அன்று காலை பதினோரு மணியளவில் பிரம்மானந்தா முதல்வர் அருணாச்சலத்தைச்
சந்தித்து நலம் விசாரித்தார். பிரம்மானந்தா தொடர்ந்து மூன்று முறை தொடர்பு கொண்டு, முதல்வரை
நேரடியாகச் சந்தித்து நலம் விசாரிக்க விரும்புவதாகச் சொன்னதால் அருணாச்சலம் சம்மதித்திருந்தார். பிரம்மானந்தாவுக்கு
முதல்வரைச் சீக்கிரம் சந்திக்க முடிவது ஒரு கௌரவப் பிரச்சினையாக இருந்தது.
அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மிகவும்
நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. அப்படிக்
காட்டிக் கொண்டு இருக்கும் வரை தான் எதிரிகளுக்குப் பயமும், தயக்கமும்
இருக்கும். அப்படி இல்லா விட்டாலோ எதிரிகளுக்குத் தைரியமும், துணிச்சலும்
வந்து விடும் அபாயம் இருக்கின்றது. அதனாலேயே இந்தச்
சிறிய விஷயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கிறது. பழைய எதிரிகளோடு
சேர்த்து, இப்போது புதிதாக முளைத்த எதிரியையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
அருணாச்சலத்துக்குப் பூச்செண்டும், பழக்கூடையும்
தந்து, நலமாக நாடு திரும்பியதற்கு வாழ்த்தும் தெரிவித்து, அவரோடு
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பத்திரிக்கைகளுக்கும், மற்ற ஊடகங்களுக்கும்
அனுப்பி வைக்கும் வரை எல்லாம் கச்சிதமாகவும், திருப்திகரமாகவும்
நடக்கும்படி யோகாலயத்தின் ஒரு குழு இராணுவ ஒழுங்குடன் பார்த்துக் கொள்ளும்.
அருணாச்சலம் மிக நலிந்து சோர்வுடன்
காணப்பட்டாலும், பிரம்மானந்தாவைப் பார்த்தவுடன் உற்சாகமாக வரவேற்று உபசரித்தது
பிரம்மானந்தாவுக்குத் திருப்தியளித்தது. பத்து நிமிடங்கள்
பேசிக் கொண்டு இருந்து விட்டு அவர் கிளம்பிய போது முதல்வர் அன்புடன் வழியனுப்பி வைத்தார்.
முதல்வரின் காரியதரிசி மீது பிரம்மானந்தாவுக்குக்
கடும் அதிருப்தி இருந்தது. அவன் சென்ற மாதம் முதல்வரின் பால்ய நண்பர் ஒருவருக்கு முதல்வரைச்
சந்திக்க அப்பாயின்மெண்ட் தந்து விட்டு, பிரம்மானந்தாவை
முதல்வருடன் தொலைபேசியில் பேசக் கூட அனுமதிக்காததை அவர் மறந்து விடவில்லை. ஆனால் அதை அன்றும் சரி, இப்போது
நேரில் பார்க்கும் போதும் சரி அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒரு சாதாரண
காரியதரிசி, பரமசிவன் கழுத்துப் பாம்பாய் செயல்பட்டு ’கருடா சௌக்கியமா?’ என்று கேட்பது
போல் நடந்து கொண்டது மன்னிக்க முடிந்த குற்றமல்ல. இவன் பழையபடி
சாதாரண ஆளாகும் போது இவனை முறைப்படி கவனிக்க வேண்டும் என்று மனதிற்குள் கடுகடுத்தாலும், அவன் மரியாதையாய்
வணக்கம் செலுத்திய போது, அவர் அன்பாய் ஆசிர்வதித்து விட்டு வெளியே வந்தார்.
அவர் தன் விலையுயர்ந்த காரில் ஏறி அமரும்
வரை இயங்கிய காமிராக்களுக்குக் கம்பீரமாகக் காட்சியளித்து விட்டு கார் இருக்கையில்
களைப்புடன் சாய்ந்தார். ஒரு காலத்தைப்
போல் உடல் இப்போதெல்லாம் ஒத்துழைப்பதில்லை. சீக்கிரமே
களைப்பு வந்து விடுகிறது...
கார் யோகாலயம் நோக்கி வேகமாகச் செல்ல
ஆரம்பித்தது. அவர் மனம் பல யோசனைகளில் தங்க, அவர் பார்வை
ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சிகளில் மேற்போக்காகத் தங்கியது.
