Monday, September 16, 2013

மாயை என்பது என்ன?


அறிவார்ந்த ஆன்மிகம் - 19

மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது. உலகே மாயை என்று ஞானிகள் சொல்கிறார்கள். உலகில் பலவற்றை கண்ணால் பார்க்கிறோம். தொட்டு உணர்கிறோம். எத்தனையோ நிகழ்வுகள் உலகில் நடந்தபடி இருக்கின்றன. அவற்றில் நாமும் பங்கு கொள்கிறோம். இப்படி எல்லாம் இருக்கையில் உலகே மாயை என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்தக் கேள்விக்கு ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பதிலைப் பார்ப்போம்.

கிருஷ்ண பரமாத்மாவிடம் நாரதர் மாயை என்பது என்ன என்று விளக்கும்படி ஒரு முறை கேட்டுக் கொண்டார்.

எனக்குத் தாகமாக இருக்கிறது. எனக்குக் குடிக்க சிறிது தண்ணீர் கொண்டு வா. நான் பிறகு விளக்கம் தருகிறேன்என்றார் கிருஷ்ணர்.

நாரதர் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வர அருகில் இருந்த ஆற்றிற்குச் செல்கிறார். சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு நிமிரும் போது ஆற்றங்கரையில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். அவள் அழகின் வசப்பட்ட அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவளைக் கேட்கிறார்.

அவளோ சற்று தள்ளி வசிக்கும் தன் பெற்றோரிடம் சம்மதம் கேட்கச் சொல்கிறாள். நாரதர் அவளுடைய பெற்றோரிடம் சென்று சம்மதம் வாங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவளுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி பல குழந்தைகள் பெறுகிறார்.  ஒரு நாள் ஆற்றில் பெருவெள்ளம் வருகிறது. அந்த வெள்ளத்தில் சிக்கி அவரது மனைவியும், குழந்தைகளும் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.

தாங்க முடியாத துக்கத்துடன் நாரதர் அழுது கொண்டிருக்கையில் கிருஷ்ணர் வந்து கேட்கிறார். “தண்ணீர் கொண்டு வர வந்தவன் சொம்புத் தண்ணீருடன் ஏன் இங்கேயே நிற்கிறாய்?

நாரதருக்கு அப்போது தான் கிருஷ்ணர் கேட்டு இங்கு தண்ணீர் எடுத்து வர தான் வந்தது நினைவுக்கு வருகிறது.  தன் கையில் சொம்புத் தண்ணீர் அப்படியே இருப்பதையும், அதே உடைகளுடன் அப்படியே தான் இருப்பதையும் அவர் கவனிக்கிறார். திகைப்புடன் நாரதர் கிருஷ்ணரைக் கேட்கிறார். “அப்படியானால் இது வரை நடந்ததும், நான் கண்டதும்?

“அது தான் மாயைஎன்று கிருஷ்ணர் விளக்கினார்.

இந்த மாயையை நாம் தினந்தோறும் காண்கிறோம். உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்த சில நிமிடக் கனவில் மிக நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் நாம் பங்கு கொண்டு நிஜமாகவே சுகத்தையும், துக்கத்தையும், பயத்தையும் உணர்கிறோம். உறக்கம் கலையும் வரை அனைத்தும் நிஜமாகவே தெரிகிறது. விழித்த பின் தான் நிஜமல்ல என்பதை உணர்கிறோம்.

விழிக்கும் வரை கனவு நிஜம் தான். விழிக்காமலேயே கனவு தொடருமானால் அது உண்மை என்ற நம் அபிப்பிராயமும் அப்படியே தொடரும். அதே போல ஆத்ம ஞான விழிப்புணர்வு வரும் வரை இந்த உலகம் நிஜம் போலவே தோன்றும் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.  

மாயை என்றால் முற்றிலும் பொய்யானது, உண்மையின் அடிப்படையே இல்லாதது என்பதாகப் பலரும் நினைக்கிறார்கள். அது சரியான அர்த்தம் ஆகாது. மாயை என்பதைத் தற்காலிகத் தோற்றம் என்பதாகச் சொல்லலாம். உதாரணத்திற்கு கானல் நீரைச் சொல்லலாம். கானல் நீர் கண்ணுக்குத் தெரிவது நிஜம். அது காண்பவரின் கற்பனை அல்ல. ஆனால் அப்படித் தெரியும் கானல் நீர் ஒருவரின் தாகம் தீர்க்க உதவாது. கண்ட காட்சியை நிஜம் என்று தாகத்தோடு அதை அணுகினால் செல்பவருக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

உண்மையை அறிந்தவர்கள் தங்கள் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் கானல் நீர் உண்மை அல்ல தோற்றமே என்பதை உணர்வது போல ஞானிகளும் உலகம் என்பதை தற்காலிக தோற்றமாகவும், நிரந்தர உண்மை அல்ல என்றும் உணர்வதால் தான் உலகமே மாயை என்று கூறுகிறார்கள்.

