Friday, August 28, 2009

மூன்று பெரிய பொய்கள்


இன்றைய உலகம் மூன்று பெரிய பொய்களைப் பெரிதும் நம்புகிறது. அந்த நம்பிக்கையுடன் இயங்குகிறது. இக்காலத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் அந்தப் பொய்கள் மீதுள்ள நம்பிக்கை தான் என்று கூட சொல்லலாம்.

அந்த மூன்று பெரிய பொய்கள் -

1) அதிகமாக இருப்பதே நல்லது.
2) பெரியதாக இருப்பதே நல்லது.
3) வேகமாக இருப்பதே நல்லது.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நம்பிக்கைகளில் தவறென்ன இருக்கிறது என்று தோன்றலாம். இவையெல்லாம் உண்மையல்லவா என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் தெளிவாக சிந்தித்து ஆராய்ந்தால் நமக்கு உண்மை விளங்கும்.

முதல் பொய்யைப் பார்ப்போம். அதிகமாக இருப்பதே நல்லது, அதிகமாகப் பெற்றிருப்பதே வெற்றி என்கிற எண்ணம். முக்கியமாக பணமும், சொத்துகளும், அதிகாரமும் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு வெற்றி என்ற கருத்து இன்றைய காலத்தில் வேரூன்றி வருகிறது. இன்னும் சொல்லப் போனால் வெற்றியின் அளவே இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

தோன்றுகிற அளவுக்கு அது உண்மை தானா என்று பார்க்க அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எந்த அளவு சந்தோஷமாகவும் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள் என்று தூரத்திலிருந்து பார்க்காமல் அருகே போய்ப் பாருங்கள். இல்லா விட்டால் அவர்களுக்கு மிக அருகே இருப்பவர்களைக் கேளுங்கள். பணம், சொத்து, அதிகாரம் - இந்தப் பட்டியல் நீளுமளவு சந்தோஷம், நிறைவு, நிம்மதி பட்டியல் இருக்கிறதா என்று பாருங்கள். அவர்களுடைய எல்லா வெற்றியும் வெளித் தோற்றத்துடன் நின்று போகிறது என்பது உங்களுக்குப் புரியும்.

அதிகமாக இருப்பவர்களுக்கு இழப்பதற்கும் அதிகமாக இருக்கிறது. எனவே இழந்து விடுவோமோ என்ற பயம் இருப்பதை நிம்மதியாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது என்று கூட சொல்லலாம். பலர் இருப்பதை அனுபவிக்காமல் ஏதோ ஒரு துஷ்ட சக்தியால் பீடிக்கப் பட்டவர்கள் போல் எந்திரத்தனமாக அதை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போகும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் இவ்வளவு இருக்கிறது என்று அடுத்தவருக்குக் காட்டும் முயற்சியின் அளவுக்கு சேர்த்ததை பயன்படுத்துவதற்கான முயற்சி இருப்பதில்லை. அதிகமாக சேரச் சேர பொறாமை பிடித்தவர்கள் கூட்டமும், அதை அபகரிக்க நினைக்கிறவர் கூட்டமும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சமயம் பார்த்துக் காத்திருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியும் வர, நிம்மதி காணாமல் போய் விடுகிறது. இப்போது சொல்லுங்கள்- மிக அதிகம் உண்மையிலேயே சிறப்பானது தானா? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னோர்கள் சொல்வது உண்மையல்லவா?

