Monday, April 29, 2013

களை நீக்கும் கலை!




ரு தாவோ கதை....

ஒரு தாவோ குரு தன் மூன்று சீடர்களுடன் யாத்திரை செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய வயல்வெளி முழுவதும் களைகள் மண்டிக் கிடப்பதைக் கண்டார். தன் சீடர்களிடம் குரு கேட்டார். “இந்தக் களைகளை நீக்க சிறந்த வழி என்ன?

முதலாம் சீடன் சொன்னான். “கையால் ஒவ்வொரு களையாக வேரோடு பிடுங்குவது தான் சிறந்த வழி. அது மிக எளிமையான வழியும் கூட.

இரண்டாம் சீடன் சொன்னான். “இத்தனை பெரிய வயலில் ஒவ்வொரு களையாக கையால் பிடுங்கிக் கொண்டிருந்தால் எப்போது அத்தனை களைகளையும் பிடுங்கி முடிப்பது. களை பிடுங்கும் உபகரணங்களை உபயோகப்படுத்தி களை பிடுங்கினால் குறுகிற நேரத்தில் நிறைய களைகள் பிடுங்கி விடலாம்.

மூன்றாம் சீடன் சொன்னான். களைகளைத் தீயால் கொளுத்தினால் ஒரேயடியாக அத்தனை களைகளையும் அழித்து விடலாம். அது தான் விரைவான எளிமையான வழி

குரு சொன்னார். “இந்த வயல்வெளியே மனித மனம் என்றும், களைகள் அவனுக்குத் தேவையற்றதும், முன்னேற்றத்திற்கு உதவாததுமான தீய எண்ணங்கள் என்றும் எடுத்துக் கொண்டால் அப்போதும் நீங்கள் சொன்ன வழிகள் மிகப் பொருத்தமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

முதல் சீடன் சொன்னான். “ஆம் குருவே. ஒவ்வொரு தீய எண்ணத்தையும் தனித்தனியாக கவனத்தில் எடுத்து அதன் தீய தன்மையையும், பலனற்ற தன்மையையும் புரிந்து கொண்டு அதை மனதில் இருந்து நீக்கி விடுவதே எளிமையான சிறப்பான வழி என்று நினைக்கிறேன்.

இரண்டாம் சீடன் சொன்னான். “மனதில் உள்ள தீய எண்ணக் களைகளை விரைவாக நீக்க தியானம், ஜபம், மந்திரங்கள் போன்ற உபகரணங்கள் சிறப்பாகப் பயன்படும் என்று நினைக்கிறேன் குருவே”.

மூன்றாவது சீடன் சொன்னான். “புத்தர் அல்லது கடவுளர்களிடம் மனதை ஒப்படைத்தால் ஒரேயடியாக தீய எண்ணக் களைகள் கருகி விடும் என்று நான் நம்புகிறேன் குருவே

குரு சொன்னார். “மூன்றுமே நல்ல வழிகள் தான். சிந்திக்க வேண்டிய வழிகள் தான். ஆனால் அவை தாவோ கண்ணோட்டத்தில் மிகப் பொருத்தமானது தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது

அதற்குப் பின் அவர் அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சீடர்கள் தத்தம் வழியே சிறந்தது என்று நினைத்தாலும் குருவின் அங்கீகாரம் கிடைக்காததில் ஏமாற்றம் அடைந்தனர்.

சில மாதங்கள் சென்றன. குருவும் சீடர்களும் அதே பாதையில் இன்னொரு முறை வர நேர்ந்தது. களைகள் இருந்த வயல்வெளியில் விவசாயிகள் இப்போது நெற்பயிர் விளைவித்திருந்தார்கள்.

குரு அந்த நெற்பயிர் வயலைக் காட்டி சொன்னார். “இது தான் என் கேள்விக்குப் பதில். இது தான் தாவோ முறை

சீடர்களுக்குப் புரியவில்லை. குரு விளக்கினார். “நீங்கள் மூவர் சொன்ன வழிகளும் தற்காலிகமான வழிகள். களைகளைப் பிடுங்கிய அளவு, அழித்த அளவு அவை மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டே இருக்கும். அதை நிரந்தரமாக அழிக்க ஒரே வழி அந்த வயலை அப்படியே வெற்றிடமாக வைத்திராமல் அதில்  உபயோகமான பயிர்களை விதைப்பது தான்.

அதே போல் தீய எண்ணங்களை அழிப்பதற்கு நீங்கள் சொன்ன வழிகளும் தற்காலிகமானவை தான். எந்த வழியில் அழித்தாலும் காலி இடம் இருக்கும் வரை அவை திரும்பத் திரும்ப மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அந்த தீய எண்ணங்கள் இருக்கும் இடத்தில் நல்ல உபயோகமான எண்ணங்களை விதைப்பது தான் தாவோ முறைப்படி புத்திசாலித்தனமான பொருத்தமான செயல். அப்படிச் செய்தால், நல்லெண்ணங்கள் நிரம்பிய மனதில் தீய எண்ணங்கள் மீண்டும் எழ இடமே இருக்காது. அப்படியும் ஓரிரண்டு அங்கொன்றும் இங்கொன்றும் எழலாம் என்றாலும் அவற்றை நீக்குவது பெரிய கஷ்டமான காரியம் அல்ல.

அந்த தாவோ குரு சொன்னது மனதில் பதியவைத்துக் கொள்ளது தக்கது. மனதில் தீயவற்றையும், பலவீனத்தையும் போக்க தினசரி போராட்டம் நடத்த அவசியம் இல்லை.  சிந்தனைகளில் நல்லதையும், பயனுள்ளதையும் கொண்டு வருவதில் நாம் எல்லா சமயங்களிலும் உறுதியாக இருந்தால் தீயதும், பலவீனமும் தங்க நம் மனதில் இடமே இருக்காது.

-       -    என்.கணேசன்


Thursday, April 25, 2013

பரம(ன்) ரகசியம் – 41


 பரம(ன்) ரகசியம் – 41

பூஜை அறையை நோக்கி நடந்த குருஜி சிவலிங்கம் பார்வையில் பட ஆரம்பித்தவுடன் தன்னை அறியாமல் சிலையாய் சிறிது நேரம் நின்றார். சிவலிங்கம் ஜோதி சொரூபமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஒளி வெள்ளத்தில் சிவலிங்கம் மிதப்பது போல் தோன்றியது. சிவலிங்கத்தின் அடிப்பாகம் அந்த ஒளி வெள்ளத்தில் மறைந்து விட்டிருந்தது தான் அப்படித் தோன்றக் காரணமா, இல்லை அந்த இடத்தில் சிவலிங்கம் முறைப்படி பிரதிஷ்டை ஆகாதது காரணமா என்பதை குருஜியால் யூகிக்க முடியவில்லை.

சில பேர் சில அபூர்வ சமயங்களில் சில வினாடிகள் மட்டுமே பார்க்க முடிந்த அந்தக் காட்சியைக் கண்டு பிரமித்த குருஜி சில நிமிடங்கள் தன்னை மறந்து நின்றார். அந்த சிவலிங்கம் காந்தமாய் அவரைத் தன்னிடத்திற்கு இழுத்தது. தன்னை அறியாமல் சில அடிகள் முன்னோக்கி வைத்த குருஜி பூஜை அறை வாசலை நெருங்கிய போது சுயநினைவுக்கு வந்து அப்படியே நின்றார்.

இரண்டடிகள் பின்னுக்கு வைத்து சற்று இடைவெளியினை அதிகப்படுத்திக் கொண்டு  சாஷ்டாங்கமாய் வணங்கி விட்டு அங்கேயே குருஜி அமர்ந்தார். தன்னை மறந்து முன்பு ரசித்த அந்தக் காட்சியை குருஜி ஆராய்ச்சிக் கண்ணோடு சிறிது நேரம் பார்த்தார். பின் கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யப் பார்த்தார். அவர் மனம் முற்றிலுமாக சிவலிங்கம் மீது குவிய மனமே கரைவது போல் ஒரு உணர்வு ஏற்பட பலவந்தமாகக் கண்களைத் திறந்து மனதைத் தன்னிடமே தக்க வைத்துக் கொண்டார்.

குருஜி பின் மெல்ல புன்னகைத்தார். “நான் உன்னிடம் என்னை இழப்பதற்காக வரவில்லை விசேஷ மானஸ லிங்கமே. உன்னை என் வசப்படுத்தப்படுத்த வந்திருக்கிறேன். அதற்காக உன் சக்திகளை நான் அளக்க வந்திருக்கிறேன். அளந்து உன்னை என் வசப்படுத்த அடுத்ததாக நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வந்திருக்கிறேன்....

