Thursday, September 12, 2013

பரம(ன்) ரகசியம் – 61


ஸ்வர் தான் கணபதி வீட்டிற்குப் போனதையும் அங்கு கணபதியின் தாய் சொன்னதையும் பார்த்தசாரதியிடம் விவரமாகச் சொன்னான். ஆனால் அதற்கு முன்னால் அவருக்கு கணபதியை அவன் முதன்முதலில் சந்தித்த நிகழ்ச்சியைச் சுருக்கமாகவாவது சொல்ல வேண்டி இருந்தது. ஜவுளிக்கடையில் சித்தரால் ஒரே நேரத்தில் இருவரும் தொடப்பட்டதை மட்டும் அவன் சொல்லவில்லை. சித்தருடனான அந்த அபூர்வ அனுபவம் தனது தனிப்பட்ட விஷயமாக அவனுக்குத் தோன்றியதால் அதை அவன் சொல்லத் தேவை இல்லை என்று நினைத்தான்.

அவன் அதைச் சொல்லாமலேயே அவன் குடும்பத்தில் நடக்கிற விஷயங்கள் எல்லாம் விசித்திரமாகவும், யதார்த்த நடப்புகளை ஒட்டி வராததாகவும் பார்த்தசாரதிக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. பரமேஸ்வரன் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்காமலேயே முழுமையாகக் குணமாகி திரும்பி வந்த செய்தி அவர் காதிலும் விழுந்திருந்தது.

பரமேஸ்வரன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு பார்த்தசாரதி அந்த ஆஸ்பத்திரிக்குப் போய் இருந்தார். அவர் சந்திக்கையில் பெரிய டாக்டர் கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கிற நிலையில் தான் இருந்தார். பரமேஸ்வரன் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்தது உண்மை என்றும், ஆனால் பின் பரிசோதித்த போது ஆபரேஷன் செய்யாமலேயே அந்த அடைப்புகள் நீங்கி இருந்தன என்பதும் உண்மை என்றும் பெரிய டாக்டர் சொன்ன போது அந்த டாக்டருக்கே ஒரு மாதிரியாக இருந்தது தெரிந்தது.

பார்த்தசாரதி கேட்டார். “முதலில் மூன்று அடைப்புகள் இருக்கிறது என்பதை சரியாகப் பார்க்காமல் சொல்லி விட்டீர்களோ?

இந்த மாதிரி... இந்த மாதிரி ஒருத்தர் கேட்டுடக் கூடாதுன்னு தான் அந்த அடைப்புகளைக் காட்டிய பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டைத் தேடினேன் சார். ஆனால் அது மாயமாயிடுச்சு...என்று அங்கலாய்த்த டாக்டர் ஆரம்பத்தில் தான் ஈஸ்வரைச் சந்தேகப்பட்டதையும் பின் காமிரா எடுத்திருந்த வீடியோவைப் பார்த்த போது கண நேரத்தில் ஏதோ ஒளிர்ந்ததையும் அந்த ஒளி மறைந்த போது ஸ்கேன் ரிப்போர்ட்டுகளையும் காணவில்லை என்பதையும் விவரித்தார்.  சொல்லும் போதே அந்த டாக்டருக்கு மயிர்க்கூச்செரிந்தது.

ஆரம்பத்தில் விசேஷ மானஸ லிங்கம் ஒளிர்வது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அதன் பின் அந்த சித்தர் கண்கள் நெருப்பைக் கக்கியது போல ஒளிர்வது ஒரு அதிசய விஷயமாக இருந்தது. இப்போதோ ஒரு ஒளி தெரிந்து மறையும் போது ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் மறைவதாக காமிரா படம் பிடித்திருக்கிறது. இதை எல்லாம் பார்த்தது ஓரிரு ஆட்களாக இருந்தால் பிரமை என்று ஒதுக்கித் தள்ளலாம். ஆனால் பார்த்திருப்பது பலர். வேறு வேறு கால கட்டங்களில் பார்த்திருக்கிறார்கள். எல்லோருக்குமா பிரமை பிடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பிரமையாக இருந்தால் காமிரா பிடித்த படச்சுருளில் அப்படி வந்திருக்க வாய்ப்பே இல்லை.  இந்த எண்ணங்கள் மனதில் ஓட பார்த்தசாரதி ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார்.

