Thursday, August 1, 2024

சாணக்கியன் 120

 

பாடலிபுத்திர நகரவாயிலைக் கடந்த பிறகு பெருமளவு நிம்மதியை சாரங்கராவும், விஜயனும் உணர்ந்தார்கள் என்றாலும் அது முழு நிம்மதியாக இருக்கவில்லை. பெருஞ்செல்வத்தைக் கொண்டு செல்வதில் அந்தக் காலத்திலும் கூட வழியில் நிறைய ஆபத்துகள் இருந்தன. வழிப்பறிக் கொள்ளைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. அதனால் வணிகர்களும், மற்ற பயணிகளும் மிக எச்சரிக்கையாகவே பயணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் பெரும்பாலும் சேர்ந்தே பயணித்தார்கள். இரவில் தங்குமிடங்களிலும் பாதுகாப்பான இடங்களையும், பாதுகாப்பு குறைவான இடங்களையும் தங்கள் அனுபவங்களால் அறிந்து வைத்திருந்து பாதுகாப்பான இடங்களிலேயே தங்கினார்கள். வணிகர்களாகவே சில காலமாகப் போய் வந்து கொண்டிருப்பதால் விஜயனும், சாரங்கராவும் போகும் வழியிலுள்ள இடங்களையும், மனிதர்களையும் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

 

பெருஞ்செல்வந்தர்களும், அரசர்களும் செல்வத்தைக் கொண்டு செல்ல வேண்டிவரும் போது செல்வத்தின் அளவிற்கேற்ப ஆயுதம் ஏந்திய வீரர்கள், படைகளோடு தான் கொண்டு சென்றார்கள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. பெருஞ்செல்வத்தைக் கொண்டு செல்கிறார்கள் என்று தெரிய வந்தால் கொள்ளையர்கள் மட்டுமல்லாமல் சில சிறு குறும்பகுதிகளை ஆள்பவர்களும் அந்தச் செல்வத்தை அபகரிக்க முனைந்தார்கள். அவர்களும் படையுடன் வருவார்கள். ஆனால் அவர்கள் வழக்கமாகத் தங்கள் பகுதிகளைக் கடக்கும் வணிகர்களிடம் தங்கள் கைவரிசைகளைக் காட்டுவதில்லை. வரி வசூலிப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். அதனால் தான் தன் மாணவர்கள் வணிகர்களாகவே தனநந்தனின் செல்வத்தைக் கொண்டு வருவது அதிக பாதுகாப்பானது என்ற முடிவுக்கு சாணக்கியர் வந்திருந்தார். அந்தந்த பகுதிகளில் வழக்கமான சுங்கவரி கட்டிப் பயணிப்பது அதிக பிரச்சினை இல்லாததாக இருக்கும் என்று அவர் கணித்திருந்தார்.

 

ஆனாலும் யாத்திரீகர்களாகவும், வணிகர்களாகவும், தனிவீரர்களாகவும். புரட்சிப்படைவீரர்கள் பாடலிபுத்திரத்திற்கு அருகில் இருக்கும் சிறு கிராமங்கள், நகரங்களில் முன்பே காத்திருந்து அவர்கள் வந்தவுடன் சேர்ந்து கொண்டார்கள். அப்படிச் சேர்ந்து கொண்டவர்களில் சிலர் விஜயனையும், சாரங்கராவையும் அறிந்தவர்கள் போலக் காட்டிக் கொண்டு, நட்போடு நெருங்கி வந்து பாதுகாவலாக இருந்தார்கள். ஆனால் பலர் அறியாத அன்னியர்கள் போலவே முன்னாலும், பின்னாலும் இருந்து இரகசியப் பாதுகாவலர்களாக இருந்தார்கள். அப்படிக் கணிசமாகப் பாதுகாவல் அதிகரித்த பின் தான் விஜயனும், சாரங்கராவும் கூடுதல் நிம்மதியை உணர்ந்தார்கள்.

 

அவர்களை வரவேற்க சந்திரகுப்தனும், சாணக்கியரும் நகர வாயிலில் நின்றிருந்தார்கள். சந்திரகுப்தன் தன் நண்பர்களை ஆரத் தழுவி வரவேற்றான். செல்வத்தோடு அவர்கள் வந்ததை விட அவர்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அத்தனை செல்வத்தையும் கருவூலத்தில் பத்திரப்படுத்தும் முன்பு சாணக்கியர் சாரங்கராவிடமும், விஜயனிடமும் சொன்னார். ”நீங்கள் உங்கள் உயிரைப் பணயம் வைத்து இதை பாடலிபுத்திரத்திலிருந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் அகப்பட்டிருந்தால் சித்திரவதை செய்து உங்கள் உயிரை தனநந்தன் எடுத்திருப்பான். உங்கள் வீரச்செயலுக்கு நான் எத்தனை தந்தாலும் அது குறைவாகவே இருக்கும். ஆனால் நான் ஜீவசித்திக்குச் சொல்லச் சொன்ன அதே வார்த்தைகளை உங்களிடமும் சொல்கிறேன். நீங்கள் உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ, அத்தனையை எடுத்துக் கொண்டு மீதத்தை இதனுள்ளே கொண்டு போய் வைத்தால் போதும்.”

