Thursday, June 27, 2024

சாணக்கியன் 115

 

னநந்தன் கங்கைக் கரைக்குச் செல்லவிருக்கும் தகவல் அவன் கிளம்புவதற்கு முன்பே ஜீவசித்திக்குச் சொல்லப்பட்டது. மன்னரின் பாதுகாப்புக்கு காவல்வீரர்களை ஒதுக்க வேண்டியிருந்ததால் இது போன்ற பயணங்கள் எப்போதுமே அவனுக்கு முன்கூட்டியே சொல்லப்படும். மிக அருகில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது மன்னரின் ரதத்தின் முன்னும் பின்னும் செல்ல பத்து குதிரை வீரர்களை அவன் எப்போதும் நியமிப்பது வழக்கம். இந்த முறை பத்து குதிரை வீரர்களில் ஒருவனாக அவனே சென்றான். தனநந்தனின் ரதத்தின் பின்னால் செல்லும் வீரர்களில் ஒருவனாகச் சென்றவன் கங்கைக் கரையில் ரதத்தில் இருந்து தனநந்தன் இறங்கிய கணம் முதல் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

தனநந்தன் ஏதோ கவலையாலும் யோசனைகளாலும் பாதிக்கப்பட்டவன் போலத் தெரிந்தான். கங்கையில் மூழ்கிக் குளிக்கும் போது அவன் பார்வை கரையில் இருக்கும் யாகசாலை பக்கம் அடிக்கடி சென்றது. குளித்து முடித்த பின் அவன் சற்று பதற்றத்துடனே யாகசாலையை நோக்கிச் செல்வதையும் ஜீவசித்தி கவனித்தான். யாகசாலையின் சாவியை தேரோட்டியிடம் தந்த தனநந்தன் அவன் பூட்டைத் திறக்கும் வரை கூடப் பொறுமை இல்லாமல் தவிப்பதை ஜீவசித்தியால் கவனிக்க முடிந்தது. ஆனால் உள்ளே போன தனநந்தன் உடை மாற்றி வெளியே வந்த வேளையில் கவலை, யோசனை, பதற்றம் அனைத்தும் தொலைத்து அமைதியாக மாறி விட்டிருந்தான்.

 

ஜீவசித்தியிடம் சாணக்கியர் சொல்லியிருந்தார். “அவனைப் போல் செல்வத்தின் மீது பித்து பிடித்தவனுக்கு இவ்வளவு தொலைவில் ஒளித்து வைக்கும் செல்வம் பத்திரமாக இருக்கிறதா என்று அவ்வப்போது வந்து பார்க்காமல் இருக்க முடியாது. ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு அவன் அடுத்த முறை அப்படிப் பார்த்து விட்டுப் போனவுடனேயே நீ என் ஆட்களிடம் தெரிவிக்க வேண்டும்.”

 

ஜீவசித்தி தனநந்தன் பின் அரண்மனை வரை போய் விட்டு மன்னன் பாதுகாப்பாய் அரண்மனைக்குள் புகுந்தவுடன்,  வேகமாகத் தன் வீட்டுக்குப் போனான். அவன் வீட்டின் முன்னிருந்த துளசிச் செடியில் சிறிய மஞ்சள் துணியைக் கட்டினான். அது தான் ஒரு புதிய செய்தி இருக்கிறது என்று சாணக்கியரின் ஆட்களுக்கு அவன் தெரிவிக்கும் சங்கேதக் குறிப்பு. வணிகர்களாகவும், யாத்திரீகர்களாகவும் பாடலிபுத்திரம் வரும் அந்த ஆட்கள் அவன் வீட்டு முன் உள்ள துளசி செடியில் மஞ்சள் துணி கட்டியிருந்தால் பார்த்து விட்டு அவனைத் தொடர்பு கொள்வார்கள்.

 

மூன்று நாட்கள் கழித்து வணிகன் வேடத்தில் இருந்த சாரங்கராவ் ஜீவசித்தியைத் தொடர்பு கொண்டான். “என்ன தகவல் நண்பரே?”

 

ஜீவசித்தி சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு விட்டு சாரங்கராவ் சொன்னான். “நன்றி நண்பரே. இந்தச் செய்திக்காகத் தான் ஆச்சாரியர் காத்துக் கொண்டிருந்தார். இனி நாம் இங்கே செய்ய வேண்டிய வேலையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஒரு வாரத்தில் தங்களைச் சந்திக்கிறேன்”

 

ந்திரகுப்தனும் சாணக்கியரும் பேசிக் கொண்டிருந்த வேளையில் காவலன் வந்து சொன்னான். “ஆச்சாரியரைச் சந்தித்துப் பேச காந்தார அரசரிடமிருந்து தூதன் வந்திருக்கிறான்”

 

சந்திரகுப்தன் ஆச்சாரியரைப் பார்த்தான். சாணக்கியர் காவலனிடம் ”வரச் சொல்” என்று சொல்லிவிட்டு சந்திரகுப்தனிடம் சொன்னார். “மிக முக்கியமான தகவல் இருந்தால் ஒழிய ஆம்பி குமாரன் தூதனை நம்மிடம் அனுப்பியிருக்க மாட்டான்.”

 

சற்று நேரத்தில் சந்திரகுப்தனையும், சாணக்கியரையும் வணங்கி நின்ற தூதன் சாணக்கியரிடம் ஆம்பி குமாரன் அனுப்பிய செய்தியைச் சொல்ல ஆரம்பித்தான். ஆம்பி குமாரன் எழுத்து மூலமாகச் செய்தி அனுப்புவது மிக ஆபத்தான செயல் என்று எண்ணி தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியனிடம் வாய்மொழியாகவே சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லி அனுப்பியிருந்தான்.

