Thursday, October 17, 2013

பரம(ன்) ரகசியம் – 66




ணபதியும் ஒரு இடத்தில் புகையாய் பனி மூடி இருந்ததையும், அதற்குப் பக்கத்திலேயே தெளிவாக இருப்பதையும் கவனித்தான். “என்ன க்ளைமேட் இப்படி ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு மாதிரியா இருக்கு. இப்படி க்ளைமேட் இருந்தா வியாதிகள் ஜாஸ்தியா வரும்னு எங்கம்மா சொல்வாஎன்றான்.

டிரைவர் எதுவும் சொல்லவில்லை. அவர் கைகள் அவரையும் அறியாமல் லேசாக நடுங்கின. இது போன்ற காட்சிகளை அவர் இது வரைக்கும் கண்டதில்லை.

பயணம் செய்யும் போது தூங்கும் பழக்கம் கொண்ட கணபதி இன்று சிவலிங்கத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது என்று வைராக்கியமாக இருந்தான். சீடை சமாச்சாரம் போல எப்போதுமே கட்டுப்பாடில்லாதவனாகி விடக் கூடாது என்று சொல்லிக் கொண்டான். அது கஷ்டமாகத் தான் இருந்தது. டிரைவர் பேசுகிற ரகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது... ஆனாலும் சாதித்துக் காட்டிய திருப்தி கார் நின்ற போது அவனுக்கு வந்தது. அப்பாடா!

குருஜி கணபதியிடம் வந்து சொன்னார். “கணபதி, இந்தக் கட்டிடத்துக்குள்ளே தான் ஆராய்ச்சிகள் நடக்கப் போகுது. ஆராய்ச்சி நடக்கிற இடத்துல அமைதி ரொம்ப முக்கியம். உள்ளே தேவை இல்லாமல் ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. ஆராய்ச்சில கலந்துக்கறவங்க மூணு பேர் உள்ளே தியானம் செய்துகிட்டு இருக்காங்க. அவங்க கிட்டே உள்ளே அதிகம் பேசக் கூடாது.... பேச்சு அவங்க தியான நிலையைக் கலைச்சுடும். தியான நிலை கலைஞ்சுதுன்னா நம்ம ஆராய்ச்சியும் நின்னு போயிடும்...

கணபதி பயபக்தியுடன் தலையாட்டினான்.

குருஜி கணபதியிடம் சற்று தொலைவில் இருந்த கட்டிடத்தைக் காட்டிச் சொன்னார். அங்கே தான் நம்ம எல்லாருக்கும் தங்க ரூம்கள் இருக்கு. உனக்கும் தனியா ரூம் இருக்கு. அங்கே சவுகரியங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு அப்புறமா பார்த்துச் சொல்லு. எதாவது கூடுதலாய் தேவைன்னா கூச்சப்படாமல் சொல்லு. உடனே அதற்கு ஏற்பாடு செய்யறேன். அங்கே நீ எப்படி வேணும்னாலும் பேசிக்கலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கே ஆராய்ச்சி மண்டபத்துல மட்டும் அமைதியை பாதுகாக்கணும். சரியா?

கணபதி மறுபடி தலையாட்டினான். இத்தனை பெரிய மனிதர் என் சவுகரியத்தைப் பத்திக் கவலைப்படறாரே. இந்த ஏழைக்கு அத்தனை தகுதி இருக்கா? எனக்குத் தனியா ரூமே தேவை இல்லையே. ஒதுக்குப் புறமா ஒரு பொது இடம் இருந்தாலே நான் திருப்தியாய் இருந்துக்குவேனே

தென்னரசுவும் மகேஷும் சற்று தள்ளி நின்றிருந்தார்கள். குருஜி பெயர் சொல்லாமல் அவர்களை அறிமுகப்படுத்தினார். “அவங்க ரெண்டு பேரும் ஆராய்ச்சில நமக்கு உதவறதுக்காக வந்திருக்காங்க...