இரண்டாவதாக, பெரியதாக இருப்பதே நல்லது என்ற பொய். பிரபலமாக இருக்க வேண்டும், எல்லோரும் மிகவும் முக்கியத்துவம் தரும் நிலையில் இருக்க வேண்டும், நாலு பேர் பெருமையாகப் பாராட்டும்படி இருக்க வேண்டும், அதுவே சிறந்த வெற்றி, நல்லது என்கிற இந்த நம்பிக்கையும் மேலோட்டமாகப் பார்த்தால் இதிலென்ன குறை என்று கேட்கத் தோன்றும். மிகப் பிரபலமான மனிதர்கள் பெரும்பாலும் சுதந்திரம் என்ற ஒன்றை போகப் போக இழந்து விடுகிறார்கள். மிகப்பிரபலமான நடிகர், நடிகைகளைப் பாருங்கள். எங்கும் அவர்களைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காமிராக்கள் போகிற பக்கமெல்லாம் காத்துக் கொண்டு இருக்கும். ஆரம்பத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் போது பெருமைப்படும் அவர்கள் பின்னாளில் மற்றவர்கள் கண்ணில் படாமல் தங்கள் இஷ்டப்படி இருக்கப் படாத பாடு பட வேண்டியிருக்கும்.

பெரிய அரசியல்வாதிகளைப் பாருங்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளை வாய் விட்டுச் சொல்ல முடியாதவர்களாய் பல நேரங்களில் இருப்பார்கள். தெரியாமல் சொல்லி விட்டால் அது பெரும்பான்மை மக்களிடம் எதிர்ப்பைக் கிளப்பினால் நான் அப்படி சொல்லவில்லை என்று ஆரம்பித்து ஏதேதோ பிதற்றி அவஸ்தைப் படுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். பின் மறந்து கூட நினைத்தபடி பேசவோ, நடந்து கொள்ளவோ முடியாமல் மற்றவர்கள் நினைக்கிறபடி பேசி, நடந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எத்தனை தான் பணமும், சொத்தும் இருந்தாலும் தங்கள் இஷ்டப்படி செயல்படவோ, பேசவோ முடியாத பிரபலங்கள், பிரபலங்களாக இருப்பதற்கு பெரும்பாலும் சுதந்திரத்தையே விலையாகத் தரவேண்டி வருகிறது.
சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து மனிதன் பெறத்தக்கது தான் என்ன?

மூன்றாவதாக, வேகமே நல்லது என்கிற பொய். இப்போதைய உலகின் மந்திரச் சொல்லே வேகம் (FAST) தான். எதையும் வேகமாகப் பெற வேண்டும், எங்கும் வேகமாகச் செல்ல வேண்டும், எதுவும் வேகமாக மாற வேண்டும்-அதுவே பெருமைக்குரிய விஷயம் என்ற சிந்தனை தான் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஆம்புலன்ஸ் போவது போல் மிகவும் அவசரத்தில் வண்டியோட்டி பல பேருக்கு பல இடைஞ்சல்கள் செய்து கடைசியில் ஒரு பெட்டிக் கடையின் முன் வண்டியை நிறுத்தி சாவகாசமாக சிகரெட்டைப் பற்ற வைத்தபடி வேடிக்கை பார்க்கும் சில இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். சிறிது ஏமாந்தால் சிகரெட்டிற்குப் பதிலாக அந்த இளைஞனே சாம்பலாகப் போயிருக்க எத்தனையோ விபத்து வாய்ப்புகள் இருக்கும் வண்ணம் பறந்து வந்து சாதிப்பது சிகரெட் பிடிப்பது தானா?

எதையும் வேகமாகப் பெற வேண்டும் என்ற ஆவல் பலரை எத்தனையோ பேரை நியாயமற்ற குறுக்கு வழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர் அப்படிக் கிடைக்காத போது தவித்துப் போகிறார்கள். இதனால் வேகமாகக் கிடைப்பதென்னவோ இரத்த அழுத்தமும், நோய்களும் தான். வண்டிகளில் அதிவேகமாகப் போகிறவர்கள் தாங்கள் நினைத்த இடத்திற்குப் போவதற்குப் பதிலாக ஆஸ்பத்திரியில் சேர்வதும் உண்டு. மற்றவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துவதும் உண்டு. வாழ்க்கையில் வேகமாகப் போகிறவர்கள் வாழ்க்கையின் முடிவில் தான் இந்த வேகத் தூண்டுதலில் வாழ மறந்து விட்டோம் என்று உணர்கிறார்கள்.

