Monday, December 23, 2024

யோகி 82


 ந்த ஓநாய் அவன் கண்களுக்கு மட்டும் தெரிகிறதா, இல்லை கண்காணிப்பு காமிராவிலும் அகப்படுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் சற்று முன் அவன் ஹாய் என்று சொன்னது கண்டிப்பாய் காமிராவில் பதிந்திருக்கும். இனி அவன் எதாவது வாய்விட்டுப் பேசினால் அதுவும் கண்டிப்பாகப் பதியும்.

 

அவன் மிகவும் எச்சரிக்கையுடன், தன் மனதிற்குள் அதனுடன் பேசினான். “ஹாய் நண்பா. ஏன் இங்கே வந்திருக்கிறாய்?”

 

அந்த ஓநாய் அவனுடைய கட்டிலுக்கு மேல் தாவி அவனுடைய வலது மடிக்கு மிக அருகில் வந்து நின்றது. அவன் தியானம் செய்யும் கோலத்தில் தான் அமர்ந்திருந்தான். அவன் முழங்கால் அருகே முத்திரையாக வைத்திருந்த வலது கைவிரல்களை நீட்டினான். அந்த ஓநாய் தன் கால் ஒன்றைத் தூக்கி அந்தக் காலால் அவன் விரலைத் தொட்டது.  உடனே அவன் உடல் ஏதோ ஒருவித உஷ்ணத்தை உணர்ந்தது. அவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அதன் பின் ஷ்ரவன் தன் நினைவை முழுவதுமாக இழந்தான்.

 

அவன் சுயநினைவுக்கு வந்த போது உட்கார்ந்த நிலையிலேயே கட்டிலில் குப்புறக் கவிழ்ந்திருந்தான். திகைப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்தான். அந்த ஓநாய் இருக்கவில்லை. நடந்த சம்பவங்களை எல்லாம் ஷ்ரவன் நினைவுபடுத்திப் பார்த்தான். மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தது தான் கடைசியாக நினைவிருந்தது. அதன்பின் நடந்தது எதுவும் அவனுக்கு நினைவில்லை. கட்டிலில் அமர்ந்திருந்தவன் எப்படிக் குப்புறக் கவிழ்ந்தான் என்று தெரியவில்லை.   பக்கத்தில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து நேரம் என்ன என்று பார்த்தான். 7.27 என்று காட்டியது. அவன் நடைப்பயிற்சி முடிந்து அறைக்குத் திரும்பிய போது மணி ஆறரை வாக்கில் இருந்திருக்கக்கூடும். கணக்கிட்டு பார்த்த போது அரை மணி நேரத்துக்கு மேல் அவன் இப்படி நினைவில்லாமல் இருந்திருக்கக்கூடும் என்பது தெரிந்தது.

 

முதல் முறையாக தனக்கு என்ன நடந்தது என்று அவனுக்கே தெரியாதிருக்கையில், அதை விவரமாக காமிராப் பதிவு மூலமாக யோகாலயத்தின் முக்கியஸ்தர்கள் அறிந்திருப்பார்கள் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. என்ன நடந்திருக்கிறது? எதனால் இப்படி நடந்திருக்கிறது? இதன் அர்த்தம் தான் என்ன? ஒன்றும் அவனுக்கு விளங்கவில்லை. 

 

திடீரென்று மந்திர உபதேசம் செய்த போது பரசுராமன் சொன்னது ஷ்ரவனுக்கு நினைவுக்கு வந்தது. ”உனக்கு வேறொரு புது உலகத்தை இது அறிமுகப்படுத்தும்....”

 

இது அவர் சொல்லும் புது உலக அறிமுகத்தின் ஆரம்பமா?

 

இந்தக் குழப்பத்திற்கு விடை கிடைக்கவில்லை.  ஆனால் அதிகம் யோசிக்க நேரம் இல்லை. குளித்து விட்டு, சாப்பிட்டு, வகுப்புக்குப் போகுமளவு நேரம் தான் இருக்கிறது. அவன் அவசரமாக எழுந்தான்.

 

அன்று காலை அவன் உணவுக்குப் போன போது எதிரே தான் ஸ்ரேயா அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் அவனைப் பார்த்து ஆரம்ப சம்பிரதாயப் புன்னகை கூடப் பூக்கவில்லை. அவளருகே அமர்ந்திருந்த கமலம்மா அவனைப் பார்த்துக் கையசைத்துகுட் மார்னிங்சொன்னாள். அப்போதும் ஸ்ரேயா அவன் பக்கம் திரும்பவில்லை.

 

ஷ்ரவனும் கமலம்மாவிடம்குட் மார்னிங்சொன்னான்.