ஆனால் இப்போது ஈஸ்வர் சொன்னது குருஜி இதில் சம்பந்தப்பட்டிருப்பதை  உறுதி செய்தாலும் மற்ற விதங்களில் அவருக்கு மேலும் தலைசுற்ற வைத்தது. கணபதி என்கிற இளைஞனை குருஜி சிவலிங்கத்திற்குப் பூஜை செய்ய அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அவன் குருஜியே அழைத்துப் போகிற அளவு பூஜை மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவன் அல்ல. அந்த கணபதி ஏதோ ஆஞ்சனேயர் கோயில் போகும் வழியில் கார் ரிப்பேர் ஆகிறது. அந்த நேரமாகப் பார்த்து அந்த இடத்தில் ஈஸ்வர் இருக்கிறான். அந்தக் குறிப்பிட்ட இடம் இருவரும் வழக்கமாகப் போகிற இடம் இல்லை. சந்திக்கும் போது கணபதி ஈஸ்வருக்கு வீட்டு விலாசம் தருகிறான். ஆனால் எங்கே பூஜை செய்கிறான் என்ற விலாசத்தைத் தரவில்லை. அந்த கணபதி வீட்டிற்குப் போகும் உத்தேசம் ஈஸ்வருக்கு சுத்தமாக இருந்திருக்கவில்லை. ஆனாலும் திடீர் என்று போய் விட்டான். போய் குருஜி சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற தகவலை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான்.

ஓரிரண்டு நிகழ்ச்சிகளைத் தற்செயல் என்று சொல்லலாம். இத்தனை நிகழ்ச்சிகளையா தற்செயல் என்று சொல்ல முடியும்?

பார்த்தசாரதி அமானுஷ்யமான விஷயங்களை நம்பியவர் அல்ல. சொல்லப் போனால் அமானுஷ்யம் என்று சொல்லும் விஷயங்களின் பின்னால் எவருடையதோ ஏமாற்று வேலை இருக்கிறது என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அவர் அனுபவம் அப்படி. ஆனால் இந்த வழக்கில் துப்பு துலக்க ஆரம்பித்த பின் எதுவுமே இயல்பான வழியில் போகவில்லை....

ஈஸ்வரிடம் அவர் அவன் தாத்தாவுக்கு மாரடைப்பு வந்ததைப் பற்றி விசாரித்தார். ஈஸ்வர் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான். ஆனால் அவருக்கு நம்பக் கஷ்டமாய் இருந்தது போல அவனுக்கு நடந்ததை நம்பக் கஷ்டமாய் இல்லை என்பதை பார்த்தசாரதியால் கவனிக்க முடிந்தது. இத்தனைக்கும் அவன் அதிகம் படித்தவன். அமெரிக்காவில் வசித்தவன்...

பார்த்தசாரதி வாய் விட்டுச் சொன்னார். “இந்த விஞ்ஞான யுகத்துல எனக்கு இதை எல்லாம் நம்பக் கஷ்டமாய் இருக்கு ஈஸ்வர்....
ஈஸ்வர் ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டரிடம் சொன்னதையே பார்த்தசாரதியிடம் சொன்னான். “இதெல்லாம் விஞ்ஞான விதிகளுக்கும் மேலான சில விதிகள் படி நடக்கிற விஷயங்கள் சார். அந்த விதிகள் பரிச்சயமானவங்களுக்கு இதெல்லாம் அதிசய நிகழ்ச்சிகள் அல்ல...

பார்த்தசாரதி முகத்தில் இன்னும் முழுமையான நம்பிக்கை வராததைப் பார்த்து ஈஸ்வர் சொன்னான். “பைபிள்ல யேசுநாதர் பல நோய்களை குணமாக்கினதைப் படிச்சிருக்கோம். நம் நாட்டிலேயும் கடவுள்களும், மகான்களும் தீராத நோயை எல்லாம் தீர்த்து வைத்த கதைகள் படிச்சிருக்கோம். இப்படி உலகத்தில் எல்லா பாகத்திலயும் நடந்ததாய் சொல்றாங்க. சிலது சிலரது கற்பனையாய் இருக்கலாம். எல்லாமே கற்பனையா இருக்க முடியாது சார்

