பாண்டியன் டாக்டர் சுகுமாரனைத் தனியாக வெளியே அழைத்துப் போய்
ஷ்ரவனானந்தாவுக்கு இருக்கும் விசேஷ சக்தி விவரங்களைச் சொன்னார். சுகுமாரன்
திகைப்புடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டார். ஷ்ரவன்
நேற்று அவர்கள் எதிரியைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறான் என்று சொன்ன போது சுகுமாரன்
தங்களுக்கு இத்தனை பிரச்சினைகளை உருவாக்கிய ஆளைப் பார்க்க வேண்டுமென்று துடித்தார். பாண்டியன்
அவருக்கு அந்த நபரின் புகைப்படங்களைக் காட்டிய போது அவருக்கும் அந்த நபர் பரிச்சயமானவன்
அல்ல என்று சொன்னார். பாண்டியன் தேவானந்தகிரியிடம் நேற்று பேசினதையும் சொன்ன போது
சுகுமாரன் பரம திருப்தி அடைந்தார்.
இருவரும் அறைக்குத் திரும்பி வந்தார்கள். டாக்டர்
சுகுமாரன் ஷ்ரவனைப் பார்த்த பார்வையில் மரியாதை தெரிந்தது.
ஷ்ரவன் சுகுமாரனிடம் சொன்னான். “என்னை மன்னித்து
விடுங்கள். சில சமயங்களில் எனக்கு வேண்டாதது எல்லாம் தெரிகிறது. புதியவர்கள்
பற்றி தெரிந்தாலும் வெளியே சொல்லக்கூடாது என்று நினைத்தாலும் மண்டை ஓட்டைப் பார்த்ததும்
பதட்டமடைந்து என்னை அறியாமல் சொல்லி விட்டேன்...”
சுகுமாரன் கைகூப்பினார். “தப்பேயில்லை....”
பாண்டியன் சுகுமாரனைத் தொடர்ந்து பேச
அனுமதிக்காமல் இடைமறித்து ஷ்ரவனிடம் சொன்னார். “நீங்கள்
நேற்று சொன்ன இளைஞனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன ஷ்ரவனானந்தா.”
ஷ்ரவன் பரிதாபமாக முகத்தை வைத்துக்
கொண்டு சொன்னான். “எனக்கு அந்த ஆளைப் பற்றி வேறு எந்தக் காட்சியும் தெரியவில்லையேஜி.”
பாண்டியன் சொன்னார். “இது போன்ற
சக்திகளின் பிரயோகங்களில் பரிச்சயமான ஒருவர் எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவர் கேரளாவில்
காசர்கோட்டில் இருக்கிறார். அவரிடம் பேசிய போது அவர் அந்த ஆளைப் பற்றி மேலும் அதிகமாக
உங்களுக்குத் தெரிவதற்குச் சில ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார்.”
இவர்கள் இதுவிஷயமாக தேவானந்தகிரியை
உடனடியாகத் தொடர்ந்து கொண்டு பேசுவார்கள் என்பதை ஷ்ரவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மனதுக்குள்
அவன் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தேவானந்தகிரி
நேராக இங்கே வராவிட்டாலும் கூட, அவர் இதில் சம்பந்தப்படுவது அவனை எப்போதும் ஆபத்தின் எல்லைக்
கோட்டில் வைத்திருக்கும் என்ற புரிதல் அவனுக்கு இருந்தது. ஆனால் ஆபத்தான
விளையாட்டை அவன் ஆரம்பித்தாகி விட்டது. இனி இடையில் நிறுத்த
வழியில்லை.
ஷ்ரவன் கேட்டான். “என்ன ஆலோசனைகள்ஜி...”
பாண்டியன் சொன்னார். “எதையுமே
சரியான காலத்தில் முறையாக முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார். இது போன்ற
விசேஷ சக்தி சம்பந்தமான முயற்சிகள் அதற்குச் சாதகமான காலத்தில் தான் எடுக்கப்படவேண்டும்
என்று அவர் சொல்கிறார்...”
ஷ்ரவன் தலையசைத்தாலும் அவன் முகத்தில்
குழப்பம் தெரிவதை பாண்டியன் கவனித்தார்.
அவர் அவனிடம் விளக்கமாகச் சொன்னார். “இதெல்லாம்
சரியான முகூர்த்த காலத்தில் ஆரம்பிக்கப்படுவது முக்கியம் என்று அவர் சொல்கிறார். இன்றைக்கு
உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி மதியம் 11.57 க்கு நீங்கள் அந்த
இளைஞன் மீது கவனம் குவிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக உங்களுக்கு அவனைப் பற்றிய கூடுதல்
விவரங்கள் தெரியவரும் என்று அவர் சொன்னார். இயல்பாக
இருக்கும் எந்தச் சக்தியும் அந்த சமயத்தில் கூடுதலாகப் பெருகும் என்கிறார் அவர்.”
