Wednesday, December 24, 2008

கண்டேன் கர்த்தரை!

நாளை கிறிஸ்துமஸ். ஜான் டேவிடின் இன்றைய தேவாலயப் பணிகள் முடிந்து விட்டன. மக்கள் திரளாக வர இன்னும் சில மணி நேரங்களாவது ஆகும் என்று மனதில் கணக்குப் போட்ட ஜான் டேவிட் தன் புதிய கிறிஸ்துமஸ் உடையை ப்ளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டு தேவாலயத்தின் பிரார்த்தனை மண்டபத்தில் நுழைந்தான். அங்கு ஒரு சில பணியாளர்கள் மின்விளக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரார்த்தனை மண்டபத்தின் வாயிலுக்கு அருகே உள்ள கர்த்தர் சிலையைப் பார்த்து ஜான் டேவிட் புன்னகைத்தான். மிக நெருங்கிய பிரியமான நண்பர்களைப் பார்த்துப் புன்னகைப்பது போன்ற நிஜமான சந்தோஷமான புன்னகை அது. தன் கையில் இருந்த ப்ளாஸ்டிக் பையைக் கர்த்தரின் காலடியில் வைத்து மண்டியிட்டு வழக்கம் போல் தன் பிரார்த்தனையை ஆரம்பித்தான். அதைப் பிரார்த்தனை என்பதை விட ஒருபக்க சம்பாஷணை என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். அவன் மௌனமாகப் பேசுவான். கர்த்தர் அமைதியாகக் கேட்பார். சில சமயங்களில் அவரது புன்னகை கூடியிருப்பதாக அவனுக்குத் தோன்றும். சில சமயங்களில் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு அவனை சமாதானப்படுத்தும் கனிவை அவர் கண்களில் காண்பான்...

தற்போது ஐம்பது வயதாகும் ஜான் டேவிடிற்கு இந்தக் கர்த்தர் மீது சிறு வயதில் இருந்தே மிகுந்த ஈடுபாடு இருந்தது. பத்து வயதில் தன் நண்பன் ஜேம்ஸிடம் இதே இடத்தில் தன் ஆசையை ஜான் டேவிட் தெரிவித்து இருக்கிறான்.

"ஜேம்ஸ் எனக்கு ஒரு தடவையாவது இந்தக் கர்த்தரை நேரில் பார்க்கணும் ஆசையாய் இருக்குடா"

ஜேம்ஸ¤ம் அதே ஆவலுடன் தன் ஆசையைச் சொன்னான். "எனக்கும் ஒரு தடவையாவது எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்னு ஆசைடா."

இவர்கள் பேச்சை பின்னாலிருந்து கேட்டுக் கொண்டு இருந்த மூத்த பாதிரியார் வயிறு குலுங்க வாய் விட்டுச் சிரிக்க சிறுவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிப்போனார்கள்.

படிப்பில் சிறிதும் நாட்டமில்லாத ஜான் டேவிட் தன் பதினைந்தாவது வயதில் பெற்றோரையும் இழந்து இந்த தேவாலயத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்தான். முப்பத்தைந்து வருடங்களாக இங்கு வேலை செய்கிறான்.

ஆனாலும் அவனுக்கு அந்த வேலையில் இன்று வரை சலிப்பு தட்டவில்லை. கர்த்தரின் தேவாலயத்தில் வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது தன் பாக்கியம் என்று நினைத்தான். அதிலும் தேவாலயத்தின் சிலைகளைத் துடைப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான வேலை. எல்லாச் சிலைகளையும் துடைத்து விட்டு கடைசியாக பிரார்த்தனை மண்டபத்தின் நுழைவாயிலுக்கு அருகே இருக்கும் அவன் மிகவும் நேசிக்கும் கர்த்தர் சிலையை மிகவும் வாஞ்சையுடன் துடைப்பான். பிறகு அந்த கர்த்தர் சிலையுடன் சிறிது நேரம் மனம் விட்டு மௌனமாகப் பேசுவான். அந்த சிறிது நேரம் தடங்கல் எதுவும் வராத போது மணிக்கணக்காவதும் உண்டு.

ஆரம்பத்தில் ஒருமுறை மூத்த பாதிரியார் அவனிடம் கேட்டார். "அதென்ன ஜான் இந்தக் கர்த்தர் சிலைக்கு கூடுதல் கவனம்."

"·பாதர். இந்த கர்த்தர் சிலை எல்லாத்தையும் விட தத்ரூபமாய் இருக்கிற மாதிரி எனக்குத் தோணுது. கனிவான புன்னகை எவ்வளவு அழகாக இருக்கு பாருங்களேன்"

அவன் முகத்தில் தெரிந்த ஆனந்த பிரமிப்பு அந்த மூத்த பாதிரியாரை வியக்க வைத்தது. இத்தனை சிறிய வயதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் அபூர்வமே.

"மேடையில் இருக்கிற அந்த பிரதான சிலை?"

"அதுவும் நல்லாத் தான் இருக்கு ·பாதர். ஆனா சிலுவையில் இருக்கிற கர்த்தரைப் பார்த்தா மனசு வேதனைப்படுது. இந்தக் கர்த்தர் கையை உயர்த்தி ஆசிர்வாதம் செஞ்சுகிட்டே கொஞ்சம் குனிஞ்ச மாதிரி இருக்கிறது நாம பேசறதைக் காது கொடுத்துக் கேட்கற மாதிரி இருக்கு. இல்லையா ·பாதர்"

அந்த மூத்த பாதிரியார் அவனுடைய கற்பனையைக் கேட்டுப் புன்னகைத்தார். உற்றுப் பார்த்த போது அப்படித் தான் இருந்தது. அந்த தேவாலயத்தில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் இருக்கும் அவர் இது வரை இதைக் கவனித்ததில்லை. பிரதான சிலையைக் கவனிக்கும் அளவு மற்ற சிலைகளை யாரும் அவ்வளவு கவனிப்பதில்லை.

"·பாதர். எனக்கு இந்த சிலையில் இருக்கிற மாதிரியே கர்த்தரை ஒரே ஒரு தடவையாவது பார்க்கணும்னு ஆசை. முடியுமா ·பாதர்?"

இந்த ஆசையையும் அவர் இது வரை யார் வாயில் இருந்தும் கேட்டதில்லை. பணம், பதவி, புகழ், நிம்மதி என்று எத்தனையோ தேடல்கள் பார்த்திருக்கிறார். ஆனால் கர்த்தரைக் காண நிகழ்கால மனிதர்கள் ஆசைப்படுவதாய் அவருக்குத் தெரியவில்லை. பத்து வயதில் அவன் காண ஆசைப்பட்டது ஒரு விளையாட்டு ஆசையாகத் தான் அவருக்குத் தோன்றி இருந்தது. ஆனால் அவனுடைய இப்போதைய ஆசையை அப்படி எடுத்துக் கொள்ள அவரால் முடியவில்லை.

ஜான் டேவிடின் தோளைப் பரிவோடு தடவியபடி அவர் சொன்னார். "இதய சுத்தி உள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இறைவனைக் காண்பார்கள்னு கர்த்தர் மலைப் பிரசங்கத்தில் தெளிவாய் சொல்லி இருக்கிறார். நீ இதே மாதிரி உன் மனதை வைத்திருந்தால் ஒரு நாள் நிச்சயமாய் அவரே உன்னைப் பார்க்க வருவார்"

அந்த வார்த்தைகள் ஒரு சத்தியப் பிரமாணமாய் ஜான் டேவிடின் மனதில் பதிந்தன. அதற்குப் பின் அந்தப் பாதிரியார் அவனைக் கூப்பிட்டு அடிக்கடி அவனுடன் பேச ஆரம்பித்தார். அவனுக்கு நல்ல அறிவுரைகள் சொல்வார். "ஜான் டேவிட். உன் மனதில் அன்பு, கருணை, இரக்கம் எல்லாம் நிறைந்து இருக்கிற போது நீ கர்த்தரின் ஆதிக்கத்தில் இருக்கிறாய் என்று பொருள். வெறுப்பு, கோபம், பொறாமை, கர்வம் ஆகிய குணங்களை மனதிற்குள் நுழைய விட்டால் நீ சைத்தானின் ஆதிக்கத்தில் நுழைகிறாய். நீ எப்போதும் கர்த்தரின் ஆதிக்கத்தில் இரு. அவரால் நீ ஆசிர்வதிக்கப்படுவாய்....."

தனக்குத் தோன்றுவதை எல்லாம் அவனும் அவரிடம் மனம் விட்டுச் சொல்வான். "இங்கே வர்றவங்க கர்த்தரை மனசார வணங்கற மாதிரி தெரியலை ·பாதர். ஏதோ பேருக்கு வந்து எந்திரத்தனமாய் ப்ரார்த்திச்சுட்டு சேர்ந்து தேவையில்லாமல் வம்பு பேசிட்டு போறவங்க தான் அதிகம்னு தோணுது ·பாதர். கஷ்டத்தில் இருக்கிறவங்க மனமுருகப் ப்ரார்த்தனை செய்யறாங்க. ஆனா அவங்க கூட கஷ்டம் தீர்ந்துடுச்சுன்னா மத்தவங்க மாதிரியே மாறிடறாங்க. ஏன் ·பாதர்"

அவன் எதையும் ஆழமாகக் கவனிக்கும் விதம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. எனவே மூத்த பாதிரியார் அவன் சொல்லுவதை எல்லாம் புன்முறுவலோடு கேட்பார். சில சமயங்களில் பொருத்தமான பதில் இருந்தால் சொல்வார். இல்லாவிட்டால் சிரித்தபடி கேட்டுக் கொண்டு இருப்பார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இளம் பாதிரியாருக்கு அவர் ஒரு எடுபிடியுடன் இவ்வளவு நெருக்கமாகப் பழகுவது சிறிதும் பிடிக்கவில்லை.

மூத்த பாதிரியார் ஜான் டேவிட் வந்து சேர்ந்த 12வது வருடம் இறந்து போனார். ஜான் டேவிடிற்கு அவர் மரணம் பேரிழப்பாக இருந்தது. கர்த்தரைத் தவிர அவன் பேச்சைக் கேட்கவோ புரிந்து கொள்ளவோ இனி யாரும் இல்லை. மூத்த பாதிரியார் இறந்து போய் ஒருவாரத்திற்குள் அவன் கனவில் கர்த்தர் வந்து புன்னகைத்தார். அவன் சந்தோஷம் தாங்காமல் சக பணியாளன் ஒருவனிடம் அதைச் சொன்னான். சக பணியாளன் சொன்னான். "அதெல்லாம் மனப்பிராந்தி" அன்றிலிருந்து இது போன்ற விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வதை விட்டு விட்டான்

மூத்த பாதிரியார் மறைவிற்குப் பின் தேவாலயம் இளம் பாதிரியார் நிர்வாகத்தில் வந்தது. எல்லோரையும் அவரவர் இடத்தில் வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த இளம் பாதிரியார் ஜான் டேவிடை அலட்சியப்படுத்த ஆரம்பித்தார். ஜான் டேவிடிற்கோ இது போன்ற சில்லரை விஷயங்கள் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அது இளம் பாதிரியாரை மேலும் ஆத்திரமடைய வைத்தது.

மற்ற பணியாளர்கள் இவர் அதிக மரியாதையையும் பணிவையும் எதிர்பார்க்கிறார் என்பது தெரிந்தவுடன் அவர் எதிர்பார்த்தபடி நடந்து கொண்டார்கள். ஜான் டேவிட் எப்போதும் போலவே இருந்தான். அவனுக்கு அவர் கூடுதல் வேலைகள் தர ஆரம்பித்தார். அவன் கர்த்தரின் வேலை என்று அதையும் சந்தோஷமாகவே செய்தான். பகலில் அவனுக்கு சிறிதும் ஓய்வில்லாமல் அவர் பார்த்துக் கொண்டார். அதனால் அவன் தினமும் இரவு நேரத்தில் அவனுடைய கர்த்தர் சிலை முன் மெழுவர்த்தியைப் பற்ற வைத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது பிரார்த்தித்துப் பேசுவான்.

வருடா வருடம் மற்றவர்களின் ஊதியத்தை உயர்த்துவது போல அவன் ஊதியத்தை இளம் பாதிரியார் ஒருகட்டத்தில் உயர்த்தாமல் விட்டுப் பார்த்தார். அவன் அதைப் பற்றிக் கேட்க வருவான். அவனுக்கு நன்றாக உபதேசித்து விட்டுப் பின் உயர்த்தலாம் என்று நினைத்தார்.

ஜான் டேவிடிற்கோ கர்த்தருக்காக செய்யும் வேலைக்கு ஊதியம் வாங்குவதே மனதைப் பல சமயங்களில் உறுத்துவதுண்டு. எனவே இப்படி ஊதியத்தை உயர்த்தாததை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இளம் பாதிரியாரிடம் சம்பள உயர்வு பற்றி நேரில் சென்று பேசும்படி ஜான் டேவிட்டிடம் மற்ற பணியாளர்களும் சொன்னார்கள். அவன் அதையும் லட்சியம் செய்யவில்லை. அவன் அதைப் பற்றிப் பேச வராததையும் இளம் பாதிரியார் திமிர் என்றே எண்ணினார். இனியும் எவ்வளவு நாள் அவன் தாக்குப் பிடிக்கிறான் என்பதையும் பார்த்து விடலாம் என்று எண்ணினார். பதினைந்து வருடங்களாக அவன் மாதசம்பளம் மாறாமலேயே இருந்தது.

ஜான் டேவிடிற்கு தன் சம்பள விஷயமோ தன்னை அலட்சியப்படுத்தும் விஷயமோ பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும் இளம் பாதிரியார் தேவாலயத்திற்கு வரும் கிறிஸ்தவர்களிடையே ஏழை, பணக்காரர், சாமானியர், செல்வாக்குள்ளவர் என்று வித்தியாசப்படுத்தி நடந்து கொள்ளும் விதம் மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. மாட்டுத் தொழுவத்தில் பிறந்த கர்த்தரின் போதனைகளை போதிப்பவர்கள் இப்படி ஏழைகளையும், சாமானியர்களையும் அலட்சியப்படுத்தலாமா என வருத்தப்பட்டான்.

அவர் அப்படி சிலரை உதாசீனப்படுத்தும் போது ஜான் டேவிட் அருகில் இருந்தானானால் அவனையும் அறியாமல் வருத்தத்துடன் பார்ப்பான். அதைக் கவனிக்கும் போது இளம் பாதிரியாருக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாகியது. 'என்னை எடைபோட இவன் யார்? இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று அவர் அடிக்கடி தனக்குள் கேட்டுக் கொண்டார். அவனிடம் வாய் விட்டுக் கேட்கும் சந்தர்ப்பம் ஏனோ இதுவரை வரவில்லை.

மற்ற பணியாளர்கள் ஜான் டேவிட் மீது இளம் பாதிரியாருக்கு ஏதோ மனவருத்தம் இருப்பதை அவனிடம் வந்து அடிக்கடி சொன்னார்கள். நேரில் போய் அவரிடம் பேசச் சொன்னார்கள். அப்படிப் பேசினால் கண்டிப்பாக சம்பளத்தைக் கூட்டிக் கொடுப்பார் என்று சொன்னார்கள். சம்பளம் அதிகமாகக் கேட்கும் எண்ணம் ஜான் டேவிடிற்கு இல்லை என்றாலும் அவருக்கு அவன் மீது ஏதாவது மனவருத்தம் இருக்குமானால் அதை நீக்கத் தன்னால் முடிந்ததை உடனடியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஜான் டேவிடிற்கு சில நாட்களாகத் தோன்றி வருகிறது.

