பாண்டியன் சுகுமாரனிடம் சொன்னார். ”தோட்டத்துல
ஆவி தெரியலை. வீட்டுக்குள்ளேயும் போய்ப் பார்த்துடுவோமா?”
தலையசைத்த சுகுமாரன் பாண்டியனை வீட்டிற்குள்
அழைத்துச் சென்றார். போகும் போது வாசற்கதவருகே கீழே விழுந்து கிடந்த சிலுவையை
பாண்டியன் கவனித்தார், தோட்டத்திலும், வீட்டுக்குள்ளும்
ஆவியைப் பார்த்ததை சுகுமாரன் விரிவாகச் சொல்லி இருந்தாலும் ஆவியிடமிருந்து தன்னைப்
பாதுகாத்துக் கொள்ள ஹோம சாம்பலையும், சிலுவையையும் பயன்படுத்திப்
பார்த்ததை அவரிடம் சுகுமாரன் சொல்லி இருக்கவில்லை. இப்போதும் கூட பாண்டியன் சிலுவையைப் பார்த்து விடாமலிருந்தால்
நல்லது என்று தான் சுகுமாரன் நினைத்தார்.
பாண்டியனும் அதைப் பார்த்ததாகக் காட்டிக்
கொள்ளவில்லை. ஒட்டு மொத்தத்தில் இந்த டாக்டரின் மனப்பிராந்தி கட்டுக்கடங்காமல்
போயிருப்பதாய் தான் அவருக்குத் தோன்றியது. பயத்தில்
என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்திருக்கிறார். அந்தக்
கூர்க்கா மீதும் அவருக்குச் சந்தேகம் இருக்கிறது. அவனும்
கூட ஏதாவது செய்திருக்கலாம்...
வீட்டுக்குள்ளேயும் சுகுமாரனுக்கு
பாண்டியனிடம் ஆவியைக் காட்ட முடியவில்லை. எல்லா இடங்களிலும்
தேடிப் பார்த்தாலும் ஆவி எங்குமில்லை. நேற்று நடந்த விஷயங்களுக்கு
ஆதாரமாக இப்போது உள்ளே எந்தத் தடயமும் இல்லை. வீட்டின்
பின் புற ஜன்னல் வழியாகப் பார்த்த போது டாமி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. நேற்று
இரவு தொலைத்த தூக்கத்தை இப்போது மீட்டு விட்டது. டாமியைப்
பார்க்கையில் சுகுமாரனுக்குப் பொறாமையாக இருந்தது. ‘நாயாகப்
பிறந்திருக்கலாம். நிம்மதியாக இருந்திருக்கும்’.
’வீட்டுக்குள்ளே
சைத்ராவின் ஆவி இருந்திருந்தால் டாமி இப்படி தூங்கிக் கொண்டிருக்காது. அதன் சத்தமில்லை
என்றவுடனேயே நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும்’ என்று நினைத்தவராய்
சுகுமாரன் அசடுவழியச் சொன்னார். “நான் சொன்னபடியே ஆவி விடிஞ்சவுடனே போயிடுச்சு போல. இனி ராத்திரி
தான் பார்க்கணும்.”
பாண்டியன் உள்ளூர நகைத்தபடி கேட்டார். “ஆவி ராத்திரி
எத்தனை மணிக்கு மேல வரும்?”
யதார்த்தமாய்க் கேட்பது போல் முகத்தை
வைத்துக் கொண்டு எகத்தாளமாக பாண்டியன் கேட்டது சுகுமாரனை ஆத்திரமடைய வைத்தது. ஆனால் கோபத்தைக்
காட்டத்தான் வழியில்லை. இந்த ஆள் சந்தேகப்படும்படியே தான் அவர் நிலைமை இருக்கிறது. என்ன செய்வது?
சுகுமாரன் பலவீனமாய்ச் சொன்னார். “தெரியல.”
“எதுக்கும்
நான் ராத்திரி பத்து மணிக்கு வந்து பார்க்கறேன். நேத்தும்
அதே நேரத்துல தான் வந்ததாய்ச் சொன்னீங்க” என்று பாண்டியன்
சொல்ல, சுகுமாரன் தலையாட்டினார்.
பாண்டியன் கிளம்பினார். வெளியே
வந்து கார் ஏறிய போது தான் காரில் ஏதோ குறைவது போல் பாண்டியனுக்குத் தோன்றியது. ஒரு கணம்
அமைதியாக பார்வையைச் சுழற்றினார். எப்போதும் அருகில் வைத்திருக்கும் டவல் தான் இல்லை என்பது
அவருக்கு உறைத்தது. அதைக் கண்டிப்பாக சுகுமாரன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. காரிலிருந்து
இறங்கும் போது கீழே விழுந்திருக்கலாம்...
அதற்கு மேல் பாண்டியன் அதுபற்றி யோசிக்கவில்லை. ஐம்பது
ரூபாய் டவலைப் பற்றி யோசிக்க எதுவுமில்லை. அவர் காரைக்
கிளப்பினார்.
இன்ஸ்பெக்டர் செல்வம் இரவு மூன்று மணி வரை உறக்கம் வராமல்
பலவிதமான எண்ணங்களில் உழன்றார். இந்த முறை போடப்பட்ட 27 பணியிட
மாற்றங்களில் ஏதாவது ஒன்று ரத்து ஆனாலும் அதைக் காட்டி தன்னுடையதையும் மாற்றிக் கொள்ளும்
நைப்பாசை அவருக்கு இருந்தது. அவரைப் போலவே மற்ற இடங்களுக்குப் போக வேண்டியிருந்த ஆட்களை
எல்லாம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்களும் முடிந்த
வரை முயற்சி செய்தும் முடியாமல் போனதாகத் தான் சொன்னார்கள். ஆனால் கிட்டத்தட்ட
அனைவருமே கடைசியாய் சொல்லி ஆறுதல் அடைந்தது தான் அவர் காதில் நாராசமாய் விழுந்தது. ”என்ன பண்றது? ஆனா நீங்க
போகிற ஸ்டேஷன் அளவுக்கு இது மோசமில்லைன்னு தான், செல்வம், நான் என்
மனசைத் தேத்திக்கிறேன்.” அவர் நிலைமையைப் பார்த்து அவர்கள் ஆறுதல் அடைந்தது அவருக்கு
ஆறுதலாக இருக்கவில்லை.
உள்ளதிலேயே மோசமான, பிரச்சினைகள்
நிறைந்த காவல் நிலையத்துக்கு அவரை அனுப்பியது எவன் செயல் என்று அவருக்குப் புரியவில்லை. தபாலில்
வந்த மொட்டைக்கடிதம் கொக்கரித்தது போல ஆவியின் செயல் என்று அவர் நம்பவில்லை. பாண்டியன் சொன்னது போல ஆவி நவீன வழிகளில்
மொட்டைக்கடிதம் அனுப்பியிருக்க வழியில்லை.
தூத்துக்குடிக்குப் போவதிலிருந்து தப்பிக்க
எந்த வழியும் இல்லை என்பது முடிவான பின் நேற்றிரவு தான் மனைவியிடம் சொல்லியிருந்தார். “பாருடி. உன் செலவை
எல்லாம் இனிமேல் குறைச்சுக்கோ. இப்ப நான் போகிற இடத்துல சம்பளத்த தவிர வேற ஒன்னும் கிடைக்காது. எவன்கிட்டயாவது
லஞ்சம் கேட்டா அரிவாளைத்தான் எடுப்பான். அந்த மாதிரி ஆளுக
இருக்கற ஏரியா நான் போகிற ஸ்டேஷன் ஏரியா. அதனால புருஷன் முழுசா
வந்து சேரணும்னு ஆசைப்படறத தவிர, வேற எந்த ஆசையையும் இனி மூனு வருஷத்துக்கு வெச்சுக்காதே”
அவள் அதைக் கேட்டுத் தலையாட்டியபடி
கொட்டாவி விட்டது அவரை ஆத்திரமூட்டியது. அவர் சொன்னதைக்
கேட்டு அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. சிறிதும் பயமும்
இல்லை. இவளல்லவோ தர்மபத்தினி! அவர் கோபத்தில்
திட்ட ஆரம்பிப்பதற்குள் அவள் உறங்கியும் விட்டாள். அவர் தான்
உறக்கம் வராமல் மூன்று மணி வரை புரண்டு படுத்திருந்து விட்டுப் பின் மெல்லக் கண்ணயர்ந்தார்.
ஆனால் அந்த உறக்கத்தையும் முழுமையாக
முடிக்க அவர் மனைவி விடவில்லை. காலை ஆறரை மணிக்கு பதற்றத்துடன் அவரை எழுப்பினாள். “என்னங்க...
எந்திரிங்க.... வாசல்ல வந்து பாருங்க”
செல்வம் எரிச்சலுடன் கேட்டார். “என்னடி?”
