Monday, July 8, 2024

யோகி 57


டைக்கார இளைஞன் தன் லாப்டாப்பை எடுத்து, இணையத்தில் மயான காளியைத் தேடி அவருக்கு அந்தப் படங்களைக் காட்டினான். சுகுமாரனுக்கு மயான காளியின் சில படங்களைப் பார்க்கவே திகிலாக இருந்தது.  கரிய தேகம், வெளியே தொங்கப் போட்ட சிவந்த நாக்கு, அக்னிப் பார்வை, நான்கு கைகள், மண்டை ஓடுகளை மாலையாகப் போட்டுக் கொண்டு ஒரு அசுரனை மிதித்துக் கொண்டு நிற்கும் தோற்றம்.... இருப்பதிலேயே அதிபயங்கரமாகத் தெரிந்த ஒரு படத்தை சுகுமாரன் தேர்ந்தெடுத்தார். ஆவிக்கும் பயம் வர வேண்டுமே! சாயங்காலத்துக்குள் ஃப்ரேம் போட்டு அந்தப் படம் கிடைக்க வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த அவன் சொன்ன விலை அதிகம் என்று தோன்றினாலும் அவர் பேரம் பேசவில்லை. இன்று இரவு இந்தப் படத்தைப் பார்த்து ஆவி வராமல் இருந்தால் சரி!

 

கடைக்கார இளைஞன் சொன்னான். “சார் எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்.”

 

சுகுமாரன் கடிகாரத்தைப் பார்த்தார்.  மதியம் மணி மூன்றாகிறது. வாங்கிக் கொண்டு இருட்டுவதற்குள் வீட்டுக்குப் போய்விடலாம். இப்போது பசிக்கிறது. ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வரும் போது சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. உடனே சம்மதம் தெரிவித்து விட்டுக் கிளம்பினார்.


ரசுராமனின் இன்றைய பூஜையில் இரண்டு மயான காளி சிலைகள் இருந்தன. இரண்டுக்கு முன்பும் இரண்டு மண்டலங்கள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சுகுமாரனுக்கு, இன்னொன்று பாண்டியனுக்கு. அந்த மண்டலங்களைச் சுற்றி சில சின்னச் சின்னங்களும், யந்திரங்களும் சென்ற முறையை விடக் கூடுதலாய் வரையபட்டிருந்தன. இரண்டு மண்டலங்களுக்கும் நடுவில் குங்கும நீரில் தோய்க்கப்பட்ட சிறிய கத்திகள் வைக்கப்பட்டு இருந்தன. இரண்டிலும் முக்கோணச் சின்னங்களில் சுகுமாரன் வீட்டு மண் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. அதே போல் வேறிரண்டு முக்கோணச் சின்னங்களில் சுகுமாரனின் கைக்குட்டையும், பாண்டியனின் டவலும் வைக்கப்பட்டு இருந்தன.

 

இரண்டிலும் இன்று சைத்ராவின் வேறு புகைப்படங்கள் காளி சிலைகள் முன் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டிலும் சைத்ரா வெள்ளைப்புடவையில் இருந்தாள். அவற்றில் அவள் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். இரண்டு மண்டலங்களையும் இணைத்து கீழே ஒரு சிறிய மண்டலம் வரையப்பட்டு இருந்தது.  அதில் ஒரு சிறிய பொம்மை காவித்துணியில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது.

 

சரியான முகூர்த்தத்தில் பரசுராமனின் பூஜை ஆரம்பமானது.

 

யான காளி படத்துடன், இருட்டுவதற்கு முன், சுகுமாரன் வீடு வந்து சேர்ந்து விட்டார். இணையத்தில் இருந்த ஏராளமான தகவல்களில் ஒரு முக்கியத் தகவல் இருக்கவில்லை. மயான காளி படம் இருக்கும் கட்டிடத்திற்கே ஆவி வராதா, இல்லை அது வைக்கப்பட்டு இருக்கும் அறைக்குத் தான் வராதா என்ற குறிப்பை யாரும் சொல்லவில்லை.  அதனால் அந்தப் புகைப்படத்தை தோட்டத்தில் வைப்பதா, இல்லை வீட்டுக்குள்ளே வைப்பதா என்று யோசித்தார். கடைசியில் வீட்டில், தனதறையில் வைத்துக் கொள்வதே நல்லது என்று தோன்றியது.

