Friday, August 28, 2009

மூன்று பெரிய பொய்கள்


இன்றைய உலகம் மூன்று பெரிய பொய்களைப் பெரிதும் நம்புகிறது. அந்த நம்பிக்கையுடன் இயங்குகிறது. இக்காலத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் அந்தப் பொய்கள் மீதுள்ள நம்பிக்கை தான் என்று கூட சொல்லலாம்.

அந்த மூன்று பெரிய பொய்கள் -

1) அதிகமாக இருப்பதே நல்லது.
2) பெரியதாக இருப்பதே நல்லது.
3) வேகமாக இருப்பதே நல்லது.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நம்பிக்கைகளில் தவறென்ன இருக்கிறது என்று தோன்றலாம். இவையெல்லாம் உண்மையல்லவா என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் தெளிவாக சிந்தித்து ஆராய்ந்தால் நமக்கு உண்மை விளங்கும்.

முதல் பொய்யைப் பார்ப்போம். அதிகமாக இருப்பதே நல்லது, அதிகமாகப் பெற்றிருப்பதே வெற்றி என்கிற எண்ணம். முக்கியமாக பணமும், சொத்துகளும், அதிகாரமும் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு வெற்றி என்ற கருத்து இன்றைய காலத்தில் வேரூன்றி வருகிறது. இன்னும் சொல்லப் போனால் வெற்றியின் அளவே இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

தோன்றுகிற அளவுக்கு அது உண்மை தானா என்று பார்க்க அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எந்த அளவு சந்தோஷமாகவும் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள் என்று தூரத்திலிருந்து பார்க்காமல் அருகே போய்ப் பாருங்கள். இல்லா விட்டால் அவர்களுக்கு மிக அருகே இருப்பவர்களைக் கேளுங்கள். பணம், சொத்து, அதிகாரம் - இந்தப் பட்டியல் நீளுமளவு சந்தோஷம், நிறைவு, நிம்மதி பட்டியல் இருக்கிறதா என்று பாருங்கள். அவர்களுடைய எல்லா வெற்றியும் வெளித் தோற்றத்துடன் நின்று போகிறது என்பது உங்களுக்குப் புரியும்.

அதிகமாக இருப்பவர்களுக்கு இழப்பதற்கும் அதிகமாக இருக்கிறது. எனவே இழந்து விடுவோமோ என்ற பயம் இருப்பதை நிம்மதியாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது என்று கூட சொல்லலாம். பலர் இருப்பதை அனுபவிக்காமல் ஏதோ ஒரு துஷ்ட சக்தியால் பீடிக்கப் பட்டவர்கள் போல் எந்திரத்தனமாக அதை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போகும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் இவ்வளவு இருக்கிறது என்று அடுத்தவருக்குக் காட்டும் முயற்சியின் அளவுக்கு சேர்த்ததை பயன்படுத்துவதற்கான முயற்சி இருப்பதில்லை. அதிகமாக சேரச் சேர பொறாமை பிடித்தவர்கள் கூட்டமும், அதை அபகரிக்க நினைக்கிறவர் கூட்டமும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சமயம் பார்த்துக் காத்திருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியும் வர, நிம்மதி காணாமல் போய் விடுகிறது. இப்போது சொல்லுங்கள்- மிக அதிகம் உண்மையிலேயே சிறப்பானது தானா? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னோர்கள் சொல்வது உண்மையல்லவா?

இரண்டாவதாக, பெரியதாக இருப்பதே நல்லது என்ற பொய். பிரபலமாக இருக்க வேண்டும், எல்லோரும் மிகவும் முக்கியத்துவம் தரும் நிலையில் இருக்க வேண்டும், நாலு பேர் பெருமையாகப் பாராட்டும்படி இருக்க வேண்டும், அதுவே சிறந்த வெற்றி, நல்லது என்கிற இந்த நம்பிக்கையும் மேலோட்டமாகப் பார்த்தால் இதிலென்ன குறை என்று கேட்கத் தோன்றும். மிகப் பிரபலமான மனிதர்கள் பெரும்பாலும் சுதந்திரம் என்ற ஒன்றை போகப் போக இழந்து விடுகிறார்கள். மிகப்பிரபலமான நடிகர், நடிகைகளைப் பாருங்கள். எங்கும் அவர்களைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காமிராக்கள் போகிற பக்கமெல்லாம் காத்துக் கொண்டு இருக்கும். ஆரம்பத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் போது பெருமைப்படும் அவர்கள் பின்னாளில் மற்றவர்கள் கண்ணில் படாமல் தங்கள் இஷ்டப்படி இருக்கப் படாத பாடு பட வேண்டியிருக்கும்.

பெரிய அரசியல்வாதிகளைப் பாருங்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளை வாய் விட்டுச் சொல்ல முடியாதவர்களாய் பல நேரங்களில் இருப்பார்கள். தெரியாமல் சொல்லி விட்டால் அது பெரும்பான்மை மக்களிடம் எதிர்ப்பைக் கிளப்பினால் நான் அப்படி சொல்லவில்லை என்று ஆரம்பித்து ஏதேதோ பிதற்றி அவஸ்தைப் படுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். பின் மறந்து கூட நினைத்தபடி பேசவோ, நடந்து கொள்ளவோ முடியாமல் மற்றவர்கள் நினைக்கிறபடி பேசி, நடந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எத்தனை தான் பணமும், சொத்தும் இருந்தாலும் தங்கள் இஷ்டப்படி செயல்படவோ, பேசவோ முடியாத பிரபலங்கள், பிரபலங்களாக இருப்பதற்கு பெரும்பாலும் சுதந்திரத்தையே விலையாகத் தரவேண்டி வருகிறது.
சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து மனிதன் பெறத்தக்கது தான் என்ன?