 

”வணக்கத்திற்குரிய ஆச்சாரியருக்கு காந்தார அரசர் ஆம்பி குமாரர் தன் வணக்கங்களை அனுப்பியுள்ளார். அலெக்ஸாண்டரின் தளபதியாக இருந்த செல்யூகஸுக்கு பாபிலோன், பாரசீகம், பாரதம் ஆகிய பகுதிகளை ஆளும் அதிகாரம் தரப்பட்டிருப்பதாகத் தகவல் வந்திருந்தது. அதனால் சத்ரப் என்ற நிலையில் ஆம்பி குமாரர் பாரதப்பகுதிகளில் நடந்த சமீப கால நிகழ்வுகளைத் தெளிவுபடுத்தி யவன அதிகாரியான க்ளைக்டஸை செல்யூகஸிடம் தகவல் அனுப்பியிருந்தார். செல்யூகஸிடம் பேசி விட்டு வந்த க்ளைக்டஸ் செல்யூகஸ் பாரத நிகழ்வுகளில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகச் சொல்கிறான். அதிலும் முக்கியமாக காந்தார அரசர் மீது அதிருப்தியுடன் இருப்பதாகச் சொல்லி பயமுறுத்துகிறான். நேரடியாகச் சொல்லா விட்டாலும் காந்தாரத்தையும் கூட செல்யூகஸ் கையகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக க்ளைக்டஸ் சூசகமாகச் சொல்கிறான். அங்கு போய் வந்ததிலிருந்து க்ளைக்டஸின் போக்கில் தெரியும் மாற்றங்களும் அதற்கு வாய்ப்பு இருப்பதாக காந்தார மன்னரை எச்சரிக்கின்றன. பாபிலோனிலும் பாரசீகத்திலும் உள்ள பணிகளை முடித்து விட்டு செல்யூகஸ் பாரதம் வரவிருப்பதாகவும், யவனர்களுக்கு எதிராக நடந்து கொண்டவர்களைத் தண்டித்து இழந்த பகுதிகளை மீட்டு யவன சாம்ராஜ்ஜியத்தை இங்கு அமைக்கப் போவதாகவும் களைக்டஸ் கூறுகிறான். அதற்காக செல்யூகஸ் பெரும்படையுடன் இரண்டு மாதங்களுக்குள் பாரதம் வரவிருக்கிறான் என்றும் சொல்கிறான்.  மாறவிருக்கும் சூழ்நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து காந்தார அரசர் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று வழிநடத்தும்படி தங்களை வேண்டிக் கொள்கிறார்.”

 

சாணக்கியர் சிறிது யோசித்து விட்டு சந்திரகுப்தனைப் பார்த்தார். ’நீங்கள் என்ன சொன்னாலும் சரி’ என்று சந்திரகுப்தன் பார்வையிலேயே சொன்னான். சாணக்கியர் காந்தார தூதனிடம் சொன்னார். “காந்தார அரசருக்கு என் ஆத்மார்த்தமான ஆசிகளைத் தெரிவிப்பாயாக தூதனே! யார் நமக்குரிய மரியாதையும் கௌரவமும் தருவதில்லையோ அவர்களைப் பொறுத்துப் போக வேண்டிய அவசியமும் நமக்கில்லாமல் போகிறது. பொறுத்துக் கொண்டு போனால் பாதாளம் வரை சிறுமைப்படுத்தவும் எதிரிகள் தயங்க மாட்டார்கள். அன்னியர்களான யவனர்கள் எத்தனை பெரிய படையோடு வந்தாலும் நாம் அவர்களுக்கு அடிமைப்பட வேண்டியதில்லை. காந்தாரத்தைக் கைப்பற்றுவேன் என்ற அச்சுறுத்தலைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. ஒன்றிணைந்த பாரதம் என்ற என் கனவுக்கு ஆதரவு தரத் தயாராக காந்தார அரசன் இருந்தால், வெளிப்படையாகவே யவனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரகுப்தனின் உதவியை எப்போதும் நாடலாம். கேகயத்திற்கு உதவியது போல காந்தாரத்திற்கும் உதவ சந்திரகுப்தன் தயாராகவே இருக்கிறான் என்று உன் அரசரிடம் தெரிவி. தேவைப்பட்டால் செல்யூகஸ் வரும் போது அவனை எதிர்கொள்ள படையோடு அங்கே வர சந்திரகுப்தன் தயாரென்று சொல்வாயாக!”

 

“அப்படியே சொல்கிறேன் ஆச்சாரியரே.” என்று தலைதாழ்த்தி வணங்கி விட்டு தூதன் சென்றான்.

 

சந்திரகுப்தன் சாணக்கியரிடம் கேட்டான். “ஆம்பி குமாரன் வெளிப்படையாக யவனர்களை எதிர்க்கத் துணிவானா ஆச்சாரியரே?”

 

“சில வருடங்களுக்கு முன் அவன் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை. ஆனால் இப்போது அவன் மாறி விட்டான் சந்திரகுப்தா. இல்லாவிட்டால் அவனுக்கு விடுக்கப்படும் மிரட்டல்களையும் கூட நமக்குத் தெரிவிக்க ஆளனுப்பி இருக்க மாட்டான். நாம் உதவுவோமா, மாட்டோமா என்று தெரிந்து கொள்ள விரும்பி தான் அவன் தூதனுப்பியிருக்கிறான். நாம் உதவிக்கு வரத் தயார் என்று நிச்சயமாகத் தெரிந்த பின்னும் யவனர்களை அவன் பொறுத்துக் கொள்ள மாட்டான்.”

 

சந்திரகுப்தன் தலையசைத்து விட்டுக் கேட்டான். “செல்யூகஸைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஆச்சாரியரே?”

 

சாணக்கியர் சொன்னார். “அவன் சிறந்த வீரன்.  அலெக்ஸாண்டருடன் சேர்ந்து பல போர்களில் போராடியவன். புத்திசாலி. யூடெமஸ் போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளக் கூடியவன் அல்ல.  அவன் தெரிவித்தபடி பெரும் படையுடன் வந்தால் அவனை எதிர்த்து வெல்வது நமக்கும் சுலபமாக இருக்காது.”

 

சந்திரகுப்தன் புன்னகைத்தான். உள்ள நிலைமையை உள்ளது போலவே எப்போதுமே பார்க்க  முடிந்த அவர் அதை வெளிப்படையாகச் சொல்லவும் என்றும் தயங்கியதில்லை. “அப்படியானால் நாம் அதற்குத் தகுந்தாற்போல் நம்மை மேலும் வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவு தானே?” என்று ஆச்சாரியரைப் புன்னகையுடன் கேட்டான்.

