Monday, June 16, 2025

யோகி 107

 

ஷ்ரவனுக்குத் தன்னைச் சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவன் புன்னகையுடன் சொன்னான். ”முதல் நாள் நீங்கள் கேட்டது, “உண்மையில் யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?” சரி தானா?”

 

முக்தானந்தா அவனை சுவாரசியமாகப் பார்த்தது போலிருந்தது. “சரி தான்என்றார்.

 

என்ன கேள்விகள் இவை? உண்மையில் நீங்கள் யாரோ, அது தான் நானும். இருவரும் ஆத்மாக்களே! நீங்கள் எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறீர்களோ அதே நோக்கத்திற்காக நானும் வந்திருக்கிறேன். நம் இருவர் நோக்கமும் மெய்ஞானம் தான்.”

 

முக்தானந்தா கலகலவென்று சிரித்து விட்டார். “நீ சாமர்த்தியக்காரன். புத்திசாலி. அதனால் தான் நான் சந்தேகப்பட்டேன்.”

 

என்ன சந்தேகம்?”

 

இத்தனை புத்திசாலியாக இருப்பவன் எப்படி பிரம்மானந்தாவின் பரம பக்தனாக முடியும்?”

 

அதிலென்ன தவறு?”

 

நீ சில நாட்களுக்கு முன் பிரம்மானந்தாவின் பேச்சைக் கேட்டாயல்லவா? சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கத்தின் அருள் அந்த ஆளுக்குக் கிடைத்த பிறகு அவர் தியானம் செய்யும் நாட்களில் எல்லாம் அவரைப் பார்த்தவர்களுடைய கண்கள் கூசுமாம். அவர்கள் அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொள்வார்களாம். அந்த அளவு அவருடைய யோகசக்தி அவரை ஒளிமயமாக்கி இருந்ததாம். அது அவருக்கே தர்மசங்கடத்தைத் தந்தது. அதனால் நான் அவர் கடவுளை வேண்டி அவரது யோகசக்தியின் வீச்சை குறைத்துக் கொண்டாராம். அவர் முழு யோகசக்தியின் வீச்சு முன்பு போலவே இன்றும் தெரியுமானால் அவர் எதிரே யாராலும் உட்கார்ந்திருக்க முடியாதாம். அறிவுள்ளவன் எவனாவது அதை நம்புவானா?”

 

ஷ்ரவன் சிரிக்காமல் முகத்தை இயல்பாய் வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி நடந்தும் இருக்கலாம் அல்லவா?”

 

அப்படி நடந்திருந்தால் முப்பது வருஷத்துக்கு முன்னால் கண்கூசியவர்களே இந்த ஆளைப் பற்றிச் சொல்லியிருப்பார்களே. இத்தனை வருஷங்கள் கழித்து இந்த ஆளே அதைச் சொல்ல வேண்டியதில்லையே? ரமண மகரிஷியிடம் யோகசக்தி இருந்தது. பலர் அதை உணர்ந்தார்கள். அவர் இருந்த இடம் தேடி எங்கிருந்தெல்லாமோ வந்தார்கள். இங்கிலாந்தில் இருந்து எல்லாம் வந்து, அவர் பக்கத்தில் இருந்து, அந்தச் சக்தியை அனுபவித்துப் போய் எழுதினார்கள், பேசினார்கள். அவராக ஒரு வார்த்தை அதைப் பற்றிப் பேசவில்லை. அவர் இருக்கும் இடத்தை விட்டு எங்கேயும் போகவில்லை. போக்குவரத்தே மிகவும் கஷ்டமாக இருந்த காலம் அது. அப்போதே வாய் வார்த்தையாலேயே கடல் கடந்தும் அவருடைய யோக சக்தி பற்றிய புகழ் பரவி இருந்தது.  அவர் எங்கே! நூறு வருஷம் கழித்து இந்த விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்தும் சுயதம்பட்டம் அடித்தே  புகழ் பரப்ப வேண்டிய அவலநிலையில் இருக்கும் இவர் எங்கே! அதுவும் வரவரப் புதுப்புது கதைகளாய் அவர் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இப்படிப்பட்ட ஆளின் நிழலில் மெய்ஞானம் கிடைக்கும் என்று வந்திருப்பதாய், புத்திசாலியாகத் தெரிகிற நீ சொல்கிறாய். அதனால் தான் சந்தேகமாயிருக்கிறது.”

