தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Thursday, May 28, 2009
விதியை வென்ற விடாமுயற்சி
படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை இழக்க முடியவில்லை.
அந்தக் கனவை அவரும் அவர் தந்தையும் சேர்ந்து கண்டிருந்தார்கள். நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட இருவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள் சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள்.
பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள்.
சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.
மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி முதல் வேலையாக வாஷிங்டன் ரோப்ளினின் வீட்டுக்குச் சென்று அவருடைய கைகளைக் குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
இதற்குப் பெயரல்லவோ விடாமுயற்சி. ஒரு சாதாரண மனிதன் தன் முயற்சியை முடியாது என்ற வல்லுனர்களின் கருத்திலேயே நிறுத்தியிருப்பான். சற்று மன உறுதி படைத்த மனிதனோ தந்தையின் மரணத்தில் அந்த நம்பிக்கையை இழந்திருப்பான். மேலும் அதிக மன உறுதி படைத்தவன் தனக்கும் விபத்து ஏற்பட்டவுடன் அந்த வேலையையே விட்டொழித்திருப்பான். ஆரம்பத்திலிருந்தே அபசகுனங்கள் வந்தும் நாம் முயற்சி செய்தது மகா முட்டாள்தனம் என்று நினைத்திருப்பான்.
முடக்க நிலையில் படுக்க நேர்ந்தாலோ எத்தனை மன உறுதியும் உபயோகப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. மரணம் மட்டுமே எதிர்பார்க்கத்தக்க பெரிய விடுதலையாக நினைக்கத் தோன்றியிருக்கும். ஆனால் இதெல்லாம் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை நடக்கக் கூடிய நிகழ்வுகள். மாமனிதர்களோ விதிகளை உருவாக்குபவர்கள். பொதுவான விதிக்கு அடங்குபவர்கள் அல்லர்.
மனதிற்குள் ஒன்று சரியெனப்படுகையில், தலைக்கனமோ, முட்டாள்தனமோ துளியும் இல்லாமல் ஒன்றை முடியும் என உணர்கையில், உலகமே முடியாது என்று மறுத்தாலும், விதி தன் முழு சக்தியையும் பிரயோகித்து முடங்கிக் கிடக்க வைத்தாலும் மாமனிதன் நினைத்ததை நடத்தியே முடிக்கிறான். சுற்றிலும் இருள் சூழ்ந்த போதிலும் தன் ஆத்மவிளக்கால் போகும் வழியைக் காண்கிறான். தன் ஆத்மபலத்தால் இலக்கைச் சென்றடைகிறான்.
நண்பர்களே, தொடங்கிய நல்ல காரியங்களுக்குத் தடங்கல் வரும் போதெல்லாம் செயலற்று நின்று விடாதீர்கள். வாஷிங்டன் ரோப்ளினை நினைத்துப் பாருங்கள். அவர் கண்டது எத்தனை தடங்கல்கள், எத்தனை துன்பங்கள். கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மோசமான சூழ்நிலைகள் சூழ்ந்த போதும் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் அவர் அவற்றிலிருந்து விடுபட்டு செயல்படவில்லையா? கடைசியில் மிஞ்சியது ஒரு கனவும், ஒரு விரலும் மட்டுமே என்றாலும் அவர் அதை வைத்துக் கொண்டே சரித்திரம் படைக்கவில்லையா? அவரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள்.
உங்கள் கனவுகளுக்கு நீங்களே பிரம்மாக்கள். அவற்றிற்கு நீங்கள் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப் போவதில்லை. நீங்கள் கனவாக மட்டுமே விட்டு வைத்த உயர்ந்த விஷயங்கள் எத்தனை? அவை உருவாக ப்ரூக்ளின் பாலத்திற்காக வாஷிங்டன் ரோப்ளின் செய்த முயற்சிகளின் அளவில் சிறிதாவது செய்திருக்கிறீர்களா? சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை உங்களைச் செயல்புரிய வைக்கட்டும்.
- என்.கணேசன்
நன்றி: விகடன்
Very inspirational.
ReplyDeleteதன்னால் ஒன்று புதிதாய்ச் செய்திடமுடியும், தன்னால் தன் சொந்த கால்களிலே நின்று
ReplyDeleteதன் திறமையை வெளிக்கொணர இயலும் என்ற நினைப்பினை உந்துவதற்கும் அதை
எழுச்சியூற்றுவதும் பெரும் பொறுப்பு பெற்றோர்கள் கையிலே இருக்கிறது.
பெரும்பாலான பெற்றோர்கள் தனது பிள்ளை ஏதேனும் ஒரு அரசு வங்கியிலோ அல்லது
அரசு அலுவலகத்திலோ எழுத்தர் பணி கிடைத்து, அதுவும் தன் வீட்டுக்குப்பக்கத்திலே
கிடைத்துவிட்டால் அதை விட பெரிய அதிருஷ்டம் கிடையாது எனற நினைப்பிலேயே
தத்தம் குழந்தைகளை வளர்க்கின்றனர்.
குழந்தைகளின் எதிர்காலத்தைத் தன்னுடைய எதிர்காலத்தைப்பற்றிய தமது பயம் கலந்த
உணர்வுகளுடன் இணைக்க முற்படுவதால், குழந்தைகள் ஆக்க பூர்வமாக ஏதும்
சிந்திக்க இடம் இல்லாது போய்விடுகிறது.
தந்தை மகற்காற்றும் உதவி என்ன என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். என் மகன், என் மகள்
ஒரு உலகம் புகழும் விஞ்ஞான வல்லுனராக வரவேண்டும், என எத்தனை இந்திய பெற்றோர்கள்
எண்ணுகிறார்கள்.? ஒரு லட்சம் பேரில் ஒருவர் இருந்தால் அதிகம்.
அடுத்த தலைமுறையாவது உங்கள் கருத்துக்களை சிந்தித்துச் செயல்படத் துவங்கட்டும்.
குமாஸ்தா மன நிலை மாறட்டும்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
ஆனால் அவரால் தன் கனவை இழக்க முடியவில்லை.//அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே //
ReplyDeleteஆழமான கருத்து. நல்ல பகிர்வு. நன்றி:)
நல்ல கருத்து. நன்றி
ReplyDeleteSuper Sir Good Very Good,
ReplyDeleteThanx for your information
Raja.
Its really good Sir...
ReplyDeleteமிகச் சிறந்த பதிவு ! அப்துல் கலாம் கனவு காணச் சொன்னது இப்படிப்பட்ட கனவினைத்தான் ஆனால் இப்போது அவர் சொன்னது எல்லோருக்கும் காமெடி ஆயிருச்சி
ReplyDeleteநல்ல கனவு...................
ReplyDeleteஉங்கள் படைப்பு அருமை
ReplyDeleteகடைசியில் மிஞ்சியது ஒரு கனவும், ஒரு விரலும் மட்டுமே
ReplyDeleteஅற்புதமான வரிகள்
K.Sathish Kumar
அருமை...
ReplyDelete