சாப்பிட்டு விட்டு வருகையில் மற்ற பங்கேற்பாளர்களில் ஒருவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கமலம்மாவிடமிருந்து ஷ்ரவனைக் காப்பாற்றினார். கமலம்மா விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து ஸ்ரேயாவிடம் பேச ஆரம்பித்தது தெரிந்தது. ஆனால் ஸ்ரேயா முகம் சுளிக்காமல் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டே நடந்து வந்தது அவள் நல்ல மனதை அவனுக்கு அடையாளம் காட்டியது. முதியவர்களின் ஓயாத பேச்சைப் பொறுமையுடன் கேட்கும் இளையவர்கள் இக்காலத்தில் அரிதிலும் அரிது தான்…
சென்ற முறையைப் போலவே இந்த முறையும்
தியான வகுப்பில் ஆண்களும், பெண்களும் பிரிந்து தான் அமர வைக்கப்பட்டார்கள். அதிகம் தலையைத் திருப்பாமலேயே ஸ்ரேயாவைப்
பார்க்க முடிந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து ஷ்ரவன் அமர்ந்தான். இப்படி மீண்டும் மீண்டும் யாரையும் பார்க்க வேண்டுமென்று இதுவரை அவனுக்குத்
தோன்றியதில்லை. இது தான் காதல் என்பதா?
முதல் நாள் தியான வகுப்பிலேயே பிரம்மானந்தா
புராணம் ஆரம்பித்து விட்டது. சென்ற முறை ஸ்ரீகாந்த் செய்தது போல் யாரும் அதை வெளிப்படையாகத்
தடுக்க முயலவில்லை. அதனால் இறைவனையும் மிஞ்சிய விந்தையாக பிரம்மானந்தா அங்கு
புகழப்பட்டார்.
அடுத்த நிலைத் தியானங்கள் சொல்லிக்
கொடுக்கப்பட்ட போது மட்டும் ஒரு இளைஞன் பெங்களூரில் வேறொரு தியான மையத்திலும் இதே தியான
முறை வேறொரு பெயரில் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்தான். அவன் சொன்ன
தியான மையம், பிரம்மானந்தாவின் பழைய யோகா குரு பத்மநாப நம்பூதிரியின் தியான
மையமாக இருந்தது.
அந்தத் தியான முறையை விவரித்த துறவி, அவர்களுடைய
சிறப்பு தியான முறைகள் வேறு வேறு பெயர்களில் மற்ற தியான மையங்களில் கற்றுத் தரப்படுகின்றன
என்பதை வருத்ததுடன் சொன்னார். குறைந்தபட்சமாக
இங்கிருந்து எடுக்கப்பட்டது என்று கூடத் தெரிவிக்கும் சிரமத்தை அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை
என்றும் வருத்தப்பட்டார். அதைக் கேட்கையில் ஆன்மீகம் அரசியலை மிஞ்சி விடும் போலிருக்கிறதே
என்று ஷ்ரவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
மதிய உணவின் போதும், மாலை தேனீர்
இடைவேளையின் போதும் கூட அவனையும், வேறிரண்டு இளைஞர்களையும் கூடுதலாக யோகாலயத்து ஆட்கள் கண்காணித்தது
போலிருந்தது. யாராவது ஒருவராவது ஷ்ரவனும், அந்த இரண்டு
இளைஞர்களும் பேசுவதைக் கேட்கும் தொலைவில் இருந்தார்கள். அப்படியானால் எதிரி ஒரு இளைஞன் என்றும் யோகியைத் தேடுகிறான்
என்றும் தான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது.
அன்று இரவு அந்த மூன்று இளைஞர்களின் காமிராப் பதிவுகளை பாண்டியன்
கூர்ந்து பார்த்தார். ஒரே அறையில் தங்கியிருந்த இரண்டு இளைஞர்களும் சந்தேகப்படும் விதமாக நடந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள்
இருவரும் பொதுவான விஷயங்களைத் தான் அதிகம் பேசிக் கொண்டார்கள். யோகாலயத்தில்
உணவு சுமாராய் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். தியானம்
செய்வதில் இருவரும் சந்திக்கும் இடைஞ்சல்கள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பேசிக்
கொண்டது எதுவுமே அவர்களை எதிரியாக அடையாளம் காட்டவில்லை.
ஷ்ரவன் என்ற இளைஞனும் கூட அதிக சந்தேகத்தைக்
கிளப்பவில்லை. அவன் அறையில் குப்பைக்கூடையில் போட்டிருந்த டிக்கெட்டைக்
கூட வேலையாட்கள் பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள். அந்த டிக்கெட்டை
எடுத்து பாண்டியன் கவனமாகப் பார்த்தார். அவன் ஹைதராபாத்திலிருந்து
அன்று அதிகாலையில் சென்னை வந்து சேர்ந்த
ரயில் டிக்கெட் அது. அதைப் பார்த்த பாண்டியன் திருப்தியடைந்தார். காரணம்
எதிரி சென்னையில் தான் தற்போது தங்கியிருக்கிறான் போலத் தெரிகிறது. யோகாலயத்தைக்
கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்து விட்டு, அவன் தொலைவில் இருக்க வாய்ப்பில்லை.
அவன் பக்கத்து அறைப் பெண்களுடனும், மற்றவர்களுடனும்
இயல்பாகப் பேசினான். வகுப்பிலும் பிரச்சினை எதுவும் செய்யவில்லை. மாலை வகுப்பு
முடிந்த பிறகு ஒரு நடுத்தர வயது பங்கேற்பாளருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து
விட்டு அறைக்கு வந்து அன்று சொல்லிக் கொடுத்த தியானப் பயிற்சியை முத்திரைகளுடன் செய்வது
தெரிந்தது. முக்கால் மணி நேரம் அந்தத் தியானத்தைச் செய்தவன் பின் இரவு
சாப்பிட்டு விட்டு வந்தான். சாப்பிடும் போது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முதியவருடன்
சிறிது பேசினான். பின் மறுபடியும் அறைக்கு வந்து விட்டான். யாரிடமும்
அவன் போனில் பேசவில்லை. மாறாக லாப்டாப்பில் பிரம்மானந்தாவின் சொற்பொழிவு யூட்யூப்களைப்
போட்டு கண்களை மூடிக் கேட்டுக் கொண்டிருந்தான்.
இதில் எதுவுமே சந்தேகப்படும்படி இல்லை. பாண்டியன்
திருப்தி அடைந்தார். ஆனாலும் இந்த மூன்று இளைஞர்களையும் கடைசிநாள் வரை கண்காணிப்பது
நல்லது என்றே அவருக்குத் தோன்றியது. மூவரில் எவனாவது
ஒருவன் பெரிய நடிகனாகக் கூட இருக்கலாம்...
இரவில் பிரம்மானந்தாவின் யூட்யூப்களைக் கேட்டபடி கண்களை மூடிக்
கொண்டு தலையணையில் சாய்ந்து கொண்டிருந்த ஷ்ரவனின் மனதில் அவர் சொன்னது எதுவும் பதியவில்லை. அவர் வழக்கம்
போல் ஒருசில யூட்யூப்களில் கச்சிதமாகப் பேசினார் என்றாலும் மற்றவற்றில் அவர் ஆரம்பித்த
விஷயத்திற்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல் வார்த்தை ஜாலத்தால் குழப்பிக் கொண்டிருந்தார். அதனால்
மனதில் பதித்துக் கொள்ள எதுவுமில்லை. அதற்குப் பதிலாக
அவன் மனதில் ஸ்ரேயா தான் புன்னகை செய்து கொண்டிருந்தாள்.
அவன் இங்கே துறவில் ஈடுபாடு உள்ளவன்
போல் நடிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அது அவனுடைய அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அத்தியாவசியம். முதல் முதலில்
காதல் வசப்பட்ட பெண் முன்னால் ஆரம்பத்திலேயே அப்படி நடிக்க வேண்டியிருப்பது சங்கடமாக
இருந்தது. நெருங்க வேண்டிய பெண்ணை அவனை விட்டு காத தூரம் ஓட அல்லவா
அது வைத்து விடும். இந்தச் சிக்கலான சூழலில் தானா காதல் அரும்ப வேண்டும்?
கண்காணிப்பவர்களுக்காக, காமிராவின்
கீழ், பிரம்மானந்தாவின் தீவிர பக்தனாக போதுமான அளவு நடித்து விட்டு, பின் நிமிர்ந்து
அமர்ந்து, பரசுராமன் உபதேசித்த மந்திரத்தை ஷ்ரவன் ஆயிரத்தெட்டு முறை
ஜபிக்க ஆரம்பித்தான். அவர் உபதேசித்த மந்திரத்திற்கு உண்மையாகவே ஒரு தனி சக்தி
இருப்பதை அவன் ஆத்மார்த்தமாக உணர்ந்திருந்தான். அதனால்
அவன் ஒரு நாள் கூட அதைச் செய்யத் தவறவில்லை. இன்று அதை
ஜபிக்கையில் கூடுதலாக ஏதோ ஒன்றை உணர்ந்தான். அதை அவனால்
குறிப்பாக இன்னதென்று சொல்ல முடியவில்லை.