திடப்பொருள்களைப் பிளந்து கொண்டே போய் கடைசியில் அணுவைக் கூட பிளந்து பார்த்த அணு விஞ்ஞானிகள் கடைசியாக மிஞ்சுவது சக்தி அலைகளே என்றும் திடப் பொருள் என்று சொல்ல முடிந்த ஒரு துகள் கூட இல்லை என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் வெளித் தோற்றத்தில் அப்படியா தெரிகிறது? பாறை, நாம் உட்கார்ந்திருக்கும் நாற்காலி, இரும்புக் கம்பி எல்லாம் திடப்பொருள் போல் அல்லவா தெரிகிறது. இதிலேயே  சாதாரண பாமரனின் பார்வையும் விஞ்ஞானியின் அறிவும் வேறு வேறாக அல்லவா இருக்கிறது. இந்த உதாரணத்திலும் கூட நாம் காணும் உலகம் மாயை என்பதை விஞ்ஞானமும் சேர்ந்து அல்லவா சொல்கிறது!

அப்படி என்றால் மாயை என்பது இகழத் தக்கதா என்று கேட்டால் அல்ல என்பதையே நம் ஞானிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். ஞானத்தை அடைவதற்கான வழி மாயையை வெறுத்து ஒதுக்குவதோ,  மாயையை ஒரு தடையாக நினைப்பதோ  அல்ல என்றும் அப்படிச் செய்வது ஞானத்தைத் தந்து விடாது என்றும் அவர்கள் நம்பினார்கள். மாயையை அறிந்துமாயையை உணர்ந்துமாயையை அனுபவித்து, அதன்பின் மாயையைக் கடந்து செல்வதே ஞானம் அடையும் வழி என்று அவர்கள் கருதினார்கள்.

என்னை வெளிப்படுத்திக் கொள்ளாத பிரம்மமாக  இருக்கையில்  நானே  மாயையாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர்  குறிப்பிடுகிறார். மாயையை நம் முன்னோர்கள் அன்னையின் வடிவிலேயே கண்டார்கள் மஹா மாயை என அவளைத் துதித்தார்கள்.

பிரபஞ்சம் மாயை தான். ஆனால் இதற்கு  ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது என்கிறது அத்வைதம்என்று காஞ்சி மகா பெரியவர் தெய்வத்தின் குரலில் சொல்லி இருக்கிறார். மாயை என்பது உலகம் இயங்குவதற்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும்.  உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்றும்  மாயை மிக நுண்ணியது என்றும், ஒரு சிறு விதை எப்படி பெரும் காடு உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது எனச் சொல்கிறது சைவசித்தாந்தம்.

ஞானி மாயையின் பின் இருக்கும் பிரம்மத்தை, இறைவனைக் காணத் தவறுவதில்லை. காஞ்சி மகா பெரியவர் மேலும் சொல்கிறார். “ஞானியே உள்ளது உள்ள படி பார்க்கிறான். ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஒடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான்.

பலவிதமான பொம்மைகளாய் தெரிவது மாயை. அந்தப் பொம்மைகள் அனைத்தையும் சர்க்கரையாய் அறிவது ஞானம். மாயை வேறுபாடுகளைக் காட்டும். ஞானம் ஒருமைப்பாட்டை விளக்கும்.

எனவே வெளித் தோற்றத்தையே நிஜம் என்பதை நம்பி ஏமாந்தால் மட்டுமே மாயை மனிதனை அலைக்கழிக்கும் துக்க காரணியாக மாறி விடுகிறது. அதன் பின் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ளும் ஞானம் பெற்று விட்டால் அதனால் அலைக்கழிக்கப்படாமல் மனிதன் பரிபூரண அமைதி பெறுகிறான்.

-          என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் -16-07-2013





9 comments:

  1. Excellent... thank you for adding some more clarity.
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  2. Well said about mayai !!!... thanks to Ganeshan sir...

