Thursday, October 24, 2024

சாணக்கியன் 132

 

ஹிமவாதகூடத்தின் மன்னன் பர்வதராஜன் தன் மகன் மலைகேதுவுடன் தேசத்தின் எல்லையில் நின்றிருந்தான். ரதத்தில் அமர்ந்திருந்தவன், பாதுகாவலர்கள் படைசூழ பெரிய ரதத்தில் வந்து கொண்டிருந்த  சந்திரகுப்தனையும், சாணக்கியரையும் தொலைவில் பார்த்தவுடனேயே ரதத்திலிருந்து இறங்கி விட்டிருந்தான். அவனுடைய இசைக்கலைஞர்கள் மங்கல வாத்தியங்களின் ஒலியை எழுப்ப ஆரம்பித்து விட்டிருந்தார்கள்.

 

சந்திரகுப்தன் புன்னகையுடன் சாணக்கியரிடம் சொன்னான். “என்ன ஆச்சாரியரே. நமக்கு வரவேற்பு வெகுசிறப்பாக இருக்கிறதே?”

 

சாணக்கியர் சொன்னார். “பொறு இது ஆரம்பம் தான். போகப் போக உன் வியப்பு அதிகமாகும்

 

பர்வதராஜன் அவர்களை நோக்கி விரைவாக நடந்து வர அதைக் கண்ட அவர்களிருவரும் ரதத்தை விட்டு இறங்கினார்கள். பர்வதராஜனின் மகன் மலைகேது மெல்ல ரதத்திலிருந்து இறங்கி சந்திரகுப்தனைக் கூர்ந்து பார்த்தபடி அங்கேயே நின்றான்.

 

பர்வதராஜன் வேகமாக வந்து சாணக்கியரின் காலைத் தொட்டு வணங்கினான். “என் தேசம் தங்கள் காலடி படுவதற்குப் புண்ணியம் செய்திருக்கிறது ஆச்சாரியரே. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.”

 

பர்வதராஜனை சாணக்கியர் ஆசிர்வதித்தார். பர்வதராஜன் சந்திரகுப்தனைப் பேரன்பு காட்டி அணைத்துக் கொண்டான். “வெற்றி மீது வெற்றி கண்டு வரும் வாஹிக் அரசன் சந்திரகுப்தனை நேரில் ஒரு முறையாவது காண வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் இருந்தேன். என் ஆவலை நிறைவேற்றும் வகையில் நேரில் வந்து கௌரவித்ததற்கு நன்றி சந்திரகுப்தனே

 

சந்திரகுப்தன் பர்வதராஜனின் கால்களைத் தொட்டு வணங்கினான். கண்களை மூடி இரு கைகளாலும் ஆசிர்வதித்த பர்வதராஜன் அவர்களுடைய பயணம் சௌகரியமாக இருந்ததா என்று விசாரித்தபடி அவர்களை அழைத்துக் கொண்டு வந்தான். தன் மகனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டு மகனைப் பார்த்து கண்ணசைத்தான். சாணக்கியரை வணங்கச் சொல்கிறார் தந்தை என்பதைப் புரிந்து கொண்ட மலைகேது வேண்டாவெறுப்பாக அவர் காலைத் தொட்டு வணங்கினான். பின் சந்திரகுப்தனையும் அணைத்து வரவேற்றான்.

 

மலைகேதுவுக்கு தட்சசீல ஆசிரியராக இருந்து தன் மாணவன் மூலம் பிரசித்தி பெற்ற அந்த அந்தணருக்கும், ஏதோ ஒரு குருட்டதிர்ஷ்டத்தால் வாஹிக் பிரதேசத்தின் மன்னனான சந்திரகுப்தனுக்கும் இந்த அளவு மரியாதை தர வேண்டிய அவசியம் விளங்கவில்லை. அவன் அவர்களோடு விருந்தினர் மாளிகை வரை செல்ல விரும்பவில்லை. மெள்ள அவன் பின்தங்கினான்.

 

சந்திரகுப்தனையும், சாணக்கியரையும் மங்கல வாத்திய ஒலியோடு விருந்தினர் மாளிகை வரை அழைத்துச் சென்ற பர்வதராஜன் ஏற்கெனவே அவர்கள் சௌகரியங்களுக்கு அங்கு சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தான். அவர்களிடம் மிகுந்த பணிவுடன் சொன்னான். “பயணக்களைப்பு தீர இருவரும் இளைப்பாறிக் கொள்ளுங்கள். பின்பு பேசுவோம்.”

