Thursday, September 19, 2024

சாணக்கியன் 127

ற்றன் அங்கிருந்து நகர்ந்த பிறகு சின்ஹரன் இடையிடையே பத்ரசாலைக் கூர்ந்து கவனித்தான். பத்ரசால் ஆட்டத்தில் மூழ்கியிருந்தான். வெற்றியின் களிப்பு அவன் முகத்தில் தெரிந்தது. அவன் வெற்றிமுகமாக முன்னேறிய போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆரவாரம் செய்து ஊக்குவித்தபடியே சின்ஹரனும் அவனை ஊக்குவித்தான். அப்படி அவன் ஊக்குவித்த போது பத்ரசால் திரும்பி அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். அறிமுகம் இல்லாமலேயே ஒரு நட்பின் இழை அவர்களுக்குள் உருவாகியது. 

 

பத்ரசாலுக்கு அங்கு வரும் போது அந்த நாள் வெற்றிகரமாக இருக்கும் என்று தோன்றியது உண்மையாகவே பலித்ததில் பெருமகிழ்ச்சி. ‘எல்லா நாட்களும் இப்படித் தானே தோன்றுகிறது?’ என்று ஏளனமாகக் குரல் கொடுத்த உள்மனதிடம் ‘நான் நினைத்தது பலித்து விட்டது பார்த்தாயா?’ என்று பெருமையுடன் பத்ரசால் கேட்டுக் கொண்டான். உண்மையில் அவன் அதிர்ஷ்டமா, இல்லை அருகில் அமர்ந்திருக்கும்  வணிகனின் அதிர்ஷ்டம் அவனைத் தொற்றிக் கொண்டதா என்ற கேள்வியும் அவன் மனதில் எழாமல் இல்லை.

 

அந்த ஆட்டம் முடிந்தது. பத்ரசால் நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல தொகையை வென்றிருக்கிறான். அவனுக்கு மற்றவர்களுடன் சேர்ந்து தானும் வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு சின்ஹரன் எழுந்து அங்கிருந்து கிளம்பினான். அவன் சூதாட்ட விடுதியிலிருந்து, தான் தங்கியிருந்த பயணியர் விடுதிக்குச் செல்ல ஆரம்பித்தவுடனேயே அவனை வேறொரு ஒற்றன் பின் தொடர ஆரம்பித்ததை சின்ஹரன் கவனித்தான். அவனுடைய அனுபவத்தில் குறைந்த பட்சம் ஒரிரண்டு நாட்களாவது அவனைக் கூர்ந்து கண்காணிப்பார்கள். அந்தக் கண்காணிப்பில் அவர்களுக்கு அவன் மீது ஏதாவது சந்தேகம் எழுந்தால் பின் தீவிரமாகத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி சந்தேகம் எழா விட்டால் பின் முக்கிய இடங்களுக்கு அவன் செல்லும் போதும் முக்கிய மனிதர்களிடம் அவன் பழகும் போதும் மட்டும் கவனிப்பார்கள். இந்த வழக்கம் எல்லா இடங்களிலுமே இருந்து வருவதால் சின்ஹரன் அலட்டிக் கொள்ளவில்லை. விடுதிக்குப் போய் நிம்மதியாக அவன் உறங்க ஆரம்பித்தான்.

 

பத்ரசால் இரண்டாவது ஆட்டத்தில் சிறிய தொகையை இழந்தான். முன்பு அந்த வணிகன் அருகிலிருக்கும் ராசியால் அவன் வென்றதாகச் சொன்ன ஆள் “என்ன சேனாதிபதி அந்த வணிகரோடு அந்த ராசியும் போய் விட்டது போல் இருக்கிறதே?” என்றான். பத்ரசால் சிறிதாய் புன்னகை செய்தான். ஆனால் அவன் மூன்றாவது ஆட்டத்திற்கு அங்கு தங்கவில்லை. இன்று சிறிதாவது கூடுதல் பணத்தோடு தான் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தான்.

