Thursday, September 25, 2025

சாணக்கியன் 180

சுசித்தார்த்தக் பர்வதராஜனிடம் வந்து இரகசியமாகச் சொன்னான். “அரசே. ராக்ஷசரிடமிருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது

 

பர்வதராஜன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஒரே நாளில் ராக்ஷசரிடமிருந்து தகவல் வரும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஆவலோடு கேட்டான். “என்ன தகவல்?”

 

தங்களிடம் அவர் பேசியதை நிறைவேற்ற அரண்மனையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அது இரண்டு மூன்று நாள் நடக்கும் நிகழ்ச்சிகளாக இருந்தால் நல்லது என்று சொல்கிறாராம்.”

 

உண்மையில் ராக்ஷசர் சொன்னது முதல் வாக்கியம் மட்டும் தான். இரண்டாவது வாக்கியம் சேர்க்கப்பட்டது என்பதை அறியாத பர்வதராஜன் மகிழ்ச்சியடைந்தான். இந்தப் போரை ஆரம்பித்த பின்னரே அவன் வாழ்க்கை சோபை இல்லாமல் தான் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் விஷயங்களும் அவன் விருப்பப்படி வேகமாக நடப்பதில்லை. அதனால் தங்கள் திட்டம் நிறைவேறப்போவது மட்டுமல்லாமல் களை இழந்த வாழ்க்கையில் இந்தக் கலை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியைக் கூட்டுமென்று அவன் எண்ணினான்.

 

ஆனால் திடீரென்று ஒரு பலத்த சந்தேகம் வர அவன் எச்சரிக்கையுடன் கேட்டான். “எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்வதால் சந்திரகுப்தனை நான் தான் திட்டமிட்டுக் கொன்றேன் என்ற சந்தேகம் வந்து விடாதே

 

சுசித்தார்த்தக் சொன்னான். “ராக்ஷசர் இது ஒரு விபத்து அல்லது இயற்கையாக நடப்பது போலத் தெரியும்படி செய்வதாகச் சொல்லியிருக்கிறார் அரசே. அதனால் அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கும் அந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக யாருக்கும் தெரியாது.”

 

நிம்மதியடைந்த பர்வதராஜன் உடனே சாணக்கியரைப் பார்க்கக் கிளம்பினான். முன்பு போல அவனைப் பல இடங்களைச் சுற்ற வைக்காமல் சாணக்கியர் அவர் மாளிகையிலேயே இருந்தார். பர்வதராஜனின் வணக்கத்தை ஏற்றுக் கொண்ட அவர்தங்கள் மாளிகையில் வசதிகள் எல்லாம் திருப்திகரமாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார்.

 

தங்கள் தயவில் எந்த வசதிக்கும் எனக்குக் குறைவில்லை ஆச்சாரியரே. ஆனால் வேறு ஒரு குறை எனக்கும் என் மகனுக்கும் இருக்கின்றது. அதைத் தெரிவிக்கவே இப்போது வந்தேன்என்று பர்வதராஜன் சொன்னான்.

 

என்ன குறை பர்வதராஜனே?”

 

நாம் மகதத்தை வென்றது சாதாரண நிகழ்ச்சி அல்ல. இந்த மாபெரும் வெற்றியை நாம் இன்னும் கொண்டாடாதது எனக்கு அதிருப்தியைத் தருகிறது ஆச்சாரியரே.”

 

எப்படிக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறாய்?”

 

கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அதில் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் துறவியைப் போலவே வாழ்பவர். ஆனால் நாங்கள் அப்படி அல்லவே. நாங்கள் என்று நான் சொல்வது சந்திரகுப்தனையும் சேர்த்து தான். எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டிய இளம் வயதினனை நீங்கள் துறவியைப் போலவே இருக்க வைப்பது சரியல்ல ஆச்சாரியரேஎன்று பர்வதராஜன் உரிமையோடு சொன்னான்.

 

சாணக்கியர் மென்மையான குரலில் சொன்னார். “நீ சொல்வதும் சரி தான் பர்வதராஜனே. நான் இராஜாங்க காரியங்களையே கவனித்துக் கொண்டு இருப்பதால் லௌகீக காரியங்கள் சிலவற்றை என்னை அறியாமல் அலட்சியம் செய்து விடுகிறேன் என்பது எனக்கும் புரிகிறது. நாளையே உனக்குப் பிடித்தாற்போல் கலைநிகழ்ச்சிகளுக்கு நீயே ஏற்பாடு செய்து விடு.”