 

அன்று காலை வகுப்புகளில் ஷ்ரவனின் மனம் தங்கவில்லை. துறவிகள் பாடம் கற்றுத் தந்தது அவனுக்கு வெறும் சத்தங்களாகவே இருந்தன. அவனை அறியாமல் அவன் பார்வை ஸ்ரேயா பக்கம் அடிக்கடி போனது. மற்ற சமயங்களில் அவன் மனம் இன்றைய காலைய அமானுஷ்ய அனுபவத்தைப் பற்றி யோசித்தது. 

 

மதிய உணவின் போது அவன் பார்வை பட முடியாதபடி அவனுக்கு பின்புற வரிசையில் அமர்ந்து ஸ்ரேயா சாப்பிட்டாள்.

 

மதியம் முதல் வகுப்பிற்கு கல்பனானந்தா வந்தாள். வகுப்பினுள் நுழைந்தவுடன் மேசையருகே நின்று கொண்டு, வகுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தவள் பார்வை ஷ்ரவன் மீது விழுந்தவுடன் ஒரு கணம் அவன் மீதே நிலைத்தது. அவனைக் கூர்ந்து கவனித்தாள். அவள் எதையோ நினைவுபடுத்திக் கொள்வது போல் தெரிந்தது. பின் அவள் பார்வை அவனை வேகமாகக் கடந்தது.  

 

இதற்கு முன் வகுப்பெடுக்க வந்த துறவிகளில் சிலரும், முதல் முறை வரும் போது, மேலோட்டமாக அனைவரையும் பார்த்தார்கள். அவர்கள் தங்களுக்கு நினைவிலிருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளும்  ஆர்வத்தில் பார்த்தது போல் இருந்தது. ஆனால் கல்பனானந்தாவின் பார்வையில் கூடுதலாக ஏதோ ஒன்று இருந்தது.

 

பின் அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவள் கற்றுக் கொடுக்க வந்ததைப் பாடம் நடத்த ஆரம்பித்தாள். ஆத்ம ஞானத்திற்கு யோகா, தியானப் பயிற்சிகள் எப்படி உதவுகின்றன என்ற விளக்கம் அளிக்கும் பாடம் அது. மற்ற துறவிகளை விடச் சிறப்பாகவே அவள் விளக்கங்களை அளித்தாள். சற்று ஆழமான ஞானம் உடையவர்கள் மட்டுமே அவள் அளவுக்கு எளிமையாக விளக்கங்கள் தரமுடியும் என்று ஷ்ரவன் நினைத்துக் கொண்டான். அவனையும் அறியாமல் அவன் அவள் சொல்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். இன்று காலை வகுப்புகளில் இருந்த அலைபாயும் மனம் தற்போது இருக்கவில்லை.

 

ஆனால் அந்த நிலை சுமார் அரை மணி நேரம் மட்டுமே நீடித்தது. வகுப்பறைக்குள் மெல்ல ஓநாய் நுழைவதைக் கண்டவுடன் திகைப்பில் அவன் கண்கள் விரிந்தன.

 

அவன் மற்றவர்களைப் பார்த்தான். யாரும் எந்தப் பாதிப்புமில்லாமல் அமர்ந்து கல்பனானந்தாவின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கல்பனானந்தாவும் இயல்பாகப் பேசிக் கொண்டேயிருந்தாள்.

 

உள்ளே நுழைந்த ஓநாய் அவனையே பார்த்தபடி கல்பனானந்தாவின் அருகில் நின்றது. ஆனாலும், ஷ்ரவனைத் தவிர அவர்கள் யாருக்கும் அந்த ஓநாய் தெரியவில்லை...!

 

வகுப்பறையில் நுழைந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஓநாயிடம் மனதிற்குள் ஷ்ரவன் பேசினான். “ஹாய் நண்பா

 

அந்த ஓநாய் இரண்டடி முன்னால் எடுத்து வைத்தது. இது தான் அவன் பேசுவதற்கு அதன் எதிர்வினை போல இருந்தது.

 

காலையில் என்னை நீ என்ன செய்தாய். நீ என்னைத் தொட்டதற்குப் பின் என்ன ஆனது?” மறுபடியும் அவன் மானசீகமாக அதனிடம் கேட்டான்.

 

பாடம் நடத்திக் கொண்டிருந்த கல்பனானந்தா பார்வை ஷ்ரவனின் மீது விழுந்த போது அவன் வேறெங்கோ பார்ப்பது தெரிந்தது. அவன் பார்த்த இடத்தின் பக்கம் தன் பார்வையை அவள் திருப்பினாள். அது காலியிடமாக இருந்தது. ஆனால் அவன் பார்வை வெற்றுப் பார்வையாக இல்லை. யாரையோ அல்லது எதையோ அந்த வெற்றிடத்தில் அவன் பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.  

