Monday, September 30, 2024

யோகி 69


ஷ்ரவன் தற்போது மதகுருக்களால் எப்படி மக்கள் முட்டாள்களாக்கப் படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கட்டுரைகள் மிக சுவாரசியமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியவையாகவும் இருந்தன. ஒருவன் இறைவனுக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை, இறைவனுடைய பிரதிநிதியாகக் காட்டிக் கொள்ளும் மனிதனுக்குத் தர ஆரம்பிக்கும் போது ஒரு சைத்தானை உருவாக்கி விடுகிறான் என்பது தான் அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் சாராம்சமாக இருந்தது. இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமாகத் தான் இருந்தது.

 

தனியொரு மனிதன் கடவுளாகவோ, கடவுளுக்கு இணையாகவோ பூஜிக்கப்படும் போது, அவனுடைய தெய்வீகத் தன்மைகள் வளர்வதற்குப் பதிலாக அவனுடைய கர்வமே வளர்கிறது. “நான்என்னும் கர்வம் வளரும் இடத்தில், கடவுள் காணாமல் போவது மட்டுமல்ல, முடிவில் மனிதனுமே காணாமல் போகிறான். அதன் பின் மிஞ்சுவதும், வளர்வதும் சைத்தான் மட்டுமே, என்பதை அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்கும் போதும் ஷ்ரவனால் உணர முடிந்தது.

 

அவனுக்கு போலி மதகுருக்களைப் பற்றி சிவசங்கரன் மிக அழகாய்ச் சொன்னது நினைவுக்கு வந்தது. ”ஒருவன் எப்படி நடந்துக்கறாங்கறது வெளிப்படையாய் தெரியற உண்மை. அப்படி நடந்துக்கறவன் மெய்ஞானம் அடைஞ்சவனாய் இருக்க முடியுமான்னு தான் நீ உன்னைக் கேட்டுக்கணும். உண்மையைப் புரிஞ்சுக்கணும். அறுவடையப் பார்த்தா விதைச்சது என்னன்னு தெரிஞ்சுடாதா என்ன? ஆனா நம்ம சமூகத்துல இருக்கிற மரமண்டைகளுக்கு இந்த எளிமையான புரிதல் கூட கிடையாது. அவனவன் பேசற பேச்சைக் கேட்டும், போடற டிராமாவையும் பார்த்தும் மயங்கிடுவாங்க. அரசியல்னாலும் சரி, ஆன்மீகம்னாலும் சரி ஏமாறுறதுக்குன்னே தயாராயிருப்பாங்க…”   

 

அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. யாரையெல்லாம் தெய்வாம்சம் உள்ளவர்கள் என்று மக்கள் கொண்டாடுகிறார்களோ, அவர்களிடம், இறைவனே சிலாகிப்பதாய் எல்லா மதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிற கருணை, அன்பு, பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை, இரக்கம் எல்லாம் இருக்கிறதா, வார்த்தைகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் இவையெல்லாம் வெளிப்படுகிறதா என்று கவனிக்க யாருக்கும் பேரறிவு தேவையில்லை. உள்ளதை உள்ளபடியே பார்க்கும் சாதாரண அறிவு போதும். அந்த சாதாரண அறிவையும் பயன்படுத்த மறப்பதால் தான் மனிதர்கள் ஏமாறுகிறார்கள்.

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். அடுத்ததாய் அவன் யோகாலயத்தில் நுழைந்து போடப் போகும் வேஷம் இப்படி ஏமாறும் ஒரு கதாபாத்திரம் தான். பிரம்மானந்தாவின் அதி தீவிர பக்தனாய் தான் ஷ்ரவன் அவதாரம் எடுக்கப் போகிறான். அடுத்தபடியாக, துறவியாய் அங்கே போகும் போது இந்த அவதாரம் அவனுக்கு மிக உபயோகமாய் இருக்கும்.

