Monday, April 22, 2013

இறைவன் அருவமா, உருவமா?


அறிவார்ந்த ஆன்மிகம்-4

இறைவன் அருவமா, உருவமா என்ற கேள்வி தொன்று தொட்டே கேட்கப்பட்டு வருகிறது. அறிவு ரீதியாக சிந்திப்போர் பலருக்கும் விதவிதமான உருவங்களில் இறைவன் இருப்பான் என்பதை நம்ப முடிவதில்லை. உருவ வழிபாடு காலங்காலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. அப்படி வழிபடுபவர்கள் அறிவை அகற்றி வைத்தவர்களும் அல்ல என்பதால் ஒரு குழப்பம் எழுகிறது. எது சரி? இறைவன் அருவமா, உருவமா? எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இது பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார்கள். அவற்றைப் பார்ப்போம்.

வேதங்களில் முதன்மையான ரிக்வேதம் சொல்கிறது. “உண்மையான இறைவன் ஒருவனே. ஞானிகள் அவனைப் பல விதங்களில் வர்ணிக்கிறார்கள். (ரிக்வேதம் 1.64.46)

இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட" முடியாத பரம்பொருள் என்கிறார் அப்பர் பெருமான்.

மாணிக்க வாசகரும் "உருவமும் அருவமும் ஆய பிரான்" என்று சிவபெருமானைப் போற்றுகிறார். உருவமாகவும், அருவமாகவும் இறைவன் இருப்பதாகச் சொல்கிறார்.

சிவனடியார்கள் சொன்னதைப் பார்த்தோம். இனி வைணவப் பெரியோரான நம்மாழ்வார் சொல்வதைப் பார்ப்போம்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

அவன் இருக்கிறான் என்பவர்க்கு உருவமான ஸ்தூல சரீரமாகவும், அவன் இல்லையென்பார்க்கு அருவமான சூட்சும சரீரமாகவும் இரு வகைப்பட்ட தன்மைகளை உடையவனாக அந்த பரந்தாமன் இருப்பதால், என்றும்  எங்கும் வியாபித்து இருக்கும் நிலை கொண்டவன் அவனே என்று நம்மாழ்வார் கூறுகிறார்.

பின் ஏன் உருவ வழிபாடு என்ற கேள்விக்கும் அப்பர் பெருமான் இன்னொரு இடத்தில் விளக்கம் கூறுகிறார்.

ஆரொருவார் உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்

அன்பால் நினைக்கின்றவர் எந்த உருவில் நினைத்தாலும் கடவுள் அவ்வுருவில் வந்து அருள் புரிவார் என்கிறார் அவர். அருவமான இறைவனை உள்ளத்தில் இருத்துவது மிகவும் கடினம். கூர் நோக்கு நிலையில் எண்ணக் குவியலுக்கு ஒரு உருவம் தேவை. உள்ளம் பற்றிக் கொள்ள ஒரு உருவம் இருந்தால் வழிபடுதல் சுலபமாகிறது  என்பதால் உருவ வழிபாடு ஆரம்பமாயிருக்கலாம்.

அதே நேரத்தில் ஒவ்வொர் இறை உருவத்திலும் ஆழ்ந்த பொருள் இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது. இறைவனின் தோற்றத்தில் ஒரு பொருள், அவன் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பொருள், அவன் வாகனத்திற்கு ஒரு பொருள் என்று பல நுண்ணிய பொருள்கள் அவனது திருவுருவத்தில் இருக்கும்படி ஆன்மிகப் பெரியோர் படைத்தனர். இறைவனின் எண்ணிலா உயர்குணங்கள் பலவற்றையும் ஒவ்வொரு திருவுருவும் விளக்கும்படி இருந்தபடியால் பக்தன் அந்த உருவத்தைக் காணும் போதே அத்தனை குணங்களும் மனதில் பதிய வணங்குதல் அவனுக்கு எளிதாகும்.

இந்த உயர்ந்த நோக்கத்தில் தான் உருவமில்லை என்று ஒத்துக் கொண்ட போதும் நம் முன்னோர் பல உருவங்களில் அவனைக் கண்டு மகிழ்ந்தார்கள். இந்த உண்மை திருவாசகத்தில் மிக அழகாகப் பாடப்பட்டிருக்கின்றது.

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

என்று அவர் திருவாசகத்தில திருத்தெளேணத்தில் கூறுகின்றார். ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப்பெயர்களைக் கூறி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ? என்று கேட்கிறார்.


அருவ நிலையில் உள்ள இறைவன் உயிர்களின் பொருட்டுத் தன் நிலையிலிருந்தும் இரங்கி அடுத்த நிலையாகிய அருவுருவத்தில், அருவமும் உருவமும் கலந்த நிலையில் அதாவது லிங்க வடிவத்தில் காட்சி தருகிறான் என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள். அருவம் கண்ணுக்குத் தோன்றாதது. உருவம் கண்ணுக்குப் புலப்படுவது. இந்த இரண்டும் சேர்ந்ததே லிங்கம் என்பர்.