அவன் சொன்னதை உள் வாங்கிக் கொண்ட பார்த்தசாரதி சிறிது யோசனைக்குப் பின் கேட்டார். “உங்க பெரிய தாத்தாவுக்கு அந்த அளவு சக்தி இருந்ததுன்னா அவர் ஏன் தன்னைக் காப்பாத்திக்கல ஈஸ்வர்

“தனக்கு இருக்கற சக்தியை எல்லாம் ஒருத்தர் பயன்படுத்தித் தான் ஆகணும்னு கட்டாயம் இல்லையே சார். தனக்கு இங்கே தரப்பட்டிருக்கிற காலம் முடிஞ்சுடுச்சுன்னு அவர் நினைச்சிருக்கலாம். வாழ்க்கையை நீட்டிக்க பிரியப்படாமல் இருந்திருக்கலாம். எங்க தாத்தாவைப் பொருத்த வரையில் எங்க எல்லாருடைய பிரார்த்தனைகளை பெரிய தாத்தா காது கொடுத்துக் கேட்டிருக்கலாம். இல்லைன்னா தாத்தாவிற்கு இது வெறும் கண்டம், உயிருக்கு ஆபத்தில்லைங்கற மாதிரி விதியே இருந்திருக்கலாம்....யாருக்குத் தெரியும் சார்?

இத்தனை புத்திசாலியான அவன் தனக்கு முழுவதுமாகத் தெரியாத விஷயங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒத்துக் கொள்ளும் விதம் பார்த்தசாரதிக்கு அவன் மீது மரியாதையைத் தந்தது.

ஈஸ்வர் கவலையோடு  அவரிடம் சொன்னான். “அந்த கணபதி நல்ல பையன் சார். அந்த மாதிரி ஒரு வெள்ளந்தி மனசை நான் என் வாழ்க்கைல பார்த்ததே இல்லைன்னே சொல்லலாம். அவன் குருஜி கிட்ட இருக்கிறது ஆபத்துன்னு உள்மனசு சொல்லுது சார்...

பார்த்தசாரதி தலையசைத்தார். ஆனால் ஈஸ்வரின் கவலை அவரைத் தொற்றிக் கொள்ளவில்லை. இந்தத் துறையில் வந்த பிறகு பல தனி மனிதர்களுக்கு வரும் ஆபத்துகளை அவர் பார்த்து இருக்கிறார். குற்றங்கள் நடக்கும் இடத்தில் ஆபத்துகள் தவிர்க்க முடியாது தான். அதனால் கணபதி என்ற முகம் தெரியாத தனிமனிதன் சந்திக்கக்கூடிய ஆபத்தில் அவருக்கு அக்கறை இருக்கவில்லை.

“பூஜை செய்ய அவனைக் குருஜி தேர்ந்தெடுக்கக் காரணம் எனக்கு இன்னமும் பிடிபடலை ஈஸ்வர்....

அவரைத் தவறு சொல்ல ஈஸ்வருக்குத் தோன்றவில்லை. விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்கள் எல்லோருக்கும் வரக் கூடிய சந்தேகம் அது. அவன் தந்தை அவனிடம் சொல்லி இருந்த அவரது சில அனுமானங்களை அவன் பார்த்தசாரதியிடம் சொன்னதில்லை. சங்கர் சொல்லி இருந்தவை அத்தனையும் உண்மையாக இருக்கக் கூடும் என்று அவன் முழுமையாக நம்பிய போதும் வழக்கை விசாரணை செய்யும் பார்த்தசாரதியிடம் சொல்ல தகுந்த ஆதாரங்கள் அவசியம் என்று அவன் முன்பு நினைத்தான்.  

குருஜி பூஜா விதிகளை முழுமையாக அறியாத கணபதியை பூஜைக்கு நியமித்திருக்கிறார் என்றறிந்த போது அவன் தந்தை சங்கரின் அனுமானங்கள் சரியாகவே இருக்க வேண்டும் என்று உறுதியாகி விட்டது. அவன் பார்த்தசாரதியிடம் சொல்ல ஆரம்பித்தான்.

“சார், நான் இது வரைக்கும் எங்கப்பா அந்த சிவலிங்கம் ஒளிர்றதைப் பார்த்திருக்கிறார்னு மட்டும் தான் உங்க கிட்ட சொல்லி இருக்கேன். அவர் கவனிச்ச வேற சிலதை நான் உங்க கிட்ட சொல்லலை. காரணம் அது சரின்னு எனக்கு பூரணமாய் விளங்கினதே கணபதி வீட்டுக்குப் போயிட்டு வந்த பிறகு தான்....