 

இருட்ட ஆரம்பித்த போது அவர் மனம் மெல்லப் பதற்றமடைய ஆரம்பித்தது. ஆவி இப்போதே வந்து விடுமா, இல்லை நேற்று போல பத்துமணி வாக்கில் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இருட்டிய பிறகும் டாமி குரைக்க ஆரம்பிக்கவில்லை. அது சற்று ஆறுதலாக இருந்தது. ஆவி அதன் நேரம் ஆகாததால் வரவில்லையா, இல்லை மயான காளியின் படம் இருப்பதால் இன்னும் வரவில்லையா என்பதும் தெரியவில்லை.

 

சுமார் ஒன்பது மணியான போது அவர் கைபேசி இசைத்தது. அழைத்தது பாண்டியன் தான். சுகுமாரன் ஒரு கணம் பயந்தார். ‘இன்றைக்குக் காலையில் தைரியமாய் பேசிய பாண்டியன், இப்போது எதாவது காரணம் சொல்லி வரவில்லை என்று சொல்லி விடுவாரோ? அதற்காகத் தான் கூப்பிடுகிறாரோ?’

 

பயந்தபடியே கைபேசியை எடுத்துப் பேசினார். “ஹலோ

 

பாண்டியன் பேசறேன். ஆவி இன்னும் வந்துடலையே?”

 

குரலில் அதே எகத்தாளம். ’எதிர்பார்த்த ஆள் முன்னதாக வந்து விடவில்லையே என்பது போல் ஆவியையும் கேட்கிறான் பாவி. இந்த எகத்தாளத்தைப் போக்குவதற்காகவே அந்த ஆவி ஒருமுறை வந்து அந்த ஆளையும் பயமுறுத்திவிட்டுப் போய் விட்டால் தேவலைஎன்று சுகுமாரனுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அவர் தன்னையே திட்டிக் கொண்டார். ‘சே! ஏன் இந்த மாதிரி நினைக்கிறேன். எந்தக் காரணத்திற்காகவும் அந்த ஆவி எப்பவுமே வர வேண்டாம்.’

 

இதுவரைக்கும் இல்லை.” என்றார் சுகுமாரன்.

 

நல்லது. உங்க கூர்க்கா கிட்ட நேத்து மாதிரி இன்னைக்கும் தூங்கிட வேண்டாம்னு சொல்லி வைங்க. எவன் வந்தும் எதையும் வீசிட்டுப் போகாம பார்த்துக்கச் சொல்லுங்க. நான் கிளம்பிட்டேன். பத்து மணிக்குள்ளே வந்துடுவேன்.”

 

பாண்டியன் வருவது சுகுமாரனுக்கு தைரியத்தைத் தந்தது. இன்னமும் பாண்டியன் நேற்றைய காவித்துணி எரிப்பை ஆவியின் செயல் என்று நம்பவில்லை என்பது புரிந்தது. ‘அந்த ஆளைப் பொருத்தவரை தெளிவாய் தான் இருக்கான்!’

 

சுகுமாரன் கூர்க்காவை அழைத்துச் சொன்னார். “ராத்திரி தூங்கிடக்கூடாது. நேத்து மாதிரி எவனாவது எதையாவது உனக்குத் தெரியாம வீசிட்டு போயிடக்கூடாது. புரிஞ்சுதா?”

 

நேற்று தூங்கவில்லைஎன்று மறுக்க எண்ணிய கூர்க்கா தேவையில்லாமல் வீண் விவாதம் வேண்டாம் என்று முடிவு செய்து தலையாட்டினான்.

 

இன்னைக்கு ராத்திரியும் அப்படி ஏதாவது வந்து விழுந்தால் நாளையிலிருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்.” என்று கடுமையான குரலில் சொல்லி அவனை அனுப்பி விட்டார்.

 

அவனை அனுப்பி சிறிது நேரத்தில் அவருக்கு காதில் ரீங்காரம் மெல்லக் கேட்க ஆரம்பித்தது. பின் வயிற்றில் எரிச்சலும் மெள்ள ஆரம்பமானது. சுகுமாரனுக்கு வியர்த்தது. இன்றைக்குமா? ஆனால் நல்ல வேளையாக டாமி குரைக்கவில்லை. அதனால் ஆவி இன்னும் வந்து சேரவில்லை. அது வந்து சேரும் முன்னே யோகாலயத்து மேனேஜர் வந்து சேர்ந்து விட்டால் தேவலை என்று மனம் யோசித்தது.