நன்றாகச் சிந்தித்துப் பார்த்த போது அவர் தேவாலயத்திற்கு வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது பெரிய விஷயமல்ல என்று அவனுக்குத் தோன்றியது. கர்த்தரைக் காண வருபவர்கள் மற்றவர்கள் தங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கர்த்தர் என்றும் பேதம் பார்ப்பதில்லையே!

தன் இன்றைய சம்பாஷணையில் கர்த்தரிடம் அவன் சொன்னான். "எனக்குத் தெரிந்து நான் அவரைப் புண்படுத்தும் படியாக எதுவும் செய்ததாய் நினைவில்லை. மூத்த பாதிரியார் அன்றைக்குச் சொன்னது போல அன்பு, கருணை, இரக்கம் போன்ற நல்ல தன்மைகளையே நான் என்னிடம் தக்க வைத்துக் கொள்கிறேன், கர்த்தரே. அதற்கு எதிர்மாறான எதையும் நான் வந்தவுடன் விரட்டிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் என்னால் இன்னொருவர் மனதில் மோசமான எண்ணங்கள் வருமானால் அதுவும் என் தவறே என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. கண்டிப்பாக அவரிடம் சென்று பேசப் போகிறேன் கர்த்தரே......"

சொல்லி முடித்தவுடன் தன் கர்த்தர் முகத்தில் அதற்கான வரவேற்பைக் கண்ட ஜான் டேவிட் மனநிறைவுடன் எழுந்தான். தன் வெள்ளை உடைகளை அவர் காலடியில் இருந்து திரும்ப எடுத்துக் கொண்டான். தேவாலயத்திற்கு வரும் செல்வந்தர் ஒருவர் இந்த கிறிஸ்துமஸிற்கு ஆயிரம் ரூபாய் பணத்தை அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து நல்ல டிரஸ் தைத்துக் கொள்ளச் சொன்னதால் இந்த முறை அந்த அழகான வெண்ணிற உடை தைத்திருந்தான்.

"இந்த டிரஸ் நல்லாயிருக்கா கர்த்தரே. முதல் முதலில் இவ்வளவு நல்ல டிரஸ்ஸை கிறிஸ்துமஸிற்காக தைத்திருக்கிறேன். பிடிச்சிருக்கா?"

கர்த்தரின் புன்ன்கை பிடித்திருக்கிறது என்று சொன்னதாய் தோன்ற ஜான் டேவிட் திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தான். மேடையில் கர்த்தரின் சிலை அருகே இருந்த மின் விளக்குகளை இளம் பாதிரியார் மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்ததைக் கவனித்த ஜான் டேவிட் அவரை நெருங்கினான்.

ஜான் டேவிட் தன்னருகே வந்ததைக் கண்ட இளம் பாதிரியார் முகத்தில் புன்னகை படர்ந்தது. "இந்த வீராப்பெல்லாம் எத்தனை காலத்திற்கு நிற்கும்? தாக்குப் பிடிக்க முடியாமல் சம்பளம் கூட்டித் தரக் கேட்க வந்து விட்டான்" என்று மனதில் சொல்லிக் கொண்டவர் என்ன என்று ஜான் டேவிடைக் கேட்டார்.

"·பாதர். எனக்குப் படிப்பு கிடையாது. பெரிய பெரிய விஷயங்கள் புரியாது. நான் கிணத்துத் தவளை மாதிரி. என் உலகம் இந்த தேவாலயத்திலேயே அடங்கிடுச்சு. வேற உலகமும் தெரியாது..... என் மேல் உங்களுக்கு ஏதோ வருத்தம் இருக்கிறதா சிலர் என் கிட்டே சொல்லி இருக்காங்க. அது உண்மையான்னு எனக்குத் தெரியாது. எதனாலன்னும் எனக்குத் தெரியாது. எதுவாய் இருந்தாலும் நீங்க என்னை மன்னிக்கணும்....." ஜான் டேவிட் அவர் முன்னால் மண்டி இட்டு வணங்கினான்.

இளம் பாதிரியார் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார். வணங்கி நிமிர்ந்தவன் அவர் மன்னித்தேன் என்று சொல்லக் காத்திருக்க அவரோ அவன் சம்பளப் பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்க்க பிறகு இளம் பாதிரியாரே பேசினார்.

"சொல்லு. வேறென்ன வேணும்"

"உங்க மன்னிப்பு தவிர வேறு எதுவுமே எனக்கு வேண்டாம் ·பாதர். கர்த்தர் எனக்கு எல்லாமே கொடுத்திருக்கார். மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொன்னால் இந்த கிறிஸ்துமஸை நிம்மதியாய் கொண்டாடுவேன்"

அவன் மன்னிப்பைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்று கள்ளங்கபடமில்லாமல் சொன்ன விதம் அவரை என்னவோ செய்தது. அவனையே பார்த்தபடி நிறைய நேரம் நின்றிருந்து விட்டு குரல் கரகரக்க அவர் சொன்னார். "கர்த்தரின் முன்னிலையில் நான் சொல்லத்தக்க தவறு எதையும் நீ செய்யவில்லை ஜான் டேவிட். அதனால் மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை."

அவன் மனதில் இருந்து ஒரு பாரம் நீங்கியது போல் இருந்தது. அவரைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

அவர் வெளிப்படையாகச் சொன்னார். "நான் நீ சம்பள உயர்வு பற்றி என்னிடம் கேட்பாய் என்று நினைத்தேன்."

ஜான் டேவிட் குற்ற உணர்வுடன் சொன்னான். "எனக்கு தேவாலயத்தில் செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்கறது சரியான்னு இன்னும் தெரியலை. சில சமயத்தில் கர்த்தர் தர்றார்னு தோணுது. சில சமயம் கர்த்தருக்கு செய்யற வேலைக்குக் காசு வாங்கறதான்னு தோணுது. அதனால் எனக்கு சம்பள உயர்வு பற்றிய எண்ணமே வரலை."

இளம் பாதிரியார் அவனது பதிலில் மெய் சிலிர்த்துப் போனார். மூத்த பாதிரியார் அவனைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருந்தது ஏன் என்று இப்போது அவருக்கு விளங்கியது.

"மெர்ரி கிறிஸ்துமஸ் ·பாதர்"

"மெர்ரி கிறிஸ்துமஸ் ஜான் டேவிட்"

அவர் குரலில் இதுநாள் வரை இல்லாத புதிய சினேகம் இருந்ததாக ஜான் டேவிடிற்குத் தோன்ற அவரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு தேவாலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு மனம் லேசாக இருந்தது. இன்று செய்ததை முன்பே செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ஏன் நாம் மன்னிப்பு கேட்பது போன்ற நல்ல செயல்களைச் செய்யக் கால தாமதம் செய்கிறோம் என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

வெளியே சில பிச்சைக்காரர்கள் நின்று கொண்டு இருந்தனர். சில்லரைகளை எடுத்து நீட்டப்பட்ட கைகளில் கொடுத்தபடியே வந்த ஜான் டேவிட் சில்லரை முடிந்த பின்னும் இன்னொரு கை நீட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டான். அந்த பிச்சைக்காரன் அரையிருட்டில் நின்று கொண்டு இருந்தான். கிட்டத் தட்ட அவனைப் போன்றே உடல்வாகு உடையவனாக இருந்தாலும் அவன் இளைஞனாகத் தெரிந்தான். கந்தல் உடைகளில் இருந்த அந்த இளம் பிச்சைக்காரனுக்குத் தர சில்லரை இல்லாதது ஜான் டேவிடிற்கு மன வருத்தத்தைத் தந்தது.

ஒரு கணம் தன் கையில் இருந்த அந்த ப்ளாஸ்டிக் பையைப் பார்த்த ஜான் டேவிடிற்கு ஒரு எண்ணம் தோன்றியது. "ஐம்பது வயசான எனக்கு எதற்கு இவ்வளவு நல்ல டிரஸ். சின்ன வயசுல இருக்கிற இந்தப் பிச்சைக்காரனுக்கு இதைக் கொடுத்தால் இவன் இதை உடுத்திகிட்டு இந்த கிறிஸ்துமஸை எவ்வளவு சந்தோஷமாய் கொண்டாடுவான்"

ஜான் டேவிட் பின் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. தன் கையில் இருந்த ப்ளாஸ்டிக் பையை அந்தக் கையில் வைத்து மனதார சொன்னான். "மெர்ரி கிறிஸ்துமஸ்"

அந்த ப்ளாஸ்டிக் பையை வாங்கிக் கொண்ட அந்த பிச்சைக்காரன் ஓரிரு அடிகள் எடுத்து வைத்து வெளிச்சத்திற்கு வந்தான். "மெர்ரி கிறிஸ்துமஸ்" என்றான்.

ஜான் டேவிட் உடலில் மின்சாரம் பாய்ந்தது. அண்ட சராசரங்கள் ஒரு கணம் அசையாமல் நின்றன. காலம் ஸ்தம்பித்து நின்றது. கந்தல் உடைக்கு எதிர்மாறான தேஜசுடன் அவன் தினமும் பார்த்துப் பேசும் அவனுடைய கர்த்தர் காட்சி அளித்தார். அழகாய் புன்னகை செய்து கையை உயர்த்தி ஆசி கூறியபடி அவன் சிரசைத் தொட்டார். அவன் உடல் லேசாகி அவன் விண்வெளியில் மிதப்பது போல் தோன்றியது. வாழ்நாள் பூராவும் அவன் கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. பேச முயன்றான். முடியவில்லை. "கர்த்தரே, கர்த்தரே....."என்று திரும்பத் திரும்ப மனதில் சொன்னான்.....

எத்தனை நேரம் அந்த அனுபவத்தில் திளைத்திருந்தான் என்று தெரியவில்லை. அவன் பழைய நிலைக்குத் திரும்பிய போது அவன் தரையில் மண்டி இட்டு கண்களில் இருந்து அருவியாக ஆனந்தக் கண்ணீர் வழிய "கர்த்தரே கர்த்தரே" என்று இடை விடாமல் சொல்லிக் கொண்டு இருந்தான். குழப்பத்துடன் தன்னைப் பார்த்தபடி சூழ்ந்து நின்று கொண்டு இருந்த உருவங்களுக்கிடையே அவன் கர்த்தரைத் தேடினான். கர்த்தர் அந்த வடிவத்தில் அங்கு இருந்த சுவடே இருக்கவில்லை. அவனுடைய ப்ளாஸ்டிக் பையையும் காணவில்லை.

"என்ன ஆயிற்று?" என்று யாரோ கேட்டார்கள். மனம் ஆனந்தத்தில் நிறைந்திருந்த அந்த நேரத்தில் மற்றவர்களிடம் சொல்ல அவனுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை.

-என்.கணேசன்

(நன்றி: நிலாச்சாரல்)
(2007 கிறிஸ்துமஸில் ஜான் டேவிட் என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதை)

Monday, December 22, 2008

செக்குமாடாய் உழைக்காதீர்கள்

வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள்.

செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப்பும் இருக்கிறது. இந்த செக்குமாடு உழைப்பில் சிந்தனை இல்லை. நாளுக்கு நாள் வித்தியாசம் இல்லை. புதியதாய் முயற்சிகள் இல்லை. மாற்று வழிகள் குறித்த பிரக்ஞை இல்லை. இது போன்ற உழைப்பு உங்கள் நாட்களை நகர்த்தலாம், ஆனால் வாழ்க்கையை நகர்த்தாது.

நாளுக்கு நாள் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாகத் தேவைகள் உருவாகின்றன. பழைய சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகள் உருவாகின்றன. உங்கள் தொழிலைத் தீர்மானிக்கும் மனிதர்கள் மாறுகிறார்கள். நேற்று வெற்றியை ஏற்படுத்திய வழிமுறைகள் இன்று அதே விளைவுகளை ஏற்படுத்தத் தவறுகின்றன. இப்படிப்பட்ட நேரத்திலும் ஒரே போல் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உழைப்பது தான் செக்குமாட்டின் உழைப்பு. இப்படி உழைத்து விட்டு உயரவில்லையே என்று வருத்தப்படுவதில் பயனில்லை.

உயர வைக்கும் உழைப்பு எப்படி இருக்க வேண்டும்?

*செய்யும் செயல் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

*என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், கிடைக்கக்கூடிய பலன் என்ன, அது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந்திருங்கள்.

*நாம் செயல்புரிகிற விதம் கச்சிதமானது தானா, மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள், நம்மை விட அவர்கள் செயல்புரிகிற விதம் சிறந்ததாக உள்ளதா என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டும். அப்படி நம்மை விடச் சிறப்பாக இருந்தால் அதைப் பின்பற்றத் தயங்கக்கூடாது. நம்முடைய வழிமுறை என்பதற்காக தரம் குறைந்த ஒன்றை கண்ணைமூடிப் பின்பற்றும் முட்டாள்தனத்தை செய்யக்கூடாது.

*செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும். செய்யச் செய்ய செயலில் நாளுக்கு நாள் மெருகு கூடா விட்டால், தரம் உயரா விட்டால், செயலைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் நேரம் கணிசமாகக் குறையா விட்டால் நமக்குள்ள ஈடுபாட்டிலோ, கவனத்திலோ குறை உள்ளது என்பது பொருள்.

*நம் தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக கவனித்து வர வேண்டும்.

*சரியாகச் செய்தும், முயன்றும் போதிய பலன் தராத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும். 'செண்டிமெண்டல்' காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம்.

*இதை விட்டால் வேறு வழியில்லை, இது தான் எனக்கு விதித்திருக்கிறது, இதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவன் என்று நம்மை நாமே மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. புதியதை முயன்று பார்க்கத் தயங்கக்கூடாது. முயன்று பார்த்தால் ஒழிய நம் உள்ளே உள்ள திறமைகளை நாம் அறிய முடியாது.

இப்படி எல்லா அம்சங்களையும் உள்ளில் கொண்டு உழைக்கும் உழைப்பே உயர்வைத் தரும்.

-என்.கணேசன்

Tuesday, December 16, 2008

படித்ததில் பிடித்தது- Eight Life Lessons


வாழ்க்கை நமக்குத் தொடர்ந்து பாடங்கள் தந்தாலும் அவற்றைக் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெறுபவர்கள் மிகக் குறைவு. அப்படிக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் தாங்கள் கற்ற பாடங்களைச் சொல்லும் போது அதைக் கேட்டுப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். ஏனென்றால் வாழ்க்கை நமக்கு அந்தப் பாடத்தை நடத்தி நாம் சிரமப்பட்டு கற்க வேண்டியதில்லை அல்லவா. எட் ·போர்மன் கற்ற இந்தப் பாடங்கள் எட்டும் விலைமதிப்பற்ற அறிவுரைகள். படித்துப் பயன்படுத்துங்களேன்.


Eight Life Lessons that have Helped Me


• THINK about what you THINK ABOUT..... and if you catch yourself thinking about unhappiness, ill health and adversity, "change the channel" and think about what you want to happen!

• When something happens by chance, follow up. Lucky people tend to notice and act on good things that occur by happenstance.

• Believe that good things will happen. Expectations have a way of coming true.

• When bad things happen, look for the bright side; i.e., "what did I learn from that?" or, "how do I keep it from happening again?" Don't dwell on it, move on!