திடீரென்று அவர் பார்வை தெருவோரமாக
நடந்து சென்று கொண்டிருந்த ஒரு முதியவர் மீது நிலைத்தது. அதே யோகி தான். ரகுவரனோ, ரகுராமனோ, பலராமனோ
அப்படிப்பட்ட எதோ ஒரு பெயர்...
உடனடியாக டிரைவரிடம் பிரம்மானந்தா சொன்னார். “கொஞ்சம்
மெல்ல போப்பா”
அவரைத் திரும்பி பார்த்த டிரைவர் உடனடியாக
காரின் வேகத்தைக் குறைத்தான்.
காலம் அந்த யோகியை மாற்றி விடவில்லை. தகிக்கும்
உச்சி வெயிலில் செருப்பில்லாமல் அவர் நடந்து கொண்டிருந்தாலும், வசந்த காலத்தில்
பூப்படுக்கையின் மீது நடப்பது போல் அமைதியாகவும், ஆனந்தமாகவும்
அவர் நடந்து கொண்டிருந்தார்.
பிரம்மானந்தாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த ஆள்
இன்னும் சாகவில்லையா?
அந்த யோகி தனக்கு மிக அருகே ஊர்ந்த
அந்த விலையுயர்ந்த காரைக் கவனிக்கவில்லை. அவர் பார்வை அவருக்கு
எதிரே தொலைவில் இருந்த ஏதோ ஒரு இனிமையான கற்பனைப் புள்ளியில் நிலைத்து நின்றது போல்
இருந்தது.
திடீரென்று காரை நிறுத்தி இறங்கி அந்த
முதியவர் முன்னால் சென்று அவர் நின்றால் எப்படியிருக்கும் என்று பிரம்மானந்தா யோசித்துப்
பார்த்தார். பிரம்மானந்தாவைப் பார்த்து உடனடியாகக் கூட்டம் கூடி விடும். போக்குவரத்து
ஸ்தம்பிக்கும். அதைப் பார்த்தால் அந்த முதியவர் என்ன செய்வார், என்ன நினைப்பார்
என்று பிரம்மானந்தா யோசித்தார்.
அந்த முதியவர் எதுவும் நினைக்க மாட்டார். எந்தப்
பாதிப்புமில்லாமல் அவர் பிரம்மானந்தாவைக் கடந்து போய்க் கொண்டிருப்பார்....
அதை நினைக்கையில் பிரம்மானந்தாவின் முகம் கருத்தது. உணர்ச்சியற்ற
குரலில் அவர் டிரைவரிடம் சொன்னார். “போகலாம்ப்பா”
கார் மீண்டும் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. பிரம்மானந்தா பின் கண்ணாடி வழியாக, அந்த யோகி பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தார்.
பிரம்மானந்தா தன்னைப் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் உடையவர். ஒன்றும் இல்லாதவராய் வாழ்க்கையைத் துவங்கிய அவர் இன்று ஒரு
சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருக்கிறார். அவரைக்
கடவுளாகவும், மகானாகவும் வணங்கக்கூடிய ஆட்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும்
ஏராளமாய் இருக்கிறார்கள். அவர் உருவாக்கிய யோகாலயத்தின் சொத்துக்கள் இன்றைய மதிப்பில்
பல நூறு கோடிகளில் உள்ளன. அவரைப் பார்த்து பொறாமைப்படுபவர்களும், வயிறெரிபவர்களும்
கூட அவரை நேரில் பார்த்தால் கும்பிடு போட்டு விட்டுப் போகிறார்கள். அவரோடு
ஒப்பிட்டால், செருப்பு கூட இல்லாமல் இந்த உச்சி வெயிலில் தெருவில் நடந்து
கொண்டு இருக்கும் அந்த யோகி ஒரு தூசி என்றே சொல்ல முடியும்.
நிலைமை அப்படி இருக்கையில், அந்தத்
தூசியை ஒரு பொருட்டாக நினைத்துப் பார்ப்பதும், இனம் புரியாத
பதற்றத்தை உணர்வதும் அவருக்கு முட்டாள்தனமாகவே தோன்றியது. உலகமே பாராட்டும்
அவர் எங்கே, பேராசிரியர் சிவசங்கரனால் மட்டுமே யோகியாக அடையாளம் காணப்பட்ட
அந்தப் பிச்சைக்காரப் பரதேசி எங்கே? மலை மேல் இருக்கும்
அவர், அதள பாதாளத்தில் இருக்கும் அந்த ஆளைப் பார்த்து மனக்கிலேசம்
அடைவது அவசியமா? அன்று சென்று அந்த ஆளைச் சந்தித்துப் பேசியதே முட்டாள்தனம். இன்றும்
முக்கியத்துவம் கொடுத்து சிந்திப்பதோ படுமுட்டாள்தனம் என்று அபூர்வமாய் தன்னையே திட்டிக்
கொண்டார்.
