Thursday, March 26, 2009

திருஷ்டி

"போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?" அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு" வருண் எரிச்சலுடன் சொன்னான்.

"சனி கூட ஏழரை வருஷத்துல விட்டுடும். ஆனா இந்தக் கிழவி நம்மள விடற மாதிரி தெரியலை" அம்மா அலுத்துக் கொண்டாள்.

பக்கத்து வீட்டுப் பாட்டியைப் பார்த்தால் அவர்கள் எல்லோருக்கும் பயம். பார்ப்பதற்கு குள்ளமாக, ஒடிசலாக இருக்கும் அந்த விதவைப் பாட்டியின் கண்களில் முக்கியமான சில தருணங்களில் படுவது பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவது போலத் தான்.

வருண் படித்துக் கொண்டிருக்கையில் ஒரு முறை பாட்டி அங்கலாய்த்தாள். "இவ்வளவு சிரத்தையாய் நீ படிக்கிறாய். எங்க வீட்டுலயும் ஒரு அசடு இருக்கு. புஸ்தகம் எடுத்தவுடனே கொட்டாவியாய் விடுது" அன்று மாலை டைபாய்டு வந்து படுத்த வருண் அந்த பரிட்சைக்குப் போகவே இல்லை. அம்மா முதல் முதலில் அரக்கு கலரில் அழகான பட்டுப் புடவை கட்டிக் கொண்டு போன போது பாட்டி கண்களில் பட்டு விட்டாள். "புடவை ரொம்ப நல்லா இருக்கு' என்று பாட்டி சுருக்கமாய் தான் சொன்னாள். அந்த சேலையைக் கட்டிக் கொண்டு கோயிலுக்குப் போன போது ஊதுபத்தி நெருப்பில் சேலை ஓட்டையாய் போனதை அம்மா இப்போதும் சொல்லி சொல்லி மாய்கிறாள். இப்படி எத்தனையோ நிகழ்வுகள்....

ஊரிலிருந்து இன்று காலை தான் வந்திருந்த மாமா குளித்து விட்டு தலையைத் துவட்டியபடி வந்தார். "நேரம் ஆயிடுச்சு வருண். இண்டர்வ்யூவுக்கு கிளம்பாம இன்னும் ஏண்டா இங்கேயே நிற்கிறாய்?"

வருண் வாசலில் பக்கத்து வீட்டுப் பாட்டி நிற்பதையும் அவள் பார்வை மிக மோசமானது என்பதையும் சொன்னான்.

"இது என்னடா பைத்தியக்காரத்தனமா இருக்கு. இருபத்தியோராம் நூற்றாண்டு வந்தாலும் நீங்க மாறவே மாட்டீங்களாடா. பூசணிக்காயை நடுத்தெருவில் போட்டு உடைக்கிறீங்க. எலுமிச்சம்பழத்தையும் மிளகாயையும் சேர்த்துக் கோர்க்கறீங்க. குங்குமத்தண்ணியை சுத்தி கொட்டறீங்க. ஆனா அப்படியும் உங்களையெல்லாம் விட்டு இந்த திருஷ்டி ஒழிய மாட்டேங்குதே"

"போங்க மாமா உங்களுக்கு அந்தப் பாட்டியைப் பத்தி தெரியாது" என்று வருண் சொன்னவுடன் அம்மாவும் சேர்ந்து கொண்டாள். இருவரும் சேர்ந்து கதை கதையாய் சொன்னார்கள்.

"போன தடவை நான் வந்தப்ப என் கிட்ட சினிமாவைப் பத்தி பேசிகிட்டு இருந்ததே அந்தப்பாட்டி தானே" மாமா நினைவுபடுத்திக் கொண்டு கேட்டார்.

"அதே பாட்டி தான்" என்றார்கள்.

பாட்டி மகா சினிமா ரசிகை. சில வருடங்கள் வட இந்தியாவிலும் இருந்ததால் ஹிந்தி சினிமா மேலும் அவளுக்கு மிகுந்த ஈடுபாடு. சென்ற முறை அவர் வந்திருந்த போது அவரிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தாள். ரஜனிகாந்த் பற்றியும் அமீர்கான் பற்றியும் (லகான் படம் வந்த சமயம் அது) பேசும் போது சொன்னாள். "பொறந்தா அந்த மாதிரி ராசியோடு பொறக்கணும். நாமளும் இருக்கோம். அது பக்கத்து தெருவுல இருக்கறவனுக்குக் கூட தெரியறதில்லை". அவள் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தது அவருக்கு நன்றாக நினைவிருந்தது.

"ஏன் வருண். அப்போ ரஜனிகாந்த், அமீர்கான் ரெண்டு பேரோட அதிர்ஷ்டம் பத்திக் கூட பாட்டி சொன்னா. அது அவங்க ரெண்டு பேரையும் பாதிச்சுதா. ரெண்டு பேரும் இப்பவும் சினிமா ·பீல்ட்ல டாப்ல தானே இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் திருஷ்டியே கிடையாதா? உங்கள் திருஷ்டிக்கு ஒரு பாட்டி தான். அவங்க மாதிரி உயரத்துல இருந்தா திருஷ்டி போட எத்தனை பேர் இருப்பாங்க. கொஞ்சம் யோசிடா"

வருணுக்கு அவர் வாதம் யோசிக்க வைத்தது. "ஆனா எங்க வீட்டுல இப்படியெல்லாம் நடந்திருக்கே மாமா"