குருஜி ஏதாவது ஒரு வகையில் சிவலிங்கத்திடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தது போல சிவலிங்கத்தையே பார்த்தபடி ஒரு நிமிடம் மௌனமாக இருந்து பார்த்தார். ஜொலித்த சிவலிங்கம் அப்படியே அமைதியாக இருந்தது.

குருஜி தொடர்ந்தார். ஒரு தனிப்பட்ட உருவம் இருக்கிற கடவுளை நம்பும் கட்டத்தை என் வாழ்க்கையில் நான் என்றோ தாண்டி விட்டேன் மானஸ லிங்கமே. மொழி, மதம், தேசம் கடந்த ஒரு மகாசக்தியை, இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகின்ற அந்தப் பெரும் சக்தியைத் தான் மனிதர்கள் கடவுள் என்ற பெயரில் அழைக்கிறார்கள் என்றால் அந்தக் கடவுள் விருப்பு வெறுப்பு இல்லாத்தாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இந்த உலகத்தில் எல்லா மகாசக்திகளும் அப்படித் தான் இருக்கின்றன...

“... சூரியன் பிடித்தவர்களுக்கு மட்டும் ஒளிகாட்டி மற்றவர்களிடம் தன் ஒளியை மறைத்துக் கொள்வதில்லை. மழை தன்னை வரவேற்பவர்கள் மீது மட்டும் பெய்வதில்லை. சகலருக்கும் பெய்யும். சுடும் விஷயத்தில் தீ பட்சபாதம் காட்டுவதில்லை. அது யார் தொட்டாலும் சுடும்.  இதெல்லாம் இயற்கையின் நியதிகள். இந்தப் பிரபஞ்சம் உருவான காலத்தில் இருந்து இப்படித்தான் இருந்து வருகிறது. ஏன் பிரபஞ்சமே இந்த இயற்கையின் விதிகளின் படியே உருவானது என்பதால் இந்த விதிகளை மாற்ற முடிவது பிரபஞ்சத்தையே அழிக்க முடிவது போலத் தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை....

”...  அதே வழியில் விருப்பு வெறுப்பில்லாதது தான் கடவுள் சக்தி என்றால் அந்தக் கடவுளை வணங்குவதில் அர்த்தம் இல்லை அல்லவா? வணங்குவதால் அந்த சக்தி ஒருவருக்கு வாரி வழங்கி விடவும் போவதில்லை. வணங்க மறுப்பதால் ஒருவர் பெற இருப்பதை அந்த சக்தி தடுத்து விடவும் போவதில்லை. அந்தக் கடவுள் சக்தியே ஒருவன் தன்னை வணங்குகிறானா இல்லையா என்று கவனிப்பதும் இல்லை, அதை ஒரு பொருட்டாக நினைப்பதும் இல்லை என்று நான் புரிந்து கொண்ட பிறகு நான் கடவுளை வணங்கியது இல்லை. வணங்கி என்ன லாபம், வணங்காமல் இருந்து என்ன நஷ்டம்?...

“...அப்படியானால் நீ கேட்கலாம் நான் ஏன் உன்னை வணங்கினேன் என்று. நான் வணங்கியது உன்னை அல்ல. உன்னை உருவாக்குவதில் பல நூறு வருஷங்களாக ஈடுபட்ட என் குருநாதர் போன்ற சித்தர்களைத் தான் நான் வணங்கினேன். அந்த முயற்சி வணங்க வேண்டியது. அங்கீகரிக்கப்பட வேண்டியது. உன் மேல் பிரம்மாண்டமான சக்தியை ஆவாகனம் செய்து இன்று உன்னை இந்த அளவில் ஜொலிக்க வைத்திருக்கும் அவர்கள் முயற்சிகளுக்கு என் சாஷ்டாங்கமான நமஸ்காரம்...

”... மனிதன் எந்த சக்திக்கும் பயப்பட வேண்டியதில்லை. அந்த சக்தி எத்தனை பிரம்மாண்டமாக இருந்தாலும் நிலைகுலைய வேண்டியதில்லை. அவனுக்குத் தந்திருக்கும் பேரறிவைப் பயன்படுத்தினால் எந்த சக்தியையும் தனக்கு வேண்டிய வகையில் அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். அவன் அப்படிப் பயன்படுத்த முடிந்ததால் தான் இன்று வானத்தில் பறக்கிறான், அடுத்த கிரகங்களுக்கு செல்கிறான், எத்தனையோ புதிது புதிதாய் கண்டு பிடித்து சாகசங்கள் செய்கிறான். அவனால் எதுவும் முடியும். ஏனென்றால் அவனே அந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அம்சம்....

“...மனிதன் எதையும் வணங்கி சாதிப்பதில்லை மானஸ லிங்கமே, அவன் எதையும் புரிந்து கொண்டு தான் சாதிக்கிறான். தன் முயற்சியினால் தான் சாதிக்கிறான். இது தான் சரித்திரம். இது தான் விதி... அதனால் தான் நான் உன்னைப் புரிந்து கொள்ள வந்திருக்கிறேன்...

குருஜி அந்த விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு ஆத்மார்த்தமான தொனியில் தொடர்ந்தார். ”...உன்னைப் பராமரிக்கும் மூவரில் ஒருவராக என் குருநாதர் இருந்த போதும், அவர் சீடனாக நான் இருந்த போது  கூட ஒரு நாளும் உன்னைப் பற்றி என்னிடம் அவர் சொன்னதில்லை. நான் சீடனாக இருந்த அதே காலத்தில் தான் உன்னைக் கொண்டு வந்து பசுபதியிடம் ஒப்படைத்தார். உலகமெல்லாம் பிரபலமாய் இருந்திருக்க வேண்டிய உன்னை பசுபதியும் தன் தனிப்பட்ட ரகசிய சொத்தாய் அறுபது வருஷங்களாய் பாதுகாத்தார். அவரைச் சொல்லித் தப்பில்லை. அவருக்கு முந்தியவர்களும் உன்னை அப்படித்தான் வைத்திருந்தார்கள்...

“... பிரமிக்க வைக்கும்  நேர்த்தியுடனும், அழகுடனும் ஒரு ஓவியத்தை வரைந்து விட்டு அதை ஒளித்து வைப்பதில் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. உனக்குப் புரிகிறதா?

குருஜி கேட்டு விட்டு ஏதாவது ஒரு சங்கேத மொழியிலாவது மானஸ லிங்கத்திடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்த்தது போல இருந்தது. எந்த விதத்திலும் எந்த பதிலும் கிடைக்காமல் போனாலும் தொடர்ந்தார்.

”... நான் படிக்காத சாஸ்திரம் இல்லை, நான் அறியாத வேதாந்தம் இல்லை, நான் அலசாத தத்துவம் இல்லை. அப்படிப்பட்ட நான் பிரபஞ்ச சக்தி அல்லது கடவுள் சக்தியின் ஒரு அங்கம் என்பதில் அர்த்தம் இருக்கிறது, பெருமை இருக்கிறது. ஆனால் இதில் எதுவும் தெரியாத, புரியாத ஒரு குப்பனும், சுப்பனும் கூட அந்த சக்தியின் அங்கம் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை மானஸ லிங்கமே. வரலாறு படைக்கப் போகிற நானும் வரலாறே தெரியாத குப்பனும் சுப்பனும் ஒன்றானால் நான் வாழ்நாள் முழுவதும் சாதித்து அடைந்த உயரங்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது. எல்லாம் ஒன்று என்று என் தனித்தன்மையை இழந்து விட நான் விரும்பவில்லை. அது இறைசக்தியே ஆனாலும் கூட அதில் எனக்கு சம்மதமில்லை. மந்தை ஆடுகளில் ஒன்றாக வாழ்ந்து மடிவதில் எனக்கு விருப்பமில்லை. மந்தைகளை மேய்ப்பவனாக இருந்து வழிநடத்த நான் ஆசைப்படுகிறேன்...

”... நான் குருஜி என்றழைக்கப்படுகிற ராமகிருஷ்ணன். இது வரை எனக்குக் கிடைத்த பெருமை எல்லாம் நான் அறிந்த விஷயங்களை வைத்துத் தான். ஆனால் நான் எதையும் புதிதாக இந்த உலகத்தில் அறிமுகப்படுத்தி விடவில்லை. எத்தனையோ ஞானிகள் சொன்னதையும், முன்பே இந்த உலகத்தில் இருந்த விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறேன் என்பது மட்டுமே என் சாதனையாக இருந்திருக்கிறது. அந்த சாதனையில் எனக்கு திருப்தி இல்லை மானஸலிங்கமே. நான் புதியதாக ஒரு வரலாற்றை இந்த உலகத்தில் உருவாக்கப் போகிறேன் உன் மூலமாக. நான் உன் சக்தியைப் பயன்படுத்தி புதிய பாதையை இந்த உலகில் உருவாக்கப் போகிறேன். அந்த விதத்தில் இந்த உலக வரலாற்றில் என் பெயர் சாசுவதமாகப் பதிவாகப் போகிறது...