• If the horse dies, dismount. Don't continue to pour money and effort into a lost cause.

• Don't look for love in the wrong places..... not just romantic love, but the love of "stuff." Stuff is O.K., but understand the delusion of "I'll be happy when I have this or that or, when I live over there, or when this happens." Happiness is a state of mind in which our thinking is pleasant most of the time.

• Failure is a CHOICE made by the undisciplined. Failing to meet your objectives, regardless of what they are, is a choice, because something else has been given higher priority. If you fail, it is because you choose to fail.

• You don't "catch" depression and you don't "catch" happiness ..... you "create" it by the "thoughts" you put into your mind. Carefully choose what you read, listen to, and the people with whom you associate.

- Ed Foreman

Monday, December 8, 2008

இறைவன் எந்த மதத்தவன்?


றைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.

உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?

பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.

இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது. ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.

இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?

- என்.கணேசன்

Monday, December 1, 2008

அடுத்தவர் பாராட்டு அவசியமா?

பேரும் புகழும் வேண்டி மனிதர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'அரைப்படி அரிசியில் அன்னனம், விடியும் வரையில் மேளதாளம்' என்றொரு பழமொழி உண்டு. குறைவாகச் செய்தாலும், பலரும் அதைப் பெரிதாக நினைத்துப் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப் பாராட்டத் தவறுபவர்கள் வயிற்றெரிச்சல் பேர்வழிகள் என்ற வகைப்படுத்தப்படுவார்கள். இன்று அரசியல், ஆன்மீகம், கலை என்று எல்லா துறைகளிலும் இந்தப் புகழாசை மலிந்திருக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் புகழ் பற்றிய எண்ணமே இல்லாமல் பெரும் சாதனைகள் செய்த ஓரிருவர் அல்ல, ஒரு கூட்டமே ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அஜந்தா, எல்லோரா சென்றிருந்தேன். அஜந்தாவில் பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு ஓவியமும் கலை நுணுக்கத்துடன் வரையப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஓவியத்தை வரையவும் பல வாரங்கள் தேவைப்பட்டிருக்கும். அந்தக்காலம், இந்தக் காலம் போல வண்ணங்கள் ரெடிமேடாகக் கிடைக்கும் காலமல்ல. ஒவ்வொரு வண்ணத்தையும் இயற்கை முறையில் கஷ்டப்பட்டு தயாரித்து வரைந்திருக்கிறார்கள். ஆனால் எந்த ஓவியத்திலும் வரைந்தவரின் பெயர் இல்லை. (அதற்கு கீழே இந்தக் கால ரசிகர்கள் தங்கள் பெயர்களை எழுதிப் புளங்காகிதம் அடைந்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதனால் இப்போது அதன் அருகே பார்வையாளர்களை விடுவதில்லை. சில அடிகள் தள்ளியே நின்று பார்க்க வேண்டி இருக்கிறது).

எல்லோராவிலும் கண்ணையும் கருத்தையும் கவரும் ஏராளமான சிற்பங்கள் இருந்தன. மலையைக் குடைந்து செதுக்கிய சிற்பங்கள் பல. எல்லாம் மிக நுணுக்கமான நிகரில்லா வேலைப்பாடுகள். அதிலும் ஒன்றில் கூட செதுக்கியவர் பேரில்லை.

நம் உபநிடதங்களை மிஞ்சக் கூடிய அறிவுப் பொக்கிஷங்கள் வேறு ஏதாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. அவற்றில் கூட எழுதிய ஆட்கள் பெயர் இல்லை.

சரித்திரம் நம்மைப் பற்றிப் பேச வேண்டும் என்ற ஆர்வம் அந்த ஓவியர்களிடமோ, சிற்பிகளிடமோ, ரிஷிக்களிடமோ இருந்தது போலத் தெரியவில்லை. ஆத்மதிருப்தி ஒன்றே அவர்கள் குறிக்கோளாகவும், பெற்ற பலனாகவும் இருந்திருக்கிறது.

இன்றோ பெருமைக்குரிய செயலுக்காகப் பாராட்டு என்ற நிலை போய் பாராட்டை எதிர்பார்த்து செயல் என்றாகி விட்டது. இதில் பெரிய குறை என்ன என்றால் இது போன்ற செயலின் தன்மை பாராட்டைப் பொறுத்தே அமையும். பாராட்டு இல்லா விட்டால் செயலும் இல்லை என்ற நிலையும் வந்து விடும். ஒவ்வொன்றையும் மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று யோசித்து மற்றவர்களைத் திருப்திப்படுத்த முனைந்தால் நம் செயல்களின் மூலம் ஆத்ம திருப்தியைக் காணத் தவறி விடுவோம்.

பாராட்டைப் பொறுத்தே செயல்புரிவது என்று சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள் நினைத்திருந்தால் இன்று நாம் எந்தக் கண்டுபிடிப்புகளின் பயன்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்க முடியாது. காரணம் எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆரம்ப கட்டங்களில் பாராட்டை விட கசப்பான விமரிசனங்களும், ஏளனமும் தான் பரிசாகக் கிடைத்திருக்கின்றன. பல உண்மைகள் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட போது கடும் எதிர்ப்பும், பைத்தியக்காரப் பட்டமும் தான் கிடைத்திருக்கின்றன. விமரிசனங்களின் உஷ்ணத்தில் பின் வாங்கியிருந்தால் எந்த சாதனைகளுமே உலகில் அரங்கேறி இருக்க முடியாது. இவ்வளவு தூரம் உலகம் முன்னேறி இருக்க முடியாது.

எல்லாத் துறைகளிலும் முத்திரை படைத்தவர்களும், ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்திற்குக் காரணமாய் இருந்தவர்களும் பாராட்டை விட தங்கள் ஆத்ம திருப்தியையே முக்கியமாக நினைத்தார்கள். தாங்கள் சரியென்று இதயத்தின் ஆழத்திலிருந்து நம்பியதைச் செய்தார்களே ஒழிய பாராட்டுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள முயற்சிக்கவில்லை.

எனவே அடுத்தவர் பாராட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை எப்போதும் கொடுத்து விடாதீர்கள். அடுத்தவர் பாராட்டுக்கள் உங்கள் செயலின் தன்மையைத் தீர்மானிக்க விட்டு விடாதீர்கள். தங்கள் நோக்கம் உன்னதமாக இருக்கட்டும். செயல் தங்கள் முழுத் திறமையின் வெளிப்பாடாக இருக்கட்டும். இரண்டும் இருந்தால் அந்தச் செயலைச் செய்து முடிக்கையில் கண்டிப்பாக மனநிறைவைக் காண்பீர்கள். அதைவிடப் பெரிய பாராட்டு அடுத்தவரிடமிருந்து உங்களுக்குத் தேவையில்லை.


-என்.கணேசன்

Tuesday, November 25, 2008

தனி மனிதனால் என்ன செய்ய முடியும்?


ன்னைப் போன்ற தனி மனிதனால் என்ன செய்து விட முடியும் என்று பலரும் பல சமயங்களில் நினைப்பதுண்டு. எதையும் மாற்றி அமைக்கும் சக்தி தனக்கு இல்லை என்பதே பல தனி மனிதர்களின் வாதம். சமீபத்தில் நான் இணையத்தில் படித்த குட்டிக் கதையில் இதற்கு பதில் இருந்ததாக எனக்குப் பட்டது.

ஒரு சிறு பறவை காட்டுப் புறாவிடம் கேட்டது. "ஒரு பனித் துகளின் எடை என்ன?"

யோசித்து விட்டு புறா சொன்னது. "இல்லவே இல்லை என்றே சொல்லக் கூடிய அளவு எடை தான் அதற்கு"

"அப்படியானால் நான் சொல்லும் இந்த சம்பவத்தைக் கேள். நான் ஒரு பனி விழும் இரவில் ஒரு மரத்தருகே ஒதுங்கி இருந்தேன். பனி பலமாக விழாமல் லேசாக விழுந்து கொண்டிருந்ததது. எனக்கு பொழுது போகாததால் நான் அந்த மரத்தின் கிளை ஒன்றில் விழும் பனித்துகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். சரியாக 37,41,952 பனித்துகள்கள் விழும் வரை அந்தக் கிளை அவற்றைத் தாங்கிக் கொண்டிருந்தது. அடுத்த ஒரு துகள், நீ சொன்னாயே இல்லவே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு எடை உள்ள ஒரு துகள், விழுந்தவுடன் அந்த மரக்கிளை பாரம் தாங்காமல் முறிந்து கிழே விழுந்து விட்டது."

பழங்காலத்தில் இருந்து அமைதிக்கும், மாற்றத்திற்கும் அடையாளமாகக் கருதப்பட்ட புறாவை சிந்திக்க வைத்து விட்டு அந்த சிறிய பறவை பறந்து சென்று விட்டது. நிறைய நேரம் சிந்தித்த புறா தனக்குள் சொல்லிக் கொண்டது. "அதே போல் உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படக்கூட ஒரு தனி மனிதனின் முயற்சி மட்டும் தேவையாய் இருக்க வாய்ப்புண்டு."

இந்தக் குட்டிக் கதை சொல்வது போல உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படத் தயாராக இருக்கலாம். ஒரு தனி மனிதனின் முயற்சி அந்த மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் கடைசி உந்துதலாக இருக்கலாம். அதே போல எல்லா மாற்றங்களும் முதலில் மனித மனதிலேயே கருவாக ஆரம்பிக்கின்றன. இப்படி ஆரம்பக் கருவானாலும் சரி கடைசி விளைவானாலும் சரி தனி மனிதர்களால் தான் நிகழ்கின்றன. எத்தனையோ எண்ணற்ற தனிமனிதர்களின் பங்கு எல்லா மாற்றத்திலும் உண்டு. அதில் எந்தத் தனி மனிதனின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஒரு மரக்கிளையை வெட்டி முறிக்க நூறு சம்மட்டி அடிகள் தேவைப்படலாம். கடைசி அடியில் தான் கிளை முறிகிறது என்றாலும் அந்த நூறாவது அடியைப் போல் முதல் 99 அடிகளும் கூட சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

எனவே இனி எப்போதும் என்னைப் போன்ற தனி மனிதன் என்ன செய்து விட முடியும் என்று எப்போதும் எண்ணி விடாதீர்கள். மாற்றத்தின் ஆரம்பமானாலும், முடிவிலானாலும், இடைப்பட்ட நிலையில் ஆனாலும் தனி மனிதனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.

-என்.கணேசன்

Tuesday, November 18, 2008

சிக்கனம் Vs கஞ்சத்தனம்

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். சம்பவம் நடந்த இடம் அமெரிக்காவா இங்கிலாந்தா என்று சரியாக நினைவில்லை. ஒரு நகரத்தில் வயதான மகாகஞ்சன் ஒருவன் வீட்டில் இறந்து போனான். அவன் இறந்து போனதையே வீட்டில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த பின்பு தான் கண்டுபிடித்தார்கள். கதவை உடைத்துக் கொண்டு போய் பிணத்தை எடுத்திருக்கிறார்கள். போஸ்ட் மார்ட்டத்தில் அவன் குளிர்தாங்காமல் இறந்து போயிருக்கிறான் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவனுடைய வீட்டில் ஹீட்டர் இருந்திருக்கிறது. ஆனால் அவன் அதை மிகக்குறைவாகவே உபயோகித்திருக்கிறான். வேடிக்கை என்னவென்றால் அவன் படுக்கைக்கு கீழ் லட்சக்கணக்கான பணம் இருந்திருக்கிறது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு அவன் ஒரு பணக்காரன் என்பதை நம்பவே முடியவில்லையாம். தெருக்களில் பலரும் வீசி விட்டுப் போயிருந்த பொருட்களை அவன் சேகரித்து வருவதைக் கண்டிருந்த அவர்கள் பாவம் ஏழை என்றே நினைத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை படுக்கையின் கீழ் வைத்திருக்கும் அவனுக்கு உயிர் வாழத் தேவைக்கான அளவு கூட ஹீட்டர் உபயோகிக்க மனம் வரவில்லை. இவன் ஏழையா, பணக்காரனா?

சிக்கனம் மிக முக்கியமானது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கை சீரான முறையில் செல்ல சிக்கனம் மிக அவசியம். அது இல்லா விட்டால் எத்தனையோ தேவையானவற்றை அவர்கள் இழந்து விட நேரிடும். "ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை போகாறு அகலாக்கடை" என்றார் திருவள்ளுவர். வருமானம் அளவானதாக இருந்தாலும் பரவாயில்லை செலவுகள் அதை மீறி போய் விடாத பட்சத்தில் என்கிறார். இன்னொரு இடத்தில் அளவறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி திடீரென்று இல்லாமல் போய் விடும் என்று எச்சரிக்கிறார்.

தேவையில்லாததற்கெல்லாம் செலவு செய்பவர்கள் அவசியமானதற்குக் கூட செலவு செய்யப் பணமில்லாமல் அவதிப்படுவதை நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். க்ரெடிட் கார்டுகளை வைத்துக் கொண்டு இப்போதே பணம் தர வேண்டியதில்லையே என்ற அலட்சியத்தில் ஆடம்பரப் பொருள்களை வாங்கி விட்டு பின் மாதாந்திர செலவுக்கும் மருத்துவச் செலவுக்கும் பிறரிடம் கையேந்தி நிற்பதையும் நாம் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதை அழகாக பாமா விஜயம் திரைப்படத்தில் "வரவு எட்டணா செலவு பத்தணா" பாட்டில் கவிஞர் கூறுவார். எனவே சிக்கனத்தின் தேவை பற்றி இன்னொரு கருத்து இருக்க முடியாது.

ஆனால் சிக்கனமாக இருப்பதாக நினைத்து கஞ்சனாக இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல? ஆரம்பத்தில் நாம் கண்ட கஞ்சனைப் போல ஒரு முட்டாள் யாராவது இருக்க முடியுமா? தேவைக்கான செலவையும் செய்ய மறுப்பவன் சிக்கனம் என்ற நல்ல பண்பிலிருந்து நழுவி கஞ்சத்தனம் என்ற முட்டாள்தனத்திற்கு தள்ளப் படுகிறான்.

ஏராளமாக சொத்து சேர்த்தும் ஒரு டீ வேறு யாராவது வாங்கித் தரமாட்டார்களா என்று தேடும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ செல்வம் இருந்தும் வீட்டில் உணவுக்குக் கூட சரிவர செலவு செய்யாமல் மற்றவர்கள் தரும் விருந்தில் இனி இப்படியொரு சந்தர்ப்பம் வருமோ வராதோ என்ற சந்தேகத்தில் எல்லா பதார்த்தங்களையும் அள்ளி அள்ளி விழுங்கும் பரிதாபத்திற்குரிய கஞ்சர்களையும் பார்த்திருக்கிறேன். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று பட்டினத்தார் பாடினார். இப்படி இருக்கையில், இருக்கும் செல்வத்தை இவர்கள் எதற்காக இப்படி கஷ்டப்பட்டு அடைகாக்கிறார்கள்?