 

அவள் அவனைப் பார்ப்பதைக் கூட அவன் கவனிக்கவில்லை. அவனுடைய கவனம் முழுமையாக அந்த ஓநாயின் மீதே இருந்தது. அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனையே அது அமைதியாகப் பார்த்தது. இப்போது அதன் தீ உமிழும் கண்கள் கூட அமானுஷ்யமாகத் தெரியவில்லை.  அன்பை உமிழும் ஞான ஒளியாகத் தான் அவனுக்குத் தெரிகிறது. அவன் மறுபடியும் அதனிடம் அதே கேள்வியை மானசீகமாகக் கேட்டான்.

 

அந்த ஓநாய் பேசாமல் அவனைப் பார்த்தபடியே நின்றிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் பரசுராமன் மந்திர உபதேசம் செய்த நாளில் சொன்ன வார்த்தைகள் மறுபடியும் அவனுடைய நினைவுக்கு வந்தது. அது தற்செயலாகவா இல்லை, பரசுராமனின் சக்தியாலா என்பது அவனுக்குத் தெரியவில்லை.

 

சில மகத்தான விஷயங்களைப் பத்தி முன்கூட்டியே விளக்கறது, வரப் போகிற அனுபவங்களோட மகத்துவத்தைக் குறைச்சுடும். எதையும் அனுபவிக்கறப்ப சொந்தமாய் என்ன  உணர்கிறோம்கிறது ரொம்ப முக்கியம். முன்கூட்டியே கிடைக்கிற விளக்கங்கள், நம் சொந்த அனுபவத்துக்கு சாயம் பூசிடறதுக்கு வாய்ப்பு உண்டு. தானாய் உணர வேண்டியதை, அடுத்தவங்களோட விளக்கப்படி புரிஞ்சுக்கற அபத்தம் நிகழ்ந்துடும்...”

 

என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, இதன் பொருள் என்ன என்பது அவனாய் கண்டு உணர வேண்டியது தானோ? ஒரு மனிதன் தன் ஆழ்மனதிடம் கேட்டு அங்கேயே உணர வேண்டியதோ?

 

ஓநாய் கல்பனானந்தாவின் பக்கம் திரும்பியது. அவளையே சிறிது நேரம் பார்த்தது. பின் அது அங்கிருந்து வெளியேறியது.

 

அது கல்பனானந்தாவை ஏன் பார்த்து நின்றது என்பதும் அவனுக்குத் தெரியவில்லை.  ஏதோ ஒரு முக்கியத் தகவலை அவனுக்கு அது உணர்த்துகிறதா?


(தொடரும்)

என்.கணேசன்






Thursday, December 19, 2024

சாணக்கியன் 140

 

ள்ளிரவு நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ராக்ஷசர் கண்விழித்தார். மிகமிக அவசியமான சமயங்களில் மட்டுமே இப்படி எழுப்பப் படுவது வழக்கம் என்பதால் ராக்ஷசர் பலவிதமாக யோசித்தபடியே விரைந்து எழுந்து வந்து அறைக் கதவைத் திறந்தார். கதவைத் தட்டிய காவலனைஎன்ன விஷயம்?’ என்று அவர் பார்வை கேட்டது.

 

காவலன் பதற்றத்துடன் சொன்னான். “நம் ஆயுதக்கிடங்கு பெருந்தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது பிரபு

 

காவலன் சொன்னது அவரைக் குழப்பத்திலேயே ஆழ்த்தியது. ஆயுதக்கிடங்கில் தீப்பிடிக்க எதுவுமில்லையே என்று யோசித்தவராக,   ”எப்படி?” என்று அவர் கேட்டார்.

 

அந்தக் கேள்விக்கு அவனிடமும் பதில் இருக்கவில்லை. “தெரியவில்லை பிரபு. அங்குள்ள காவலர்களும், அருகில் .உள்ளவர்களும் தீயணைக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியோடு ஒரு வீரன் விரைந்து இங்கு வந்திருக்கிறான்.”

 

ராக்ஷசர் விரைவாக உடை மாற்றிக் கொண்டு, ஆயுதக்கிடங்கை நோக்கித் தன் குதிரையை முடுக்கி விட்டார். செய்தி கொண்டு வந்த வீரனிடம் கூடுதல் தகவல்கள் பெற முயல்வதை விட நேரடியாக சம்பவ இடத்திற்கே நேரில் சென்று இந்த அசாதாரண சம்பவம் குறித்த தகவல்கள் அனைத்தையும் அறிவது புத்திசாலித்தனம் என்று அவருக்குத் தோன்றியது.

