அமெரிக்காவில் இருந்து டாக்டர் ஜான்சன் மும்பை விமான நிலையத்தில்
வந்திறங்கிய போது அவருக்காக அவர் பெயர் எழுதிய அட்டையை வைத்துக் கொண்டு ஒருவன்
நின்றிருந்தான். அவர் நெருங்கியவுடன் அவன் எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தான். புருவங்களையும்
தோள்களையும் உயர்த்திய ஜான்சன் அவன் பின்னாலேயே சென்றார். விமான நிலையத்திற்கு
வெளியே சென்ற பின் தயாராக நின்று இருந்த ஒரு காரின் பின் கதவை அவன் திறந்து விட
அவர் உள்ளே ஏறி அமர்ந்தார். அவன் காரில் ஏறவில்லை. கார் கிளம்பியது. அவர் பின்னால்
திரும்பிப் பார்த்த போது அவன் தன் மொபைல் போனில் சுருக்கமாக ஏதோ சொல்லி மொபைல்
போனை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு எதிர்ப்புறமாக நடக்க ஆரம்பித்தான். காரில்
ஏற்றி விட்டேன் என்ற தகவலை அவன் சொல்லி இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
ஜான்சன் கார் டிரைவரைப் பார்த்தார். அவனும்
எதுவும் பேசத் தயாராக இருந்தது போல் தெரியவில்லை. அது ஜான்சனை
ஆச்சரியப்படுத்தவில்லை. அவனை அனுப்பியவர்கள் அதிகம் பேசுபவர்களை வேலைக்கு வைத்துக்
கொள்வதில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்தது தான். கார் தேசிய நெடுஞ்சாலை
ஒன்றில் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.
கார் அவரை எங்கே அழைத்துச் செல்கிறது
என்பது அவருக்குத் தெரியாது. அவர் வாய் விட்டுக் கேட்கவும் இல்லை. கேட்டாலும்
பதில் வந்திருக்க வாய்ப்பில்லை. அரை மணி நேரம் கழித்து ஐந்து நட்சத்திர ஓட்டல்
முன் கார் நின்றது. அங்கும் ஒருவன் தயாராக நின்று கொண்டிருந்தான். அவரைப் பார்த்தவுடன்
பவ்யமாக சற்று குனிந்து விட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.
ஓட்டலின் ஆறாவது மாடியில் இருந்த ஒரு சிறிய
கான்ஃப்ரன்ஸ் ஹால் கதவைத் திறந்து அவரை உள்ளே விட்டு கதவை சாத்திக் கொண்டான். உள்ளே
மிக மங்கலான விளக்கு வெளிச்சத்தில் ஆறு பேர் அமர்ந்திருந்தார்கள். அந்த மங்கலான
விளக்கும் அவர்கள் தலைகளுக்குப் பின்பக்க சுவரில் எரிந்து கொண்டு இருந்ததால் யார்
முகமும் அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. வெளிச்சத்தில் நின்று கொண்டு இருந்த
ஒருவர் அவர் அருகில் வந்து “வாருங்கள் ஜான்சன்” என்று கைகுலுக்கி
வரவேற்றார். மற்ற ஆறு ஜோடிக் கண்களும் அவரைக் கூர்ந்து கவனிப்பதை ஜான்சனால் உணர
முடிந்தது.
வரவேற்றவரை ஜான்சன்
மிக நன்றாக அறிவார். பாபுஜி என்று அனைவராலும் அழைக்கப்படும் அவரை நியூயார்க்கில்
சந்தித்து அவர் பேசி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக இந்தியாவின் முதல்
பணக்காரர்கள் லிஸ்டில் அவர் பெயர் நான்கு, ஐந்தாம் இடங்களில் மாறி மாறி இருந்து
வந்தாலும் கணக்கில் காட்டாத பல இடங்களில்
உள்ள அவருடைய கோடிக் கணக்கான சொத்துக்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவர் தான்
முதல் பணக்காரராக இருப்பார் என்பதில் ஜான்சனுக்குச் சந்தேகமில்லை.
”உட்காருங்கள் டாக்டர் ஜான்சன்” பாபுஜி காலியாக இருந்த ஒரு நாற்காலியைக் காட்டினார்.
ஜான்சன் அதில் அமர்ந்தார்.