மூன்றாவதாக, வேகமே நல்லது என்கிற பொய். இப்போதைய உலகின் மந்திரச் சொல்லே வேகம் (FAST) தான். எதையும் வேகமாகப் பெற வேண்டும், எங்கும் வேகமாகச் செல்ல வேண்டும், எதுவும் வேகமாக மாற வேண்டும்-அதுவே பெருமைக்குரிய விஷயம் என்ற சிந்தனை தான் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஆம்புலன்ஸ் போவது போல் மிகவும் அவசரத்தில் வண்டியோட்டி பல பேருக்கு பல இடைஞ்சல்கள் செய்து கடைசியில் ஒரு பெட்டிக் கடையின் முன் வண்டியை நிறுத்தி சாவகாசமாக சிகரெட்டைப் பற்ற வைத்தபடி வேடிக்கை பார்க்கும் சில இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். சிறிது ஏமாந்தால் சிகரெட்டிற்குப் பதிலாக அந்த இளைஞனே சாம்பலாகப் போயிருக்க எத்தனையோ விபத்து வாய்ப்புகள் இருக்கும் வண்ணம் பறந்து வந்து சாதிப்பது சிகரெட் பிடிப்பது தானா?

எதையும் வேகமாகப் பெற வேண்டும் என்ற ஆவல் பலரை எத்தனையோ பேரை நியாயமற்ற குறுக்கு வழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர் அப்படிக் கிடைக்காத போது தவித்துப் போகிறார்கள். இதனால் வேகமாகக் கிடைப்பதென்னவோ இரத்த அழுத்தமும், நோய்களும் தான். வண்டிகளில் அதிவேகமாகப் போகிறவர்கள் தாங்கள் நினைத்த இடத்திற்குப் போவதற்குப் பதிலாக ஆஸ்பத்திரியில் சேர்வதும் உண்டு. மற்றவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துவதும் உண்டு. வாழ்க்கையில் வேகமாகப் போகிறவர்கள் வாழ்க்கையின் முடிவில் தான் இந்த வேகத் தூண்டுதலில் வாழ மறந்து விட்டோம் என்று உணர்கிறார்கள்.

எதுவும் நம்முடைய உண்மையான இயல்புக்கும், உண்மையான தேவைக்கும் ஏற்ற அளவு இருப்பது தான் நமக்கு நல்லது. பொய்களை அஸ்திவாரமாகக் கொண்ட எந்த வாழ்க்கை முறையும் என்றுமே நிரந்தர நிம்மதியைக் கொடுப்பதில்லை. எனவே இந்தப் பொய்களை உலகம் எவ்வளவு தான் விளம்பரப்படுத்தினாலும் ஏமாந்து போகாதீர்கள்.

- என்.கணேசன்

நன்றி: விகடன்

Monday, August 24, 2009

டென்ஷன் வேண்டாமே!


ஒரு சராசரி மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. அவன் ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் பயணம் செய்கிறது. அவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளைஅசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்த செயல்களால் அவன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் அவன் முயற்சி என்று எதுவும் இல்லை.

ஆனால் அவன் முயற்சி எடுத்து நடத்தும் சில்லறை வேலைகளால் அவன் களைத்துப் போகிறான். தளர்ச்சி அடைகிறான். டென்ஷனாகிறான். எப்போது தான் இந்த வேலைக்கெல்லாம் ஓய்வோ என்று அங்கலாய்க்கிறான். தான் வேலை செய்வது அடுத்தவருக்குத் தெரியாமல் போனால், அடுத்தவர்கள் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளா விட்டால் கோபப்படுகிறான். 'நான் போனால் தான் என்னருமை தெரியும்' என்று பயமுறுத்திப் பார்க்கிறான்.

இயற்கையாக நடக்கும் வேலைகளுக்கும் மனிதனாகச் செய்கிற வேலைகளுக்கும் இடையே எத்தனை வித்தையாசம் பாருங்கள். இயற்கை பிரமிக்க வைக்கும் அளவு வேலைகளை மனித உடலில் செய்ய வைத்தும் ஏற்படாத களைப்பும், டென்ஷனும் மனிதனாகச் செய்யும் அற்ப வேலைகளால் வந்து விடுகின்றனவே
அது ஏன்? ஆராய்வோமா?

இயற்கை தான் செய்யும் வேலைகளைக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. அதனால் ஏன் தினம் செய்ய வேண்டும் என்ற கேள்வி அங்கு எழுவதில்லை. மனிதன் துரும்பை நகர்த்தினால் கூட கணக்கு வைத்துக் கொள்கிறான். (மேலே சொன்ன புள்ளி விவரத்தைப் படித்தால் படித்து முடித்தவுடனே 'ஐயோ இந்த அளவு வேலைகள் என் உடல் செய்கிறதா?' என்று எண்ணியே கூட களைத்துப் போகக் கூடும்). அதனால் அந்தக் கணக்கே களைப்புக்கும் டென்ஷனுக்கும் காரணமாகி விடுகிறது.

இயற்கை எதையும் எதனோடும் ஒப்பிடுவதில்லை. உதாரணமாக மூளை 'நான் எழுபது லட்சம் செல்கள் பயன்படுத்துகிறேன். தசைகள் எழுநூற்று ஐம்பது தான் பயன்படுத்துகின்றன' என்று ஒப்பிடுவதில்லை. ஏனிந்த அநியாயம் என்று குமுறுவதில்லை. அதனால் டென்ஷனாவதில்லை.

இயற்கை தன் செயல்களை சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே நினைக்கிறான். இயல்பாக, மகிழ்ச்சியாகச் செய்யும் எந்த செயலும் அவனுக்கு களைப்பையும் டென்ஷனையும் உண்டாக்குவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சுமையாக எண்ணி புலம்பலுடன் செய்யும் செயல்கள் களைப்பையும் டென்ஷனையும் ஏற்படுத்தாமல் இருந்தால் அது தான் அதிசயம்.