கணபதி மரியாதையுடன் கை கூப்பினான். தென்னரசு கை கூப்பினார். மகேஷிற்கு கணபதியை சுத்தமாய் பிடிக்கவில்லை. சரியான பட்டிக்காடு என்று நினைத்துக் கொண்டான். அதனால் கை கூப்பும் சிரமத்தை அவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஈஸ்வருக்குப் பிடித்திருக்கிற நபர் என்பதே அவன் வெறுக்கப் போதுமான காரணமாக இருந்தது.

கணபதிக்கு மனிதர்களின் அலட்சியங்கள் பழகிப் போனவை. அதனால் அதை அவன் தவறாக நினைக்கவில்லை.  

நல்லா வணங்கிட்டு சிவலிங்கத்தை எடுத்துக்கோஎன்று குருஜி சொன்னார்.

கணபதி கைகூப்பி வணங்கினான். ‘அப்போ கனக்காதது மாதிரியே சமத்தா இருக்கணும் சரியாஎன்று மனதிற்குள் சொல்லி சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டான். சிவலிங்கம் அதிகமாய் கனக்கவில்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு போகும் தாய் போல பெருமிதப் புன்னகையுடன் கணபதி சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டு போனான். மற்றவர்கள் சிறிது இடைவெளியில் பின் தொடர்ந்தார்கள்.

ஆராய்ச்சிக்கூடமான தியான மண்டபம் மெலிதான ஓங்கார மந்திரத்தில் மூழ்கிக் கிடந்தது. சிவலிங்கத்துடன் உள்ளே போன கணபதி அங்கிருந்த பலவித கருவிகளையும், காமிராக்களையும் பார்த்து அசந்து போனான்.

குருஜி மௌனமாகச் சுட்டிக் காட்டிய இடத்தில் கணபதி சிவலிங்கத்தைப் பயபக்தியுடன் வைத்தான். வைத்து விட்டு சுற்றும் முற்றும் பிரமிப்புடன் பார்த்தான். அந்தப் பிரமிப்பு குறையாமல் அவன் குருஜியிடம் சைகையில் கேட்டான். “இதெல்லாம் இந்த சிவனுக்காகத் தானா?

குருஜி புன்னகையுடன் தலையசைக்க கணபதிக்குப் பெருமையாக இருந்தது. சிவனிடம் மானசீகமாக பெருமிதத்துடன் கேட்டான். “உனக்காக என்ன எல்லாம் வாங்கி வச்சிருக்காங்க பார்த்தாயா?அவனுக்கு அதெல்லாம் சிவனைப் பெருமைப்படுத்தும் விஷயங்களாகத் தெரிந்தன. சிவனை உலகிற்குப் பிரபலப்படுத்தப் போகும் கருவிகளாகத் தெரிந்தன.

குருஜியை அவன் நன்றியுடன் பார்க்க குருஜி தன்னை அறியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். பின் அவனை சைகையால் அழைத்துக் கொண்டு போய் ஒரு ஓரமாக நின்றிருந்த அலெக்ஸி, கியொமி, ஹரிராம் மூவருக்கும் மெல்லிய குரலில் வெறும் பெயர் அறிமுகம் செய்து வைத்தார். அவனையும் அவர் வெறும் கணபதி என்று மட்டும் அறிமுகம் செய்தார். கணபதி அவர்களைக் கைகூப்பி வணங்கினான். அவர்களும் வணக்கம் தெரிவித்தார்கள்.  

பின்பு குருஜி தென்னரசுவைப் பார்த்து சைகை காட்ட தென்னரசு கணபதியை அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையைக் காட்ட அழைத்துக் கொண்டு போனார். போவதற்கு முன் சிவலிங்கத்திடம் கணபதி “இங்கேயே தான் இருக்கேன். எங்கயும் போயிடலை. சரியா?என்று மனதில் தெரிவித்து விட்டுப் போனான்.