எதுவும் நம்முடைய உண்மையான இயல்புக்கும், உண்மையான தேவைக்கும் ஏற்ற அளவு இருப்பது தான் நமக்கு நல்லது. பொய்களை அஸ்திவாரமாகக் கொண்ட எந்த வாழ்க்கை முறையும் என்றுமே நிரந்தர நிம்மதியைக் கொடுப்பதில்லை. எனவே இந்தப் பொய்களை உலகம் எவ்வளவு தான் விளம்பரப்படுத்தினாலும் ஏமாந்து போகாதீர்கள்.

- என்.கணேசன்

நன்றி: விகடன்

9 comments:

  1. மூன்று பொய்களையும் அழகாக விவரித்துள்ளீர்கள். படிப்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.

    ReplyDelete
  2. மிக மிக உண்மை. இதை படித்துவிட்டு இனிமேல் நாம் அந்த மூன்று பொய்களையும் நம்பாமல் இனி இருக்கிற வாழ்கையையாவது குறையின்றி வாழ உறுதி எடுத்துக்கொள்வோம்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  3. A good article. Thank you.

    MADHU

    ReplyDelete
  4. A very nice article.

    What you have written is 100% true. However, it is 200% true that we can not get away with these.

    ReplyDelete
  5. // மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நம்பிக்கைகளில் தவறென்ன இருக்கிறது என்று தோன்றலாம்.//

    நீங்கள் இந்த மூன்று கோட்பாடுகளையும் ஒரு கோணத்தில் பார்க்கிறீர்கள்.
    எல்லா கோணங்களிலும் அதாவது 360 டிகிரி அளவில் பார்த்தால், பெரியது, அதிகமாக இருப்பது
    அல்லது வேகமாக செயல்படுவது எல்லாம் மற்றொரு கோணத்தில் சரியே எனவும் தோன்றும்.

    உதாரணமாக, பெரியதாக நினைக்கவேண்டும். சிறியன சிந்தியாதான் என்பதைக் கேட்டிருப்போம்.
    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவம் சொல்கிறது. மனிதர் மனங்கள் மேம்படவேண்டும்
    என்பதைச் சுட்டிக்காட்டிடவே, அக்காலத்துக் கோவில்களெல்லாம் பிரும்மாண்டமாக இருந்தன.
    இன்னொரு கோணத்தில் தன்னுடைய சுயகெளரவத்தையும் தன்னம்பிக்கையும் பெரியதாக
    நினைப்பதில் தவறேதும் இல்லை.

    அதிகமாக இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால், ஆண்டவன் தயவினாலும், நமது கர்ம வினையினாலும்,
    இப்பிறவியிற்கிடைத்த பொருளெல்லாமே மற்றவருக்குதவி செய்வதற்கே எனக்கொண்டு, தன்னை ஒரு
    ட்ரஸ்டியின் மனப்பானமையுடன் செயல்படுபவன், பெரிய்தாகவும் எண்ணுகிறான், தன் அதிகமான பொருளை
    சமூக நலனுக்காகச் செலவு செய்கிறான். மனம் உவந்து தானம் தருகிறான்.

    எந்த ஒரு நாட்டிலும், நாட்டின் தேவைகள் இன்று மட்டுமல்ல, இன்றிலிருந்து, ஒரு 5, 10, 15, 20 ஆண்டுகளில்
    என்னவாக இருக்கும் என்ற ஒரு விஷன் தேவை. இன்றைக்குப் பார்த்துக்கொள்வோம். நாளைப்பாடு
    நாராயணன் செயல் என்றா இருப்பது. ஆகவே, பெரியதாக நினைக்கும்பொழுது அதிகமாக ஆக்கவேண்டும்.
    ஆக்கியதை செல்வும் செய்தல் வேண்டும். ஜவஹர் யோஜனா திட்டங்கள், குறைந்த பட்சம் வேலை வாய்ப்புகள்
    தருவதென்ற திட்டமெல்லாம் பிரும்மாண்டங்கள். திட்டமிடும்போது அன்றையத்தேவைகளுக்கு மட்டுமே
    திட்டமிடாது, சமுதாய எதிர்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு உரிய வகையில் அதிகமான பொருள்
    சேமிக்கவேண்டும், அதை துரிதமாக செயல்படும் வழிகளை ஆய வேண்டும்.