 

“அவ்வளவே தான் சந்திரகுப்தா” என்று சாணக்கியரும் புன்னகையோடு சொன்னார். “விழித்த நிலையில் கனவு காணும் மனிதர்கள் கனவை நிறைவேற்ற எளிதான சூழ்நிலைகளே அமைய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. சூழ்நிலைகள் கடுமையாகும் போது தங்களை மேலும் வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் நாமும் அதையே செய்வோம். நம் வலிமை பாரதத்தை ஒன்றிணைக்கும் அளவுக்கு வளரட்டும்”

 

(தொடரும்)





என்.கணேசன்

Monday, June 24, 2024

யோகி 55

 

ஷ்ரவனுக்கு உண்மையில் இந்த அமானுஷ்ய சக்திகளின் இயல்பையும், செயல்படும் விதத்தையும் அவரிடமிருந்து அறிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தது. அதை அவன் அவரிடம் சொன்னவுடன், அவர் எப்படி விளக்கிச் சொல்வது என்று சிறிது யோசித்து விட்டு, பிறகு சொன்னார். “இந்த அமானுஷ்ய சக்திகள், மந்திரப்பிரயோகங்களைப் புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி சில அடிப்படை உண்மைகளை நீ புரிஞ்சுக்கணும் ஷ்ரவன். யாரேயானாலும் ஒரு செயலைச் செஞ்ச பிறகு அதோட விளைவில் இருந்து தப்ப முடியாது. அதைத் தான் கர்மான்னு சொல்றோம். ஒரு செயலைச் செஞ்சு முடிச்சவுடன அந்த கர்மா அவன் வாழ்க்கைல ஒரு பகுதியாயிடும். சரியான விளைவைத் தர்ற வரைக்கும் அது கூடவே இருக்கும். விளைவைத் தர்றதுக்கு முன்னாடி, செயலைச் செஞ்சவனோட உடம்பு அழியலாம், அவனோட வாழ்க்கை முடிஞ்சு போகலாம், ஆனால் கர்மா விளைவைத் தராம விலகிப் போகாது. அடுத்த பிறவிக்கும் அவனைத் தொடர்ந்து போகும். தன் சமயத்துக்காக அது காத்துகிட்டு இருக்கும். அதனால அவனவன் கர்மால இருந்து யாரும் தப்பிச்சுட முடியாது. சரியாய் சொன்னா, குற்றவாளிகளை நிச்சயமாய் கவிழ்க்கப் போறதும், தண்டிக்கப் போறதும் போலீஸோ, சட்டமோ, கோர்ட்டோ அல்ல. அவங்களோட கர்மா தான். அது தன் வேலையைச் செய்யறதுக்கு சட்டத்தையும், போலீஸையும், கோர்ட்டையும் பயன்படுத்திக்கலாம். இல்லை குற்றவாளி சக்தி வாய்ந்தவனாய் இருந்து சட்டத்தையும், போலீஸையும், கோர்ட்டையும் செயல்பட விடாமல் செஞ்சா, கர்மா வேற வழியைக் கண்டுபிடிச்சுக்கும். அந்த வழியில் அவனைத் தண்டிக்கும். அந்த தண்டனை எப்ப இருக்கும், எப்படியிருக்கும்கிற விவரங்கள் பலருக்கும் தெரியாமயும் போகலாம். அதனாலேயே நல்லதுக்குக் காலமில்லை, தப்பு செய்யறவன் எவ்வளவு விவரமா தண்டனைல இருந்து தப்பிச்சுட்டான் பார்த்தியான்னு புலம்பலாம். ஆனா அது அறியாமை தான்.”

 

இப்ப சைத்ரா கேஸையே எடுத்துக்கோ. குற்றவாளிகள் தண்டனைல இருந்து தப்பிச்சுட்டாங்க. ஆனா அவங்க கர்மா முதலமைச்சரோட சேதுமாதவனுக்கு இருந்த நட்பை வெச்சு அடுத்த ஆயுதமாய் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கு. இதுல ஒரு சின்னக்கருவியாய் என்னையும் தேர்ந்தெடுத்திருக்கு. வெளிப்பார்வைக்கு உன் திறமையும், முதலமைச்சரோட அதிகாரமும், போலீஸ் பலமும், என்னோட சக்திகளும் வேலை செய்யறதாய் தோணலாம். ஆனால் இதெல்லாம் கூட அடிப்படைல குற்றவாளிகளோட கர்மாவோட விளைவுகள் தான். இப்ப நாமளும் கிடைக்காட்டியும் கர்மா வேற வழிகளைப் பார்த்துக்கும். அதுக்கு ஆயிரம் கோடி வழிகள்!”

 

அடுத்ததாய் ஆவிகள், குட்டிச்சாத்தான் மாதிரி ஏவல் தேவதைகள். இந்த சக்திகள் நிஜம். நம்ம பகுத்தறிவுக்கு எட்டாத சக்திகள். ஆனால் பயன்படுத்தற வித்தை தெரிஞ்சால், எல்லாரும் அற்புதம்னு நினைக்கற விஷயங்களைக் கூட அலட்டாமல், ரொம்ப சுலபமாய் பண்ணலாம். இந்த வித்தையைக் கத்துக்கறதும், இந்த சக்திகளைக் கட்டுப்படுத்தறதும், இதில் ஆளுமை அடையறதும் சுலபம் அல்ல. ஆனாலும் முறையாய் தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் எடுத்துக்கறவங்களுக்கு முடியாததும் அல்ல. நான் என் குருமார்கள் கிட்ட இருந்து இதைக் கத்துக்க பல வருஷங்கள் ஆகியிருக்கறதாய் உன் கிட்ட சொல்லியிருக்கேன். ஆனால் இந்த சக்திகளும் கர்மாவுக்குக் கட்டுப்பட்டது தான். சக்திகள் கிடைச்சதுன்னு  தப்பாய் பயன்படுத்தினா அது தப்பான கர்மாவாய் மாறி தண்டிக்காம விட்டுடாது. என்னோட ரெண்டு குருவும் எனக்குத் திரும்ப திரும்ப சொல்லி மனசுல பதிய வெச்ச உண்மையிது.”

 

ஷ்ரவன் சொன்னான். “எனக்கு ஆவிகள் இருக்கறதாய் இப்பவும் நம்ப முடியலை சுவாமிஜி. என் அறிவுக்கு அது எட்டாத விஷயமாய் இருக்கு. ஆனாலும் நீங்க சொன்னதை சைத்ராவோட குரல்லயே கேட்டதாய்  சேதுமாதவன் சார் சொன்னதுக்கப்பறம் நம்பாம இருக்கவும் முடியல.”

