Monday, September 8, 2025

யோகி 119


 ஷ்ரவன் வாசலைத் தாண்டி உள்ளே சென்றான். முன் அறையில் ஒரு அமர்ந்திருந்த இளைஞனிடம்  தன்னை பாண்டியன் வரச்சொல்லி இருப்பதாக அவன் தெரிவித்தான். அந்த இளைஞன் உள்ளே சென்று விட்டு வந்து ஷ்ரவனை உள்ளே அனுப்பினான்.

பாண்டியனுடைய அறையில் நுழைந்து ஷ்ரவன் வணக்கம் தெரிவித்தான். பாண்டியன் பதில் வணக்கம் தெரிவித்து விட்டு அவனை அமரச் சொன்னார். “உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும் ஷ்ரவனானந்தா. நேற்று நீங்கள் கண்ட காட்சியைப் பற்றி சுவாமினி கல்பனானந்தா என்னிடம் தெரிவித்தார். அதைப் பற்றி நேரடியாகவே உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றியது. அதனால் தான் வரச் சொன்னேன்.”

அவர் வணக்கம் தெரிவித்ததும், அவர் பேச்சில் தொனித்த மரியாதையும் கல்பனானந்தா ஷ்ரவன் கேட்ட கேள்வியை அவரிடம் தெரிவித்து விடவில்லை என்பதைத் தெரிவித்தன. அவனுக்குச் சற்று நிம்மதியாயிற்று.

ஷ்ரவன் தன் முகத்தில் சிறிது தர்மசங்கடத்தைக் காண்பித்தான். ”இது பல காலமாய் எனக்கு இருந்து வரும் பிரச்சினைஜி. திடீர் திடீர் என்று எதாவது காட்சி தெரிகிறது. சிலவற்றுக்குக் காரணம் தெரிகிறது. அர்த்தம் தெரிகிறது. சிலவற்றுக்குக் காரணம் தெரிவதில்லை. நான் நேற்று பார்த்தது உங்கள் வாசல் என்று கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை. உங்கள் இருப்பிடம் இதுவென்று சுவாமிஜி கண்ணன் காண்பித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். நான் கண்ட காட்சி எதோ பிரமை என்று இப்போது நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது உள்ளே வருகையில் அந்த இடத்தை நன்றாகப் பார்த்து விட்டு தான் வருகிறேன். அங்கே குழி எதுவும் இல்லைஜி...”

பாண்டியன் சொன்னார். “சில சமயங்களில் நம் மேல் பார்வைக்குத் தெரியாத விஷயங்கள் விசேஷ சக்தி இருக்கும் சிலருக்குத் தெரிய வரலாம். கல்பனானந்தாவிடம் உங்களுக்கு இருக்கும் அந்த விசேஷ சக்தி பற்றியும், உங்களுடைய சிறு வயது சம்பவங்களையும் நீங்கள் முன்பு சொல்லியிருந்தீர்களாம். அதையும் அவர் சொன்னதால், நீங்கள் பார்த்த காட்சியில் ஆழமான அர்த்தம் எதாவது இருக்குமோ என்று சந்தேகம் வந்ததால் தான் உங்களைக் கூப்பிட்டு பேசத் தோன்றியது.”

எனக்கு இன்னமும் யோகிஜி இருக்கும் புனித இடத்தில் துஷ்ட சக்திகள் உலாவ முடியும் என்பதில் நம்பிக்கை இல்லைஜி. அதனால் தான் எனக்கு நான் காணும் காட்சிகள் அர்த்தமுள்ளது தானா என்ற சந்தேகம் வருகிறது.”

இல்லாத சக்திகளை எல்லாம் இருப்பதாகச் சொல்லி ஒருவர் புகழ் தேடி அலைகிறார்அதை நம்பும் ஒரு பெரிய கூட்டமும் இருக்கிறது. இவனும் அந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டு தனக்கு இருக்கிற சக்தியைக் கூட உண்மை என்று நம்ப மறுக்கிறான். வேடிக்கை தான்.’ என்று எண்ணிய பாண்டியன் சொன்னார். “யோகிஜி ஒருவர் மட்டும் இங்கில்லை. நூற்றுக்கணக்கில் வேறு பலரும் இருக்கிறோம். யோகிஜி அடிக்கடி பயணம் போய் வருபவர். அவர் இங்கே இருக்கும் நாட்கள் அதிகமில்லை. அதனால் கூட இப்படி நடக்கலாம்.”