இயற்கை எந்த செயலையும் அடுத்தவர் பார்வைக்காகச் செய்வதில்லை. அதனால் அது அடுத்தவர் கருத்துகளை எதிர்பார்த்து இருப்பதில்லை. அதன் செயல்களின் தரம் சிறப்பாகவும், நிலையான தன்மையுடையதாகவும் இருக்கின்றது. மனிதர்கள் பலர் அடுத்தவர் பார்க்க மாட்டார்கள் என்றால் ஒரு நல்ல செயலை செய்யவே முற்படுவதில்லை. செயல்களை செய்வதை விட அடுத்தவர்கள் கவனிக்கிறார்களா, பாராட்டுகிறார்களா, என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் நினைப்பதில் அதிக நேரமும், அதிக கவனமும் மனிதர்கள் செலவிடுவதே டென்ஷனுக்கு அடிப்படைக் காரணமாகி விடுகிறது. விளைவு, குறைவான செயல்கள் நிறையவே டென்ஷன் என்றாகி விடுகிறது.

இயற்கையின் செயல்களில் தேவையான ஒழுங்குமுறை இருக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் செயல்களில் அது இருப்பதில்லை. அவர்களுடைய தவறான மனநிலைகள் அந்த ஒழுங்கின்மைக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

இயற்கை செய்யத் தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் இயற்கை செய்து முடிக்கிறது. மனிதன் செய்கின்ற பல செயல்கள் தேவையில்லாததாகவும் அவனுக்குப் பயன் தராதவையாகவும் இருக்கின்றன. அதனால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை. எனவே மீதியுள்ள குறைவான நேரத்தில் அனைத்தையும் செய்ய முயலும் போது களைப்பும் டென்ஷனும் தோன்றுவது இயல்பேயல்லவா?

இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. செய்ய வேண்டிய செயல்களை அமைதியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக முழுக் கவனத்தோடு செய்யும் போது நாம் ஒவ்வொரு நாளும் டென்ஷனில்லாமல், தளர்ச்சி இல்லாமல் சிறப்பாக எத்தனையோ செய்து முடிக்க முடியும். முன்பு சொன்ன இயற்கையின் செயல்களுக்கும், மனித செயல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை கவனித்தால் ஒரு பெரிய உண்மை விளங்கும். டென்ஷன் எப்போதுமே செய்கின்ற செயல்களால் இல்லை. செயல்களைப் பற்றிய எண்ணங்களாலேயும் முறைகளாலேயும் தான் ஏற்படுகின்றது.

யாரோ ஒரு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகின்றது. "பிரபஞ்சம் நொடியில் பல நட்சத்திரங்களை சத்தமில்லாமல் உருவாக்கி வருகின்றது. ஆனால் கோழி முட்டை இடுவதற்கு முன்பு போடும் சத்தம் ஊரையே தட்டி எழுப்புகிறது".

நாம் கோழியாக இருக்க வேண்டாம். பிரபஞ்சமாக இருந்து அமைதியாக நட்சத்திரங்களை உருவாக்குவோம். மேலே குறிப்பிட்ட இயற்கையின் வழிமுறைகளைப் பின்பற்றி செயல்புரிய கற்றுக் கொண்டால் டென்ஷனே ஏற்படாது. களைத்துப் போகாமல் நாம் செய்ய முடியும் சாதனைகள் கற்பனைக்கும் அடங்காது.

- என்.கணேசன்

Wednesday, August 19, 2009

உங்கள் வேலையைப் பாருங்கள்!


கவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் "சுதர்மம்" என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். மிக அழகான பொருள் பொதிந்த சொல் அது. சுதர்மம் என்பது ஒருவனுடைய பிறப்பாலும், இருப்பாலும், தன்மையாலும் நிர்ணயமாவது. அதன்படி ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். அது தானே இயற்கை என்று தோன்றினாலும் மனிதர்கள் பல சமயங்களில் அப்படி நடந்து கொள்வதில்லை.

அர்ஜுனன் மிகச்சிறந்த வீரன். குருக்ஷேத்திரப் போருக்கு முன் எத்தனையோ போர்களை நடத்தியிருக்கிறான். எத்தனையோ பேர்களைக் கொன்றிருக்கிறான். அப்போதெல்லாம் தோன்றாத ஒரு கலக்கம் குருக்ஷேத்திரப் போரில் அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது. காரணம் எதிரணியில் தாத்தா பீஷ்மர், குரு துரோணர், குலகுரு கிருபாச்சார்யர் போன்றவர்கள் இருப்பது தான். அவர்களைக் கொன்று விட நேரிடும் என்பது அவனுக்குப் பெரிய பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. எத்தனையோ போர்களில் எத்தனையோ பேரைக் கொன்று குவித்த அவனுக்கு தர்மத்தை நிலைநாட்டும் இந்தப் போரில் திடீர் என்று ஞானோதயம் வருகிறது. "போர் நல்லதல்ல". பிறப்பாலும், இருப்பாலும், தன்மையாலும் வீரனான அவனுக்கு இப்போது போரை விட துறவறம் கூட நல்லது தான் என்ற சிந்தனை வருகிறது. அவனுடைய இந்த சிந்தனை உண்மையான ஞானத்தால் எழுந்திருந்தால், உண்மையான தன்மையால் அமைந்திருந்தால் ஸ்ரீகிருஷ்ணர் அவனுக்குப் போரை உபதேசித்திருக்க மாட்டார். இப்போது விட்டால் காலமெல்லாம் துறவியாக வாழக்கூடியவனுமல்ல அவன். உள் நோக்கத்தோடு, போலியாய் தோன்றும் இது போன்ற வாய் ஜாலங்களை இகழ்ந்து அவர் இது உன் தர்மமல்ல என்று அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்.

இப்படி பிரச்சினைகள் வரும் போது பலருக்கும் தங்கள் தர்மத்தை விட அடுத்தவர்கள் தர்மம் மிகவும் மனம் கவர்வதாய் தோன்றக்கூடும். அவன் வேலையைச் செய்வதை விட அடுத்தவர் வேலையைச் செய்வது சுலபமாக தெரியக்கூடும். இது அக்கரை பச்சை மனோபாவமே.