    ReplyDelete
  3. # உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்த சில நிமிடக் கனவில் மிக நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன #

    இது தொடர்பாக நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

    எடுத்துக்காட்டாக நாம் ஆர்வம் அதிகம் உள்ள சில செயல்கள் முடிந்தபின் நீண்ட நேரம் ஆகியிருந்தாலும் நேரம் சென்றதே தெரியவில்லை என்கிறோம்.ஆனால் சில செயல்கள் ஆர்வமில்லாமல் செய்யும்பொழுது சிறிய அளவு நேரம் கூட அதிகமாக தெரிகிறது.
    முதல் செயலில் ஆர்வம் காரணமாக எண்ணங்கள் குறைந்து மனம் ஒருநிலைப்படுகிறது.
    இரண்டாவது செயலில் ஆர்வமில்லாததால் செய்யும் செயலை தவிர பிற எண்ணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    ஆதலால் எண்ணங்களின் எண்ணிக்கை அளவை பொறுத்து நேர அளவு நீண்டதாகவோ குறைவாகவோ உள்ளது.

    அதுபோல் தூக்கத்தில் எண்ணங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும் பொழுது வரும் கனவில் காணும் காட்சிகள் தெளிவில்லாமல் இருப்பினும், மிக நீண்ட வாழ்கையை சிலநிமிடங்களில் வாழ்ந்து விடுகிறோம்.

    இதை உணர்ந்த பின்பே அக்காலத்தில் "முனிவர்கள் பல ஆண்டுகள் தவம் செய்தனர், சுற்றிலும் புற்று வளர்ந்து மூடியது" போன்ற விஷயங்களில் நம்பிக்கை பிறந்தது. ஏனென்றால் முற்றிலும் எண்ணங்களின் எண்ணிக்கை பூஜ்யத்திற்கு(0 TPS) கொண்டு சென்றால் காலத்தை வெல்வது சாத்தியமே. அவர்கள் தவத்தின் போது எண்ணங்களற்ற நிலையில் இருந்துள்ளார்கள்.

    www.facebook.com/groups/nganeshanfans

    ReplyDelete
    Replies
    1. எண்ணங்கள் கூட நேரம் கூடும்.எண்ணங்கள் குறைய நேரம் குறையும் என்ற உங்கள் கருத்து அரூமை.

      Delete
  4. # பலவிதமான பொம்மைகளாய் தெரிவது மாயை. அந்தப் பொம்மைகள் அனைத்தையும் சர்க்கரையாய் அறிவது ஞானம். மாயை வேறுபாடுகளைக் காட்டும். ஞானம் ஒருமைப்பாட்டை விளக்கும்.#
    chance-less ji... you are growing growing growing ...

    what i learned from this article is

    1.கனவிற்கும் விழிப்பிற்க்கும் உள்ள வேறுபாடு.
    கனவில் எண்ணங்களை நாம் நிறுத்தவோ தொடரவோ முடிவதில்லை.
    விழிப்பில் அந்த கட்டுப்பாடு நம்மிடம் உள்ளது.

    # விழிக்கும் வரை கனவு நிஜம் தான் #
    2.தொடர்ந்த எண்ணங்கள் இருக்கும் வரை இந்த வாழ்கை நிஜம் தான்.

    # விழிக்காமலேயே கனவு தொடருமானால் அது உண்மை என்ற நம் அபிப்பிராயமும் அப்படியே தொடரும் #
    3.எண்ணங்களின் அளவு குறையாமல் தொடருமானால் இந்த வாழ்கை உண்மை என்ற நம் அபிப்பிராயமும் அப்படியே தொடரும்.

    # அதே போல ஆத்ம ஞான விழிப்புணர்வு வரும் வரை இந்த உலகம் நிஜம் போலவே தோன்றும் #
    4.அதே போல எண்ணங்கலற்ற நிலையில் நிலைத்திருக்கும் காலம் வரும் வரை இந்த உலகம் நிஜம் போலவே தோன்றும்.

    thank you.
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  5. Was recently reading about Maya - how we all are Holographic images in the supreme spirit's mind from the book "Ancient Flower of Life" by Drunvalo Melchizedek...and now by coincidence your article on the same subject that was confusing me. Thanks for the detailed explanation

    ReplyDelete
  6. ***மாயை என்பதை மாயைக்குள் இருந்து ஆய்ந்து ஆயிந்து பார்த்தாலும் அஃது மாயை என்று புரிபடா ... உடல் சார்ந்து வாழும் நிலை அத்தனையும் மாயை... என்றாவாராக அகத்தியெம் பெருமான் ஒரு 6 மாத காலத்திற்கு முன் அடியேனுக்கு ஜீவநாடியில் ஒரு 20நிமிட வாக்கை மாயை பற்றி அளித்தார் 2 நாட்கள் சிந்தனை அற்று இருந்தோம் . ஆனால் துரதிஷ்ட வசமாக அன்று வாக்கு கேட்க்கும் போது பதிவு செய்யாமல் விட்டு விட்டேன் ....