 

பரசுராமன் சொன்னார். “நம்ம அறிவுக்கு எட்டாத விஷயங்கள் நிறைய இருக்கு ஷ்ரவன். நேரடி அனுபவம் கிடைக்காத எதையும் அது அவ்வளவு சீக்கிரமாய் ஒத்துக்கறதில்லை. மனிதன் இறந்து உடம்பு அழிஞ்சாலும், அவனோட ஆழமான உணர்வுகள், நிறைவேறாத தீவிர ஆசைகள், தீவிரமான எண்ணங்கள் எல்லாம் உடனடியாய் கலைஞ்சு போயிடறதில்லை. சில சமயங்கள்ல சூட்சும ரூபத்துல பிரபஞ்ச வெளில தனி யூனிட்டா தங்கிடறதும் உண்டு. அப்படி தங்கறதுக்குக் காரணம் பலதிருக்குன்னாலும் முக்கியமான காரணம் உணர்வளவுல அது செய்யாமல் விட்டதாய் அழுத்தமாய் உணர்ற சில விஷயங்கள் தான். அப்படி தனி யூனிட்டாய், சூட்சும சரீரத்தில் தங்கி இருக்கிறதை ஆவின்னு சொல்றதாய் எடுத்துக்கலாம். ஆனால் உயிரோடு இருந்த போதிருந்த குணாதிசயங்கள், அபிப்பிராயங்களோடவே, இறந்த பின்னும் அந்த ஆவி இருக்கும்னு சொல்லவும் முடியாது. உயிரோடு இருந்தப்ப தெரியாத எத்தனையோ விஷயங்களை இறந்தபின் தெரிஞ்சுகிட்டும், புரிஞ்சுகிட்டும் சில மாற்றங்களை அடைஞ்சிருக்கலாம். அதோட முக்கியத்துவம் மாறியிருக்கலாம். சைத்ராவோட ஆவி தன் கொலையாளி பற்றின தகவலை விட முக்கியமாய் ஒரு யோகியைப் பத்தி தாத்தாவுக்குத் தெரிவிக்கிறது முக்கியம்னு நினைச்சதை இதுக்கு உதாரணமாய்ச் சொல்லலாம். இன்னொரு விஷயம், எல்லா ஆவிகளையும் நாம் வரவழைச்சுட முடியாது. இறந்த பின்னும் தன் தனித்துவம் கலையாமல் சூட்சும சரீரத்தோடு உலாவும் ஆவிகளை மட்டும் தான் நாம் தொடர்பு கொள்ளவும், பயன்படுத்திக்கவும் முடியும். அது ஒரு அமானுஷ்யக்கலை. ரொம்ப கவனமாய் தான் அதைச் செய்யணும். அதைக் கட்டுப்படுத்தும் ஆளுமை இல்லாட்டி அது நம்மைக் கட்டுப்படுத்தி, ஆட்டி வைக்கிற நிலைமையும் வர்றதுண்டு. அது செயல்பட, தற்காலிகமாய் கிடைச்ச உடம்பை அது விட்டுப் போகாமல் ஆதிக்கம் செலுத்தறதும் உண்டு. அதனால  எச்சரிக்கையோடு தான் கையாளணும். எந்தக் கணத்திலும் நம் கட்டுப்பாடு இல்லாமல் போயிடக்கூடாது.”


அவர் சொன்ன தகவல்கள் ஷ்ரவனுக்கு மிகவும் பொருள் பொதிந்ததாகவும், சுவாரசியமாகவும் இருந்தன. ஷ்ரவன் கேட்டான். “சைத்ராவோட ஆவி தாத்தாவுக்கு சொல்ல ஆசைப்பட்ட தகவலைச் சொல்லிட்டு போனதோட, அதுக்குப் பழைய வாழ்க்கைல இருந்த எல்லா தொடர்பும் முடிஞ்சுடுச்சுன்னும், பழைய வாழ்க்கையோட கணக்குல எதுவும் பாக்கியில்லாமல், பூஜ்ஜியம் ஆயிடுச்சுன்னும் சொல்லி அதனால இனிமே தொடர்பு கொள்ள முடியாதுன்னும் நீங்க சொன்னதாய் சேதுமாதவன் சார் சொன்னார். பின் எப்படி நீங்க அந்த ஆவியை மறுபடியும் பயன்படுத்தி சுகுமாரனைப் பயமுறுத்துனீங்க?”

 

பரசுராமன் புன்னகையுடன் சொன்னார். “நான் சுகுமாரனைப் பயமுறுத்தினது சைத்ராவின் ஆவியை வெச்சு அல்ல. வேற சில அமானுஷ்ய சக்திகளை வெச்சு. சில பூஜைகள், பிரயோகங்கள் மூலம் சிலதை ஒருத்தருக்குக் காட்டலாம். அந்த ஆளைச் சில விதமாய் உணர வைக்கலாம்.  இப்படி மெல்ல மெல்ல ஒருத்தரோட உள்ளுணர்வை நாம் வசப்படுத்த முடியும். இது மூலமாய் ஒருத்தரோட உள்ளுணர்வை ஆக்கிரமிச்சு, நாம் விரும்பும் உணர்வை அவங்க கிட்ட உருவாக்கி அதை அதிகப்படுத்தவும் முடியும். அப்படி தான் சுகுமாரன் கிட்ட பயத்தை உருவாக்கியிருக்கோம். இனியும் ரெண்டு தடவை நாம சின்ன முயற்சிகள் எடுத்தால் போதும். கூடுதலாய் சில அனுபவங்களை அவனுக்கு ஏற்படுத்தினால் அவன் நூறு சதவீதம் இது அவளோட ஆவியோட வேலைகள்னு நம்ப ஆரம்பிப்பான். அப்படி அவன் நம்ப ஆரம்பிச்ச பிறகு மீதியை அவன் கற்பனை வளம் பார்த்துக்கும். கண்டவிதமாய் யோசிக்க வெச்சு அவன் மேல் இருக்கற கட்டுப்பாட்டை அதிகப்படுத்திக்கும். அவன் வித விதமாய் பயக்க ஆரம்பிப்பான்...”

 

ஷ்ரவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவன் சொன்னான். “சுகுமாரன் அளவுக்கு பாண்டியன் பயப்பட மாட்டார்னு சொன்னீங்களே சுவாமிஜி. அவருக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க?”