"ஒரு சிலது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி தற்செயலா நடந்திருக்கலாம்டா. மீதி எல்லாம் நீங்க உங்க பயத்துனாலயே வரவழைச்சிருப்பீங்க. "ஐயோ பாட்டி பார்த்துட்டா. ஏதோ சொல்லிட்டா. கண்டிப்பா ஏதோ நடக்கப் போகுது"ன்னு நெகடிவ்வாவே நினைச்சுட்டு இருந்தா எல்லாமே தப்பாவே தான் நடக்கும்டா. ஆழமா எதை நம்பறியோ, தொடர்ச்சியா எதை நினைச்சுகிட்டே இருக்கியோ அது தான் உன் வாழ்க்கைல நடக்கும். இது அனுபவ உண்மைடா"

மாமா சொன்னது மனதில் ஆழமாய் பதிய வருண் உடனடியாகக் கிளம்பினான். வெளியே நின்றிருந்த பாட்டியிடம் வலியப் போய் சொன்னான். "பாட்டி ஒரு நல்ல வேலைக்கு என்னை இண்டர்வ்யூவுக்கு கூப்பிட்டிருக்காங்க. போயிட்டு வர்றேன்"

பாட்டி ஒரு கணம் அவனையே பார்த்து விட்டு நெகிழ்ச்சியோடு சொன்னாள். "முக்கியமான வேலையா போறப்ப விதவை எதிர்படறதே அபசகுனம்னு நினைக்கிற உலகத்துல என்னையும் மனுஷியா மதிச்சு சொன்னாய் பார். உன் நல்ல மனசுக்கு இந்த வேலை கண்டிப்பா கிடைக்கும். வேணும்னா பாரேன்"

பாட்டியிடமிருந்து இது போன்ற ஆசியை வருண் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'நாம் மாறும் போது உலகமும் எப்படி மாறி விடுகிறது' என்று அவன் அதிசயித்தான். அங்கிருந்து நகர்ந்த போது இந்த வேலை தனக்கு உறுதியாகக் கிடைக்கும் என்று அவன் உள்மனம் சொன்னது.

-என்.கணேசன்

நன்றி:விகடன்

9 comments:

  1. அருமையான கருத்தை இந்தக் கதை மூலமா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  2. \\ஆழமா எதை நம்பறியோ, தொடர்ச்சியா எதை நினைச்சுகிட்டே இருக்கியோ அது தான் உன் வாழ்க்கைல நடக்கும். இது அனுபவ உண்மைடா"\\

    ஆமாம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அன்பு கணேசன், தங்களின் படகு புகட்டிய பாடம் முன்பு படித்திருதேன், மிகவும் அருமையான விளக்கம், அது படித்ததிலிருந்து நான் கோபத்தை முற்றிலும் ஒழித்துவிட்டேன் , சகுனம், திருஷ்டி, பற்றிய விளக்கம் மிகவும் அருமை, ஜாதகத்தை பற்றி தங்களின் கருத்தை எனக்கு விளக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
    அன்புடன்
    ஜீவா

    ReplyDelete
  4. ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நான் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அது உண்மையில் நல்ல அறிவியலே. ஆனால் அதைப் பயன்படுத்துபவர்கள் தவறால் அது இன்றைய காலகட்டத்தில் பல சமயங்களில் கேலிக்கூத்தாகவும், ஏமாற்று வேலையாகவும் மாறி விடுகிறது. பெயரில் ஒரு எழுத்தை மாற்றினால் வாழ்க்கையே மாறிவிடும், ஒரு கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்தால் பிச்சாதிபதி லட்சாதிபதி ஆவான் என்பதெல்லாம் யதார்த்தத்தில் உண்மை அல்ல. அவற்றிற்கு ஒரு சக்தியுமே இல்லை என்று கூறி விட முடியாது. ஆனால் எல்லாவற்றையும் அது தலைகீழாக மாற்றி விடும் என்பது உண்மையல்ல என்பதை உறுதியாகக் கூற முடியும். எதெல்லாம் அறிவு சார்ந்தது, எதெல்லாம் அறிவு சாராதது என்பதை விளக்கமாக விரைவில் ஒரு கட்டுரை எழுதுகிறேன். நன்றி.

    ReplyDelete
  5. //நாம் மாறும் போது உலகமும் எப்படி மாறி விடுகிறது//

    உண்மைதான் கணேசன் ...
    வழக்கம் போல அருமையான பதிவு ...
    நல்ல செய்தி ...
    வாழ்த்துகள் ..

    தொடருங்கள் ...
    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  6. //'நாம் மாறும் போது உலகமும் எப்படி மாறி விடுகிறது' //

    முற்றிலும் உண்மையே
    நானும் பலதடவை எனது எண்ணங்களை வலுக்கட்டாயமாக மாற்றியதால் மகிழ்வான சூழ்நிலை உருவானதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்,

    ReplyDelete
  7. mokkai pathivukkellam munnuru comments eluthuranuvo, inga evanaiyum kanome. ithula avan sari illai ivan sari illainu pathivu vera, pathivarkale mudhala neenga thirunthunga.

    Ayya Ganesan avargale, odu meen oda uru meen varumalavu katthirukkumam kokkunkira maadiri kattukitten irupen unga ovaru pathivaiyum padikka. Arumaiyana pani thankaludaiyathu. ellarum nalla irukkanumnu ninaikira thangalukku nallathu mattum thodarattum. vaalga valamudan.

    ReplyDelete
  8. அருமையான கருத்தை ‘நச்’னு சொல்லி இருக்கீங்க. பாராட்டுகள்.

    ReplyDelete
  9. Hi Ganesan
    Well said. I used to keep your blog link in my GTalk status, so that at least one another person in my friend list come to know of your good work and the moral values you put in it. Hats off.

    ReplyDelete