    ***அதே போல் கனவு பற்றி " எதுவும் கனவல்ல அனைத்தும் நிஜம் . எதுவும் நிஜமல்ல அனைத்தும் கனவு (மாயை) " .என்பதே எமது கருத்து ...

    ***உறக்கம்/கனவு பற்றி அகஸ்தியர் விஜயம் இதழில் மிக மிக தெளிவான நிறைய அதிசிய ஆச்சரிய விசியங்களை குறிப்பிடிருப்பார்கள் . நம் கனவுகளை நிர்ணயப்பதற்கேன்றே ஒர் கனவு உலகம் ..தனியாக இயங்குகிறது இருக்கிறது என்று ...{ ஆரம்ப நிலையில் இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும் மெய் நிலையில் ...உண்மை புரிபடும் . }

    ***இந்த கதையில் நாரதருக்கு உலக மாயை . நாராயணர் புகட்டியமை போன்று தான் அனைத்தும் ..இறைவன் நினைத்தால் அனைத்தையும் நாமிருக்கும் இடத்திலேயே கொண்டு வந்து விடுவார் .* ஜீவநாடியில் அகத்தியெம் பெருமானிடம் சொர்ர்க்க லோகம் , நரக லோகம் , கற்பக விருட்சம் , காமதேனு , வைகுண்டம் , இதெல்லாம் உண்மையா , படங்களில் புராணங்களில் குறப்பட்டுள்ள வர்ணனைகளில் இருக்குமா .. அவையெல்லாம் உண்மையா என்று பலரும் கேட்க்கும் பொழுது அகத்தியெம் பெருமான் அடிக்கடி சொல்வது நீங்கள் கூறுவது "அனைத்தும் உண்மை .. அனைத்தும் அங்கும் உண்டு .. இங்கும் உண்டு ..." வேற்று மதத்தில் என்ன என்ன குறப்படுள்ளதோ அதற்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு அது அது தெரியும் ( உதாரணமாக நமக்கு விரஜா நதி , அவர்களுக்கு judgementday . மற்றவர்களுக்கு அவர்கள் அவர்கள் விதமாக... )

    ***ஆரம்பத்தில் இதில் நிறைய குழப்பங்கள் எமக்கு அகத்தியர் என்ன சொல்கிறார் .. அங்கு இருப்பதும் உண்மை அனைத்தும் இங்கும் உண்டு .. இறைவன் அப்படித்தான் மாற்றுவார் .. அதனால் பலத்த குழப்பங்களால் அனைத்தையும் விட்டுவிட்டோம் .. ஒரு இரண்டு மாதங்களுக்கு முன் அகஸ்தியர் விஜயம் இதழில் அடிமை கண்ட ஆனந்தம் .குருகுல வாச அனுபூதி படிக்கையில் அனைத்தும் விளங்கியது ...

    ***அதே போல் தான் காலம் பற்றியும் . , அகத்தியெம் பெருமான் கூறுகையில் "இறைவனிடத்தில் ஒன்றிவிட்டால் அங்கு காலம் என்பதே இல்லை" . இதுவும் ஒன்றும் புரியாமல் தான் இருந்தது .ஏன்னெனில் blackhole தியரி , முப்பரிமானம் ஐந்தாம் பரிமானம் இவை பற்றியெல்லாம் யோசித்து குழம்பி கொண்டிருக்கையில் இஃது காலம் பற்றியும் அகஸ்தியர் விஜயம் இதழில் அடிமை கண்ட ஆனந்தம் .குருகுல வாச அனுபூதி படிக்கையில் தான் விளங்கியது .

    ***அதேபோல் நம் மனதில் எழும் கற்பனை எண்ணங்கள் . நாம் நினைத்த படி அவரவர் ஒவ்வொரு கற்பனைகோட்டை கடுகின்றோமே அது கூட கர்ம வினை பொறுத்தே எழும் . [ இதுவும் அகஸ்தியர் விஜயம் இதழில் அடிமை கண்ட ஆனந்தம் .குருகுல வாச அனுபூதி படிக்கையில் தான் எமக்கு விளங்கியது .]

    யாம் இதுவரை கூறியது கூட யாருக்கும் புரிபடாமல் இருக்கலாம் . இருந்தாலும் இருக்கட்டும் ஒரு காரண காரியமாக ......