பார்த்தசாரதி முழு கவனத்திற்கு வந்தார்.

“...எங்கப்பா சின்ன வயசுல தாத்தாவோட சேர்ந்து தோட்ட வீட்டுக்குப் போவார். எப்பவுமே பெரிய தாத்தா, தாத்தாவை சந்திக்கிறது ஹால்லன்னு சொன்னாலும்  உட்கார்ந்து பேசற நாற்காலிகளை அவர் ஒவ்வொரு தடவை ஒவ்வொரு இடத்துல வைப்பாராம். சில நாள் சிவலிங்கத்துக்கு ரொம்பவே தூரத்துல வைப்பாராம். சில நாள் சாதாரண தூரத்துல வைப்பாராம். எங்க தாத்தா அண்ணன் கிட்ட இத்தனையை சொல்லிக் கொட்டிடணும்கிறதுல தான் கவனம் வைப்பாரே ஒழிய அடிக்கடி இடம் மாறும் நாற்காலிகள் பற்றி பெருசா கண்டுக்க மாட்டாராம். ஆனால் எங்கப்பா சின்னதில் இருந்தே ரொம்ப புத்திசாலி. பெரிய தாத்தா இப்படி நாற்காலிகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துல வைக்க ஏதாவது காரணம் இருக்குன்னு புரிஞ்சு கவனிக்க ஆரம்பிச்சாராம்....

பார்த்தசாரதி சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மனதில் காரணம் என்னவாக இருக்கும் என்பதில் பல யூகங்கள் ஓடிக் கொண்டு இருந்தன.

ரொம்ப நாள் கவனிச்சதுக்கப்புறம் ஒரு விஷயத்தை அப்பா புரிஞ்சுகிட்டார். தாத்தா எந்த மனநிலையில வர்றாருங்கறதைப் பொறுத்து அந்த நாற்காலிகளோட தூரம் இருக்குமாம். பெரிய தாத்தாவுக்கு எதையும் சொல்லாமலேயே தெரிஞ்சுக்கற சக்தி இருக்குன்னு எங்கப்பா நம்பினார். தம்பியின் மன சமாதானத்திற்காக அவர் சொல்வதை எல்லாம் கேட்டாரே ஒழிய கேட்டுத் தான் தெரிஞ்சுக்கணும்கிற நிலையில அவர் இருந்த மாதிரி தெரியலைன்னு அப்பா சொன்னார்.... தாத்தா நல்ல அமைதியான மனநிலையில் வர்றப்ப சாதாரண தூரத்துல நாற்காலிகளை வைப்பாராம். மோசமான மனநிலையில் வர்றப்ப நாற்காலிகள் நிறைய தூரத்துக்குப் போயிடுமாம்.... வெளி சுத்தத்தை பெரிய தாத்தா பெருசா நினைக்கலை. மன சுத்தம், மன அமைதி இதைத்தான் அதிகமாய் பார்த்தார்ங்கறதை அப்பா கண்டுபிடிச்சார்

அப்பா சொன்னார், அந்த சிவலிங்கத்திற்கு மன சுத்தம் தான் முக்கியம்னு தோணுதுடா. அந்த சிவலிங்கத்தை மன சுத்தம் இல்லாமல் யாரும் நெருங்கக் கூட அவர் விட்டதில்லை. அப்படி நெருங்க விட்டால் அந்த சிவலிங்கத்துக்கு ஆகாதா, நெருங்கற ஆளுக்கு ஆகாதான்னு தெரியல. ஆனா எனக்கென்னவோ ரெண்டாவது தான் சரியா இருக்கும் போலத் தோணுது’.  எங்கப்பா சொன்னது எனக்கும் சரின்னு தான் தோணிச்சு.  அந்த சிவலிங்கத்தோட பெயர் விசேஷ மானஸ லிங்கம்னு இங்கே தெரிய வந்தப்ப அது மானஸ லிங்கம் ஆனதால் மனசோட சுத்தம் அதிகமாய் கவனிக்கப்பட்டதோன்னு நினைச்சேன். அப்படித் தான் இருக்கணும்னு உறுதியாய் தோணினாலும் எனக்கு ஆதாரத்தைக் கொடுத்தது குருஜி தான் சார். அந்த கணபதி மாதிரி பரிசுத்தமான மனசு இருக்கிற ஆளை அவர் வேற எங்கேயும் தேடிப்பிடிக்க முடியாது சார். அது தான் அவனுக்கு வேற என்ன தெரியும்னு கூடப் பார்க்காமல் அழைச்சிருக்கார்...