இந்த மனோபாவத்தை மிக அழகாக சில வருடங்களுக்கு முன் வெளிவந்த மலையாளத் திரைப்படமான "சிந்தாவிஷ்டயாய சியாமளா"வில் கதாசிரியரும், நடிகருமான சீனிவாசன் காட்டியிருக்கிறார். சோம்பேறியான கதாநாயகனுக்கு தன் ஆசிரியர் வேலை போரடித்துப் போகிறது. சன்னியாசிகள் எவ்வளவு நிம்மதியாக வேலையில்லாமல் சும்மா இருக்கிறார்கள் என்று தோன்ற மனைவியையும், குழந்தைகளையும் விட்டு ஓடிப் போகிறான். ஒரு துறவிகள் மடத்தில் போய் சேர்கிறான். அங்கும் மற்றவர்கள் ஆசிரமத்தை சுத்தம் செய்வது, தோட்டத்தைப் பராமரிப்பது, சமையல் செய்வது போன்று ஏதாவது வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இவனோ ஒரு வேலையும் செய்யாமல் தியானம் செய்கிறேன் பேர்வழி என்று காலத்தைக் கழிக்கிறான். அவனை ஒரு சிலர் கேலி செய்கிறார்கள். கோபப்படுகிறானே ஒழிய திருந்துவதில்லை. சில நாட்கள் பொறுத்துப் பார்த்த மடத்தலைவர் ஒருநாள் அவனை அழைத்து பிடித்த ஏதாவது ஒரு வேலையை மேற்கொள்ளுமாறு சொல்கிறார். இவன் எனக்குப் பிடித்த வேலையே தியானம் செய்வது தான் என்கிறான். தியானம் ஒரு வேலையல்ல என்றும் வேலையில் இருந்து ஓடி ஒளிவது துறவறம் அல்ல என்றும் புத்திமதி சொல்ல அங்கிருந்தும் கிளம்புகிறான். கடைசியில் எப்படி திருந்தி மனைவி மக்களுடன் சேர்கிறான் என்பது மீதிக் கதை. நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இது பல மனிதர்களின் போக்கைக் கோடிட்டுக் காட்டுகிறது.

பிறப்பாலும், இருக்கும் இடத்தாலும் சில கடமைகள் நமக்கு வருகின்றன. மகனாக, மகளாக, ஒரு பிரஜையாக, சமூகத்தின் அங்கமாக நமக்கு பல கடமைகள் வந்தமைகின்றன. நாம் மேற்கொள்ளும் பொறுப்புகளால் சில கடமைகள் ஏற்படுகின்றன. நமது அடிப்படைத் தன்மையாலும், திறன்களாலும் சில கடமைகள் உருவாகின்றன. அதுவே இந்த உலகத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. அந்தக் கடமைகளை, அந்த வேலைகளை எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதிலே தான் வாழ்க்கையின் வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது.

வினோபா பாவே சுதர்மத்தை ஒருவனின் தாயிற்கு ஒப்பிடுகிறார். தாயை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. நம் பிறப்பிலேயே அது தீர்மானிக்கப்பட்டு விடுகிற விஷயம். இந்தத் தாய் பிடிக்கவில்லை என்று இன்னொரு தாயை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. நல்லதோ, கெட்டதோ இந்தப் பிறப்பில் அவர் தான் நம் தாய். சுதர்மமும் அப்படியே என்கிறார் அவர்.

சுதர்மத்தைக் கடைபிடிக்கத் தவறும் போது நாம் பிறப்பின் அர்த்தத்தையே அலட்சியப்படுத்தி விடுகிறோம் என்று பொருள். அடுத்தவர் தர்மத்தைக் கடைபிடிக்கும் போது, நம் வேலையை விட்டு அடுத்தவர் வேலையைச் செய்யும் போது நாம் வேறு யாராகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாகிறது. உயிருள்ள வரை, உலகத்திலிருந்து ஏதாவது பெற்றுக் கொண்டிருக்கும் வரை சுதர்மத்தின் மூலமாகவே நாம் உலகிற்கு திருப்பித் தர வேண்டியிள்ளது.

எனவே சுதர்மம் என்னும் உங்கள் வேலையைப் பாருங்கள். ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்காதீர்கள். செய்யும் வேலை உங்களுடையது தானா என்று அவ்வப்போது பார்த்துக் கொள்வது நல்லது. எது சுதர்மம் என்ற குழப்பம் அர்ஜுனனுக்கு எழுந்தது போல் சில சமயங்களில் உங்களுக்குள்ளும் எழக்கூடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மனதை அமைதியாக்கி உங்கள் அந்தராத்மாவின் குரலைக் கேளுங்கள். அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் வழிகாட்டியது போல் உங்களுக்கு உங்கள் அந்தராத்மா வழிகாட்டும். உங்களுக்கு அதுவே பகவத்கீதை.

-என்.கணேசன்

நன்றி:விகடன்

Friday, August 14, 2009

இனியொரு சுதந்திரம்!


ங்கிலேயரின் அடிமைச் சங்கிலியிலிருந்து நாம் விடுபட்டு  ஆண்டுகள் பல கழிந்து விட்டன. அதை வருடாவருடம் ஆக்ஸ்ட் 15ஆம் தேதி அன்று சுதந்திர தினமாகக் கொண்டாடும் நாம் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறோமா?

ஒரு அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபட்ட நாம் இன்று எத்தனை அடிமைச் சங்கிலிகளில் கட்டுண்டிருக்கிறோம்? ஜாதி, மதம், மொழி, அறியாமை, பயம் என்று எத்தனை அடிமைச் சங்கிலிகள் நம்மைக் கட்டிப் போட்டிருக்கின்றன! அந்த அடிமைச் சங்கிலிகளை நாம் ஆபரணங்களாக அல்லவா அணிந்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அன்று மகாகவி பாடிய பாடல் இன்றும் நம் நிலைக்குப் பொருத்தமாக அல்லவா இருக்கிறது?

கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே
நாளில் மறப்பாரடி!