அதன்பின் உறங்கிய ஷ்ரவன் மறுநாள் அதிகாலையில்
எழுந்து நடைப் பயிற்சிக்காக வெளியே வந்த போது தான் ஸ்ரேயாவும் நடைப் பயிற்சிக்காக அவள்
அறையை விட்டு வெளியே வந்தாள். அவளுடன் கமலம்மா இல்லாதது அவனுடைய அதிர்ஷ்டம் என்றே அவனுக்குத்
தோன்றியது. நேற்று ஆதங்கப்பட்டது போல எல்லாமே சிக்கல் என்று சொல்ல முடியாது...
“குட் மார்னிங். பாட்டி
வரலையா?” என்று ஷ்ரவன் கேட்ட போது அவள் புன்னகையுடன் “அவங்க தூங்கறாங்க” என்று சொன்னாள்,
இருவரும் யோகாலயத்தின் உள்ளே உள்ள முன்புற
மைதானத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். சென்ற முறையும்
அப்போதிருந்த பக்கத்து அறைப் பெண்ணுடன் தான் அவன் அதிகாலையில் நடந்திருந்தான் என்பதால்
இப்போது பிரத்தியேகமாக அவர்கள் சந்தேகப்படுவதற்கில்லை.
பேசிக் கொண்டே நடந்த போது அவளைப் பற்றி
அவன் கூடுதலாக அறிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய தந்தை ஒரு
பெரிய ஓட்டலில் மேலாளராக இருக்கிறார் என்றும் அவள் பெற்றோருக்கு அவள் ஒரே மகள் என்றும்
தெரிந்தது. ஆரோக்கியத்திற்கும், அமைதியான
வாழ்க்கைக்கும் யோகா மற்றும் தியானம் உதவும் என்பதால் தான் அவள் இந்த வகுப்புகளுக்கு
வந்திருப்பதாகவும், மற்றபடி ஆன்மீகத்தில் எல்லாம் அவளுக்கு அதிக நாட்டம் இல்லை
என்றும் அவள் வெளிப்படையாகச் சொன்னாள். அவள் பரதநாட்டியம்
கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதும், நாவல்கள் வாசிப்பதில்
ஆர்வமுள்ளவள் என்பதும் தெரிந்தது.
அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளவும்
அவள் ஆர்வமாய் இருந்தாள். அவளிடம் பொய் சொல்வதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. ஆனால் அவளிடம் அவனால் உண்மையைச் சொல்லவும் முடியவில்லை. அவர்களுக்குப்
பின்னால் நான்கு அடிகள் தள்ளி நடந்து வந்து கொண்டிருந்த யோகாலயத்து துறவிக்கு அவர்கள்
பேசிக் கொள்வது கண்டிப்பாகக் கேட்கும். அதற்காகத் தான்
அவர் அதே தொலைவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.
”நானும்
உங்க மாதிரியே தான். அப்பா அம்மாக்கு ஒரே பிள்ளை. ஹைதராபாத்ல
இருக்கேன். எனக்கு ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு ஆர்வம் தீவிரமாய் இருக்கும். இப்போதைக்கு
எனக்கு தீவிர ஆர்வம் யோகா தியானம் மேலயும், யோகி பிரம்மானந்தாஜி
மேலயும் தான்...”
அவன் தன்னைப் பாதிக்கும் உண்மையைச்
சொல்லிவிடவில்லை. அதே சமயம் பொய்யும் சொல்லவில்லை...
How many episodes are there in total Sir ?
ReplyDelete164
Deleteமுதல்நிலை தியான வகுப்பில் ஸ்ரீகாந்த் அலப்பறை உண்மையை ஒத்து இருந்தால் சுவாரஸ்யமாக இருந்தது. நிஜ உலக பிரம்மானந்தாவை அடிக்கடி நியாபகப்படுத்தியது.
ReplyDeleteஇரண்டாம் நிலை வகுப்பில் ஸ்ரேயா,ஷர்வன் காதல் இடம்பெற்றிருப்பது....
பரபரப்பான கதையை மெதுவாக்கியது போல் உள்ளது...