ஒரு காலத்தில் ஊழல் உலகளாவியது என்று சொல்வார்கள். இன்று தீவிரவாதமும் அந்த இடத்தைப் பிடித்து விட்டது. தீவிரவாதம் தினந்தோறும் நாம் காணும் அன்றாட நிகழ்ச்சி ஆகி விட்டது.
தங்கள் மதத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும், உரிமைகளின் பெயராலும், கோரிக்கைகளின் பெயராலும், இழைக்கப்படும் அநீதியின் பெயராலும் இன்று தீவிரவாதம் ராஜநடை போடுகிறது. உண்மையில் யாருக்கு எதிராக தீவிரவாதம் நடைபெறுகிறதோ அவர்கள் பெரிதாக பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ அப்பாவி ஜனங்கள் பல்லாயிரம் மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை.
ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் போது இறக்கும் அப்பாவி ஜனங்கள் எத்தனை பேர்? படுகாயம் அடையும் பரிதாபத்திற்குரிய நபர்கள் எத்தனை பேர்? இந்த எண்ணிக்கையைப் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். இதன் காரணாமாக வாழ்க்கையே திசைமாறி சீர்குலைந்து போகும் குடும்பத்தினர் பற்றி யார் சொல்கிறார்கள்? யார் கவலைப்படுகிறார்கள்?
அரசியல்வாதிகள் மரணத்திற்கு இவ்வளவு, படுகாயத்திற்கு இவ்வளவு என்று ஒரு தொகை நிர்ணயித்து தந்து கைகழுவி விடுகிறார்கள். அந்தப் பணம் இறந்த உறவுக்கு ஈடாகுமா? அந்த மனிதர்கள் இருந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யுமா? இழந்த உறுப்புக்கும், ஊனத்துடன் தொடர்ந்து வாழும் வாழ்க்கைக்கும் ஈடாகுமா? அந்த மனிதர்களைச் சார்ந்திருந்த குடும்பத்தாரின் துக்கத்தையும், இழப்புகளையும் தீவிரவாதிகள் முழுமையாக அறிவார்களா? அவர்கள் மனசாட்சி ஏற்றுக் கொள்ளுமா?
(இந்தக் கருத்தை வலியுறுத்தி 'சிறைவாசம்' என்ற சிறுகதை ஒன்றை முன்பு எழுதியுள்ளேன்.)
http://enganeshan.blogspot.com/2008/01/blog-post_15.html
பெரும்பாலான தீவிரவாத நடவடிக்கைகள் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தான் நடக்கின்றன. ஆனால் பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அந்த அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவது அபூர்வம். அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் அப்பாவி மக்கள் தான் உண்மையில் அதிகம் பலியாகிறார்கள். அந்த அப்பாவி மக்களும் அவர்கள் குடும்பங்களும் செய்த தவறு தான் என்ன? தீவிரவாதிகளின் எந்த சித்தாந்தத்திற்கு அவர்கள் எதிராக இருந்திருக்கிறார்கள்? தங்கள் தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியல்லாது வேறு சிந்தனைக்கே நேரமில்லாத அந்த அப்பாவிகளைப் பலி வாங்குவது என்ன நியாயம்.
எல்லா மதங்களும் ஏழை எளிய மக்களுக்குத் தீங்கு செய்வதை மிகப்பெரிய பாவமாகவே கூறுகின்றன. எனவே மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்திற்கு எந்த மதமும் அங்கீகாரம் அளிப்பதாகக் கூற முடியாது. உரிமை, நீதி, கோரிக்கைகளின் அடிப்படையில் தீவிரவாதம் செய்யப்படுவதானால் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களுக்கு இழைக்கும் இந்த மிகப் பெரிய அநீதியை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது.
மனிதன் முதலில் மனிதன் என்ற அந்தஸ்திற்குத் தகுந்தவனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பின்பு தான் அவன் மதம், மொழி, ஜாதி, சமூகம் போன்ற அடைமொழிகளுக்கு ஏற்றவனாகிறான். அதை யாரும் எந்த காலத்திலும் மறந்து விடலாகாது.