 

அதே நேரத்தில், காரை ஓட்டி வந்து கொண்டிருந்த பாண்டியனுக்கும் காதில் ரீங்காரம் கேட்க ஆரம்பித்தது. இது அந்த டாக்டர் சொன்ன ரீங்காரமாக இருக்க வழியில்லை என்று அவர் நம்ப முயற்சித்தார். ஆனால் வயிற்றிலும் எரிச்சலை உணர ஆரம்பிக்கவே, அவரும் திகைத்தார். ‘என்ன இது?’

 

சுகுமாரனின் தோட்டத்தில் நாய் ஆக்ரோஷமாய் குரைக்க ஆரம்பித்தது. சுகுமாரன் அதிர்ந்து போனார். மெல்ல எழுந்து சென்று அறை ஜன்னல் வழியாக, தோட்டத்தைப் பார்த்தார். தோட்டத்தில் நேற்று கண்ட இடத்திலேயே இன்றும் சைத்ராவின் ஆவி தெரிந்தது. ஆனால் இன்று ஆவி வெள்ளைச் சேலையில் தெரிந்தது. நேற்று புன்னகைத்த ஆவி, இன்று வாய் விட்டுச் சத்தமில்லாமல் சிரிப்பது போலிருந்தது. ஆவிக்கு சந்தோஷம் அதிகமாகி விட்டதா, இல்லை அவர் படும் பாட்டைப் பார்த்துச் சிரிக்கிறதா என்று தெரியவில்லை

 

பாண்டியன் சுகுமாரன் வசிக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் வந்த போதே அவருக்கு டாமி ஆக்ரோஷமாய் குரைக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இன்றும் ஆவி அங்கு வந்து விட்டதா? காதில் ரீங்காரம், வயிற்றில் எரிச்சலையும் மீறி, பாண்டியனுக்கு அந்த ஆவியை நேரில் பார்க்கும் ஆர்வம் கூடியது. இன்று இந்த ஆவி சமாச்சாரத்தின் முழுப்பின்னணியையும் தெரிந்து கொள்ளாமல் விடக்கூடாது என்று தீர்மானித்தபடி வேகமாக சுகுமாரன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

 

பாண்டியன் சுகுமாரன் வீட்டைச் சென்றடைந்த போது கூர்க்கா ஆர்வத்துடன் உள்ளே தோட்டத்தில் என்ன நடக்கிறதென்று பார்த்துக் கொண்டிருந்தான். நேற்று போல் இன்றும் டாமி குரைக்க ஆரம்பித்து விட்டதால் இன்றும் ஏதாவது ஆவி அல்லது பேய்ப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டதா என்று அவன் தெரிந்து கொள்ள விரும்பினான்.  டாமி நேற்று எங்கு பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்ததோ அதே இடத்தைப் பார்த்து தான் இன்றும் குரைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் பார்வைக்கு அங்கு எதுவும் இருப்பது போல் தெரியவில்லை….

 

பாண்டியன் கூர்க்கா உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து எரிச்சல் அடைந்தார். கார்க் கதவைப் படாரென்று அவர் சாத்திய பிறகு தான் கூர்க்காவின் பார்வை திரும்பியது. ‘சரியான நேரத்தில் மந்திரவாதி வந்து விட்டாரேஎன்று அவன் நினைக்கையில் அவர் அவனருகில் வந்து கேட்டார். “ஏன் உள்ளே பார்க்கிறே? உள்ளே எதாவது பிரச்சனையா?”      

 

(தொடரும்)

என்.கணேசன்




2 comments:

  1. It's not fair to stop at this critical point ...

    ReplyDelete
  2. பேய் கதைகளை கேட்கும் போது, நானும் பாண்டியனைப் போல எகத்தாளம் கலந்த நக்கலுடன் பேசுவதுண்டு... இரவு நேரத்தில் இது போன்று அவர்கள் சொல்லும் இடத்திற்கு சென்று அவர்களை கேலி செய்வதுண்டு....

    பாண்டியன் கதாப்பாத்திரத்தை பார்க்கும் போது என்னுடைய செயல்பாட்டை பார்ப்பது போலவே உள்ளது...
    பாண்டியன் கதாபாத்திரத்தில் இந்த விசயம் வடிவமைத்த விதம் ஆச்சரியத்தை தருகிறது....

    ReplyDelete