“...மகாசக்தியான உனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கப் போவதில்லை. உன் சக்திக்கு இசைவாக அணுகுபவர்கள் எவருக்கும் எதையும் நீயும் மறுக்கப் போவதில்லை. பிரச்சினை உன்னிடம் இருந்து வரப் போவதில்லை. அது எனக்குத் தெரியும். பிரச்சினை சக்திகளால் உண்டாவதில்லை. மனிதர்களால் தான் உண்டாகிறது. அப்படித் தான் உன்னை வணங்கி வந்தவர்களால் பிரச்சினையை சந்திக்கிறோம். உன்னைப் பற்றி பேசக் கூட பசுபதி தயாராக இருந்திருக்கவில்லை. அவரை சாகடித்ததில் எங்களுக்குத் துளி கூட பெருமை இல்லை. வருத்தம் தான். ஆனால் வேறு வழி எதையும் அவர் விட்டு வைக்கவில்லை... அந்தக் கொலைகார முட்டாளிடம் கூட படித்துப் படித்து சொல்லி இருந்தோம்... உன்னை நெருங்க வேண்டாம் என்று. பசுபதியைக் கொன்ற அவன் எங்கள் பேச்சைக் கேட்காமல் உன்னை நெருங்கி வீணாக உயிரை விட்டான். அதில் எங்கள் பங்கு எதுவும் இல்லை....

குருஜி திடீரென்று நிறுத்தி வாய் விட்டுச் சிரித்தார். பல வருஷங்கள் தவம் இருந்து அறிந்த வித்தையை மூன்று நாள் பயிற்சி செய்து விட்டு வந்து உன்னை இந்த ஒளிக்கோலத்தில் பார்க்க முடிந்த நானே உன்னை நெருங்கினால் என் தனித்தன்மையை இழந்து விடுவேன் என்று பயப்படுகிறேன். அப்படி இருக்கையில் அந்த முட்டாள் அத்தனை வேகமாய் உன் அருகே போனது எமனுக்கு அழைப்பு விட்ட மாதிரி தான்... அவன் விதி அவனை அப்படி இழுத்திருக்கிறது....

“...அதிருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம். உன்னைக் கேட்கலாமா? என் குருநாதர் போன்ற பெரிய சித்தர்கள் பூஜை செய்த உன்னை இப்போது கணபதி என்கிற ஒன்றும் தெரியாத ஒரு பையன் பூஜை செய்வது உனக்கு எப்படி இருக்கிறது. மௌனமும் அமைதியுமாக உன்னைப் பூஜித்து வந்தவர்களுக்குப் பிறகு இப்போது சலிக்காமல் எல்லாவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் பையன் கிடைத்திருப்பது எப்படி இருக்கிறது. உனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாததால் நீ ஒரு சலனமும் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் கணபதியைத் தேர்ந்தெடுத்து நான் உன்னைப் பூஜை செய்ய வைத்திருப்பதற்கு என் குருநாதர் என்ன நினைப்பார்? இது வரை பூஜை செய்வது யார் என்பதை தீர்மானம் செய்தது அவர்கள் கூட்டமாகத் தான் இருந்தது. இப்போது அந்த அதிகாரத்தை நான் எடுத்துக் கொண்டதைப் பற்றி அவர் அபிப்பிராயம் என்ன? யாரும் இல்லாத போது உனக்கு இங்கே பூஜை செய்து விட்டுப் போன அவர், கணபதியிடம் கூட ஒரு தடவை பேசி பூக்களைக் கொடுத்து விட்டுப் போன அவர் ஏன் என் கண்ணில் மட்டும் படவில்லை என்று தெரியவில்லை. அவரைப் பார்க்க முடிந்திருந்தால் இதைக் கண்டிப்பாகக் கேட்டிருப்பேன்.....

மனம் விட்டுப் பேசி முடித்த குருஜி மறுபடி சிரித்தார். “...கணபதி பேச்சைக் கேட்டு உனக்கும் இடைவிடாத பேச்சு பழக்கமாயிருக்கும் மானஸ லிங்கமே. அதனால் என் பேச்சையும் நீ பொறுமையாய் கேட்டிருக்கிறாய். நன்றி. புதியதொரு உலகத்திற்கு உனக்கு நல்வரவு. எங்கள் ஆராய்ச்சிக்கு நீ ஒத்துழைப்பாயா?

மறுபடி மானஸ லிங்கம் மௌனம் சாதித்தது. அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்ட குருஜி செயலில் இறங்கினார். பூஜை அறைக்குள் தப்பித் தவறிக் கூட நுழையாத அவர் அடுத்த சில மணி நேரங்கள் பூஜை அறைக்கு வெளியே இருந்த ஹாலில் அமைதியாக உலாவினார். ஒவ்வொரு இடைவெளியிலும் விசேஷ மானஸ லிங்கத்தை ஆராய்ந்தார். தனக்கு ஏற்படும் உணர்வுகளை மனதில் குறித்துக் கொண்டார். உலகையே மறந்து வித விதமான இடைவெளிகளில் விசேஷ மானஸ லிங்கம் ஏற்படுத்த முடிந்த தாக்கத்தை ஆராய்ந்து முடித்து அங்கிருந்து வெளியேறிய போது தான் களைப்பை உணர்ந்தார்.

அவர் வெளியே வந்த போது வாசலிலேயே ஈஸ்வர்-கணபதியின் தற்செயலான சந்திப்புச் செய்தி அவருக்காகக் காத்திருந்தது. செய்தியைக் கேட்டு முடித்த போது அவருக்கு அந்த சந்திப்பைத் தற்செயல் என்று நம்ப முடியவில்லை. சந்திக்கவே எந்த வகையிலும் வாய்ப்பில்லாத இந்த சந்திப்பு தற்செயலாக இருக்க வழியில்லை. ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு அவர் மறுபடி உள்ளே எட்டிப் பார்த்தார். ஏதோ ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது போல் தோன்ற அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது.

தன்னை சுதாரித்துக் கொண்ட குருஜி கணபதி இங்கே வந்து சாயங்கால பூஜை முடிந்தவுடன் என்னை வந்து பார்க்கச் சொல்என்று தகவல் சொன்னவனிடம் அறிவித்து விட்டு தன் இருப்பிடத்திற்குச் சென்றார்.

ணபதியின் பஞ்சமுக ஆஞ்சநேயரின் தரிசனம் திருப்திகரமாக இருந்தது. கோயிலில் அதிக கூட்டமிருக்காததால் சாவகாசமாக ஆஞ்சநேயரைத் தரிசிக்க முடிந்தது. அவனைக் கூட்டிக் கொண்டு வந்த டிரைவர் தான் ஏதோ வலியில் துடிப்பது போல இருந்தான். உங்களுக்கு உடம்பு சுகமில்லையோ?

டிரைவர் மறுத்தான். “அப்படியெல்லாம் இல்லை

திரும்பி வருகின்ற போது சிறிது நேரம் கணபதியின் சிந்தனையெல்லாம் மின்சாரம் பாய்ச்சி விட்டுப் போன ஆசாமி மீதே இருந்தது. அந்த ஆள் கையில் கரண்ட் கம்பி ஏதாவது இருந்திருக்குமோ?”.  இன்னமும் லேசாக ஏதோ ஒரு மின்சார அதிர்வு அவனிடம் தங்கி இருப்பது போன்ற உணர்வு அவனிடம் இருந்தது.

காரின் சீட்டில் வைத்திருந்த அந்த ஜவுளிக்கடை பையைப் பார்த்த போது அவன் சிந்தனை ஈஸ்வர் மீது சென்றது. எத்தனை நல்ல மனசு. அத்தனை படிச்சிருக்கார். பார்க்க அழகாய் சினிமா ஸ்டார் மாதிரி இருக்கார். ஆனால் கொஞ்சம் கூட கர்வம் அவர் கிட்ட இல்லையேஇந்த ஏழை கிட்ட எவ்வளவு பாசம் கட்டினார்...