இன்றும் கூடி வாய் கிழியப் பேசுவதில் நம்மை மிஞ்ச ஆளுண்டோ? எத்தனை தான் அரசியல்வாதிகளிடம் ஏமாந்தாலும் எத்தனை தான் அவர்களிடம் அடிபட்டாலும் நாம் கோபித்துக் கொண்டதுண்டோ? அரசியலில் மாற்றம் கொண்டு வர முயன்றதுண்டோ? அந்தப் பாடலில் பாரதி ஊமைச்சனங்களடி, வாய்ச்சொல்லில் வீரரடி என்றெல்லாம் சூட்டிய பட்டங்களுக்கு நாம் இன்றும் பொருத்தமானவர்களே அல்லவா? எத்தனை தான் கல்வியிலும் விஞ்ஞானத்திலும் முன்னேறினாலும் அத்தனையும் நம் இரத்தத்தில் ஊறிய அடிமைத்தனத்தை அகற்றி விடவில்லையே.

நாம் கொஞ்சம் விழித்துக் கொள்வது போல் தெரிந்தால் அரசியல்வாதிகள் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற சங்கிலிகளை வலையாக வீச, நாம் அவர்கள் எதிர்பார்ப்பது போல் சிக்கி நம்மை நாமே கட்டி சிறைபட்டுக் கொள்கிறோமே இதுவா சுதந்திரம்? நள்ளிரவில் (இருட்டில்) பெற்றதால் சுதந்திரம் என்னதென்று நமக்குத் தெளிவாகத் தெரியவில்லையோ?

ஒருவனிடம் விடுபட்டு இன்னொருவனிடம் மாட்டிக் கொள்வதற்குப் பெயர் சுதந்திரமா? வெள்ளையரிடம் விடுபட்டு இன்று கொள்ளையரிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறோமே இது சுதந்திரமா? இன்றைய ஏழைப்பங்காளர்களிடம் கோடி கோடிகள் கொடுத்து விட்டு நாம் நித்திய தரித்திரர்களாக நிற்கிறோமே இது என்ன சுதந்திரம்? உரிமையோடு பெற வேண்டிய எத்தனையோ பெரிய விஷயங்கள் இங்கிருக்க ஆட்சியாளர்கள் பிச்சையாகப் போடும் சில்லறை இலவசங்களில் புளங்காகிதம் அடைகிற சுதந்திரம் அல்லவா இன்று நமக்கு இருக்கிறது?

கடைநிலையில் உள்ள ஒரு வார்டு கவுன்சிலரே கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால் மேலேயுள்ள மற்றவர்கள் எல்லாம் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று செவ்வாய் கிரகத் தகவலைச் சொல்வது போல சிறிதும் பாதிக்கப்படாமல் சொல்கிறோமே நமக்கு இருப்பதாகச் சொல்லும் சுதந்திரம் கை கொட்டிச் சிரிக்கிற சத்தம் கேட்கவில்லையா? எவன் எத்தனை கொள்ளையடித்துக் கொண்டிருந்தாலும் கொள்ளை போவது நம் பணம், நம் நலனுக்காக செலவாக வேண்டிய பணம், என்ற பிரக்ஞை இல்லாத ஜடங்களாக வேடிக்கை பார்க்கிறோமே, யார் சம்பாதிக்கவில்லை என்று வேதாந்தம் பேசுகிறோமே, இதை எங்கு போய் சொல்லி அழ?

அடிமையாக இருக்கிறோம் என்று அறிந்தவன் தான் சுதந்திரத்திற்காகப் போராட முடியும். ஆனால் அதையே அறியாதவன் அடிமையாகவே இருந்து விடுவதில் வியப்பென்ன இருக்கிறது? இந்தியர்களான நாம் உறக்கத்தில் கூட இல்லை. உறங்குபவன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விழிப்பது உறுதி. நாம் கோமாவில் அல்லவா இருக்கிறோம். ஜனநாயகத்தினை ஓட்டும் டிரைவர் சீட்டில் நாம் இல்லை. பணநாயகம் ஜனநாயகத்தை ஓட்ட பின் சீட்டில் கோமாவில் பரிதாபமாய்ப் படுத்திருக்கிறோம். ஜனநாயகமோ பள்ளத்தில் ப்ரேக் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

கீதாஞ்சலியில் தாகூர் எப்படிப்பட்ட சுதந்திர சூழ்நிலையில் இந்த தேசம் விழித்தெழ வேண்டும் என்று பிரார்த்தித்தாரோ அந்தப் பிரார்த்தனை நம்முடையதாகவும் இருக்கட்டும்.

எங்கே இதயம் அச்சமின்றி இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ,
எங்கே அறிவு பூரண சுதந்திரமாய் உள்ளதோ,
எங்கே உலகம் உள்ளக குறுகிய சுவர்களால் துண்டாடப்படவில்லையோ,
எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து வருகின்றனவோ,
எங்கே விடாமுயற்சி தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி கரங்களை நீட்டுகிறதோ,
எங்கே தெளிந்த அறிவோட்டம் உயிரற்ற பழக்கம் என்ற பாலைமணலில் வழிதவறிச் செல்லவில்லையோ,
எங்கே உன்னால் இதயம் பரந்த நோக்கத்துடனும், செயலுடனும் வழிநடத்தப் படுகிறதோ,
அங்கே அந்த சுதந்திர சொர்க்கத்தில் எந்தையே என் நாடு விழிப்புறுக!

எத்தனையோ தியாகிகள் வியர்வையாலும், கண்ணீராலும், இரத்தத்தாலும், ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் வாங்கித் தந்த சுதந்திரம் இது. இதை நாம் வியர்த்தமாக்கி விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. நம் அடிமைச் சங்கிலிகளின் பூட்டிற்கான சாவியை ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கூட்டத்திற்கு மாற்றித் மாற்றித் தருவது சுதந்திரம் அல்ல. அடிமைச் சங்கிலிகளையே உடைத்தெறிந்து விடுபடுவது தான் சுதந்திரம். எனவே இனியும் தாமதியாது விழித்தெழுவோம். பெறுவோம் இனியொரு சுதந்திரம்!

