ்மி, கல்கி ஆகியோரின் எழுத்துக்களை ரசித்து படித்து வளர்ந்தவள் நான். உங்கள் எழுத்துகள் அவர்களை நினைவுபடுத்துகிறது. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வரதராஜன்January 23, 2014 at 7:27 PM

      நான் லக்‌ஷ்மி அவர்கள் சொன்னதை ஆதரிக்கிறேன். நானும் நிறைய படிப்பவன். நீண்டகாலம் படித்துக் கொண்டுள்ளவன். அந்த பின் நவீனத்துவ எழுத்தாள மேதைகள் எழுத்துக்களில் உள்ள மெசெஜை விட அதிகமான மெசேஜ் என்.கணேசன் நாவல்களில் உள்ளது. புரிகிறது. பிடிக்கிறது. மனதில் நிற்கிறது. இக்கதைக்கு வயதானவர், நடுத்தரவயதுக்காரர், இளையவர் என்ற மூன்று வகையினருமே விரும்பிப் படிக்கிறார்கள். அதே போல் அதிகம் படித்தவர்கள், அவ்வளவாக படிக்காதவர்கள் இருவருமே படிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இப்படி எல்லா தரப்பையும் கவர்வது சாதாரண வெற்றி அல்ல.

      Delete
  8. First I thought you've written imaginary events of egypt's political history. Out of curiosity I've checked in net and found that the events you mentioned are real. It gives authenticity to the novel. Going great sir.

    ReplyDelete
    Replies
    1. in somalian pirates chapter also the sandstorms are happening regularly. so it is also based on true happening.

      Delete
  9. பாட்ஷா மாதிரி கதை கிடைச்சா மறுநாளே ரஜினி சார் வீட்டு வாசல்ல போய் நிற்பென்னு டைரக்டர் லிங்குசாமி சொல்லி இருக்கார். நம்ம பரம(ன்) ரகசியத்தை அவர் ட்ரை செய்யலாமே. அருமையாய் இருக்குமே.

    ReplyDelete
    Replies
    1. wow, i too thought the same...as like Baba..Rajini can try this spritual thriller!
      will definitely a sure hit!

      Delete
  10. Ganeshan sir, oru naal peria eduthule iruke poringa.. ennoda advance wishes..

    ReplyDelete
  11. மதிப்பிற்குரிய என்.கணேசன் அவர்களுக்கு,

    என் சஷ்டியப்த பூர்த்தி பொங்கல் சமயத்தில் நடந்து முடிந்தது. என் மருமகள் பரிசாக தங்கள் பரமன் இரகசியம் நாவலை தந்தாள். விருந்தாளிகள் போன பிறகு 19 ஆம் தேதி இரவு படிக்க ஆரம்பித்த இந்தக்கதை என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டது. அத்தனை அற்புதம். இன்று மாலை தான் முடித்தேன். உங்கள் நாவலை அவசரப்பட்டு படித்தால் பல நுணுக்கமானவற்றை இழந்து விடுவோம் என்று தோன்றியதால் நிதானமாகவே ரசித்து படித்தேன். இத்தனை அருமையான நாவலை நான் படித்ததில்லை. சொல்ல வார்த்தை இல்லை. ஆனந்த அனுபவம். இப்போது என் மனைவி படிக்க ஆரம்பித்து இருக்கிறாள். மருமகளிடம் கேட்டு உங்கள் ப்ளாகில் பின்னூட்டமாக என் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன். வாழ்க வளமுடன். - கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  12. நாவல் மிக அருமை. அதனால் தானோ என்னவோ மிகவும் ஆர்வம் மேலீட்டால் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டும் என்ற ஆர்வ அவசரம் காரணமாக ஈஸ்வர்-விஷாலி பிணக்குகள் அளவுக்கு அதிகமாக நீட்டப்பட்டதோ என தோன்றுகிறது. அருமையாக நெய்திருக்கிறீர்கள் சார். - அனந்தராமன். SK

    ReplyDelete