சீக்கிரமாகவே அவன் தூங்கிப் போனான். வேதபாடசாலை வந்த பிறகு தான் அவன் கண்விழித்தான். இறங்கியவுடனேயே பூஜை முடித்து விட்டு குருஜியைச் சென்று சந்திக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப் பட்டது.

“இந்த குருஜி இன்னொரு நல்ல மனுஷன். ஏ.சி கார்ல ஆஞ்சநேயர் கோயிலுக்கு அனுப்பிச்சதும் அல்லாமல் திரும்பி வந்தவுடனே தரிசனம் நல்லபடியா ஆச்சான்னு கேட்க கூப்பிட்டனுப்பி இருக்கார். பிள்ளையாரே நான் உன் கிட்ட நேர்ல வந்து சொல்ல வேண்டியது நிறைய இருக்கு. உன் தயவுலயும் உங்கப்பா தயவுலயும் நிறைய நல்லது நடந்திருக்கு...

சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யச் செய்ய கணபதியை ஒரு குற்ற உணர்ச்சி அழுத்தியது. தனக்கொரு பட்டுவேட்டியும், பிள்ளையாருக்கு ஒரு பட்டு வேட்டியும் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் போது சிவலிங்கத்திற்கு மட்டும் எதையும் வாங்கிக் கொண்டு வர முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அது. “என் கிட்ட காசு இருந்திருந்தா கண்டிப்பா வாங்கிட்டு வந்திருப்பேன். ஓசியில வாங்கிக் கொடுக்கிற மனுஷன் கிட்ட எத்தனை தான் வாங்க முடியும் நீயே சொல்லு”.

ஆனாலும் அவனுக்கு மனம் கேட்கவில்லை. தனக்குக் கிடைத்த பட்டு வேட்டியை சிவலிங்கத்தின் மீது சாத்தினான். “நான் இங்கிருந்து போகிற வரைக்கும் உனக்கு இது இருக்கட்டும். போகிறப்ப கொண்டு போகிறேன். சரியா.... இதை உனக்கே கொடுத்துட்டும் போகலாம் தான். ஆனா எனக்குன்னு வாங்கிக் கொடுத்த அந்த நல்ல அண்ணனை நான் அலட்சியம் செஞ்ச மாதிரி ஆயிடும்.. அதான்...

பட்டுவேட்டி கட்டப்பட்ட சிவலிங்கத்தின் அழகு கூடி இருப்பது போல அவனுக்குத் தோன்றியது. என்னோட பிள்ளையாருக்கும் இது ரொம்பவே நல்லா இருக்கும்.என்று நினைக்கையில் அவன் முகத்தில் பெருமிதப் புன்னகை அரும்பியது.

பூஜையை முடித்து விட்டு கணபதி குருஜியைப் பார்க்கச் சென்றான். அவன் உள்ளே நுழைகையில் குருஜி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தார். அவன் வரும் சத்தம் கேட்டவுடன் அவன் பக்கம் திரும்பியவர் திடுக்கிட்டார். மூன்று நாள் தியானப் பயிற்சி மூலம் அடைந்திருந்த உயர்ந்த நுண்ணிய உணர்வு நிலையில் விசேஷ மானஸ லிங்கத்தின் ஜொலிப்பைப் பார்க்க முடிந்த அவருக்கு கணபதியைச் சூழ்ந்திருந்த ஏதோ ஒரு சக்தி வட்டத்தையும் பார்க்க முடிந்தது தான் அந்தத் திகைப்பின் காரணம். இது முன்பிருந்தே இவனிடம் உள்ளதா இல்லை புதியதா?...!

(தொடரும்)
-          என்.கணேசன்
  

Monday, April 22, 2013

இறைவன் அருவமா, உருவமா?


அறிவார்ந்த ஆன்மிகம்-4

இறைவன் அருவமா, உருவமா என்ற கேள்வி தொன்று தொட்டே கேட்கப்பட்டு வருகிறது. அறிவு ரீதியாக சிந்திப்போர் பலருக்கும் விதவிதமான உருவங்களில் இறைவன் இருப்பான் என்பதை நம்ப முடிவதில்லை. உருவ வழிபாடு காலங்காலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. அப்படி வழிபடுபவர்கள் அறிவை அகற்றி வைத்தவர்களும் அல்ல என்பதால் ஒரு குழப்பம் எழுகிறது. எது சரி? இறைவன் அருவமா, உருவமா? எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இது பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார்கள். அவற்றைப் பார்ப்போம்.

வேதங்களில் முதன்மையான ரிக்வேதம் சொல்கிறது. “உண்மையான இறைவன் ஒருவனே. ஞானிகள் அவனைப் பல விதங்களில் வர்ணிக்கிறார்கள். (ரிக்வேதம் 1.64.46)

இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட" முடியாத பரம்பொருள் என்கிறார் அப்பர் பெருமான்.

மாணிக்க வாசகரும் "உருவமும் அருவமும் ஆய பிரான்" என்று சிவபெருமானைப் போற்றுகிறார். உருவமாகவும், அருவமாகவும் இறைவன் இருப்பதாகச் சொல்கிறார்.

சிவனடியார்கள் சொன்னதைப் பார்த்தோம். இனி வைணவப் பெரியோரான நம்மாழ்வார் சொல்வதைப் பார்ப்போம்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

அவன் இருக்கிறான் என்பவர்க்கு உருவமான ஸ்தூல சரீரமாகவும், அவன் இல்லையென்பார்க்கு அருவமான சூட்சும சரீரமாகவும் இரு வகைப்பட்ட தன்மைகளை உடையவனாக அந்த பரந்தாமன் இருப்பதால், என்றும்  எங்கும் வியாபித்து இருக்கும் நிலை கொண்டவன் அவனே என்று நம்மாழ்வார் கூறுகிறார்.

பின் ஏன் உருவ வழிபாடு என்ற கேள்விக்கும் அப்பர் பெருமான் இன்னொரு இடத்தில் விளக்கம் கூறுகிறார்.

ஆரொருவார் உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்

அன்பால் நினைக்கின்றவர் எந்த உருவில் நினைத்தாலும் கடவுள் அவ்வுருவில் வந்து அருள் புரிவார் என்கிறார் அவர். அருவமான இறைவனை உள்ளத்தில் இருத்துவது மிகவும் கடினம். கூர் நோக்கு நிலையில் எண்ணக் குவியலுக்கு ஒரு உருவம் தேவை. உள்ளம் பற்றிக் கொள்ள ஒரு உருவம் இருந்தால் வழிபடுதல் சுலபமாகிறது  என்பதால் உருவ வழிபாடு ஆரம்பமாயிருக்கலாம்.

அதே நேரத்தில் ஒவ்வொர் இறை உருவத்திலும் ஆழ்ந்த பொருள் இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது. இறைவனின் தோற்றத்தில் ஒரு பொருள், அவன் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பொருள், அவன் வாகனத்திற்கு ஒரு பொருள் என்று பல நுண்ணிய பொருள்கள் அவனது திருவுருவத்தில் இருக்கும்படி ஆன்மிகப் பெரியோர் படைத்தனர். இறைவனின் எண்ணிலா உயர்குணங்கள் பலவற்றையும் ஒவ்வொரு திருவுருவும் விளக்கும்படி இருந்தபடியால் பக்தன் அந்த உருவத்தைக் காணும் போதே அத்தனை குணங்களும் மனதில் பதிய வணங்குதல் அவனுக்கு எளிதாகும்.

இந்த உயர்ந்த நோக்கத்தில் தான் உருவமில்லை என்று ஒத்துக் கொண்ட போதும் நம் முன்னோர் பல உருவங்களில் அவனைக் கண்டு மகிழ்ந்தார்கள். இந்த உண்மை திருவாசகத்தில் மிக அழகாகப் பாடப்பட்டிருக்கின்றது.

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

என்று அவர் திருவாசகத்தில திருத்தெளேணத்தில் கூறுகின்றார். ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப்பெயர்களைக் கூறி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ? என்று கேட்கிறார்.


அருவ நிலையில் உள்ள இறைவன் உயிர்களின் பொருட்டுத் தன் நிலையிலிருந்தும் இரங்கி அடுத்த நிலையாகிய அருவுருவத்தில், அருவமும் உருவமும் கலந்த நிலையில் அதாவது லிங்க வடிவத்தில் காட்சி தருகிறான் என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள். அருவம் கண்ணுக்குத் தோன்றாதது. உருவம் கண்ணுக்குப் புலப்படுவது. இந்த இரண்டும் சேர்ந்ததே லிங்கம் என்பர்.