-என்.கணேசன்
நன்றி:விகடன்
(சுதந்திர தின சிறப்புப் பக்கத்திற்காக எழுதப்பட்டது)

Monday, August 10, 2009

ஒரு கேள்வி ஏற்படுத்தும் மாற்றம்


நம் இன்றைய வாழ்க்கை நேற்றைய சிந்தனை மற்றும் செயல்களின் விளைவு. நேற்று என்ன விதைத்தோம் என்பதை விவரிக்கும் அறுவடையே இன்றைய வாழ்க்கை. எப்படி இருந்திருக்கிறோம், எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்பதை நாம் சொல்லாமலேயே நம் வாழ்க்கை உரத்துச் சொல்லும்.

விதைப்பவன் யார் கண்ணிற்கும் தெரிவதில்லை என்று நினைத்து கோணல் மாணலாக இன்று விதைத்துச் செல்லலாம். ஆனால் நாளை வளரும் பயிர் அதைக் கண்டிப்பாகக் காண்பித்துக் கொடுக்கும்.

நம் வாழ்க்கைக்கு நாமே பிரம்மாக்கள். நமக்கு அதை எப்படியும் உருவாக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் உருவாக்கிய பின் அதை நாமே சந்தித்தாக வேண்டும். நாமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நாம் உருவாக்கியவைகளிடமிருந்து ஓடி ஒளியும் வசதி நமக்கு அளிக்கப்படவில்லை. எனவே நாம் நம் வாழ்க்கையை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதில் மிக அதிகக் கவனம் வேண்டும்.

நம் நாட்டில் 'கர்மா' என்ற வார்த்தை மிகப் பிரபலம். அந்த வார்த்தையை இப்போதெல்லாம் மேலை நாடுகளிலும் அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கர்மா என்பது செயல் என்பது மட்டுமல்ல. விளைவைத் தரும் செயல் என்று அதற்கு விளக்கம் தருவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எந்த செயலும் விளைவைத் தராமல் இருப்பதில்லை என்பதை நினைவு படுத்தும் சொல்லாக 'கர்மா'வைச் சொல்லலாம்.

ஒருவன் இன்று தீய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலர் 'எல்லாம் அவன் கர்மா' என்று சொல்வதுண்டு. நேற்றைய செயலின் விளைவை இன்று அனுபவிக்கிறான் என்பது பொருள்.

என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் நேற்றைய கர்மாவை இன்று அனுபவிக்காமல் தடுத்து விட முடியாது என்பது மாபெரும் உண்மை. இது சிலருக்கு வருத்தத்தை அளித்தாலும் இதில் மறைந்திருக்கும் இன்னொரு உண்மை எவரையும் ஆசுவாசப்படுத்தும். நாளை நன்மையைப் பெற வேண்டுமென்றால் அதற்கேற்ப நல்ல செயல்களை நல்ல முறையில் இன்று செய்தால் போதும் என்பது தான் அது. நாளை எந்த விதமான பலன்கள் நம் வாழ்க்கையில் வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கேற்ப இன்றைய செயல்கள் அமைய வேண்டும்.

உங்களது இன்றைய வாழ்க்கை முறை, சிந்தனை, செயல்கள் எல்லாவற்றையும் அமைதியாக அலசுங்கள். இதே போல் தொடர்ந்து அவை இருந்தால் இனி ஐந்து வருடம் கழித்து நீங்கள் எப்படியிருப்பீர்கள் என்று என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சாதாரண அறிவுத்திறன் இருக்கும் மனிதர்களுக்கு இப்படியே போகும் வாழ்க்கை ஓட்டம் எங்கு போய் முடியும் என்ற கேள்விக்குப் பதிலைப் பெறுவது கஷ்டமல்ல. கிடைக்கும் பதில் உங்களுக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறதாக இருந்தால் மிக நல்லது. இப்படியே வாழ்க்கையைத் தொடருங்கள். (இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க வேண்டிய அவசியம் இனி உங்களுக்கு இல்லை.)

ஆனால் பெரும்பாலானோருக்குக் கிடைக்கிற பதில் திருப்திகரமாக இருக்காது. இந்தக் கேள்வி பலரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பக் கூடும். பலரும் வாழ்க்கை ஒரு நாள் திருப்திகரமாக மாறும் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார்களே ஒழிய அது எப்படி நடக்கும் என்கிற ஞானமோ, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையோ அவர்களிடம் இருப்பதில்லை. யாராவது மாற்றினால் ஒழியத் தானாக எதுவும் மாறுவதில்லை என்கிற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. மற்றவர்களாகப் பார்த்து மாற்றப்படும் வாழ்க்கை நம் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.

இப்போதைய போக்கிலேயே உங்கள் எதிர்காலமும் இருக்கப் போவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் நீங்கள் இன்றே மாற ஆரம்பிப்பது நல்லது. உங்களுக்குப் பிடித்த நிலைமைக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகும் கர்மாக்களில் ஈடுபடுவது அவசியம்.

உடல்நிலை, மனநிலை, பொருளாதாரநிலை இம்மூன்றிலும் நீங்கள் இனி ஐந்து வருடங்கள் கழித்து எப்படி இருந்தால் நிறைவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மூன்றிலும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுங்கள். இனி அந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தேவையான செயல்களைப் புரிவதில் முழுமனதோடு ஈடுபடுங்கள்.

நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறும் நாள் வரை நீங்கள் தினமும் ஒரு கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். "நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும், நான் செய்து கொண்டிருக்கும் செயல்களும் என்னை என் இலக்குகள் நோக்கி அழைத்துச் செல்பவையாக இருக்கின்றனவா?" மாற வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகவும், உண்மையாகவும் இருக்கும் வரை இந்த ஒரு கேள்வி தேவையான சிறு சிறு மாற்றங்களை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தி பொறுப்புடன் வாழ வைக்கும். சிறப்பாகச் செயல்பட வைக்கும். கடைசியில் நீங்கள் ஆசைப்பட்ட பெரும் மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதுவரை இந்தக் கேள்வியை தினமும் கேட்டுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்.

- என்.கணேசன்
நன்றி: விகடன்

Wednesday, August 5, 2009

நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்


"நம் உடலில் உள்ள செல்கள் நம் எண்ணங்களை சதா ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. நம் எண்ணங்களால் அந்த மாறவும் செய்கின்றன. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் மீதும் மனதின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது" என்று பிரபல மருத்துவ எழுத்தாளர் தீபக் சோப்ரா கூறுகிறார்.

