Monday, May 25, 2009

தாய் மனம்

"என்ன கார்த்திக், ஆபிசுக்கு கிளம்பலையா?" என்று சாரதா சாவகாசமாய் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகனைக் கேட்டாள்.

"இல்லை. நான் அந்த வேலையை விட்டுட்டேன்"

"ஏன்?"

"அந்த மேனேஜர் என்னை என்னவோ விலைக்கே வாங்கிட்ட மாதிரி பேசறான். போடா நீயும் ஆச்சு உன் வேலையும் ஆச்சுன்னு வந்துட்டேன்"

படிப்பு முடிந்து இந்த ஒரு வருட காலத்தில் இது அவன் விட்ட நான்காவது வேலை. இந்த வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. முதல் வேலைக்குப் பத்து நாள் போயிருப்பான். 'வேலை ரொம்ப அதிகம். கசக்கிப் பிழிகிறார்கள்' என்று விட்டான். முதல் வேலையை விட்டு மூன்று மாதம் கழித்து இரண்டாவது வேலைக்கு ஐந்து நாள் போனான். 'வேலை ரொம்ப போர். என் படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. இதைக் கொஞ்ச நாளைக்கு செஞ்சா எனக்கு படிச்சதெல்லாம் மறந்து போயிடும்' என்று போவதை நிறுத்தினான். பிறகு இரண்டு மாதம் கழித்து மூன்றாவது வேலைக்கு ரெண்டு வாரம் போனான். அவர்களே நிறுத்தி விட்டார்கள். 'மூணு நாலு நாள் போக லேட்டாயிடுச்சு. அதை எதோ க்ரைம் மாதிரி சொல்லி இனி வர வேண்டான்னு சொல்லிட்டாங்க. இந்த ஒரு வேலை இல்லாட்டி வேற நூறு வேலை'. பிறகு நாலு மாதம் கழித்துப் போன இந்த நான்காவது வேலையையும் இப்போது விட்டு விட்டான். இனி அடுத்த வேலை கிடைக்கும் வரை காலை பதினோரு மணி வரை உறக்கம், மாலை வரை டிவி, பின் வெளியே போனால் இரவு பன்னிரண்டு வரை நண்பர்களுடன் கும்மாளம் என்று இருப்பான்.

சாரதாவின் கணவர் இறந்த போது கார்த்திக்கிற்கு ஐந்து வயது. அவருடைய அரசாங்க வேலை கருணை அடிப்படையில் அவளுக்குக் கிடைத்தது. திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே மகனுக்குத் தந்தை இல்லாத குறை தெரியக் கூடாது என்று அவள் அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாள். அவன் மிக நன்றாகப் படித்தாலும் சோம்பலும், பொறுப்பின்மையும் அவன் வளரும் நாட்களில் தெரிந்தன. ஆனால் சின்னவன் தானே, பெரியவனானால் சரியாகி விடும் என்று அவள் பெரிது படுத்தவில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த பின்னும் அது தொடர்ந்தது. ஒவ்வொரு முறை வேலை விட்ட போதும் அடுத்ததில் சரியாகி விடுவான் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருந்தாள். ஆனால் இத்தனை நாட்கள் இவன் தானாக சரியாவான் என்று இருந்த நம்பிக்கை இப்போது முழுவதுமாக கரைய சாரதா ரௌத்திரமானாள்.

"அப்படின்னா பழையபடி தண்டச்சோறாய் இந்த வீட்டுல உட்கார்ந்து சாப்பிடறதா உத்தேசமா?"

தாயின் திடீர் கோபம் அவனைத் திகைப்படைய வைத்தது. "என்னாச்சு உனக்கு. ஏன் இப்படி பேசறாய்?"

"அப்புறம் என்னடா. காலம் பூரா உனக்கு உழைச்சுக் கொட்டற மெஷினா நான். படிக்க வைக்கிறது என்னோட கடமை. வேணும்கிற அளவு செலவு செஞ்சு படிக்க வச்சுட்டேன். அப்புறமா வேலைக்குப் போய் சம்பாதிச்சு பிழைக்கிறது தாண்டா ஒரு ஆண் பிள்ளைக்கு அழகு"

"அப்படின்னா அந்த மேனேஜர் என்னை அடிமை மாதிரி நடத்துனாலும் நான் பொறுத்துட்டு போகணும்."

"சம்பளம் தர்றவன் வேலை வாங்கத் தாண்டா செய்வான். அதை அடிமை மாதிரின்னு ஏண்டா நினைக்கிறாய்"

கார்த்திக் எரிச்சலடைந்தான். "இப்ப கடைசியா என்ன சொல்கிறாய்?"