 

ஆயுதக்கிடங்கு பற்றியெரியும் ஜுவாலை தூரத்திலிருந்தே அவருக்குத் தெரிந்தது. மக்களின் கூச்சல்களும் கேட்டன. ஆயுதக்கிடங்கை நெருங்க நெருங்க நெருப்பின் வெப்பமும் கூடிக் கொண்டே வந்தது.

 

அவருக்கு முன்பே காவலர் தலைவன் ஜீவசுத்தியும் வந்து சேர்ந்திருந்தான். தீயணைப்பு வேலையில் மற்றவர்களுடன் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவன் ராக்ஷசரைப் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்தபடி அவரருகே வர யத்தனித்தான். ராக்ஷசர் அவனிடம் தீயணைக்கும் பணியைத் தொடர்ந்து கவனி என்று சைகையால் கட்டளையிட அவன் அந்தப் பணியைத் தொடர்ந்தான்.

 

ராக்ஷசரின் பார்வை அங்குள்ள நிலைமையைக் கூர்ந்து கவனித்து அலசியது. தகவல் தெரிவித்த வீரன் சொன்னது போல் அது பெருந்தீ தான். ஆனால் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களே அதிக அளவில் இருக்கும் அந்த ஆயுதக்கிடங்கு இந்த அளவு ஆக்கிரோஷமாக எரிவது இயல்பாக இல்லை. இதில் எதோ சதி நடந்திருக்கிறது....

 

தீயணைக்கும் பணி முழுவதுமாக முடிந்தபின் அவர் ஜீவசித்தியிடம்  கேட்டார். “எப்படி இது ஆரம்பித்தது?”

 

ஜீவசித்தி சொன்னான். ”எனக்கும் தெரியவில்லை பிரபு. கேட்கவும் நேரமிருக்கவில்லை. சற்று பொறுங்கள். காவலுக்கு இருந்தவர்களை அழைத்து வருகிறேன்.”

 

அவன் சென்ற பின் அவர் மறுபடி ஆயுதக்கிடங்கைப் பார்வையால் ஆராய்ந்தார். கதவு உட்பட மரத்தாலான அனைத்தும் கருகி சாம்பலாகி இருந்தன. உள்ளே என்ன நிலவரம் என்பது பிறகு தான் தெரியவரும். தீப்பிடித்திருந்த இடங்கள்  இப்போதும் அனலாய் சுடுவதால் இப்போதே சென்று பார்க்க வழியில்லை...

 

ஜீவசித்தி இரண்டு காவல் வீரர்களுடன் வந்தான். “பிரபு, இவர்கள் இருவரும் தான் இன்று இங்கே காவலில் இருந்தவர்கள்.”

 

அந்த இரண்டு காவல் வீரர்கள் முகத்திலும் மிரட்சி தெரிந்தது. தீவிபத்து தந்திருந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னமும் மீளவில்லை என்பதும் அவருக்குத் தெரிந்தது. அவர் அவர்களிடம் கடுமையான குரலில் கேட்டார். “இந்த தீவிபத்து எப்படி நடந்தது?” 

 

இருவரில் ஒருவன் எச்சிலை விழுங்கியபடி சொன்னான். “சரியாகத் தெரியவில்லை பிரபு. திடீரென்று உள்ளேயிருந்து புகைய ஆரம்பித்தது. கதவு வழியாகப் புகை வெளிப்படுவதைப் பார்த்து விட்டு நாங்கள் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனோம். அப்போது உள்ளே நன்றாக தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதுடன் பல இடங்களுக்கும்  வேகமாகப் பரவுவது தெரிந்தது.... முடிந்த வரை உடனடியாக அணைக்க முயற்சி செய்தோம்....”

 

ராக்ஷசர் அவர்களைக் கூர்ந்து பார்த்தபடி கேள்விகள் கேட்டார். அவர்களுக்கு உண்மையிலேயே இந்தத் தீவிபத்தில் பங்கில்லை என்பது புலனாக அவருக்கு அதிக நேரமாகவில்லை. பூட்டியிருந்த ஆயுதக்கிடங்கில் தீப்பற்றியது எப்படி என்ற கேள்வி அவர் மனதில் பிரம்மாண்டமாக எழுந்தது.   

 

அவர் ஜீவசித்தியிடம் கேட்டார். “மன்னருக்கும் தகவல் அனுப்பியாகி விட்டதா?”

 

தங்களுக்குத் தகவல் அனுப்பிய போதே அவருக்கும் அனுப்பியிருக்கிறேன். ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் மன்னரை எழுப்ப அவரது காவலர்கள் தயங்கியிருக்கிறார்கள். காலையில் அவர் எழுந்தவுடன் இந்தத் தகவலைச் சொல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.”