அதை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நம் மனநிலைகளுக்கும் இடையே நிறையவே தொடர்பு இருக்கின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உதாரணமாக, பக்கவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மனதில் நிறைய துக்கத்தைஅடக்கி வைத்திருக்கிறார்கள் அல்லது மன அழுத்தத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலானோர் மாரடைப்புக்கு டென்ஷனான வாழ்க்கை முறை காரணமாக இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கேன்சருக்கும் கூட கவலையும், மன உளைச்சலும் காரணமாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொடர்ச்சியாக இருக்கும் இது போன்ற மனநிலைகள் பெரிய நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்றால் குறுகிய காலத்திற்கு இருக்கும் மனநிலைகள் கூட தலைவலி, வயிற்று வலி, கழுத்து வலி, இரத்த அழுத்தம் போன்ற உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.

மனநிலைகளுக்கும் நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறித்து சென்ற ஆண்டு கலிபோர்னியா-லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைகழகம் நடத்திய ஒரு பெரும் ஆராய்ச்சியில் இதன் காரணங்களை ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை சுவாரசியமானது. பல பக்கங்கள் கொண்ட அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை முடிந்த வரை எளிமையாக, சுருக்கமாக இங்கு தருகிறேன்.

ஒவ்வொரு செல்லினுள்ளும் டெலொமெர் (telemere) என்ற ஒரு நுண்ணிய கடிகாரம் உள்ளது. அது ஒவ்வொரு முறை செல் இரண்டாகப் பிரியும் போதும் மீண்டும் குறுகி சிறியதாகிறது. தான் பெற்றிருந்த ஆரோக்கியத்திற்குத் தேவையான வழிமுறைத் தகவல்களை சிறிது இழக்கிறது. ஆனால் செல்லினுள் இருக்கும் டெலொமெரெஸ் என்ற என்சைம் (telomerase enzyme) அந்த இழப்பினை சரிசெய்து அதன் பழைய அளவினையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அந்த டெலொமெரெஸின் வேலையே ரிப்பேர் செய்து செல்லையும் அதன் மூலம் உடல்நலத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது தான்.

ஆனால் மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை அதிகமாக எழும் போது நிலைமையை சமாளிக்க உடலில் கார்ட்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோனை அதிகம் தயாராகிறது. அவை அதிக காலம் இரத்த ஓட்டத்தில் தங்கும் போது டெலொமெரெஸை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. அதன் காரணமாக செல்களின் பிரிவினை நடந்து கொண்டேயிருக்கையில் டெலொமெர் கடிகாரத்தின் அளவும், அதனிடம் உள்ள ஆரோக்கியத்திற்குத் தேவையான வழிமுறைத்தகவல்களும் குறைந்து கொண்டே வரும் போது அதை சரி செய்யும் ரிப்பேர் வேலை நடைபெறுவதில்லை. அதனால் நோய்க்கிருமிகள் உடலைத் தாக்க ஆரம்பிக்கும் போது தடுத்துப் போராடவோ, காத்துக் கொள்ளவோ போதிய சக்தியோ, ஞானமோ செல்களில் இல்லாமல் நம் உடல் நிராயுதபாணியாக நிற்க வேண்டி வருகிறது. விளைவு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

மனநலன் தொடர்ந்து சீர்கெடும் போது மனவியாதிகள் மட்டுமல்லாமல் உடல் வியாதிகளும் நம்மை ஆட்கொள்ள வருகின்றன என்பது தெளிவு. இன்றைய அவசர வாழ்க்கை முறை, சக்திக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் செயல்பாடுகள், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை முதலானவையே இந்த
காலத்தில் நம் மனநலம் சீர்கெட அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. நம் இயல்புக்கும், சக்திக்கும் ஏற்ப முறையாக வாழ்வை அமைத்துக் கொள்ளும் போது நம் மனநலம் பெருமளவு சீர்படுகிறது.

மனநிலை ஆரோக்கியமாக இருந்தால் நோயே வராது என்பதல்ல இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கருத்து. வந்த நோய் வேகமாக நீங்குவதும், நிரந்தரமாகத் தங்கி விடுவதும் பெரும்பாலும் நம் மனநிலைகளைப் பொறுத்தே என்று தான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மனதை ஆரோக்கியமாக வைத்திருப்போமாக!

- என்.கணேசன்

நன்றி: விகடன்

Saturday, August 1, 2009

நா காக்க!


அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது ஒரு நாள் சட்டசபையில் ஒரு கேள்வி எழுந்தது. அன்றைய நாட்களில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் அதிகம் எழுதப்பட்டு வந்த திருக்குறளைப் பற்றிய கேள்வி அது.

"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
என்று எழுதப்பட்டிருப்பது யாருக்காக, அதில் பணி புரியும் ஊழியர்களுக்கா அல்லது அதில் பயணிக்கும் பயணிகளுக்கா?" என்று ஒரு உறுப்பினர் நகைச்சுவையாகக் கேட்டார்.

யாருக்காக என்று சொல்வார் என்று எல்லோரும் ஆவலாகக் காத்திருக்க அண்ணா அமைதியாகச் சொன்னார். "யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காகவும் தான் எழுதப்பட்டிருக்கிறது"

கட்டுப்பாடில்லாத நாக்கு ஒருவனுக்கு ஏற்படுத்தும் துன்பங்களும், பிரச்னைகளும் கணக்கில் அடங்காதவை. எனவே வேறெதைக் கட்டுப்படுத்த முடியா விட்டாலும் நாக்கையாவது கட்டுப்படுத்தச் சொல்கிறார் வள்ளுவர். இதை அண்ணா சொல்வது போல நாக்கு உள்ள அனைவரும் நினைவில் வைத்திருப்பது நல்லது.

