Thursday, August 22, 2024

சாணக்கியன் 123

 

ன் முன் வந்து நின்ற ஒற்றனிடம் என்ன செய்தி என்று ராக்‌ஷசர் கேட்டார்.

 

“சந்திரகுப்தன் தற்போது குதிரைகள், யானைகள், ஆயுதங்கள் என்று வாங்கித் தன் படைபலத்தை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறான் பிரபு. அதுவும் சாதாரண அளவில் அல்ல. மிக அதிக அளவில்”

 

ஒற்றன் ஒரு செய்தியாகச் சொல்கிறான் என்றாலே அது அதிக அளவில் இருக்கிறது என்று பொருள். ஏனென்றால் ஒவ்வொரு தேசமும் இப்படி குதிரைகள், யானைகள், ஆயுதங்கள் வாங்கிக் கொண்டிருப்பது சாதாரண விஷயமே. குதிரைகள், யானைகள் மூப்படைவதும், பயன்படுத்த முடியாத அளவுக்குப் பலவீனமடைவதும், இறப்பதும் இயற்கையாக நிகழக்கூடியதே. அதே போல் ஆயுதங்கள் பழுதடைவதும், உடைவதும் சாதாரணமாக நிகழக் கூடியதே. அதனால் புதியனவற்றை யாரும் வாங்கித் தான் ஆக வேண்டும். ஆனால் ஒற்றன் அதை மிக அதிக அளவில் என்றால் அது விபரீத அளவிலாகவே இருக்கின்றது என்று பொருள்.

 

ராக்‌ஷசர் கேட்டார். “அதிக அளவில் என்றால் அதற்கு நிறைய செலவாகுமே. அந்த அளவு அவன் செலவு செய்யத் தேவையான நிதி அவனிடம் இருக்கிறதா?”

 

“அவன் செலவு செய்யும் வேகத்தைப் பார்த்தால் அவனுக்கு எங்கேயாவது புதையல் கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது பிரபு. இதையெல்லாம் அவன் யவன சத்ரப் யூடெமஸைக் கொன்று வென்று வந்த பின் தான் செய்கிறான் என்பதைக் கவனிக்கும் போது அவனுக்கு அங்கு ஏதாவது புதையல் கிடைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது”

 

ராக்‌ஷசருக்கு அந்தத் தகவல் கசந்தது.  விஷ்ணுகுப்தர், சந்திரகுப்தன் இருவர் பற்றியும் அவர் சில காலமாகக் கேள்விப்படும் தகவல்கள் அவர்களது வெற்றியையும், சுபிட்சத்தையும், அதிர்ஷ்டத்தைப் பற்றியதாகவே இருக்கின்றன. இன்பமும், துன்பமும், வெற்றியும், தோல்வியும் கலந்து கலந்து தான் வரும் என்று அனுபவஸ்தர்கள் சொல்வது அவர்கள் இருவருக்கும் மட்டும் பொருந்தாதோ? யோசிக்கையில் புதையல் குறித்து ஒற்றன் சொல்வது சரியாக இருக்கலாம் என்றே அவருக்கும் தோன்றியது. அலெக்ஸாண்டர் தொடர்ந்து வெற்றிகளை அடைந்து கொண்டே வந்ததால் வென்ற இடங்களில் இருந்து எல்லாம் பெரும் நிதியைக் கைப்பற்றிக் கொண்டே வந்திருப்பான். அதை அவன் எங்காவது புதைத்து வைத்திருக்கலாம். யூடெமஸைக் கொல்லச் சென்ற சமயத்தில் சந்திரகுப்தன் அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம்.

 

துரும்பு என்று தனநந்தன் துச்சமாக எண்ணிய விஷ்ணுகுப்தர் தூணாக வளர்ந்து மேலும் உயர்ந்து கொண்டே போவது தங்களுக்கு நல்லதுக்கல்ல என்பது ராக்‌ஷசருக்குப் புரிந்தது. ஒரு நாள் தூணிலிருந்து நரசிம்மம் வெளியே வந்து விடுமோ என்ற அச்சம் அவர் மனதில் எழுந்தது. தனநந்தனிடம் சொன்னால் அவன் இகழ்ச்சியாகச் சிரிப்பான். ஆனால் விஷ்ணுகுப்தர் விஷயத்தில் அவன் ஆகமுடியாதது என்று இகழ்ச்சியாக எண்ணிச் சிரித்த எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கின்றன. 