பாபுஜி அங்கு
அமர்ந்திருந்த மற்றவர்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்பது போல்
நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
”டாக்டர் ஜான்சன், என்
நண்பர்கள் நம் விசேஷ மானசலிங்கம் ப்ராஜெக்ட் பற்றி அறிந்து கொள்ள
ஆசைப்படுகிறார்கள். அந்த சிவலிங்கம் பற்றியும் நாம் நடத்தப் போகும் ஆராய்ச்சிகள்
பற்றியும் அவர்களுக்கு விளக்கமாகச் சொல்லுங்களேன்”
முகம் கூடத் தெளிவாகத் தெரியாத நபர்களிடம்
விளக்கம் தருவது ஜான்சனுக்கு என்னவோ போல் இருந்தது. அவர்களால் அவரை நன்றாகப்
பார்க்க முடியும் ஆனால் அவரால் அப்படிப் பார்க்க முடியாது என்பது அவருக்கு
சிறிதும் பிடிக்காத சூழ்நிலையாக இருந்தது என்றாலும் பேச ஆரம்பித்தார். அவர்
அருகில் அமர்ந்திருந்த பாபுஜியிடம் அவர் மணிக்கணக்கில் இதை விவரித்திருக்கிறார். பாபுஜி
டாக்டர் ஜான்சனிடம் மட்டும் அல்லாமல் குருஜியிடமும் இதைப் பற்றி நிறைய பேசி
இருக்கிறார். என்றாலும் ஜான்சன் பேசுவதை முதல் முறை கேட்பது போல் கேட்டார்.
விசேஷ மானசலிங்கம் பற்றி சொல்ல ஆரம்பித்து
தாங்கள் மேற்கொள்ளவிருக்கிற ஆராய்ச்சிகள் பற்றியும் ஜான்சன் சொல்லிக் கொண்டு
போகையில் பரிபூரண கவனத்துடன் அவர்கள் அனைவரும் கேட்டார்கள். அந்த மங்கலான
வெளிச்சமும் பழகிப் போன பின் எதிரில் அமர்ந்திருந்த ஆறு பேரில் ஒரு நபர் ஒரு பெண்
என்பது மட்டும் அவருக்குத் தெரிய வந்தது. மற்றவர்கள் பற்றி அவரால் எதுவும்
யூகிக்கவும் முடியவில்லை.
ஜான்சன் பேசி முடித்த பின் அங்கு அசாதாரண
அமைதி நிலவியது. ஒரு நிமிடம் யாரும் எதுவும் பேசவில்லை.
பாபுஜி தான் மௌனத்தைக் கலைத்தார். “அந்த சிவலிங்க ஆராய்ச்சிகள் செய்து முடிக்க
உங்களுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?”
”அதை இப்போது சொல்வது கஷ்டம்”
“பின் எப்போது சொல்வது சுலபம்?” அங்கிருந்த பெண்மணி கேட்டாள். அவள் ஆங்கிலத்தைக் கேட்கும் போது அவள்
இந்தியாவைச் சேர்ந்தவள் அல்ல என்பது தெரிந்தது. அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவள்
என்பதை ஊகிக்க முடியவில்லை.
ஜான்சன் சொன்னார். “விசேஷ
மானச லிங்கம் பற்றின நமக்குக் கிடைத்திருக்கிற அத்தனை தகவல்களும் நேரடியாய்
சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வந்ததல்ல. கடைசியாய் கிட்டத்தட்ட அறுபது வருடங்கள்
பசுபதியிடம் இருந்த காலத்திலோ நமக்கு தகவல்கள் சொல்லக் கூடியவர்கள் யாரும் அதை
நெருங்கியது கூட இல்லை. அந்த
சிவலிங்கத்தின் சக்தி எல்லை இல்லாதது என்பதில் மட்டும் இது வரை கேள்விப்பட்ட
விஷயங்கள் ஒத்துப் போகின்றன. அந்த விசேஷ மானச லிங்கத்தை குருஜி நேரில் பார்த்து
பரிசோதித்து அவரது அபிப்பிராயம் சொன்ன பிறகு தான் ஆராய்ச்சிகள் முடிய எவ்வளவு
காலம் தேவைப்படும் என்பதைச் சரியாகச் சொல்ல முடியும்”
அந்தப் பெண்மணி கேட்டாள். “டாக்டர் ஜான்சன்
நீங்கள் மெத்தப் படித்த அனுபவம் மிக்க
வெற்றிகரமான சைக்காலஜிஸ்ட். அப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் உங்களை விட நீங்கள்
அதிகமாக குருஜியை அதிகம் நம்புவது ஏன்?”