அவன் போன பிறகு அலெக்ஸி, கியோமி, ஹரிராம் மூவர் பார்வையும் சிவலிங்கத்தில் நிலைத்தது.

ஜான்சன் அவர்கள் மூவரையும் அந்த தியான மண்டபத்திற்கு அடுத்திருந்த இளைப்பாறும் ஹாலிற்கு அழைத்துச் சென்றார். தெரிவிப்பதை சிவலிங்கம் வைத்திருக்கும் தியான மண்டபத்தில் தெரிவிக்க வேண்டாம் என்று நினைத்தார். அங்கு அவர்களிடம் சொன்னார். “அது தான் விசேஷ மானஸ லிங்கம். நம் ஆராய்ச்சிகள் நாளை மறு நாள் ஆரம்பிக்கப் போகிறோம். அதற்குள் நீங்கள் அந்த சிவலிங்கத்தின் அலைகளுடன் ‘ட்யூன் ஆகப் பழகிக் கொண்டு விடுங்கள். இது வரை இது போன்ற சக்தி மையத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இனிமேலும் நீங்கள் பார்க்கப் போவதில்லை. அதனால் அதனிடம் சர்வ ஜாக்கிரதையுடன் நீங்கள் இருக்க வேண்டும். எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாமல் இருக்கிறது முக்கியம் . அது உங்களை நிறையவே தன் கட்டுப்பாட்டுக்குள் இழுப்பது போலத் தோன்றினால் பின் வாங்கி விடுங்கள். அதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். எந்த எல்லை வரை உங்கள் கட்டுப்பாட்டிலேயே உங்களால் அதனுடன் ‘ட்யூன் ஆகமுடிகிறதோ அதே எல்லையில் உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்... புரிந்ததா?

அவர்கள் மூவரும் புரிந்ததென்று தலையசைத்துத் தெரிவித்தார்கள்.

குருஜி அவர்களிடம் சொன்னார். “அது சமுத்திரம் போல. நாமெல்லாம் கரையில் நிற்கும் மனிதர்கள் போல. கரையில் மணல் வீடு கட்டலாம், காலை நனைக்கலாம், பாதி மூழ்கலாம், முழுகியும் குளிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள்ளேயே செய்து கொள்ள வேண்டும். அட, இது வரை எதுவும் செய்யலையே என்று அசட்டுத் தைரியத்துடன் இன்னும் முன்னே போய் விளையாட நினைத்தால் சமுத்திரம் நம்மை இழுத்துப் போய் விடும். விளையாட்டு வினையாகி விடும். இந்த உவமானத்தை நீங்கள் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.


னந்தவல்லி ஈஸ்வரை அனுப்புகிறேன் என்று சொல்லி இருந்த போதும் ஈஸ்வர் தன்னை அழைத்துப் போக வருவான் என்று விஷாலி எதிர்பார்த்திருக்கவில்லை. இங்கு வராமல் இருக்க சரியான காரணத்தை அவனாலும் ஆனந்தவல்லியிடம் சொல்லி இருக்க முடியாது என்பது அவளுக்குப் புரிந்தது.

வாசலில் அவனைப் பார்த்து திகைத்தவள் தன்னை சுதாரித்துக் கொண்டு சொன்னாள். “உள்ளே வாங்க.... சாரி... நான் வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா பாட்டி கேட்கலை

ஈஸ்வர் ஒன்றும் சொல்லவில்லை. உள்ளே நுழைந்தான்.