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிலைலிங்கம்

இந்த அருவுருவ வடிவாகியன சிவலிங்கமே நம் நாட்டில் எல்லா சிவன்  கோயில்களிலும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

உண்மையான இலக்கு இறைவனை உள்ளுக்குள் நாம் உணர்தல். அது தான் மிக முக்கியம். உருவமா, அருவமா என்ற வாதங்களில் நம் வாதத் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாமே ஒழிய ஆன்மிகத்தை வளர்த்துக் கொள்ள முடியாது. இதை அருணகிரிநாதர் தெளிவாக விளக்குகிறார்.

உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பரசமய கலையார வாரமற
உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அநுபூதி ஆனதுவும்   
   
இப்பாடலில் அருணகிரிநாதர் கடவுளை உருவம் என்றும், அருவம் என்றும், உள்ளது எனவும், இல்லை எனவும் தடுமாற வைப்பது மற்றைய சமயக் கூறுகளின் ஆரவாரங்கள். அதை ஒழித்து  நம் அனுபவ அறிவுக்கு மெய்ப்பொருள் விளங்கி, உண்மை உணர்வு வெளிப்பட்டு, உள்ளம் நெகிழ, உயிர் உருகி உள்ளதை உள்ளபடி உணரவேண்டும் என்கிறார் அவர். நமது அனுபவ அறிவே நமக்கு கடவுளை உள்ளபடி உணர்த்தும். ஆதலால் சமயங்களைக் கடந்த கடவுளை நமக்குள்ளேயே தேடிக் கண்டுகொள்ளலாம்.   

ஒருவருக்கு எளிதாக இருப்பது இன்னொருவருக்குக் கடினமாக இருக்கலாம். அந்த இன்னொருவருக்கு எளிதாக இருப்பது இவருக்குக் கடினமாக இருக்கலாம். எந்த வழியிலும் குற்றமில்லை. அதனால் இந்த வழிதான் உயர்ந்தது இது தாழ்ந்தது என்று சொல்வது அறிவாகாது.

இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் அருள் புரியக் காத்திருக்கிறான். யாருக்கு எந்த வழியில் பிரார்த்திப்பது எளிதாக இருக்கின்றதோ, யாருக்கு எந்த வழியில் வணங்கினால் மனம் எளிதில் இறைவனிடம் லயிக்கிறதோ அவரவர் அந்தந்த வழியில் இறைவனை வழிபடலாம். அந்த சுதந்திரம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. எனவே நம் இயல்பிற்கு ஏற்ற வழியில் இறைவனை வணங்கி இறையனுபவம் பெற வேண்டுமே ஒழிய சர்ச்சைகளில் தங்கி இறைவனை இழந்து விடக்கூடாது.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 02-04-2013

6 comments:

  1. /// அன்பால் நினைக்கின்றவர் எந்த உருவில் நினைத்தாலும் கடவுள் அவ்வுருவில் வந்து அருள் புரிவார் என்கிறார் அப்பர் பெருமான் ///

    உண்மை...

    ReplyDelete
  2. ஆதிப்பிரானும் அணி மணி வண்ணனும்
    ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
    சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
    பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே.
    திருமந்திரத்தின் ஒரு பாடல் இது.

    மூலாதாரத்தில் உள்ள உருத்திரனும், நீல வர்ணமுடைத்த திருமாலும்
    ச்ருஷ்டிக்குக் காரணமான நான்முகனும்
    தமக்கென வேலைகளை வகுத்தவரே எனத் தெரிந்தும்
    மூவரும் ஒருவரே எனத் தெளியாது பேசுகின்றனரே தெரியாதவர்
    என வருந்தும் பாடல் இது.

    எந்த எந்த தெய்வத்தை போற்றினாலும் வணங்கினாலும்
    உனது அந்த செயல் என்னையே வந்தடைகிறது எனச்ச்சொல்லப்படும்போது
    அந்த தெய்வம் உருவோடு ஆனது மட்டுமல்ல அருவாயிருப்பதையும்
    உள்ளடக்கியது எனவும் தான் பொருள்.

    உளதாய் இலதாய் எனச்சொல்லப்படுவதால் உள்ளது என ஆத்திகம் பேசுவோர்க்கும்
    இல்லை எனப்பேசுவோருக்கும் ஒரே நிலையில் இருந்து அருள் மழை பொழிபவன் தான்
    ஈசன்.

    நிர்குண நிராகார மாக இருக்கையில் அவனை பிரும்மன் எனவும்
    சகுண ஸாகாரமாக வணங்குகையில் அவனை ஈஸ்வரன் எனவும்

    ஆரண்யகம் சொல்லும்.

    சுப்பு தாத்தா.
    www.pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  3. Thanks for these articles. It's really useful. Can you also write more how it helps when people pray. Most people except when you pray somebody or god will stop by and give them things physically. Can you explain more how it really works?

    ReplyDelete
  4. அன்பே சிவம் என்போம்....எங்கும் இறைவனைக் காண்போம்..

    ReplyDelete