 

பொதுவாக இது போன்ற அடிமைகள் எப்படி நடந்து கொள்வார்கள், பேசுவார்கள் என்பதை யோகாலயத்தின் இணையப் பக்கத்தில் பெருமையாக வைத்திருக்கும் பக்தர்களின் வீடியோக்களைப் பார்த்தே ஒரு முடிவுக்கு வந்திருந்தான். உலகைப் படைத்து அதைப் பரிபாலித்து வருவதே யோகி பிரம்மானந்தா தான் என்று மட்டும் தான் அவருடைய தீவிர பக்தர்கள் சொல்லவில்லை. அதற்கு சற்று கீழே உள்ளதை எல்லாம் மெய்சிலிர்க்கச் சொல்லியிருந்தார்கள். சாட்சாத் சிவனிடமிருந்தே நேரடியாக ஞான அருள் பெற்ற சித்தர், யோகி,  அறிவின் ஊற்று, கருணைக்கடல், ஜீனியஸ், இத்தியாதி, இத்தியாதி... இப்படிப் பேசுவதற்குக் கஷ்டமில்லை. மூளையைக் கழற்றி வைத்து விட்டுப் பேசுவது சுலபம் தான்.

 

பரசுராமன் சொல்லித்தந்த உபதேச மந்திரத்தை ஷ்ரவன் தினமும் சிரத்தையுடன் ஜபித்து வருகிறான். அதை இதுவரை ஒருநாளும் அவன் தவற விட்டதில்லை. இன்றும் காலை 1008 முறை ஜபித்து முடித்திருக்கிறான்...

 

யோகாலயத்தில் அடுத்த நிலைப் பயிற்சிகளுக்காக அவன் போவதற்கு இன்னும் மூன்றே நாட்கள் தான் உள்ளன. இந்த வழக்கில் கவனிக்காமல் விட்டது ஏதாவது இருக்கிறதா என்று ஷ்ரவன் யோசித்தான். பல நேரங்களில் ஒரே கோணத்தில் ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்து விட்டு மற்ற முக்கிய கோணங்களில் யோசிக்கத் தவற விடுவதை அனைவரும் செய்வதுண்டு. அப்படி ஏதாவது தவற விட்டிருக்கிறோமா என்று அவன் சிந்தித்தான். இது வரை யோகாலயம் மீது உள்ள புகார்கள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தையும் அவன் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறான்.  அவன் கவனத்துக்கு வராத முக்கியத் தகவல் ஏதாவது இருக்க வாய்ப்புண்டா என்று யோசித்தான்.

 

பின்பு, சைத்ராவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மொட்டைக் கடிதம் வந்த நாளுக்கு இரண்டு மாதங்கள் முன்பிருந்தே யோகாலயம் பற்றிப் பத்திரிக்கைச் செய்தி என்ன இருந்தாலும் அதை ஒரு முறை பார்ப்பது என்று ஷ்ரவன் முடிவுக்கு வந்து இணையத்தில் தேடிப்பார்க்க ஆரம்பித்தான்.  

 

மொட்டைக் கடிதம் வந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பு ஒரு பத்திரிக்கையில் வந்த சிறிய செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது. சேலத்திலிருந்து ஒரு தொழிலதிபர் யோகாலயம் செல்வதாகச் சொல்லி வீட்டை விட்டுக் கிளம்பியவர் பின் திரும்பி வரவில்லை என்ற ஒரு செய்தி ஒரே ஒரு பத்திரிக்கையில் மட்டும் வந்திருந்தது. ஷ்ரவன் அதைக் கவனத்துடன் படித்தான்.

 

சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரமோகன் (வயது 48). அவர் சேலத்தில் சந்திரகலாமோகன் ஸ்டீல்ஸ் என்ற பெயரில் இரும்புக் கம்பிகள் வியாபாரம் செய்து வருகின்றார். இந்த மாதம் எட்டாம் தேதி அவர் சென்னையில் இருக்கும் யோகாலயம் செல்வதாய்ச் சொல்லி விட்டு வீட்டை விட்டுக் கிளம்பியதாகத் தெரிகிறது. சென்றவர் பின் தன் வீட்டாரைத் தொடர்பு கொள்ளவில்லை. அவருடைய கைபேசியும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. மூன்று நாட்களாகியும் அவர் திரும்பி வரவில்லை, அவர் கைபேசியும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது என்பதால் அவர் மனைவி சந்திரகலா போலீசில் புகார் அளித்துள்ளார். காணாமல் போன அவரைப் போலீஸார் தேடி வருகிறார்கள்.”