“உட்காருங்க. இப்ப வந்துடறேன்...என்ற விஷாலி அவசரமாக உள்ளே போனாள். ஈஸ்வர் உட்காரவில்லை. அவன் பார்வை சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஓவியங்களுக்குச் சென்றது.  எல்லாம் முதலிலேயே பார்த்தவை என்றாலும் மறுபடி பார்த்து ரசிக்கத் தோன்றியது. விஷாலி இந்த ஓவியங்களின் புகைப்படங்களை அவன் நண்பன் பாலாஜிக்கு அனுப்பி இருந்தாள். அவளது ஓவியங்கள் பற்றி பாலாஜி சிலாகித்து ஈஸ்வரிடம் நிறையப் பேசி இருந்தான். அவன் சொல்லி இருந்த விஷயங்களை வைத்து அவள் ஓவியங்களைப் பார்க்கையில் ஓவியங்களின் புதிய பரிமாணங்கள் புரிந்தன.

அவன் ஓவியங்களில் ஆழ்ந்து போய் நின்றதை விஷாலி கவனித்தாள். இப்படி ரசிப்பவனை நடிக்கிறான் என்று தவறாக நம்பி விட்டோமே என்று மறுபடி மனம் நொந்தது. அவள் தயாராகி வந்ததைக் கவனித்த ஈஸ்வர் கிளம்பினான்.

வெளியே போய் காரின் பின் கதவை அவளுக்காகத் திறந்து விட்டு ஈஸ்வர் நின்ற போது ஓங்கி அறைந்தது போல் விஷாலி உணர்ந்தாள். இதற்கு அவன் வராமலேயே இருந்திருக்கலாம். விலகி இருக்க அவள் சொன்னதற்கு விலகியே அவளை உட்கார வைக்கிறான் போலிருக்கிறது. மனோதத்துவம் படித்தவனுக்கு மனதை வலிக்க வைக்கவும் தெரிகிறது.... ‘என் தவறுக்கு இந்த தண்டனை தேவை தான்.

காரை அவன் ஓட்டிக் கொண்டு சென்ற போது எதுவும் பேசவில்லை. அவளும் பேசவில்லை. ஆனால் அவர்களுக்கிடையே அந்த மௌனம் நிறைய பேசியது. சத்தமில்லாமல் யாரோ இவன்பாடல் கேட்டது. பாடலின் கடைசி வரிகள் இன்று வேறு அர்த்தத்தோடு கேட்டது.

நதியினில் ஒரு இலை விழுகிறதே 
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே 
கரைசேருமா உன் கைசேருமா 
எதிர்காலமே !

விஷாலியை அறியாமல் கண்களில் இருந்து ஒரு துளி கன்னத்தில் வழிந்தது. அதைக் கண்ணாடி வழியாகக் கவனித்த போது அவன் மனம் பதைத்தது. ஒரு கணம் காரை நிறுத்தி “அன்று ஏன் அப்படி என்னிடம் பேசினாய். நான் என்ன தவறு செய்தேன் என்று நினைத்தாய்என்று கேட்க அவன் இதயம் துடித்தது. ஆனால் அன்று அப்படிப் பேசியதற்கும் அவள் காரணம் சொல்லவில்லை, பிறகு ஒரு நாள் ஏன் சாரி என்று சொன்னாள் என்பதற்கும் அவள் காரணம் சொல்லவில்லை, அவளுக்கு சொல்லும் அவசியம் தோன்றவில்லை என்றால் உனக்குக் கேட்கும் அவசியம் என்ன வந்தது? என்று ஈகோ தடுத்தது. அவன் எதுவும் கேட்கவில்லை. வீட்டில் அவளை இறக்கி விட்டு விட்டு தான் இறங்காமலேயே தோட்ட வீட்டுக்குப் போனான். பார்த்தசாரதி அங்கு வருவதாகச் சொல்லி இருந்தார்.

தோட்ட வீட்டில் முனுசாமி வேலையை முடித்து விட்டுக் கிளம்பத் தயாராகி இருந்தான். நான் இருக்கணுமா ஐயா, எனக்கு ஏதாவது வேலை இருக்காஎன்று பணிவுடன் கேட்டான்.