ஒரு செல்வநிலையில் இருப்பவனுக்கு சிக்கனமாக இருப்பது இன்னொரு மேல்மட்ட செல்வநிலையில் இருப்பவனுக்கு கஞ்சத்தனமாக ஆவதுண்டு. அடிமட்ட நிலையில் இருந்து கஷ்டப்பட்டு மேலுக்கு வந்தவர்கள் ஆரம்ப கஷ்டகாலத்தில் சிக்கனமாக இருந்தது போலவே செல்வச் செழிப்பிலும் நடந்து கொள்ளும் போது கஞ்சன் என்ற பட்டத்தை அடைவதுண்டு. ஆனால் தெளிவாகச் சொல்வதென்றால் பணம் இருந்தும் அவசியமானதற்கும் செலவு செய்ய மறுப்பது தான் கஞ்சத்தனம். பணம் இருந்தும் ஆடம்பர அனாவசிய செலவுகளைச் செய்யாமல் இருப்பது தான் சிக்கனம். இந்த வரைமுறையின் படி சிக்கனமாக இருங்கள்;கஞ்சத்தனமாக இருந்து விடாதீர்கள்.

-என்.கணேசன்

Tuesday, November 11, 2008

இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே!



இளமை ஒரு கற்பூரப்பருவம். நல்லதும் சரி, கெட்டதும் சரி இந்தப் பருவத்தில் விரைவாக பற்றிக் கொள்ளும். ஒரு வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை இந்த இளமை எளிதில் அடையாளம் காட்டிவிடும். அந்த இளமைப் பருவத்தில் மூன்று விஷயங்கள் ஒருசேர அமையப் பெற்றால் ஒரு வாழ்க்கை நாசமே அடைகிறது என்பதை நான் பலர் அனுபவங்களில் இருந்து கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அவை என்ன?

1) நிறைய ஓய்வு நேரம்
2) நிறைய பணம்
3) தீய நட்பு

முதலாகக் குறிப்பிட்ட ஓய்வு நேரம் பல கலைகளின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அந்த நேரம் நூலகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், ஏதாவது நல்ல பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படும் போது மனநலம், உடல்நலம், சாதனைகள் என நல்ல விளைவுகளையே தரும். ஆனால் எத்தனையோ தீமைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகக் கூட இந்த ஓய்வு நேரம் ஆவதுண்டு.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படும் போது வாழ்வின் ஆதாரமாக இருக்கக் கூடியது. அப்படிப் பயன்படுத்தத் தவறுகையில் பணம் பெரும்பாலும் தேவையற்ற வழிகளிலோ, தீய வழிகளிலோ செலவாவது இயல்பே. பணம் கஷ்டப்பட்டு கிடைக்காத போது, அதன் அருமை அறியப்படுவதில்லை. அருமை அறியப்படாத போது அலட்சியமாகவே அது கையாளப்படுகிறது.

முதல் இரண்டும் சேர்ந்தாற் போல இருக்கும் இடங்களை, மூன்றாவதாகக் குறிப்பிட்ட தீய நட்பு வேகமாகத் தேடி வந்து விடுகிறது. சர்க்கரை இருக்கும் இடத்தை எறும்புக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? எனக்குத் தெரிந்த போதைப் பழக்கமுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இப்படி மூன்றும் சேர்ந்தாற் போல கிடைக்கப் பெற்றவர்களே.

இந்த மூன்றில் இரண்டு இருந்தாலும் வழி தவறிப் போகும் அபாயம் நிறையவே இருக்கிறது.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. சம வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருந்தார்கள். வழி தவற வாய்ப்புகள் குறைவு. ஒரு குழந்தை அப்படித் தவற ஆரம்பித்தாலும் மற்ற குழந்தைகள் மூலம் உடனடியாக வீட்டுப் பெரியவர்களுக்குத் தகவல் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்றோ தங்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்களைக் கடைசியாக அறிவதே பெற்றோர்கள் என்ற நிலை தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது.

எனவே இளமைப் பருவத்தில் உங்கள் சகோதர சகோதரிகளோ, உங்கள் குழந்தைகளோ இருப்பார்களேயானால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களது ஓய்வு நேரமும், பணமும் எப்படி செலவாகிறது என்பதைக் கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் நண்பர்களைப் பற்றி நன்றாக அறிந்திருங்கள்.

'நான் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது' என்று சொல்லி உங்கள் குழந்தைகளைப் பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க முற்படாதீர்கள். நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தை பட வேண்டியதில்லை. உண்மை தான். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டுத் தான் சம்பாதிக்கிறீர்கள் என்ற விஷயமே தெரியாதபடி உங்கள் குழந்தையை வளர்த்து விடாதீர்கள்.

பயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்துங்கள். பணத்தின் அருமையையும், காலத்தின் அருமையையும் உணர்ந்தவர்களை எந்த தீய சக்தியும் நெருங்குவதில்லை.

- என்.கணேசன்

Thursday, November 6, 2008

படித்ததில் பிடித்தது - 6 As of SUCCESS



எது வெற்றி? வெற்றியை நிர்ணயிக்கும் அம்சங்கள் என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலை மிக எளிமையாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் சுவாமி தேஜோமயானந்தா விளக்கி இருக்கிறார். உண்மையான வெற்றியடைய தேவையென அவர் கூறும் ஆறு அம்சங்கள் மனிதனுக்கு உள்ளே தான் இருக்கின்றன, வெளியில் இல்லை என்று கூறும் இக்கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். நீங்களும் படியுங்களேன்.

என்.கணேசன்


6 As of SUCCESS

The subject can be explained in many ways. The common definition of Success is - to gain what one seeks. E.g. in cricket, if a bowler gets a wicket, he is successful; if a batsman scores a century, he is successful. However, such success is not always admirable - pickpockets, terrorists - they may be successful, but such success is not considered good.

In the Ramayana, Ravana kidnapped Sita and had a fight with Jatayu on his way to Lanka. Even though Jatayu failed in his attempt to save Sita, his failure is considered a success as compared to Ravana's success in taking away Sita. Though Ravana achieved temporary success in kidnapping Sita, in reality he failed because he was unable to make Sita his wife.

True success depends more on inner means than outer means. The six A:s of success are:

1. Aptitude
Natural interest in a particular field. Somebody has an aptitude for music; somebody for arts; another for business; yet another for sports, etc. Some have an aptitude for aptitude tests! If you have the aptitude for something, concentration is natural in that field.

2. Aspiration
Enthusiasm in the mind. One-may have the aptitude, but one may not feel like doing the work at hand.

3 . Ability
One may have the enthusiasm to sing, but if there is no ability, it is torture for the listeners.

4. Application
One should be able to apply one's mind at any piece of work. Being focussed is a very important ingredient of success, whatever the field.

5 . Attitude
When the going gets tough, it is the tough who keeps going. Never get demoralised. Attitude determines the altitude - the heights to which you can go. Such a person sees an opportunity even in difficulty.

6. Altar of dedication
In life, if you have an altar, your life will alter. e.g. Mahatma Gandhi - an ordinary person underwent a complete transformation because of just one goal- the nation's independence. Generally, people work for filling up the stomach; some for money; others for power; there are others who serve the nation; devotees do everything for the Lord.

Success is not the final destination. Life is a journey - keep moving ahead. Sometimes, in life I don't get what I like. At such times I must like what I get. If you apply your mind, you will enjoy. Put in more effort in that which you find boring; cultivate a taste for it. Ultimately, understand that 'to act alone is in our hands'.

- Swami Tejomayananda

Monday, November 3, 2008

தீவிரவாதம் யாருக்கு எதிராக?


ஒரு காலத்தில் ஊழல் உலகளாவியது என்று சொல்வார்கள். இன்று தீவிரவாதமும் அந்த இடத்தைப் பிடித்து விட்டது. தீவிரவாதம் தினந்தோறும் நாம் காணும் அன்றாட நிகழ்ச்சி ஆகி விட்டது.

தங்கள் மதத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும், உரிமைகளின் பெயராலும், கோரிக்கைகளின் பெயராலும், இழைக்கப்படும் அநீதியின் பெயராலும் இன்று தீவிரவாதம் ராஜநடை போடுகிறது. உண்மையில் யாருக்கு எதிராக தீவிரவாதம் நடைபெறுகிறதோ அவர்கள் பெரிதாக பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ அப்பாவி ஜனங்கள் பல்லாயிரம் மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் போது இறக்கும் அப்பாவி ஜனங்கள் எத்தனை பேர்? படுகாயம் அடையும் பரிதாபத்திற்குரிய நபர்கள் எத்தனை பேர்? இந்த எண்ணிக்கையைப் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். இதன் காரணாமாக வாழ்க்கையே திசைமாறி சீர்குலைந்து போகும் குடும்பத்தினர் பற்றி யார் சொல்கிறார்கள்? யார் கவலைப்படுகிறார்கள்?

அரசியல்வாதிகள் மரணத்திற்கு இவ்வளவு, படுகாயத்திற்கு இவ்வளவு என்று ஒரு தொகை நிர்ணயித்து தந்து கைகழுவி விடுகிறார்கள். அந்தப் பணம் இறந்த உறவுக்கு ஈடாகுமா? அந்த மனிதர்கள் இருந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யுமா? இழந்த உறுப்புக்கும், ஊனத்துடன் தொடர்ந்து வாழும் வாழ்க்கைக்கும் ஈடாகுமா? அந்த மனிதர்களைச் சார்ந்திருந்த குடும்பத்தாரின் துக்கத்தையும், இழப்புகளையும் தீவிரவாதிகள் முழுமையாக அறிவார்களா? அவர்கள் மனசாட்சி ஏற்றுக் கொள்ளுமா?

(இந்தக் கருத்தை வலியுறுத்தி 'சிறைவாசம்' என்ற சிறுகதை ஒன்றை முன்பு எழுதியுள்ளேன்.)
http://enganeshan.blogspot.com/2008/01/blog-post_15.html


பெரும்பாலான தீவிரவாத நடவடிக்கைகள் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தான் நடக்கின்றன. ஆனால் பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அந்த அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவது அபூர்வம். அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் அப்பாவி மக்கள் தான் உண்மையில் அதிகம் பலியாகிறார்கள். அந்த அப்பாவி மக்களும் அவர்கள் குடும்பங்களும் செய்த தவறு தான் என்ன? தீவிரவாதிகளின் எந்த சித்தாந்தத்திற்கு அவர்கள் எதிராக இருந்திருக்கிறார்கள்? தங்கள் தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியல்லாது வேறு சிந்தனைக்கே நேரமில்லாத அந்த அப்பாவிகளைப் பலி வாங்குவது என்ன நியாயம்.

எல்லா மதங்களும் ஏழை எளிய மக்களுக்குத் தீங்கு செய்வதை மிகப்பெரிய பாவமாகவே கூறுகின்றன. எனவே மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்திற்கு எந்த மதமும் அங்கீகாரம் அளிப்பதாகக் கூற முடியாது. உரிமை, நீதி, கோரிக்கைகளின் அடிப்படையில் தீவிரவாதம் செய்யப்படுவதானால் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களுக்கு இழைக்கும் இந்த மிகப் பெரிய அநீதியை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது.

மனிதன் முதலில் மனிதன் என்ற அந்தஸ்திற்குத் தகுந்தவனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பின்பு தான் அவன் மதம், மொழி, ஜாதி, சமூகம் போன்ற அடைமொழிகளுக்கு ஏற்றவனாகிறான். அதை யாரும் எந்த காலத்திலும் மறந்து விடலாகாது.

உண்மையிலேயே ஒருவருக்கு சார்ந்திருக்கும் மதம், சமூகம், மொழி, ஜாதி ஆகியவற்றில் அக்கறை இருக்குமானால் அந்தந்த மக்களுக்காக ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வது தான் சிறந்தது. அவர்கள் வாழ்க்கை மேம்பட உழைப்பது அவசியம். அதற்குத் தான் மன உறுதி அதிகம் தேவை. உழைப்பும், சக்தியும் அதிகம் தேவை. அப்படி செய்யும் போது தான் ஒருவர் அக்கறை காட்டும் மனிதர்களின் நிரந்தர வளர்ச்சிக்கு பாதை வகுத்தது போல ஆகும்.

அதை விட்டு விட்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டால் பல அப்பாவிகளுக்கு ஒருவன் துன்பம் தரலாமே ஒழிய அவன் அக்கறை காட்டுவதாக நினைக்கும் மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்த முடியாது. மேலும் அழிப்பது என்றுமே சுலபமான விஷயம். அதற்கு மேம்பட்ட குணங்களோ, திறமையோ தேவையில்லை. ஆக்குவது தான் கஷ்டம். அதற்குத் தான் திறமையும் உழைப்பும் தேவை.

உயிரை எடுப்பதும், உயிரை விடுவதும் பிரமாதமான விஷயமல்ல. சமூகத்திற்கு உபயோகமாக வாழ்வதும், உபயோகமாக இருப்பதுமே சிறப்பு.

எந்த தீவிரவாதியும் அன்பினால் உருவாவதில்லை. வெறுப்பினாலேயே உருவாகிறான். வெறுப்பு தான் அவன் சக்திகளையும், அறிவையும் இயக்கும் சக்தியாக இருக்கிறது. தான் சார்ந்திருக்கும் சாரார் மீதுள்ள அன்பினால் அவன் உந்தப்படுவதற்குப் பதிலாக எதிர் சாரார் மேலுள்ள வெறுப்பினாலேயே உந்தப்படுகிறான். தான் சார்ந்த மக்களுக்கு நல்லது செய்வதற்குப் பதிலாக எதிரணிக்கு தீங்கு விளைவிக்கவே முற்படுகிறான்.வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட எந்த செயலும் எவருக்கும் நன்மையை ஏற்படுத்தி விட முடியாது. அவனுடைய செயலை வைத்து அவன் சார்ந்த மக்களையே குற்றப்படுத்த முனையும் முட்டாள்தனத்தை உலகம் செய்வதால் அவன் தான் சார்ந்த மக்களுக்கும் தீங்கே செய்தவனாகிறான்.

எனவே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களும், அதை ஆதரிப்பவர்களும், நியாயப்படுத்த முனைபவர்களும் இந்தத் தீவிரவாதம் யாருக்கு எதிராக? இதனால் உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்ற கேள்வியை ஆறறிவு படைத்த மனிதர்கள் என்ற அடிப்படையில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வது தர்மமாகும்.

- என்.கணேசன்

Monday, October 27, 2008

கற்பனை படுத்தும் பாடு

கற்பனை போல் ஒரு வரப்பிரசாதம் இல்லை. அதைப் போல் ஒரு சாபக்கேடும் இல்லை. அது கதையாய், கவிதையாய், காவியமாய் வடிவுகள் எடுத்து நம்மை சந்தோஷப்படுத்தவும் முடியும். இல்லாததை எல்லாம் எண்ண வைத்து, சந்தேகப்பட வைத்து நம்மை அது பாடாய் படுத்தவும் முடியும்.

இதோ ஒரு நிகழ்வு. ·ப்ளாட் ஒன்றில் குடி இருக்கும் ராமசாமி ஆபிஸ் வேலை முடிந்து களைத்துப் போய் இரவில் வீடு திரும்புகிறார். அவர் குடும்பத்தினர் எல்லாம் வெளியூர் சென்றிருக்கிறார்கள். பக்கத்து ·ப்ளாட் ஒன்றில் இருந்து சத்தமாக FM ரேடியோ பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு அங்கு குடியிருந்தவர்கள் காலி செய்து போய் விட்டிருந்தார்கள். இப்போது புதிதாக யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை இந்த பாட்டு சத்தம் அறிவித்தது. தங்களுக்கு மட்டும் கேட்கும் படியாக வைத்துக் கொள்ள மாட்டார்களோ என்று முணுமுணுத்துக் கொண்டே ராமசாமி தன் ·பளாட்டினுள் நுழைந்தார்.