உண்மையிலேயே ஒருவருக்கு சார்ந்திருக்கும் மதம், சமூகம், மொழி, ஜாதி ஆகியவற்றில் அக்கறை இருக்குமானால் அந்தந்த மக்களுக்காக ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வது தான் சிறந்தது. அவர்கள் வாழ்க்கை மேம்பட உழைப்பது அவசியம். அதற்குத் தான் மன உறுதி அதிகம் தேவை. உழைப்பும், சக்தியும் அதிகம் தேவை. அப்படி செய்யும் போது தான் ஒருவர் அக்கறை காட்டும் மனிதர்களின் நிரந்தர வளர்ச்சிக்கு பாதை வகுத்தது போல ஆகும்.
அதை விட்டு விட்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டால் பல அப்பாவிகளுக்கு ஒருவன் துன்பம் தரலாமே ஒழிய அவன் அக்கறை காட்டுவதாக நினைக்கும் மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்த முடியாது. மேலும் அழிப்பது என்றுமே சுலபமான விஷயம். அதற்கு மேம்பட்ட குணங்களோ, திறமையோ தேவையில்லை. ஆக்குவது தான் கஷ்டம். அதற்குத் தான் திறமையும் உழைப்பும் தேவை.
உயிரை எடுப்பதும், உயிரை விடுவதும் பிரமாதமான விஷயமல்ல. சமூகத்திற்கு உபயோகமாக வாழ்வதும், உபயோகமாக இருப்பதுமே சிறப்பு.
எந்த தீவிரவாதியும் அன்பினால் உருவாவதில்லை. வெறுப்பினாலேயே உருவாகிறான். வெறுப்பு தான் அவன் சக்திகளையும், அறிவையும் இயக்கும் சக்தியாக இருக்கிறது. தான் சார்ந்திருக்கும் சாரார் மீதுள்ள அன்பினால் அவன் உந்தப்படுவதற்குப் பதிலாக எதிர் சாரார் மேலுள்ள வெறுப்பினாலேயே உந்தப்படுகிறான். தான் சார்ந்த மக்களுக்கு நல்லது செய்வதற்குப் பதிலாக எதிரணிக்கு தீங்கு விளைவிக்கவே முற்படுகிறான்.வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட எந்த செயலும் எவருக்கும் நன்மையை ஏற்படுத்தி விட முடியாது. அவனுடைய செயலை வைத்து அவன் சார்ந்த மக்களையே குற்றப்படுத்த முனையும் முட்டாள்தனத்தை உலகம் செய்வதால் அவன் தான் சார்ந்த மக்களுக்கும் தீங்கே செய்தவனாகிறான்.
எனவே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களும், அதை ஆதரிப்பவர்களும், நியாயப்படுத்த முனைபவர்களும் இந்தத் தீவிரவாதம் யாருக்கு எதிராக? இதனால் உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்ற கேள்வியை ஆறறிவு படைத்த மனிதர்கள் என்ற அடிப்படையில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வது தர்மமாகும்.
- என்.கணேசன்
மிகவும் அவசியமான, அருமையான கருத்துக்கள்.
ReplyDelete//மிகவும் அவசியமான, அருமையான கருத்துக்கள்.//
ReplyDeleteவழிமொழிகிறேன்.
Thought provoking entry. Thank you
ReplyDeleteA good post. End line is very thoughtful. As a blog reader I like your bloggings.
ReplyDeleteGood analysis of humanity
ReplyDelete//தான் சார்ந்திருக்கும் சாரார் மீதுள்ள அன்பினால் அவன் உந்தப்படுவதற்குப் பதிலாக எதிர் சாரார் மேலுள்ள வெறுப்பினாலேயே உந்தப்படுகிறான். தான் சார்ந்த மக்களுக்கு நல்லது செய்வதற்குப் பதிலாக எதிரணிக்கு தீங்கு விளைவிக்கவே முற்படுகிறான்.//
ReplyDeleteமிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
Nice post...
ReplyDeleteகடைசி மூன்று வரிகள்.....இல்லை கேள்விகள்...சம்மந்த பட்டவர்கள் அலசி ஆராய வேண்டிய ஒன்று.....தேவையான பதில் மட்டும் கிடைத்துவிட்டால்......
ReplyDeleteSelf imprisonment தான் பொருத்தமான தண்டனையாக இருக்கும்.....