ராக்‌ஷசர் கேட்டார். “படைபலத்தைப் பெருக்கும் சந்திரகுப்தனின் அடுத்த இலக்கு என்ன என்று ஏதாவது தகவல் இருக்கிறதா?”

 

“இதுவரை இல்லை பிரபு.”

 

“அவன் ஆளும் பகுதிகளில் அவனுக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?”

 

”அவன் ஆளும் பகுதிகளில் மக்களின் பேராதரவு அவனுக்கு இருக்கிறது பிரபு. அவன் மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறான். வரிச்சுமையும் சுற்றியுள்ள தேசங்களில் இருப்பதை விடக் குறைவாகவே இருக்கின்றது. அவன் மக்களை அடிக்கடி சந்திக்கிறான். அவர்கள் தெரிவிக்கும் குறையை நீக்க விரைவாக நடவடிக்கை எடுக்கிறான். அதனால் அவனுடைய குடிமக்களாக இருப்பதை தங்கள் பாக்கியமாக மக்கள் நினைப்பதைத் தெளிவாகவே பார்க்க முடிகிறது பிரபு.”

 

மகதத்தில் நிலவுவதற்கு எதிர்மாறான நிலை அது. ராக்‌ஷசர் ஒற்றனிடம் கேட்டார். “வேறெதாவது தகவல் இருக்கிறதா?”

 

“இல்லை பிரபு”

 

“இனியும் தொடர்ந்து அவர்கள் மீது உங்கள் கவனம் இருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நமக்கு உடனுக்குடன் தெரிய வேண்டும்.” என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு ராக்‌ஷசர் பெருமூச்சு விட்டபடி ஆசனத்தில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார்.    


எத்தனையோ முறை அவர் தனநந்தனிடம் மக்களுடன் நல்லுறவில் இருக்கும் அவசியத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் அவனுக்கு குடிமக்களிடம் பேசுவதும், பழகுவதும் கசப்பான செயலாகவே இருந்தது. ”அதை விட்டு வேறு எதாவது பேசுங்கள்” என்று அவன் அவருக்கு வெளிப்படையாகவே அறிவுரை சொல்லியிருக்கிறான். ”அவர்களது நலனைக் கவனித்துக் கொள்ளத் தான் நீங்கள் இருக்கிறீர்கள், மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் இருக்கிறார்களே” என்று கேட்டிருக்கிறான். அவனுக்கு குடிமக்களிடம் அதிகம் பழகுவது அவசியமில்லாததாகவும் அகௌரவமாகவும் தோன்றுகிறது என்பது அவருக்குப் புரிந்தது.

 

அவரும், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் கூடுமான அளவு நல்ல விதமாகவே நிர்வாகம் செய்தார்கள் என்றாலும் கூட தனநந்தனின் வரிவிதிப்பு கடுமையாக இருந்ததை அவர்களாலும் தளர்த்த முடியவில்லை. மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் அவனிடம் கருத்தைத் தெரிவிக்கும் அளவு நெருங்க முடிந்ததில்லை. அவர் ஆரம்பத்தில் இத்தனை வரி அவசியம் இல்லை என்று அவனுக்குப் புரிய வைக்க முற்பட்ட போது அவன் ”வரிவிதிப்பு பற்றி மட்டும் தயவு செய்து பேசாதீர்கள்” என்று சொல்லி வாயடைத்து விட்டான்.

 

மற்றபடி அவரிடம் மிகுந்த அன்பையும், மரியாதையையும் அவன் காட்டினான். அவருடைய தனிப்பட்ட தேவைகளைத் தீர்ப்பதில் அவன் என்றும் தயக்கம் காட்டியதில்லை. அவனுக்குப் பிடிக்காத சில சம்பிரதாயச் செயல்களைச் செய்ய அவர் வற்புறுத்தினாலும் அவன் சலிப்புடனாவது அதை ஏற்றுக் கொண்டு செய்வான். அவர்கள் நிர்வாக விஷயத்தில் அவன் தலையிட்டதில்லை. அவர் எடுக்கும் நிர்வாக முடிவுகளை கேள்விகள் எதுவும் கேட்காமல் அவன் ஏற்றுக் கொள்வான். அவனாக ஆர்வம் காட்டிய விஷயம் நிதி ஒன்று தான்.