“வேண்டாம் முனுசாமி நீ போய்க்கோஎன்று ஈஸ்வர் அவனை அனுப்பி விட்டான்.

அவன் போன சிறிது நேரத்தில் பார்த்தசாரதி வந்தார். வேதபாடசாலையில் இருந்து அதிகாலையில் மூன்று கார்கள் வெளியே போயின என்றும் அவற்றைப் பின் தொடரவோ, உள்ளே இருந்தவர்களை அறியவோ கூட முடியவில்லை என்றும் சொன்னார்.

“இப்ப கொஞ்ச காலமாவே காலைல பனி லேசா பெய்துகிட்டு தான் இருக்கு. ஆனால் கார் நம்பரை பார்க்க முடியாத அளவுக்கோ, உள்ளே இருக்கிற ஆள்கள் தெரியாத அளவுக்கோ அத்தனை கனமான பனி பெய்யறதில்லை. ரெண்டு மூணு நிமிஷம் ஒரு இடத்துல மட்டும் பனி மூடிக்குமா என்ன? எனக்கு ஒன்னும் புரியலை. நீங்க என்ன நினைக்கிறீங்க ஈஸ்வர்?

சாதாரணமா அப்படி நடக்க முடியாதுன்னாலும் இயற்கையின் சக்திகளை தங்கள் விருப்பத்துக்கு குறுகிய காலத்திற்கு இயக்கிக்கற வித்தைகள் தெரிஞ்ச சில பேர் இருக்காங்க...

சித்தர்கள் யோகிகள்னு நீங்க சொல்றீங்களே அவங்களா. இப்ப இந்த மாதிரி சட்ட விரோத செயல்களுக்கு உடன்படறவங்களா இருந்தா அவங்களும் குற்றவாளி ஆயிடறாங்களே ஈஸ்வர்.

“இல்ல சார். சித்தர்கள் யோகிகள் சக்தி நீண்ட காலத்திற்குக் கூட செல்லுபடியாகும். சில நிரந்தர மாற்றங்களைக் கூட அவங்களால ஏற்படுத்திட முடியும். அவங்க இந்த சிவலிங்க விவகாரத்தில் கண்டிப்பா எதிரணியில் செயல்பட மாட்டாங்க. நான் சொன்ன ஆள்கள் அவர்களை விட ஒருபடி குறைஞ்ச ப்ளாக் மேஜிக் அல்லது மாந்திரிகம் மாதிரியான சித்து வித்தைகள்ல கை தேர்ந்தவங்க... அந்தப் பேரை வைத்து போலியா காசு பார்க்கிறவங்க தான் அதிகம்னாலும் இன்னமும் அந்த மாதிரி சக்தி வாய்ந்த ஆள்கள் இருக்கிறாங்க... உதயன் சுவாமி மாதிரியான ஆள்கள் பேரை இன்னமும் எங்கள் பாரா சைக்காலஜியில் சொல்றாங்க. அவர் இன்னமும் இருக்கார்னு சொல்றாங்க....

பார்த்தசாரதி சந்தேகத்தோடு கேட்டார். “அந்த உதயன் சுவாமி எங்கே இருக்கார்?

“இமயமலையில் எங்கேயோ இருக்கார்

பார்த்தசாரதிக்கு ஆர்வம் போய் விட்டது. அவர் ஈஸ்வரிடம் சொன்னார். “பெரும்பாலும் உங்க கணபதியும் அந்த சிவலிங்கத்தோட போயிருப்பான்னு தான் நினைக்கிறேன்... அவங்க இனி என்ன செய்யப் போறாங்கன்னு தெரியல....

கணபதியை நினைக்கையில் ஈஸ்வருக்கு மனம் என்னவோ செய்தது. கடவுளிடம் பேசும் அளவு சக்தி படைத்த அவனுக்கு மனிதர்கள் மனதில் இருக்கும் வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை...