எல்லாம் தேவானந்தகிரி “எதிரி எதோ
ஒரு நிஜ யோகியைத் தேடிக் கொண்டு இருக்கிறான்” என்று சொன்ன
சின்னத் தகவலால் ஏற்பட்ட மனக்கிலேசம் தான். பிரம்மானந்தாவுக்கு
அந்த எதிரி மேலும் கோபம் வந்தது. உலகமே அவரை யோகி என்று அழைத்து பூஜிக்கையில். அந்த முட்டாள்
அவருக்கே எதிரியாக இருந்து கொண்டு, வேறொரு யோகியைத்
தேடுகிறான். அந்த வேறொரு யோகி இந்தப் பைத்தியக்காரப் பரதேசி என்று அவரும்
முட்டாள்தனமாக யோசிக்கிறார். இந்த மனம் தான் எத்தனை விசித்திரமானது!
யோகாலயத்துக்கு வந்து சேர்ந்த பிரம்மானந்தாவின்
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைப் பார்த்து பாண்டியன் திகைத்தார். முதல்வருடன்
ஏதாவது பிரச்சினை ஆகி விட்டதா?
“என்ன யோகிஜி. முதல்வர்
என்ன சொல்றார்?” என்று அவர் கேட்டார்.
உடனே பிரம்மானந்தா இயல்புநிலைக்கு மாறினார். “ரொம்ப பலவீனமாய்
தான் இருக்கார். ஆனால் நம்மைப் பொருத்த வரைக்கும் அதே அன்பு, அதே மரியாதையோடு
தான் இருக்கார்”
’பின் ஏன்
இந்த அதிருப்தி?’ என்று தன் மனதிற்குள் கேட்டுக் கொண்டாலும் அதை பிரம்மானந்தாவிடம்
வாய்விட்டுக் கேட்கவில்லை.
யோகாலயத்திலிருந்து இன்னொரு காரில்
முதல்வர் வீட்டுக்குப் போன துறவிகளில் ஒருவரை தனியாக அழைத்து, முதல்வர்
வீட்டில் நடந்த சந்திப்பில் எல்லாம் சுமுகமாக இருந்தது அல்லவா என்று விசாரித்தார். அந்தத்
துறவியும் எல்லாம் சுமுகமாகத் தான் இருந்தது என்று சொல்லி விட்டு, முதல்வருடனான
சந்திப்பில் எடுத்த புகைப்படங்களை பாண்டியனிடம் தந்தார். அந்தப்
புகைப்படங்களில் பிரம்மானந்தா பரம திருப்தியுடன் தான் தெரிந்தார். சந்திப்பு
முடிந்து கிளம்பி வருகையில் கடைசியாக எடுத்த புகைப்படத்தில் கூட அவர் முகம் மலர்ந்து
தான் இருந்தது. முதல்வர் வீட்டிலிருந்து இங்கே வந்து சேர்வதற்குள் என்ன நடந்து விட்டது என்ற கேள்வி பாண்டியனைக்
குடைய ஆரம்பித்தது.
(தொடரும்)
என்.கணேசன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅமானுஷ்யன் நாவல் மீண்டும் படித்தேன். அக்ஷ்ய் மீது வரும் மரியாதை,வியப்பு, பிரம்மிப்பை தவிர்க்க முடியவில்லை. எல்லா புகழும் படைப்பாளியான தங்களுக்கே. வாழ்த்துக்கள். ரட்சகன் நாவல் பற்றிய சிறுகுறிப்பு வழங்க இயலுமானால் வழங்கவும்.நன்றி.
ReplyDeletehttps://nganeshanbooks.blogspot.com/2024/11/blog-post.html
DeleteThank you Sir.
ReplyDeleteபிரேம் ஆனந்த், யோகி என்ற பெயர் வைத்துக் கொண்ட யோகா வியாபாரி....
ReplyDeleteரகுராம் உண்மையிலேயே யோகி....
இது தான் இருவரும் வித்தியாசம்...
தன்னை சூரியனாக காட்டிக் கொண்டிருந்த மெழுகுவர்த்தி... சூரிய வெளிச்சம் முன் கூனிக்குறுகி நின்று விட்டது...
பிரம்மானந்தாவுக்கு முதல்வரைச் சீக்கிரம் சந்திக்க முடியாதது கௌரவப் பிரச்சினையாக இருந்தது. முடிவது என்பது தவறாகத் தோன்றுகிறது.
ReplyDelete