    ReplyDelete
  7. கிருஷ்ணர் நாரதருக்கு விளக்கும் விதத்தை எளிமையாக கூறினீர்கள். நன்றி.

    பாரதியாரின் வரிகளை இங்கு நினைவுகூர்கிறேன் ...

    //நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
    அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

    காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

    காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

    போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? //

    இன்னும் ஆழமாக இதைப்பற்றி எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. நன்றி thangavel sir..,

    எங்கு குரு சொல்வததை புரியமுடியவில்லை என்று அலைந்து திரிந்து திக்கு தெரியாமல் நிற்கின்றோமோ அங்கு குருவருள் தோன்றாமல் தோன்றி சுயம்பாய் ஊட்டிவிடுகிறது ....... இஃதை கடந்த நான்கு ஆண்டுகளில் ஜீவநாடி அகஸ்தியர் குருவாய் மொழியாலும் . அகஸ்தியர் விஜயம் குருகுல வாச ஆனுபுதியாலும் தினம் தினம் உணர்ந்துளோம் .... மீண்டும் ஒரு முறை இங்கே ... (இஃதை இப்படி யாம் பட்டவர்த்தமாக சொல்வதை கூட கர்வம் , சுயமதிப்பீடு , போன்ற கணக்குகளில் தான் மேலே எழுதுவார்கள் இருந்தாளும் விளக்கமாக கூற இப்படி சொல்லவேண்டியுள்ளது இறைவா ...)

    கடந்த ஆகஸ்ட் மாத இதழில் . கேதார்நாத் சூக்கும பிரளயம் பற்றி பல பல விளக்கங்களை ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் கொடுத்திருந்தார்கள் அஃதில் ஒன்று .. இதோ .....

    " பல தெய்வ தரிசனங்களைப் பெற்ற மகாகவி பாரதியார் பிரபஞ்சத்தைக் காக்கும் அதர்வண வேத மந்திரங்களின் சாரத்தை இவ்வாறு விளக்குகின்றார் .

    " யாதுமாகி நின்றாய் காளீ எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம் உந்தன் செயல்கள் அன்றி இல்லை "

    - என்ற பாசுரத்தில் பலத்த ஆன்ம சக்தியுடன் உலகம் , ஜீவன்களின் படைப்பின் சாரத்தை ரத்தினச் சுருக்கமாய் பாரதியார் பெய்கின்றார் .சூக்குமப் பிரளயம் பற்றிய நுண்ணிய விளக்கங்கள் ,பாரதியாரின் இந்த அதர்வண வேத சக்தி கீதத்தில் நிறைந்துள்ளன .இப்பாடல் இன்றைய உலகின் ஒவ்வொரு விநாடி நடைமுறை நிகழ்வுகள் அனைத்திற்கும் நற்காரண விளக்கத்தைப் பொழிவது .இத்தகைய அரிய விளக்கங்களை சத்குரு வேங்கடராம சுவாமிகள் , சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தில் ,பல ஆண்டுகளுக்கு முன்னின்று நடத்தித் தந்த உழவாரத் திருப்பணியின் போது உணர்வித்தார் . கேதார்நாத் தலத்துக்கான ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரின் இரு தேவாரங்களும் அதர்வண சாரமே .

    ** ஆனால் இந்த அதர்வண வேதசக்தி கீதத்தின் சத்தியச் சாரத்தை உண்மையாய்ப் புரிந்து கொள்ள வல்லார் யார் ? எல்லாவற்றிக்கும் தக்க சத்குருவின் வழிகாட்டுதல் தேவை .... "

    என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார்கள் .. அதன் பிறகு யாமும் அந்த முழு பாடலையும் மற்றும் பிற பாரதியாரின் பாடல்களை மேலோட்டமாக படித்தோம் ... ஒன்றும் விளங்கவில்லை ... அவ்வுளவு தான் நம் தகுதி நிலை என்று விட்டுவிட்டோம் . நேற்று thangavel சார் அவர்கள் . கொண்டுத்த பின்னூட்டத்தில் பாரதியாரின் பாடலை படித்ததும் பல விஷியங்கள் விளங்கின .. இதே பாடலை சினிமாவில் கேட்டிருந்தாலும் வேறு எங்கு படித்திருந்தாலும் ஒன்றும் விளங்கிஇருந்திருக்காது ..., சிவா சிவா..... இதுவன்றோ அனுபூதி குரு வழி தோட்டத்தில் சொல்லாமல் பூப்பது ...

    thangavel சார். நன்றிகள் பல .,

    ReplyDelete