 

அதைக் கேட்டுவிட்டு ராக்ஷசர் ஒன்றும் சொல்லவில்லை. அனல் தணியும் வரை மௌனமாகக் காத்திருந்த அவர் பின் மிகவும் கவனமாக ஆயுதக்கிடங்கினுள்ளே சென்று ஆராய்ந்தார். நீண்ட நேரம் கழிந்து வெளியே வந்த போது அவர் முகம் இறுகியிருந்தது.  

 

வசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு ராக்ஷசர் தனநந்தனின் வரவுக்காகக் காத்திருந்தார். பத்ரசால், வரருசி உட்பட மற்றவர்கள் தகவல் கிடைத்தவுடனே கிளம்பி வந்து விட்டிருந்தனர். அனைவருக்கும் ஆயுதக்கிடங்கு தீவிபத்தில் கருகியது அதிர்ச்சியாகத் தானிருந்தது என்பது அவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டதிலேயே தெரிந்தது.

 

வரருசி மனத்தாங்கலுடன் சொன்னார். “நம் பாடலிபுத்திரத்தில் இவ்வளவு ஒரு சம்பவம் இது வரை நடந்ததில்லை.”

 

பத்ரசால் கோபத்தோடு சொன்னான். “குற்றவாளிகள் யாரானாலும் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.” 

 

ராக்ஷசர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. கருத்துக்கள் தெரிவிப்பதால் மட்டும் எந்தக் காரியமும் நடந்து விடுவதில்லை.

 

தனநந்தன் நீண்ட நேரம் கழித்து நிதானமாகத் தான் வந்தான். அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தவுடன் அதை ஏற்றுக் கொண்டு தன் ஆசனத்தில் அமர்ந்த அவன் அவர்களை அமருமாறு சைகை செய்தான். அவர்கள் அமர்ந்தவுடன் ராக்ஷசரிடம் அவன் கேட்டான். “சாதாரணமாக ஆயுதக்கிடங்கில் தீப்பிடிக்க வாய்ப்பில்லையே. என்ன ஆயிற்று?’

 

ராக்ஷசர் மெல்லச் சொன்னார். “எதிரிகள் திட்டமிட்டுச் செய்த சதிச்செயலாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.”

 

தனநந்தன் அவர் முகபாவனையிலும் அவர் சொன்ன தகவலிலும் ஆபத்தை உணர்ந்தான். “எப்படிச் சொல்கிறீர்கள்?”

 

ராக்ஷசர் விளக்கமாகச் சொன்னார். “பொதுவாக நாம் ஆயுதக்கிடங்கின் முன்பகுதியில் வீரர்களின் பயிற்சிக்காக தினசரி பயன்படுத்தும் முக்கிய ஆயுதங்களை வைத்திருப்போம். பரந்த பின்பகுதியில் மற்ற அனைத்து ஆயுதங்களையும் வைத்திருப்போம். பின்பகுதியில் சீக்கிரமாகத் தீப்பிடிக்க உகந்த பொருள்கள் முன்பே அங்கே குவிக்கப்பட்டிருந்தன போலத் தெரிகிறது. பின்பகுதியை நாம் அடிக்கடி திறந்து பார்க்கும் அவசியம் இல்லாததால் அது நம் கவனத்திற்கு வரவில்லை. சாதாரணமான, இயல்பான தீவிபத்தாக இருந்திருந்தால் பக்கவாட்டில் இருக்கும் சில ஆயுதங்கள் சேதமடைந்திருக்கலாமேயொழிய இப்படி எல்லா ஆயுதங்களும் முழுமையாகச் சேதமாயிருக்க வாய்ப்பேயில்லை. இப்படி ஆக வேண்டும் என்றே ஆயுதங்களுக்கு இடையிடையே எரிபொருள்களை திட்டமிட்டு வைத்திருந்தால் மட்டுமே இப்படி நிகழ முடியும்....” 

 

ஆத்திரத்தில் தனநந்தனுக்குப் பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை

 

பத்ரசால் கேட்டான். “முன்பகுதியில் இருந்த ஆயுதங்கள்?”

 

அவையும் நிறைய சேதமாகியுள்ளன என்றாலும் கூட கஷ்டப்பட்டு முயன்றால் ஓரளவு சரிசெய்து விடலாம். ஆனால் எண்ணிக்கையில் அவை பின்பகுதி ஆயுதங்களை வைத்து ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. யாரோ மிகவும் சாமர்த்தியமாகத் திட்டமிட்டு இக்காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.”

 

தனநந்தன் கோபத்தில் கொதித்தபடி கேட்டான். “யாரந்த எதிரிகள்?”