 

ஷ்ரவன். இந்தப் பிரயோகங்கள்ல பல நிலைகள் இருக்கு. உதாரணத்துக்கு, பாதிப்பை ஐந்து சதவீதத்துல இருந்து, நூறு சதவீதம் வரைக்கும் கூட ஏற்படுத்தலாம்.  சுகுமாரனுக்கு பாதிப்பை ஏற்படுத்த சுமார் பத்து சதவீதம் போதும்னு வெச்சுக்கோயேன். பாண்டியனுக்கு பத்து சதவீதம் போதாது. அவனுக்கு இயற்கையாவே இருக்கிற தைரியத்தில் அவன் அதுல சுதாரிச்சுக்குவான். அதனால நாம அவனுக்கு இருபது இருபத்தஞ்சு சதவீத பாதிப்பை ஏற்படுத்த வேண்டி இருக்கும். அந்த அளவு பிரயோகம் தான் அவனோட சமநிலையைப் பாதிக்க முடியும்....”

 

மிகுந்த சுவாரசியத்துடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்ட ஷ்ரவன் தன் சந்தேகத்தைக் கேட்டான்ஏன் இப்படி பத்து சதவீதம், இருபத்தஞ்சு சதவீதம்கிற கம்மியான அளவுல நாம பாதிப்பை ஏற்படுத்தணும்? ஏன் ஐம்பது அறுபது சதவீத பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது?” 


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, June 20, 2024

சாணக்கியன் 114

 

னநந்தனுக்கு அன்றிரவும் அந்தக் கொடுங்கனவு வந்தது. அதில் ஒரு சின்ன மாற்றம். இந்த முறை கங்கைக் கரையில் அவன் ஒளித்துப் புதைத்து வைத்திருந்த புதையல் களவு போனது போல் கனவு. அவன் தன் பிறந்த நாள் வேள்விகளுக்காக அந்த யாகசாலை போன போது யாக குண்டம் உடைந்து சுரங்கப் பாதை தெரிந்தது. அவன் பதறிப்போய் இறங்கி உள்ளே போய் பார்க்கையில் புதைத்து வைத்த செல்வம் எதுவும் இருக்கவில்லை.  காலி வெற்றிடத்தைப் பார்த்து அவன் அலறுகிறான். உடனே விழிப்பு வந்து விட்டது. பின் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

 

அவனைத் தவிர அந்தப் புதையல் இரகசியத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. அறிந்தவர்கள் எல்லாம் பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டார்கள். உயிரோடிருக்கும் ஒருவருக்கும் அது தெரியாது. அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராக்‌ஷசரிடம் கூட அவன் அந்த இரகசியத்தை அவன் சொல்லியதில்லை.  முன்பாவது எதாவது ஒரு முட்டாள் கங்கைக் கரையில் எதற்காகவாவது ஒரு குழி தோண்டி புதையலைக் கண்டுபிடித்து விடும் மிகவும் குறைந்தபட்ச சாத்தியமாவது இருந்தது. அது அவனைப் பயமுறுத்திக் கொண்டே இருந்ததால் தான் அவன் யாகசாலையைக் கட்டினான். அந்த யாகசாலையின் அஸ்திவாரத்தில் அதுபற்றி அறிந்த கட்டிடப் பணியாளர்களுக்கு அந்த இரகசியம் பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் மரண தண்டனை நிச்சயம் என்று சொல்லிப் பயமுறுத்தியிருந்தான். அலட்டிக் கொள்ளாமல் அவன் செய்திருக்கும் கொலைகள் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த அந்தப் பணியாளர்கள் அது குறித்து வாயே திறக்கவில்லை. என்றாலும் கூட அவன் அஸ்திவாரப்பணி முடிந்தவுடன் முதல் வேலையாக அவர்களைப் பாம்பு விஷத்தால் கொன்று விட்டான். தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்காலத்திற்கு விட்டு வைக்க அவன் விரும்பவில்லை.


அங்கு அவன் அதிக காவலர்களை நியமித்து அதைக் காவல் காக்க வைக்க முடியும் என்றாலும் காலியாக இருக்கும் யாகசாலைக்குக் காவல் எதற்கு என்று யாராவது யோசிக்க ஆரம்பித்தால் புதையல் இருக்கக்கூடும் என்று அனுமானித்து விடும் அபாயம் இருக்கிறது. அதனால் யாரும் உள்ளே நுழையாதபடி அதைப் பூட்டி மட்டும் வைத்திருந்தான்.  அரசனின் யாகசாலை என்பதால் மற்றவர்களும் பயன்படுத்த முடியாதபடி பூட்டி வைத்திருப்பதாக எல்லோரும் நினைப்பார்கள். காலி யாகசாலைக்குள் பூட்டை உடைத்துக் கொண்டு யாரும் போக வாய்ப்புமில்லை. இதையெல்லாம் யோசிக்கையில் அங்கு புதையல் களவு போக வாய்ப்பேயில்லை. இருந்த போதிலும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

 

இதற்கெல்லாம் காரணம் நேற்று ராக்‌ஷசர் அவரிடம் சொன்ன செய்தி தான். கேகயமும் விஷ்ணுகுப்தரின் புரட்சிப்படையோடு இணைந்து கொண்டது என்றும் இரு படைகளும் சேர்ந்து புஷ்கலாவதியில் இருந்த யவன சத்ரப்பை போரில் வென்று கொன்று விட்டார்கள் என்றும் சொன்ன செய்தியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவரிடம் சபதம் போட்டு விட்டுப் போன ஒரு சாதாரண ஆசிரியன் இங்கு மாடு மேய்த்துக் கொண்டு இருந்த சிறுவனை வாஹிக் பிரதேசத்தின் அரசனாக முடிசூட்டியதையே அவனால் தாங்கியிருக்க முடியவில்லை. பர்வதேஷ்வரன் என்று பெருமையாக அழைக்கப்பட்ட புருஷோத்தமன் ஆண்ட கேகயம் அந்த ஆசிரியன் விரித்த வலையில் விழுகிறது என்றால் அது ஆபத்தை வளர்க்கிறது என்று தனநந்தன் உணர்ந்தான். அவனுடைய எதிரிகள் வளர்வதும், உயர்வதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. 


ஆனால் என்ன வளர்ந்தாலும், எத்தனை பேரோடு கூட்டு சேர்ந்தாலும் தனநந்தனை எதிர்த்து வெல்லும் வலிமையை அந்த அகங்கார ஆசிரியன் பெறப் போவதில்லை என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவனைப் பாதிக்காத வெற்றிகளைக் கூட அவனை எதிர்ப்பவர்கள் பெற்று விடக்கூடாது என்று அவன் ஆசைப்பட்டான். அந்த அற்ப வெற்றிகளைப் பற்றி எல்லாம் எண்ணி மனம் புழுங்குவது தவறு என்று பலவந்தமாக மனதை நேற்று மற்ற விஷயங்களுக்குத் திருப்பினான். அதனால் தான் இந்தப் பாழாய் போன கனவு வந்து தொலைத்ததோ? ஆனால் அந்த ஆசிரியன் இந்தப் புதையலை எடுத்துக் கொண்டு போய் விடுவான் என்று பயம் வரக் காரணமில்லையே...

 

விடிந்தவுடன் முதல் வேலையாக கங்கையில் குளிக்க விரும்புவதாகச் சொல்லி தனநந்தன் ரதத்தில் கிளம்பினான். சென்று கங்கையில் குளித்த போது மனம் யாகசாலை போய்ப் பார்க்க அவசரப்பட்டது. ஆனால் அப்படி கங்கையில் அவசர அவசரமாகக் குளித்து விட்டு யாகசாலைக்கு விரைவது கூட சிலர் சந்தேகத்தை கிளப்பலாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட தனநந்தன் இயல்பான நேரம் எடுத்துக் கொண்டு குளித்து உடை மாற்ற யாகசாலைக்குச் செல்வது போலக் காட்டிக் கொண்டான். யாகசாலையைப் பூட்டியிருந்த பெரிய பூட்டின் சாவியைக் கூட அவன் ஆரம்பத்திலேயே  அவனது தேரோட்டியிடம் கொடுக்கவில்லை. குளித்து விட்டு வந்த பின் தான் யாகசாலையின் சாவியை அவனிடம் தந்தான். தேரோட்டி அந்த யாகசாலைக் கதவின் பூட்டைத் திறப்பது கூட அவனுக்கு மிக நிதானமாக நிகழ்வதாகத் தோன்றியது. அவன் திறந்தவுடன் உள்ளே போன தனநந்தன் முதலில் சென்று பெரிய யாக குண்டத்தைப் பார்த்தான். அது உடைக்கப்பட்டிருக்கவில்லை. சேதாரமில்லாமல் அவன் முன் பார்த்தபடியே இருந்தது. அதைப் பார்த்த பிறகு தான் அவன் நிம்மதியடைந்தான். நிதானமாக உடை மாற்றிக் கொண்டு வெளியே வரும் போது தேவையில்லாத இந்தப் பயத்தை விட வேண்டும் என்று தன்னிடமே கடிந்து சொல்லிக் கொண்டான்.  

 

நீண்ட பயணம் சென்று வந்திருந்த போதும் க்ளைக்டஸ் முகத்தில் களைப்புக்குப் பதிலாக கம்பீரம் தெரிந்தது. சோகமே உருவாக காந்தாரத்தில் இருந்த க்ளைக்டஸை ஆம்பி குமாரனால் பார்க்க முடியவில்லை. அலெக்ஸாண்டர், பிலிப் காலத்தில் இருந்த நிலைக்கு க்ளைக்டஸ் மாறி இருந்தான். அவன் ஆம்பி குமாரனை சமமான நிலையில் இருப்பவனைப் பார்ப்பது போல் பார்த்தான். வணக்கத்தின் போது கூட அவன் அதிகம் வளையவில்லை என்பதை ஆம்பி குமாரன் கவனித்தான். வணக்கமும் சாதாரணமாகவே இருந்தது. சத்ரப் என்ற சொல்லை அவன் மறந்தும் சொல்லவில்லை.

 

அவன் கவனித்தவற்றை முகபாவனையில் வெளிப்படுத்திக் கொள்ளாத ஆம்பி குமாரன்   ”செல்யூகஸ் நலமா க்ளைக்டஸ்?” என்று கேட்டான்.

 

“தளபதி பூரண நலத்துடன் இருக்கிறார்.”

 

“நீ போய் வந்திருக்கும் வேகத்தைப் பார்த்தால் பாபிலோனில் அதிக நாட்கள் தங்கவில்லை போல் தெரிகிறது. அவ்வளவு தொலைவு சென்றவன் நன்றாகச் சில நாட்கள் ஓய்வெடுத்தபின் வந்திருக்கலாமே.” என்று ஆம்பி குமாரன் சொன்னான்.

 

“அவர் எனக்கு நிறைய முக்கிய வேலைகளைத் தந்திருக்கிறார். அதனால் தான் உடனே வந்து கிளம்பி விட்டேன். வழியிலும் நான் அதிகமாக ஓய்வெடுக்கவில்லை.” என்று மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவன் போல் க்ளைக்டஸ் சொன்னான்.

 

அப்படியென்ன முக்கிய வேலைகள் என்று கேட்பதை ஆம்பி குமாரன் தவிர்த்தான். சிலருக்கு முக்கியத்துவம் தருவது பெரிதல்ல; தந்தால் அவர்கள்  உச்சத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். அவர்களை கீழே இறக்குவது அத்தனை சுலபமாக இருக்காது.

 

ஆம்பி குமாரன் மௌனமாக இருந்ததைக் கண்டு க்ளைக்டஸ் தானாகவே சொல்ல ஆரம்பித்தான். “சத்ரப் பிலிப்பின் மறைவுக்குப் பின் இங்கு நடந்தவை குறித்து தளபதி செல்யூகஸ் மிக அதிருப்தியுடன் இருக்கிறார். வீரமுள்ள தலைமை செய்திருக்க வேண்டிய எதுவுமே செய்யப்படவில்லை என்பதுடன் இருப்பதையும் இழந்து நிற்கிற அவலத்தையும் அவரால் சகிக்க முடியவில்லை...”