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிலைலிங்கம்

இந்த அருவுருவ வடிவாகியன சிவலிங்கமே நம் நாட்டில் எல்லா சிவன்  கோயில்களிலும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

உண்மையான இலக்கு இறைவனை உள்ளுக்குள் நாம் உணர்தல். அது தான் மிக முக்கியம். உருவமா, அருவமா என்ற வாதங்களில் நம் வாதத் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாமே ஒழிய ஆன்மிகத்தை வளர்த்துக் கொள்ள முடியாது. இதை அருணகிரிநாதர் தெளிவாக விளக்குகிறார்.

உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பரசமய கலையார வாரமற
உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அநுபூதி ஆனதுவும்   
   
இப்பாடலில் அருணகிரிநாதர் கடவுளை உருவம் என்றும், அருவம் என்றும், உள்ளது எனவும், இல்லை எனவும் தடுமாற வைப்பது மற்றைய சமயக் கூறுகளின் ஆரவாரங்கள். அதை ஒழித்து  நம் அனுபவ அறிவுக்கு மெய்ப்பொருள் விளங்கி, உண்மை உணர்வு வெளிப்பட்டு, உள்ளம் நெகிழ, உயிர் உருகி உள்ளதை உள்ளபடி உணரவேண்டும் என்கிறார் அவர். நமது அனுபவ அறிவே நமக்கு கடவுளை உள்ளபடி உணர்த்தும். ஆதலால் சமயங்களைக் கடந்த கடவுளை நமக்குள்ளேயே தேடிக் கண்டுகொள்ளலாம்.   

ஒருவருக்கு எளிதாக இருப்பது இன்னொருவருக்குக் கடினமாக இருக்கலாம். அந்த இன்னொருவருக்கு எளிதாக இருப்பது இவருக்குக் கடினமாக இருக்கலாம். எந்த வழியிலும் குற்றமில்லை. அதனால் இந்த வழிதான் உயர்ந்தது இது தாழ்ந்தது என்று சொல்வது அறிவாகாது.

இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் அருள் புரியக் காத்திருக்கிறான். யாருக்கு எந்த வழியில் பிரார்த்திப்பது எளிதாக இருக்கின்றதோ, யாருக்கு எந்த வழியில் வணங்கினால் மனம் எளிதில் இறைவனிடம் லயிக்கிறதோ அவரவர் அந்தந்த வழியில் இறைவனை வழிபடலாம். அந்த சுதந்திரம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. எனவே நம் இயல்பிற்கு ஏற்ற வழியில் இறைவனை வணங்கி இறையனுபவம் பெற வேண்டுமே ஒழிய சர்ச்சைகளில் தங்கி இறைவனை இழந்து விடக்கூடாது.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 02-04-2013

Thursday, April 18, 2013

பரம(ன்) ரகசியம் - 40


மெரிக்காவில் இருந்து டாக்டர் ஜான்சன் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவருக்காக அவர் பெயர் எழுதிய அட்டையை வைத்துக் கொண்டு ஒருவன் நின்றிருந்தான். அவர் நெருங்கியவுடன் அவன் எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தான். புருவங்களையும் தோள்களையும் உயர்த்திய ஜான்சன் அவன் பின்னாலேயே சென்றார். விமான நிலையத்திற்கு வெளியே சென்ற பின் தயாராக நின்று இருந்த ஒரு காரின் பின் கதவை அவன் திறந்து விட அவர் உள்ளே ஏறி அமர்ந்தார். அவன் காரில் ஏறவில்லை. கார் கிளம்பியது. அவர் பின்னால் திரும்பிப் பார்த்த போது அவன் தன் மொபைல் போனில் சுருக்கமாக ஏதோ சொல்லி மொபைல் போனை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு எதிர்ப்புறமாக நடக்க ஆரம்பித்தான். காரில் ஏற்றி விட்டேன் என்ற தகவலை அவன் சொல்லி இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

ஜான்சன் கார் டிரைவரைப் பார்த்தார். அவனும் எதுவும் பேசத் தயாராக இருந்தது போல் தெரியவில்லை. அது ஜான்சனை ஆச்சரியப்படுத்தவில்லை. அவனை அனுப்பியவர்கள் அதிகம் பேசுபவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்தது தான். கார் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.

கார் அவரை எங்கே அழைத்துச் செல்கிறது என்பது அவருக்குத் தெரியாது. அவர் வாய் விட்டுக் கேட்கவும் இல்லை. கேட்டாலும் பதில் வந்திருக்க வாய்ப்பில்லை. அரை மணி நேரம் கழித்து ஐந்து நட்சத்திர ஓட்டல் முன் கார் நின்றது. அங்கும் ஒருவன் தயாராக நின்று கொண்டிருந்தான். அவரைப் பார்த்தவுடன் பவ்யமாக சற்று குனிந்து விட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

ஓட்டலின் ஆறாவது மாடியில் இருந்த ஒரு சிறிய கான்ஃப்ரன்ஸ் ஹால் கதவைத் திறந்து அவரை உள்ளே விட்டு கதவை சாத்திக் கொண்டான். உள்ளே மிக மங்கலான விளக்கு வெளிச்சத்தில் ஆறு பேர் அமர்ந்திருந்தார்கள். அந்த மங்கலான விளக்கும் அவர்கள் தலைகளுக்குப் பின்பக்க சுவரில் எரிந்து கொண்டு இருந்ததால் யார் முகமும் அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. வெளிச்சத்தில் நின்று கொண்டு இருந்த ஒருவர் அவர் அருகில் வந்து “வாருங்கள் ஜான்சன்என்று கைகுலுக்கி வரவேற்றார். மற்ற ஆறு ஜோடிக் கண்களும் அவரைக் கூர்ந்து கவனிப்பதை ஜான்சனால் உணர முடிந்தது.

வரவேற்றவரை ஜான்சன் மிக நன்றாக அறிவார். பாபுஜி என்று அனைவராலும் அழைக்கப்படும் அவரை நியூயார்க்கில் சந்தித்து அவர் பேசி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக இந்தியாவின் முதல் பணக்காரர்கள் லிஸ்டில் அவர் பெயர் நான்கு, ஐந்தாம் இடங்களில் மாறி மாறி இருந்து வந்தாலும்  கணக்கில் காட்டாத பல இடங்களில் உள்ள அவருடைய கோடிக் கணக்கான சொத்துக்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவர் தான் முதல் பணக்காரராக இருப்பார் என்பதில் ஜான்சனுக்குச் சந்தேகமில்லை.

உட்காருங்கள் டாக்டர் ஜான்சன்”  பாபுஜி காலியாக இருந்த ஒரு நாற்காலியைக் காட்டினார். ஜான்சன் அதில் அமர்ந்தார்.

பாபுஜி அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்பது போல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

டாக்டர் ஜான்சன், என்  நண்பர்கள் நம் விசேஷ மானசலிங்கம் ப்ராஜெக்ட் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அந்த சிவலிங்கம் பற்றியும் நாம் நடத்தப் போகும் ஆராய்ச்சிகள் பற்றியும் அவர்களுக்கு விளக்கமாகச் சொல்லுங்களேன்

முகம் கூடத் தெளிவாகத் தெரியாத நபர்களிடம் விளக்கம் தருவது ஜான்சனுக்கு என்னவோ போல் இருந்தது. அவர்களால் அவரை நன்றாகப் பார்க்க முடியும் ஆனால் அவரால் அப்படிப் பார்க்க முடியாது என்பது அவருக்கு சிறிதும் பிடிக்காத சூழ்நிலையாக இருந்தது என்றாலும் பேச ஆரம்பித்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த பாபுஜியிடம் அவர் மணிக்கணக்கில் இதை விவரித்திருக்கிறார். பாபுஜி டாக்டர் ஜான்சனிடம் மட்டும் அல்லாமல் குருஜியிடமும் இதைப் பற்றி நிறைய பேசி இருக்கிறார். என்றாலும் ஜான்சன் பேசுவதை முதல் முறை கேட்பது போல் கேட்டார்.

விசேஷ மானசலிங்கம் பற்றி சொல்ல ஆரம்பித்து தாங்கள் மேற்கொள்ளவிருக்கிற ஆராய்ச்சிகள் பற்றியும் ஜான்சன் சொல்லிக் கொண்டு போகையில் பரிபூரண கவனத்துடன் அவர்கள் அனைவரும் கேட்டார்கள். அந்த மங்கலான வெளிச்சமும் பழகிப் போன பின் எதிரில் அமர்ந்திருந்த ஆறு பேரில் ஒரு நபர் ஒரு பெண் என்பது மட்டும் அவருக்குத் தெரிய வந்தது. மற்றவர்கள் பற்றி அவரால் எதுவும் யூகிக்கவும் முடியவில்லை.