 

ராக்ஷசர் சொன்னார். “என் சந்தேகம் விஷ்ணுகுப்தர் மற்றும் சந்திரகுப்தன் மீது தான்

 

சமீப காலமாகவே எல்லாவற்றிற்கும் அவர்கள் பெயர்களையே ராக்‌ஷசர் சொல்வது அவர்களுக்கு அவர் தரும் கூடுதல் முக்கியத்துவம் போல் தோன்றினாலும் அவர் எதிலும் முட்டாள்தனமாய் யோசிப்பவர் அல்ல என்பதால் தனநந்தன் அவர் கருத்தை அலட்சியப்படுத்த விரும்பாமல் கேட்டான். ”அங்கு காவலுக்கு நம் ஆட்கள் இருக்கும் போதே இந்தச் சதியை எப்படி அவர்களால் அரங்கேற்ற முடிந்தது? இதில் நம் காவலர்களுக்கும் பங்கிருக்கிறதா?”

 

ராக்ஷசர் எதுவும் சொல்வதற்கு முன்பே வரருசி சொன்னார். “விஷ்ணுகுப்தர் மாந்திரீகத்திலும் வல்லவர் என்று நான் கேள்விப்பட்டதை முன்பே சொல்லி இருக்கிறேன். மாந்திரீகத்தில் தீயை ஓரிடத்தில் வரவழைப்பது முடிந்த காரியமே

 

பத்ரசாலுக்கு மாந்திரீகத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. அவன் ராக்ஷசர் கருத்தை அறிய அவரைப் பார்த்தான்.

 

ராக்ஷசருக்கும் அது மாந்திரீகச் செயலாகத் தெரியவில்லை.  அவர் ஆயுதக்கிடங்கில் ஆராய்ந்த போது கிடைத்த நிறைய எரிபொருள்களின் தடயம், நிஜம் வேறு என்று அவரை எச்சரித்தது. அவர் சொன்னார்.

விஷ்ணுகுப்தரின் அசாத்திய வளர்ச்சியைப் பார்க்கையில் நீங்கள் சொல்வது போல் மாந்திரீகம் மாதிரியான எதாவது கூடுதல் சக்தி அவருக்கு உதவியிருக்கலாம் என்று தோன்றுகிறது தான். ஆனால் இந்த தீவிபத்தில் மாந்திரீகத்தை விட, சதியின் பங்கையே நான் அதிகம் பார்க்கிறேன். இது  ஏதோ ஓரிரு நாளில் நடந்து முடிந்த செயலாய் தோன்றாததால் இந்தச் சதியில் இங்குள்ளவர்களில் ஒருசிலருக்கும் பங்கிருக்கலாம் என்பதையும் என்னால் மறுக்க முடியவில்லை

 

அந்தக் கடைசி செய்தி அவர்கள் அனைவரையும் அதிர வைத்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, December 16, 2024

யோகி 81

 

ஸ்ரேயாவுக்கு ஒரு சின்ன நைப்பாசை இருந்தது. அவள் வழக்கத்திற்கு மாறாக எதிர்த் திசையில் போனாலும் ஷ்ரவன் வேகமாக நடந்து வந்து அவளுடன் சேர்ந்து கொள்வான், பேசுவான் என்ற ஆசை அவள் மன ஓரத்தில் இருந்தது.  ஆனால் அவன் அவளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தனியாகவானாலும், வழக்கமான பாதையிலேயே போக ஆரம்பித்தது அவளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அவள் தன்னையே திட்டிக் கொண்டாள். ‘இந்த முட்டாள் மனதிற்கு எத்தனை பட்டாலும் புத்தியே வராது 

 

வட்டப் பாதையில் எதிர் எதிர் திசையில் போனாலும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்தேயாக வேண்டுமல்லவா? அப்படி அவன் அவளெதிரே வந்த போதும் சின்னப் புன்முறுவல் செய்து தான் கடந்து போனான். அப்படிப் புன்முறுவல் கூடச் செய்யாமல் அவன் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு கடந்து போயிருந்தால் கூட அவளுக்கு ஓரளவு திருப்தியாக இருந்திருக்கும். அவள் வேண்டுமென்றே எதிர்த் திசையில் சென்றதற்கு அவன் கோபித்துக் கொண்டது போல் இருந்திருக்கும். அது கூட ஏதோ ஒரு வகையில் அவளை அவன் பொருட்படுத்தியிருக்கிறான் என்பதாக இருந்திருக்கும். அவன் அந்தச் சில்லறை சந்தோஷத்தைக் கூட அவளுக்குத் தரவில்லை.