 

அவர் பதவியேற்ற ஆரம்ப காலத்தில் நிதி, கஜானா இருப்புக் கணக்குகளைச் சரிபார்க்க முனைந்த போது ”அதை மட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டிருந்தான். தனநந்தன் மற்ற விஷயங்களில் காட்டும் அலட்சியத்தை என்றுமே நிதி விஷயத்தில் காட்டியதில்லை. கருவூல அதிகாரி அவனிடம் காட்டும் கணக்கில் சிறு தவறு இருந்தாலும் அவன் கண்டுபிடித்து விடுவான். அந்த விஷயத்தில் அவன் கறாராக இருப்பதையும் கருவூல அதிகாரி அவனிடம் திண்டாடுவதையும் அவர் பல முறை கவனித்திருக்கிறார். ஆனால் கருவூலத்திற்குச் சென்ற நிதியின் ஒரு பகுதி சில கால இடைவெளிகளில் இடம்பெயர்ந்தது. அது எங்கே செல்கிறது என்பது கருவூல அதிகாரிக்குக் கூடத் தெரியவில்லை. வயதான அந்தக் கருவூல அதிகாரிக்கு அது குறித்து அனுமானங்கள் இருக்கலாம் என்று ராக்‌ஷசருக்குப் பல முறை தோன்றி இருக்கிறது. ஆனால் அந்த முதியவர் அதைக் குறித்து என்றுமே வாய் திறந்து பேசியதில்லை. யாராவது அவரிடம் மறைமுகமாகப் பேச முற்பட்டாலும் அவர் முகத்தில் கிலி பரவுவதை ராக்‌ஷசர் கவனித்திருக்கிறார்.

 

மற்ற எல்லா விஷயங்களிலும் தனக்கு தனநந்தன் கௌரவத்தையும், மரியாதையையும் கொடுத்து வந்ததால் இந்த ஓரிரு பிரச்சினைகள் தரும் விஷயங்களில் தலையிடுவதை ராக்‌ஷசரும் நிறுத்தியிருந்தார். ஆனால் சில சமயங்களில் அந்த நிதி என்ன ஆகிறது, எங்கே போகிறது என்ற கேள்வி ரகசியமாக அவர் மனதில் எழும். அதற்கு அவருக்கு பதில் கிடைத்ததில்லை.

 

அவன் குடும்பத்தினரே கூட அவனிடமிருந்து அதிக நிதி பெற்று விட முடிந்ததில்லை. மூத்த மனைவியும், மூத்த இளவரசன் சுகேஷும் செலவினங்களில் ஒரு எல்லைக்குள்ளேயே இருந்ததால் அவர்களுக்கு நிதிப்பிரச்னை இருக்கவில்லை. ஆனால் தனநந்தனின் இரண்டாம் மனைவியும், அவர்கள் மகன் சுதானுவும் ஆடம்பரப்பிரியர்களாய் இருந்தார்கள். அவர்களுக்குக் கூட தனநந்தன் தாராளமாக நிதி ஒதுக்கியதில்லை.  சுதானு அது குறித்து அடிக்கடி தந்தையுடன் வாக்குவாதம் செய்வதை ராக்‌ஷசர் கேட்டிருக்கிறார். எத்தனை திறம்பட சுதானு வாக்குவாதம் செய்தாலும் ஒதுக்கியதை விட அதிக நிதியைத் தந்தையிடமிருந்து பெற முடிந்ததில்லை….  


எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ராக்‌ஷசர் எழுந்தார். தனநந்தனிடம் அவன் எதிரிகளுக்குப் புதையல் கிடைத்திருப்பதையும், அவர்கள் அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி தங்கள் படைவலிமையை அதிகரித்து வருவதையும் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று அவருக்குத் தோன்றியது.  

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. ராக்‌ஷசர்... "அவர்களுக்கு புதையல் கிடைத்திருக்கிறது" என்று தனநந்தனிடம் சொல்லும் போது... தனநந்தன் 'அது தன் புதையல் தான்' என்பதை கண்டுபிடித்து விடுவான்... என்று நினைக்கிறேன்....

    ReplyDelete