 

உள்ளே எழுந்த கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத ஆம்பி குமாரன் சொன்னான். “தலைமைப் பொறுப்பில் புத்தி பேதலித்தவனை நியமித்தால் இப்படியெல்லாம் நிகழ்வது தவிர்க்க முடியாதது.  நடந்திருப்பது உனக்கும் வருத்தம், எனக்கும் வருத்தம் தான். என்ன செய்வது? யூடெமஸ் இப்படி எல்லாம் நடந்து கொள்வான் என்று நாம் நினைத்தோமா? இத்தனைக்கும் எல்லாம் தெரிந்த நீயும் கேகயத்தில் அவனுடன் இருந்தாய். அவனை உன்னாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. யவனனான நீ உடன் இருந்தும், அவனிடம் உங்கள் மொழியிலேயே உன்னால் பேச முடிந்தும் உன்னாலேயே அவனை எதுவும் செய்ய முடியாத போது, சத்ரப் பதவியை அவனோடு பகிர்ந்து வைத்திருந்த போதும், மொழி தெரியாத அன்னியனான நான் தூரத்தில் இருந்து கொண்டு என்ன தான் செய்ய முடியும்?”

 

க்ளைக்டஸும் உள்ளூர கோபத்தை உணர்ந்தான். ’சமீப காலமாக பேச்சுத் திறமையைத் தவிர வேறெதையும் வளர்த்துக் கொள்ளாத இந்த நயவஞ்சகன் என் மீது எவ்வளவு சாமர்த்தியமாகக் குற்றம் சாட்டுகிறான்’.

 

“இனி தகுதியில்லாதவர்களிடம் பதவி இருக்காது. தளபதி செல்யூகஸே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு எல்லாவற்றையும் சரி செய்வார்.” என்று க்ளைக்டஸ் காட்டமாகச் சொன்னான்.

 

(தொடரும்)

என்.கணேசன்






Wednesday, June 19, 2024

முந்தைய சிந்தனைகள் 104

 சிறிது சிந்திக்கலாமே...












Monday, June 17, 2024

யோகி 54

 

பாண்டியனின் பூர்விகம் பற்றிய தகவல்கள் ஷ்ரவனுக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தன. மதுரைக்கு அருகே இருக்கும் கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பம் அவருடையது. அவரது தந்தைக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள். பாண்டியன் மூன்றாவது மகன். வீட்டிலேயே படிப்பு வராதவர் அவர் தான். பத்தாம் வகுப்பு வரையாவது எப்படியாவது பாண்டியனைப் படிக்க வைத்து விட வேண்டும் என்று பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஆசைப்பட்டது நடக்கவில்லை.  ஏழாம் வகுப்பு படிக்கையில் கண்டித்த ஒரு ஆசிரியர் மீது கல்லெடுத்து எறிந்து விட்டு வந்தவர் பின் பள்ளிக்குச் செல்லவில்லை.

 

படிப்பு வராதது போலவே அவருக்கு கடவுள் நம்பிக்கையும் வரவில்லை. அவருடைய நுண்ணறிவுக்கு கடவுள் என்ற நம்பிக்கை மிகவும் அபத்தமாகப் பட்டது. அப்படி ஒரு கடவுள் இருந்து அவர் இந்த உலகை உருவாக்கி, சகல ஜீவராசிகளையும் உருவாக்கி, ரட்சித்துக் கொண்டிருப்பாரானால் அது மகா முட்டாள்தனமான, பயனற்ற, அபத்தமான வேலை என்று தான் அவருக்குப்பட்டது. அதை அவர் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருந்த அத்தனை ஆட்களிடமும் தயக்கமில்லாமல் சொன்னார்.

 

யாரும் சந்தோஷமாய் இல்லை, எவனும் திருப்தியாய் இல்லை, எதுவும் ஒழுங்காய் இல்லை, எதிலும் அர்த்தமில்லைங்கறது தான் நிலைமைன்னா, இந்த மாதிரி உலகை உருவாக்கிப் பராமரிச்சுகிட்டு வர்ற கடவுள் தன்னோட வேலைய ஒழுங்காய் செய்யலன்னு தானடா அர்த்தம். அதை விட ஒன்னுமே பண்ணாம உக்காந்துகிட்டிருக்கற நானே தேவலையேடா, நீ என்ன சொல்றே?” – இது இளமையில் அவர் அடிக்கடி சொல்லும் வசனமாய் இருந்திருக்கிறது.

 

படிக்கையில் ஷ்ரவனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

 

வீட்டிலும் சரி, வெளியேயும் சரி, அவரிடம் யாரும் எதையும் விவாதித்து வெல்ல முடிந்ததில்லை. பலரும் தங்கள் வீட்டுக் குழந்தைகள் பாண்டியனுடன் சேர்ந்து பழகி குட்டிச்சுவராகி விட்டதாய் பாண்டியனின் தாயிடமும், தந்தையிடமும் புகார் சொன்னதுண்டு. அவர்கள் மகனைத் திட்டுவதுமுண்டு. “எவன் சொன்னான்? உன் கிட்ட சொன்னதை என் கிட்ட வந்து சொல்லச் சொல்லு. நான் பேசிக்கறேன்என்று பாண்டியன் அலட்சியமாய் சொல்வதுண்டு. யாரும் அவரிடம் நேரில் வந்து எதையும் சொல்லத் தயங்கினார்கள். வேலியில் போகும் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள் வைத்துக் கொள்ள யாரும் தயாராயில்லை.

 

பள்ளிப் படிப்பு வராவிட்டாலும், அவருக்கு அபார அறிவு இருந்தது. மனிதர்களை எடை போடுவதிலும், யாரை எப்படிப் பயன்படுத்துக் கொள்ளலாம் என்று யோசிப்பதிலும் அவர் சமர்த்தராக இருந்தார். பயம் சிறிதும் இல்லாதவராகவும் இருந்தது அவருடைய இன்னொரு தனிச்சிறப்பாக இருந்தது.

 

அவர் கடவுளை மட்டுமல்லாமல், எல்லா மூட நம்பிக்கைகளையும் மறுத்தார். ஆவி, பேய், பிசாசு எல்லாமே மனப்பிரமைகள் என்று அழுத்தம் திருத்தமாய் நினைத்த அவர் சுடுகாட்டில் நள்ளிரவில் படுத்துறங்கிய நாட்கள் அதிகம். அதெல்லாம் இருந்தால் சந்தித்து விட்டுப் போகலாம் என்று ஆசைப்பட்டுப் போனதாக அனைவரிடமும் சொன்னார்.  உண்மையில் அப்படியே பல நாள் தங்கியும் பார்க்க முடியாமல், அவர் இதெல்லாம் பொய் என்று தெளிந்திருக்கிறார். ஆனால் ஊர்ப் பெரியவர்களோ, ”பேய், ஆவி கூட இவனை அண்டாம இருக்கணும்னா இவன் எப்படிப் பட்டவன்னு நாம தான் புரிஞ்சுக்கணும்என்று சொன்னார்கள்.