ஷ்ரவன் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம்
11.47. சிறிது யோசித்து
விட்டு அவன் பாண்டியனிடம் சொன்னான். “நீங்கள்
11.57க்கு அலாரம் வைக்கிறீர்களா ஜீ. நான் அது வரை என்
இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன். அலாரம் அடித்தவுடன்
அந்த இளைஞன் மீது என் கவனத்தைக் குவிக்கிறேன். பார்ப்போம்
எதாவது கூடுதலாகத் தெரிய வருகிறதா என்று...”
பாண்டியனுக்கு அவன் உடனடியாக அவர் சொன்னதை
முயற்சி செய்து பார்க்கத் தயாரானது மிகவும் பிடித்தது. சரியென்று அவரது கைபேசியில் அவர் அலாரத்தை
11.57க்கு வைத்தார்.
ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு
என்ன சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. மிகவும்
கவனமாக அவன் இந்தச் சூழ்நிலையைக் கையாள வேண்டும். இந்தச்
சூழ்நிலையை மட்டுமல்ல, தொடர்ந்து வரும் சூழ்நிலைகளையும் கச்சிதமாகக் கையாள வேண்டும். அவன் தன்
இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்து விட்டு மந்திர ஜபத்தை மனதிற்குள் சொல்ல ஆரம்பித்தான். சிறிது
நேரத்தில் அதில் அவன் ஐக்கியமாகி லயிக்க ஆரம்பித்தான். பாண்டியனையும், சுகுமாரனையும், அந்தச்
சூழ்நிலையையும் கூட மறந்தான். அவனுக்குள் அந்த மந்திரம் மட்டுமே நிறைந்திருந்தது. முடிவில்
அவனே அந்த மந்திரமானான்.
சாந்தமும், பேரமைதியும்
அவனிடம் தெரிய ஆரம்பித்தது. அவனிடம் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து பாண்டியனும், சுகுமாரனும்
பிரமித்தனர். பாண்டியனுக்கு ஆன்மீக அனுபவங்கள் கிடையாது. அவருக்கு
அதில் சிறிதும் ஈடுபாடும் இல்லாமல் இருந்ததால் அவர் மற்றவர்களிடமும் அவற்றைக் கவனித்தது
இல்லை. ஆனால் அவன் இப்போது இருக்கும் நிலை நடிப்பல்ல என்பதையும்
அவன் வேறெதோ உலகத்திற்குச் சென்று விட்டதையும் அவர் உணர்ந்தார். சுகுமாரனும்
கிட்டத்தட்ட அவரைப் போலவே உணர்ந்தார்.
அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துக்
கொண்டிருப்பதை ஷ்ரவன் உணரவில்லை. மந்திரமாய் அவனே எங்கும் வியாபித்திருந்தான். அதில் இன்னொன்றுக்கு
இடம் இருக்கவில்லை. அலாரம் அடித்த போது தான் அவன் நிகழ்காலத்திற்குத் திரும்பினான். எங்கு, எதற்காக
உட்கார்ந்து மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் அப்போது தான் அவனுக்கு நினைவுக்கு
வந்தது. அவன் உருவாக்கிய
கற்பனை எதிரியைப் பற்றி இனி எதையாவது சொல்லியாக வேண்டும்... மூளையில்
ஒரு பொறி தட்டியது. கத்தி முனையில் நடக்கும் வித்தை தான். ஆனால் ஒரு
கல்லில் இரண்டு மாங்காய்!
ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவன்...
அவன் எதையோ தேடிக் கொண்டிருக்கிறான்....”
பாண்டியனும் தாழ்ந்த குரலில் பரபரப்புடன்
கேட்டார். “என்ன தேடுகிறான்...?”
சிறிது நேர மௌனத்திற்குப் பின் ஷ்ரவன்
சொன்னான். “யாரோ ஒரு நிஜ யோகியை?”
பாண்டியனும் சுகுமாரனும் ஒருவரை ஒருவர்
பரபரப்புடன் பார்த்துக் கொண்டார்கள். பாண்டியன் கேட்டார். “எதற்கு
அவன் நிஜ யோகியைத் தேடுகிறான்....?”
இதுவரை அவன் அவர்களுக்கு வேறொரு ஆள்
மூலம் முன்பே தெரிந்ததைச் சொல்லி அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்து விட்டான். அந்த இடத்திலிருந்து
இனி அவர்களை அவன் எப்படி வழிநடத்துவது என்பதை அவனே புத்திசாலித்தனமாய் திட்டமிடலாம். திட்டம்
அவனுடையதாய் இருந்தாலும் முடிவு அவர்களாய் எடுப்பது போல் இருப்பது மட்டும் இதில் மிக
முக்கியம்…
அவன் மெல்லச் சொன்னான். “அவரது காலடி
மண் அவனுக்கு வேண்டியிருக்கிறது...”
