Tuesday, April 14, 2009

காலத்தை வென்று பிரகாசியுங்கள்


ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?

இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார்.

ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.

சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத் துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."

தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.

அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar's Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.

அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.

அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.

அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.

ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பலன் என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.

சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?

உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.

பிரகாசிப்பீர்களா?

-என்.கணேசன்

நன்றி: விகடன்

13 comments:

  1. Very inspiring. I believe it should be counted good when a person goes through insult. But to use that a stepping stone determines one's success / the lack of it.

    I reached here incidentally and would like to follow it. Thanks!

    ReplyDelete
  2. " மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும்." சத்தியமான வார்த்தை. மனதுக்கு தெம்பு வந்த மாதிரி இருக்கு. அருமையான கட்டுரை. பாராட்டுக்கள் பல.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  3. Dear Mr.Ganesan,
    Shall I Share this Article to my friends with your permission?. I will include your name and url along that article

    ReplyDelete
  4. நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை
    நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
    படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

    ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
    http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

    காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
    http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

    i have become ur follower thalai

    ReplyDelete
  5. Dear Sir,

    I have read several kinds of blogs. Some about their experiences in life, some are just for fun, some just to criticize others, some to display their technical brilliance, but I must say this is very unique. Anyone who is sensible can appreciate your blogs! Simply its the one for all. Great job.

    ReplyDelete
  6. Really thought provoking. Keep it up

    ReplyDelete
  7. your blog is really interesting one...esp. this post....The biography of S.Chandrasekar is really a fantastic read...i wonder whether it has been translated into Tamizh!

    ReplyDelete
  8. உங்களது இந்த அறிவுரை பலரையும் தூண்டு மொரு தூண்டு கோலாக அமையும் என்பதில் ஐய்யமில்லை உங்கள பணி தொடரட்டும் .....

    ReplyDelete