ஷ்ரவன் யோசிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டான். அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன் கேட்டார். “இப்போது இங்கே வரும் போது உங்களுக்கு அந்த ஓநாய் தென்படவில்லையா?”

இல்லைஜி. எதாவது சில சமயங்களில் தான் திடீர் என்று எனக்கு அப்படித் தெரிகிறது. ஹைதராபாதில் இருந்த மந்திரவாதி சோமையாஜுலு, ”நீ அதை அடிக்கடி நினைக்க வேண்டும், ஆழமாய் நினைக்க வேண்டும். அப்படியானால் தான் நீ அதோடு தொடர்பு கொள்ள முடியும். அதிகம் பார்க்க முடியும். அது சொல்லும் செய்திகளை நீ புரிந்து கொள்ள முடியும். பின் எப்போதும் உனக்கு அது தெரிந்து கொண்டிருக்கும்.” என்று என் சிறுவயதில் ஒரு முறை சொல்லியிருக்கிறார். ஆனால் என் அப்பாஅந்தக் கண்றாவியை எல்லாம் நீ நினைக்கவே வேண்டாம். ஒழுங்காகப் படிப்பைக் கவனிஎன்று திட்டியதால் நான் பின் அதிகம் நினைப்பதே இல்லை. இப்போது துறவியாகி விட்டேன். யோகிஜி சொல்லும் வழியில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த மாதிரியான காட்சிகள் வந்து தொலைகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை...”

பாண்டியன் அவனுக்கு ஆரம்பத்திலிருந்து இருக்கும் இரட்டை மனநிலையைப் புரிந்து கொண்டார்.  அவன் தொடர்ந்து கவனம் செலுத்தினால் அவனால் எல்லா சமயங்களிலும் அந்தச் சக்திகளைக் கண்டு கொள்ள முடியும் என்று சோமையாஜுலு சொன்ன செய்தி அவரை யோசிக்க வைத்தது. இப்போது அவன் அது தேவையில்லாத தொல்லை என்றே நினைப்பதால் அந்தக் காட்சிகளைக் காண விரும்பவில்லை. யோகிஜி சொல்லும் வழியில் போவதில் அவன் உறுதியாக இருப்பதால் யோகிஜியையே அவனிடம் சொல்ல வைக்க வேண்டும்

பாண்டியன் சொன்னார். “நீங்கள் நினைப்பது சரிதான் ஷ்ரவனானந்தா. யோகிஜி எல்லாம் தெரிந்தவர். இன்றிரவு அவர் வந்து விடுவார். நான் நேரம் கிடைக்கையில் உங்களுக்காக அவரிடம் பேசுகிறேன். நீங்கள் அவருடைய அறிவுரைப்படியே நடந்து கொள்வது நல்லது.”

ஷ்ரவன் தன் முகத்தில் பரவசம் காட்டினான். “நான் யோகிஜியின் கவனத்திற்கு வருவதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்காக அவரிடம் பேசுவதாக நீங்கள் சொன்னது உங்கள் பெரிய மனதைக் காட்டுகிறதுஜி.”

பாண்டியன் புன்னகைத்தார்யோகிஜி உங்களுக்கு என்ன சொல்வார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இது போன்ற அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதனால் இனி எதாவது காட்சிகள் உங்களுக்குத் தெரிந்தால் என்னிடம் நேரடியாக வந்து நீங்கள் சொல்லலாம்.”

சரிஜிஎன்று சொல்லி பாண்டியன் ஒரு கணம் காத்திருந்து விட்டு, அவர் கூடுதலாக எதுவும் சொல்லாமல் போகவே, மெல்ல எழுந்தான். “நன்றிஜி

அவன் போகும் போதும் அவருடைய வாசல் அருகே தரையை இருபக்கமும் பார்த்து விட்டுப் போவதை பாண்டியன் கவனித்தார்.

