Thursday, September 25, 2008

தோல்வி நிறைய கற்றுத் தரும்


ஒவ்வொருவரும் வெற்றியடையவே ஆசைப்படுகிறோம், பாடுபடுகிறோம் என்றாலும் வெற்றியை நோக்கிய பாதையில் தோல்விகள் என்ற மைல்கல்களை நாம் கடந்தே செல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிக்கனியை சுவைக்கையில் அதன் ருசி கூடுவதும் நாம் சந்தித்த தோல்விகளின் அனுபவங்களாலேயே. ஆனாலும் தோல்வி வரும் போது அது சகிக்க முடியாததாகவே இருக்கிறது. சகிக்க முடியா விட்டாலும் தவிர்க்க முடியாத போது தோல்விகளை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல்வியை விடச் சிறந்த முறையில் யாரும் பாடங்களைக் கற்றுத் தர முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் வெற்றி பெரிதாக எதையும் புதிதாகக் கற்றுத் தருவதில்லை. மாறாக தோல்வி நிறையவே கற்றுத் தருகிறது. நிறைய சிந்திக்க வைக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் சிந்திப்பதற்கு பதிலாக, கற்றுக் கொள்வதற்குப் பதிலாக நாம் வருத்தப்படுகிறோம், ஆத்திரப்படுகிறோம். தோல்வி நம் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறது. அதைப் புரிந்து கொள்வதற்கு பதிலாக நாம் யாரையாவது குறை சொல்ல முற்படுகிறோம். தோல்வி நம் பலவீனங்களை நமக்கு உணர்த்த முனைகிறது. நாம் அதை உணர்வதற்குத் தயாராவதற்குப் பதிலாக நம் தோல்வி எப்படி நியாயமற்றது என்று மற்றவர்க்கு விளக்க முனைகிறோம். எனவே தான் தோல்விகள் வந்து போனாலும் நாம் அதன் மூலம் உண்மையான பயனடைவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வி நமக்கு பணிவைக் கற்றுத் தருகிறது. மாறாக வெற்றி பெரும்பாலும் அகம்பாவத்தை ஏற்படுத்தி விடுகிறது. வெற்றி சில சமயங்களில் பல காரணங்களால் தவறுதலாகக் கூடக் கிடைத்து விடுவதுண்டு. அப்போது இல்லாத உயர்வுகள் இருப்பதாக எண்ணி அடுத்த வீழ்ச்சிக்குத் தேவையான கர்வத்தை நாம் பெற்று விடுவதும் உண்டு. தோல்விகள் பல கிடைத்து பணிவைக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றி கிடைக்கும் போதும் நிலை மீறி நடப்பதில்லை.

எனவே தோல்வி வரும் போது நாம் துவண்டு விடத் தேவையில்லை. தோல்வி நம் திறமைக்கான நிரந்தரப் பிரகடனம் அல்ல. அது நாம் இன்னும் கற்க வேண்டியுள்ளதையும், செய்ய வேண்டியுள்ளதையும் நமக்கு சுட்டிக் காட்டும் பேருதவியைச் செய்கிறது. அந்த பாடங்களை வருத்தமோ, துக்கமோ இல்லாமல் நாம் கற்றுக் கொள்ள தவறி விடக்கூடாது. உண்மையான வெற்றி மற்றவர்களின் அங்கீகாரத்தாலேயோ, பாராட்டுதல்களாலேயோ கிடைப்பதல்ல. உண்மையான வெற்றி நம் உள்மனமும் ஆழத்தில் இருந்து சபாஷ் போடும் போது தான் ஏற்படுகிறது. அந்த உண்மையான வெற்றிக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இடையே கிடைக்கும் தோல்விகளில் அடங்கி உள்ளன.

எனவே தோல்வியைத் திறந்த மனத்துடன் ஆராயுங்கள். அதிலிருந்து கற்றுக் கொள்ளத் தடையாக இருக்கும் வருத்தம், கோபம், அவநம்பிக்கை போன்ற எதிரிகளை மனதில் இருந்து விரட்டி விடுங்கள். தோல்வி வெற்றிக்கு இனியும் தேவைப்படும் பண்புகளைச் சுட்டிக்காட்டும். அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். தோல்வி வெற்றிக்கு இனியும் தேவையான செயல்கள் இன்னதென்று தெரிவிக்கும். அந்தச் செயல்களை செய்யத் துவங்குங்கள். தோல்வி வெற்றிக்குத் தடையாக உங்களிடம் உள்ள பலவீனங்களையும், செயல்பாடுகளையும் பட்டியலிடும். அவற்றை உங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்றி விடுங்கள்.

நீங்கள் வெற்றியடைய இத்தனை பாடங்களைத் தோல்வியைத் தவிர வேறெதுவும் கற்றுத் தருவதில்லை. எனவே தோல்வி வரும் போது நன்றியோடு அதை எதிர்கொள்ளுங்கள். அதிலிருந்து நீங்கள் உண்மையாகவே கற்றுக் கொண்டு செயல்பட்டால் அது மீண்டும் வருவதில்லை.

என்.கணேசன்

2 comments:

  1. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் வாசகம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
    "You may be disappointed if you fail, but you are doomed if you don't try."

    ReplyDelete
  2. ///தோல்வி நமக்கு பணிவைக் கற்றுத் தருகிறது. மாறாக வெற்றி பெரும்பாலும் அகம்பாவத்தை ஏற்படுத்தி விடுகிறது. ///

    உண்மை தான் நண்பரே...

    சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

    ReplyDelete