 

அவனை அப்படியே நிறுத்தி, அவன் தோள்களைப் பிடித்து உலுக்கி, “நீ உன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்குமளவு அவளுக்கு ஆத்திரம் வந்தது. ஆனால் அதற்கும் பெரிய எதிர்வினை இருக்காது என்ற சலிப்பும் அவள் மனதில் எழுந்தது. அவளையும் அறியாமல் அவள் கண்கள் கலங்கின. நல்ல வேளையாக இப்போதும் அரையிருட்டாக இருப்பதால் யாரும் அவள் கண்ணீரைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

 

நடைப் பயிற்சி முடிந்து அறைக்குள் நுழைந்த போது மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை ஷ்ரவன் உணர்ந்தான். அதையும், அவன் தனியாக அறைக்குள் இருக்கும் இந்தக் கணத்தில் கூட அவனுக்கு வெளிக்காட்ட முடியவில்லை.  அதையும் அந்தக் காமிரா பதிவு செய்து கொள்ள வாய்ப்பு உண்டு. காரணம் என்னவென்று கண்காணிப்பாளர்கள் ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

திடீரென்று அவனுக்கு அந்த உபாசனை மந்திரத்தை ஜபிக்கத் தோன்றியது. அவன் கட்டிலில் சம்மணமிட்டு நேராக அமர்ந்து, கண்களை மூடி, அந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான்.  சுமார் 720 முறை ஜபித்து முடித்தவன்,  அவனுடைய  அறைக் கதவை ஊடுருவி ஒரு ஓநாய் உள்ளே வருவதைப் பார்த்தான்.

 

அவன் திடுக்கிட்டுக் கண்விழித்தான். ஆனால் தரையில், அவன் எதிரில், நெருப்பு உமிழும் கண்களுடன் அந்த ஓநாய் இப்போதும் இருந்தது.

 

டாக்டர் சுகுமாரனின் மனைவி கணவனின் நடவடிக்கைகளில் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டாள். அதுவும் தலைகீழ் மாற்றங்களாக இருந்தன. சாதாரணமாகவே மற்றவர்கள் மரியாதை காட்டும்படியாக கம்பீரமாக நடந்து கொள்ளக்கூடிய சுகுமாரன் இப்போது சில சமயங்களில் கோமாளியைப் போல் தெரிந்தார். முன்பெல்லாம் அவள் பல முறை கெஞ்சிக் கூத்தாடினால் தான் அவரை ஒரு கோயிலுக்கே கூட்டிக் கொண்டு போக முடியும். தீவிர நாத்திகரான அவர், ஆன்மீக ஈடுபாடுள்ள அவளைப் பல தர்மசங்கடமான கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வதுண்டு. அப்படிப்பட்டவர் அவள் சில நாட்கள் வெளியூருக்குப் போய் வருவதற்குள் மயான காளி படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு மாறியிருந்தார். நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடும் ஏதோ ஒரு பைத்தியக்கார நண்பனின் வீட்டுக்குப் போய் இரவெல்லாம் தங்கியிருந்து விட்டுத் திரும்பி வந்தவர் தான் ஒரு தாயத்து கட்டிக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், நாய்க்கும் சேர்த்து ஒரு தாயத்து கட்டிக் கொண்டு வந்தார். அவளுக்குத் தெரிந்து எந்த வீட்டு நாய்க்கும், யாரும் தாயத்து கட்டியதில்லை.

 

என்ன கண்றாவி இது?” என்று ஏளனமாகக் கேட்ட அவளிடம் அசடு வழிய காரணம் சொன்னார். “சும்மா அங்கே எல்லா நாய்களுக்கும் கட்டினாங்க.  இதுக்கும் இருக்கட்டும்னு விட்டுட்டேன்

 

சரி அந்தக் கருமத்தை நீங்க ஏன் கட்டியிருக்கீங்க?”

 

இல்லை அங்கே ஆளுகளும் எல்லாரும் கட்டிகிட்டாங்க

 

யாருங்க உங்களோட அந்த லூஸு ஃப்ரண்டு. குடும்பம் நடத்தற வீட்டுல மயான காளி படத்தைக் கொடுக்கறான். நாய்க்கு பிறந்த நாளைக் கொண்டாடறான். நாய்களுக்கும் ஆள்களுக்கும் தாயத்து கட்ட வைக்கிறான். எல்லாமே ஏடாகூடமாய் இருக்கே. முதல்ல அந்த ஆளோட சகவாசத்தை விட்டொழிங்க.”