"சம்பாதிச்சு காசு கொண்டு வர்றதாயிருந்தா வீட்டுல இரு. இல்லாட்டி வீட்டை விட்டுப் போன்னு சொல்றேன்"

அந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத கார்த்திக் அதிர்ச்சியடைந்தான். கோபத்தோடு கேட்டான். "அப்ப பெத்த பிள்ளைய விட உனக்கு காசு தான் முக்கியம்"

"ஆமா. அப்படியே வச்சுக்கோ"

"போயிட்டா நீ கெஞ்சிக் கூப்பிடாலும் நான் வர மாட்டேன்."

"நல்லது" சாரதா உறுதியாக நின்றாள்.

"நீ செத்தா கொள்ளி போடக் கூட ஆளில்லை. ஞாபகம் வச்சுக்கோ"

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். கார்ப்பரேஷன்காரன் பார்த்துக்குவான். நீ கிளம்பு"

கார்த்திக் கோபத்துடன் எழுந்து தன் துணிமணிகளை சூட்கேஸிலும், இன்னொரு பையிலும் நிரப்பிக் கொண்டான். "நான் இங்கிருந்து போயிட்டா பட்டினி கிடப்பேன்னு மட்டும் நினைக்காதே எனக்கு ·ப்ரண்ட்ஸ் இருக்காங்க."

"யார் எத்தனை நாள் பார்த்துக்குறாங்கன்னு நானும் பார்க்கறேன்"

"என் ·ப்ரண்ட்ஸ் எனக்காக உயிரையும் கொடுப்பாங்க"

"சரி போய் அவங்க உயிரை எடு. என்னை விடு"

அவன் கோபமாக வெளியேறிப் போகும் வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவன் போன பிறகு அருவியாய் சாரதா கண்களில் இருந்து கிளம்பியது.

அங்கு இல்லாத மகனிடம் சாரதா அழுகையினூடே வாய் விட்டு சொன்னாள். "அம்மாவுக்கு இப்ப எல்லாம் உடம்புக்கு முடியறதில்லைடா. நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியலை. உன்னை தப்பா வளர்த்துட்டேன். அதை சரி செய்யாமல் போனா செத்தாலும் என் ஆத்மா சாந்தியடையாதுடா. செத்துட்டா கார்ப்பரேஷன்காரன் பார்த்துக்குவான்னு சொன்னேன். சாகாம உடம்புக்கு முடியாம படுத்துகிட்டா அவன் கூட பார்க்க வர மாட்டான்னு எனக்கு தெரியும்டா. எனக்கு உன்னை விட்டா நாதி எதுவும் இல்லை. ஆனாலும் உன்னை அனுப்பிச்சிருக்கேன்னா நீ நல்லாகணும்னு தாண்டா. நீ இங்கே இருக்கிற வரைக்கும் நல்லாக மாட்டேடா. அதுக்குத் தான் உன்னை அனுப்பிச்சிருக்கேன். அம்மா மேல உனக்கு கோபம் கடைசி வரைக்கும் இருந்தாலும் பரவாயில்லை. அம்மாவைப் பார்க்க நீ கடைசி வரைக்கும் வராட்டி கூட பரவாயில்லை. நீ திருந்தி ஒரு நல்ல வேலையில இருக்காய்னு நான் சாகறதுக்குள்ளே கேள்விப்பட்டா எனக்கு அது போதும்டா."

- என்.கணேசன்


21 comments:

  1. very nice story.simple and strong - Rajesh(uperformrajesh@yahoo.com)

    ReplyDelete
  2. ராஜேஷ் கூறுவதை நானும் ஆமோதிக்கிறேன். எளிமையான வலிமையான கதை. சாரதா மனதைத் தொடுகிறார்

    ReplyDelete
  3. I am you r Fan Mr.NG. your writings are heart touching one. Good work & Luck.

    TK

    ReplyDelete
  4. // சம்பளம் தர்றவன் வேலை வாங்கத் தாண்டா செய்வான்.
    அதை அடிமை மாதிரின்னு ஏண்டா நினைக்கிறாய் //

    தருகின்ற ஊதியத்துக்கு உழைக்கவேண்டும். உழைககாது வரும் சம்பளம்
    பிச்சை என்று மட்டும் சொல்லக்கூடாது. அது தந்து திற்மைக்கு ஒரு
    கேவலமான சான்று .