பார்த்தசாரதி தென்னரசு பற்றி ஈஸ்வரிடம் சொல்வதைத் தவிர்த்தார். தென்னரசு பற்றி பேசிய போதெல்லாம் ஈஸ்வர் மரியாதையாகவே பேசினான். சற்று நேரத்திற்கு முன் கூட தென்னரசுவின் வீட்டுக்குப் போய் அவர் மகளை ஈஸ்வர் தன் வீட்டுக்கு அழைத்துப் போனதாய், கண்காணித்த போலீஸ்காரன் சொன்னான். அதனால் இப்போதைக்கு இவனிடம் தென்னரசு பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது நல்லது என்று பார்த்தசாரதிக்குப் பட்டது.

தென்னரசு மேல் இருந்த சந்தேகம் இப்போது பார்த்தசாரதிக்கு உறுதியாகி விட்டிருந்தது. தென்னரசுவைப் பின் தொடர முடியாமல் குறுக்கிட்டு ப்ரேக் டவுன் ஆகி நின்ற லாரிக்காரனை விசாரித்தார்கள். லாரியைப் பரிசோதித்தார்கள். ப்ரேக் டவுன் ஆனது நிஜம் தான் என்பது தெரிந்தது. லாரிக்காரனும் இதற்கு முன்னால் எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டவன் அல்ல.  இருந்தாலும் இதைத் தற்செயல் என்று நினைக்க முடியவில்லை.

அவரை ஏற்றிச் சென்ற கால்டாக்ஸி நம்பரை வைத்து அவனைப் பிடித்து விசாரித்தார்கள். அவன் அவரை ரயில்வே ஸ்டேஷனில் விட்டதாகச் சொன்னான். ஆனாலும் அவர் ரயிலில் வெளியூர் போயிருக்க வாய்ப்பில்லை என்று பார்த்தசாரதியின் உள்ளுணர்வு சொன்னது. இறங்கியவர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து எங்கு வேண்டுமானாலும் போயிருக்கலாம்.... இப்படி சந்தேகப்பட்ட நபர்கள் எல்லாம் மாயமானது அவருக்கு பெருத்த ஆயாசத்தைக் கொடுத்தது.

பார்த்தசாரதி கிளம்பினார். “நீங்களும் வர்றீங்களா ஈஸ்வர்?

“இல்லை சார். நீங்க போங்க. நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்என்றான். வீட்டில் விஷாலி இருப்பதால் இப்போதே போக அவனுக்கு மனம் இருக்கவில்லை. இன்னமும் அவளுக்காகத் துடிக்கும் தன் இதயத்தைக் கட்டுப்படுத்த அவனுக்குத் தெரியவில்லை.

பார்த்தசாரதி போய் விட்டார்.

ஈஸ்வர் மனதில் விஷாலியின் நினைவுகள் நீடித்துப் பின் அவன் கணபதியை நினைக்க ஆரம்பித்தான். இப்போது என்ன செய்கிறானோ? அவனை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்களோ? கண்களை மூடிக் கொண்டு ஈஸ்வர் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் காலத்தை மறந்தான்.

திடீரென்று அருகில் யாரோ வந்து நிற்பது போல இருந்தது. கண்களைத் திறந்து ஈஸ்வர் பார்த்தான்.

கண்கள் தீயாய் ஜொலிக்க அந்த சித்தர் நின்று கொண்டிருந்தார். ஈஸ்வரின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது.

(தொடரும்)

-          என்.கணேசன்



20 comments:

  1. இது வரை எதுவும் செய்யலையே என்று அசட்டுத் தைரியத்துடன் இன்னும் முன்னே போய் விளையாட நினைத்தால் சமுத்திரம் நம்மை இழுத்துப் போய் விடும். விளையாட்டு வினையாகி விடும். இந்த உவமானத்தை நீங்கள் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.”