கதவை சாத்தினாலும் பாட்டின் ஓசை பெரிதாகக் குறைந்து விடவில்லை. அவருக்கு லேசாக தலை வலித்தது. ஒரு வேளை இளைஞர்கள் குடி வந்து இருக்கிறார்களோ என்று அவருக்கு சந்தேகம் வந்தது. ஊருக்கே கேட்பது போல் ஒலியை அதிகப்படுத்தி பாட்டைக் கேட்டு ரசிப்பது இளைஞர்கள் தான். மற்றவர்களுக்குத் தொந்திரவு ஆகும் என்று நினைத்துப் பார்க்க மாட்டார்களோ?

நேரம் சென்று கொண்டே இருந்தது பாட்டு நிற்பதாகக் காணோம். அதுவும் நேரமாக நேரமாக பாட்டின் ஒலியும் கூடி காதில் நாராசமாக ஒலித்தது. மணி பார்த்தார். பத்து. தூங்கவும் மாட்டார்களா இந்த சனியன்கள். முன்பு குடியிருந்தவர்களால் இந்த மாதிரி தொந்திரவுகள் ஒரு நாளும் வந்ததில்லை. இந்த சனியன்கள் தூங்கும் நேரம் பத்தரையோ என்னவோ?

ராமசாமி பத்தரை வரை பொறுத்தார். பாட்டு நிற்கவில்லை. இந்த சைத்தான்கள் பதினோரு மணிக்குத் தான் தூங்குவார்களோ. 24 நேரமும் தொடர்ந்து இசையருவியை கொட்டுவதாக FM பெருமை அடித்துக் கொண்டு விளம்பரம் செய்தது. தூங்க முடியாமல் தவித்த ராமசாமி பதினோரு மணி எப்போது ஆகும் அன்று கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதுவரை இந்த பொறுப்பில்லாத இளைஞர் சமுதாயத்தை மனமார வசை பாடினார். இந்த மாதிரி இளைஞர்களுக்கு ·ப்ளாட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தூரத்தில் ஹாயென்று இருக்கும் ·ப்ளாட் உரிமையாளரை மனதாரத் திட்டித் தீர்த்தார். நாளைக்கு முதல் வேலையாக புகார் கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.

11 மணிக்கும் பாட்டு நிற்கவில்லை. இரவின் நிசப்தத்தில் பாட்டு சம்மட்டியாக அடித்தது. கொஞ்சம் பஞ்சை எடுத்து இரண்டு காதுகளிலும் வைத்துப் பார்த்தார். பதினொன்றரை மணிக்கு ராமசாமியால் தாங்க முடியவில்லை. கொதித்துப் போய் எழுந்தார். இன்று அந்தப் பையன்களை உண்டு இல்லை என்று செய்து விட வேண்டும் என்று ஆவேசமாக பக்கத்து ·ப்ளாட்டிற்குப் போனார்.

கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படவில்லை. 'இப்படி சத்தமாய் பாட்டு வச்சா தட்டறது கேட்குமா செவிட்டு முண்டங்களா?' என்று மனதில் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். கதவின் கைப்பிடியைத் திருப்ப கதவு திறந்து கொண்டது. உள்ளே ஓரிரு பெயிண்ட் டின்களைத் தவிர வேறு சாமான்கள் இல்லை. ஆள்களும் இல்லை. ஒரு செல்பில் இருந்த ரேடியோ மட்டும் மிக சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தது. மெள்ள ராமசாமிக்கு உண்மை விளங்கியது.

மீண்டும் வாடகைக்கு விடுவதற்கு முன் வீட்டை பெயிண்ட் அடித்து விட நினைத்த வீட்டுக்காரர் பெயிண்டர்களிடம் வேலையை விட்டிருக்கிறார். அவர்கள் தங்கள் ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இடையில் மின்வெட்டால் பாட்டு நின்றிருக்கிறது. மாலையில் செல்லும் போது ரேடியோவை மறந்து விட்டு பெயிண்டர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் போன பிறகு மின் இணைப்பு மீண்டும் வந்ததில் இருந்து பாட்டு தொடர்ந்திருக்கிறது. ஆவேசம் அடங்கிய ராமசாமி ஸ்விட்ச் ஆ·ப் செய்து விட்டு ஒரு அசட்டுச் சிரிப்புடன் தன் ·ப்ளாட்டுக்குத் திரும்பினார்.

இரவு எட்டு மணியில் இருந்து உண்மை அறிந்த கணம் வரை ராமசாமியின் எண்ண ஓட்டங்களை எண்ணிப் பாருங்கள். கற்பனையில் சில இளைஞர்களை சிருஷ்டித்து, அவர்களை அடுத்தவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சைத்தான்களாக எண்ணி, மனம் வெந்து, நொந்து, திட்டி, சபித்து பட்ட பாட்டைப் பாருங்கள்.

பல நேரங்களில் உண்மை என்ன என்று எளிதாக சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டு அறிந்து கொள்வதற்கு பதிலாக நாம் நம் கற்பனைக் குதிரையைத் தட்டிப் பறக்க விடுகிறோம். இந்த நிகழ்வில் ராமசாமி ஆரம்பத்திலேயே பக்கத்து ·ப்ளாட்டில் ஆளில்லை என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது உண்மையே. ஆனால் ஆளிருப்பதாக எண்ணியிருந்தால் கூட ஆரம்பத்திலேயே சென்று அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு 'ரேடியோ வால்யூமை மட்டும் குறைத்துக் கொள்ளுங்களேன்' என்று இயல்பாகச் சொல்லி சுமுகமாக விஷயத்தை முடிக்க முனைந்திருக்கலாம். இந்த எளிய வழிக்குப் பதிலாக அந்த இரைச்சல் தொந்தரவை அனுபவித்து இல்லாத நபர்கள் மீது கோபத்தைக் குவித்துக் கொண்டு தன் தூக்கத்தையும் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இது போல நம் தினசரி வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன. வீட்டிலும் சரி வெளியிலும் சரி நேரடியாக கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குப் பதிலாக 'அவர்கள் இப்படி நினைத்துத் தான் அப்படி நடந்து கொண்டிருப்பார்கள்', 'இவர்கள் நம்மை முட்டாள் என்று நினைத்திருப்பார்கள்', 'அவர்கள் வேண்டும் என்றே தான் அப்படி நடந்து கொள்கிறார்கள்' என்று எண்ண ஆரம்பித்து நம் கற்பனையால் ஏதேதோ எண்ணி, மற்றவர் சொல், செயல்களுக்கெல்லாம் எப்படி எப்படியோ அர்த்தம் கண்டு நம் நிம்மதியையும், அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்து விடுகிறோம்.

இனி கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் முன் சற்று சிந்திப்போமா?

- என்.கணேசன்

Tuesday, October 21, 2008

படித்ததில் பிடித்தது - WORDS



சொற்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றை கச்சிதமாக உபயோகிப்பவன் அந்த சக்தியைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உபயோகிக்கத் தெரியாதவன் எல்லாவற்றையும் தனக்கு பாதகமாக்கிக் கொள்கிறான். தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரச்சினைகள் உருவாகக் காரணமாகி விடுகின்றன. எனவே என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை விட அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பது அதிக முக்கியமானது என்பதை மிக அழகாக அந்தோணி ராபின்ஸ் சொல்கிறார். படித்துப் பயனடையுங்களேன்.


WORDS

Words . . . They've been used to make us laugh and cry. They can wound or heal. They offer us hope or devastation. With words we can make our noblest intentions felt and our deepest desires known. Throughout human history, our greatest leaders and thinkers have used the power of words to transform our emotions, to enlist us in their causes, and to shape the course of destiny. Words can not only create emotions, they create actions.

Most beliefs are formed by words—and they can be changed by words as well. Our nation's view of racial equality was certainly shaped by actions, but those actions were inspired by impassioned words. Who can forget the moving invocation of Martin Luther King, jr., as he shared his vision, "I have a dream that one day this nation will rise up and live the true meaning of its creed . . ."? Many of us are well aware of the powerful pan that words have played in our history, of the power that great speakers have to move us, but few of us are aware of our own power to use these same words to move ourselves emotionally, to challenge, embolden, and strengthen our spirits, to move ourselves to action, to seek greater richness from this gift we call life.

An effective selection of words to describe the experience of our lives can heighten our most empowering emotions. A poor selection of words can devastate us just as surely and just as swiftly. Most of us make unconscious choices in the words that we use; we sleepwalk our way through the maze of possibilities available to us. Realize now the power that your words command if you simply choose them wisely.

What a gift these simple symbols are! We transform these unique shapes we call letters (or sounds, in the case of the spoken word) into a unique and rich tapestry of human experience. They provide us with a vehicle for expressing and sharing our experience with others; however, most of us don't realize that the words you habitually choose also affect how you communicate with yourself and therefore what you experience.

Words can injure our egos or inflame our hearts—we can instantly change any emotional experience simply by choosing new words to describe to ourselves what we're feeling. If, however, we fail to master words, and if we allow their selection to be determined strictly by unconscious habit, we may be denigrating our entire experience of life.

Most people are not challenged, though, by the size of the vocabulary they consciously understand, but rather by the words they choose to use. Many times, we use words as "short cuts," but often these short cuts shortchange us emotionally. To consciously control our lives, we need to consciously evaluate and improve our consistent vocabulary to make sure that it is pulling us in the direction we desire instead of that which we wish to avoid.

- Anthony Robbins

Wednesday, October 15, 2008

சிகரங்களும் சமவெளிகளும்


நீங்கள் யாரை மிகப் பெரிய வெற்றியாளர் என்று நினைக்கிறீர்கள்? யாருடைய வெற்றியும் அதிர்ஷ்டமும் உங்களை பெரிதும் ஊக்குவிக்கிறது? இது போல் ஆக முடிந்தால் அது தான் அதிர்ஷ்டம் என்று யாரைப் பார்த்து முடிவெடுக்கிறீர்கள்? அவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்க்கையில் அடைந்த சிகரங்களைப் பார்த்தே நீங்கள் அப்படி முடிவெடுத்திருப்பீர்கள் என்ற சந்தேகமே இல்லை. அது ஒரு சினிமா நடிகராக இருக்கலாம், ஒரு பெரிய பணக்காரராக இருக்கலாம், ஏதாவது துறையில் பிரமிக்கத் தக்க சாதனைகள் புரிந்தவராக இருக்கலாம். அவர்கள் படைத்துள்ள வெற்றி உங்களை அப்படி நினைக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் வாழ்க்கையில் சிகரங்களை எட்டுதல் தினசரி அனுபவமல்ல. பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வருவதும், பாராட்டு விழாக்களில் நாயகனாக இருந்து பெருமைகளை ஏற்றுக் கொள்வதும் அன்றாட சம்பவம் அல்ல.

2008 ஒலிம்பிக்ஸில் எட்டு தங்கப் பதக்கங்கள் பெற்ற ஒரே நபர் என்ற பெருமை படைத்த மைக்கேல் ·ப்ரெட் பெல்ப்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒலிம்பிக் பந்தயம் ஒரு சிகரம். சில நாட்கள் அவர் சந்தித்த வெற்றிகள் அவை. ஆனால் கடந்த பல வருடங்களாக அதற்கான தீவிர பயிற்சி என்ற சமவெளியில் சஞ்சரித்து பிறகு அடைந்த சிகரமே ஒலிம்பிக் வெற்றி. அந்த வருடங்களில் ஒவ்வொரு நாளும் பயிற்சி தொடர்ந்து செய்வது சுலபமான ஒன்றல்ல. பயிற்சியின் போது அவரைப் படம்பிடித்து பத்திரிக்கைகளில் போடவோ, டெலிவிஷனில் காட்டவோ நிருபர் கூட்டம் காத்திருக்கவில்லை. தனிமையில் போரடிக்கிறது, சோம்பலாக இருக்கிறது என்றெல்லாம் சும்மா இருந்து விட்டு நேரடியாக ஒலிம்பிக்கிற்கு வந்து பதக்கம் பெற்று விடவில்லை. நாம் காண்பது சிகரங்களைத் தான் என்றாலும் அவர்கள் சிகரங்களை நோக்கிச் செல்லும் வாழ்க்கையில் அதிகம் பயணிப்பது சமவெளிகளிலேயே என்பதை மறந்து விடக் கூடாது.

இனியும் 2012ல் அவர் சிகரங்களை எட்ட வேண்டுமானால் இனி வரும் நான்கு வருடங்கள் பயிற்சி என்ற சமவெளிகளில் சோர்வில்லாமல் பயணம் செய்தே ஆக வேண்டும். இது எல்லா சாதனையாளர்களும் சந்தித்தாக வேண்டிய வாழ்க்கை முறை தான். பரிசு, வெற்றி என்ற பகட்டான அம்சங்கள் மட்டுமே நிறைந்த வாழ்க்கை என்றென்றைக்கும் யாருக்கும் அமைந்து விட முடியாது. கதைகளிலும் அல்லது சினிமாக்களிலும் கடைசியாக சொல்வது போல அதற்கு மேல் கதாநாயகனும், கதாநாயகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்பது அழகான கற்பனை. நிஜ வாழ்க்கை அப்படியல்ல. சிகரத்திற்கு மேல் சிகரமாகவே போய்க் கொண்டிருப்பது கற்பனையில் மட்டுமே நிகழ முடியும்.

எனவே சிகரங்களை ஆராதித்து சமவெளிகளை வெறுத்து விடாதீர்கள். சமவெளிகள் இல்லாமல் சிகரங்களை மட்டுமே சந்திக்க ஆசைப்படாதீர்கள். இன்றோடு சமவெளி வாழ்க்கை முடிந்து விட்டது. நாளையில் இருந்து சிகரங்கள் மட்டுமே என்று பகற்கனவு காணாதீர்கள். இரு சிகரங்களுக்கு மத்தியில் அதிகமாக நாம் இருப்பது சமவெளிகளிலேயே என்பதை நினைவு வைத்திருங்கள். சமவெளிகளை வெறுப்பவன் சிகரங்களை அடைய முடியாது.

எனவே வாழ்க்கையில் நிறைவையும், மகிழ்வையும் வேண்டுபவர் யாராயினும் தினசரி வாழ்க்கை என்ற சமவெளிகளையும் ரசிக்கப் பழகுவது முக்கியம். ஏனென்றால் அவையே ஒருவர் வாழ்வில் அதிகம். அப்படியே வெற்றி என்னும் சிகரங்களை அடைய விரும்புபவரும் பயிற்சி என்ற சமவெளிகளை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. ஏனென்றால் சமவெளிகளைத் தாண்டினால் மட்டுமே ஒருவரால் சிகரங்களை அடைய முடியும். அதை மறந்து விட்டு சுலபமாக சிகரங்களில் இருந்து சிகரங்களுக்குத் தாவி சஞ்சரித்துக் கொண்டே இருக்க ஒருவர் ஆசைப்பட்டால் அது நிஜ வாழ்க்கையில் ஏமாற்றத்தையே அளிக்கும்.

- என்.கணேசன்

Wednesday, October 8, 2008

இருட்டைப் பரப்பாதீர்கள்


திரு அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போராட்டம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. முந்தைய நாள் இரவு ஒரு பாலஸ்தீன கிராமமே வெடிகுண்டு தாக்குதலில் இரையாகி இருந்தது. ஆனால் மறு நாள் காலை பத்திரிக்கையைப் பிரித்த அப்துல் கலாம் திகைத்துப் போனார். காரணம் பத்திரிக்கையின் முதல் பக்கம் முழுவதும் இஸ்ரேலின் விவசாயி ஒருவர் செய்த சாதனையின் விளக்கங்கள் நிறைந்திருந்தன. குறுகிய இடத்தில் அபார விளைச்சல் செய்து சாதனை படைத்த விவசாயி அதை எப்படிச் செய்தார் என்று படங்களுடன் செய்தி முதல் பக்கம் வந்திருக்க மூன்றாவது பக்கத்தில் தான் அந்த கிராமத்தில் வெடிகுண்டு வெடித்து சேதமான செய்தி வெளிவந்திருந்தது.