இருவரும் திகைத்தார்கள். பாண்டியன்
கேட்டார். “காலடி மண்ணா? எதற்கு?...”
“எதோ ஒரு
விசேஷ பூஜைக்கு.....”
“என்ன பூஜை? எதற்கான
பூஜை?...”
“ம்ம்ம்....”
ஷ்ரவன் எதையோ உற்றுப் பார்ப்பது போல் காட்டிக் கொண்டான். ”பூஜையில்
பெரிய விளக்கொன்று தெரிகிறது, மயான காளியின் படம் ஒன்றும் தெரிகிறது....
நிறைய சின்னங்கள் தரையில் வரையப்பட்டு இருக்கின்றன.”
அவன் கூடுதலாக எதாவது சொல்வான் என்று
எதிர்பார்த்துக் காத்திருந்த பாண்டியன் அவன் எதையும் சொல்லாமல் போகவே மெல்லக் கேட்டார்.
“அவர்கள்
தேடும் நிஜ யோகி எங்கேயிருக்கிறார் என்று தெரிகிறதா?”
ஷ்ரவன் அந்தக் கேள்விக்கு பரசுராமன்
சொன்ன பதிலையே சொல்வது நல்லது என்று எண்ணினான். “ஏதோ தோட்டம் தெரிகிறது.....”
சொல்லி விட்டு அவன் மௌனமானான். பாண்டியன்
பரபரப்புடன் கேட்டார். “பிறகு என்ன தெரிகிறது?”
“பிறகு, பிறகு....”
என்ற ஷ்ரவன் பின் முகத்தில் ஏமாற்றத்தைக் காட்டிச் சொன்னான். ”எல்லாம்
மறைந்து விட்டது.”
அவன் கண்களைத் திறந்த போது அவர்கள்
இருவர் முகத்திலும் திகைப்பும், ஏமாற்றமும் கலந்து தெரிவதைப் பார்த்து வருத்தம் காட்டிச்
சொன்னான். “காட்சி திடீரென்று வருவதைப் போலவே திடீரென்று போயும் விடுகிறது. என்னை மன்னிக்க
வேண்டும்.”
பாண்டியன் சொன்னார். “மன்னிக்க
எதுவுமில்லை ஷ்ரவனானந்தா. நீங்கள் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் தான். அடுத்த
முறையும் முகூர்த்தம் பார்த்து தொடங்குவோம். கண்டிப்பாக, கூடுதலாக
எதாவது தெரிய வரும்...”
பாண்டியன் ஷ்ரவனை அனுப்பி விட்டார். சுகுமாரன்
பாண்டியனிடம் ஏமாற்றத்துடன் சொன்னார். “நான் எதிரி பற்றிய
எல்லா தகவலும் இப்போதே தெரிந்து விடும் என்று எதிர்பார்த்தேன்...”
பாண்டியன் சொன்னார். “அவன் இவ்வளவு
சொன்னதே பெரிய விஷயம் தான். எதிரி ஒரு நிஜ யோகியைத் தேடறான்னு கண்டுபிடிக்கவே தேவானந்தகிரிக்கு
மந்திரம், யந்திரம், பூஜைன்னு எல்லாம்
தேவைப்பட்டுச்சு. இவன் அது எதுவுமில்லாமல் நிமிஷங்கள்ல சொல்லிட்டான். கூடுதலாய்
அவன் அந்த நிஜ யோகியை, அவரோட காலடி மண்ணுக்காக தான் தேடறான்னும் சொல்லிட்டான்.”
“ஆனா அந்த
மண் எதுக்குன்னு சொல்லலையே. அதை எப்படி தெரிஞ்சுக்கறது?”
“தேவானந்தகிரிக்கு
போன் பண்ணினா தெரிஞ்சுடப் போகுது” என்ற பாண்டியன் தன் அலைபேசியை எடுத்தார்..
(தொடரும்)
என்.கணேசன்


.jpg)
Thanks. Desikan
ReplyDeleteஇவர்கள் இதுவிஷயமாக தேவானந்தகிரியை உடனடியாகத் "தொடர்ந்து" கொண்டு பேசுவார்கள் என்பதை ஷ்ரவன் எதிர்பார்த்திருக்கவில்லை....
ReplyDeleteஇந்த வரியில் "தொடர்பு கொண்டு பேசுவார்கள்" என்று வருமென நினைக்கிறேன்.
நிஜ யோகியை பற்றி அவர்களிடையில் கலந்துரையாடல் வரும்போது...மேலும் தகவல்கள் ஷர்வனுக்கு தெரியவரும்.
ReplyDelete