Monday, January 20, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 7



·         விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்)

·         பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

·         காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)

·         பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்)

·         பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)

·         பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)

·         இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது)

·         கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.

·         வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)

·         அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)

-          தொகுப்பு : என்.கணேசன்


8 comments:

  1. சாமர்த்தியம் உட்பட அனைத்தும் அருமை... நன்றி...

    ReplyDelete
  2. நெற்கதிரில் அரிசி எடுத்த பின் எஞ்சுவது பதர் இல்லை தவிடு. அரிசி இல்லாத நெல்லுக்குப் பெயர்தான் பதர். அதனால்தான் பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. நான் தான் குழம்பி விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. மாற்றி விட்டேன்.

      Delete
  3. பழமொழி :

    ஆணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

    வழக்கத்தில் உள்ள பொருள் :

    பலம் பொருந்தியவனுக்கு ஒரு காலம் வந்தால் அவனால்
    பாதிக்கப்பட்ட சிறியோர்க்கும் ஒரு காலம் வரும் என்பதே ..

    உண்மையான பொருள் :

    ஆ- நெய் = ஆ - பசு நெய் , பூ-நெய் = தேன்

    ஒருவன் வாழ்க்கையில் பசுவின் நெய்யை அதிகம் உண்டு வாழ்பவன்
    பிற்காலத்தில் தேன் மருந்தாக உண்ண வேண்டி வரும் .

    ReplyDelete
  4. சுட்டுட்டாங்க
    http://gkjet.blogspot.com/2014/01/blog-post_7804.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி. அந்த காபியடித்த படிவில் “காபி அடிப்பதில் கூட தவறில்லை. அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று கூடவே குறிப்பிடுவது நல்ல பண்பல்லவா?” என்று கமெண்ட் போட்டு இருக்கிறேன். வேறென்ன தான் செய்வது?

      Delete
  5. நல்ல பழமொழிகள்...
    விளக்கத்துடன் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete