பாண்டியன் அன்று எந்த இடைஞ்சலுமின்றி நிம்மதியாகத் தூங்கினார். அவருடைய
தூக்கம் ஆழமானதாகவும் இருந்தது. காலை பத்து மணிக்குத் தான் அவர் கண்விழித்தார். அதுவரை
டாக்டர் சுகுமாரனிடமிருந்து போன்கால் எதுவும் வரவில்லை என்பதே அவருக்கு பெரும் ஆறுதலாக
இருந்தது. மனோகரனின் புலம்பலையும், பயத்தையும்
கேட்காமலிருப்பதே ஒரு பாக்கியம் தான்.
இப்போது மனம் தெளிவாக இருப்பதால், இனி ஆக வேண்டியதை
யோசித்து ஒழுங்காகச் செயல்படுத்த முடியும் என்ற தெம்பு பிறந்தது.
அன்று காலை அவரைச் சந்திக்க வந்த துறவி, உண்மையில்
அவருடைய ஒற்றர் குழுவின் தலைவன். பெயர் கண்ணன். சைத்ராவின் தந்தை
யோகாலயம் வந்த போது அவரிடம் பேசி சமாளித்தவர் கண்ணன் தான். யோகாலயத்திற்கு
உள்ளேயும், வெளியேயும் ஒற்று வேலையைச் சிறப்பான முறையில் செய்து முக்கியமான
தகவல்களை பாண்டியனிடம் சொல்பவரும் கண்ணன் தான். இரவு பாண்டியனின்
மேஜையில் அன்றைய முக்கிய விவரங்களைத் தேர்ந்தெடுத்து வைப்பவரும் அவர் தான். வேடத்தில் தான் அவர் துறவியே ஒழிய, அவர் செய்வதெல்லாம் தீவிர
கண்காணிப்பு தான்.
அன்று கண்ணன்
11.10 க்கே பாண்டியனிடம் வந்து நின்றது, இரவு வரை
காத்திருக்க முடியாத தகவலைச் சொல்லத் தான் என்பதை உணர்ந்த பாண்டியன் கேட்டார்.
“என்ன கண்ணன்?”
“ரெண்டு மூனு நாளாய் வெளியே இருந்து யாரோ நம்மள கண்காணிக்கிற மாதிரி இருக்கு
சார்”
பாண்டியன் திடுக்கிட்டார். “யாரதுன்னு
கண்டுபிடிச்சுட்டீங்களா?”
“இல்லை சார். கண்காணிக்கறது ஒரே ஆள் இல்லை. ஒரு ஆள் போய் வேற வேற ஆள் வராங்க. ஆனா யாராவது ஒரு ஆள்
எப்பவுமே இந்த சுற்று வட்டாரத்துல இருக்காங்க.”
பாண்டியன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டார். “போலீஸா இல்லை தனியாரா?”
“தெரியலை. ரெண்டில் யாராவது ஒருத்தராய் இருக்கலாம்…
ரொம்ப கவனமாய் கண்காணிக்கிறாங்க. ஆனா நெருங்கி
வராம தூரத்துல இருந்து தான் கண்காணிக்கிறாங்க. முக்கியமா யார் இங்கே வர்றாங்க.
இங்கேயிருந்து யார் போறாங்கன்னு பார்க்கற மாதிரி தான் தெரியுது.”
‘அந்த ஆள்கள்ல ஒருத்தனை கையும் களவுமாய் பிடிச்சு விசாரிக்கறது நல்லது”
“அப்படி சிக்கிக்கிற மாதிரி கண்காணிக்கிறதில்லை. ஒரு தடவை
நம்ம கண்ணுக்குத் தெரிஞ்சவன் மறுபடியும் அப்படி வந்து நம்ம பார்வைல சிக்கறதில்லை”
கண்களை மூடி சிறிது யோசித்த பாண்டியன் கேட்டார். “இங்கே இருக்கறவங்க யார்
கூடவாவது அந்த ஆள்களுக்கு ஏதாவது தொடர்பிருக்க வாய்ப்பிருக்கா?”
“அந்த மாதிரி தெரியல. அப்படித் தெரியற மாதிரி எந்த முயற்சியும்
எடுக்கப்படலை”
“அவங்க யாராவது, இங்கே வேலைக்கு வந்துட்டு போறவங்களை வழியில
சந்திச்சு தகவல் வாங்கிக்க
முயற்சி செய்யறாங்களான்னும் பார்த்தீங்களா?”