 

டாக்டர் சுகுமாரனுக்கு மனைவியின் ஓயாத விமர்சனம் எரிச்சலை மூட்டியது என்றாலும் அவரால் எதற்கும் பதில் சொல்ல முடியவில்லை. ”சரி இனி அந்த ஆள் வீட்டுக்குப் போகலை.” என்று உடனடியாக சரணாகதி அடைந்தார். ’நாயை வெளியே கொண்டு போக ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சு சும்மா ஒரு பேச்சுக்கு நாய்க்கு பிறந்த நாள் விழா கொண்டாடற ஆளைச் சொன்னால் அதையும் ஒரு பிரச்சினை ஆக்கறாளே. இவளுக்கு அந்த ஆவியே தேவலை மாதிரி இருக்குஎன்று மனதிற்குள் நொந்து கொண்டார்.

 

நல்லது. முதல்ல நாய் கழுத்துல இருக்கற தாயத்தை எடுத்து வீசுங்க. அக்கம் பக்கத்துல எல்லாம் சிரிக்கிறாங்கஎன்று சொல்லி அந்தத் தாயத்தைக் கழற்றி விட அவள் நாலடி எடுத்து வைத்திருப்பாள். அவர் அசாதாரண வேகத்தில் தாவிக் குதித்து வந்து அவளை இடைமறித்தார்.

 

அந்தத் தாயத்தை மட்டும் கழட்டினா, இங்கே ஒரு கொலை விழும் சொல்லிட்டேன்என்று ஆத்திரத்துடன் கத்திய சுகுமாரனைத் திகிலுடன் அவர் மனைவி பார்த்தாள்.

 

தீ உமிழும் கண்களுடன் எதிரில் நின்றிருந்த ஓநாயைப் பார்த்தவுடன் ஷ்ரவனின் இதயம் சில வினாடிகள் துடிக்க மறந்தது.

 

பாண்டியனை பயமுறுத்தி வந்த ஓநாய் இப்போது அவனிடம் வந்திருப்பது எப்படி? காசர்கோட்டிலிருந்து வந்த மந்திரவாதி தன் மந்திர வித்தையால் ஓநாயை அவன் மேல் திருப்பி ஏவியிருக்கிறாரா? ’இனி என்ன செய்வது?’ என்ற திகில் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

 

சில வினாடிகளில் தன் நிதானத்தை ஷ்ரவன் திரும்பப் பெற்றான். மந்திர உபதேசம் செய்த பரசுராமன் அது அவனை ஆபத்திலிருந்து காக்கும் கவசமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அவன் அந்த மந்திரத்தை ஜபிக்கும் போது தான் இந்த ஓநாய் வந்திருக்கிறது. மேலும் அவன் இந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கும் வரை இந்த ஓநாய் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்று தைரியம் பெற்ற அவன் தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அந்த ஓநாய் அவனையே பார்த்தபடி நின்றது. அதன் கண்கள் தொடர்ந்து தீயை உமிழ்ந்த போதிலும், அவன் ஆரம்பத்தில் உணர்ந்த திகில் குறைய ஆரம்பித்தது.

 

நிதானமாக அவன் அந்த மந்திரத்தை 1008 முறை சொல்லி முடிக்கும் வரை அது அங்கேயே நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

 

இன்றைய தினமும் 1008 முறை அந்த மந்திரத்தைச் சொல்லி முடித்து விட்டதால், அந்த மந்திரம் அவனைக் காக்கும் என்ற நம்பிக்கையுடன் அவன் அந்த ஓநாயைப் பார்த்துஹாய்என்றான்.

 

அந்த ஓநாய் ஓரடி அவனை நெருங்கியது. அவனுக்கு ஏனோ இப்போது பயம் சுத்தமாக விலகியிருந்தது. அதற்குப் பதிலாக, ஒரு வளர்ப்புப் பிராணியிடம் தோன்றக்கூடிய அன்பு அவனுள் எழுந்தது. இது பரசுராமன் உருவாக்கி அனுப்பிய சக்தியின் அம்சம் என்றால், இதுவும் அவனுடைய கட்சி என்று உள்ளுணர்வு சொன்னது. இது எதிரி திரும்ப அவன் மீது ஏவிய துஷ்டசக்தி என்றால் அவன் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது வந்து, அதைச் சொல்லி முடித்த பின்பும் இருந்து, பின் அவனை மேலும் நெருங்கி இருக்காது.

 

எதற்கும் அசராத பாண்டியனை கதிகலங்க வைத்த இந்த ஓநாய் உண்மையிலேயே நம் நண்பன் தான் என்று நினைக்கையில் அவனுக்கு அதன் மீது சினேகம் மேலும் அதிகரித்தது.   அதனுடன் நட்பாய் மேலும் பேச நினைத்து அவன் வாயைத் திறந்த போது தான் ரகசிய காமிரா மூலம் அவன் கண்காணிக்கப்படுவது அவனுக்கு நினைவுக்கு வந்தது. 


(தொடரும்)

என்.கணேசன்