    இதை எப்போது இந்திய தொழிலாளர் சமூகம் (குறிப்பாக, வெள்ளைக்காலர்
    தொழிலாளர்கள் ) வங்கிகளிலும், எல்.ஐ.சியிலும், மற்றும் மத்திய‌
    நிறுவனங்களிலும் வேலை பார்ப்பவர்கள்) அறிந்துகொள்வார்கள் எனத்
    தெரியவில்லை.

    மன்மோஹன் சிங்க் கம்யூனிஸ்ட் பிடியிலிருந்து விடுபட்டுவிட்டார்.
    தொழிலாளர் சமூகம் என்று விடுபடுமோ ? தெரியவில்லை.

    ReplyDelete
  5. அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  6. அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  7. ராஜ சுப்ரமணியம்May 26, 2009 at 10:01 AM

    நல்ல கதை; மனதை தொட்டது, நெருடியது. “தாய் மனம்” என்றால் இதுதான். ஆசிரியருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ராஜ சுப்ரமணியம்

    ReplyDelete
  8. சாதாரண நிகழ்வு...
    அசாதாரண விவரிப்பு..

    தாய் மனம் வெல்ல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //தருகின்ற ஊதியத்துக்கு உழைக்கவேண்டும். உழைககாது வரும் சம்பளம்
    பிச்சை என்று மட்டும் சொல்லக்கூடாது. அது தந்து திற்மைக்கு ஒரு கேவலமான சான்று// .
    Superb. அரசு ஊழல்கள் சாரி ஊழியர்கள் சிந்திக்கட்டும்

    ReplyDelete
  10. நன்றாக இருக்கு. நல்ல தாய். நல்ல மனம். வாழ்த்துக்கள்.
    நேற்றே எல்லாருடைய கதைகளையும் முழு மூச்சில் இரவு படித்தேன். உங்களுடையதை எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  11. தாய்மையை புகழ வார்த்தைகளே இல்லைங்க..அருமையான கதை ;)

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  12. :-(

    நல்லா இருக்கு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    -சென்ஷி

    ReplyDelete
  13. VIGAVUM VITHIYAASAMAANA ANUGAL....ELLAA THAAYUM IPPADIYE NADANTHU KONDAAL, PALA PILLAIGAL "PIZHAITHU KOLLUM. :-)

    NAANUM "THAAI MANAM KONDA ORU THANTHAI" NIRAIYAVE KATHU KONDEN - THANGGALIN INTHA PATHIVU VAZHI.

    AAMAAM...ORU SIRU SANTHEGAM!
    SONTHAMAAGA THAAN EZHUTHUGIREEERAA? ILLAI.....
    MANNIKANUM.... THEZHIVU PADUTHI kOLLA THAANE OZHIYA...IZHIVU PADUTHA ALLA.....TQ.

    ReplyDelete
  14. சொந்தமாக எழுதியிரா விட்டால் இந்த வலைப்பூவிற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் ஒருசிலர் எப்போதோ கண்டுபிடித்து சுட்டிக் காட்டியிருப்பார்கள். (யாருமே கேள்விகளால் இழிவுபடுத்தப்படுவதில்லை நண்பரே. தங்கள் தகுதியற்ற செயல்களாலேயே இழிவுபடுத்தப் படுகிறார்கள்). நன்றி.

    ReplyDelete
  15. எளிமையான கதை...சாதாரணமான வார்த்தை பிரயோகங்கள்...ஆனால் அழுத்தமான கதை...தாய்க்கும் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறும் வசனங்கள் லைவ்லியாக உள்ளது...பெரிய தீம் இல்லையென்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்கிறது..

    என்னுடைய மதிப்பெண் 55 / 100

    ReplyDelete
  16. நான் சொல்ல நினைத்ததை ‘கடைக்குட்டி’ இரண்டே வரிகளில் கூறிவிட்டார்...

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. தாய் மனசு தங்கம். தான் கவலைபட்டாலும் மகன் திருந்தணும் என்று துரத்துகிறாள். எங்களுக்குபுரியும்,
    அந்த மகனுக்கும்புரியணும். பாராட்டுக்கள.

    ReplyDelete
  18. super brother....

    Abishek.Akilan...

    ReplyDelete
  19. Unmayil ellaa thayum, than magan thaan aluvadhai kandu kooda varutha pada koodaadhu endru ninaipaal... aanaal "petha manam pithu, pillai manam kallu" enbadhai thelivaaga unarthiyadharku en nandrigal!!

    ReplyDelete