Wednesday, April 1, 2009

கவலையைக் குறைக்க இரு பட்டியல்


பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனனிடம் அழகாகக் கூறுவான். "வீண் கவலை காணிட வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ".

திருதராஷ்டிரன் கூறியது போல் கவலைப்படுவதற்கு காரணங்களைப் பட்டியல் இடுவது கஷ்டமான காரியம் அல்ல. நம் ஒவ்வொருவரிடமும் நீளமான பட்டியல் இருக்கவே இருக்கிறது. பட்டியலில் ஒன்று குறையும் போது ஒன்பது சேர்ந்து கொண்டு பட்டியல் மேலும் நீள்கிறது.

இன்னொரு பழமொழியும் இருக்கிறது. "உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலை". மனித உடல் உள்ள வரை, மனிதனுக்கு உயிர் உள்ள வரை, அவன் கவலைகளை சேர்த்து கடலில் போட்டால் அந்த கடல் அளவும் போதாதாம். செத்தால் தான் நிம்மதி என்று இந்த வழிச் சிந்தனை சொல்கிறது.

இப்படி இருக்கையில் கவலையைக் குறைக்க அல்லது மறக்க மனிதன் எத்தனையோ முயற்சி செய்கிறான். இந்தக் கவலைக் கடலைக் "குடித்தே" குறைக்க நினைப்பவர்கள் உள்ளனர். வேறெதுவும் குறைக்காது என்பது அவர்கள் வாதம். ஆனால் அந்த வாதம் முட்டாள்தனம். போதை தெளிந்து பார்க்கையிலும் கவலைகள் அப்படியே இருக்கும் (போதையால் பிரச்சினைகள் பெருகாமல் இருந்தால்).

அதிகம் கவலைப்படுபவர்களே! உங்கள் கவலையைக் குறைக்க இரு பட்டியல்கள் தயாரியுங்கள். ஒன்று உங்களிடம் உள்ள நல்லவற்றின் பட்டியல். எத்தனையோ பேருக்குக் கிடைக்காத எத்தனையோ நல்லவற்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதையெல்லாம் பட்டியலிட்டுப் பாருங்கள்.

"காலில்லாதவனைப் பார்க்கும் வரை செருப்பில்லை என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்" என்று கூறியவனைப் போல எத்தனையோ விஷயங்களில் உங்கள் கவலை அர்த்தமில்லாதது என்பதை உணர்வீர்கள்.
ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை உண்டு.

ஞானி ஒருவர் தன்னிடம் கவலையுடன் வந்த மனிதனின் அறிவுக் கண்களைத் திறக்க நினைத்தார். "உனக்கு கண்கள் இருக்கின்றன. குருடாக இருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார். உனக்குக் காது கேட்கிறது. செவிடாக உள்ள லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார்....." என்று ஆரம்பித்து அவனிடம் உள்ளவற்றின் பட்டியலை எல்லாம் சொல்லி அவை இல்லாமல் இருக்கும் லட்சக் கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்க்கச் சொன்னார். கடைசியில் "உனக்கு ஒரு அழகான கார் உள்ளது. வாகனமே இல்லாத லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்" என்று முடித்தார்.

ஆனால் கவலை குறையாத அந்த மனிதன் சோகமாகச் சொன்னான். "ஸ்வாமி! என்னிடம் உள்ள அத்தனையும் என் பக்கத்து வீட்டுக்காரனிடமும் இருக்கின்றன. ஆனால் அவனிடம் கூடுதலாக இன்னொரு காரும் இருக்கிறதே?"

இதற்கு என்ன செய்வது? இவன் பார்வை பக்கத்து வீட்டுக்காரனுடன் நின்று விடுகிறது. குதிரைக்குக் காப்பு கட்டியது போல நம் பார்வையைக் குறுக்கிக் கொள்வதும், நம்மை விட அதிர்ஷ்டசாலிகள் என்று நாம் எண்ணும் மனிதர்களுடன் மட்டுமே நம்மை ஒப்பு நோக்கிக் கொள்வதுமே பல்வேறு கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

அடுத்தது இரண்டாவது பட்டியல். உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள், துக்கங்கள் என்னென்ன என்பதையும் அந்தப்பட்டியலில் எழுதுங்கள். ஆரம்பத்தில் இதில் எழுத அதிகம் எதுவும் இல்லாதது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அந்தப் பட்டியல் போல் நீளமான ஒரு பட்டியலை நீங்கள் தயார் செய்யவே முடியாது. பட்டியலில் எழுதத் தேவையானவற்றைப் பெற நீங்கள் சில இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

முதலில் உங்கள் ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி ஒன்றிற்குச் சென்று ஒரு முழு உலா வர வேண்டும். அடுத்து ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப் பாருங்கள். இந்த இரு இடங்களிலும் நோயாளிகளையும் அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினரையும் பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள் என்னென்ன என்று உங்களுக்குப் புரியும்.

மேலே சொன்ன கதையில் கூட அந்த மனிதன் தன்னை விட ஒரு கார் அதிகம் உள்ள பக்கத்து வீட்டுக்காரனை மேலோட்டமாகப் பார்க்காமல் உற்று கவனித்தால் அவனிடம் உள்ள எத்தனையோ குறைபாடுகள், பிரச்சினைகள் தன்னிடம் இல்லை என்பதை உணர முடியும்.

ஒரு வட்டத்திற்குள் இருந்து உழலும் போது மலையாய் தெரியும் கவலைகள் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து கவனிக்கும் போது சிறுத்துப் போகின்றன.

யாருக்கும், என்றைக்கும், உள்ள பிரச்சினைகளை விட இல்லாத பிரச்சினைகளே அதிகம் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு கவலைப்படும் நீங்கள் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகளின் பட்டியலையும் எடுத்துப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன், எல்லோருடைய எல்லா பிரச்சினைகளயும் பார்க்கும் போது, அவர்களுடைய துக்கங்களை நேரடியாகக் காணும் போது, உங்கள் கவலைகளில் பல அவற்றின் முன் அர்த்தமில்லாமல் போவதைக் காண்பீர்கள்.

துரியோதனனைப் போல் கவலைப்பட நூறு காரணங்கள் நீங்கள் கண்டுபிடிக்க முடியும். ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விட ஆயிரம் காரணங்கள் உள்ளன என்பதை இந்த இரண்டு பட்டியல்களும் உங்கள் தலையைக் குட்டிச் சொல்லும்.

-என்.கணேசன்

7 comments:

  1. \\குதிரைக்குக் காப்பு கட்டியது போல நம் பார்வையைக் குறுக்கிக் கொள்வதும், நம்மை விட அதிர்ஷ்டசாலிகள் என்று நாம் எண்ணும் மனிதர்களுடன் மட்டுமே நம்மை ஒப்பு நோக்கிக் கொள்வதுமே பல்வேறு கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது.\\


    உண்மையே..

    ReplyDelete