 

ஷ்ரவன் சொன்னான். “சுவாமிஜி. அதை ஐஐடி மாணவர்கள் முன் யோகிஜி பேசியிருக்கிறார். அவர் தன் பெருமையைச் சொல்வதற்காக அதை அங்கே சொல்லவில்லை. யோக சக்தியின் பெருமையைச் சொல்வதற்காகத் தன் சொந்த அனுபவத்தையே சொல்லி அந்த மாணவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே.”

 

இந்த ஆள் உண்மையான யோகியாய் இருந்தால் எதையும் சொல்ல வேண்டியதே இல்லையே. ரமண மகரிஷி அருகே போனவர்கள் உணர்ந்தது போல, இவர் அங்கு போனவுடனே வார்த்தைகள் இல்லாமலேயே அதை அந்த மாணவர்கள் உணர்ந்திருப்பார்களே.”

 

அவருடைய யோக வீச்சை இறைவனிடம் வேண்டிக் கொண்டு குறைத்திருப்பதாகத் தான் அவரே சொன்னாரே சுவாமிஜி. அப்படி அவர்  குறைத்திருக்காமல் இருந்திருந்தால் நீங்கள் சொன்னபடியே வார்த்தைகள் இல்லாமல் அந்த மாணவர்களை உணர வைத்திருக்கலாம்.”

 

முக்தானந்தா சிரித்தார். “சீக்கிரமாகவே பிரம்மானந்தாவின் பிரதான சீடன் ஆவதற்கு எல்லாத் தகுதிகளும் உனக்கிருக்கிறது. நீ அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறாயா?”

 

இல்லை சுவாமிஜி.”

 

முயற்சி செய்து பார். சுந்தர மகாலிங்கத்தைக் கூட நேராக நீ தரிசித்து விடலாம். ஆனால் அந்த சுந்தர மகாலிங்கத்தின் அருளைப் பெற்ற இவரை நீ அவ்வளவு சீக்கிரம் தரிசித்து விட முடியாது. நீ கடவுளைக் கண்டபடி திட்டலாம், வாயிற்கு வந்த பெயரை வைத்துக் கூப்பிடலாம். கடவுள் கோபப்படவோ, உன்னை விலக்கி வைக்கவோ மாட்டார். ஆனால் இந்த ஆளை நீ திட்ட வேண்டியதில்லை. யோகி என்ற அடைமொழி இல்லாமல் சும்மா பிரம்மானந்தா என்று கூப்பிட்டுப் பார். பின் உன்னால் யோகாலயத்தில் இருக்க முடியாது.”

 

என்ன சுவாமிஜி இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று ஷ்ரவன் முகத்தில் திகைப்பைக் காட்டினான். “நீங்கள் இங்கே நீண்ட காலமாய் துறவியாய் இருக்கிறீர்கள். யோகாலயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே வந்து சேர்ந்தவர் என்று உங்களை சித்தானந்தா சொன்னார். அப்படிப்பட்ட நீங்களே யோகிஜியைக் கடுமையாய் விமர்சிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.”

 

முக்தானந்தா முகத்தில் விரக்தி வெளிப்பட்டது. ”ஆமாம். நான் நெடுநாள் ஏமாளி. கிட்டத்தட்ட நானும், கல்பனானந்தாவும் ஒரே சமயத்தில் யோகாலயத்தில் சேர்ந்தோம். பிரம்மானந்தா பேச்சால் நாங்கள் கவரப்பட்டோம். அவரைத் தினமும் சந்திக்கும் அளவுக்கு நாங்கள் சுமார் இருபது பேர் நெருக்கமாகவே இருந்தோம். அப்போதெல்லாம் அவர் இந்த அளவு கதை விட்டதில்லை. அவர் அடக்கி வாசித்த காலம் அது. அவர் யோகா, தியானம் இரண்டையும் பத்மநாப நம்பூதிரியிடம் கற்றுக் கொண்டதையும், அதைத்தான் சொல்லிக் கொடுப்பதையும் வெளிப்படையாய் ஒத்துக் கொண்ட காலம் அது. அதை மேலும் மெருகேற்றி, கூடுதல் சிறப்புகளைச் சேர்த்து எல்லோருக்கும் கற்றுத்தர வேண்டும் என்று அவர் விரும்பினார். யோகாலயம் வளர்ச்சியடைந்தால் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று அவர் எத்தனையோ நல்ல காரியங்களைச் சொன்னார். அதனால் நாங்கள் பரிபூரணமாய் அவரை நம்பினோம். நானும் வேறுசிலரும் எங்கள் சொத்தை எல்லாம் யோகாலயத்திற்கு எழுதி வைத்து விட்டுத் தான் இங்கே வந்து சேர்ந்தோம். ஒரு மகத்தான இயக்கத்தில் எங்களை ஈடுபடுத்திக் கொண்ட நிறைவு எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது. இந்த யோகாலயம் விரிவடைய விரிவடைய ஆன்மீகம் செழிக்கும், கோடிக்கணக்கானவர்கள் பலன் அடைவார்கள் என்ற கனவெல்லாம் எங்களுக்கு இருந்தது.”