ஜான்சன் சொன்னார். ”நான்
ஆராய்ச்சியாளன் மட்டுமே. ஆனால் குருஜி அந்த விசேஷ மானச லிங்கத்தை பூஜித்து
வந்தவர்களுக்கு இணையான சக்தி படைத்தவர். எனக்குத் தெரிந்து இந்த சப்ஜெக்டில்
குருஜி அளவுக்கு அறிந்தவர்கள் இல்லை. அவர் எத்தனையோ வருடங்கள் சித்தர்களிடமும்,
யோகிகளிடமும் சேர்ந்து இருந்து நிறையக் கற்றிருக்கிறார். அந்த விசேஷ மானச
லிங்கத்தை நேரில் பார்க்காமலேயே அதைத் தொட்டு எடுக்கக் கூட எப்படிப்பட்டவர்களால்
முடியும், எப்படி எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்பதை எல்லாம் விளக்கமாகச்
சொன்னவர் அவர். அந்தக் கொலைகாரன் அது இருக்கும் பூஜை அறைக்குள் எந்தக் காரணம்
வைத்தும் போகக் கூடாது என்று எச்சரித்தவர் அவர். அவன் அவர் பேச்சைக்
கேட்டிருந்தால் அனாவசியமாகச் செத்திருக்க மாட்டான். அவன் பிணத்தைப் பார்க்காமல்
இருந்திருந்தால் சிவலிங்கத்தைத் தூக்கின பையனும் அந்த அளவுக்குப் பயந்திருக்க
மாட்டான்.... அந்த சிவலிங்கத்தைத் தொடவும், பூஜை செய்யவும் தகுந்த ஆளாய் கணபதியைத்
தேர்ந்தெடுத்ததும் குருஜி தான். இதுவரை அவர் கணக்கு எந்த விதத்திலும் பொய்யாகவில்லை.....”
அதற்குப் பின் அந்தப் பெண்மணி எதுவும்
சந்தேகம் கேட்கவில்லை. ஆனால் அவள் அருகில் இருந்து ஒரு வயதான குரல் கேட்டது. “குருஜி எப்போது சிவலிங்கத்தை நேரில்
பார்ப்பார்?”
”இன்னேரம் அவர் அந்த சிவலிங்கத்தை தரிசித்திருக்க
வேண்டும்... நான் அங்கே போய் சேர்வதற்குள் அவர் தெரிந்து கொள்ள வேண்டியதைத்
தெரிந்து கொண்டிருப்பார். நானும் ஆராய்ச்சியில் என்னோடு இறங்கப் போகிறவர்களும் அதை
எப்படி அணுக வேண்டும் என்று அவர் சொல்வார். மீதியை நான் தீர்மானித்துக் கொள்ள
முடியும்”
பாபுஜி கேட்டார். “ஆராய்ச்சியில்
ஈடுபடுத்தப் போகிறவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா?”
”இது வரை விசேஷ மானச லிங்கம் பற்றிக் கேள்விப்பட்டதை
வைத்து சுமார் 13 பேரைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். குருஜி சிவலிங்கத்தை நேரில்
பார்த்து விட்டு வந்த பிறகு நானும் அவரும் சேர்ந்து அந்த 13 பேரில் மூன்று அல்லது
நான்கு பேரை வடிகட்டித் தேர்ந்தெடுப்போம்....”
அதன் பின் அவர்களிடம் இருந்து எந்தக்
கேள்வியும் எழாமல் போகவே பாபுஜி எழுந்து நின்று “நன்றி டாக்டர் ஜான்சன்” என்று கைகுலுக்கி அனுப்பி வைத்தார். ஜான்சனும் நன்றி தெரிவித்து விட்டு முகம்
தெரியாத அந்த நபர்களைப் பார்த்து கை அசைத்து விட்டு வெளியேறினார்.
