ஆங்கிலேயரின் அடிமைச் சங்கிலியிலிருந்து நாம் விடுபட்டு ஆண்டுகள் பல கழிந்து விட்டன. அதை வருடாவருடம் ஆக்ஸ்ட் 15ஆம் தேதி அன்று சுதந்திர தினமாகக் கொண்டாடும் நாம் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறோமா?
ஒரு அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபட்ட நாம் இன்று எத்தனை அடிமைச் சங்கிலிகளில் கட்டுண்டிருக்கிறோம்? ஜாதி, மதம், மொழி, அறியாமை, பயம் என்று எத்தனை அடிமைச் சங்கிலிகள் நம்மைக் கட்டிப் போட்டிருக்கின்றன! அந்த அடிமைச் சங்கிலிகளை நாம் ஆபரணங்களாக அல்லவா அணிந்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அன்று மகாகவி பாடிய பாடல் இன்றும் நம் நிலைக்குப் பொருத்தமாக அல்லவா இருக்கிறது?
கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே
நாளில் மறப்பாரடி!
இன்றும் கூடி வாய் கிழியப் பேசுவதில் நம்மை மிஞ்ச ஆளுண்டோ? எத்தனை தான் அரசியல்வாதிகளிடம் ஏமாந்தாலும் எத்தனை தான் அவர்களிடம் அடிபட்டாலும் நாம் கோபித்துக் கொண்டதுண்டோ? அரசியலில் மாற்றம் கொண்டு வர முயன்றதுண்டோ? அந்தப் பாடலில் பாரதி ஊமைச்சனங்களடி, வாய்ச்சொல்லில் வீரரடி என்றெல்லாம் சூட்டிய பட்டங்களுக்கு நாம் இன்றும் பொருத்தமானவர்களே அல்லவா? எத்தனை தான் கல்வியிலும் விஞ்ஞானத்திலும் முன்னேறினாலும் அத்தனையும் நம் இரத்தத்தில் ஊறிய அடிமைத்தனத்தை அகற்றி விடவில்லையே.
நாம் கொஞ்சம் விழித்துக் கொள்வது போல் தெரிந்தால் அரசியல்வாதிகள் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற சங்கிலிகளை வலையாக வீச, நாம் அவர்கள் எதிர்பார்ப்பது போல் சிக்கி நம்மை நாமே கட்டி சிறைபட்டுக் கொள்கிறோமே இதுவா சுதந்திரம்? நள்ளிரவில் (இருட்டில்) பெற்றதால் சுதந்திரம் என்னதென்று நமக்குத் தெளிவாகத் தெரியவில்லையோ?
ஒருவனிடம் விடுபட்டு இன்னொருவனிடம் மாட்டிக் கொள்வதற்குப் பெயர் சுதந்திரமா? வெள்ளையரிடம் விடுபட்டு இன்று கொள்ளையரிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறோமே இது சுதந்திரமா? இன்றைய ஏழைப்பங்காளர்களிடம் கோடி கோடிகள் கொடுத்து விட்டு நாம் நித்திய தரித்திரர்களாக நிற்கிறோமே இது என்ன சுதந்திரம்? உரிமையோடு பெற வேண்டிய எத்தனையோ பெரிய விஷயங்கள் இங்கிருக்க ஆட்சியாளர்கள் பிச்சையாகப் போடும் சில்லறை இலவசங்களில் புளங்காகிதம் அடைகிற சுதந்திரம் அல்லவா இன்று நமக்கு இருக்கிறது?
கடைநிலையில் உள்ள ஒரு வார்டு கவுன்சிலரே கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால் மேலேயுள்ள மற்றவர்கள் எல்லாம் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று செவ்வாய் கிரகத் தகவலைச் சொல்வது போல சிறிதும் பாதிக்கப்படாமல் சொல்கிறோமே நமக்கு இருப்பதாகச் சொல்லும் சுதந்திரம் கை கொட்டிச் சிரிக்கிற சத்தம் கேட்கவில்லையா? எவன் எத்தனை கொள்ளையடித்துக் கொண்டிருந்தாலும் கொள்ளை போவது நம் பணம், நம் நலனுக்காக செலவாக வேண்டிய பணம், என்ற பிரக்ஞை இல்லாத ஜடங்களாக வேடிக்கை பார்க்கிறோமே, யார் சம்பாதிக்கவில்லை என்று வேதாந்தம் பேசுகிறோமே, இதை எங்கு போய் சொல்லி அழ?
அடிமையாக இருக்கிறோம் என்று அறிந்தவன் தான் சுதந்திரத்திற்காகப் போராட முடியும். ஆனால் அதையே அறியாதவன் அடிமையாகவே இருந்து விடுவதில் வியப்பென்ன இருக்கிறது? இந்தியர்களான நாம் உறக்கத்தில் கூட இல்லை. உறங்குபவன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விழிப்பது உறுதி. நாம் கோமாவில் அல்லவா இருக்கிறோம். ஜனநாயகத்தினை ஓட்டும் டிரைவர் சீட்டில் நாம் இல்லை. பணநாயகம் ஜனநாயகத்தை ஓட்ட பின் சீட்டில் கோமாவில் பரிதாபமாய்ப் படுத்திருக்கிறோம். ஜனநாயகமோ பள்ளத்தில் ப்ரேக் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
கீதாஞ்சலியில் தாகூர் எப்படிப்பட்ட சுதந்திர சூழ்நிலையில் இந்த தேசம் விழித்தெழ வேண்டும் என்று பிரார்த்தித்தாரோ அந்தப் பிரார்த்தனை நம்முடையதாகவும் இருக்கட்டும்.