 

இரு கைகளையும் கூப்பி தலை வணங்கி அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டுச் செல்லும் பர்வதராஜனைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரகுப்தன் சாணக்கியரிடம் சொன்னான். “என்ன ஆச்சாரியரே. நீங்கள் சொன்னபடி எனக்கு வியப்பு கூடுகிறதே

 

சாணக்கியர் புன்னகையுடன் சொன்னார். “பொறு. இன்னும் முடிந்து விடவில்லை. திரும்பிப் போகும் வரை வியக்க நிறைய உனக்கு காத்திருக்கிறது

 

ர்வதராஜன் தன்னுடன் விருந்தினர் மாளிகை வரை வராததற்கு மகன் மலைகேதுவைக் கடிந்து கொண்டான். “மகனே! வாழ்க்கையில் பல நேரங்களில் சிறிய விஷயங்கள் பெரிய விஷயங்களை விட முக்கியமானவை. அவற்றை அலட்சியம் செய்வதால் மிக முக்கியமான எத்தனையோ நன்மைகளை இழந்து விடும் அபாயம் இருக்கிறது. விருந்தினர் மாளிகை வரை வந்து அவர்களை உபசரிக்க நீயேன் வரவில்லை?”

 

மலைகேது சொன்னான். “தந்தையே! எனக்கென்னவோ அவர்களுக்கு நீங்கள் தேவையில்லாத மரியாதையைத் தருவது போல் தோன்றுகிறது. அதிலும் அந்தச் சாதாரண ஆசிரியனை வணங்கும் அவசியம் என்ன இருக்கிறது? அரச குலத்தில் பிறந்து அரசராகத் திகழும் நீங்கள், ஏதோ அதிர்ஷ்டத்தால் மன்னனான சந்திரகுப்தனை சமமானவனாக நடத்தும் அவசியம் என்ன இருக்கிறது? இது நம்மை நாமே குறைத்துக் கொள்வது போலல்லவா இருக்கிறது?’

 

பர்வதராஜன் மகனைக் கடுமையாக ஒருமுறை பார்த்து விட்டுச் சொன்னான். “அதிர்ஷ்டத்தால் யாரும் அரசர்களாவதில்லை மகனே. அரசகுலத்தில் பிறந்ததால் அரசனாக இருப்பது யாருக்கும் பெருமையுமில்லை. அதனால் சாகசத்தால் சாதித்து அரசனானவனை நீ குறைத்து மதிப்பிடுவது முட்டாள்தனம். மேலும் அந்த அந்தணரை ஒரு சாதாரண ஆசிரியனாக நீ நினைப்பதும் அதிமுட்டாள்தனம். மாடு மேய்ப்பவனை அரசனாக்குவது உன்னால் முடிந்த காரியமா, இல்லை என்னால் முடிந்த காரியமா? வந்திருக்கும் இருவரும் தங்கள் குலத்தையோ, அதிர்ஷ்டத்தையோ நம்பாமல் தங்கள் சாமர்த்தியத்தையே நம்பி தான் உயர்ந்திருக்கிறார்கள். அவர்களைக் குறைத்து மதிப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.”

 

மலைகேது பார்வையைத் தாழ்த்திக் கொண்டாலும் தந்தையிடம் தன் அடுத்த அபிப்பிராயத்தைச் சொல்லத் தவறவில்லை. “சரி அவர்கள் மேலாகவே இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு அவர்களால் என்ன இலாபம்? நாம் அவர்களை வரச் சொல்லவில்லையே? நம்மிடம் ஏதோ வேலையாக வேண்டி அவர்களாகத் தானே வந்திருக்கிறார்கள்? அவர்கள் வருகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடனேயே கிளம்பிச் சென்று வரவேற்று அவர்களை இப்படி உபசரித்து நாம் பெறும் நன்மை என்ன இருக்கிறது?”

 

பர்வதராஜன் சொன்னான். “விஷ்ணுகுப்தர், சந்திரகுப்தன் போன்ற ஆட்கள் பொழுதைப் போக்க எங்கும் போகக்கூடிய ஆட்கள் அல்ல. அதிலும் அந்த அந்தணர் ஒவ்வொரு கணத்தையும் கணக்குப் போட்டுக் கழிக்கக்கூடியவர். எதையும் காரணமில்லாமல் செய்யாதவர். அதனால் அவர்கள் வந்திருப்பது அவர்கள் வேலையாகத் தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் வெற்றி மீது வெற்றி அடைந்து வரும் அவர்களுக்கு நாம் சிறிய விதத்தில் உதவினால் அதற்குப் பலமடங்கு நன்மைகளைப் பிரதியுபகாரமாகப் பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதை நீ மறந்து விடக்கூடாது. நாம் அவர்களை உபசரிப்பதிலும், உபசார வார்த்தைகளைப் பேசுவதிலும் நமக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. எந்த இழப்பும் இல்லை. அதனால் இது போன்ற சிறு விஷயங்களில் யாருக்கும் எந்தக் குறையும் வைக்கக்கூடாது. ஆனால் பெரிய விஷயங்கள் என்று வரும் போது நம் இலாப நஷ்டங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் எப்போதும் நிர்த்தாட்சணியமாக இருக்க வேண்டும், அதிகபட்ச லாபத்தை அடைவதிலேயே குறியாய் இருக்க வேண்டும். புரிகிறதா?”