“அந்த மாதிரி எதுவும் இந்த சுற்று வட்டாரத்தில் நடக்கல. ஒருவேளை வேற இடங்கள்ல, வேற நேரங்கள்ல நடக்க வாய்ப்பில்லைன்னும்
சொல்லிட முடியாது.”
தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கவும், கவனிக்கவும் அறிவுறுத்தி
விட்டு, கண்ணனை அனுப்பிய பாண்டியன் பிரம்மானந்தாவைச் சந்திக்க
உடனடியாகக் கிளம்பினார்.
பாண்டியன் சென்ற போது பிரம்மானந்தா ஏதோ தீவிர யோசனையில் இருப்பது
தெரிந்தது. தேவானந்தகிரி
பூஜைகள் செய்து விட்டுப் போனதிலிருந்தே பிரம்மானந்தா இப்படித்தான் இருக்கிறார் என்பதை
பாண்டியன் நினைவு கூர்ந்தார்.
“என்ன யோகிஜி தீவிர யோசனை?”
பிரம்மானந்தா தீவிர சிந்தனையிலிருந்து உலுக்கி விடப்பட்டவர்
போல அவரைப் பார்த்தார். பின் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “ஒன்னுமில்லை.”
கண்ணன் தெரிவித்த தகவலை அவரிடம் பாண்டியன் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு பிரம்மானந்தாவும்
திடுக்கிட்டார்.
“உன்னோட யூகம் என்ன?” என்று அவர் பாண்டியனைக் கேட்டார்.
“போதுமான தகவல்கள் கிடைக்காம எந்த யூகத்துக்கும் என்னால வர முடியல. ஆனா நடக்கறது எல்லாத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்குங்கறது மட்டும் நிச்சயம்.”
“இதுக்குப் பின்னணியில் இருக்கறது யாருன்னு தெரிஞ்சா அது நமக்கு உபகாரமாய் இருக்கும்”
“அந்த ஆள் எதோ ஒரு நிஜ
யோகியைத் தேடறவன்னு மட்டும் தான் நமக்குத் தெரிஞ்சிருக்கு. அதை மட்டும் வெச்சுகிட்டு
என்ன கண்டுபிடிக்க முடியும்னு எனக்குப் புரியல”
பிரம்மானந்தாவின் முகத்தில் ஒரு கருமேகம் சூழ்ந்து விட்டுப்
போனது போல் பாண்டியனுக்குத் தோன்றியது.
அவராக எதையாவது சொல்வார் என்று பாண்டியன் காத்திருந்தார். ஆனால் பிரம்மானந்தா தன்னைப் பாதித்தது என்னவென்று அவரிடம் சொல்லவில்லை.
பாண்டியனுக்கு அது ஆச்சரியமாய் இருந்தது. அவரிடம் பிரம்மானந்தா இது
வரை எந்த ரகசியத்தையும் மறைத்தவரல்ல. பிரச்சினை எதுவானாலும் அவரிடம் சொல்லி விட்டு, பின் அதைப் பற்றிய கவலை ஒழிந்தவராய் செயல்படும் பிரம்மானந்தா ஏன் இப்போது அவரைப்
பாதிக்கும் ஒரு விஷயத்தை மட்டும் சொல்வதைத் தவிர்க்கிறார்?
நினைவுபடுத்திப் பார்த்த போது நேற்று ‘எதிரி ஏதோ நிஜ யோகியைத்
தேடிக் கொண்டிருக்கிறான்’ என்று தேவானந்தகிரி சொன்ன போதும் அந்தத்
தகவல் அவரை ஏதோ ஒரு விதத்தில் பாதித்ததும் ஞாபகம் வந்தது. யோகிஜி
என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படும் நிலையில் அவர் இருக்கையில் இன்னொரு யோகியை
எதிரி தேடுவது இவரைப் பாதிக்கிறதா?
பாண்டியன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்று
விட்டார். பிரம்மானந்தா
மனம் பழையபடி அந்த யோகியைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்தது. ’அந்த
மனிதர் எங்கேயிருக்கிறார்? எதிரி தேடுவது அந்த யோகியைத் தானா?
ஆமென்றால் ஏன் எதிரி அவரைத் தேடுகிறான்? அந்த யோகியைத்
தேடுபவன் ஏன் அவர்களுக்கு எதிராக இருக்கிறான்?’