 

அவன் தொடர்ந்து ஆட மறுத்து எழுந்த போது ஆட்டக்காரர்களில் ஒருவன் “சேனாதிபதியும் அந்த வணிகரைப் போலவே விவரமான ஆளாக மாறி விட்டார்.” என்று சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். பத்ரசால் விரிந்த புன்னகையுடன் நகர்ந்து இரண்டு கோப்பை மதுவருந்தி விட்டு விடுதியிலிருந்து வெளியேறினான். இதே போல் கூடுதல் பணத்தோடு தினமும் வீடு திரும்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

 

பாடலிபுத்திரத்திற்கு குதிரைகள், மாடுகள் விற்க வாங்க வருபவர்கள் அவற்றைச் சந்தைப் பகுதியில் தான் நிறுத்தியிருப்பார்கள். சின்ஹரனும் அப்படித் தான் அவன் கொண்டு வந்திருந்த குதிரைகளை அங்கே நிறுத்தியிருந்தான். அவன் விடுதியிலிருந்து அங்கே சென்ற போதும் நேற்றைய ஒற்றன் அவனைப் பின் தொடந்து வந்தான்.

 

சின்ஹரன் சந்தைப் பகுதியில் நின்று வாடிக்கையாளர்களுடன் பேசுவதையும், விற்பனை செய்வதையும், மற்ற விற்பனையாளர்களுடன் வணிகத்தில் ஈடுபவதையும் கூர்ந்து கவனித்து அவன் உண்மையிலேயே வணிகன் தான் என்று ஒற்றன் திருப்தியடைந்தான். பின் ஒற்றன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

அன்றிரவு சின்ஹரன் சூதாட்ட விடுதியைச் சென்றடையும் வரை ஒற்றர்கள் யாரும் அவனைப் பின் தொடரவில்லை. அவன் சென்றடைந்த போது ஏற்கெனவே பத்ரசால் அங்கு வந்து ஆடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் தோற்றுக் கொண்டிருந்தான். அதனால் அவன் முகம் களையிழந்திருப்பதை சின்ஹரன் கவனித்தான். சின்ஹரன் அவனுக்கு எதிர்ப்புறமாக அமர்ந்து கொண்டிருந்தான். அவனைச் சற்று நேரம் கழித்து தான் பத்ரசால் கவனித்தான். அவன் அங்கு அமர்வதற்குப் பதிலாகத் தன் அருகே வந்தமர்ந்திருந்தால் வெற்றிமுகமாகத் திரும்பியிருக்கலாமோ என்ற சந்தேகம் பத்ரசாலுக்கு வந்தது. சிறிது நேரத்தில் அந்த ஆட்டம் முடிந்தது. நேற்று கூடுதலாகச் சம்பாதித்திருந்ததை இந்த ஆட்டத்தில் பத்ரசால் இழந்திருந்தான்.

 

அடுத்த ஆட்டத்தில் சின்ஹரனும் இணைந்து கொண்டான். நேற்று அவனைக் கவனித்திருந்தவர்கள் நட்புடன் அவனை வரவேற்றார்கள். பத்ரசால் அவனைப் புன்னகையுடன் அங்கீகரித்தான். வேறொரு ஒற்றன் அங்கு வேடிக்கை பார்த்தபடி நின்றதைக் கவனித்த சின்ஹரன் அனைவருக்கும் தந்த புன்னகையையே பத்ரசாலுக்கும் தந்தான்.  ஆட்டம் தொடர்ந்தது.

 

இந்த ஆட்டத்தில் சின்ஹரன் தோற்றான். பத்ரசால் வென்றான். முந்தின நாள் அவர்களுடன் விளையாடிய இடிச்சிரிப்பு மனிதன் இன்றும் அவர்களுடன் ஆடியிருந்தான். அவனிடம் சின்ஹரன் சொன்னான். “நான் நேற்றே சொன்னேன் அல்லவா நண்பரா? சூதாட்டத்தில் புதியவர்களுக்கு முதல் நாள் கிடைக்கும் அதிர்ஷ்டம் மறுநாள் கிடைப்பதில்லை. இன்று தோற்று விட்டேன் பார்த்தீர்களா?”

 

“ஆனால் இன்று இழந்ததையும் விட அதிகமாக நீங்கள் நேற்றே சம்பாதித்து விட்டீர்கள்.” என்று நினைவுபடுத்திய அந்த ஆட்டக்காரன் இன்றும் இடிச்சிரிப்பு சிரித்தான்.