 

பர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியரே. வெற்றி பெரிதாக இருக்கும் போது கொண்டாட்டங்களும் நீண்டதாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு நாள் கலைநிகழ்ச்சிகள் போதாது. இரண்டு அல்லது மூன்று நாட்களாவது கொண்டாட வேண்டும்.”

 

உன் விருப்பம் போலச் செய். ஆனால் என்னால் அந்த நிகழ்ச்சிகளைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது என்பதால் நான் பங்கு கொள்ள முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இந்த மூன்று நாட்களில் நான்  அவற்றைச் செய்து முடிக்கிறேன்.”

 

பர்வதராஜன் பரம திருப்தி அடைந்தான். இது போன்ற சமயங்களில் சாணக்கியர் இல்லாமல் இருப்பது நல்லது. அவர் இருந்தால் அவர் கழுகுப் பார்வைக்கு எதுவும் தப்பாமல் இருக்காது. கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமில்லாததன் காரணமாக தானாக அவராகவே விலகுவது அவர்கள் அதிர்ஷ்டம் தான். ராக்ஷசரிடம் இந்தத் தகவலைச் சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவார். “நான் சொன்னதற்கு மதிப்பு தந்து அனுமதித்ததற்கு நன்றி ஆச்சாரியரே. நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்த உடனே ஏற்பாடு செய்கிறேன்என்று கைகூப்பிச் சொல்லி  விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.

 

மிகவும் மகிழ்ச்சியுடன் வந்த தந்தையைப் பார்த்து மலைகேது கேட்டான். “என்ன தந்தையே மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? பாதி ராஜ்ஜியம் கிடைத்து விட்டதா?”   

 

பர்வதராஜன் சொன்னான். “இப்போது பாதியும், பிற்பாடு மீதியும் கிடைக்க இன்று நல்ல சகுனம் ஒன்று தெரிந்திருக்கிறது மகனே. ஆச்சாரியருக்குக் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பது நமக்கு இவ்வளவு பிரயோஜனப்படும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை

 

மலைகேது விளக்கமாகச் சொல்லும்படி கேட்க பர்வதராஜன் நடந்ததைச் சொன்னான். மலைகேதுவும் மகிழ்ந்தான். அவன் கேட்டான். “ராக்ஷசர் என்ன திட்டமிட்டு இருக்கிறார் என்பது தெரியுமா தந்தையே?”

 

அந்த ஆளும் ஆச்சாரியருக்குச் சளைத்தவரல்ல மகனே. அவரும் சொல்ல மறுக்கிறார். பரவாயில்லை விடு. நமக்குக் காரியமானால் சரி

 

மலைகேது தாழ்ந்த குரலில் கேட்டான். “சந்திரகுப்தன் இறந்தால் சாணக்கியர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?”

 

சன்னியாசம் போகலாம். இல்லை ஏதாவது அதிகாரப் பதவியை நம்மிடம் எதிர்பார்க்கலாம்.” என்று பர்வதராஜன் அலட்சியமாகச் சொல்லி விட்டு சுசித்தார்த்தக்கை அழைத்து சாணக்கியர் சம்மதித்திருப்பதைத் தெரிவித்தான். திட்டத்தை நிறைவேற்ற என்ன நிகழ்ச்சிகள் வேண்டுமோ அந்த நிகழ்ச்சிகளை அவன் ஏற்பாடு செய்தது போல் செய்து கொள்ளும்படி தெரிவித்தான். சுசித்தார்த்தக் அந்தத் தகவலை ஜீவசித்தி மூலமாக ராக்ஷசருக்குத் தெரிவிக்க விரைந்தான்.

 

விஷாகா அரண்மனையின் நடன மண்டபத்திற்கு அருகே இருந்த ஒப்பனை அறைக்குள் நிறைய நாட்கள் கழித்து நுழைகிறாள். காலியாக இருந்த நடன மண்டபமும், தனநந்தன் அமரும் அரியணையும் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தின. மனம் கனமானது. மன்னன் இப்போது கானகத்தில்அங்கு இசையும் இல்லை, நடனமும் இல்லை. சுற்றிலும் விலங்குகளும், தாவரங்களும் மட்டும் தான் எப்படியெல்லாம் வாழ்ந்த மன்னருக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யார் தான் எண்ணியிருப்பார்கள்...

 

அவள் ஒப்பனையை ஆரம்பித்த போது துர்தராவின் தோழி உள்ளே நுழைந்தாள். “அக்கா எப்படியிருக்கிறீர்கள்?”