பார்த்தசாரதிக்கு ஈஸ்வர் சொன்னதெல்லாம் மனதில் பதிய சிறிது நேரம் ஆகியது. பசுபதியைக் கொன்றவன் இறந்து போகக் காரணம் அவன் அந்த சிவலிங்கத்தை நெருங்கியதால் இருக்கலாம். சாதாரண மன அசுத்தமே ஆகாது என்றால் அந்தக் கொலைகாரன் மகாபாதகன். அவன் அதை நெருங்கினது அவனுக்கு எமனாக முடிந்து விட்டதோ?

“அப்படி நெருங்கினால் என்ன ஆகும்?பார்த்தசாரதி ஈஸ்வரின் அபிப்பிராயம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்.

“தெரியலையே சார். அந்தக் கொலைகாரன் உயிர் கொஞ்சமாவது மிஞ்சி இருந்தால் நமக்குத் தெரிஞ்சிருக்கலாம்....

பார்த்தசாரதி ஈஸ்வரைப் பார்த்துப் புன்னகைத்தார். இந்த வழக்கில் இவன் உதவி நிறையவே வேண்டி இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அதற்கு முதல் காரணம் இந்த வழக்கே இவன் சப்ஜெக்டில் தான் சுற்றி சுற்றி வருகிறது என்பது. இரண்டாம் காரணம் பசுபதி காரணம் இல்லாமல் சிவலிங்கத்திற்கான பொறுப்பை இவன் மீது விட்டு வைத்திருக்க மாட்டார் என்பது. அதனால் அவர் மனம் விட்டு அவனிடம் குருஜியைக் கண்காணிக்க உயர் அதிகாரியிடம் அதிகாரபூர்வமற்ற அனுமதி வாங்கி இருப்பதைச் சொன்னார்.

கேட்டு ஈஸ்வருக்கு நிம்மதியாயிற்று. பார்த்தசாரதி சொன்னார். “நான் நேற்று பப்ளிக் டெலிபோனில் இருந்து வேதபாடசாலைக்குப் போன் செய்து குருஜியைக் கேட்டேன். அவர் நேற்றே போய் விட்டதாகச் சொன்னார்கள். பிறகு அவர் ஆபிசிற்குப் போன் செய்து கேட்டேன்.  அவர் வெளியூர் போய் இருக்கிறார், திரும்பி வர மூன்று வாரம் ஆகும் என்று சொன்னார்கள். அவர் எங்கு இருக்கிறார், சிவலிங்கம் எங்கிருக்கிறது என்பது தான் இப்போதைய கேள்வி

சிவலிங்கம் கண்டிப்பாக அந்த வேதபாடசாலையில் தான் இருக்கும்னு தோணுது.”  ஈஸ்வர் உறுதியாகச் சொன்னான்.

“எப்படிச் சொல்றீங்க?

வேதபாடசாலையில் காரில் இருந்து காலைக் கீழே வைக்கப் போன போது அங்கு சிவலிங்கம் ஒரு கணம் தெரிந்து மறைந்ததைச் சொன்னான். அதைக் கேட்ட போது பார்த்தசாரதி முன்பு கொண்டிருந்த அபிப்பிராயம் மேலும் உறுதியாகியது. ‘இவர்கள் குடும்பமே அமானுஷ்யமான குடும்பம் தான். இவர்களுக்கு என்னென்னவோ தெரிகிறது, என்னென்னவோ நடக்கிறது’.

ஈஸ்வருக்கு திடீர் என்று வேதபாடசாலையில் ஒதுக்குப்புறமாக இருந்த வீடு நினைவுக்கு வந்தது. வெளியே இரண்டு பேர் மர வேலை செய்து கொண்டிருந்தார்கள்... மரவேலை செய்தார்களா இல்லை அங்கே காவல் காத்து நின்றார்களா? சிவராம ஐயர் அவசர அவசரமாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. “அங்கு தட்டுமுட்டுச் சாமான் எல்லாம் போட்டு வைத்திருக்கிறோம். அங்கே யாரும் இல்லை....அவர் குரலில் இருந்த பதற்றத்தை இப்போது மனம் பதிவு செய்கிறது.... சிவலிங்கம் அந்த ஒதுக்குப்புற வீட்டில் தான் இருக்க வேண்டும்....