அவரை உள்ளே அனுப்பி
விட்ட அதே ஆள் அவரை வெளியே அழைத்துச் சென்று விட்டான். வேறொரு கார் அவரை விமான
நிலையத்திற்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தது. ஜான்சன் தமிழகத்திற்குப்
பயணமானார். அவர் மனம் மட்டும் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் இருந்த அந்த மர்ம நபர்களிடமே
தங்கியிருந்தது. அந்த ஆறு பேரையும் நாளை தெருவில் நேராக சந்தித்தாலும் அவருக்கு
அவர்களில் ஒருவரைக் கூட அடையாளம் தெரியாது....
ஜான்சன் சென்றவுடன்
கான்ஃப்ரன்ஸ் ஹாலில் எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்தன. அந்த அறுவருமே
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர், ஒரு
தென்னாப்பிரிக்கர், ஒரு இஸ்ரேல்காரர், ஒரு ஜெர்மானியர் (பெண்மணி) மற்றும் ஒரு
எகிப்தியர்.
இஸ்ரேல்காரர்
பாபுஜியைக் கேட்டார். “இந்த டாக்டர் ஜான்சனை எந்த அளவுக்கு நம்பலாம்...”
பாபுஜி அமைதியாகச் சொன்னார். “அவருக்கு உயிர்
மேல் ஆசை இருக்கிறது. அதிகமாய் பணத் தேவையும் இருக்கிறது. அவருக்கு விவாகரத்து கிடைக்கப்
போகிறது. மனைவிக்கு செட்டில் செய்ய அவருக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது... அதனால்
நம்மை அனுசரித்து தான் இருப்பார்”
ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள். ”இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்குக் கூட நம்மைப் பற்றித்
தெரியாது தானே?”
”ஜான்சனுக்கு என்னை மட்டும் தான் தெரியும். உங்களைத்
தெரியாது. ஜான்சன் பயத்தாலும் பேராசையாலும் என்னைப் பற்றி வெளியே சொல்ல மாட்டார். குருஜிக்கு
நம் எல்லாரையும் தெரியும் என்றாலும் நம் ப்ராஜெக்ட்டுக்கு வித்திட்டவரே அவர் தான்
என்பதால் எந்த நிலையிலும் நம்மைப் பற்றி வெளியே சொல்ல மாட்டார். அதனால் நம்மைப்
பற்றி எந்த தகவலும் வெளியே கசியாது. அதனால் கவலை வேண்டாம்...”
“இந்த ஆராய்ச்சி முடிவுகள் எப்போது
தெரியும்?” – ஒருவர் கேட்டார்.
“மூன்று வாரங்கள் ஆகலாம்...”
மேலும் பதினைந்து நிமிடங்கள் சில்லரை
சந்தேகங்கள் கேட்டு திருப்தி அடைந்த அறுவரும் கிளம்பிச் சென்றனர். அறுவரில் இருவர்
விமான நிலையத்திற்கும், இருவர் அந்த ஓட்டலிலேயே வேறு அறைகளுக்கும், இருவர் தாங்கள்
தங்கி இருந்த வேறு வேறு ஓட்டல்களுக்கும் போனார்கள். அவர்கள் அறையை விட்டுச் சென்று
மூன்று நிமிடங்கள் பொறுத்திருந்து விட்டு பாபுஜி அந்த கான்ஃப்ரன்ஸ் ஹாலில்
பூட்டப்பட்டிருந்த ஒரு சிறிய அறைக் கதவைத் திறந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த
முதியவர் ஒருவர் நாற்காலியை நகர்த்திக் கொண்டு ஹாலிற்கு வந்தார்.
“அப்பா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
அந்த சிறிய அறைக்குள் இருந்தபடியே ஹாலில்
நடந்த அத்தனையையும் ரகசிய காமிரா வழியாக டிவியில் பார்த்துக் கொண்டிருந்த
பாபுஜியின் தந்தை சொன்னார். “ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு இடிக்கிறது”
“என்ன அது?”
”அந்த சிவலிங்கத்தைப் பராமரிப்பதாய் சொல்லப்படும் மூன்று
பேரில் இரண்டு பேராய் பசுபதியையும், அந்த
ஜோதிடரின் குருநாதரையும் எடுத்துக் கொண்டால் கூட மீதம் ஒரு ஆள் இருக்கிறார்
இல்லையா? சிவலிங்கத்தை பசுபதியிடம் கொண்டு வந்து கொடுத்த சித்தர் இன்னும் உயிரோடு
இருக்கிறார் என்பதால் அந்த மூன்றாம் ஆள் அந்த சித்தராகத் தான் இருக்க வேண்டும்.