ஒருசில நிமிடங்கள் நாக்கை அடக்கி வைக்கத் தவறியதன் பலனை ஆயுள் முழுவதும் அனுபவிக்கும் மனிதர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு மனிதரை நான் நன்றாக அறிவேன். அவர் ஒரு சௌகரியமான வேலையில் நல்ல சம்பளத்துடன் இருந்தார். படிப்பறிவு இல்லா விட்டாலும் நாணயமானவர் என்பதால் அவருடைய முதலாளி அவருக்கு நல்ல சம்பளத்துடன் வேண்டிய மற்ற வசதிகளும் செய்து தந்து கொண்டிருந்தார். ஒரு முறை முதலாளியிடம் ஏதோ அவர் பேசிக் கொண்டிருந்த போது பேச்சு சற்று காரசாரமாகியது. அப்போது அவர் நாக்கைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் அவருடைய வார்த்தைப் பிரயோகம் மற்றவர்கள் முன்னிலையில் சற்று எல்லை மீறிப் போய் விட முதலாளி அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டார். பின் எத்தனை மன்றாடியும் அந்த முதலாளி அவரை மன்னிக்கவில்லை. வேலைக்கு மீண்டும் சேர்க்க உறுதியாக மறுத்து விட்டார். தன் ஐம்பதாவது வயதில் வேலையை இழந்த அந்த மனிதர் மீண்டும் ஒரு நல்ல வேலை கிடைக்காமல் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஓரிரு சொற்களில் நல்லதொரு வாழ்க்கையை ஒருவர் தொலைத்து விடக்கூடும் என்பதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம்.

ஒரு தொழிலதிபரின் மகனின் நாக்கு தந்தைக்குப் பல லட்சங்களை தண்டமிட வைத்த ஒரு நிகழ்ச்சியும் எனக்குத் தெரியும். அந்தத் தொழிலதிபரின் மகன் கர்வம் மிகுந்தவர். ஒரு முறை விற்பனை வரி அதிகாரி ஒருவர் அவரது நிறுவனத்திற்கு விஜயம் செய்த போது தொழிலதிபர் இருக்கவில்லை. மகன் தான் இருந்தார். அந்த அதிகாரி ஏதோ கேட்க, மகன் அலட்சியமாக எதோ பதில் சொல்லியிருக்கிறார். கோபத்தில் அந்த அதிகாரி ஏதோ மிரட்ட மகன் "நீ உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள்" என்று மீண்டும் அலட்சியமாகப் பதில் சொல்ல அந்த அதிகாரி பழைய ரிக்கார்டுகளை எல்லாம் தோண்டிப் பார்த்து லட்சக்கணக்கில் வரி விதித்ததுடன் அதை மாற்ற முடியாத அளவுக்கு ஆதாரங்களை மேலதிகாரிகளுக்கு அனுப்பியும் வைத்து விட்டார். அந்தத் தொழிலதிபர் அந்தத் தொகையைக் குறைக்க எத்தனையோ முயன்றார். முடியாமல் போக அவர் வரியைக் கட்ட வேண்டியதாயிற்று. "நான் வருடக்கணக்கில் சேர்த்ததை என் மகன் ஐந்து நிமிடத்தில் அழித்து விட்டான்" என்று அந்தத் தொழிலதிபர் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்ப அவர் மகன் கோபித்துக் கொண்டு போய் சில காலம் தலைமறைவாக இருந்தது தான் வேடிக்கை.

இப்படி ஒவ்வொருவரும் எத்தனையோ நிகழ்ச்சிகளை அறிந்திருக்கக் கூடும். முக்கியமாக குடும்பத்திற்குள் பல பிரச்னைகள் வெடிப்பதற்குக் காரணம் கட்டுப்பாடில்லாத நாக்கு தான் என்பதில் சந்தேகமே தேவையில்லை. வெளியேயாவது நாக்கு சிறிது கட்டுப்படுத்தப்படுகிறது. குடும்பத்தில் அது பூரண சுதந்திரம் பெற்று விடுவதால் பூசலுக்கும் உரசலுக்கும் முதல் காரணமாகி விடுகிறது. எத்தனையோ விவாகரத்துகள், நீதிமன்றம் வரை போகும் சொத்துத் தகராறுகள் ஆகியவற்றுக்கு அடிப்படைக் காரணமே கட்டுப்படுத்தப்படாத நாக்கு தான்.

ஒருவர் அனலாக இருக்கையில் மற்றவர்கள் வார்த்தைகள் பெட்ரோலாகி விடக்கூடாது. சிறு சிறு பூசல்களும், உரசல்களும் குடும்பத்தினுள் சகஜமே என்றாலும் என்றாலும் திரும்ப அமைதிக்கு வர முடியாத அளவு வார்த்தைப் பிரயோகங்கள் இருந்து விடக்கூடாது. சில வார்த்தைகள் மற்றவர்கள் மனதில் நீங்காத வடுவாகத் தங்கி விடுவதுண்டு. "அவன் அப்படிக் கேட்டது என் உயிர் உள்ள வரை மறக்காது" என்றும் "அவள் அப்படிச் சொன்னதை இப்போது நினைத்தாலும் என் மனம் கொதிக்கிறது என்றும்" என்றும் நிகழ்ச்சிகள் முடிந்து காலம் பல கழிந்த பின்னும் சிலர் சொல்வதை நாம் கேட்கிறோம்.

சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க முடியாத போதும், கோபம் அதிகமாக இருக்கும் போதும் மௌனம் உத்தமம். மற்றவர்கள் முன் தங்களை ஹீரோவாகக் காட்டவும், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று தெரியப்படுத்தவும் காரசாரமாகப் பேசப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் ஏராளம். பொது இடங்களில் நடக்கும் 99 சதவீத அடிதடிகளுக்கு காரணம் கட்டுப்படுத்தாத நாக்கே. இப்படி நாக்கின் திருவிளையாடல்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே திருவள்ளுவர் சொன்னது போல வேறு எதைக் கட்டுப்படுத்தாவிட்டாலும் நாக்கையாவது கட்டுப்படுத்தி நாம் பல பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோமாக!

- என்.கணேசன்