அதை அவன் உறுதியாக பார்த்தசாரதியிடம் சொன்னான். அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்....


குருஜியுடனும், ஜான்சனுடனும் வேதபாடசாலை வந்திருந்த பாபுஜி விசேஷ மானஸ லிங்கத்தைக் காணத் துடித்தார். குருஜி அவரைக் கூட்டிக் கொண்டு போகக் கிளம்பிய போது தான் பாபுஜியின் செல்போன் அடித்தது. எடுத்து தள்ளிப் போய் தாழ்ந்த குரலில் பேசிய பாபுஜியின் முகம் பேயறைந்தது போல மாறியது. பேசி முடிந்து அதிர்ச்சியுடன் நின்ற பாபுஜியைப் பார்த்து குருஜி கேட்டார். என்ன ஆச்சு?

உங்கள் வேதபாடசாலையைக் கண்காணிக்க மூன்று ரகசியப் போலீஸ்காரர்கள் இப்ப வந்திருக்கார்களாம்

“என்ன உளர்றே?

“உளறலை. உண்மையைத் தான் சொல்றேன்

“யார் சொன்னாங்க?

நான் அப்பாயிண்ட் செய்திருக்கிற டிடெக்டிவ் ஏஜென்ஸியில் இருந்து வந்த தகவல் இது. பொய்யாய் இருக்க வாய்ப்பில்லை

நீ ஏன் டிடெக்டிவ் ஏஜென்ஸியை இங்கே வேவு பார்க்கச் சொன்னாய்?’ என்று குருஜி பாபுஜியிடம் கேட்கவில்லை. இந்த விசேஷ மானஸ லிங்க ஆராய்ச்சியின் செலவுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றிருப்பது பாபுஜி தான். அதனால் அதில் எந்த வில்லங்கமும், தடங்கலும் வந்து விடக்கூடாது என்பதில் அவருக்கு அக்கறை உண்டு... அப்படி வேவு பார்த்து கொண்டு நின்றிருந்ததால் தான் இப்போது ரகசியப் போலீஸ் கண்காணிக்க வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

பதற்றத்துடன் பாபுஜி சொன்னார். “குருஜி நாம் நாளைக்குக் காலைல சிவலிங்கத்தை ஆராய்ச்சிக்கு எடுத்துகிட்டு போகலாம்னு முடிவு செய்திருக்கோம். அந்த டிடெக்டிவ் ஏஜென்சி ஆள்கள் அந்த மூணு பேரும் திறமைசாலிகள்னு சொல்றாங்க. அவங்க இருக்கிற வரையில் நாம் அவங்க கண்ணுக்கு மண்ணைத் தூவிட்டு தப்பிக்க முடியாதுன்னு சொல்றாங்க. இதுல நானும் ஜான்சனும் வேறு இங்கு வந்து மாட்டிகிட்டு இருக்கோம்...  எதாவது செய்யுங்க குருஜி....” 

தகவலைக் கேட்டவுடன், என் இடத்தையே கண்காணிப்பதா என்று ஆரம்பத்தில் குருஜிக்குக் கோபம் வந்தது. உடனடியாக ஐ.ஜியையோ, மந்திரியையோ கூப்பிட்டுப் பேசத் தோன்றினாலும் அமைதியாக யோசித்த போது இந்த விஷயத்தை அவரே பரப்பியது போல இருக்கும் என்று புரிந்து அந்த எண்ணத்தைக் கை விட்டார்.

அவர் இங்கிருப்பதற்காக கண்காணிக்கிறார்களா, இல்லை சிவலிங்கம் இங்கு இருக்கிறது என்ற சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கிறார்களா, இல்லை இரண்டிற்கும் சேர்த்தா என்று அவர் யோசித்தார். எதுவாக இருந்தாலும் இதன் பின் ஈஸ்வர் இருக்கிறான் என்பதில் அவருக்குத் துளி கூட சந்தேகம் இல்லை.