 

சாரங்கராவ் கோபப்பட்டான். ”ஆச்சாரியரே! உங்கள் மாணவர்களை தயவுசெய்து இழிவுபடுத்தாதீர்கள். வலிமையான ஒன்றிணைந்த பாரதம் உங்கள் கனவு மட்டுமல்ல. எங்களது கனவும் கூட. சொந்தக் கனவை விலை பேச முடியுமா?”

 

விஜயன் சாரங்கராவ் போலக் கோபப்படவில்லை. அவன் சொன்னான். “ஆச்சாரியரே. நான் வணிகனாகி பிற்காலத்தில் நிறைய செல்வம் சம்பாதிப்பேன். ஆனால் புண்ணியத்தை உங்கள் நிழலில் இருக்கும் வரை தான் சம்பாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.”

 

சாணக்கியர் ஈரமான விழிகளுடன் தன் மாணவர்களைப் பெருமிதத்துடன் பார்த்தபடி ஆசிர்வதித்தார். “இறைவன் உங்கள் மனதிற்கேற்ற உயரத்திலேயே உங்களை எப்போதும் வைத்திருக்கட்டும்.

 

தனிமையில் இருக்கும் போது சந்திரகுப்தன் சாணக்கியரிடம் சொன்னான். “எனக்கு இப்போதும் உண்மை என்று நம்பக் கஷ்டமாக இருக்கிறது ஆச்சாரியரே. இவ்வளவு சுலபமாக தனநந்தனின் புதையல் அங்கிருந்து இங்கு வந்து சேரும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. தனநந்தன் இவ்வளவு அலட்சியமாகவா இருப்பான் என்று ஆச்சரியமாக இருக்கிறது? நீங்கள் பேரறிவு படைத்தவராகச் சொல்லும் ராக்‌ஷசர் கூட நம் ஆட்களின் செயலை அறிய முடியாமல் போனது எப்படி?”

 

சாணக்கியர் சொன்னார்.  “மனிதனின் மனமும், அறிவும் பல சமயங்களில் விசித்திரமாகவே செயல்படுகின்றன சந்திரகுப்தா. அந்த சமயங்களில் அவன் தன் குறுகிய பார்வையிலேயே பார்த்து அனைத்தையும் முடிவு செய்கிறான். அதையே சரியென்று நம்புகிறான். அதனால் அதில் உள்ள குறைகளை அறியவோ, மாற்றிக் கொள்ளவோ விரும்புவதில்லை. தனநந்தன் கிட்டத்தட்ட அனைத்தையும்  அப்படித் தான் செய்பவன். அவனையும் மீறி மகதம் வலிமையாக இருக்கின்றது என்றால் அதன் நிர்வாகம் ராக்‌ஷசர் கையில் இருப்பது தான். இந்தப் புதையல் பற்றி ராக்‌ஷசருக்கே தெரிந்திருக்க வழியில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் அவருக்குத் தெரிந்திருந்தால் அதை இரகசியமாகப் பாதுகாக்கும் பொறுப்பை அவர் ஏற்று அதைக் காப்பாற்றியிருப்பார்.”

 

சந்திரகுப்தன் குழப்பத்துடன் கேட்டான். “தனநந்தன் ஏன் அத்தனை தொலைவில் புதையலை வைத்திருக்கிறான். ஏன் அதை அவரிடமிருந்து கூட மறைக்கிறான்?”