    சமுத்திர உவமானம் மிகப்பொருத்தமானதாகவும்
    ரசிக்கும் வகையிலும் அருமையாக இருக்கிறது ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. கண்கள் தீயாய் ஜொலிக்க அந்த சித்தர் நின்று கொண்டிருந்தார். ஈஸ்வரின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது.

    திடுக்கிட்டுத் திகைக்கவைக்கும் காட்சி...!

    ReplyDelete
  3. sema turning point.....wowwwwww....interesting, sitting in the seat end & reading...

    ReplyDelete
  4. வணக்கம்
    பதிவு அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. Marvelous stuff ....., extraordinary sir....., no words...

    மௌனம் சர்வ காரியசித்தி என்பது போல .., அமைதியாக மீண்டும் ஒரு முறை முதல் அத்தியாயத்தில் இருந்து மெல்ல படித்து வருகிறேன் .., அடுத்த குருவாரம் வரை.....,

    ReplyDelete
  6. ஒரு திடுக்கிடலோடு அருமையாக முடித்திருக்கிறீர்கள்...
    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  7. SUPERB, ARUMAI, EXCELLENT TWIST

    ReplyDelete
  8. சுந்தர்October 17, 2013 at 7:20 PM

    சூப்பர் நாவல். நீங்கள் இதை ஆரம்பித்த போது அமானுஷ்யனுக்கு சமமான ஒரு மாஸ்டர்பீஸை தர உங்களால் கூட முடியுமா என்று எனக்கு பட்டது. ஆனால் இது அமானுஷ்யனை மிஞ்சியே விட்டதாக நான் நினைக்கிறேன் கணேசன் சார். ஒரு நண்பர் டாவின்சி கோடுக்கு சமமாய் இதைச் சொன்னது பொய்யில்லை.

    இந்த அத்தியாயம் செம டர்னிங் பாயிண்டில் முடிந்திருக்கிறது. டயலாக்ஸ் சூப்பரோ சூப்பர். குருஜியின் சமுத்திரம் உவமானம், கடவுளிடம் பேசும் சக்தி படைத்த கணபதிக்கு மனித மனதில் உள்ள வஞ்சகம் அறியும் சக்தி இல்லை என்ற வரிகள் எல்லாம் உங்களைப் போல் வேறு யாராவது எழுத முடியுமா என்பது சந்தேகம் தான்.

    நேரில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் பரமன் ரகசியத்தை. புலிப்பாணி சொன்னது போல் திரும்ப படிக்க வைக்கிறது இந்த தொடர். பாராட்ட வார்த்தை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. இது கதை அல்ல காவியம்.

      Delete
    2. I too agree this but i cant compare. because each one is unique.

      Delete
    3. I too agree with Saravanakumar.. Paraman Ragasiyam is excellent. There is no doubt. It is me who said first it is equal to Dan Brown's Davinci code. The theme and many characters take centre stage in this. But in Amanushyan whole story evolves with Akshay (amaanushyan), one of the most unforgettable characters in any novel. So we cannot compare both. It is like comparing rose and jasmine. Each has its own beauty and scent. This is my opinion.

      Delete
  9. Last line is really a turning point :) Lets see how this goes further :) Waiting for the next update :)

    ReplyDelete
  10. அருமையாக இருக்கிறது...!!!

    ReplyDelete
  11. Wonderful... i was thinking about this (Agni neshtra siddhar) siddhar before start reading this episode... waiting for next update...

    ReplyDelete
  12. அருமையாக இருக்கிறது.தொடர்கின்றேன்.

    ReplyDelete
  13. மிக மிக அருமை. ... .
    எங்களால ஒரு வாரம் காத்திருக்க முடியல சார். ... .
    மிக அருமையான திருப்புமுனைகள், அருமையான கையாடல். ... .
    உங்களை வாழ்த்த வயது இல்லை எனவே எனவே வணக்குகிறேன். ... .

    ReplyDelete
  14. Sir, really nice awesome... Great work...

    ReplyDelete