 

அப்படி குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும் பயங்கரமான நாத்திகவாதியாக எண்ணி ஒதுக்கி வைத்த பாண்டியன் எப்படி பிரம்மானந்தாவுடன் வந்து சேர்ந்தார் என்ற தகவல் மட்டும் ஷ்ரவனுக்குத் தெரியவில்லை. யோகாலயம் ஆரம்பித்து சிறிது காலத்திற்குள் அவர் எப்படியோ பிரம்மானந்தாவுடன் வந்து சேர்ந்து விட்டார் என்பது மட்டும்  தெரிந்தது.

 

ஆனால் பிரம்மானந்தாவுடன் வந்து சேர்ந்து கொண்ட பின்பும் பாண்டியன் கடவுளை வணங்கியதோ, ஆன்மீகக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதோ, பேசியதோ இல்லை என்பதும் தெரிந்தது. நடிப்புக்காகக் கூடத் தன்னை வேறு விதமாக வெளிப்படுத்திக் கொள்ளாத பாண்டியன் வித்தியாசமானவராகவும், தன் நிலையில் உறுதியானவராகவும் தான் ஷ்ரவனுக்குத் தெரிந்தார்.

 

பாண்டியன் பிரம்மானந்தருடன் போய்ச் சேர்ந்த பின் குறுகிய காலத்திலேயே யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார் என்று தகவல்கள் தெரிவித்தன. பெயருக்குப் பல பெரிய பதவிப் பெயர்களுடன் யோகாலயத்தில் பலர் இருந்த போதும், வெறும் மானேஜர் பதவியில் இருக்கும் பாண்டியன் தான் அதிகார மையமாக இருக்கிறார் என்பதும், பல நிர்வாக விஷயங்களில் அவர் வைத்தது தான் அங்கு சட்டமாக இருக்கிறது என்பதும் அங்கு முன்பு வேலை செய்தவர்கள் தந்த தகவலாக இருந்தது.

 

பாண்டியன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற போதும் யோகாலயத்திற்கு வரும் முன்னும், வந்த பின்பும் பல பெண்களுடன் உறவில் இருந்தார் என்பதும் தெரிந்தது. ஆனால் அவர் யோகாலயத்திற்கு உள்ளே உள்ள எந்தப் பெண்ணிடமும் தவறாக நடந்து கொள்ள முற்பட்டது இல்லை என்பது அனைவருடைய ஏகோபித்த கருத்தாக இருந்தது. அண்ணா நகரில் ஒரு தனி வீட்டிற்கு அவர் அடிக்கடி போய் வருவது தெரிந்தது. அந்த வீட்டில் வசிக்கும் பெண் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு புதிய பெண் வந்து சேர்வாள். யாரும் அதற்கு மேல் அங்கு இருக்கவோ, அங்கு இருக்கையிலும் அவரிடம் ஆதிக்கம் செலுத்தவோ அவர் அனுமதிக்கவில்லை. உடன் இருக்கையில் அவர்களுக்கு, பணத்தைத் தாராளமாகத் தந்தாரே தவிர, அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க அவர் இடம் தரவில்லை. அதனால் அவர்களுக்கும் அவர் பற்றி அதிகத் தகவல்கள் தெரிந்திருக்கவில்லை.

 

பாண்டியனின் பெற்றோர் தற்போது உயிரோடில்லை. உடன் பிறந்தவர்கள் அனைவரும் நல்ல நிலைகளில் தற்போது இருக்கிறார்கள். அனைவருக்கும் அவருடைய பண உதவி கிடைத்திருக்க வழியுண்டு. ஆனால் அவர்களிடமும் கூட அவர் மிக நெருக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. குடும்பத்தில் நிகழும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு உறவை நிறுத்திக் கொள்கிறார். இதையெல்லாம் பார்க்கையில் அவர் அதிகமாக யோகாலயத்திற்கே தன் முக்கிய கவனத்தைத் தருபவர் போலத் தான் தோன்றினார். ஆனால் அங்கே அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது மூடுமந்திரமாகத் தான் இருந்தது. அங்கே முன்பு வேலை செய்தவர்கள் கூட வெளிப்படையாக எதையும் சொல்ல பயந்தது போல் தோன்றியது

 

 

 

பாண்டியனின் டவல் பரசுராமனிடம் அவர் சொன்ன நேரம் காலை 9.51 மணிக்குத் தரப்பட்டது.  அவருடைய அனுமதி பெற்று ஷ்ரவன் அவரை காலை 11.00 மணிக்குச் சென்று சந்தித்தான்.

 

ஷ்ரவன் இன்ஸ்பெக்டர் செல்வத்தின் விஷயத்தில் செய்துள்ளவற்றை  பரசுராமனிடம் விவரித்து விட்டுத் தொடர்ந்து சொன்னான். “இன்னும் கொஞ்சம் செய்ய வேண்டியிருக்கு. அதையும் செஞ்சுடறோம். அதுக்குப் பிறகு அவன் சந்திக்கப் போகிற வேலை சூழ்நிலையும், அவன் கற்பனையும், அதுல பிறக்கிற பயங்களும் சேர்ந்து இனி அவனை கதிகலங்க வைக்கும்.”

 

பரசுராமன் புன்னகைத்தார்.

 

அவரிடம் ஷ்ரவன் கேட்டான். “சுவாமிஜி சுகுமாரன் மாதிரியே பாண்டியனையும் ஆவி மூலம் பயமுறுத்த முடியும்னு நீங்க நினைக்கறீங்களா?”

 

பரசுராமன் சொன்னார். “சுகுமாரன் அளவுக்கு பாண்டியன் நிலைகுலைய மாட்டான் ஷ்ரவன். அவனோட டவல் மூலமாய் நான் உணர்ந்த உணர்வுகள் அவனை அதிகம் பயப்படாதவனாயும், அதிபுத்திசாலியாயும் தான் அடையாளம் காட்டுது.”

 

ஷ்ரவனுக்கு பிரமிப்பாய் இருந்தது. அவன் பெற்றிருக்கும் தகவல்களும் அதையே அல்லவா சொல்கின்றன. ஆனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டு இவர் எந்த அளவு துல்லியமாக எதையும் உணர்ந்து விடுகிறார்!


(தொடரும்)

என்.கணேசன்