 

இன்னொரு ஆட்டக்காரன் சொன்னான். “சேனாதிபதி தான் நேற்றும் வென்றார். இன்றும் வென்றிருக்கிறார்”

 

பத்ரசால் சிரித்துக் கொண்டே சொன்னான். “நான் நேற்றும் ஒரு முறை தோற்றிருக்கிறேன். இன்றும் அப்படியே ஒரு முறை தோற்றிருக்கிறேன். அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை”

 

இன்னொரு ஆட்டக்காரன் சொன்னான். “நேற்றும் இலாபம் தான் அதிகம். இன்றும் இலாபம் தான் அதிகம். நீங்களும் அதைப் பற்றிப் பேசவில்லை பார்த்தீர்களா?”

 

அனைவரும் சிரிக்க சின்ஹரனும் சிரித்தபடியே எழுந்தான். “சரி நண்பர்களே. நாளை மீண்டும் சந்திப்போம். மதுவருந்தி விட்டுச் செல்கிறேன்”

 

மூன்றாவது ஆட்டம் ஆரம்பமாகியது. பத்ரசால் சின்ஹரன் மதுவருந்தும் பகுதிக்குச் செல்வதைப் பார்த்தபடியே தானும் எழுந்தான். மூன்றாவது ஆட்டத்தில் மீண்டும் பணத்தை இழந்து விடுவாய் என்று அவன் உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. அதனால் அவனும் விளையாடாமல் எழுந்து மதுவருந்தும் பகுதிக்குச் சென்றான்.

 

சின்ஹரன் அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க பத்ரசாலும் நட்புடன் புன்னகைத்தபடியே அவனுக்கு எதிரே உட்கார்ந்தான். ”நேற்றே உங்களைப் பார்த்திருந்தாலும் அறிமுகமாகவில்லை. நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் நண்பரே?”

 

சின்ஹரன் புன்னகையுடன் சொன்னான். “நான் சிந்துப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். ஆனால் இப்போது வேறு பிரதேசங்களில் இருப்பது தான் அதிகம். குதிரை வாணிபம் செய்கிறேன். என் பெயர் கார்த்திகேயன்”

 

“நான் பத்ரசால். மகத சேனாதிபதி” என்று பத்ரசால் சுருக்கமாகச் சொன்னான்.

 

சின்ஹரன் முகத்தில் வியப்பு காட்டிச் சொன்னான். “நான் அவர்கள் உங்களைச் சேனாதிபதி என்று விளையாட்டாக அழைக்கிறார்கள் என்று நினைத்து விட்டேன். உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்தித்து உரையாட முடிந்தது  எனக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது மகத சேனாதிபதி அவர்களே”

 

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சற்று முன் வேடிக்கை பார்க்கும் ஆட்களுடன் நின்றிருந்த ஒற்றன், அவர்கள் பேச்சு காதில் விழும் தொலைவில், மதுவருந்த உட்கார்ந்து கொண்டதை சின்ஹரன் ஓரக் கண்களால் கவனித்தான்.

 

பத்ரசால் கேட்டான். “என்னைப் பற்றிக் கேள்விப்பட்டதாய் சொன்னீர்களே அது நல்ல விதமாகத் தானே?”

 

சின்ஹரன் வாய்விட்டுச் சிரித்தபடி ”ஆமாம்” என்று சொன்னான். மதுவருந்தியபடி இருவரும் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். சின்ஹரன் தன் பயண அனுபவங்களைச் சுவாரசியமாகச் சொன்னான். நேரம் போவது தெரியாமல் பத்ரசால் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

ஒரு கட்டத்தில் ஒற்றன் அங்கிருந்து சென்று விட்டான். இதுவரை பார்த்ததிலும், கேட்டதிலும் அந்தப் புதிய வணிகனைப் பற்றிச் சந்தேகப்பட ஏதுமில்லை.

 

அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த சின்ஹரன் மெல்ல சுற்றிலும் பார்த்தான். அனைவரும் சற்றுத் தொலைவில் மதுவருந்தியபடி அவரவர் உலகில் இருந்தார்கள். பத்ரசாலும் மது உள்ளே சென்றதால் இறுக்கம் தளர்ந்திருந்தான்.

 

சின்ஹரன் மெல்லச் சொன்னான். “உங்களைப் பற்றி மாவீரர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் போர்க்கலையில் மட்டுமல்லாமல் இந்த சூதாட்டக் கலையிலும்  சிறந்த நிபுணர் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்”

 

(தொடரும்)

என்.கணேசன்



1 comment:

  1. சின்ஹரன் என்ன செய்யப் போகிறார்....? என்பது இப்போதும் பிடிபடவில்லை...அருமை

    ReplyDelete