ஜான்சன் பேசி முடித்த பின் அங்கு அசாதாரண அமைதி நிலவியது. ஒரு நிமிடம் யாரும் எதுவும் பேசவில்லை.

பாபுஜி தான் மௌனத்தைக் கலைத்தார். “அந்த சிவலிங்க ஆராய்ச்சிகள் செய்து முடிக்க உங்களுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

அதை இப்போது சொல்வது கஷ்டம்

“பின் எப்போது சொல்வது சுலபம்?அங்கிருந்த பெண்மணி கேட்டாள். அவள் ஆங்கிலத்தைக் கேட்கும் போது அவள் இந்தியாவைச் சேர்ந்தவள் அல்ல என்பது தெரிந்தது. அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதை ஊகிக்க முடியவில்லை.

ஜான்சன் சொன்னார். “விசேஷ மானச லிங்கம் பற்றின நமக்குக் கிடைத்திருக்கிற அத்தனை தகவல்களும் நேரடியாய் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வந்ததல்ல. கடைசியாய் கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் பசுபதியிடம் இருந்த காலத்திலோ நமக்கு தகவல்கள் சொல்லக் கூடியவர்கள் யாரும் அதை நெருங்கியது கூட இல்லை.  அந்த சிவலிங்கத்தின் சக்தி எல்லை இல்லாதது என்பதில் மட்டும் இது வரை கேள்விப்பட்ட விஷயங்கள் ஒத்துப் போகின்றன. அந்த விசேஷ மானச லிங்கத்தை குருஜி நேரில் பார்த்து பரிசோதித்து அவரது அபிப்பிராயம் சொன்ன பிறகு தான் ஆராய்ச்சிகள் முடிய எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதைச் சரியாகச் சொல்ல முடியும்

அந்தப் பெண்மணி கேட்டாள். “டாக்டர் ஜான்சன் நீங்கள் மெத்தப் படித்த  அனுபவம் மிக்க வெற்றிகரமான சைக்காலஜிஸ்ட். அப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் உங்களை விட நீங்கள் அதிகமாக குருஜியை அதிகம் நம்புவது ஏன்?

ஜான்சன் சொன்னார். நான் ஆராய்ச்சியாளன் மட்டுமே. ஆனால் குருஜி அந்த விசேஷ மானச லிங்கத்தை பூஜித்து வந்தவர்களுக்கு இணையான சக்தி படைத்தவர். எனக்குத் தெரிந்து இந்த சப்ஜெக்டில் குருஜி அளவுக்கு அறிந்தவர்கள் இல்லை. அவர் எத்தனையோ வருடங்கள் சித்தர்களிடமும், யோகிகளிடமும் சேர்ந்து இருந்து நிறையக் கற்றிருக்கிறார். அந்த விசேஷ மானச லிங்கத்தை நேரில் பார்க்காமலேயே அதைத் தொட்டு எடுக்கக் கூட எப்படிப்பட்டவர்களால் முடியும், எப்படி எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்பதை எல்லாம் விளக்கமாகச் சொன்னவர் அவர். அந்தக் கொலைகாரன் அது இருக்கும் பூஜை அறைக்குள் எந்தக் காரணம் வைத்தும் போகக் கூடாது என்று எச்சரித்தவர் அவர். அவன் அவர் பேச்சைக் கேட்டிருந்தால் அனாவசியமாகச் செத்திருக்க மாட்டான். அவன் பிணத்தைப் பார்க்காமல் இருந்திருந்தால் சிவலிங்கத்தைத் தூக்கின பையனும் அந்த அளவுக்குப் பயந்திருக்க மாட்டான்.... அந்த சிவலிங்கத்தைத் தொடவும், பூஜை செய்யவும் தகுந்த ஆளாய் கணபதியைத் தேர்ந்தெடுத்ததும் குருஜி தான். இதுவரை அவர் கணக்கு எந்த விதத்திலும்  பொய்யாகவில்லை.....

அதற்குப் பின் அந்தப் பெண்மணி எதுவும் சந்தேகம் கேட்கவில்லை. ஆனால் அவள் அருகில் இருந்து ஒரு வயதான குரல் கேட்டது.  “குருஜி எப்போது சிவலிங்கத்தை நேரில் பார்ப்பார்?

இன்னேரம் அவர் அந்த சிவலிங்கத்தை தரிசித்திருக்க வேண்டும்... நான் அங்கே போய் சேர்வதற்குள் அவர் தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொண்டிருப்பார். நானும் ஆராய்ச்சியில் என்னோடு இறங்கப் போகிறவர்களும் அதை எப்படி அணுக வேண்டும் என்று அவர் சொல்வார். மீதியை நான் தீர்மானித்துக் கொள்ள முடியும்

பாபுஜி கேட்டார். “ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் போகிறவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா?

இது வரை விசேஷ மானச லிங்கம் பற்றிக் கேள்விப்பட்டதை வைத்து சுமார் 13 பேரைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். குருஜி சிவலிங்கத்தை நேரில் பார்த்து விட்டு வந்த பிறகு நானும் அவரும் சேர்ந்து அந்த 13 பேரில் மூன்று அல்லது நான்கு பேரை வடிகட்டித் தேர்ந்தெடுப்போம்....

அதன் பின் அவர்களிடம் இருந்து எந்தக் கேள்வியும் எழாமல் போகவே பாபுஜி எழுந்து நின்று “நன்றி டாக்டர் ஜான்சன்என்று கைகுலுக்கி அனுப்பி வைத்தார். ஜான்சனும் நன்றி தெரிவித்து விட்டு முகம் தெரியாத அந்த நபர்களைப் பார்த்து கை அசைத்து விட்டு வெளியேறினார்.

அவரை உள்ளே அனுப்பி விட்ட அதே ஆள் அவரை வெளியே அழைத்துச் சென்று விட்டான். வேறொரு கார் அவரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தது. ஜான்சன் தமிழகத்திற்குப் பயணமானார். அவர் மனம் மட்டும் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் இருந்த அந்த மர்ம நபர்களிடமே தங்கியிருந்தது. அந்த ஆறு பேரையும் நாளை தெருவில் நேராக சந்தித்தாலும் அவருக்கு அவர்களில் ஒருவரைக் கூட அடையாளம் தெரியாது....

ஜான்சன் சென்றவுடன் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்தன. அந்த அறுவருமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர், ஒரு தென்னாப்பிரிக்கர், ஒரு இஸ்ரேல்காரர், ஒரு ஜெர்மானியர் (பெண்மணி) மற்றும் ஒரு எகிப்தியர்.

இஸ்ரேல்காரர் பாபுஜியைக் கேட்டார். “இந்த டாக்டர் ஜான்சனை எந்த அளவுக்கு நம்பலாம்...

பாபுஜி அமைதியாகச் சொன்னார். “அவருக்கு உயிர் மேல் ஆசை இருக்கிறது. அதிகமாய் பணத் தேவையும் இருக்கிறது. அவருக்கு விவாகரத்து கிடைக்கப் போகிறது. மனைவிக்கு செட்டில் செய்ய அவருக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது... அதனால் நம்மை அனுசரித்து தான் இருப்பார்

ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்குக் கூட நம்மைப் பற்றித் தெரியாது தானே?


ஜான்சனுக்கு  என்னை மட்டும் தான் தெரியும். உங்களைத் தெரியாது. ஜான்சன் பயத்தாலும் பேராசையாலும் என்னைப் பற்றி வெளியே சொல்ல மாட்டார். குருஜிக்கு நம் எல்லாரையும் தெரியும் என்றாலும் நம் ப்ராஜெக்ட்டுக்கு வித்திட்டவரே அவர் தான் என்பதால் எந்த நிலையிலும் நம்மைப் பற்றி வெளியே சொல்ல மாட்டார். அதனால் நம்மைப் பற்றி எந்த தகவலும் வெளியே கசியாது. அதனால் கவலை வேண்டாம்...

இந்த ஆராய்ச்சி முடிவுகள் எப்போது தெரியும்?– ஒருவர் கேட்டார்.

“மூன்று வாரங்கள் ஆகலாம்...