இந்தியாவுக்குத் திரும்பிய அப்துல் கலாம் அவர்கள் ஒரு சொற்பொழிவில் இந்தத் தகவலைத் தெரிவித்து இது போன்ற நல்ல சாதனைக்கு அங்கு பத்திரிக்கைகளில் கிடைத்த முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி ஏன் நாமும் இது போன்ற நல்லவற்றைப் பின்பற்றக் கூடாது என்று கேட்டார். நம் பத்திரிக்கைகள் எது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பது ஊரறிந்த விஷயம். பத்திரிக்கைகளில் நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட செய்திகள், கிளுகிளுப்பான செய்திகள், பரபரப்பான செய்திகள் என பக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இது போன்ற சாதனை செய்திகள், நம்பிக்கையூட்டும் நல்ல விஷயங்கள் எல்லாம் மக்களை சென்று அடைகிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.

பத்திரிக்கைகளை விடுங்கள், தனி மனிதர்களான நாம் என்ன செய்கிறோம்? நாம் அறிந்து பரப்பும் செய்திகள் எப்படிப்பட்டதாக இருக்கின்றன? நாம் எதைக் காண்கிறோம்? காண்பதில் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம்? எதை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்கிறோம்? இந்தக் கேள்விகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது நல்லது.

காணும் நல்லவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் அவை நம்மால் காணப்படுதேயில்லை. கண்டாலும் அதை சீக்கிரத்திலேயே மறக்கவும் செய்கிறோம். நல்லதல்லாதவற்றையே அதிகம் காண்கிறோம். அதைப் பற்றியே அதிகம் நினைக்கிறோம். அதைப் பற்றியே அதிகம் பேசுகிறோம். இந்த வியாதி நம்மை அறியாமலேயே பலருக்கும் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் ஜன்னலோரம் இருக்கிற பெண்களின் கழுத்திலிருந்து நகைகளை இழுத்துக் கொண்டு ஓடும் திருட்டுகள் பற்றி பக்கத்தில் இருந்த ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார். காலம் கெட்டு விட்டது, நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஓரிருவர் சொன்னார்கள். அதே சமயம் இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு நடுத்தர வயதான மனிதர் சில புத்தகங்களை இடது தோளில் வைத்து, ஒரு கையால் அவை விழாதபடி இறுக்கமாக பிடித்துக் கொண்டு மறு கையால் இரு கால்களையும் நகர்த்திக் கொண்டு ரயிலில் புத்தகம் விற்றுக் கொண்டு வந்தார். சிலர் அவருக்காகவே புத்தகங்கள் வாங்கினோம். அவர் சென்று விட்டார்.

ஆனால் திருடர்கள் பற்றிய பேச்சே அங்கு தொடர்ந்தது. மற்றவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட திருட்டு அனுபவங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை நிறையவே யோசிக்க வைத்தது. காலிரண்டும் செயல்படாத போதும் பிச்சையெடுக்காமல் தொழில் செய்து பிழைக்கும் அந்த நபர் பற்றி பேச இருப்பதாக நேரில் பார்த்த பின்னும் அவர்கள் எண்ணவில்லை. ஆனால் திருடர்கள் பற்றி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கேள்விப்பட்ட மற்றவர்களின் அனுபவங்களையும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் அப்படி பேசியது தவறு என்று சொல்ல வரவில்லை. இது போன்ற அனுபவப் பகிர்வுகள் மற்ற பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் நல்லதைப் பார்க்கையில் மட்டும் நாம் ஊமையாகி விடுகிறோமே அது ஏன் என்பது தான் விளங்கவில்லை.

நம்மைச் சுற்றி நல்லது, கெட்டது இரண்டும் நடக்கிறது. அதில் ஒன்றை மட்டுமே காண்பது, பேசுவது என்பது ஒருவித வியாதியே அல்லவா? அதுவும் எத்தனையோ எதிர்மறையான சூழ்நிலைகளிலும் நல்லதைச் செய்பவர்கள், நல்லபடியாக இருப்பவர்கள் உண்மையில் பராக்கிரமசாலிகளே. எதிர்நீச்சல் கஷ்டம் தானே?

நல்லது எதுவும் தானாக நடந்து விடுவதில்லை. அதற்கு உயர்ந்த சிந்தனை, மன உறுதி, கட்டுப்பாடு எல்லாம் தேவைப்படுகிறது. பார்த்தீனியம் தானாக வளரும். நட்டு, நீர் ஊற்றி வளர்க்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு ரோஜாச் செடி அப்படி வளராது. அதை வளர்க்க முயற்சி தேவைப்படுகிறது. அதிகமாக உள்ளது என்பதற்காக நம் முழுக் கவனத்தையும் பார்த்தீனியம் மீதே வைத்து, ரோஜாவைக் காண மறுப்போமா?

எனவே வீட்டிலும் சரி வெளியிலும் சரி நல்லதையும் காணவும், கண்டதைப் பாராட்டவும் மறந்து விடாதீர்கள். நீங்கள் காணும் நல்லவர்களைப் பற்றியும், அவர்களது நல்ல செயல்களைப் பற்றியும் கூட நாலு பேருக்குச் சொல்லுங்கள். எதை அதிகம் காண்கிறோமோ, எதை அதிகம் சிந்திக்கிறோமோ, எதை அதிகம் பேசுகிறோமோ அதுவே நம் வாழ்வில் மேலும் அதிகம் பெருகும் என்று ஞானிகள் சொல்கிறார்கள். எனவே எது உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றியும் பெருக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கு அதிக கவனம் கொடுக்க ஆரம்பியுங்கள்.

தீயதையே கண்டு தீயதையே பேசி தீயதையே பரப்புவது இருட்டைப் பரப்புவது போன்றது. ஏற்கெனவே பெருகி இருக்கும் இருட்டை அதிகப்படுத்துவது போலத்தான் அது. இப்படிச் செய்து நம்மை சுற்றி நிறையவே இருட்டடிப்பு செய்து விட்டோம். அவநம்பிக்கை, அச்சம் போன்ற வியாதியைப் பரப்பும் ஊடகமாகி விட்டோம். போதும் இதோடு நிறுத்திக் கொள்வோம்.

நல்லதைத் தேடிக் கண்டுபிடிப்போம். அடையாளம் காட்டுவோம். பாராட்டி மரியாதை செய்வோம். மற்றவர்கள் அதற்குத் தகுந்தவர்களாக ஊக்குவிப்போம். இதுவே இருளை நீக்கி ஒளியை ஏற்படுத்துவது போன்ற உயர்ந்த, தேவையான செயல். இதை நம்மில் பெரும்பாலானோர் செய்ய முடிந்தால், நமக்குப் பின்வரும் தலைமுறை ஒரு ஒளிமயமான, ஆரோக்கியமான உலகில் அடி எடுத்து வைக்கும் என்பது உறுதி.

- என்.கணேசன்

Wednesday, October 1, 2008

படித்ததில் பிடித்தது - Fire of Motivation


எது நல்லது என்றும் எது சிறந்தது என்றும் அறியாதவர்கள் மிகக் குறைவு. ஆனால் அறிந்தபடி அவர்கள் எதனால் வாழ்வதில்லை என்ற கேள்வி எழுவது இயற்கை. அந்தக் கேள்விக்குப் பதிலை ஆராய்ந்த ஷிவ் கேரா, அறிந்தும் சாதிக்காதவர்களிடம் இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்து மிக அழகாகச் சொல்லும் இந்த வரிகள் அருமையானவை. அது என்ன என்று அறிய இதைப் படியுங்கள். அது இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். உலகம் என்றும் உங்களுடையதே. இல்லாதவர்கள் அதை முதலில் வளர்த்துக் கொள்வார்களாக!

என்.கணேசன்

Fire of Motivation

I believe in two premises:
(i) most people are good people, but can do better; and
(ii) most people already know what to do, so why aren't they doing it?

What is missing is the spark--motivation. Some self help books adopt the approach of teaching what to do; we take a different approach. We ask, "Why don't you do it?" If you ask people on the street what should be done, they will give you all the correct answers. But ask them whether they are doing it and the answer will be no. What is lacking is motivation.

The greatest motivation comes from a person's belief system. That means he needs to believe in what he does and accept responsibility. That is where motivation becomes important. When people accept responsibility for their behavior and actions, their attitude toward life becomes positive. They become more productive, personally and professionally. Their relationships improve both at home and at work. Life becomes more meaningful and fulfilled.

After a person's basic physical needs are met, emotional needs become a bigger motivator. Every behavior comes out of the "pain or gain" principle. If the gain is greater than the pain, that is the motivator. If the pain is greater than the gain, then that is a deterrent.

Gains can be tangible, such as: monetary rewards, vacations, and gifts. They can be intangible, such as: recognition, appreciation, sense of achievement, promotion, growth, responsibility, sense of fulfillment, self worth, accomplishment, and belief.

Inspiration is changing thinking; motivation is changing action.

Motivation is like fire unless you keep adding fuel to it, it dies. Just like exercise and food don't last long, neither does motivation. However, if the source of motivation is belief in inner values, it becomes long--lasting.

- Shiv Khera

Thursday, September 25, 2008

தோல்வி நிறைய கற்றுத் தரும்


ஒவ்வொருவரும் வெற்றியடையவே ஆசைப்படுகிறோம், பாடுபடுகிறோம் என்றாலும் வெற்றியை நோக்கிய பாதையில் தோல்விகள் என்ற மைல்கல்களை நாம் கடந்தே செல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிக்கனியை சுவைக்கையில் அதன் ருசி கூடுவதும் நாம் சந்தித்த தோல்விகளின் அனுபவங்களாலேயே. ஆனாலும் தோல்வி வரும் போது அது சகிக்க முடியாததாகவே இருக்கிறது. சகிக்க முடியா விட்டாலும் தவிர்க்க முடியாத போது தோல்விகளை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல்வியை விடச் சிறந்த முறையில் யாரும் பாடங்களைக் கற்றுத் தர முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் வெற்றி பெரிதாக எதையும் புதிதாகக் கற்றுத் தருவதில்லை. மாறாக தோல்வி நிறையவே கற்றுத் தருகிறது. நிறைய சிந்திக்க வைக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் சிந்திப்பதற்கு பதிலாக, கற்றுக் கொள்வதற்குப் பதிலாக நாம் வருத்தப்படுகிறோம், ஆத்திரப்படுகிறோம். தோல்வி நம் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறது. அதைப் புரிந்து கொள்வதற்கு பதிலாக நாம் யாரையாவது குறை சொல்ல முற்படுகிறோம். தோல்வி நம் பலவீனங்களை நமக்கு உணர்த்த முனைகிறது. நாம் அதை உணர்வதற்குத் தயாராவதற்குப் பதிலாக நம் தோல்வி எப்படி நியாயமற்றது என்று மற்றவர்க்கு விளக்க முனைகிறோம். எனவே தான் தோல்விகள் வந்து போனாலும் நாம் அதன் மூலம் உண்மையான பயனடைவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வி நமக்கு பணிவைக் கற்றுத் தருகிறது. மாறாக வெற்றி பெரும்பாலும் அகம்பாவத்தை ஏற்படுத்தி விடுகிறது. வெற்றி சில சமயங்களில் பல காரணங்களால் தவறுதலாகக் கூடக் கிடைத்து விடுவதுண்டு. அப்போது இல்லாத உயர்வுகள் இருப்பதாக எண்ணி அடுத்த வீழ்ச்சிக்குத் தேவையான கர்வத்தை நாம் பெற்று விடுவதும் உண்டு. தோல்விகள் பல கிடைத்து பணிவைக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றி கிடைக்கும் போதும் நிலை மீறி நடப்பதில்லை.

எனவே தோல்வி வரும் போது நாம் துவண்டு விடத் தேவையில்லை. தோல்வி நம் திறமைக்கான நிரந்தரப் பிரகடனம் அல்ல. அது நாம் இன்னும் கற்க வேண்டியுள்ளதையும், செய்ய வேண்டியுள்ளதையும் நமக்கு சுட்டிக் காட்டும் பேருதவியைச் செய்கிறது. அந்த பாடங்களை வருத்தமோ, துக்கமோ இல்லாமல் நாம் கற்றுக் கொள்ள தவறி விடக்கூடாது. உண்மையான வெற்றி மற்றவர்களின் அங்கீகாரத்தாலேயோ, பாராட்டுதல்களாலேயோ கிடைப்பதல்ல. உண்மையான வெற்றி நம் உள்மனமும் ஆழத்தில் இருந்து சபாஷ் போடும் போது தான் ஏற்படுகிறது. அந்த உண்மையான வெற்றிக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இடையே கிடைக்கும் தோல்விகளில் அடங்கி உள்ளன.

எனவே தோல்வியைத் திறந்த மனத்துடன் ஆராயுங்கள். அதிலிருந்து கற்றுக் கொள்ளத் தடையாக இருக்கும் வருத்தம், கோபம், அவநம்பிக்கை போன்ற எதிரிகளை மனதில் இருந்து விரட்டி விடுங்கள். தோல்வி வெற்றிக்கு இனியும் தேவைப்படும் பண்புகளைச் சுட்டிக்காட்டும். அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். தோல்வி வெற்றிக்கு இனியும் தேவையான செயல்கள் இன்னதென்று தெரிவிக்கும். அந்தச் செயல்களை செய்யத் துவங்குங்கள். தோல்வி வெற்றிக்குத் தடையாக உங்களிடம் உள்ள பலவீனங்களையும், செயல்பாடுகளையும் பட்டியலிடும். அவற்றை உங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்றி விடுங்கள்.

நீங்கள் வெற்றியடைய இத்தனை பாடங்களைத் தோல்வியைத் தவிர வேறெதுவும் கற்றுத் தருவதில்லை. எனவே தோல்வி வரும் போது நன்றியோடு அதை எதிர்கொள்ளுங்கள். அதிலிருந்து நீங்கள் உண்மையாகவே கற்றுக் கொண்டு செயல்பட்டால் அது மீண்டும் வருவதில்லை.

என்.கணேசன்

Friday, September 19, 2008

கனவு காணத் தயங்காதீர்கள்



மாவீரன் நெப்போலியன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். அந்த ஏழ்மை அவனுடைய வாலிப வயது வரை அவன் வாழ்வில் தங்கி பாடாய் படுத்தியது. பாரிஸில் பிரைன் என்னுமிடத்தில் ராணுவப் பள்ளியில் படித்த போது தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படி நெப்போலியன் வருந்தி எழுதினான். "என்னுடைய வறுமை நிலை அன்னிய மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆழ்த்துகிறது". ஆனால் நெப்போலியனுடைய கனவுகளில் ஏழ்மை இருக்கவில்லை.

மற்றவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் சிறுவன் நெப்போலியன் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் ஆழ்ந்த கனவுகளுடன் அமர்ந்திருப்பான். கடலின் அலைகள் போர்வீரர்களாக தாக்க வருவது போலவும் தன் முன் போரிட முடியாமல் மோதி மடிவது போலவும் கற்பனை செய்து கொண்டிருப்பான். அந்தக் கருங்கல்பாறை இன்றும் "நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon's Grotto)" என்ற பெயரினைத் தாங்கி வருகிறது.