எங்கே இதயம் அச்சமின்றி இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ,
எங்கே அறிவு பூரண சுதந்திரமாய் உள்ளதோ,
எங்கே உலகம் உள்ளக குறுகிய சுவர்களால் துண்டாடப்படவில்லையோ,
எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து வருகின்றனவோ,
எங்கே விடாமுயற்சி தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி கரங்களை நீட்டுகிறதோ,
எங்கே தெளிந்த அறிவோட்டம் உயிரற்ற பழக்கம் என்ற பாலைமணலில் வழிதவறிச் செல்லவில்லையோ,
எங்கே உன்னால் இதயம் பரந்த நோக்கத்துடனும், செயலுடனும் வழிநடத்தப் படுகிறதோ,
அங்கே அந்த சுதந்திர சொர்க்கத்தில் எந்தையே என் நாடு விழிப்புறுக!
எத்தனையோ தியாகிகள் வியர்வையாலும், கண்ணீராலும், இரத்தத்தாலும், ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் வாங்கித் தந்த சுதந்திரம் இது. இதை நாம் வியர்த்தமாக்கி விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. நம் அடிமைச் சங்கிலிகளின் பூட்டிற்கான சாவியை ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கூட்டத்திற்கு மாற்றித் மாற்றித் தருவது சுதந்திரம் அல்ல. அடிமைச் சங்கிலிகளையே உடைத்தெறிந்து விடுபடுவது தான் சுதந்திரம். எனவே இனியும் தாமதியாது விழித்தெழுவோம். பெறுவோம் இனியொரு சுதந்திரம்!
-என்.கணேசன்
நன்றி:விகடன்
(சுதந்திர தின சிறப்புப் பக்கத்திற்காக எழுதப்பட்டது)
//வெள்ளையரிடம் விடுபட்டு இன்று கொள்ளையரிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறோமே இது சுதந்திரமா?// நூறு சதவிகிதம் உண்மை. அருமையான பதிவு. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இதை சிந்தித்து பார்க்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. சிந்திப்போம். செயல்படுவோம்.
ReplyDeleteரேகா ராகவன்.
//பிச்சையாகப் போடும் சில்லறை இலவசங்களில் புளங்காகிதம் அடைகிற சுதந்திரம் அல்லவா இன்று நமக்கு இருக்கிறது?//
ReplyDeleteவாழிய பாரத மணித்திருநாடு .
வந்தே மாதரம் !! வந்தே மாதரம் !!
சுப்பு ரத்தினம்.
சிறப்பான பதிவு அன்பரே! நாம் அடிமைச்சங்கிலிகளை ஆபரணமாய் அணிந்திருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று!
ReplyDeleteதொடர்ந்து இளமை விகடனில் இடம்பெருவதற்கு வாழ்த்துகள்
எங்கே இதயம் அச்சமின்றி இருக்கிறதோ,
ReplyDeleteஎங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ,
எங்கே அறிவு பூரண சுதந்திரமாய் உள்ளதோ,
எங்கே உலகம் உள்ளக குறுகிய சுவர்களால் துண்டாடப்படவில்லையோ,
எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து வருகின்றனவோ,
எங்கே விடாமுயற்சி தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி கரங்களை நீட்டுகிறதோ,
எங்கே தெளிந்த அறிவோட்டம் உயிரற்ற பழக்கம் என்ற பாலை மணலில் வழிதவறிச் செல்லவில்லையோ,
எங்கே உன்னால் இதயம் பரந்த நோக்கத்துடனும், செயலுடனும் வழிநடத்தப் படுகிறதோ,
அங்கே அந்த சுதந்திர சொர்க்கத்தில் எந்தையே என் நாடு விழிப்புறுக!
Arumai...arumai.. intha varigal, arumaiyilum arumai...Vaazhga um "blogging" thondhu pannedung kaalam.
//நம் அடிமைச் சங்கிலிகளின் பூட்டிற்கான சாவியை ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கூட்டத்திற்கு மாற்றித் மாற்றித் தருவது சுதந்திரம் அல்ல. அடிமைச் சங்கிலிகளையே உடைத்தெறிந்து விடுபடுவது தான் சுதந்திரம்//
ReplyDeleteகேட்க நன்றாய்தான் இருக்கிறது. எப்படி உடைக்க வேண்டும் என்ற தெளிவில்லாமல் தீர்க்கமான அறிவில்லாமல் எப்படி உடைத்து வெளியேற முடியும். பத்தோடு பதினொன்று படித்து விட்டு போக.
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
ReplyDeleteஅல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்
அருமையான பகிர்வு. உங்களது உணர்வு சம்மந்த பட்டவர்களின் காதில் விழ பிரார்த்திகிறேன்.
ReplyDeleteSariya suttikatti ullergal....adimai thanam olinthu...Suthanthira katrai naam entru suvasippom...?
ReplyDelete