ஈஸ்வர் இந்த வேதபாடசாலை மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு இறங்கியது நினைவுக்கு வந்தது. பார்த்தசாரதி ஆபிசில் வேவு பார்க்க வைத்திருப்பவனிடம் தன் உதவியாளனை விட்டு பேச வைத்தார். இந்த வேவு பார்க்கும் விஷயத்தைத் தெரிவிக்காமல் ஏதாவது விசேஷ தகவல் இருக்கிறதா என்று கேட்டதற்கு அந்த ஆள் ஒன்றுமில்லை என்றான். அப்படியானால் மிக ரகசியமாக, உடன் வேலை பார்ப்பவனுக்கே தெரியாமல் வேவு பார்க்கிறார்கள்...

என்ன ஆனாலும் சரி நாளை அதிகாலை முகூர்த்தம் நன்றாக இருக்கிறது. சிவலிங்கத்தை அந்த நேரத்தில் தான் இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தார். அதிகார வர்க்கத்திற்குப் போன் செய்து அவர்கள் சந்தேகத்தை உறுதி செய்யக் கூடாது, அந்த ரகசியப் போலீஸ் பார்வையிலும் சிக்கக் கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த ஆராய்ச்சிகள் நடக்கப் போகும் இடம் அவர்களுக்குத் தெரியக் கூடாது. அதற்கு என்ன செய்வது?...

பல பேர் கவனத்தைக் கவராமல் ரகசியமாய் இங்கிருந்து சிவலிங்கத்தை எடுத்துப் போக ஒரே ஒருவர் தான் அவருக்கு உதவ முடியும் என்று கடைசியில் குருஜி முடிவுக்கு வந்தார். உதயன்... அவர் நண்பன்!

(தொடரும்)
என்.கணேசன் 




15 comments:

  1. இவர்கள் குடும்பமே அமானுஷ்யமான குடும்பம் தான். இவர்களுக்கு என்னென்னவோ தெரிகிறது, என்னென்னவோ நடக்கிறது’.

    நிறைய அமானுஷ்யங்கள்
    சுவாரஸ்யப்படுத்துகின்றன..!

    ReplyDelete
  2. ரேஸில் சமமாக இரண்டு அணிகளும் செம ஸ்பீடில் போகிறார்கள். நல்ல விறுவிறுப்பு.

    ReplyDelete
  3. Hi Sir,

    Very speed and interesting.. Great Work!
    Regards,
    Sankar,pune

    ReplyDelete
  4. Dear Ganeshanji!
    Very Nice Story, I never miss it on every Thursday. You are reminding all the characters in all the episodes. Very Good work!

    May God Bless you and your Family!

    Thanks
    Babu A

    ReplyDelete
  5. great going... continue sir...valthukal ...

    ReplyDelete
  6. good effort.thank you sir..waiting for next week

    ReplyDelete
  7. Very interesting ... let's wait & see what Udhayan's going to do in the next episode..? he also don't want to come near to the manasalingam and how he will carry..?

    ReplyDelete
  8. சார், தென்னரசு இரண்டாம் முறை சிவலிங்கத்தை பார்த்ததை அப்டியே விட்டுடிங்களே சார். அது பற்றிய விவரம் மற்றும் அந்த புத்தகம் பற்றிய விவரமும் சொல்லுங்க. ... .

    ReplyDelete
  9. கதை விறுவிறுப்பாப் போகுது...
    தொடருங்கள்....

    ReplyDelete
  10. சுவாரசியமாக செல்கிறது. பல நாள் கழித்து பார்த்தசாரதி வந்திருக்கிறார். - ராஜாராம்

    ReplyDelete
  11. ulathai kollai kollum ezhuthugalum matrum karuthugalum.super.

    ReplyDelete
  12. Really good, Pls post the next part as soon as possible, i m waiting for that

    ReplyDelete
  13. ஆஹா கணபதி மனசுக்குள்ளேயே இருக்காரு.அருமையான கதாபாத்திரம் .நன்றி
    கணேசன் சார் .நீங்க தப்பா நினைக்கலனா உங்க மின்னஞ்சல் முகவரி கிடைக்குங்களா !

    ReplyDelete
    Replies
    1. என் மின்னஞ்சல் முகவரி nganezen@gmail.com

      Delete