மேலும் பதினைந்து நிமிடங்கள் சில்லரை சந்தேகங்கள் கேட்டு திருப்தி அடைந்த அறுவரும் கிளம்பிச் சென்றனர். அறுவரில் இருவர் விமான நிலையத்திற்கும், இருவர் அந்த ஓட்டலிலேயே வேறு அறைகளுக்கும், இருவர் தாங்கள் தங்கி இருந்த வேறு வேறு ஓட்டல்களுக்கும் போனார்கள். அவர்கள் அறையை விட்டுச் சென்று மூன்று நிமிடங்கள் பொறுத்திருந்து விட்டு பாபுஜி அந்த கான்ஃப்ரன்ஸ் ஹாலில் பூட்டப்பட்டிருந்த ஒரு சிறிய அறைக் கதவைத் திறந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் நாற்காலியை நகர்த்திக் கொண்டு ஹாலிற்கு வந்தார்.

“அப்பா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அந்த சிறிய அறைக்குள் இருந்தபடியே ஹாலில் நடந்த அத்தனையையும் ரகசிய காமிரா வழியாக டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பாபுஜியின் தந்தை சொன்னார். “ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு இடிக்கிறது

“என்ன அது?

அந்த சிவலிங்கத்தைப் பராமரிப்பதாய் சொல்லப்படும் மூன்று பேரில்  இரண்டு பேராய் பசுபதியையும், அந்த ஜோதிடரின் குருநாதரையும் எடுத்துக் கொண்டால் கூட மீதம் ஒரு ஆள் இருக்கிறார் இல்லையா? சிவலிங்கத்தை பசுபதியிடம் கொண்டு வந்து கொடுத்த சித்தர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதால் அந்த மூன்றாம் ஆள் அந்த சித்தராகத் தான் இருக்க வேண்டும். அந்த சித்தர் இருக்கிற வரை உங்கள் ப்ராஜெக்ட் ஒழுங்காய் முடிவது எனக்கு சந்தேகமாகத் தான் இருக்கிறது...

பாபுஜி தந்தையை யோசனையுடன் பார்த்தார். எதிலும் ஆழமாய் சென்று பார்க்க முடிந்த அவர் தந்தையின் அறிவு கூர்மையையும், தோன்றியதை தயவு தாட்சணியம் இல்லாமல் சொல்ல முடிந்த தன்மையையும் அவர் என்றுமே மதித்தார். அதனாலேயே என்றும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர் தன் தந்தையைக் கலந்தாலோசிப்பதுண்டு. தந்தை எழுப்பிய சந்தேகத்தை அவரால் அலட்சியப்படுத்தி விட முடியவில்லை. ஆனால் அதே சமயத்தில் ஒரு உண்மையை தந்தைக்கு சுட்டிக் காட்டத் தோன்றியது.

“அப்பா அந்த சித்தர் இருக்கிற காலத்திலேயே தான் பசுபதி கொல்லப்பட்டார். அந்த சித்தர் இருக்கிற காலத்திலேயே தான் சிவலிங்கம் இடம் பெயர்ந்தது. அதை எல்லாம் அந்த சித்தரால் தடுக்க முடியவில்லை....

பாபுஜியின் தந்தைக்கு அதை மறுக்க முடியவில்லை. என்றாலும் இதில் இவர்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று இருப்பதாக உள்ளுணர்வு அவருக்குச் சொன்னது....
  
குருஜி இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. பட்டினி விரதம் அவருக்குப் புதிதானதல்ல. இமயமலைச்சாரலில் அவர் அபூர்வ சக்திகளைத் தேடி அலைந்த காலத்தில் எத்தனையோ நாட்கள் தொடர்ந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் சில பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நாட்களில் உணவை மனம் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அடைந்து கண்ட சக்திகள் முன் உணவெல்லாம் ஒரு பொருட்டாகவே அவருக்குத் தோன்றியதில்லை.

அவரைப் போலவே தேடல்கள் உள்ளவர்கள் ஆண்டாண்டு காலம் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்த்தை எல்லாம் அவர் ஒருசில வாரங்களிலேயே அடைந்து விட்டார். திபெத்திய குகைகளில் தொடர்ந்தாற்போல் ஆறு மாதங்களில் ஒரு சிறிய குகையில் பத்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு தியானத்தில் இருந்தவர் அவர். சில சமயங்களில் கொடிய விலங்குகள் எல்லாம் அந்தக் குகைக்கு வந்து போகும். அந்த விலங்குகள் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் அவர் தியானத்தில் இருந்திருக்கிறார். உணர்வுகளின் உன்னத உயரங்களில் இருக்கும் மனிதனை கொடிய விலங்குகள் கூட தாக்குவதில்லை. ஒரு நெருப்பு வளையத்திற்குள் இருப்பது போல புற உலகின் எந்தக் குறுக்கீட்டையும் பற்றிக் கவலைப்படாமல் இருந்த காலங்கள் அவை.

ராமகிருஷ்ணன் என்ற பெயர் உடைய அவர் குருஜியாக உலகிற்கு அறிமுகமான பிறகு நினைத்த போதெல்லாம் தியானத்திற்குள் போகவோ, மற்ற அபூர்வப் பயிற்சிகள் செய்யவோ அவருக்கு முடியாமல் போயிற்று என்றாலும் சில குறிப்பிட்ட காலங்களில் அந்தப் பயிற்சிகளையும் தியானத்தையும் தொடர்ந்து செய்வதை ஒரு கட்டாயமாக அவர் பாவித்து வந்தார். சமகாலத்திய சில கார்ப்பரேட் சாமியார்களைப் போல சொற்பொழிவுகளில் மட்டும் அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் தன் சொந்த வாழ்வில் அவற்றைப் புறக்கணித்து விடவில்லை.

சிவலிங்கத்தைத் தரிசிக்கும் முன் வேதபாடசாலையில் தங்கிய முதல் இரண்டு நாட்களிலும் ஒருசில அபூர்வப் பயிற்சிகளை செய்து கொண்டும், உயர் தியான நிலையில் இருந்து கொண்டும் இருந்த அவர் மூன்றாவது நாள் காலை கணபதி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போன பிறகு தான் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அந்த வீட்டை வேறு யாரும் நெருங்கி விடாமல் காவல் காத்து வந்த ஒரு மாணவன் அவர் தேஜசில் கண்கள் கூசினாற் போல உணர்ந்தான். இரண்டு நாட்களுக்கு முன் அவன் அவரைப் பார்த்திருக்கிறான். ஆனால் அப்போது அவர் இப்படி ஒரு தேஜசில் இருக்கவில்லை..... அவன் கைகளைக் கூப்பி வணங்கினான். அவர் அவனைப் பார்க்கக்கூட இல்லை. கம்பீரமாக சிவலிங்கம் இருந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர் பார்வை நேராக இருந்தது.  தேவையற்ற விஷயங்களில் கவனத்தை சிதறடித்து அவர் தன் உணர்வு நிலையின் உச்சத்தை சிறிதும் இழந்து விட விரும்பவில்லை.

கணபதி சென்றவுடன் காமிராவை ஆஃப் செய்து விட்டிருந்தனர். குருஜி தான் சிவலிங்கத்தை சந்திக்கும் நிகழ்ச்சியைப் பதிவு செய்யவோ, பின் அதை மற்றவர்கள் காணவோ விரும்பவில்லை. எனவே முன்பே காமிரா கண்காணிப்பை நீக்கச் சொல்லி இருந்தார். அவர் வெளியே வந்தபின் மறுபடி அதைத் தொடரவும்  உத்தரவிட்டிருந்தார்.

உள்ளே நுழைந்தவுடன் கதவைத் தாளிட்ட குருஜி சிவலிங்கம் இருந்த பூஜை அறையை நோக்கி நடந்தார்.

(தொடரும்)

-          என்.கணேசன்

Monday, April 15, 2013

இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!




அறிவார்ந்த ஆன்மிகம் - 3


தலைப்பு சரிதானா என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருக்கக் கூடும். இறைவன் அல்லவா நமக்கு வழிகாட்ட வேண்டும் அப்படி இருக்கையில் இறைவனுக்கு சிலர் வழிகாட்டத் துணிவது போலவும், அது வேண்டாம் என்பது போலவும் அல்லவா சொல்லப்படுகிறது என்றும் திகைக்கலாம். ஆனால் தலைப்பு சரி தான். தொடர்ந்து படியுங்கள்.

அண்ட சராசரங்களை இம்மி பிசகாமல் இயக்கத் தெரிந்த இறைவனுக்கு நம்முடைய வாழ்வை இயக்குவது எப்படி என்று சரிவரத் தெரிவதில்லை என்பது நம்மில் பலருடைய அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால் தான் தினந்தோறும் எனக்கு அதைச் செய், இதைச் செய் என்று பிரார்த்திக்கிறோம், ஏன் இப்படிச் செய்தாய், ஏன் அப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்கிறோம். பல சமயங்களில் எதை எப்போது செய்ய வேண்டும் என்று கூட இறைவனுக்குத் தெரிவிக்கிறோம். இறைவனை வணங்கி விட்டு இப்படி நாம் அதற்குக் கூலியாகக் கேட்கும் விஷயங்கள் ஏராளம்.  