சத்ரபதி சிவாஜி குழந்தைப் பிராயத்தில் தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டவன். தாய் ஜீஜாபாயுடன் ஒரு மலைப்பகுதியில் தான் சிறு வயதைக் கழித்தான். தந்தை பீஜாப்பூர் சுல்தானது அரண்மனையில் ஒரு நல்ல பதவி வகித்தாலும் செல்வச்செழிப்பும், அந்தஸ்தும் சிவாஜியை எட்டியதேயில்லை. அவனது இளமைப் பருவம் குறித்து "மராட்டிய மக்கள் வரலாறு" என்ற நூலில் வரலாற்றாசிரியர்களான கின்கெய்ட், பராசனிஸ் இப்படி எழுதினார்கள்.

"அந்தி நேரத்தில் சிவாஜி என்ற சிறுவன் அந்த மயான அமைதி நிலவும் மலைப்பகுதி வீடு ஒன்றில் தன் குரு தாதாஜி கொண்டதேவிடம் பாடம் கேட்பான். பாரத வீரர்களின் தீர வரலாற்றைக் கூறும் பழம்பெரும் இதிகாசங்களிலிருந்து பல பாடல்களைக் கணீரென்று குரு வாசித்து சொல்லிக் கொடுப்பார். இரவின் ஊளைக் காற்றில் தீபச்சுடர்கள் லேசாக நடுங்குவதையும், பெரிய பெரிய இரவுப் பூச்சிகள் தூண்களில் மோதி மோதிக் கீழே விழுவதையும் உணராது உலகையே மறந்தபடி சிவாஜி அமர்ந்து இருப்பான். அவனது லட்சியங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து இருக்கும். சிவாஜி தனக்கென ஒரு இலக்கினை வைத்திருந்தான். 'பிரதமை சிறிதாக இருப்பினும் அது முழு மதியாகக் கண்டிப்பாக வளரும் என எல்லோரும் அறிவார்கள். இது சிவாஜிக்கே பொருந்தும்"

நெப்போலியன் ஐரோப்பாவிலும், சிவாஜி இந்தியாவிலும் சாம்ராஜ்ஜியங்களை ஏற்படுத்தி சரித்திரம் படைத்தனர். இவர்கள் வாழ்வின் ஆரம்பம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமே. கனவுகளைத் தவிர்த்து அவர்களிடம் வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. அந்த இல்லாத நிலை அவர்கள் கனவுகளைச் சுருக்கி விடவில்லை. உலகம் இருப்பவர்களுக்கே சொந்தம் என்று இவர்கள் விரக்தியடைந்து கனவுகளை விட்டு விடவில்லை. கடைசியில் கனவுகள் நனவாகும் வரை அவர்கள் கனவுகளை அடைகாத்திருந்தார்கள்.

சாம்ராஜ்ஜியங்களே கனவுகளால் கைகூடும் போது வேறெது தான் கைகூடாது? ஒவ்வொரு துறையிலும் இமாலய சாதனை படைத்தவர்கள் எல்லாம் அப்படிக் கனவு கண்டவர்களே. எனவே கனவு காணத் தயங்காதீர்கள். ஒரு விதை ஒரு காட்டையே உருவாக்கும், அந்த விதை வீரியமுள்ளதாக இருந்தால். உங்கள் கனவுகளும் விதைகள் தான். அவை வீரியமுள்ளதாக இருந்தால் அவை உங்கள் எண்ணப்படியே கச்சிதமாக அமையாமல் இருப்பதில்லை.

'இப்படி ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று கற்பனை செய்து பெருமூச்சு விட்டால் அந்தக் கற்பனைக் கனவு கற்பனையாகவே இருக்கும். ஒரு நாள் பெரிய நடிகனாகும் கனவு, மறுநாள் பிரபலமான பாடகனாகும் கனவு, அதற்கடுத்த நாள் பெரிய கிரிக்கெட் வீரனாகும் கனவு என்று ஒவ்வொரு பிரபலத்தைப் பார்க்கும் போதும் நம் கனவு மாறிக் கொண்டே வருமானால் அந்தக் கனவுகளும் நனவாகாமல் போகும். கனவை நனவாக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தால் அந்தக் கனவும் மலட்டுக் கனவே.

வீரியமுள்ள கனவு என்பது உங்கள் ஆழ்மனத்தில் இருந்து எழுவது. அதற்கு மகத்தான உந்து சக்தி உண்டு. சதா அதைப் பற்றியே நினைக்க வைக்கும். அது சம்பந்தப்பட்ட அனைத்திலும் பெரும் ஈர்ப்பு ஏற்படுத்தும். எத்தனை பிரச்சினைகளை சந்தித்த போதும் அந்தக் கனவின் அக்னி தணியாது. உயிரின் உயிராக சாதிக்க வேண்டிய உன்னத விஷயமாக அந்தக் கனவு திகழும். அது நனவாக வேண்டிய செயல்களை உங்களைச் செய்ய வைக்கும். வந்து வந்து போகும் எண்ணங்கள் அல்ல அவை. நிரந்தரமாக நின்று வழிநடத்தக் கூடிய லட்சியம் அது.

எனவே கனவு காணுங்கள். உங்கள் இன்றைய நிலைக்கு அது எட்டாத கனவாகக் கூடத் தோன்றலாம். அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அந்தக் கனவு வீரியமுள்ளதாக இருந்தால் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.

-என்.கணேசன்

Monday, September 15, 2008

படித்ததில் பிடித்தது - The Optimist and The Pessimist

இந்த இரு வகை மனிதர்களை இவர் வர்ணித்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. ஒருவன் சந்தோஷமாக வாழ்வானா, துக்கத்தில் மூழ்குவானா, மகுடம் சூடுவானா, மண்ணில் வீழ்ந்து கிடப்பானா, நேசிக்கப்படுவானா, தூற்றப்படுவானா என்றெல்லாம் அறிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவை இல்லை. இந்த இரண்டில் அவன் எந்த வகை என்று மட்டும் தெரிந்தால் போதும். ஆமாம், நீங்கள் இதில் எந்த வகை?

The Optimist and The Pessimist

The optimist lives under a clear sky; the pessimist lives in a fog.

The pessimist hesitates, and loses both time and opportunity; the optimist makes the best use of everything now, and builds themselves up, steadily and surely, until all adversity is overcome and the object in view realized.

The pessimist curbs their energies and concentrates their whole attention upon failure; the optimist gives all their thought and power to the attainment of success, and arouses their faculties and forces to the highest point of efficiency.

The pessimist waits for better times, and expects to keep on waiting; the optimist goes to work with the best that is at hand now, and proceeds to create better times.

The pessimist pours cold water on the fires of their own ability; the optimist adds fuel to those fires.

The pessimist links their mind to everything that is losing ground; the optimist lives, thinks and works with everything that is determined to press on.

The pessimist places a damper on everything; the optimist gives life, fire and go to everything.

The optimist is a building force; the pessimist is always an obstacle in the way of progress.

The pessimist lives in a dark, soggy unproductive world, the optimist lives in that mental sunshine that makes all things grow.

- Christian D Larson

Tuesday, September 9, 2008

என்றேனும் ஓர் நாள்

பெரும்பாலானவர்கள் பல முக்கியமான செயல்களை ஒரு நாள் செய்யக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அவற்றை என்றாவது ஒருநாள் செய்வார்கள். அதற்கு முன் அவர்கள் செய்ய வேண்டிய மற்ற பல காரியங்கள் இருக்கின்றன. அல்லது எடுக்க வேண்டிய ஓய்வும், ஈடுபட பல பொழுதுபோக்குகளும் நிறைய அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்த வேலைகளை அவர்கள் சுத்தமாக மறந்து விடவில்லை. அவ்வப்போது அது பற்றி சொல்வார்கள். ஒரு நாள் செய்வார்கள்.

ரிடையர் ஆனவுடன் படிப்பேன் என்று வேலையில் இருக்கும் போதே எத்தனையோ புத்தகங்களை வாங்கி வைத்த ஒருவரை எனக்குத் தெரியும். நல்ல நல்ல புத்தகங்கள் அவை. அதெல்லாம் மேலோட்டமாய் படிக்கக் கூடிய புத்தகங்கள் அல்ல என்றும் ஆழ்ந்து படிக்க வேண்டிய அந்த புத்தகங்களை ரிடையர் ஆனவுடன் படிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லி வந்தார். ரிடையரானவுடன் மறுநாளே அவர் அந்தப் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கவில்லை. பி.எ·ப் க்ரேடியுட்டி வரக் காத்திருந்தார். பிறகு மகள் ஒருத்தி பிரசவத்துக்கு வந்தாள். பேரன் பிறந்து கொஞ்சி விளையாடினார். பேரன் போய் வீடு வெறிச்சென்று இருப்பதாய் நினைத்தார். தானே மகள் வீட்டுக்குப் போய் சில மாதங்கள் இருந்தார். பிறகு காசி யாத்திரை போனார்.... காலம் போய்க் கொண்டே இருந்தது. அவர் வீட்டு அலமாரியில் அந்த புத்தகங்கள் இன்னும் திறக்கப்படாமல் தான் இருக்கின்றன.

என்றாவது ஒருநாள் நாம் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கும் பரண்கள் எல்லோருடைய வீட்டிலும் இருக்கின்றன. அதற்கென்று நாம் ஒரு குறிப்பிட்ட நாள், நேரம் ஒதுக்கி, அந்த நாள், நேரத்தில் அதை செய்தே தீர்வது என்று உறுதியாக இல்லாத வரை நமது பரண் சுத்தம் செய்யப்படப் போவதில்லை. அதைச் செய்யாமல் அந்தப் பரணைப் பார்க்கிற போதெல்லாம் 'இதை ஒரு நாள் சுத்தம் செய்யணும்' என்று சொல்லிக் கொண்டே இருப்பதெல்லாம் சும்மா தான்.

ஒரு குறிப்பிட்டு சொல்லாத காலத்தை நாம் சந்திக்கப் போவதேயில்லை. 2010ல் இதை செய்து முடித்திருப்பேன் என்று ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லி அதற்காகத் திட்டமிட்டு செயல்படுபவன் அக்காரியத்தை செய்து முடிக்க சாத்தியமுண்டு. கொஞ்சம் பணம் சேர்த்து பேங்கில் போட்டு விட்டு பிறகு இதைச் செய்ய நினைத்திருக்கிறேன் என்பவன் என்றுமே அதை செய்து முடிக்கப் போவதில்லை. 'கொஞ்சம் பணம்' என்ற தொகை எவ்வளவு என்பது நாளுக்கு நாள் மாறிக் கொண்டே போகும். தெளிவில்லாத இலக்குகள் அடையப்படுவதில்லை.

அதே போல யதார்த்தத்திற்கு ஒத்துவராத இலக்குகளும் கைகூடுவதில்லை. ஒரு வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி வந்த இன்னொரு நபரை எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாயிற்கு வீடு வாங்க முற்பட்டவர் தான் வாங்க இருக்கும் வீட்டில் பத்து லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள வசதிகளை எதிர்பார்த்தார். நடப்பு நிலவரம் பற்றிக் கவலைப் படாமல் வீடு பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவர் தொடக்கத்தில் வாங்கியிருக்கக்கூடிய வீடுகளுக்கு எல்லாம் தற்போது மும்மடங்கு மதிப்பு உள்ளது. இன்று அவரால் நிலம் மட்டுமே அவருடைய பணத்துக்கு வாங்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இதுவரை சொன்ன செயல்கள் எல்லாம் தலை போகிற விஷயங்கள் அல்ல என்பது உண்மை. இது போன்ற விஷயங்கள் நாம் தினமும் சந்திக்கக் கூடிய விஷயங்கள். என்றேனும் ஓர் நாளில் செய்வோம் என்று சிறிய, மற்றும் பெரிய விஷயங்களில் நம்மை நாமே எப்படி ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கு இவை சில உதாரணங்கள்.

உண்மையாகவே ஒரு காரியம் உங்களுக்கு முக்கியம் என்றால் அதை என்றேனும் ஒரு நாள் செய்யலாம் என்று காத்திருக்காதீர்கள். நாம் யாரும் சிரஞ்சீவிகள் அல்ல. அந்த என்றேனும் ஓர் நாள் வரை யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. "ஏதாவது செய்யணும்", "ஒரு நாள் செய்யணும்" என்று மொட்டையாக சொல்லும் பழக்கத்தை விட்டு விடுங்கள். என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதில் தெளிவும், செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் ஒழிய எதையும் எப்போதும் நீங்கள் செய்யப் போவதேயில்லை.

என்.கணேசன்

Tuesday, September 2, 2008

புன்னகைத்தார் பிள்ளையார்

பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு அடிக்கடி வந்து மனதாரப் பிள்ளையாரைத் திட்டி விட்டுப் போவது அவள் வழக்கம். 'இனி இந்த கோயில் வாசப்படியை மிதிக்க மாட்டேன்' என்று சவால் விட்டுப் போவாள். ஆனால் மறுபடி வருவாள்.

திருமணமாகிப் பல வருடங்கள் கழிந்து அவளுக்குப் பிறந்த ஒரே மகன் சரவணன். சுறுசுறுப்பாக, புத்திசாலியாக , ஆஜானுபாகுவாக இருந்து அவளைப் பெருமிதப்படுத்திய மகன். ஒரு நாளைக்கு நூறு முறை 'அம்மா, அம்மா' என்றழைத்து அவளையே சுற்றி சுற்றி வந்த மகன்.

"சாயங்காலம் வந்தவுடன் பேல்பூரி சாப்பிட வெளியே போகலாம். ரெடியா இரு" என்று சொல்லிவிட்டுக் காலையில் கல்லூரிக்குப் போனவன், வீடு திரும்பியது பிணமாகத்தான். கல்லூரித் தேர்தலில் மாணவர்களுக்குள் நடந்த கைகலப்பில் கத்தியால் அவன் குத்திக் கொல்லப்பட்டுப் பதினாறு வருடங்களாகி விட்டன. இப்போது நினைத்தாலும் அவள் இதயத்தில் ரத்தம் கசிகிறது.

அன்றைய நாட்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி அது. 'கல்லூரிகளில் வன்முறை' என்று தலையங்கம் எழுதாத பத்திரிக்கையே இல்லை. மகன் போன அதிர்ச்சியில் அவள் கணவனும் சீக்கிரமே போய்ச் சேர்ந்து விட்டார். ஆனால் மரணம் அவளிடம் மட்டும் இன்னும் கருணை காட்டவில்லை. கணவரின் அரசாங்க உத்தியோகம் அவளுக்குப் பென்ஷன் வாங்கித் தந்து முதியோர் இல்லத்தில் காப்பாற்றி வருகிறது.

"என் பிள்ளையைக் கொன்னவன் பணக்கார வீட்டுப் பிள்ளையாம். பணத்தைக் கொடுத்து ஏழு வருஷ தண்டனையோட தப்பிச்சுட்டான். இப்படி எல்லாத்தையும் நடத்தறது பணம் தான்னா அப்பறம் நீ என்னத்துக்கு? உனக்கு ஒரு கோயில் என்னத்துக்கு? தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்வாங்க. நீ எதுவுமே செஞ்ச மாதிரி தெரியலையே. உங்கிட்ட பேசிப் பிரயோசனம் இல்லை. இதுவே கடைசி. இனிமே உன்னை எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன்".