 

மலைகேது அவன் தந்தையளவுக்குப் புத்திசாலியல்ல. சூட்சுமமும், தந்திரமும் அவரளவுக்கு அவனுக்குப் போதாது. இப்போது அவனுக்கு மெள்ளப் புரிந்தது.  அவர்கள் ஏதோ உதவி கேட்டு வந்திருக்கிறார்கள். அவன் தந்தை அதில் தாங்கள் ஏதாவது பெரிய லாபத்தை அடையலாம் என்று யோசித்து தான் இதைச் செய்கிறார்... அவன் மெல்லச் சொன்னான். “மன்னிக்க வேண்டும் தந்தையே. நான் இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை”.

 

எல்லாக் கோணங்களிலும் யோசிக்க வேண்டும் மகனே. யோசனையின் முடிவில் நமக்கு இலாபமான வழியில் செயல்பட வேண்டும். இதை என்றைக்கும் மறந்து விடாதே

 

சாணக்கியரையும், சந்திரகுப்தனையும் மறுபடியும் சந்திக்க பர்வதராஜன் வந்த போது மலைகேதுவும் உடனிருந்தான். அவனால் தந்தையைப் போல் வளையவும், குழையவும் முடியவில்லை என்றாலும் பழைய அலட்சியத்தைக் கைவிட்டு பணிவும் நட்பும் காட்டக் கற்றிருந்தான்.

 

பர்வதராஜன் கேட்டான். “தங்களுக்கு சௌகரியத்தில் எந்தக் குறையும் இருக்கவில்லையே?”

 

சாணக்கியர் சொன்னார். “தேவலோகத்தில் இந்திரனின் உபசரிப்பில் இருப்பது போல் உணர்ந்தோம் பர்வதராஜனே. விருந்தோம்பலில் நீ இந்திரனுக்கு இணையாகி விட்டாய். நன்றி சொல்ல எங்களிடம் வார்த்தைகள் இல்லை

 

பர்வதராஜன் தலைதாழ்த்தி கைகூப்பினான். “நன்றி ஆச்சாரியரே. நான் என் மகனிடம் உங்களிருவர் பெருமைகளைத் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். தனி மனிதர்களாக இருந்த நீங்கள் வாஹிக் பிரதேசத்தை ஆளுமளவு உயர்ந்தது மட்டுமல்லாமல் கேகயம் போன்ற ஒரு தேசத்துக்கு உதவுமளவு வலிமை பெற்றவர்களாக மாறியிருக்கும் வெற்றி வரலாற்றைச் சொன்னேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “எல்லாவற்றிற்கும் முதல் காரணம் இறையருளே. அந்த இறையருளை முறையாக சந்திரகுப்தன் பயன்படுத்திக் கொண்டது அடுத்த காரணம்

 

மேலோர் எப்போதும் தங்களை உயர்த்திக் கொள்வதில்லை என்பதற்கு இவரே ஒரு உதாரணம் மலைகேது. இவர் இந்தப் பெருமைகளில் தன் பங்கைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை பார்த்தாயா?”  என்று பர்வதராஜன் தன் மகனிடம் சொன்னான்.

 

சாணக்கியர் இந்தப் பெருமைகளில் காலத்தை வீணாக்குவதை விரும்ப மனம் இல்லாதவராகச் சொன்னார். “பெருமைக்குரியவன் நான் என்றால் என் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேசத்தின் அரசர்களாக இன்று இருந்திருக்க வேண்டும். அப்படியில்லையே. ஆனாலும் என்னை உயர்த்திப் பெருமையாகச் சொன்னதற்கு நன்றி பர்வதராஜனே. நாங்கள் இப்போது இங்கே வந்திருப்பது உன் உதவியை நாடி.”  

 

மலைகேது அவன் தந்தை சற்று முன்அந்த அந்தணர் ஒவ்வொரு கணத்தையும் கணக்குப் போட்டுக் கழிக்கக்கூடியவர்.” என்று சொன்னதற்கு உடனடி உதாரணத்தை அப்போது கவனித்தான். அவருடைய இடத்தில் இருந்திருந்தால் பெரும்பாலானவர்கள் தங்கள் பெருமைகளை மேலும் நீட்டிக்க விட்டிருப்பார்கள்....

  

  

(தொடரும்)

என்.கணேசன்  





1 comment:

  1. சாணக்கியருக்கு உதவுவதால் லாபம் பலமடங்கு கிடைக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை... அவர் இலக்கு பொருள் அல்ல., ஒன்றிணைந்த பாரதம்...

    ReplyDelete