அந்த சித்தர் இருக்கிற வரை உங்கள் ப்ராஜெக்ட் ஒழுங்காய் முடிவது எனக்கு
சந்தேகமாகத் தான் இருக்கிறது...”
பாபுஜி தந்தையை யோசனையுடன் பார்த்தார். எதிலும்
ஆழமாய் சென்று பார்க்க முடிந்த அவர் தந்தையின் அறிவு கூர்மையையும், தோன்றியதை தயவு
தாட்சணியம் இல்லாமல் சொல்ல முடிந்த தன்மையையும் அவர் என்றுமே மதித்தார். அதனாலேயே என்றும்
முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர் தன் தந்தையைக் கலந்தாலோசிப்பதுண்டு. தந்தை
எழுப்பிய சந்தேகத்தை அவரால் அலட்சியப்படுத்தி விட முடியவில்லை. ஆனால் அதே
சமயத்தில் ஒரு உண்மையை தந்தைக்கு சுட்டிக் காட்டத் தோன்றியது.
“அப்பா அந்த சித்தர் இருக்கிற காலத்திலேயே
தான் பசுபதி கொல்லப்பட்டார். அந்த சித்தர் இருக்கிற காலத்திலேயே தான் சிவலிங்கம்
இடம் பெயர்ந்தது. அதை எல்லாம் அந்த சித்தரால் தடுக்க முடியவில்லை....”
பாபுஜியின் தந்தைக்கு அதை மறுக்க
முடியவில்லை. என்றாலும் இதில் இவர்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று இருப்பதாக உள்ளுணர்வு
அவருக்குச் சொன்னது....
குருஜி இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. பட்டினி விரதம்
அவருக்குப் புதிதானதல்ல. இமயமலைச்சாரலில் அவர் அபூர்வ சக்திகளைத் தேடி அலைந்த
காலத்தில் எத்தனையோ நாட்கள் தொடர்ந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் சில பயிற்சிகளில்
ஈடுபட்டிருக்கிறார். அந்த நாட்களில் உணவை மனம் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அடைந்து
கண்ட சக்திகள் முன் உணவெல்லாம் ஒரு பொருட்டாகவே அவருக்குத் தோன்றியதில்லை.
அவரைப் போலவே தேடல்கள் உள்ளவர்கள்
ஆண்டாண்டு காலம் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்த்தை எல்லாம் அவர் ஒருசில வாரங்களிலேயே அடைந்து
விட்டார். திபெத்திய குகைகளில் தொடர்ந்தாற்போல் ஆறு மாதங்களில் ஒரு சிறிய குகையில்
பத்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு தியானத்தில் இருந்தவர்
அவர். சில சமயங்களில் கொடிய விலங்குகள் எல்லாம் அந்தக் குகைக்கு வந்து போகும். அந்த
விலங்குகள் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் அவர் தியானத்தில்
இருந்திருக்கிறார். உணர்வுகளின் உன்னத உயரங்களில் இருக்கும் மனிதனை கொடிய
விலங்குகள் கூட தாக்குவதில்லை. ஒரு நெருப்பு வளையத்திற்குள் இருப்பது போல புற
உலகின் எந்தக் குறுக்கீட்டையும் பற்றிக் கவலைப்படாமல் இருந்த காலங்கள் அவை.
ராமகிருஷ்ணன் என்ற பெயர் உடைய அவர்
குருஜியாக உலகிற்கு அறிமுகமான பிறகு நினைத்த போதெல்லாம் தியானத்திற்குள் போகவோ,
மற்ற அபூர்வப் பயிற்சிகள் செய்யவோ அவருக்கு முடியாமல் போயிற்று என்றாலும் சில
குறிப்பிட்ட காலங்களில் அந்தப் பயிற்சிகளையும் தியானத்தையும் தொடர்ந்து செய்வதை
ஒரு கட்டாயமாக அவர் பாவித்து வந்தார். சமகாலத்திய சில கார்ப்பரேட் சாமியார்களைப்
போல சொற்பொழிவுகளில் மட்டும் அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்
தன் சொந்த வாழ்வில் அவற்றைப் புறக்கணித்து விடவில்லை.