    இன்னொரு கோணத்தில்,
    அதிகமாக இருப்பதை, பெரிய உள்ளம் கொண்டு இருந்தாலும், அதைத் தருவதில் வேகத்தைக் காண்பிக்கவேண்டும்.
    அற்றேம் என்றில்லாது அறம் செய்க எனும் வாசகத்தை நினைவு கொள்க. நாளை செய்வோம் என்பதை இன்றே
    செய், இன்று செய்வோம் என்றிருப்பதை இப்பொழுதே, இக்கணமே செய் என்பார்கள்.

    வேகம் ஒன்று தான் மனித வாழ்வின் முன்னேற்றத்தின் அளவு கோல். பன்றிக்காய்ச்சலுக்கு ஒரு வாக்ஸினேஷன்
    மருந்து வேண்டும். அதை தயார் செய்பவர்கள் அதை வேகமாகச் செய்யவேண்டும். அவர்கள் அதை முறைப்படி
    செய்கிறார்களா என்பதை வேகமாக, அரசாங்கங்கள் கவனிக்கவேண்டும். அந்த மருந்து எல்லா தரப்பு மக்களுக்கும்
    அடைகிறதா என்பதைக் கண்காணிப்பதில் வேகம் வேண்டும்.

    தூங்குக, தூங்கிற் செயற்பால, தூங்கற்க,
    தூங்காது செய்யும் வினை,
    என்பார் வள்ளுவர்.

    தனி மனிதனும் சரி, அரசு அதிகாரிகளும் சரி, அரசோச்சும் மந்திரிகளும் சரி, யாராயிருப்பினும் துரிதமாக‌
    செயல்பட்டால் தான் சமூகத்தின் இன்னல்களைத் துரிதமாகக் களைய முடியும்.

    நீங்கள் எழுதியதைக் குறை கூறுவதாக எண்ணவேண்டாம். நீங்கள் சொல்வதெல்லாம் தற்பொழுது
    வட அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் சில நாடுகள் (ஸ்விட்ஜர்லான்டு) ஆகிய நாடுகளில் பழமைவாதிகள்
    (கன்ஸர்வேடிவ்) போக்கு. அதைத் தவிர்க்கவேண்டும் என்று நோக்குடன் செயற்பாடுகள் நடக்கத் துவங்கியுள்ளன.
    உதாரணமாக, வட அமெரிக்காவில் குறிப்பாக யூ,எஸ்.ஏ யில் ஹெல்த் கேர்.


    தான் என்னும் எண்ணத்தைத் துறந்து மற்றவருக்காக வாழ்பவன்,
    பெரியதாக நினைப்பான். அதிகமாக இருப்பதை மனமுவந்து மற்றோருக்குத் தருவான்.
    இவ்விரண்டிலும் வேகமாக செயல்படுவான்.

    முடிவாக, நீங்கள் சொல்லியது ஒரு கோணப்பார்வை. நாலா பக்கமும் சுழன்று பார்ப்பின்
    வேறு கோணங்களும் தெரிய வரலாம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. Nanbar Subhu Rathinam solvathaiye naanum aatharikiren.

    Thnaggal "paarvai" oru kona paarvaiyaaga maariyathan vinthai ennavo en iniya nanbare.

    Kathiyai kondu marakkari vettavum seiyalaam - Athe kathiyai kondhu kolaiyum seiyalaam allava?

    Antha nilaithaan ithilum enbathu, adiyenin thaalmaiyaana karuthu!

    ReplyDelete
  7. பொய்களை பொய்யில்லாமல் அழகாக விவரித்திருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  8. Dear Mr Ganesh,

    Very good article as well as.

    Best Regards,
    P.Dhanagopal

    ReplyDelete