இறைவனிடம் கேட்காமல் யாரிடம் கேட்பேன் என்று பக்தன் கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் கேட்பதெல்லாம் நியாயமாக இருக்கிறதா என்பதே நம் கேள்வி. 

1.       செயலுக்கு எதிரான விளைவைக் கேட்காதீர்கள்:
பரிட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படிக்க மாணவனுக்கு நேரமும் ஒதுக்கப் பட்டிருக்கிறது. நன்றாகப் படித்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பதை இறைவன் தந்திருக்கிற அறிவு தெரிவிக்கிறது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு தினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைப் பார்க்காமல் மாணவனால் இருக்க முடியவில்லை.  கிரிக்கெட் பார்க்கிறான். வேறு பொழுது போக்குகளிலும் நேரத்தைப் போக்கி பரிட்சைக்கு இரண்டு நாள் முன்பு தான் படிக்க ஆரம்பிக்கிறான். படித்தது போதவில்லை. பரிட்சை நன்றாக எழுதவில்லை. வெளியே வந்தவன் தேர்வு வரும் வரை தினமும் கோயிலிற்குச் சென்று மனம் உருக வேண்டுகிறான். “கடவுளே என்னை நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்ய அருள் புரி”.

உள்ளம் உருகப் பிரார்த்தித்தால் இறைவன் செவி சாய்ப்பான்என்று பெரியோர் சொல்வதை அவன் நம்புகிறான். அப்படி நம்புவதை அவன் இறைவனுக்கும் தெரியப்படுத்துகிறான். இறைவன் என்ன செய்வார் சொல்லுங்கள். இன்னொருவன் இறைவன் தந்த அறிவின்படி விளையாட்டு கேளிக்கைகளில் இருக்கும் ஆர்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ஒழுங்காகப் படிக்கிறான். இவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்து படிக்காத மாணவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்தால் இறைவன் செய்வது நியாயமாகுமா?

இயற்கையின் விதிப்படி படிக்காதவன் பரிட்சையில் தோல்வியுற்றோ, முறைவான மதிப்பெண்கள் பெற்றோ, உன்னை நான் மலை போல் நம்பினேனே. இப்படி ஏமாற்றி விட்டாயேஎன்று மனம் குமுறினால் அது அறிவீனமே அல்லவா? இது போல ‘இந்த செயலுக்கு இந்த விளைவு என்று எச்சரிக்கும் இறை அறிவைப் புறக்கணித்து விட்டு தவறாக அனைத்தையும் இஷ்டம் போல் செய்து விட்டு கடைசி நிமிஷத்தில் பிரார்த்தித்து விட்டு எல்லாம் சரியாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் தயவு செய்து சொல்லாதீர்கள்.

2.       உங்களை மட்டுமே பார்க்காதீர்கள்:
இறைவனுக்கு இரு பக்தர்கள் இருக்கிறார்கள். இருவருமே மிக நல்ல பக்தர்கள். ஒருவன் குயவன். மற்றவன் விவசாயி. குயவன் மழையே வேண்டாம் கடவுளே, மழை பெய்தால் என் பிழைப்பு நடக்காதுஎன்று வேண்டிக் கொள்கிறான். விவசாயியோ, “இறைவனே மழை பொழிய வை. இல்லா விட்டால் என் பிழைப்பு என்று வேண்டிக் கொள்கிறான்.

எல்லாம் வல்ல இறைவன் இப்போது என்ன செய்வான் சொல்லுங்கள். இருவருமே பக்தர்கள் தான். இருவர் கோரிக்கையும் அவரவர் வகையில் நியாயமானது தான். முன்பு சொன்ன படிக்காத மாணவனைப் போல இவர்கள் பேராசைப்படவில்லை. இறைவன் என்ன செய்தாலும் அவன் ஒரு பக்தன் பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்.

இப்படித் தான் சில சமயங்களில் நம் பிரார்த்தனைகள் பலிக்காமல் போகலாம். அப்போதெல்லாம் ஏன் அப்படிச் செய்தாய் ஏன் இப்படிச் செய்தாய் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், இனியாவது இப்படிச் செய், அப்படிச் செய் என்று கோபத்தோடு அறிவுரை வழங்காமல் இருங்கள். இவர்களில் ஒருவன் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றினால், வேறொருவன் பிழைப்புக்கு இறைவன் கண்டிப்பாக வேறொரு வழியைக் காண்பிப்பான் என்பது நிச்சயம்.

3.       எல்லாமே எப்போதுமே முழுமையாக விளங்க வேண்டும் என்று எதிர்பாராதீர்கள்:
மனிதன் அறிவுக்கு எல்லை உண்டு. அவனால் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் விளங்கிக் கொள்ள முடியாது. புரியாததாலேயே நடப்பதை எல்லாம் நியாயமில்லாதது என்ரும் தனக்கு எதிரானது என்றும் முடிவு எடுத்து விடக்கூடாது.  பல நிகழ்வுகள் அந்தந்த நேரத்தில் தீமை போலவும் தோல்வி போலவும் தோன்றினாலும் பொறுத்திருந்து பார்த்தால் நடந்தது நன்மைக்கே என்பது புரிய வைக்கும்.  

எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் பல கோடி சொத்துக்களுக்கு அதிபர். இறைவனின் தீவிர பக்தர். அவர் ஒரு முறை சொன்னார். “எனக்கு சிறு வயதில் இருந்தே ஸ்டேட் பேங்கில் வேலைக்குச் சேர வேண்டும் என்று ஆசை. அது நிறைவேற தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன். மூன்று தடவை ஸ்டேட் பாங்க் பரிட்சை எழுதினேன். ஒரு முறை கூட நான் பாஸாகவில்லை. பிறகு எழுத வயது கடந்து விட்டது. நான் கடவுளிடம் கோபித்துக் கொண்டு ஆறு மாதம் கும்பிடாமல் கூட இருந்தேன்....

பெரிய தொழிலதிபர் ஆகவும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆகவும் முன்னேற வேண்டிய மனிதர் ஒரு வங்கி குமாஸ்தாவாக வேண்டும் என்று பிரார்த்தித்தால் இறைவன் என்ன செய்வார்? பக்தன் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டு அந்த ஆசையை நிறைவேற்றி வைக்காமல் இருந்தது அவருடைய கருணையை அல்லவா காண்பிக்கிறது. எனவே பல நேரங்களில் உங்களுக்கு நல்லது எது என்று உங்களை விட இறைவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதை உணர்ந்திருங்கள். அவனிடம் அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொல்லி வழி காட்டாதீர்கள்.

நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!" என்கிறது இந்துமதம். "நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!" என்கிறது கிறிஸ்தவம்.
அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தும் தீர்ப்பைக் குறித்தும் அதிருப்தி கொள்வது மனிதனின் துர்பாக்கியமேயாகும்என்கிறது இஸ்லாம். இப்படி எல்லா மதங்களும் இறைவனின் சித்தம் மனிதனின் சிற்றறிவை விட மேலானது என்றும் அதை எப்போதும் நம்புங்கள் என்றும் ஒருமித்த குரலில் சொல்கின்றன.

உங்கள் செயல்கள் உங்கள் நோக்கங்களுக்கு எதிராக இல்லாத வரையில், உங்கள் கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் வரையில் எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு எது நல்லதோ, எது சிறப்போ அதைச் செய்வான் என்பதை நம்புங்கள். அதை விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் அவன் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்த அளவு பேரறிவு எந்த மனிதனுக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருங்கள்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் மார்புகளில் பாலைத் தயார் நிலையில் உருவாக்க முடிந்த இறைவனுக்கு, அண்ட சராசரங்களையும் அனாயாசமாக ஒப்பற்ற ஒழுங்கு முறையில் இயக்க முடிந்த இறைவனுக்கு, ஒவ்வொன்றையும் அடுத்தவர் சொல்லித் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள். தவறில்லை. ஆனால் அதன் பின் எது நடந்தாலும் அது சரியாகவே இருக்கும், இன்று புரியா விட்டாலும் பின்பாவது புரியவரும் என்று நம்பிக்கையுடன் பொறுத்திருங்கள். அதுவே இறைவன் மேல் வைக்கக் கூடிய உண்மையான நம்பிக்கை.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 26-03-2013