சிவலிங்கத்தைத் தரிசிக்கும் முன் வேதபாடசாலையில்
தங்கிய முதல் இரண்டு நாட்களிலும் ஒருசில அபூர்வப் பயிற்சிகளை செய்து கொண்டும்,
உயர் தியான நிலையில் இருந்து கொண்டும் இருந்த அவர் மூன்றாவது நாள் காலை கணபதி
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போன பிறகு தான் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியே
வந்தார்.
அந்த வீட்டை வேறு யாரும் நெருங்கி விடாமல்
காவல் காத்து வந்த ஒரு மாணவன் அவர் தேஜசில் கண்கள் கூசினாற் போல உணர்ந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் அவன் அவரைப் பார்த்திருக்கிறான். ஆனால் அப்போது அவர்
இப்படி ஒரு தேஜசில் இருக்கவில்லை..... அவன் கைகளைக் கூப்பி வணங்கினான். அவர்
அவனைப் பார்க்கக்கூட இல்லை. கம்பீரமாக சிவலிங்கம் இருந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர்
பார்வை நேராக இருந்தது. தேவையற்ற விஷயங்களில் கவனத்தை சிதறடித்து அவர் தன் உணர்வு நிலையின்
உச்சத்தை சிறிதும் இழந்து விட விரும்பவில்லை.
கணபதி சென்றவுடன் காமிராவை ஆஃப் செய்து
விட்டிருந்தனர். குருஜி தான் சிவலிங்கத்தை சந்திக்கும் நிகழ்ச்சியைப் பதிவு செய்யவோ,
பின் அதை மற்றவர்கள் காணவோ விரும்பவில்லை. எனவே முன்பே காமிரா கண்காணிப்பை நீக்கச்
சொல்லி இருந்தார். அவர் வெளியே வந்தபின் மறுபடி அதைத் தொடரவும் உத்தரவிட்டிருந்தார்.
உள்ளே நுழைந்தவுடன் கதவைத் தாளிட்ட குருஜி
சிவலிங்கம் இருந்த பூஜை அறையை நோக்கி நடந்தார்.
(தொடரும்)
-
என்.கணேசன்
nice.........
ReplyDeleteஉள்ளே நுழைந்தவுடன் கதவைத் தாளிட்ட குருஜி சிவலிங்கம் இருந்த பூஜை அறையை நோக்கி நடந்தார்.........////
ReplyDeleteஇப்படி எல்லாவாரமும் சஸ்பென்ஸின் உச்சதில் எங்களை நிற்கவைப்பதில் உங்களுக்கு அப்படியென்ன சார் விளையாட்டு........ :)
உள்ளே நுழைந்தவுடன் கதவைத் தாளிட்ட குருஜி சிவலிங்கம் இருந்த பூஜை அறையை நோக்கி நடந்தார்.
ReplyDeleteஅங்கே சிவலிங்கம் இல்லையா...!
Excellent narration :) Thanks for uploading soon today!
ReplyDeleteசிவலிங்கம் குருஜி சந்திப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். சஸ்பென்ஸான இடத்துல தொடரும் போடறது தவிர உங்கள் நாவலில் எல்லாமே பிரமாதம். புத்தகமாக வந்தால் முடிவு வரை கீழே வைக்க மனம் வராது என்றே நினைக்கிறேன். இப்படி ஒரு த்ரில்லிங் தொடருக்கு நன்றி.
ReplyDeleteSir, i wish u publish this as a book. Very interesting story..
ReplyDeleteமிக அருமை. ஆவலுடன் அடுத்த வாரத்தை எதிர் நோக்கி...
ReplyDeleteகடைசிப் பாரா அடுத்த பதிவுக்கான ஆர்வத்தைக் கூட்டுகிறது...
ReplyDeleteஅருமை...
முந்தைய சில பகிர்வுகளை வாசித்து விட்டு வந்தேன்... நல்ல விறுவிறுப்பு + சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...
ReplyDelete"கார்ப்பரேட் சாமியார்களைப் போல" - new thoughts...new words!
ReplyDelete