 

அதன் பின் அது குறித்த செய்தி எந்தப் பத்திரிக்கையிலும் இல்லை. ஷ்ரவன்சந்திரகலாமோகன் ஸ்டீல்ஸ், சேலம்என்று இணையத்தில் தேடிய போது அதன் விலாசமும், அலைபேசி எண்ணும் அவனுக்குக் கிடைத்தன.

 

அந்த அலைபேசி எண்ணுக்கு அவன் போன் செய்தான். போனை எடுத்த ஒரு பெண்மணி பலவீனமான குரலில்ஹலோஎன்றாள்.

 

ஷ்ரவன் சொன்னான். “சந்திரமோகன் இருக்காருங்களா?”

 

அரை நிமிடம் எந்த எதிர்வினையும் இருக்கவில்லை. பின் அந்தப் பெண்மணி அதே பலவீனமான குரலில் கேட்டாள். “நீங்க?”

 

நான் சென்னையில இருந்து பார்த்தசாரதி பேசறேன்மா. ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி அவர் கிட்ட இருந்து ஈரோட்டில் இருக்கற எங்க ஃபேக்டரி யூனிட்டுக்காக இரும்புக் கம்பிகள் வாங்கியிருந்தேன். இப்ப மறுபடி ஒரு லோடு தேவைப்படுது. சார் இருந்தா போனைக் குடுங்களேன்...”

 

அவர்... அவர்... காணாமல் போயிட்டாருங்க. சென்னைக்குப் போறதா சொல்லி கிளம்பி போனவர் பிறகு என்ன ஆனார், எங்கே போனார்னு தெரியலைங்க

 

ஷ்ரவன் அதிர்ச்சியைக் காட்டினான். “என்னம்மா சொல்றீங்க? சென்னைல எங்கே போகறதா சொல்லிட்டு வந்தார்? அங்கே கேட்டீங்களா?”

 

மறுபடி ஒரு நிமிடம் கனத்த மௌனம். பின் அந்தப் பெண்மணி தொடர்ந்தாள். “தொழில் சம்பந்தமா சிலரை பார்க்கணும்னு பொதுவாய் தான் சொல்லிட்டுப் போனாருங்க. அவர் மொபைலும் மறுநாளில் இருந்து ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்குங்க. நாங்களும் தெரிஞ்ச எல்லார் கிட்டயும் கேட்டுட்டோம். அங்கே எல்லாம் அவர் வரலைன்னு அவங்க சொல்லிட்டாங்க.”

 

போலீஸுல புகார் கொடுத்திருக்கீங்களாம்மா?”

 

குடுத்திருக்கோம். அவங்களாலயும் கண்டுபிடிக்க முடியலைங்க.” சொல்லும் போதே அந்தப் பெண்மணியின் குரல் கம்மியது.

 

நானும் இப்ப சென்னைல தான் இருக்கேன். உங்களுக்கு இங்கே எங்கேயாவது இருப்பார்னு சந்தேகம் இருந்தால் சொல்லுங்கம்மா. நான் போய்ப் பார்த்து சொல்றேன்.”

 

எல்லாம் பார்த்தாச்சுங்க. நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி.”

 

அந்தப் பெண்மணி விம்மலுடன் இணைப்பைத் துண்டித்தாள். அவள் வாயிலிருந்துயோகாலயம்என்ற வார்த்தையே இன்று வரவில்லை.  போலீஸில் புகார் கொடுக்கையில் யோகாலயம் செல்வதாய் சொல்லிவிட்டு என் கணவர் கிளம்பினார் என்று புகார் கொடுத்தவள், இப்போது ஏன் அந்தப் பெயரைச் சொல்வதைக் கூடத் தவிர்க்கிறாள். “தொழில் சம்பந்தமா சிலரை பார்க்கணும்னு பொதுவாய் தான் சொல்லிட்டுப் போனாருங்க.” என்று ஏன் சொல்கிறாள்?

 

ஷ்ரவனுக்கு பலத்த சந்தேகம் எழுந்தது.


(தொடரும்)

என்.கணேசன்





 

4 comments:

  1. It is interesting now. Thank you sir.

    ReplyDelete
  2. அது யோகாலையமா? அல்லது கிரிமினல் ஆலையமா?? என்று தெரியவில்லை... யோகாவை தவிர எல்லாமே நடக்கிறது....

    ReplyDelete
  3. How to read the stories from the beginning I am your great fan of your writing. Please allow me to follow your blog

    ReplyDelete