 

சாணக்கியர் யோசனையுடன் சொன்னார். “சரியாகத் தெரியவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்கையில் என் தந்தை, அமைச்சர் ஷக்தார் போன்றோர் அவனை எதிர்த்துக் கொண்டிருந்த காலத்தில்  ஏதாவது ஒரு ஆபத்து வந்து அரியணை, அரண்மனை, கஜானா என எல்லாவற்றையும் இழக்கும் நிலை வரக்கூடும் என்ற பயம் தனநந்தனுக்கு வந்திருக்கக்கூடும். அப்படி நிகழ்ந்து அங்கிருந்து வெளியேறும் நிலை வந்தால் எல்லாவற்றையும் திரும்ப மீட்க வேண்டுமளவு செல்வம் யாருமறியாத ஒரு பொது இடத்தில் நல்லது என்ற எண்ணம் அவனுக்கு உதித்திருக்கலாம். அந்தக் காலக்கட்டத்தில் ராக்‌ஷசர் இருக்கவில்லை. அவர் அப்போது இருந்திருந்தால் அவரிடம் அவன் சொல்லியிருக்கலாம். அப்போது அவனுக்கு முழுநம்பிக்கையானவர் என்று வேறு யாருமே இருக்கவில்லை. அவன் வேறு யாரையும் நம்பவுமில்லை. அதனால் நதிக்கரையோரம் இருக்கும் செல்வத்தை எப்படியாவது அப்புறப்படுத்திக் கொண்டு போவது எளிது என்று நினைத்து அவன் கங்கைக் கரையில் புதைத்து வைத்திருக்கலாம். அப்படி அவன் புதைத்து வைத்ததை நான் பார்த்து விட்டது அவனுக்குத் தெரியாததால், அறிந்து விட்டவர்களை எல்லாம் கொன்று விட்ட நிம்மதியில் அவன் இருந்திருப்பான் என்று தோன்றுகிறது. ஆனாலும் பிறகு பயம் வந்திருக்க வேண்டும். புதையல் இருக்கும் இடத்தில் மேலும் அதிகம் செல்வம் சேர்த்து யாகசாலை கட்டிய பின் அது தெரிந்த அந்த கட்டிடப் பணியாளர்களையும் கொன்ற பிறகு அந்தப் பயமும் போயிருக்கும். அதற்குப் பிறகு ராக்‌ஷசரிடம் சொல்லும் அவசியமும் இல்லை என்று அவன் நினைத்திருக்கலாம். சொல்வதானால் பழைய கதையையும் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பதால் அவன் அவரிடம் பின்பு சொல்வதையும் தவிர்த்திருக்கலாம். தன் ஒருவனுக்கு மட்டுமே அந்த ரகசியம் தெரிந்திருப்பது பாதுகாப்பு என்றும் கூட அவன் நினைத்திருக்கலாம்.”

 

அவருடைய அனுமானங்கள் பெரும்பாலும் தவறாக இருப்பதில்லை என்பதால் அப்படித் தானிருக்கும் என்று சந்திரகுப்தன் நம்பினான்.

 

சாணக்கியர் தொடர்ந்து சொன்னார். “ஆனாலும் அவன் எப்போதாவது அந்த யாகசாலைக்குப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறான் என்பதை நான் கேள்விப்பட்டேன். பெயரில் செல்வம் இருப்பது போலவே மனதிலும் செல்வத்தின் நினைப்பே அதிகம் இருக்கும் அவன் அப்படிப் போய் அந்தச் செல்வத்தைத் தோண்டிப் பார்க்க வாய்ப்பில்லை. போய் அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து தன் காலடியில் எத்தனையோ செல்வம் இருக்கிறது என்று எண்ணிப் பூரித்து விட்டு வருவான் போலிருக்கிறது. அவன் சில மாதங்களுக்கொரு முறை அங்கே போய் வருவது தெரிந்ததால் தான் கடைசியாக அவன் பார்த்து விட்டுப் போன பிறகு கண்டிப்பாக மறுபடி சில காலம் போய் பார்க்க மாட்டான், அதற்குள் அந்தப் புதையலை எடுத்து வருவது சரியாக இருக்கும் என்று திட்டம் போட்டேன். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால் எனக்குமே அந்த நிதி இங்கே வந்து சேரும் வரை முழுவதுமாக நம்பிக்கை இருக்கவில்லை. மொத்தத்தில் நம் கனவை இறைவன் ஆசிர்வதித்து இருக்கிறான். அதனால் தான் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது.”

 

சந்திரகுப்தன் மனநிறைவுடன் புன்னகைத்தான். அவர் சொன்னது போல் எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதமே இது என்று அவனுக்கும் தோன்றியது. “இனி அடுத்தது என்ன ஆச்சாரியரே?”

 

“இனி நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது சந்திரகுப்தா” என்று சாணக்கியர் சொன்னார்.

 

(தொடரும்)

என்.கணேசன்




1 comment:

  1. தனநந்தனின் புதையல் காணாமல் போன பிறகு அவன் அடையும் வேதனையைக் காண ஜீவசித்தியைப் போல ஆவலாக உள்ளேன்....

    ReplyDelete