வெளியே வந்த ஷ்ரவன் நேராக சத்சங்கம் நடக்கும் கூட்டத்திற்குச் சென்றான்ஒரு நடுத்தர வயதுத் துறவி உபநிஷத்துக்கள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவன் சென்று பின்னால் வரிசையில் அமர்ந்து கொண்டான். உரை முடிந்து திரும்பி வெளியே வரும் போது தான் முக்தானந்தா அவனைப் பார்த்தார். அவனைப் பார்த்ததும் ஒரேயடியாக அவர் முகம் மலர்ந்தது. ஆனால் உடனடியாக அதை மறைத்துக் கொண்டு விறுவிறுவென்று தனியாக அறைக்கு விரைந்தார். ஷ்ரவனும் அவருடன் சேர்ந்து கொள்ள விருப்பமில்லாதவன் போல் மெல்ல நடந்து சென்றான். தூரத்திலிருந்து அவர்களைக் கவனித்த கண்ணன் திருப்தி அடைந்தார்.  

ஷ்ரவன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டவுடன் முக்தானந்தா எழுந்து வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். “உன்னைப் பார்க்கும் வரை எனக்கு தவிப்பாகத் தான் இருந்தது ஷ்ரவன். உன்னைப் பார்த்த பிறகு தான் நிம்மதியை உணர்ந்தேன்.”

ஷ்ரவன் அவரது அன்பில் நெகிழ்ந்தான். அங்கு நடந்ததை அவரிடம் தெரிவித்து விட்டுச் சொன்னான்.  “நீங்கள் சொன்னது போல் கல்பனானந்தா நான் கேட்ட கேள்வியை பாண்டியனுக்குத் தெரிவிக்கவில்லை சுவாமிஜி. அவர் அதைச் சொல்லியிருந்தால் பாண்டியன் எப்படி யோசிக்க ஆரம்பித்திருப்பார் என்று சொல்ல முடியாது.”

முக்தானந்தா கல்பனானந்தாவைப் பற்றிய தன் உள்ளுணர்வு சரியாக இருந்ததில் மகிழ்ச்சியடைந்ததாய் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

ஷ்ரவன் சொன்னான். “கல்பனானந்தா யோகியையும் பார்த்திருக்கிறார். சைத்ராவையும் கவனிக்க முடிந்த நிலையில் தான் இங்கே இருந்திருக்கிறார். அதனால் அவரிடம் விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும் என்று நான் நினைக்கிறேன் சுவாமிஜி

ஷ்ரவன், நீ அவளையும் ஆபத்திற்குள்ளாக்காமல், நீயும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாகத் தான் அவளை விசாரிக்க வேண்டும். சாதாரண நேரத்தை விட இரண்டு நிமிடம் அதிகமாய் அவளிடம் பேசி இருக்கிறாய் என்று தெரிந்தாலே அவர்களுக்குச் சந்தேகம் எழுந்து விடும். அதனால் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.”

அவர் அவனுடைய பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டபடியே கல்பனானந்தாவின் பாதுகாப்புக்காகவும் கவலைப்பட்டது ஷ்ரவனுக்குப் புரிந்தது. அவள் மீது அவருக்கு பிரத்தியேக அன்பும், அக்கறையும் இருந்ததை ஷ்ரவன் உணர்ந்தான்.

 முக்தானந்தா அவனிடம் நெகிழ்ந்த மனதுடன் சொன்னார். “அவள் சின்ன வயதிலிருந்தே நிறைய கஷ்டப்பட்டவள். எங்களுடைய யோகாலயக் குழுவில் அவள் சேர்ந்த போது அவளுக்கு வயது 21 தான். எங்கள் எல்லோரையும் விட அவள் மிக இளையவள். அவளுடைய தந்தை காமாந்தகன். தன் மகளிடமே தவறாக நடந்து கொள்ள பலமுறை முயன்றவன். அவளுடைய தாய் கணவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத ஒரு கோழையாக இருந்தாள். அழுவதைத் தவிர அந்தத் தாய் வேறு எதுவும் செய்யவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, வேறு வழி தெரியாமல், 18 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி வந்தவள் கல்பனானந்தா...”

 ஷ்ரவன் அதிர்ந்தான். ஒரு அன்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவனுக்கு அவர் சொன்னதை ஜீரணிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது.

(தொடரும்)

என்.கணேசன்






2 comments:

  1. கல்பனாநந்தா ஒரு தீயவனிடம் இருந்து தப்பித்து மற்றொரு தீயவனிடம் மாட்டிக்கொண்டார்...
    முதலாமானவன் நச்சு மனிதன்.
    இரண்டாமானவன் சாமர்த்தியசாலி...

    ReplyDelete