 

விஷாகா அவளைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். துர்தராவின் தோழி வெகுளிப் பெண். மிக நல்லவள். அவளுக்கு ஒரு சகோதரி இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கலாம் என்று விஷாகா எப்போதும் நினைத்துக் கொள்வதுண்டு.

 

நான் நலம். நீ எப்படியிருக்கிறாய்? இளவரசி எப்படியிருக்கிறார்கள்?”

 

நாங்களும் நலம். இளவரசிக்கென்ன? அவர்கள் கனவு கண்டு கொண்டேயிருக்கிறார்கள்.”

 

துக்கத்துடன் சொல்வதற்குப் பதிலாக மகிழ்ச்சியுடன் தோழி சொல்வதைக் கேட்டு விஷாகா திகைத்தாள்.

 

விஷாகாவின் திகைப்பைப் பார்த்து விட்டு தோழி கேட்டாள். “என்ன அக்கா உங்களுக்கு விஷயமே தெரியாதா?”

 

விஷாகா சொன்னாள். “எந்த விஷயம்?”

 

இளவரசிக்கும் சந்திரகுப்தருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் விஷயம்

 

மகதத்தை வென்று மன்னரை கானகத்திற்கு அனுப்பிய எதிரியை இளவரசி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று நீ மகிழ்ச்சியுடன் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதே

 

காதலுக்கு விதிகளோ, காரணங்களோ, கட்டுப்பாடுகளோ கிடையாதல்லவா அக்கா. சந்திரகுப்தரை முதல் முதலில் பார்த்தவுடன் இளவரசி மனதைப் பறி கொடுத்து விட்டார்கள். ஆரம்பத்தில் மன்னரும், அரசிகளும் ஆதரிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. ஆனால் ஜோதிடர்கள் இளவரசிக்கு அரியணையில் அமரும் யோகம் இருக்கிறது என்று சொன்னது நினைவுக்கு வர, இது விதியின் தீர்மானம் என்றெண்ணிப் பின் சம்மதித்தார்கள். அப்போதும் சாணக்கியர் இதற்குச் சம்மதிக்க மாட்டார் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் சாணக்கியர் இளவரசிக்கு விருப்பமுள்ளவனை மணமுடித்து வைக்கிறேன் என்று முன்பே மன்னரிடம் வாக்களித்திருந்தார். கொடுத்த வாக்கை மீற முடியாமல் அவரும் சம்மதித்தார். ஆனால் சந்திரகுப்தரும் இளவரசியிடம் மனதைப் பறி கொடுத்து விட்டதாகத் தான் தெரிகிறது. இருவரும் பார்த்துக் கொண்டால் உலகத்தையே மறந்து விடுகிறார்கள்என்று சொல்லி கலகலவென்று தோழி சிரித்தாள்.

 

விஷாகா திகைத்தாள். பர்வதராஜன் சொன்னதற்கும் இவள் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே என்று குழம்பியபடி கேட்டாள். “ஆனால் மன்னரை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டார்களே? மகளது திருமணம் வரை கூட இங்கிருக்க சாணக்கியர் சம்மதிக்கவில்லையே.”

 

வெற்றிக்குப் பின் யார் தான் பழைய மன்னரை அங்கேயே தங்கியிருக்க அனுமதிப்பார்கள் அக்கா. சபதம் போட்டுச் சென்ற சாணக்கியர் மன்னரைச் சிறைபிடிப்பார் அல்லது கொன்று விடுவார் என்று கூட எல்லோரும் பயந்து கொண்டிருந்தோம். அதை ஒப்பிடும் போது வனப்பிரஸ்தம் என்பது கௌரவமானதல்லவா? மன்னருடன் நான்கு பணியாட்களும், காவலர்களும் உடன் சென்றிருக்கிறார்கள். மேலும் திருமணம் முடியும் வரை இளவரசியின் தாய் இங்கிருக்க சாணக்கியர் சம்மதித்திருக்கிறார் என்பதும் ஆறுதல்...”

 

தொடர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு துர்தராவின் தோழி சென்று விட்டாள். பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு, விஷாகா மனக்குழப்பத்துடன் ஒப்பனையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. விஷாகா யாரென்று யோசித்தவளாய் கதவைத் திறந்தாள். சாணக்கியர் நின்றிருந்தார்.

  

(தொடரும்)

என்.கணேசன்   




2 comments:

  1. சாணக்கியரின் இந்த தீடீர் வரவை எதிர்பார்க்கவே இல்லை... சந்திரகுப்தன் இறந்தது போலவே நாடகமாடி, பின் எதிரிகள் அனைவரையும் தண்டிக்கப் போகிறார்.

    ReplyDelete