 

இப்போது சத்சங்கம் என்று ஒன்று நடக்கிறதே. அது அன்றைக்கும் இங்கே நடந்தது. அப்போது இது மிகச்சிறிய இடம். ஆனால் எங்கள் மனம் பரந்திருந்தது. பிரம்மானந்தாவும், நாங்களும் சரிசமமாக உட்கார்ந்து பேசுவோம். நாங்கள் ஒவ்வொருவரும் படித்த, கேட்ட உயர்வான விஷயங்களைப் பற்றிச் சொல்வோம். புத்தர், ரமண மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், அன்னை, ஆதிசங்கரர், ராமானுஜர், வேதங்கள், உபநிஷத்துக்கள் பற்றி எல்லாம் பேசுவோம், அலசுவோம், விவாதிப்போம். அத்தனை ஞானமும் சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேர வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆன்மீகத்தின் ஆழம் சாதாரண மனிதனுக்குத் தெரியாததால் தான் அவன் தாழ்ந்து கிடக்கிறான், மோசமான வாழ்க்கை வாழ்கிறான். அவனுக்கும் அந்த ஞானத்தின் ருசி கிடைத்து விட்டால் பின் அவன் உயர ஆரம்பித்து விடுவான் என்று நம்பினோம். பிரம்மானந்தாவுக்கு யோகா பயிற்சிகள் தெரிந்த அளவுக்கு தத்துவங்களில் ஆழம் போதாது. ஆனாலும் அந்தக் காலத்தில் அவருக்கு அதையெல்லாம் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. வேத உபநிஷத்துக்களில் சொல்லப்படும் யோகியாக மாற வேண்டும் என்ற ஆசை உண்மையிலேயே இருந்தது என்று கூடச்  சொல்லலாம். அவருக்குப் பணமும், புகழும் வந்து சேர ஆரம்பித்த பிறகு ஆள் நேரெதிராக மாறிப்போனார்.”

 

திடீரென்று முக்தானந்தா மௌனமானார். அவர் அந்தப் பழைய காலத்தில் சஞ்சரித்ததை ஷ்ரவன் உணர்ந்தான். இந்த முதியவர் யோகாலயம் ஆரம்பித்த காலத்தில் பிரம்மானந்தாவுடன் சரிசமமாக அமர்ந்து பேசியவர்களில் ஒருவர் என்பதை நம்புவது அவனுக்கே சுலபமாக இல்லை.

 

இந்த யோகாலயமும் மாறிவிட்டது. இப்போது இந்த யோகாலயம் அவர் நினைத்தபடியும் இல்லை. நாங்கள் நினைத்தபடியும் இல்லை. பாண்டியன் நினைத்தபடி நடக்கிறது. இதில் என் பங்கும் இருக்கிறது. யோகாலயத்தை  நிர்வாகம் செய்ய ஒரு ஆள் வேண்டும் என்று பிரம்மானந்தா சொன்ன போது பாண்டியனைக் கூட்டிக் கொண்டு வந்தது நான் தான். அவன் எங்கள் ஊர்ப் பையன்….” என்று தொடர்ந்து முக்தானந்தா சொன்ன போது ஷ்ரவன் கண்கள் விரிய சுவாரசியத்துடன் அவரைப் பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




1 comment:

  1. ரமணர் யாரிடமும் அவ்வளவு எளிதாக பேச மாட்டார் ...மௌனமாக தான் இருப்பார்...அவர் உபதேசித்த "நான் யார்?" வினா விடை தொகுப்பே... சீடர்களின் வேண்டுதலால் தான் எழுதிக் கொடுத்தாக சொல்வார்கள்....

    ஆனால்,நம்ம ஆளோ ஒரு கேள்வி கேட்டால் சம்பந்தமே இல்லாமல் மணிக்கணக்கில் பேசுவார்....
    என்ன பேசுகிறார்? என்பது அவருக்கும் தெரியாது...கேட்கிற நமக்கும் புரியாது....

    ReplyDelete