பிள்ளையாரைக் கோபமாக முறைத்து விட்டு பர்வதம் கிளம்பினாள். நடையில் தளர்ச்சியும், மனதில் கனமும் கூடி இருந்தது. முதியோர் இல்லத்தை அடைந்த போது வாட்ச்மேன் சொன்னான். "பர்வதம்மா உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க"

பர்வதம் வராந்தாவுக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு இளைஞன் தயக்கத்துடன் நின்றான்.

"வணக்கம்மா! என் பெயர் அருண். சரவணனோட க்ளாஸ்மேட்" அவன் தயங்கித் தயங்கி சொன்னான். மகன் பெயரைக் கேட்டதும் பர்வதம் கண்களைச் சுருக்கிக் கொண்டு அவனை உன்னிப்பாகப் பார்த்தாள். கடைசியில் அடையாளம் தெரிந்தது. பத்திரிக்கைகளில் பல முறை பார்த்து அவள் மனதில் பதிந்து போன முகம். அவள் மகனைக் கொன்றவன். உணர்ச்சி வேகத்தில் உடல் நடுங்க, கைத்தாங்கலாக அருகிலிருந்த ஒரு நாற்காலியைப் பிடித்துக் கொண்டாள்.

சுதாரித்துக் கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள். சினிமாவில் பார்க்கிற கொலைகாரர்கள் போல முகத்தில் குரூரம் இல்லை.

"என்னை அடையாளம் தெரியுதாம்மா....?" அவன் தயங்கியபடி கேட்டான்.

"தெரியுது. உட்கார்"

உட்கார்ந்தான். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவன் குழம்பியது போலத் தெரிந்தது. பல முறை பேச வாயைத் திறந்து, வார்த்தைகள் வராமல் சங்கடப்பட்டு, நிலத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

அந்த கனத்த மௌனம் அவளுக்கும் என்னவோ போல் இருந்தது. மகன் பற்றி பேசவும் மனம் வராமல், ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டாள்.

"கல்யாணம் ஆயிடுச்சா?"

"ஆயிடுச்சு"

"குழந்தைகள்?"

"ஒரு பையன் இருந்தான்...போன வருஷம் ஒரு விபத்துல இறந்துட்டான்...." - தலையைக் குனிந்தபடியே சொன்னான்.

அவளையும் அறியாமல் அவள் மனம் இளகியது. குழந்தைகள் பற்றிக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

அவன் நிமிர்ந்த போது அவன் கண்கள் நிரம்பியிருந்தன.

"நான் அன்னிக்கு அப்படி ஏன் செஞ்சேன்னு இன்னும் எனக்கு விளங்கலை. பல பேர் தூபம் போட்டாங்க. சின்னச்சின்னதா நிறைய வெறுப்பை வளர்த்துக்கிட்டோம். எல்லாமாகச் சேர்ந்து என் அறிவை மறைச்சுடுச்சுன்னு தோணுது"

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்ததை அவள் உணர்ந்தாள். ஒன்றுமே பேசாமல் அவனையே கூர்ந்து பார்த்தபடி நின்றாள்.

"விபத்துல என் மகன் பலியானதுக்கப்புறம் தான் என் கொடுமையான செயலோட விபரீதம் எனக்குப் புரிய ஆரம்பிச்சுது. மூணு வருஷம் வளர்த்த என் குழந்தையோட சாவையே என்னால தாங்க முடியலையே.... இருபது வருஷம் வளர்த்து ஆளாக்கிய சரவணனின் இழப்பை நீங்கள் எப்படி தாங்கியிருக்க முடியும்னு நினைச்சப்ப எனக்கு என்னையே மன்னிக்க முடியலை....."

"உங்களைப் பத்தி விசாரிச்சு இங்கே நீங்க இருப்பதைக் கண்டுபிடிச்சு ஒரு மாசமாச்சு. பல தடவை இந்த கேட் வரை வந்து திரும்பிப் போயிருக்கேன். உள்ளே வந்து உங்களைப் பார்க்க எனக்கு தைரியம் வரலை. நான் சரியா சாப்பிட்டு, தூங்கி ரொம்ப நாளாச்சு. என் மனசாட்சி என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது. எனக்கு மன்னிப்பு கேட்கிற அருகதை கூட இல்லை. மன்னிக்கக் கூடிய தப்பையா நான் செய்திருக்கேன்? எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்க. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன்."

அவன் முகத்திலும் வார்த்தைகளிலும் அளவில்லாத வேதனை தெரிய, ஒரு குழந்தையைப் போல அவன் கெஞ்சிக் கேட்ட விதம் பர்வதத்தை என்னவோ செய்தது. சில மணி நேரம் முன்பு வரை அவள் சேர்த்து வைத்திருந்த வெறுப்பை எல்லாம் அவன் பேச்சு கரைத்தது.

கனிவுடன் அவனைப் பார்த்துக் குரல் கரகரக்கச் சொன்னாள். "வேகம் மட்டுமே நிறைஞ்ச, பக்குவமில்லாத வயசில் உன்னையும் அறியாமல் நீ செஞ்ச தப்புக்குச் சட்டப்படியும், மத்தபடியும் நீ அதிகமாகவே தண்டனை அனுபவிச்சுட்டே...."

இந்த வார்த்தைகளைச் சிறிதும் எதிர்பார்த்திராத அருண் திகைத்து "அம்மா..." என்றான். மறுகணம் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, ஒரு குழந்தையைப் போல அழ ஆரம்பித்தான். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத அவன் உணர்வுகளை அவன் அழுகை சொன்னது. நிறைய நேரம் அழுது ஓய்ந்த பின், கண்களைத் துடைத்துக் கொண்டு அவளருகே வந்து நின்று கேட்டான்.

"உங்களாலே எப்படி அம்மா என்னை மன்னிக்க முடியுது? என்னால தானே நீங்க ஆதரவில்லாமல் தனியா இங்கே இருக்கீங்க...?"

அவன் மனதில் இது விஷயமாக இனி எந்தக் குற்றவுணர்வும் இருக்கக்கூடாது என்று அவளது தாயுள்ளத்துக்குப் பட்டது. "குழந்தைகள் செத்தாத்தான் அவங்களை இழக்கணும்னு இல்லை. அவங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாக்கூட இழக்க வாய்ப்பு இருக்குன்னு நான் இங்கே வந்த பிறகு புரிஞ்சுகிட்டேன். அப்படி இங்கே நிறைய பேர் இருக்காங்க. அதனால் என் மகன் சாகாமல் இருந்திருந்தாக்கூட நான் இங்கே வந்திருக்கலாம் இல்லியா?"

"என்னைச் சமாதானப்படுத்த இப்படிச் சொல்றீங்களாம்மா?"

"இல்லை இப்போதைய யதார்த்ததைச் சொல்றேன்"

நன்றி மிகுதியோடு அவளது வயோதிகக் கரங்களைப் பிடித்துக் கொண்டு அவன் கேட்டான். "அம்மா நீங்க என் கூட வந்துடறீங்களா...? நான் கடைசி வரைக்கும் உங்களை என் தாயார் மாதிரி பார்த்துக்கறேன்"

பர்வதத்தின் கண்களும் மனதும் நிறைந்தன. "நீ கேட்டதே எனக்கு சந்தோஷமா இருக்குப்பா. ஆனா நான் இங்கே சௌகரியமா இருக்கேன். என் வயசுக்காரங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க. அந்தக் காலத்து நினைவுகளை ஒருத்தொருக்கொருத்தர் பல தடவை சொல்லிப் பகிர்ந்துப்போம். அதில் ஒரு மனநிறைவு இருக்குப்பா. சண்டை போட பக்கத்துக் கோயிலில் ஒரு பிள்ளையார் இருக்கார். நான் திட்டறதை எல்லாம் மௌனமா கேட்டுப்பார். எதிர்த்துப் பேச மாட்டார்."

அவன் ஏமாற்றத்துடன் கேட்டான். "நான் உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதும்மா. என்ன செய்யட்டும்?"

"ஒண்ணு செய்யேன்!"

"என்னம்மா?"- ஆர்வத்துடன் கேட்டான்.

"நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நீ வந்து பார்த்துக் கொண்டிரு. அடுத்த முறை உன் மனைவியைக் கூட்டிட்டு வா. சீக்கிரமாகவே உனக்கு இன்னொரு மகன் பிறப்பான். அவனையும் கூட்டிட்டு வா. இந்தக் கிழவி போய்ச் சேர்கிற வரை ஞாபகம் வச்சு வந்து பாரு..."

கண்கள் குளமாக அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றான் அவன். குனிந்து அவள் கால்களைத் தொட்டு அவன் வணங்கிய போது அவள் கால்களை அவன் கண்ணீர் கழுவியது.

"வர்ற ஞாயிற்றுக் கிழமை அவளையும் கூட்டிட்டு வர்றேம்மா..." என்று சொல்லி அவன் விடைபெற்றான்.

அவன் கிளம்பிய பிறகு அவசர அவசரமாகப் பிள்ளையார் கோயிலுக்கு விரைந்தாள் பர்வதம்.

"ஏன் பிள்ளையாரப்பா.....இவனை விடப் பெரிய பெரிய கொடுமை எல்லாம் செய்து, ஊரையே ஏமாத்தி உலையில போடறவனெல்லாம் பிள்ளைகுட்டியோட நல்லாத்தான் இருக்கான். ஆனா, அறியாம செஞ்ச தவறுக்கு சட்டப்படி தண்டனை அனுபவிச்சு, மனசார வருத்தப்பட்ட பிறகும் அருணின் குழந்தையைப் பறிச்சிருக்கியே, நியாயமா? என் மகனுக்கு விதி முடிஞ்சுது. போயிட்டான். இவனையாவது நிம்மதியா இருக்க விடு. எனக்கு இப்ப உன்னைத் தவிர, வேறு யார் மேலயும் வருத்தமில்லை. அருணுக்கு இன்னொரு மகனைக் கொடு. அந்தக் குழந்தைக்குத் தீர்க்காயுளைக் கொடு. அருண் சந்தோஷமாயிருக்கட்டும். நான் வரேன்!"

சொல்லிவிட்டுப் பிள்ளையாரைப் பார்க்கையில் பிள்ளையார் முகத்தில் சற்று புன்னகை கூடினது போல் பர்வதத்திற்குப் பட்டது. "சிரிப்பென்ன வேண்டிக்கிடக்கு. இப்ப எனக்கு நேரமாச்சு. நாளைக்கு வந்து பேசிக்கறேன்" என்று பொய்க் கோபத்தோடு கோயிலை விட்டு வெளியேறினாள்.

முதியோர் இல்லம் நோக்கி நடக்கையில், தன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராத ஒரு மனநிறைவு அவளுக்கிருந்தது.

- என்.கணேசன்

(இச்சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகி இலக்கிய சிந்தனையால் 2002 ஜூன் மாத சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)

Wednesday, August 27, 2008

உள்ளத்தில் நல்ல உள்ளம்

டவுள் நல்லவர்களைத் தான் அதிகம் சோதிக்கிறார் என்று சொல்லாதவர்கள் குறைவு. நல்லதற்குக் காலமில்லை என்று சொல்பவர்கள் நல்லவர்கள் படும் பாட்டைப் பட்டியல் இடுவதுண்டு. எத்தனையோ நன்மைகள் செய்தும் சோதனைக்குள்ளாகும் போது பாதிக்கப்பட்ட நல்லவர்கள் "கடவுளே ஏன்?" என்று கேட்காமல் இருப்பதும், தொடர்ந்து தன்னால் முடிந்த நன்மைகளை மற்றவர்களுக்கு செய்து வருவதும் மிக அபூர்வம். அப்படிப்பட்ட அபூர்வமான ஒரு நபர் இப்போதும் நம்மிடையே இருக்கிறார். அவரைப் பற்றி அறிந்து கொள்வோமா?

கோட்டயம் மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக 1970ல் தற்காலிகப் பணியில் சேர்ந்தவர் பி.யூ.தாமஸ். இரக்க குணம் படைத்தவர். ஏழை எளிய மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தார். ஆஸ்பத்திரியில் வரும் எத்தனையோ ஏழைகள் உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்ட அவருக்கு, தன்னால் இயன்ற ஓரிருவருக்காகவாவது உணவு கொடுத்தால் என்ன என்று தோன்ற அதை உடனடியாக செயல்படுத்தினார். ஓரிருவர் என்று ஆரம்பித்தது நாளடைவில் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது. தன் குறுகிய வருமானத்தில் பலருக்கு உணவளிக்க ஆரம்பத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டார்.

ஆனால் அவரது நல்ல சேவையைக் கண்ட சிலர் தாங்களும் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒருவர் அரிசி தர முன் வந்தார். இன்னொருவர் உணவு கொண்டு வர வாகன உதவி செய்ய முன் வந்தார். இப்படி பலரும் பல விதங்களில் உதவ முன் வந்தனர். பணமாகவோ, பொருளாகவோ தர முடியாதவர்கள் தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர். இன்று கிட்டதட்ட 1200 பேருக்கும் மேலாக இவர் அமைத்த நவஜீவன் என்ற அமைப்பு மூலம் உணவு பெறுகிறார்கள். இன்று நவஜீவன் சமையலறையில் பணியாளர்களும், தன்னார்வத் தொண்டர்களுமாக சேர்ந்து சுமார் 50 பேர் பணி புரிகிறார்கள்.

மனநிலை சரியில்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பாக தங்க இடமும், உண்ண உணவும் தரவும் அவர் முற்பட்டார். மனநிலை சரியில்லாதவர்களை பராமரிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் கருணை உள்ளம் படைத்த அவருக்கு அவர்களை அப்படியே விட மனமில்லை. அன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு அபயம் அளித்தார். அப்படி அங்கு வாழ்ந்து குணமான பலர் அவருடைய சேவையில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், நாளடைவில் பலருடைய உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்பதற்கு தாமஸின் முயற்சிகளே உதாரணம்.


இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உதவி வரும் தாமஸிற்கு நான்கு மகள்கள். ஒரு மகன். மகன் ஏழு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான். இப்படி கருணையே உருவானவருக்கு கடவுள் கருணை காட்டத் தவறி விட்டாரே என்ற வருத்தத்தில் ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டார். "ஏழை எளியவர்களுக்கு இத்தனை சேவை புரியும் உங்கள் ஒரே மகனை இறைவன் பறித்துக் கொண்டாரே என்று தங்களுக்கு வருத்தமாயில்லையா?"

அந்தக் கேள்வி நியாயமானதே. எப்படிப்பட்டவருக்கும் அப்படி தோன்றாமல் இருப்பது அரிது. ஆனால் தாமஸ் சொன்னார். "ஏழு வயதே ஆயுள் உள்ள ஒரு குழந்தையை பூமியில் பிறப்பிக்க வேண்டி இருந்த போது இறைவன் அந்தக் குழந்தையை பாசத்துடன் வளர்க்க ஏற்ற நபராக என்னைக் கண்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இது கடவுள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றே எண்ணுகிறேன்"

மகன் இறந்ததும் நல்லதற்குக் காலமில்லை என்று விரக்தி அடைந்து தன் சேவைகளை நிறுத்தாமல், கடவுள் மீது கோபம் கொண்டு ஏசாமல், இப்படி எண்ண முடிந்த நபரைப் பற்றி இனி என்ன சொல்ல?

-என்.கணேசன்