அந்த யோகியின் நினைவு பிரம்மானந்தாவுக்குக் கசந்தது. அந்த யோகி எப்போதோ இறந்திருக்கலாம். இருந்தாலும் அவரைப் பற்றி உலகம் பேச
வழியில்லை. சிவசங்கரன் போன்ற சில அபூர்வ ஆட்கள் மட்டும் தான்
அந்த ஆளை அடையாளம் கண்டு, ஆர்வம் காட்டக்கூடும். மற்றவர்கள் சுலபமாய் கடந்து போய்விடக்கூடியவர் அந்த யோகி. அந்த யோகியின் பெயர் கூட இப்போது பிரம்மானந்தாவுக்கு நினைவுக்கு வரவில்லை.
ரகுநாதனோ, ரகுராமனோ, இல்லை
ராகவனோ, ரகுவரனோ... மொத்தத்தில் ராமனின்
பெயர் என்பது மட்டும் தான் நினைவிருக்கிறது. எப்போதோ மறந்த அந்தத்
தோட்டக்காரனை நினைவுபடுத்திக் கொண்டது தேவையில்லாதது. அதுவும்
யோகியாக நினைத்துக் கொண்டது சிறிதும் தேவையே இல்லாதது. மீண்டும்
அவர் மறக்க நினைக்கிறார். அந்த மனிதனை… அந்தப் பேச்சை…. அன்று உணர்ந்ததை...
சில காலத்திற்கு முன் பேராசிரியர் சிவசங்கரனைப் பார்த்த போதும்
அவர் அடையாளம் காட்டியிருந்த யோகி அவர் நினைவுக்கு வந்திருந்தார். ஏனென்றால் அந்தத் தோட்டக்காரனை
யோகியாய் அவருக்கு அடையாளம் காட்டியவர் சிவசங்கரன் தான். முக்கியமாய்
அதனாலேயே அவர் சிவசங்கரனைப் பார்த்தும் பார்க்காதவர் போல் நகர்ந்திருந்தார்.
அப்போது வேகமாக சிவசங்கரனையும், அந்த ஆளையும் சேர்ந்தே
அவருக்கு மறக்க முடிந்திருந்தது. இப்போதும் மறக்க முடியும்,
அந்த ஆள் இப்போதைய எதிரிக்கு சம்பந்தம் இல்லாதவராக இருந்தால்,
எதிரி தேடும் ஆளாக இல்லாமலிருந்தால்…
சேலத்தில் தொழிலதிபர் சந்திரமோகனின் வீட்டுக்கு, ஐம்பது
வயது நபராய், மாறுவேடத்தில் சென்றிருந்த போலீஸ் இளைஞன், தான் போட்டிருந்த
வெற்றிலையை, தெருவோரமாகத் துப்பி விட்டு அழைப்பு மணியை அழுத்தினான். சந்திரமோகனின்
மனைவி கதவைத் திறந்தாள்.
வெள்ளை வேட்டி, வெள்ளை
சட்டை அணிந்து, நெற்றியெல்லாம் திருநீற்றுப் பட்டை தீட்டி, வெற்றிலை
போட்டுச் சிவந்த வாயுடனும், கையில் மஞ்சள் பையுடனும் வந்து நின்ற அந்த நபரை இதற்கு முன்
பார்த்ததாய் அவளுக்கு நினைவில்லை. “யார் வேணும்?”
“சந்திரமோகன்
வீடு தானே இது?” அந்த ஆள் கேட்டார்.
“ஆமா”
“அவர் தான்
வேணும்.”
“நீங்க?”
“நான் மாயவரம்
மாதவன். சேலத்துக்கு வேறொரு வேலையாய் வந்தேன். அவரையும்
பார்த்துட்டு போகாட்டி நல்லாயிருக்காதுன்னு வந்தேன். அவரைக்
கொஞ்சம் கூப்பிட்டீங்கன்னா பார்த்து பத்து நிமிஷம் பேசிட்டு கிளம்பிடுவேன். எனக்கு
ரெண்டரை மணிக்கு ரயில்...”
அவள் சிறிது யோசித்து விட்டு அவரை உள்ளே
அழைத்தாள். “வாங்க. உட்காருங்க.”
அந்த ஆள் அவள் காட்டிய நாற்காலியில்
அமர்ந்தார்.
அவள் கேட்டாள். “உங்களுக்கு
அவரை எப்படி பழக்கம்?”
“யோகாலயத்துல
அவரைச் சந்திச்சுப் பேசியிருக்கேன். அவர் தான் அங்கே
அடிக்கடி வர்ற ஆளாச்சே. நானும் போன வருஷம் அங்கே போயிருந்தப்ப தான் அவரோட பரிச்சயமாச்சு.”
யோகாலயம் என்று சொன்னவுடனே அவளுடைய
முகத்தில் திகில் பரவியது.
(தொடரும்)
என்.கணேசன்