“அந்தக்
கண்றாவியை நீங்களே வந்து பாருங்க”
செல்வத்துக்குக் கோபம் வந்தது. வேண்டாத
விஷயங்களை எல்லாம் விரிவாகப் பேசும் பெண்மணிகளுக்கு, அவசர நேரங்களில்
முக்கியமானதைக் கூடச் சொல்ல வாய் வராதது ஏன் என்று அவர் பல சமயங்களில் ஆச்சரியப் பட்டிருக்கிறார். ‘அந்தக்
கண்றாவியை நானே போய் பார்க்க வேண்டுமாம்!’
செல்வம் எழுந்து வாசலுக்கு வந்தார். வாசலில்
ஒரு மந்திரித்த எலுமிச்சை (அதில் குங்குமம் இருந்ததால் அது மந்திரித்ததாகத் தான் இருக்க
வேண்டும் என்பது அனுமானம்), உடைத்த முட்டை, சில கரித்துண்டுகள், விளக்குமாற்றுக்
குச்சிகள், கத்தரிக்கப்பட்ட நீண்ட தலைமுடிகள், ஒரு எலும்புத்துண்டு
ஆகியவை வாசலில் கிடந்தன.
அவர் வீட்டு வாசலில் ஏற்கெனவே அக்கம்பக்கத்து
நாலைந்து பெண்களும், இரண்டு கிழவர்களும் வந்து சற்று தள்ளி நின்று அவர்களுக்குள்
ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். செல்வத்தைக் கண்டதும் பேச்சை நிறுத்தி அவரை இரக்கத்துடன்
பார்த்தார்கள்.
ஒரு பெண்மணி அவரது மனைவியிடம் கேட்டாள். “ஏங்க்கா. இதையெல்லாம்
யார், எந்த நேரத்துல கொண்டு வந்து போட்டாங்கன்னு பார்த்தீங்களா?”
“இல்லைக்கா. நான் காலைல
வாசல் கூட்ட வந்தப்ப தான்க்கா பார்த்தேன்.”
ஒரு கிழவர் சொன்னார். “எல்லா மோசமான
செய்வினை ஐட்டங்களையும் போட்ருக்காங்க.”
இன்னொரு பெண் சொன்னாள். “யாரு எதுக்காக
இப்படி செஞ்சிருக்காங்கன்னு தெரியலையே.”
கிழவர் சொன்னார். “அயனாவரத்துல
ஒரு வீட்டுல போன மாசம் இப்படித்தான் ஆச்சு. அங்க கூட
இத்தனை ஐட்டம் இல்லை. முட்டை, எலும்புத்துண்டு, எலுமிச்சம்பழம், கரித்துண்டு
நாலு தான் இருந்துச்சு. மூனே நாள்ல ரத்தவாந்தி...”
அதற்கு மேல் கேட்கும் பொறுமை செல்வத்துக்கு
இருக்கவில்லை. வாசலில் இருந்த செருப்பை எடுத்துக் காட்டி எச்சரித்தார். உடனே கிழவர்
அவசரமாக அங்கிருந்து நகர்ந்தார். மற்றவர்களும் இனி அங்கே நிற்பது உசிதமல்ல என்று புரிந்து
கொண்டு நகர்ந்தார்கள்.
செல்வத்தின் மனைவி கோபித்துக் கொண்டாள். “நீங்க பாட்டுக்கு
தூத்துக்குடிக்குப் போயிடுவீங்க. ஏதோ அவசரம் ஆபத்துன்னா, அக்கம்பக்கத்து
ஆளுக தான் வரணும். அவங்கள இப்படி பகைச்சுகிட்டா என்ன செய்யறது...?”
அடுத்த யுத்தம் ஆரம்பமானது! ஒட்டு மொத்தத்தில், தனக்கு
நேரம் சரியில்லை என்று செல்வம் மனம் நொந்தார்.
Purely very interesting sir
ReplyDeleteSir, sathurangam book pathi small intro kudunga... Pls
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletehttps://nganeshanbooks.blogspot.com ல் படிக்கவும்.
Deleteஇவ்வளவு நக்கல், நையாண்டி பேசிவிட்டு அடுத்த இரவு பாண்டியன் படும் அவஸ்தையை பார்க்கவே பயங்கர நகைச்சுவையாக இருக்கும்....
ReplyDeleteதுண்டு காணாமல் போனதை பாண்டியன் கவனத்திருக்கிறார்...கூர்க்காவும் அந்த இளைஞர்களை பார்த்துள்ளார்...பிரம்மானந்தா விசயம் தெரிந்தவராக இருந்தால் இதை கண்டுபிடித்துவிடுவார்....